அத்தியாயம் 3
பிருந்தாவோ அமைதியாக அதே இடத்தில் நின்று இருக்க, கொஞ்ச நேரத்திலேயே அங்கு வந்த கார்த்திகாவோ, “நீங்க தானே பிருந்தா?” என்று அவளிடம் கேட்க,
அவளும் ஆம் என்பது போல தலையாட்டினாள்.
கார்த்திகாவோ “சார் உங்களை உள்ள வர சொன்னாரு” என்று சொல்ல, பிருந்தாவும் தனது உடையை சரி செய்து விட்டு அவனது அறைக்கு சென்றாள்.
அவளோ அனுமதி கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய, சிம்மனோ இருக்கையில் அமர்ந்து ஒரு பைலை புரட்டிக் கொண்டிருந்தான்.
சற்று பயத்துடனேயே அவன் பக்கத்தில் வந்து அவள் நிற்க, அவனும் பைலை மேசையில் போட்டு விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
நேற்று புடவையில் இருந்தவள் இன்று செவிலியர் உடையில் இருந்தாள். அவளுக்கு அனைத்து உடைகளுமே கச்சிதமாக தான் பொருந்தியது.
அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் பார்த்தவன், “வட்ஸ் யுவர் நேம்?” என்று கேட்டானே பார்க்கலாம் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
நேற்று தானே அவளது தந்தை இவளை அறிமுகம் செய்து வைத்தார். அதற்குள் பெயரையே மறந்து விட்டானா?
ஆனால் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தானே அந்த நர்ஸ் வந்து தன்னை பிருந்தாவா? என்று கேட்டாள். அப்படி என்றால் அவன் சொல்லாமலா அவளுக்கு தன்னுடைய பெயர் தெரிந்து இருக்கும் என்று யோசித்தவள், தொண்டையைச் செருமிய படியே, “பிருந்தா” என்றாள் மெல்லிய குரலில்.
அவனும் “பிருந்தா” என்று சற்று அழுத்தமாக அதை சொல்லிப் பார்க்க, அவளோ எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள்.
அவனும் அவளது பயோ டேட்டாவை பார்த்து விட்டு மேசையில் போட்டவன், இருக்கையில் சாய்ந்து அமர்ந்த படி,
“நர்ஸிங்ல கோல்ட் மெடல் எல்லாம் வாங்கிருக்கீங்கன்னு போட்டிருக்கு. பட் ஒரு எமர்ஜென்சி சிட்டுவேஷன்ல உங்க மெடல் எல்லாம் வந்து உயிரைக் காப்பாத்த போறதில்ல” என்று நக்கலாக சொன்னவனோ,
“உங்ககிட்ட அந்த குயிக் ரெஸ்பான்ஸ் இருக்கான்னு மட்டும் தான் எனக்குத் தெரியணும்” என்றான் அழுத்தமாக.
அவன் தன்னை இந்த அளவுக்கு மட்டம் தட்டி பேசுவது அவளுக்கு பிடிக்காவிட்டாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு அவளுக்கு துணிவும் இருக்கவில்லை.
சிம்மனோ சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன், “ஒரு ஹார்ட் பேஷண்ட் வராங்கன்னா, ஒரு நர்ஸா நீங்க முதல்ல எதை செக் பண்ணுவீங்க?” என்று ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி வர,
பெண்ணவளுக்கோ இதயம் இப்போது பல மடங்கு வேகமாக துடித்தது.
அவளுக்கோ பயத்தில் கைகள் இரண்டும் நடுங்க,
திக்கித் திணறிய படி, “அது… சார்…மு… முதல்ல பிபி… அப்புறம் பிளட்… சுகர் …” என்று பதற்றத்தில் என்ன கூறுகிறோம் என்று கூட தெரியாமல் எதேதோ உளற,
“தப்பு” என்றான் மிக மிக தாழ்ந்த குரலில். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்த அந்த இறுக்கம் போய், இப்போது சட்டென அவன் குரல் மென்மையாக மாறி இருக்க,
பிருந்தாவோ அவனை மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ இப்போது அவளுக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தான்.
அவளது மூச்சுக்காற்று அவனது மார்பில் படும் அளவிற்கு நெருக்கம்.
அவளோ பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிய படி, ஒரு அடி பின்னால் நகரப் போக, சட்டென அவள் தோள் பட்டையைப் பற்றியவன், “அப்படியே நில்லு” என்றான்.
அவனது இந்த நெருக்கமே அவளை மூச்சடைக்க வைத்தது.
அவனின் அந்த தொடுகையில் அவள் உடலோ பயத்தில் நடுங்க, அது அவனுக்குமே நன்றாகவே புரிந்தது.
அவன் மேனியில் இருந்த வந்த அந்த மெல்லிய வாசனை அவளின் நாசியை துளைக்க, எதுவுமே பேச முடியாமல் அப்படியே சிலை போல ஒரு நிமிடம் நின்றிருந்தாள்.
