வேங்குழல் 17

யாதவ் மயங்கி விழுந்த தாயை தாங்கி பிடித்தவன் உடனடியாக நிலைமையை புரிந்து கொண்டு, “ராதி உடனே டாக்சி புக் பண்ணு” என்று சொல்லி விட்டு செல்வியின் மயக்கத்தை தெளிய வைத்தான்.

 

“அம்மா, கவலப்படாதே உடனே போயிடலாம், அவருக்கு எதுவும் ஆகாது” என்று அன்னையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் மூவரும் சென்னையை நோக்கி பயணம் செய்தனர். போகும்வழியிலேயே வேலுவுக்கு போன் செய்து விஷயத்தை தெரிந்து கொண்டவன் உடனடியாக மருத்துவமனைக்கு காரை ஓட்ட சொன்னான்.

 

“யாதவ், மாமாவுக்கு என்ன ஆச்சு?”

 

“அப்பா முரளியை குளிக்க வைக்க முயற்சி பண்ணி இருக்காரு. அவன் பக்கத்தில இருந்து எதையோ எடுத்து அவர் தலையில ஓங்கி அடிச்சிட்டானாம். தலையில் அடிப்பட்டதுல அப்பா மயங்கிட்டாராம். திடீர்னு முரளி ரொம்ப மூர்க்கமா நடந்துக்கறானாம், வேலு மாமா ஒருத்தரால அவனை சமாளிக்க முடியாம அப்படியே அவனை அறைக்குள்ள தள்ளி கதவ சாத்திட்டு அப்பாவ கூட்டிட்டு ஆஸ்பிட்டல் போய்ட்டாராம். என்ன இருந்தாலும் நமக்கு தகவல் சொல்லணும்னு சொல்லி இருக்காரு” என்றான் பெருமூச்சோடு

 

“யாதவ் அந்த புல்லாங்குழல வச்சு முரளிய குணப்படுத்த முடியாதா?”

 

“பைராகிக்கு முரளிய காப்பாத்தறதுல அவ்வளவா விருப்பம் இல்ல. கடைசியாக அவர் அவன் எதிர்ல புல்லாங்குழல் இருக்கறதையே காட்டிக்க வேண்டாம்னு சொன்னாரு. அதுக்காக தான் பாக்கறேன். முடிஞ்ச வரைக்கும் டாக்டர் வச்சு குணப்படுத்த முடியுதானு பாப்போம், முடியலனா மத்ததை பத்தி யோசிப்போம்” என்றான் பெருமூச்சோடு

 

டாக்சி மருத்துவமனை சென்றடைந்ததும் யாதவ் முதலில் இறங்கி கார்கதவை திறந்து அன்னையை மெதுவாக எழுப்பினான், “அம்மா, அவர் இங்கே தான் அட்மிட் ஆகியிருக்காராம்” என்று சொன்னதும் மயக்கத்தில் இருந்த செல்வி விலுக்கென்று எழுந்து அவசரமாக காரை விட்டு இறங்கினார்.

 

வாசலில் வேலுவை கண்டதும் “அண்ணா அவருக்கு என்னாச்சு” என்று அரற்றி கொண்டே அவர் பின்னால் ஓடினார். 

 

“யாதவ், உங்கம்மா பாவம், மாமா மேல உயிரே வச்சிருக்காங்க போல. உங்க இரண்டு பேரால பிரிஞ்சு வாழ்ந்திருக்காங்க” என்றாள் செந்தாழினி.

 

“இதுல என்னையும் சேக்காத ராதி, எல்லாம் முரளியோட வேலை” என்றபடி டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்குள் சென்றான்.

 

உள்ளே வெற்றிவேந்தனின் நெஞ்சில் தலைவைத்து செல்வி அழுதுக் கொண்டிருக்க தலையில் கட்டுடன் இருந்தவர், அவர் தலையை ஆதரவாக தடவிக் கொண்டிருந்தார்.

 

“செல்வி, அழாதம்மா, எனக்கு எதுவும் ஆகாது. கடைசி காலாமாவது உன் கூட சேர்ந்து வாழணும்னு நினைச்சிட்டு இருக்கேன். அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போக மாட்டேன்” என்றார் கனிவான குரலில்

 

“வாழற காலத்துல தனியா தவிக்க விட்டுட்டு பேசறாரு பாரு டயலாக்” என்று மெல்லிய குரலில் மனைவிக்கு மட்டும் கேட்டும் படி கருவினான்.

 

“யாதவ் அவங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருக்கு, உனக்கு அது தெரியலையா? அவர் தனியா தவிக்க விட்டதா உங்க அம்மா ஒரு நாளும் உன் கிட்ட புலம்பி இருக்க மாட்டாங்க, அப்படி தானே?”

