இணை 25

ஆர்யன் மந்தகாசப் புன்னகையுடன் காரை நிறுத்தினான். கார் நின்றதும் இறங்கி மனைவி அமர்ந்திருந்த கார் கதவை திறந்தான்.

 

அவள் கணவனின் கரம் பற்றி இறங்கும் போது ஆர்யனின் கரங்கள் வளர்மதியின் உள்ளங்கையில் அழுத்தவும் நிமிர்ந்து பார்த்தாள். அவன் அழுத்தமான பார்வையுடன் அவளை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கவும் கன்னம் சிவந்து போனாள்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வெகுநேரம் அப்படியே நின்றிருக்கவும், தொண்டையை செருமும் சத்தம் கேட்டது. அவர்கள் திரும்பி பார்த்தபோது செழியனும் கனிஇதழியும் புன்னகையுடன் நின்றிருந்தனர்.

 

“பாப்பா, எப்படி டா இருக்கே” என்ற அண்ணனின் ஒற்றைக் கேள்வியில் ஓடிச்சென்று அவன் மார்பில் சாய்ந்திருந்தாள் வளர்மதி.

 

அண்ணனை கண்டதும் ஆர்யனின் கரத்திலிருந்த அவள் கரத்தை அவளே விலக்கினாளா? அல்லது பிடியை தளர்த்தியது அவனா? என்று இருவருக்குமே தெரியாது. அண்ணன் வந்த அடுத்த நொடி ஓடிச்சென்று அண்ணனின் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள்.

 

செழியனை கண்டதும் வளர்மதியின் கண்களில் கண்ணீர் வந்திருந்தது. அவனை காண வேண்டும் என்று அவள் நினைத்த பத்து நிமிடத்தில் கண் முன்னே வந்து நிற்கிறானே. உடன்பிறந்தவனிடம் இல்லாத சகோதர பாசம் இந்த உடன்பிறவா செழியனிடம் எப்போது வந்தது?

 

செழியனுக்கும் அதே எண்ணம் தான், உடன்பிறந்த அகல்விழியை விட சித்தப்பன் மகள் வளர்மதி எப்போதும் அவனுக்கு ஒருபடி மேல் தான். ஆதூரமாக தங்கையின் தலையை வருடிக் கொடுத்தான்.

 

அண்ணன் தங்கை பாசத்தை நேரில் பார்த்த போது ஆர்யனுக்கு மகிழ்ச்சியே என்றாலும் அவன் முகம் லேசாக வாடியதை கனிஇதழி கவனித்திருந்தாள்.

 

“உன்னை பாக்கணும் போல இருக்குனு இப்ப தான்னே அவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ளாற நீயே வந்து நிக்கிறே, எப்படிண்ணா?” என்றாள்

 

“எனக்கும் உன்னை பாக்கணும் போல இருந்துச்சுடா” என்றான் செழியன்

 

“அப்ப நீங்க எனக்காக கிளம்பி நெல்லூருக்கு வரல. உங்க பாப்பாவ பாக்குறதுக்கு தான் வந்தீங்களா?” என்றாள் கனிஇதழி சிலுப்பிக் கொண்டு

 

“ஃப்ரூட்டி” என்ற செழியனின் செல்லமான அதட்டலில் சட்டென குளிர்ந்து விட்டாள் கனிஇதழி. இந்த ப்ரூட்டிக்கான குளிர்சாதன பெட்டி அவன் கணவன் செழியன் அல்லவா? அவன் மிகுந்த காதலோடு நெருங்கும் போது மட்டுமே அப்படி அழைப்பான். அதனால் அவன் அழைப்பில் குளிர்ந்து அவன் செங்கதிர் பார்வையில் உருகி நின்றாள்.

 

“எப்ப வந்தீங்க? வர்றதா ஒரு போன் பண்ணியிருக்கலாமே செழியன். நாங்க வர்ற வரைக்கும் மாசமா இருக்கறவங்களோட எதுக்கு வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? செக்யூரிட்டி இவங்க வந்ததை எனக்கு ஏன் இன்பார்ம் பண்ணல?” என்றான் ஆர்யன் காவலாளியை முறைத்து.

 

“மாப்ள, முதல்ல நான் வர்றதா பிளான் இல்ல. கனியை அவளோட அப்பா அம்மாவோட நெல்லூர் வரைக்கும் தனியா அனுப்பிட்டேன். மாசமா இருக்கறவள தனியா அனுப்பிட்டியேனு என் அம்மா திட்டிட்டே இருந்தாங்க, எனக்கும் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அதான் கிளம்பி நெல்லூர்க்கு வந்தேன். 

