நிஷா பதில் சொல்லாமலே வளர்மதிக்கு புரிந்தது. தன்னை கண்டால் நிஷாவிற்கு இன்பரசுவின் ஏமாற்று வேலை நினைவுக்கு வரக்கூடும். அவள் தானே இன்பரசுவினால் அதிகம் பாதிக்கப்பட்டவள் என்ற பச்சாதாபம் தோன்றியது.
நிஷாவிற்கு இனி தன்னை கண்டால் பழைய நினைவுகள் வரக்கூடாது என்று நினைத்தவள் நன்கு பழகிய தோழி போல நிஷாவிடம் நடந்துக் கொண்டாள். நிஷாவின் கரத்தில் தன் கைகளை கோர்த்து, “என்னை கேண்டீனுக்கு அழைச்சிட்டு போங்க நிஷா, பசிக்குது” என்றாள் உரிமையுடன்.
நிஷா முகமலர்ச்சியுடன் வளர்மதியின் கரம் பற்றி அழைத்து செல்ல, யுகேந்திரனும் அவர்களுடன் சென்றான். ஆர்யன், யுகேந்திரன் மற்றும் நிஷாவின் நட்பை பற்றி வளர்மதி விசாரிக்க, அவர்கள் இருவரும் தங்கள் கல்லூரியின் நினைவுகளை பற்றி அவளிடம் பகிர ஆரம்பித்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆர்யன் தன் பணிகளை முடித்து விட்டு ஆதிசங்கரனின் அறைக்கு வந்தான். “அப்பா, மதி எங்கே?”
“நிஷா, யுகி கூட அனுப்பி வச்சேன். இன்னும் வரல. எங்கே இருக்காங்கனு பாரு” என்றார் ஆதிசங்கரன்.
“ப்ச், அவங்க கூடவா போயிருக்கா?” என்றான் அதிருப்தியுடன். இப்போது தான் மனைவியின் மனது கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அவள் நிஷாவை பார்த்தால் மீண்டும் கூண்டுக்குள் அடைந்து கொள்வாளே என்று நினைத்தவன் உடனே யுகேந்திரனுக்கு போன் செய்தான்.
“யுகி மதி உங்க கூட வா இருக்கா?” என்றான் பதட்டத்துடன்
“ஆமாடா, நாங்க மூணு பேரும் கேண்டீன்ல இருக்கோம். நீ இங்கே வர்றீயா?” என்றான் யுகி
ஆர்யன் உடனே அழைப்பை துண்டித்து கேண்டீன் நோக்கி சென்றான். அங்கே வளர்மதியும் நிஷாவும் உற்ற தோழிகள் போல சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து உண்மையில் வாயடைத்து போனான். நிதானமாக மனைவியின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபடி அவள் எதிரே வந்து நின்றான்.
“வாங்க, காலேஜ்ல நீங்க பண்ண சேட்டையெல்லாம் நிஷா சொல்லிட்டாங்க” என்றாள் அவனை குறும்புடன் பார்த்து
ஆர்யன் நிஷாவை பார்க்க, “பொண்ணுங்க லவ் லட்டர் கொடுத்தா, நான் பிசினஸை தான் லவ் பண்றேன். அந்த லவ்ல சக்ஸஸ் ஆயிட்டு தான் மத்த லவ்வை பத்தி யோசிப்பேன்னு எல்லாரையும் ரிஜக்ட் பண்ணியே அதை தான் சொல்லிட்டு இருந்தேன்” என்றாள் நிஷா புன்னகையுடன்
“ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து பேச ஆரம்பிச்சதும், நான் ஒருத்தன் இருக்கறதையே இவங்க கண்டுக்கல மச்சி. நல்ல வேளை கம்பெனிக்கு நீயாவது வந்தே” என்றான் யுகேந்திரன் சோகமாக
ஆர்யனுக்கு மனதில் இருந்த குறை நீங்கி விட்டது. வளர்மதியின் மனநிலை கெடக் கூடாது என்பதற்காக யுகி நிஷாவுடனான அவன் நீண்ட கால நட்பை தள்ளி வைக்க வேண்டியிருந்தது. இனி அதற்கு அவசியம் இல்லை என்பதால் மனதின் பாரம் குறைந்தது.
அவங்க கூடவா போயிருக்கா? என்ற கேள்வியுடன் மகன் சென்றதும் என்ன பிரச்சனையோ என்று ஆதிசங்கரனும் கேண்டீனுக்கு வந்திருந்தார். நால்வரும் பேசி சிரித்தபடி அமர்ந்திருந்த காட்சியை கண்டதும், “என்னடா யுகி? உங்க சண்டையெல்லாம் சமாதானம் ஆயிடுச்சு போலருக்கு. நீ போட்ட பேப்பரை கேன்சல் பண்ணிடலாமா?” என்றார்
“என்ன சண்டை? பேப்பர் போட்டீங்களா?” வளர்மதி இருவரையும் பார்த்து வியப்புடன் கேட்க, அவர்கள் ஆர்யனை பார்த்து விழித்தனர்.
