“என்னை அடிச்சு கொன்னுட்டா அத்தோட பிரச்சனை முடிஞ்சுடும்னு நினைச்சிங்களா? நான் என்னோட வக்கில் கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். வாரத்துக்கு ஒரு முறை நான் அவருக்கு போன் பண்ணுவேன், அப்படி நான் போன் பண்ணலனா எனக்கு ஆபத்துனு புரிஞ்சுக்கிட்டு என்னை காணலைனு ஆட்கொணர்வு மனு கொடுக்க சொல்லி இருக்கேன்.
சொத்து பிரச்சனைக்காக என் மச்சானுங்க செழியன், பாண்டினு என் அம்மா வீட்டு சொந்தக்காரங்க என்னை அழிக்கறதுக்காக காத்திட்டு இருக்கறதா எழுதி கொடுத்துட்டு வந்திருக்கேன். எனக்கு எதாவது ஆச்சுனா அவங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போவாங்க” என்று சொல்லி இன்பரசு மீண்டும் உரக்க சிரித்தான்.
ஆர்யன் கைகளை கட்டிக் கொண்டு இன்பரசுவை தீர்க்கமாக பார்த்தான். அவன் எதையோ ஏடாகூடமாக யோசிக்கிறான் என்று தோன்றியது. இந்த பார்வையை ஆர்யனின் ஆபிசில் வேலை செய்யும் போது பார்த்திருக்கிறான்.
வேலையில் யாராவது தப்பு செய்து விட்டால், ஆர்யன் கத்தி கூச்சலிட மாட்டான். மாறாக அவர்களை முறைத்துவிட்டு செல்வான். இதுவே யாராவது துரோகம் செய்து விட்டால் அவன் அவர்களை பார்க்கும் பார்வை வேறு. ஒருமுறை ஆபிசில் கோடிங் விவரங்களை வேறு கம்பெனிக்கு கொடுத்தவன் மாட்டிக்கொண்டான். அப்போதும் இப்படித்தான் அவனையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்யன் அவனை என்ன செய்ய போகிறான் என்று யாராலும் கணிக்க முடியாது என்று நிஷாவும் யுகேந்திரனும் தனித்தனியாக எப்போதோ சொன்னது நினைவிற்கு வந்தது.
வேலையை விட்டு வெளியே அனுப்புவதை தவிர என்ன செய்து விட போகிறான் என்று விட்டேற்றியாக அப்போது நினைத்தது போல இப்போது நினைக்க முடியவில்லை. ஆர்யனின் பார்வையில் வயிற்றை கலக்கியது. அவன் மூளைக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று தெரியாமல் குழம்பினான்.
“மதி உன்கிட்ட கொடுத்தேனே அந்த ஊசிய எடு” என்றான்
“மயக்க ஊசி போட்டு என்ன பண்ண போறீங்க?”
மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையை மட்டும் நீட்டினான். வளர்மதியும் கீழே விழுந்திருந்த ஊசியை எடுத்து கணவனிடம் கொடுத்தாள்.
“ஏய் என்னடா பண்ண போறே?” இன்பரசு அலறினான்.
உதட்டை எட்டாத சிரிப்பை உதிர்த்த ஆர்யன் இன்பரசுவின் முதுகு தண்டில் அந்த ஊசியை செலுத்தினான். இன்பரசு மயங்கியதும் அவனை கட்டியிருந்த கயிறை பிரித்து குப்புற படுக்க வைத்து முதுகு தண்டின் மீது ஓங்கி உதைத்தான். மயக்கத்தில் இருந்த இன்பரசுவிற்கு வலி தெரியவில்லை.
அதன் பிறகு ஆர்யன் அறைக்குள் இன்பரசுவின் கைப்பேசி மற்றும் மடிக்கணிணி முதலான அனைத்து உடைமைகளையும் ஆராய்ந்து அவற்றில் எந்த தரவுகளும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு, வளர்மதி கொண்டு வந்திருந்த பணப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு “மதி கிளம்பலாமா?” என்றான்.
“இவனை ஒரே மிதி மிதிச்சதோட விட்டுட்டீங்களே, மயக்க ஊசி போட்டதும், நான் ரொம்ப எதிர்பார்த்தேன்” என்றாள் வளர்மதி மெல்லிய குரலில்.