 

என் மாமனார் மாமியாரையும் வீணா போன மச்சானையும் ஆம்புலன்ஸ்ல வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன். நானும் கனியும் ரயில்ல போறதுக்கு கிளம்பிட்டோம். இவ்வளவு தூரம் வந்துட்டு பாப்பாவை பாக்காம எப்படி போறது? அதுமட்டுமில்லாம ஊர் திருவிழா வேற வருது. அதுக்கும் உங்களையும் ஆதி மாமாவையும் நேர்ல அழைச்சிட்டு போகலாம்னு திரும்பி சென்னைக்கு வந்தோம். நாங்க வந்த அஞ்சு நிமிஷத்துல நீங்களும் வந்துட்டீங்க. அதனால செக்யூரிட்டிய திட்டாதீங்க” என்றான் செழியன்

 

“உள்ளாற வாங்கண்ணா, கனி உள்ளே வா?” என்றாள் வளர்மதி கனிஇதழியின் வயிற்றை ஆசையாக தடவிக் கொடுத்து.

 

“நீயும் உன் அண்ணனும் கொஞ்சி குலாவி முடிங்க, நான் என் அண்ணன்கிட்ட பேசிட்டு வாரேன்” என்றாள் கனிஇதழி ஆர்யனை காட்டி.

 

ஆர்யன் புன்னகைக்கவும், வளர்மதி, “நாத்தனார் இல்லாத குறைக்கு எனக்கும் என் புருஷனுக்கும் சிண்டு முடிச்சுட்டு போயிடாதடி” என்று குறும்புடன் சொல்லி விட்டு அண்ணனுடன் உள்ளே சென்றாள்.

 

“அந்த இன்பரசு ஜெயில்ல இருந்து வெளியே வந்ததுல இருந்தே மனசு கிடந்து அடிச்சுக்கிட்டே இருந்துச்சு பாப்பா. இங்கனயே வந்து உனக்கு காவலா இருக்கணும்னு தோணுச்சு. ஆனா அது நல்லா இருக்காதுனு தான் பொறுத்துட்டு இருந்தேன். பொண்ணை கட்டிக் கொடுத்துட்டு அடிக்கடிக்கு வந்து போனா நல்லா இருக்காது. உனக்கும் புகுந்த வீட்ல பொருந்தணும் அதுக்காக தான் இம்புட்டு நாளா உன்னை பாக்க வரல.

 

அப்படியே வந்தாலும் இன்பரசு வெளியே வந்துட்டான்னு உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது. உனக்கு தெரிஞ்சா நீ பயப்படுவேன்னு தான் நான் உன்கிட்ட சொல்லல. இனிமே அவனை நினைச்சு உனக்கு எந்த பயமும் வேணாம். ஏன்னா அவனால ஆயுசுக்கும் எழுந்து நடமாட முடியாது. அதனால தான் நேர்ல உனக்கு தைரியம் சொல்லிட்டு போகலாம்னு ரெண்டு பேரும் வந்தோம். யாரோ புண்ணியவான் நான் செய்ய வேண்டியத செஞ்சிருக்காரு” என்றான் செழியன்

 

“அந்த புண்ணியவான் வேற யாருமில்ல, உன் மாப்ள தான்” என்றாள் வளர்மதி மெல்லிய குரலில்

 

“என்னம்மா சொல்றே?” செழியன் அதிர்ச்சியுடன் தங்கையை பார்க்க, வளர்மதி நடந்ததை சுருக்கமாக கூறினாள்.

 

அதே சமயம் கனிஇதழி ஆர்யனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“அண்ணா, உங்க பொண்டாட்டி உங்களை விட அவ அண்ணன்கிட்ட ரொம்ப அட்டாச்டா இருக்காளேனு நினைக்கறீங்களா?” என்றாள் கனிஇதழி புன்னகையுடன்

 

“சேச்சே, அப்படியெல்லாம் இல்லம்மா” என்றான் ஆர்யன்

 

“இருந்தாலும் தப்பில்லண்ணா, உங்க கண்ணுல பொசசிவ்னஸை பார்த்தேன். எனக்கும் சில சமயம் இவங்க பண்றத பார்த்து கொஞ்சம் கடுப்பா தான் இருக்கும். வளரு என் பிரெண்டாவே இருந்தாலும் என் புருஷனுக்கு நான் தான் முக்கியமானவளா இருக்கணும்னு நினைப்பேன். சிலசமயம் அவர்கிட்ட சண்டையும் போட்டு இருக்கேன்.

 

அப்போ அவர் என்ன சொன்னாரு தெரியுமா? “கனி, எனக்கு புத்தி தெரிஞ்ச வயசுல என் கூட விளையாட பாப்பா பொறக்க போகுதுனு வீட்ல சொன்னப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? பாண்டிப்பய பொறக்கும் போது எனக்கு அவ்வளவா தெரியாது, நானும் சின்ன பையன். ஆனா வளர்மதி பொறந்தப்போ, நான் தான் பெரியவன்னு என் தாத்தா பாப்பாவை என் மடியில தூக்கி வைச்சு உன் தங்கச்சியை நீ தான்டா பாத்துக்கணும்னு சொன்னாரு. அப்போ இருந்து நான் அவளை பத்திரமா பாத்துப்பேன்.