அவனோ தந்தையை எச்சரிக்கையுடன் பார்க்க, அவரோ அவனை கவனிக்கவே இல்லை.
“உனக்கு தெரியாதா மருமகளே, உன் புருஷன் இவங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு கூப்பிடலயாம். ரெண்டு பேரும் ரிசப்ஷன் வரைக்கும் பொறுமையா இருந்துட்டு, இனி வேலைக்கு வரமாட்டோம்னு ரிசைன் லெட்டர் கொடுத்துட்டாங்க. நான் எவ்வளவு சமாதானம் செஞ்சும் கேக்கல. ஒரு மாசம் நோட்டீஸ் பிரீயட்டுக்கு அப்புறம் போறது உறுதினு சொல்லிட்டாங்க.
நீ இவங்க கூட இருக்கனு தெரிஞ்சதும் ஆர்யன் என்னமோ பதறிட்டு ஓடி வந்தான். நானும் என்ன பிரச்சனையோனு பின்னாடியே வந்தேன். வந்து பார்த்தா நாலு பேரும் நல்லா சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க. ஆர்யன் சமாதானம் செய்யறதுக்கு முன்னாடி நீயே இவங்களை சமாதானம் செஞ்சிட்ட போலருக்கு, ரொம்ப சந்தோஷம் மருமகளே, பேசிட்டு பொறுமையா வாங்க” என்று சொல்லி சென்றார்.
வளர்மதி குழப்பத்துடன் மூவரையும் பார்க்க, யுகேந்திரன் தொண்டையை கணைத்து, “நான் சாப்பிடறதுக்கு வேற ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்” என்று எழுந்து கொண்டான். நிஷாவும் அவனுடன் எழுந்துக் கொள்ள, ஆர்யன் மனைவியை சங்கடத்துடன் பார்த்தான்.
“யுகியும் நிஷாவும் உங்க க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தானே? நீங்க அவங்களோட எங்க ஊருக்கு வந்தப்ப தானே என்னை முதன்முதலா பாத்தீங்க? அப்புறம் ஏன் அவங்களை கல்யாணத்துக்கு கூப்பிடல?”
“ரிசப்ஷன் வேலையை கவனிக்கறதுக்கு ஆள் இல்ல மதி. யுகியை தான் பாக்க சொல்லியிருந்தேன்” என்றான் மனைவியின் கண்களை சந்திக்காமல்
“உங்க கிட்ட ஆள் இல்லையா? இவ்வளவு பேர் இருக்காங்களே. கல்யாணத்துக்கு கூப்பிடாததால கோவிச்சுக்கிட்டாங்கனு மாமா சொல்றாரு. ஏன் அவங்களை கூப்பிடலனு உண்மையான காரணத்தை சொல்லுங்க?” என்றாள் அழுத்தமாக
“உனக்காக தான் மதி”
“எனக்காகவா?”
“ம், நீ நிஷாவ பாத்தா பழசை நினைச்சு வருத்தப்படுவனு தான் அவங்கள கூப்பிடல. யுகி புரிஞ்சுப்பான்னு நினைச்சேன். அதுக்குள்ள ரிசைன் பண்ணிட்டு இருக்கான். கல்யாணத்துக்கு அப்புறம் நடந்த பிரச்சனைல அவங்களை சமாதானம் செய்யறதுக்கு நேரமில்ல. இன்னைக்கு உன்னையும் உட்கார வச்சு பேசலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நீங்களே பேசி பிரெண்ட்ஸ் ஆகிட்டீங்க”
“நிஷா தான் என்னை பாத்ததும் பழசை நினைச்சு வருத்தப்படறாங்க போலருக்குனு அவங்களை சகஜமாக்க பிரெண்ட்லியா பேசிட்டு இருந்தேன். என்னை பாத்ததும் எனக்காக தான் அவங்க விலகி போக நினைச்சிருக்காங்கனு இப்போ தான் புரியுது. எனக்காக நீங்க உங்க ப்ரெண்ட்ஸை கல்யாணத்துக்கு கூப்பிடாதது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க”
“இட்ஸ் ஓகே, எல்லாமே நல்லதுக்குனு நினைச்சுக்கோ மதி. இப்போ நீ பழைய நினைவில இருந்து முழுசா வெளியே வந்துட்டேனு எனக்கு சந்தோஷமா இருக்கு. அதனால தான் நிஷாக்கிட்ட உன்னால ப்ரெண்ட்லியா பேச முடியுது”
வளர்மதிக்கு கணவன் சொல்வது முற்றிலும் உண்மை என்றே தோன்றியது. இன்பரசுவிற்கு கிடைத்த தண்டனையால் மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது. அதனால் தான் நிஷாவை அவளால் எதிர்கொள்ள முடிகிறது. இல்லையென்றால் தனக்கு நேர்ந்த துரோகத்தையே நினைத்து மருகி இருப்பாள். அவள் கணவன் அவளுக்காக யோசித்து என்னவெல்லாம் செய்திருக்கிறான்.
