ஆதிசங்கரன் ஆர்யனுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கியபடி அலுவலகத்திற்கு தயாரானார்.
“மருமகளை கூட்டிட்டு வாடா, சாப்பிட்டு கிளம்பலாம்” என்றார் ஆதிசங்கரன்.
“நான் வரும்போது தூங்கிட்டு இருந்தா, எழுந்துட்டாளானு பார்த்து கூட்டிட்டு வரேன்பா” என்று மாடிக்கு சென்றான்.
“வேணும்னா நீயும் ரெஸ்ட் எடுத்துக்கோ, நான் மட்டும் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பறேன்”
“இல்லப்பா, யுகி நிஷா கிட்ட அவங்க ரெசிக்னேஷன் பத்தி நேர்ல பேசணும், அண்ட் பணத்தை மறுபடியும் பேங்க்ல டெபாசிட் பண்ணனும். நான் உங்க கூடவே ஆபிஸ் வரேன், வெயிட் பண்ணுங்க” என்றவன் மாடியில் இருந்த அவர்களின் அறைக்கு சென்றான்.
கனிஇதழி பேசி முடித்து அழைப்பை துண்டித்தது கூட தெரியாமல் வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் வளர்மதி.
ஆர்யன் அவள் எதிரே வந்து நின்றும் அவள் பார்வை எங்கோ நிலை குத்தி இருந்தது. ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாள் என்று புரிந்தவன் மெல்ல குனிந்து “மதி” அவள் தோளை பற்றி லேசாக உலுக்கவும் தான் சுயம் பெற்றாள்.
“என்னாச்சு மதி? ஏன் ஃப்ரீஸ் ஆகி உட்கார்ந்திருக்கே?” ஆர்யன் கேட்க
வளர்மதியோ தன்னை நோக்கி குனிந்திருந்தவனின் கழுத்தை தன் கைகளால் மாலையாக கோர்த்துக் கொண்டு ஆர்யனை ஆழ்ந்து பார்த்தாள்.
“என்னாச்சு?” என்று அவன் மனைவியின் முகத்தை ஆராய,
“நீங்க இன்பரசுக்கு மயக்க ஊசி போட்டு முதுகுல ரெண்டு உதை உதைச்சீங்க, பெரிசா எந்த தண்டனையும் கொடுக்காம வந்துட்டீங்கனு எனக்கு வருத்தமா இருந்துச்சு. நீங்க மரணத்தை விட கொடிய தண்டனைனு சொன்னப்ப கூட நான் பெரிசா யோசிக்கல, இப்போ தான் புரிஞ்சது”
“அதுக்குள்ள புரிஞ்சிடுச்சா? எப்படி?” என்று புருவம் உயர்த்தினான். கனிஇதழி போனில் பேசியதை கூறினாள்.
“சில திருந்தாத ஜென்மங்களுக்கு இப்படி சொன்னா தான் புரியும் மதி. எந்த இடத்துல எப்படி மிதிச்சா என்ன நடக்கும்னு தெரிஞ்சு தான் மிதிச்சேன். மயக்க ஊசி போட்டதால அவனுக்கு வலி தெரியல. ஒருவேளை அவன் வலியில் கத்தி இருந்தா உனக்கு புரிந்திருக்கும். உனக்கு எப்படியும் நியூஸ் வந்திடும்னு நினைச்சேன், ஆனா இவ்ளோ சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கல.
இனி எந்த பொண்ணுக்கும் அவனால பிரச்சனையே வரக்கூடாதுனு தான் இப்படி செஞ்சேன். என்னை கேட்டா கோர்ட்லயும் இந்த மாதிரி தண்டனை கொடுத்தா தான் இன்பரசு மாதிரியான ஆளுங்க பொண்ணுங்களை சீரழிக்க யோசிப்பானுங்க, இல்லைனா தண்டனை கிடைச்சாலும் சட்டத்துல இருக்கற ஓட்டை வழியா தப்பிச்சு மறுபடியும் அதே தப்பை தான் பண்ணுவாங்க”
வளர்மதி கலங்கிய கண்களுடன் கணவனையே பார்த்திருந்தாள்.