“சரி என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு” என்றான்
அதற்கு அவளிடம் பதில் இல்லை. ஆனாலும் அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதிற்குள் ஆவேசம் பிறந்தது.
“அவனை கொல்றேன்னு சொன்னாலும் வேணாங்கிற, எனக்கோ உன் பொறந்த வீட்டுக்கோ எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு நீதானே சொன்னே? அதனால என்னோட திருப்திக்காக ஒரு மிதி மிதிச்சேன். அவன் கிட்ட இப்போ எந்த டேட்டாவும் இல்ல, சோ நாம கிளம்பலாம்”
“அவ்ளோ தானா? அவனை போலீஸ்லயாச்சும் பிடிச்சு கொடுக்கலாம் இல்ல?”
“ஜெயிலுக்கு போனா மட்டும் துரை திருந்திடுவாரா?”
“அதுக்கு அவனை அப்படியே விட்டுடுவீங்களா?” வளர்மதியின் முகம் சுணங்கியது. கணவனிடம் வேறு எதையோ எதிர்பார்த்தது.
“அப்படியே யார் விட்டா? உன் கண் முன்னாடி தானே மிதிச்சேன். நீ சரியா பாக்கலையா? வேணும்னா இன்னொரு மிதி மிதிக்கிறேன், இப்போ நல்லா பாரு” என்று அவன் இடுப்பு பகுதியில் மீண்டும் ஓங்கி மிதித்துவிட்டு, “போதுமா?” என்றான் ஆர்யன்.
அரைமனதாக தலையை ஆட்டி கணவனுடன் புறப்பட்டாள். வெளியே நன்கு இருட்டி இருந்தது.
இருவரும் ஏரிக்கரையோரம் வந்த பிறகு அங்கிருந்த மீன் வியாபாரியை அழைத்தான்.
வளர்மதி அடைக்கப்பட்டிருந்த சிறிய வீட்டை காட்டி அவனிடம் ஏதோ சொன்னான். அந்த மீன் வியாபாரி வீட்டை நோக்கி ஓடினான்.
“அவர்கிட்ட என்ன சொன்னீங்க?” விசாரித்தாள் வளர்மதி
“நான் இங்கே வரும்போது அந்த டிரைவர் இவன்கிட்ட தான் பேசிட்டு இருந்தான். அதான் அவன்கிட்ட நீயிருந்த வீட்டை காட்டி அங்கே அடிதடி சண்டை நடந்துட்டு இருந்துச்சு, நான் என் மனைவியோட வெகேஷன் வந்திருக்கறதால என்னனு போய் பாக்கல, ஏதோ பிரச்சனை போலருக்கு என்னனு போய் பாருங்கனு சொன்னேன். அதான் ஓடறாரு” என்றான்.
“நீங்களே டிரைவரை கட்டிப்போட்டுட்டு, இன்பரசுவையும் அடிச்சுட்டு காப்பாத்தறதுக்கு ஆளையும் அனுப்பறீங்களே, என்னால உங்களை புரிஞ்சுக்கவே முடியல” என்றாள் குழப்பத்தோடு
“கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்கலாம் மதி” என்றான் புன்னகையுடன்
“அடிச்சது நீங்க தான்னு டிரைவர் அடையாளம் காட்ட மாட்டானா?”
“அடையாளம் காட்டினா, எதுக்குனு கேள்வி வரும். அப்போ அவங்க உன்னை கடத்தினத சொல்லணும். திருடனுக்கு தேள் கொட்டின கதையா அவங்க ரெண்டு பேரும் அமைதியா தான் இருக்கணும். அதையும் மீறி, சொன்னா பாத்துக்கலாம்” என்றான் ஆர்யன் விட்டேற்றியாக
ஆர்யன் போன் செய்ததும், அவனை அங்கே கூட்டிக்கொண்டு வந்த மோட்டார் படகு வந்து நின்றது. இருவரும் அதில் ஏறினார்கள்.