யுகேந்திரனும் நிஷாவும் வந்து அமர்ந்ததும், “என்னடா ரிசைன் பண்ண போறீயா?” என்றான் ஆர்யன் அமர்த்தலுடன்.
“எனக்கும் என் பொண்டாட்டிக்கும் ஒரே கேபின் போட்டுக் கொடுத்தா, இங்கேயே கன்டினியூ பண்றதை பத்தி யோசிக்கிறேன்” என்றான் யுகேந்திரன்.
“ஒரே கேபினா? அப்படியே ஒரு கட்டிலும் போட்டு கொடுத்திடவா?” என்றான் ஆர்யன் நக்கலாக
“டபுள் ஓகே” என்று கண் சிமிட்டினான் யுகி
நிஷா யுகேந்திரனின் கையில் செல்லமாக அடித்து விட்டு, “வீட்ல தொல்லை பண்றது பத்ததாதுனு ஆபிஸ்லயுமா” என்று கணவனை முறைத்தாள்.
யுகேந்திரன், “டபுள் டியூட்டி பார்த்து பழக்கமாயிடுச்சு” என்று நிஷாவை பார்த்து சிரித்தான்.
வளர்மதி சங்கடத்துடன் திரும்ப ஆர்யன் அவளை தான் விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தான். கணவனின் பார்வை புதிதாகவும் புதிராகவும் இருந்தது. தலையை குனிந்து கொண்டாள். ஆர்யன் யுகேந்திரனிடம் அலுவலக வேலைகளை பற்றி பேச ஆரம்பிக்கவும் தான் நிமிர்ந்து அமர்ந்தாள்.
அப்போதும் அவன் பார்வை அவளை விட்டு அகன்றிருக்கவில்லை. எதற்கு பார்க்கிறான் என்று புரியா விட்டாலும் அந்த பார்வை சுவாரசியத்தை கொடுக்க அடிக்கடி கணவனை பார்த்தாள். அவன் அசராமல் அவளை பார்த்துக் கொண்டே இருக்கவும் எங்கே சென்று ஒளிந்து கொள்வது என்ற தவிப்பு தோன்றியது. அவன் பார்வை வீச்சில் கன்னங்கள் வேறு சிவந்து போனது.
திடீரென பேச்சை முடித்து “யுகி நான் வர்ற வரைக்கும் ஆபிஸை பார்த்துக்கோ” என்று எழுந்தான் ஆர்யன்
“மதி கிளம்பலாமா?”
“ம், மாமாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்”
“போன்ல சொல்லிக்கலாம்”
“அவர் ஏதாச்சும் நினைச்சுக்க போறாரு”
“எதுவும் நினைச்சுக்க மாட்டாரு” என்றவன் அவளின் கரம்பற்றிக் கொண்டு நடந்தான்.
எதிரே இருந்த அறையை காண்பித்து, “இந்த ரூம் ஞாபகமிருக்கா மதி” என்றான்.
அகல்விழியுடன் சேர்ந்து திருமணத்தை நிறுத்த சொல்வதற்காக அலுவலகத்திற்கு வந்து ஆர்யனை சந்தித்த அறை அது.
“ம், நல்லா ஞாபகமிருக்கு” என்றாள் மெல்லிய குரலில்
“நான் பக்கத்து பில்டிங்ல தனியா கம்பெனி ஆரம்பிச்சு இருந்தாலும் அப்பாவோட இந்த ஆபிஸ்ல இந்த ரூம்ல தான் என்னோட வொர்க்கை பாத்துட்டு இருந்தேன். இந்த ரூம்ல வச்சு நீ கல்யாணம் வேணாம்னு சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுனே தெரியல மதி. உன்னை கட்டாயப்படுத்தவும் விருப்பம் இல்ல. அதே சமயம் நீ எனக்கு கிடைக்க மாட்டியோனு வருத்தமா இருந்துச்சு. இந்த ரூமுக்கு வந்தாலே நீ பேசிட்டு போனது தான் ஞாபகத்துக்கு வரும். அன்னையில இருந்து நான் இந்த ரூமை யூஸ் பண்றதே இல்ல” என்றான்.