சிம்மனோ அவள் முக மாற்றத்தை கண்டு உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டவன், “ஒரு ஹார்ட் பேஷன்ட் எமர்ஜென்சில வர்றப்போ நீங்க பிபியும் சுகரும் செக் பண்ணிட்டு இருப்பீங்களா? நர்ஸிங்ல இதான் கத்துக் கொடுத்தாங்களா மிஸ் பிருந்தா?” என்று சற்று நக்கலாக கேட்ட படியே,
மெதுவாக அவளது சட்டையின் காலர் பகுதிக்குக் கீழே சற்று கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்த அந்த பேட்ஜைப் பற்றினான்.
மூச்சடைத்து விட்டது அவளுக்கு.
அவன் விரல்கள் அவளது கழுத்தோரம் லேசாக உரச, பெண்ணவளுக்கோ உடல் எல்லாம் சிலிர்த்துப் போன உணர்வு.
மூச்சு விடக்கூட மறந்து அப்படியே நின்றவளின் இதயம் அவனுக்கே கேட்கும் அளவுக்கு தாறு மாறாக துடித்தது.
அவனோ அவளின் பதட்டத்தை ரசித்த படியே, நிதானமாக அந்த பேட்ஜை சரி செய்தவன், அவளின் விழிகளை நிமிர்ந்து பார்க்க,
அவளோ மிரண்டு போய் தான் அவனை பார்த்திருந்தாள்.
சிம்மனோ, “பேஷன்ட்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி, முதல்ல உங்களை நீங்க சரியா வச்சிக்க கத்துக்கோங்க பிருந்தா” என்று அழுத்தமாக சொன்னவன், அவளிடம் இருந்து விலகி விட,
பெண்ணவளுக்கோ அப்போது தான் மூச்சே விட முடிந்தது.
சற்று நேரத்தில் அவளை எந்த அளவுக்கு பதற வைத்து விட்டான்.
ஆனாலும் அவளால் அவனை எதிர்த்து ஒரு வார்த்தை என்ன அவன் இவ்வளவு நெருக்கத்தில் வந்து அவளை தீண்டியும் அதை கூட அவளால் தடுக்க முடியாமல் அல்லவா நின்றிருந்தாள்.
இது நாள் வரை அவளிடம் எந்த ஆணும் இந்த அளவுக்கு நெருங்கியதும் இல்லை. இப்படி தீண்டியதும் இல்லை.
ஏன். அவளை கட்டிக்கப் போகும் மாப்பிள்ளை கூட இதுவரை அவள் அனுமதி இல்லாமல் அவளது கைகளைக் கூடத் தொட்டதில்லை.
ஆனால் இவனோ வந்த முதல் நாளே அவளது அனுமதியின்றி அவளுக்கு மிக நெருக்கமாக வந்து ஏதேதோ செய்து விட்டானே!
ஆனாலும் பாவையவளால் அவனை ஏன் நிறுத்த முடியாமல் போனது என்று தான் அவளுக்கே புரியவில்லை.
ஏனோ அவன் பக்கத்தில் வந்தாலே அவளையும் மீறி ஏதோ ஒரு உணர்வு அவளை கட்டிப் போட்டு விடுவது போலவே அவளுக்கு தோன்றியது.
சிம்மனோ இதழ் கடித்து புன்னகையை அடக்கிய படியே சென்று இருக்கையில் அமர்ந்தவன், பெல்லை அழுத்த அடுத்த சில நொடிகளிலேயே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கார்த்திகா.
சிம்மனோ அவளிடம் “கார்த்திகா, ஷீ ஈஸ் பிருந்தா. நம்ம டீனோட பொண்ணு. இனி இவங்களும் நம்ம கூட தான் வர்க் பண்ண போறாங்க” என்று அவளை அறிமுகப் படுத்த,
கார்த்திகாவும் அவளை பார்த்து லேசாக புன்னகைத்து கொண்டாள்.
சிம்மனோ தொடர்ந்து, “இவங்கள இன்னக்கி வார்டு பி செக்ஷனுக்கு கூட்டிட்டு போங்க. அங்க கிளீனிங்ல இருந்து, பேஷண்ட் டயப்பர் மாத்துறது வரைக்கும் எல்லா பேசிக் வேலையையும் இன்னக்கி மேடமே செய்யணும்” என்று அவளை ஒரு நக்கல் பார்வையுடன் பார்த்த படி, மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட,
பிருந்தாவோ அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
இப்படி ஒரு வேலையை தனக்கு கொடுப்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.
கார்த்திகாவோ ஒரு நிமிடம் திகைத்து நின்றவள் ,
“சார்… அதுக்குத்தான் அட்டெண்டர்ஸ் இருக்காங்களே… இவங்க இப்பதான் ஜாயின் பண்ணிருக்காங்க, அதுவும்….” என்று ஏதோ சொல்ல வந்தவளை,
கையால் தடுத்து நிறுத்திய சிம்மனோ, “டூ வாட் ஐ சே” என்று கறாராக சொல்லி விட,
கார்த்திகாவும் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் “ஓகே சார்” என்ற படி, பிருந்தாவை பார்க்க,
அவளும் கண்களில் வழிய தயாரான கண்ணீரை உள்ளே இழுத்த படி, அமைதியாக கார்த்திகாவுடன் சென்றாள்.