வளர்மதிக்கு இன்பரசுவை அப்படியே விட்டு வந்தது குறையாகவே இருந்தது. கணவனிடம் அதை காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்
இருவரும் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தனர், ஆதிசங்கரன் அவர்கள் வரும்வரை ஹாலிலேயே அமர்ந்திருந்தார்.
ஆர்யனின் கையில் பணப்பெட்டியை பார்த்து புருவம் சுருக்கினார்.
“பிசினஸ் டீல் ஒத்து வரலப்பா, அதான் பணத்தை கொடுக்காம திரும்பி வந்துட்டோம்”
“அதுக்கு ஏன் இவ்ளோ நேரம்?”
“சும்மா லாங் டிரைவ் போயிட்டு வரலாம்னு” என்ற மகனை முறைத்தார் ஆதிசங்கரன். மருமகளின் முன்னால் மகனை திட்டவும் முடியாமல் போனது
இருவரின் முகமும் சோர்ந்திருப்பதை கண்டு, மீதியை காலையில் விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர், “ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்க. ஆர்யா காலைல ஆபிஸுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசணும்” என்றார்
ஆர்யன் சம்மதமாக தலையசைத்ததும் ஆதிசங்கரன் உறங்க சென்று விட்டார்.
“சாப்பிடலாமா மதி”
“எனக்கு பசிக்கலங்க” என்றாள் பார்வையை திருப்பிக் கொண்டு
“ஆனா எனக்கு பசிக்குதே, உன்னை காணலைனு தேடி அலைஞ்சதுல பச்சை தண்ணி கூட குடிக்காம இருந்தேன்”
“அச்சோ, சாரிங்க” என்றவள் உடனே சமையலறைக்கு சென்று உணவை எடுத்து வந்து கணவனுக்கு பரிமாறினாள்.
“நீயும் சாப்பிட்டா தான் நான் சாப்பிடுவேன்” என்றான் ஆர்யன்
வேறுவழியின்றி ஆர்யனுடன் சாப்பிட அமர்ந்தவள் கணவனின் முகத்தை பார்த்தாள்.
இன்பரசு பேசிய வார்த்தைகள் அத்தனையையும் ஆர்யன் கேட்டிருக்கிறான். இருந்தும் அவனை எதுவுமே செய்ய வில்லை. அவனை கொல்லக்கூடாது என்ற மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்கிறான் என்று நினைத்தாலும் மனதில் ஏதோ குறையாக தோன்றியது. செழியன் அண்ணா இருந்திருந்தால் இன்பரசுவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவன் பேசிய பேச்சிற்கு குறைந்த பட்சம் அவன் கையையோ காலையோ உடைத்திருந்தால் மனது ஆறியிருக்கும். இரண்டு மிதி மிதித்து விட்டு அப்படியே விட்டு வந்து விட்டான், அது மட்டுமில்லாமல் அவனை காப்பாற்றவதற்கு ஆளையும் அனுப்புகிறான்.
ஆர்யனுக்கு புரை ஏறியதில் சுயநினைவிற்கு வந்தவள் அவனுக்கு குடிக்க தண்ணீர் டம்ளரை நீட்டினாள்.
“என்னை மனசுக்குள்ள திட்டிட்டு இருந்தியா மதி?” என்றான் ஆர்யன்
கணவனின் கேள்வியில் அதிர்ந்து விழித்தாள்.
“அப்போ நிஜமாவே என்னை திட்டிட்டு தான் இருந்திருக்கே” என்றான் புன்னகையுடன், அவள் பதில் பேசாமல் சாப்பிடவும் மனைவியின் முகத்தை பார்த்தவாறே உண்டு முடித்தான்.
அவள் மாடியேற எத்தனிக்கவும் அவளை அப்படியே தூக்கி கொண்டான்.
“என்ன பண்றீங்க?” பதறினாள்
“டயர்டா இருக்கியே, தூக்கிட்டு போய் படுக்க வைக்கலாம்னு பார்த்தேன்”
“ஒண்ணும் வேணாம், கீழே இறக்கி விடுங்க” முனகினாலும் ஆர்யனின் கழுத்தில் தன் கரங்களை மாலையாக கோர்த்துக் கொண்டாள். அவனோ மனைவியின் பேச்சை கேட்டு இறக்கி விட எத்தனிக்க, அப்போது தான் அவள் கரங்கள் தன் கழுத்தை வளைத்திருப்பதை கண்டு புன்னகைத்தான்.