 

என் அப்பா அம்மாவை தவிர்த்து, தாத்தாவுக்கு அப்புறம் என் மேல பாசமா இருந்தது வளர்மதி மட்டும் தான். அந்த வீட்ல இருக்கறவங்க எங்களுக்கு செஞ்ச கொடுமையை பொறுத்துக்கிட்டு என் கோபத்தை காட்டாம இருந்ததுக்கு வளர்மதியும் ஒரு காரணம்னு சொன்னாரு. என் மனசுல உனக்கான இடம் வேற, அந்த இடத்துல நீ மட்டும் தான் மகாராணினு சொல்வாரு. அதையே தான் நான் உங்களுக்கு சொல்லுவேன், வளர்மதியோட மனசுல நீங்க நிறைஞ்சு இருக்கீங்கனு கொஞ்ச முன்னாடி எங்களுக்கு பட்டவர்த்தனமா தெரிஞ்சு போச்சு. 

 

அவ பொறந்த வீட்ல உங்களை பிரிஞ்சு ரெண்டு நாள் இருந்தாலும் இதே மாதிரி தான் உங்களை பாத்ததும் ஓடிவந்து கட்டிக்குவா. பொண்ணுங்களுக்கு எப்பவுமே ரெட்டை வாழ்க்கை தான். புகுந்த வீட்ல இருக்கும் போது பொறந்த வீட்டு ஞாபகம், பொறந்த வீட்ல இருக்கும் போது புருஷன் மேல ஞாபகம். என்ன செய்யறது?” என்றாள் கனிஇதழி பெருமூச்சோடு

 

ஆர்யனுக்கு ஆறுதல் சொல்ல தொடங்கினாலும் முடிக்கும் போது கனிஇதழிக்கு தன் பிறந்த வீட்டை எண்ணி துக்கம் தொண்டையை அடைத்தது. அவள் அண்ணன் செய்த காரியத்திற்கு அவளால் பிறந்த வீட்டை கொண்டாட முடியவில்லை. செழியன் வளர்மதியை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஏன் இந்த கொடுப்பினை இல்லை என்று அவள் ஏங்காத நாள் இல்லை. அதே ஏக்கம் இப்போதும் அவள் கண்களில் பிரதிபலிக்க, ஆர்யனுக்கு அவளுடைய வருத்தம் நன்றாகவே புரிந்தது.

 

“செழியன் மேல எனக்கு லேசா பொறாமை தான், இல்லனு பொய் சொல்ல மாட்டேன். அவரும் மதியும் பாசமான அண்ணன் தங்கச்சியா இருக்கறதுல எனக்கு எந்த பொறாமையும் இல்ல. 

 

செழியனுக்கு தம்பி, ரெண்டு தங்கச்சி, அம்மா அப்பா, சித்தி சித்தப்பானு பெரிய குடும்பம். ஆனா எங்களோடது ரொம்ப சின்ன குடும்பம். என் வீட்ல நான் மட்டும் தான். எனக்கு கூட பொறந்தவங்கனு யாருமில்ல. சின்ன வயசுல அம்மா கூட குளோசா இருந்தாலும் ஒரு வயசுக்கு அப்புறம் காலேஜ் பிரெண்ட்ஸ்னு என் உலகம் வேறமாதிரி மாறிடுச்சு. படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமும் பிசினஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். அம்மா கூட நிறைய நேரம் செலவழிக்கறது இல்லங்கறது அவங்களோட ஏக்கமாவே இருந்துச்சு. அப்போ எனக்கும் என் அப்பாவுக்கும் அது புரியல.

 

எங்களுக்கு புரிய ஆரம்பிக்கும் போது அம்மா எங்க கூட இல்ல. செழியனுக்கு மதி மாதிரி எனக்கும் ஒரு தங்கச்சி இருந்திருக்கலாமேனு அவங்களை பாக்கும் போது தோணும், அம்மாவையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதனால தான் என் முகம் லேசா வாடிச்சு. ஆனா இனிமே எனக்கு அந்த குறையும் இல்ல. என் மனைவியால எனக்கு இப்போ தங்கச்சியும் கிடைச்சிருக்கா” என்றான் ஆர்யன் கனிஇதழியின் தலையை வருடி

 

கனிஇதழியின் கண்கள் கலங்கி விட்டது. இன்பரசுவை தனக்கு அண்ணன் என்று சொல்லிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அதே சமயம் அண்ணன் இருந்தும் இல்லாத வெற்றிடத்தை இனி ஆர்யன் நிரப்ப போவதாக சொல்லவும் அழுது விட்டாள்.