“ஒரு ஆண் எப்படி இருக்கக் கூடாதுங்கிறதுக்கு உதாரணம் இன்பரசுனா, எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு நீங்க தாங்க உதாரணம். உங்களை பெத்த அப்பாகிட்ட கூட உண்மையை மறைச்சு மனைவியோட கெளரவத்தை பாதுகாக்க நினைக்கறீங்களே, ஏங்க?”
“கணவன் மனைவிக்குள்ள இருக்கற அந்தரங்கத்தை எல்லார்கிட்டயும் சொல்லணும்னு அவசியம் இல்ல மதி. அப்பாவுக்கான மரியாதையும் அக்கறையையும் எனக்கு நிறையவே இருக்கு, அதுக்காக எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லி என் மனைவியோட சுயமரியாதையை குறைக்கிற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்” என்றான்
கணவனாக போகிறவன் என்று நம்பி அந்தரங்கமான விஷயங்களை பகிர்ந்ததன் விளைவாக இன்பரசுவினால் பட்ட துன்பங்களை நினைத்து பார்த்தாள். அப்படிப்பட்டவனை நம்பிய பெண்ணை மணந்து கொள்வது மட்டுமல்லாமல் மனைவியின் சுயமரியாதையை காப்பதை தன் கடமையாக எண்ணும் ஆர்யன் வளர்மதியின் முன்பு வானுயர்ந்து நின்றான்.
வளர்மதி இமைக்காமல் ஆர்யனின் கண்களை காதலுடன் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் என்ன என்பது போல இருபுருவங்களையும் ஏற்றி இறக்க, எட்டி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.
ஆர்யனோ தொண்டையை செருமி தன் இதழ்களை காட்ட, “நான் இன்னும் குளிக்கல” என்றாள் நாணத்துடன்
“பரவால்ல”
“ம்ஹூம்” என்று அவள் குரல் சிணுங்கலுடன் இருக்கவும், அவளை கன்னத்தை அழுந்த பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
இருவரின் இதழ்களும் முற்றுகையிட்ட நேரம், ஆர்யனின் கைப்பேசி அலறவும் வளர்மதி கணவனை தள்ளிவிட்டு எழ முயன்றாள். அவளின் கரத்தை பிடித்து இழுத்தபடி கைப்பேசியின் திரையை பார்த்தான்.
ஆதிசங்கரனிடம் இருந்து அழைப்பு வந்தது. தந்தையை காத்திருக்க சொல்லிவிட்டு வந்தது அப்போது தான் நினைவு வந்தது. அவன் எடுத்துக்கொண்ட அவகாசத்தை பயன்படுத்தி வளர்மதி ஓடிச்சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மனைவியின் ஓட்டத்தை ரசித்தபடி அழைப்பை ஏற்றான்.
“ஆர்யா, நான் சாப்பிட்டேன், கிளம்பறேன்”
“இருங்கப்பா, இதோ வரேன்”
“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, நீ பொறுமையா வா” என்று போனை வைத்தார்.
ஆர்யன் இப்போது குளியலறைக்கு வெளியே நின்று கதவை தட்டினான்.
“மதி, கதவை திற”
“எதுக்கு”
“உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு?”
“ஒண்ணும் வேணாம்”
“பல்லி கரப்பான்பூச்சி வந்துடப்போகுது, தனியா குளிச்சா பயப்படுவியேனு சொன்னேன்”
“பாம்பே வந்தாலும் அடிச்சு போட்ருவேன், நீங்க கவலைப்படாதீங்க”
“சரி உன் இஷ்டம்” என்றான் பெருந்தன்மையாக. அதற்குள் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவும் வெளியே சென்றான்.
வளர்மதி புன்னகையுடன் குளித்து முடித்து எட்டி வெளியே பார்த்தபோது ஆர்யன் அறைக்குள் இல்லை. அவன் இல்லாதது மனதை சுணங்க செய்தது.