வளர்மதிக்கு ரோஷம் வந்து அவன் கழுத்திலிருந்து கைகளை பிரித்து, “இறக்கி விடுங்க” என்றாள் சற்று அழுத்தமாக
“முடியாது” என்றவன் மாடிக்கு தூக்கி சென்று கட்டிலில் அவளை படுக்க வைத்தான். வளர்மதி அவன் முகத்தை பாராமல் திரும்பி படுத்துக் கொள்ளவும் அவளின் தோளை அழுந்த பற்றி தன்னை நோக்கி திருப்பினான்.
“நான் அவனை கொன்னு போட்டிருப்பேன், நீதான் வேணாம்னு தடுத்தே, சரினு ரெண்டு உதை உதைச்சுட்டு வந்தா அதுக்கும் மூஞ்ச தூக்கிட்டு உட்கார்ந்து இருக்கே. என்ன தாண்டி உன் பிரச்சனை?” என்றான் ஆர்யன்
“நீங்க மட்டும் என்னவாம், முதல்ல அவனை கொல்றேன்னு சொன்னீங்க, நான் வேணாம்னு சொன்னதும் அப்படியே விட்டுட்டு வந்துட்டீங்க, ஏதாச்சும் பண்ணுவீங்கனு நினைச்சேன்” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்
“என்ன பண்ணுவேன்னு நினைச்சே?” என்று புருவம் உயர்த்தினான்
“தெரியல, ஆனா அவனுக்கு பெரிய தண்டனை கிடைக்கணும்னு நினைச்சேன்”
“நீ நினைச்ச மாதிரி அவனுக்கு மரணத்தை விட பெரிய தண்டனை கொடுத்திருக்கேன் மதி”
வளர்மதி புரியாமல் கணவனை பார்த்தாள். அவனோ மர்ம புன்னகையுடன், “இப்போதைக்கு மூளைக்கு எந்த வேலையும் கொடுக்காம நல்லா தூங்கு, காலைல பேசிக்கலாம்” என்றான்.
“அது சரி, நான் உன்னை தூக்கும் போது வேணாம்னு சொல்றே? சரி இறக்கி விட்டுடலாம்னு நினைச்சா என் கழுத்தை கட்டிக்கறே, திருப்பி இறக்கி விடுங்கனு சொல்றே, உன்னை புரிஞ்சுக்கவே முடியலையே” என்றபடி அவளருகே படுத்தான்.
“உங்களை கூட தான் என்னால புரிஞ்சுக்க முடியல” என்றாள் மெல்லிய சிணுங்கலோடு
“தூரமா இருந்தா எப்படி புரிஞ்சுக்க முடியும்?” என்ற ஆர்யன் தன் கைகளை விரித்து காட்ட, வளர்மதி அவன் கரங்களுக்கிடையே நுழைந்து கொண்டாள். வழிதவறிய மான்குட்டி தன் புகலிடத்தில் அடைக்கலமானது போல அவன் கைகளுக்குள் அடைக்கலமாகி அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கியிருந்தாள். முதுகின் மீது கணவன் மென்மையான வருடவும், அதில் நிம்மதியாக உறங்க தொடங்கினாள்.
மறுநாள் காலை விடிந்தது கூட தெரியாமல் அடித்து போட்டது போல உறங்கி கொண்டிருந்த மனைவியின் கன்னத்தை மென்மையாக வருடினான் ஆர்யன். அப்போதும் அவள் சிறிதளவே முகத்தை சுருக்கி பின்பு மீண்டும் புரண்டு படுத்தாள். அவள் நெற்றியில் முத்தமிட்டவன், குளித்து தயாராகி கீழே சென்றான்.