வளர்மதிக்கு ஆர்யன் பேச்சில் அவன் காதலின் ஆழம் நன்கு புரிந்தது. கணவனின் கரத்திற்குள் தன் கரங்களை கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்தாள். ‘ஆர்யனின் அன்பிற்கு ஈடாக என்ன தரப்போகிறாள்? அவளை தவிர அவளிடம் என்ன இருக்கிறது?’
செழியனின் தலையீடு இல்லை என்றால் ஆர்யனை கரம்பிடித்து இருப்பாளா என்பது சந்தேகமே. செழியனையும் கனியையும் சந்தித்து மனதார மன்னிப்பும் நன்றியும் கூற வேண்டும் என்றும் அந்த நொடி தோன்றியது.
ஆர்யனுடன் காரில் ஏறியதும், அவன் காரை வேகமாக திருப்பி வீட்டை நோக்கி செலுத்தினான். ஒரு வாரத்திலேயே பிறந்த வீட்டிற்கு போக வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்லுவானோ என்ற யோசனையுடன் கணவனை பார்த்தாள்.
“என்னங்க”
மனைவியின் அந்த அழைப்பில் உல்லாசமாக உணர்ந்தான் ஆர்யன்
“என்னங்க?” என்றான் அவளை போலவே கேள்வியாக
“அண்ணனை பாக்கணும் போல இருக்கு, ஒரு முறை ஊருக்கு போயிட்டு வரலாமா?” என்றாள் ஏக்கத்துடன்
“அதானே பார்த்தேன். பாப்பாவுக்கு அண்ணனை பாக்காம ஒரு வாரம் இருந்ததே பெரிய விஷயமாச்சே” என்றான் கேலியாக
அவள் முகத்தை சுருக்கவும், “சரி போகலாம், ஆனா உன் செழியன் அண்ணனுக்கு வாக்கு கொடுத்திருக்கேன் மதி, அது என்னாச்சுனு அவர் கேட்டா என்ன பதில் சொல்றதுனு தெரியல, அதனால அந்த வாக்கை நிறைவேத்திட்டு ஊருக்கு போகலாம் என்ன சொல்றே?” என்றான்
“வாக்கு கொடுத்திருக்கீங்களா? என்ன அது?”
“அடுத்த பத்தாவது மாசத்துல அவரோட மருமகன் அவர் கையில இருப்பான்னு சொன்னேன்”
“அவரோட மருமகனா?” என்று யோசனையுடன் கணவனை பார்க்க, ஆர்யனின் அழுத்தமான பார்வையில் முகம் சிவந்தாள்.
மனைவியின் கன்னச்சிவப்பை ரசித்தவன், அவள் கன்னத்தை அழுத்தமாக கிள்ள அது மேலும் சிவந்தது.
“நான் கொடுத்த வாக்கை நிறைவேத்தறதுக்கு இன்னைக்காவது சம்மதம் கிடைக்குமா?” என்றான்
வளர்மதி பதில் சொல்லாமல் தலை குனிந்திருக்க, “பதில் சொல்லு மதி, உன் முழு சம்மதத்துக்காக தான் காத்துட்டு இருக்கேன்” என்றான் உஷ்ண பெருமூச்சோடு
அவளோ காரில் பாடலை ஒலிக்க செய்வது போல அவள் முகத்தை அவன் பார்வையில் இருந்து திருப்பி கொண்டாள்.
“மதி, பதில் சொல்லுடி” என்று மனைவியின் கரத்தை அழுத்தமாக பற்றினான்.
“காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே” என்ற பாடல் ஒலித்தது.
வளர்மதி இப்போது கணவனை பார்க்க,
உன் விழியால் அன்பே…
என்னை உருகச் செய்தாயே…
என் சீனி கண்ணீர்…
உன்மேல் விழுகிறதே… என்ற வரிகள் ஒலிக்க, பாடலால் தன் சம்மத்தை சொல்கிறாள் என்று புரிந்தாலும் புரியாதவன் போல,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான் விடாகொண்டனாக.
“என்னோட பதில் இந்த பாட்டுலயே இருக்கு” என்றாள்
“எந்த லைன்ல பதில் இருக்குனு எனக்கு எப்படி தெரியும்?”
“சம்மதித்தேன், உன்னில் சங்கமிக்க” என்று அவள் வரிகளை சொல்ல
“அதுக்கு என்ன அர்த்தம்?” என்றான்
“போங்க நீங்க” என்று சிணுங்கலுடன் அவள் முகத்தை மூடிக்கொண்டாள்.
(தொடரும்)