அவள் தயாராகி கீழே வந்த போது ஆர்யன் மடிக்கணிணியில் ஏதாே வேலையாக இருந்தான். ‘பொண்டாட்டிய மடியில வச்சு கொஞ்சாம மடிக்கணிணிய கொஞ்சிட்டு இருக்காரு’ என்று மனதிற்குள் கணவனை செல்லமாக திட்டினாள். ஆனால் அவனோ மனைவி நிறைந்த மனதுடன் மலர்ந்த புன்னகையுடன் இருக்கும் போது அணுக நினைத்தான்.
“மதி சாப்பிட்டு ரூம்ல இரு, நான் ஆபிஸ்ல இருந்து யாரையாச்சும் அனுப்பறேன். அவங்க கிட்ட பணத்தை கொடுத்து அனுப்பு. அவங்க பேங்க்ல பணத்தை டெபாசிட் பண்ணிடுவாங்க. நான் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வந்துடறேன்” என்றான் திரையில் இருந்து பார்வையை விலக்காமல்
முன்பும் இதே மாதிரி ஆர்யன் கிளம்பி சென்றதும், அதன்பின் நடந்தவைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவு வர, “ம்ஹூம் யாரையும் வீட்டுக்கு அனுப்பாதீங்க, எனக்கு பயமா இருக்கு” என்றாள்.
“ஏன் பயம்? கொஞ்ச முன்னாடி தான் பாம்பே வந்தாலும் பயப்படப் மாட்டேன்னு சொன்னே?” என்றான் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே
“பாம்போட குணம் தெரியும், அதுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியும். ஆனா சில மனுஷங்களோட குணம் தெரியறது இல்ல. யார்கிட்ட எப்படி நடந்தக்கறதுனு புரியறதுக்கு எனக்கு லேட்டாகும்னு தோணுது”
“அப்போ என் கூட ஆபிஸ் வர்றீயா?” என்றான் மடிக்கணிணியை மூடி வைத்துக் கொண்டே
“ஆபிஸ்க்கா? நான் எதுக்கு?”
“நீ வீட்டுக்குள்ளயே கிணத்து தவளையா இருந்தா, யார் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எப்பவும் தெரியாது. வெளிய வந்தா தான் வெளி உலகம் புரியும், வர்றீயா?”
சிறிது நேரம் யோசித்தாள். இந்த வீட்டிற்குள் தனியாக இருப்பதைவிட கணவனுடன் செல்வது மேல் என்று தோன்றியது.
“ம் வரேன்”
“அங்கே யார் இருந்தாலும், அவங்க கிட்ட முகம் கொடுத்து பேசணும்“ என்றான்
“சரி” என்று அவள் சம்மதிக்கவும், அவளையும் அழைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான். செல்லும் வழியில் இருவரும் பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு அலுவலகத்தை அடைந்தனர்.
அலுவலகத்திற்குள் சென்றவன் பக்கத்தில் இருந்த கட்டிடத்தை காட்டி, “இது அப்பாவோட ஆபிஸ் மதி, இது நம்மளோடது, என்னோட தனிப்பட்ட உழைப்பால உருவாக்கினது” என்று அவளுக்கு கூறிக் கொண்டே அவனுடைய அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று அலுவலகத்தை சுற்றிக் காட்டினான். அவனை கண்டதும் ஒருவன் அருகே வந்தான்.
“யுகி எங்கே?”
“சார், அவர் ஆதிசங்கரன் சார் ஆபிஸ்ல ஏதோ வேலையா போயிருக்காரு”
“நான் வர்றது தெரிஞ்சும் போனானா?” என்றான் ஆர்யன் கோபத்துடன்
அதற்கு எதிரே இருந்தவன் எந்த பதிலும் சொல்லாமல் தலையை குனிந்துக் கொள்ள, “ஆல்ரைட், ப்ராஜெக்ட் வொர்க் அப்டேட்ஸ் சொல்லுங்க” என்று கேள்விகளை கேட்டுக் கொண்டே நடந்தான். அவனும் பதில் கூறிக் கொண்டே அவர்கள் பின்னாலேயே வர, வளர்மதிக்கு ஆர்யன் இங்கே முற்றிலும் வேறு ஒருவனாக தெரிந்தான்.