ஹாலில் ஆதிசங்கரன் ஆர்யனை கண்டதும் திட்ட ஆரம்பித்து விட்டார்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா ஆர்யா? அவ்ளோ பெரிய அமெளண்ட்டை மருமகளை எடுக்க சொல்லிட்டு நீ எங்கே போனே? பொண்ணுங்க தனியா போனாலே பாதுகாப்பு இல்ல, இதுல பெரிய தொகையை கொடுத்து அனுப்பி இருக்கே, அதுவும் நம்ம கார்ல அனுப்பாம வேற கார்ல. உனக்கு கொஞ்சமாச்சும் மூளையிருக்கா? கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகல, அதுக்குள்ள அவளை வேலை வாங்கறீயே, என்கிட்ட சொன்னா நான் பணத்தை எடுத்துட்டு போய் கொடுக்க மாட்டேனா? அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் ஆனா அவ பொறந்த வீட்டுக்கு யார் பதில் சொல்லுவா? ரெண்டு பேருமே போன் எடுக்கலனு நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?”
ஆதிசங்கரன் திட்டிக் கொண்டிருக்க, “தனியா அனுப்பினது தப்பு தான்ப்பா, இனிமே செய்ய மாட்டேன்” என்று தவறு செய்து விட்ட சிறுபிள்ளையாய் தலை குனிந்து நின்றான் ஆர்யன்.
ஆதிசங்கரனின் கணீர் குரல் மாடியில் இருந்த வளர்மதியின் தூக்கத்தை களைத்திருந்தது. மெல்ல புரண்டு படுத்த போது அவளுடைய கைப்பேசி வேறு அலறியது. திரையில் ப்ரூட்டி என்ற பெயரை பார்த்ததும் தூக்க கலக்கத்திலேயே அதை ஏற்று, “சொல்லு கனி, காலையிலேயே போன் பண்ணி இருக்கே?” என்றாள் கொட்டாவி விட்டபடி
“வளரு, உனக்கெதுவும் பிரச்சனை இல்லையே, நேத்து வீட்ல தானே இருந்தே” என்றதும் வளர்மதி எழுந்து அமர்ந்தாள்.
“வீட்ல தான் இருந்தேன், ஏன் கேக்கறே?”
“நேத்து ஆந்திரா நெல்லூர் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல இருந்து என் அம்மாவுக்கு போன் பண்ணியிருக்காங்க. யாரோ என் அண்ணங்காரன் இன்பரசுவை வெனாடுங்கிற ஏரிக்கரை தீவுல அடிச்சு போட்டு இருக்காங்க. அங்கே இருக்கறவங்க ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு அவன் பாக்கெட்ல இருந்த ஐடி கார்டை வச்சு வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்காங்க. அம்மா எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், விடும்மா வீட்ல அடங்காதவன் ஊர்லயாவது அடி வாங்கி திருந்தட்டும்னு சொன்னேன். அப்பவும் அம்மா ஒரே அழுகை, என்னாச்சுனு பார்த்துட்டு வந்துடலாம்னு சொல்லுச்சு. மாமாகிட்ட கேட்டதுக்கு, நீங்க வேணும்னா போங்க, நான் வரல, அவனை பார்த்தா மிச்சம் இருக்கற உசுரையும் எடுத்துடுவேன்னு சொல்லுச்சு.
சரின்னு நானே டாக்சி புக் பண்ணி அம்மாவையும் அப்பாவையும் அழைச்சிட்டு விடியற்காலையே கிளம்பி நெல்லூர்க்கு வந்தேன். யார் அடிச்சாங்க, எதுக்கு அடிச்சாங்கனு கேட்டா வாயே திறக்க மாட்டேங்கிறான். எழுந்து நடக்க முடியலனு சொல்றான். டாக்டர் வந்து செக் பண்ணாங்க. இடுப்புக்கு கீழே உணர்ச்சியே இல்லையாம், தண்டுவடுத்துல எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு, அதை சரிசெய்யவே முடியாது, இனிமே சாகற வரைக்கும் எல்லாமே படுக்கைல தான்னு சொல்லிட்டாங்க” என்று கனிஇதழி இன்னமும் ஏதாே பேசி கொண்டிருந்தாள்.
“அவனுக்கு மரணத்தை விட பெரிய தண்டனை கொடுத்திருக்கேன் மதி” என்ற ஆர்யனின் வார்த்தைகள் தான் இப்போது வளர்மதியின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)