 

ஆர்யன் கனிஇதழியின் கண்களில் வழிந்த கண்ணீரை சுண்டி விட்டு அவள் உச்சந்தலையை உள்ளங்கையால் அழுத்தினான். இருவரும் வீட்டிற்குள் இன்னுமே வராததால் வெளியே வந்த செழியனும் வளர்மதியும் இந்த காட்சியை பார்த்தனர்.

 

செழியன் ஆர்யனை பெருமையுடன் பார்த்திருந்தான். அவன் தங்கைக்கு இனிய இணையாக இருக்கிறான். அதே சமயம் அவன் மனைவிக்கு அண்ணனாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான்.

 

வளர்மதி கனிஇதழியை அணைத்து உள்ளே அழைத்துச் செல்ல, செழியன் தன் ஆருயிர் ஆர்யனை ஆரத்தழுவிக் கொண்டான்.

 

வெகுநேரம் செழியன் தன் அணைப்பை விடாமல் இருக்க, “என்னாச்சு மச்சான்?” என்றான் ஆர்யன்.

 

செழியன் ஆர்யனின் தோள்களை இருகைகளால் அழுத்தி பிடித்து ஆழமாக அவன் கண்களை பார்த்து பேசினான்.

 

“பாப்பா நடந்ததை சொல்லிட்டா மாப்ள. என்கிட்ட தகவல் சொல்லி இருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேனே. எதுக்கு மாப்ளை தனியா ரிஸ்க் எடுத்தீங்க? உங்க ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் ஆகியிருந்தா எங்களோட நிலைமையை நினைச்சு பாத்தீங்களா?” என்றான் செழியன்

 

“உங்க கிட்ட சொல்லலாம்னு தான் நினைச்சேன். உங்களுக்கு விஷயம் தெரிஞ்சா உங்களோட உயிருக்கு ஆபத்துனு மதி பயந்தா, அதனால தான் சொல்லல, தப்பா எடுத்துக்காதீங்க” என்றான் ஆர்யன்

 

“இலங்கை தீவுல சீதையை மீட்டு வந்த ராமன் பெரிய படையோட போனதா புராணம் சொல்லுது. ஆனா நீங்க ஒத்தையில அம்புட்டு தூரம் போய் பாப்பாவை மீட்டுட்டு வந்திருக்கீங்க. அந்த ராமனே அவர் மனைவியோட பவித்திரத்தை நிருபிக்க தீக்குளிக்க சொன்னாருனு சொல்லுவாங்க. ஆனா நீங்க வளர்மதியை இதுவரைக்கும் ஒத்த வார்த்தையோ ஒரு தப்பான பார்வையோ பாத்ததில்ல. எனக்கு இப்படி ஒரு புருஷனை கட்டி வச்சதுக்கு உனக்கு காலம் பூரா நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு சொல்லி என் கால்ல விழுந்து அழறா. எனக்கு உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு” என்ற செழியனின் குரல் தழுதழுத்தது 

 

ஆர்யன் மனைவியின் வாய்மொழியை கேட்டு மனம் குளிர்ந்தான். உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் செழியனை அணைத்து ஆசுவாசப்படுத்தி உள்ளே அழைத்து சென்றான்.

 

வளர்மதி அனைவருக்கும் பழரசம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். செழியனும் ஆர்யனும் அவரவர் தொழில்களை பற்றி பேசிக் கொண்டிருக்க, பெண்கள் சமைக்க தொடங்கினார்கள்.

 

ஆதிசங்கரனும் ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தவர், செழியன் குடும்பத்தை வரவேற்றார். “ஆர்யா செழியன் வந்திருக்கிறதா சொல்லியிருந்தா நானும் உங்களோடவே கிளம்பி இருப்பேன் இல்ல. எதுக்கு ஆபிஸ்ல இருந்து சொல்லிக்காம கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்?” என்றார்.

 

ஆர்யன் தலையை கோதிக் கொள்வது போல பதில் சொல்லாமல் இருக்க, அவர் மருமகளை பார்த்தார்.

 

“மருமகளே, நீயாச்சும் என்கிட்ட சொல்லிட்டு கிளம்பி இருக்கலாம் இல்ல? நான் ரெண்டு ஆபிஸ்லயும் ஆள்விட்டு உங்கள தேடிட்டு இருந்தேன், நீங்க ரெண்டு பேருமே போன் பண்ணாலும் எடுக்கல” என்றார்

 

அவளோ கணவனை முறைத்தாள். 

 

“பாப்பா, என்ன இதெல்லாம்? மாப்ள வேலை பிசியில சொல்லிக்காம கிளம்பி இருப்பாரு, உனக்கு சொல்லிட்டு கிளம்பணும்னு தெரியாதா?” என்றான் செழியன் அதிருப்தியுடன்.

 

 

(தொடரும்)

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top