கண்ணாடியால் பளபளத்துக் கொண்டு இருந்த அறைகளை ஆச்சர்யத்துடன் பார்த்தவாறு அவனுடன் நடந்தாள். அறைக்குள் இருந்தவர்கள் ஆர்யனை கண்டதும் எழுந்து நின்று வணங்கி விட்டு அவர்கள் வேலையை தொடர்ந்தனர்.
அனைவருக்கும் கான்பரன்ஸ் ஹாலில் மீட்டிங் என பின்னால் வந்தவனிடம் அறிவித்தான். அனைத்து ஊழியர்களும் மீட்டிங் ஹாலிற்கு வந்ததும் மனைவியை அவர்களுக்கு அறிமுகம் செய்து, “இன்னைக்கு லஞ்ச் என்னோட ட்ரீட்” என்று அறிவித்தான்.
அதற்கு பின்பு ஆர்யன் அலுவலக வேலைகளில் மூழ்கி விட, ஆதிசங்கரன் மருமகள் அலுவலகத்திற்கு வந்ததை கேள்விப்பட்டு அவர்கள் இருந்த இடத்திற்கே வந்தார்.
“வாம்மா மருமகளே, உன்னை வேலை வாங்கறதுக்கு ஆபிசுக்கே கூட்டிட்டு வந்துட்டானா” என்றார் ஆதிசங்கரன்
மாமனாரை கண்டதும் எழுந்து நின்றவள், “நான் தான் வீட்ல தனியா இருக்கறதுக்கு போரடிக்குதுனு சொன்னேன் மாமா. அதனால தான் கூட்டிட்டு வந்தாரு”
“அப்ப சரி, வாயேன் நம்ம ஆபிஸூக்கு போகலாம்”
“இது யாரோட ஆபிசாம்?” என்றான் ஆர்யன்
“தனியா முன்னேறணும்னு ஆரம்பிச்சே இல்ல, இது உன்னோட ஆபிஸ் மட்டும் தான்” என்று மகனை முறைத்தவர், மருமகளை அழைத்தார்.
அவளோ கணவனின் முகம் பார்க்க, “மதி நீ அப்பா கூட போ. நான் இங்கே இருக்கற முக்கியமான வேலை எல்லாம் முடிச்சுட்டு அரை மணி நேரத்துல வந்திடறேன்” என்றான்.
வளர்மதியும் ஆதிசங்கரனுடன் பேசிக் கொண்டே சென்றாள். அங்கே அனைவரும் அவளை கண்டதும் வரவேற்க, தூரத்தில் நிஷாவும் யுகேந்திரனும் மட்டும் அவளை கண்டதும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். அதை வளர்மதியும் ஆதிசங்கரனும் கண்டுவிட, “யுகி, நிஷா உங்க பிரெண்ட் வைஃப் வந்திருக்கா. பேசாம எங்கே ஓடி ஒளியறீங்க?” என்றார் சத்தமாக
அதன்பின் வேறு வழியின்றி இருவரும் அவர்கள் முன்னால் வந்தனர்.
ஆதிசங்கரனை சந்திக்க யாரோ வந்திருப்பதாக வரவேற்பாளினி அழைக்கவும், “நிஷா, மருமகளை கூட்டிட்டு போய் ஆபீசை சுத்திக் காட்டி, என் ரூமுக்கு கூட்டிட்டு வா” என்று அவர் விருந்தினர் அறைப் பக்கம் சென்று விட்டார்.
நிஷாவும் யுகேந்திரனும் தர்ம சங்கடத்துடன், “சாரி” என்றனர்
“எதுக்கு சாரி?” என்றாள் வளர்மதி புரியாமல்
“நீங்க எங்களை பார்த்தா அப்செட் ஆயிடுவீங்கனு தெரியும், அதனால தான் ஆர்யன் ஆபிஸ்ல இருந்து நீங்க கிளம்பி போற வரைக்கும் இங்கே இருக்கலாம்னு வந்தோம். ஆனா இங்கேயும் வருவீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணியிருக்கணும்”
“உங்களை பாத்து நான் ஏன் அப்செட் ஆகணும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டவளை அவர்கள் தயக்கத்துடன் பார்த்தனர்.
(தொடரும்)