 

“ஆமா, என் அம்மா எதிர்ல இருக்கும் போது அவரை திட்டக்கூட விட மாட்டாங்க. ஐயாவ அப்படி சொல்லாதேனு என்னை தான் அதட்டுவாங்க”

 

“தே லவ் ஈச் அதர் எ லாட் யாதவ். (They love each other a lot) பாவம் உங்க இரண்டு பேரால தான் பிரிஞ்சு இருக்காங்க”

 

“ராதி மறுபடியும் இதுல என்னை குத்தம் சொல்லாதடி, நான் எதுவும் பண்ணல”

 

“ஆமா நீ எதுவும் பண்ணல, உங்கம்மா அப்பா சேர்றதுக்கு நீ எதுவுமே பண்ணல. முரளி உங்கப்பா அம்மாவ பிரிச்சிருக்கான். நீ அவங்களை சேக்கறதுக்கு எந்த முயற்சியும் எடுக்கல. பதினைஞ்சி வருஷமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காமலே எவ்வளவு அன்டர்ஸ்டாங்கோட இருந்திருக்காங்க. உன் அப்பா கடைசி காலத்தலயாவது உங்கம்மா கூட சேர்ந்து வாழணும்னு யோசிச்சிருக்காரு. இதுக்கு மேலயும் அவங்களை தனியா விட கூடாது யாதவ். ஒன்னு சென்னையிலயோ அலங்காநல்லூர்லயோ இரண்டு பேரும் ஒண்ணா இருக்கட்டும்” என்றாள் செந்தாழினி.

 

“என் அப்பா எங்களை தேடி வரவே இல்ல, என் அம்மாவ தவிக்க விட்டுடாருனு கோவமா இருந்துச்சு ராதி. இரண்டு பேருக்குள்ளும் இப்படி ஒரு காதல் இருக்கும்னு நான் யோசிக்கவே இல்ல. சரி இரண்டு பேருகிட்டயும் பேசறேன். அவங்க எங்கே இருக்கணும்னு முடிவு பண்றாங்களோ அங்கே இருக்கட்டும்”

 

வெற்றிவேந்தன் மனைவியை சமாதானம் செய்துக் கொண்டிருந்தவர் அப்போது தான் நிமிர்ந்து யாதவ்வை பார்த்தார். “யாதவ் அப்பா மேல கோவமாடா, முரளி உன்னையும் செல்வியையும் எதுவும் பண்ணிடுவானோனு பயந்து தான்டா உங்களை தேடி வரல. மத்தபடி உங்க இரண்டு பேரையும் நினைக்காத நாள் இல்ல. என்னய மன்னிக்க மாட்டியா யாதவ்?” என்றார் மகனை கண்கலங்க பார்த்து.

 

அதற்கு மேல் யாதவ்வால் தன் கோபத்தை நிறுத்தி வைக்கமுடியவில்லை. அவர் அருகே சென்று அவர் கரம் பற்றி அழுத்தினான். “உங்க சூழ்நிலை தெரியாம நான் தான் உங்களை தப்பா நினைச்சிட்டேன் சாரிப்பா” என்றான் ஆழ்ந்த குரலில்

 

மகன் அப்பா என்று கூப்பிட்டதும் வெற்றிக்கு கண்கள் கலங்கி விட்டது. அவன் கரத்தைப்பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். “செல்வி உன்னை நல்லா வளர்த்திருக்கா. என் வளர்ப்பு தான் சரியில்ல” என்றார் தழுதழுத்த குரலில்.

 

“எல்லா சரியாயிடும், அவனை நான் சமாளிச்சிக்கிறேன். இனி நீங்களும் அம்மாவும் ஒண்ணா இருங்க”

 

“இல்ல யாதவ் முரளியை பத்தி உனக்கு தெரியாது, உனக்கு எதாவது பிரச்சனை கொடுப்பான்”

 

“அவன் என்ன பிரச்சனை கொடுத்தாலும் நான் பார்த்துக்கிறேன். இனியும் அவனுக்கு படிஞ்சு போகணும்னு எந்த அவசியமும் இல்ல. நானா அவனானு ஒரு கை பார்த்திடறேன்” என்றான் யாதவ் முடிவான குரலில்.

 

“முரளி சுயநினைவோட இருந்தாலே அவனை சமாளிக்கிறது கஷ்டம். இப்போ ரொம்ப மூர்க்கமா நடந்துக்கிறானே” என்றார் கவலையாக

 

“அப்பா நான் பார்த்துக்கிறேன். முரளி குணமாகிற வரைக்கும் சென்னையில் தங்கறேன். நீங்களும் அம்மாவும் கொஞ்ச நாள் நிம்மதியா அலங்காநல்லூர் வீட்ல இருங்க”

 

“ஐயா, யாதவ் சொல்றது சரி தான், உழைச்சது எல்லாம் போதும், கொஞ்சநாளாவது சந்தோஷமா செல்வி கூட கிராமத்துல இருந்துட்டு வாங்க. நான் இங்கே யாதவ்க்கு துணையா இருந்து முரளி ஐயாவ பாத்துக்கறேன்” என்றார் வேலு

 

தலையில் மட்டும் அடிப்பட்டு இருந்ததால் சில தையல்கள் மட்டும் வெற்றிவேந்தனுக்கு போடப் பட்டு இருந்தது. எனவே மறுநாள் காலையே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

பெற்றோரை அழைத்துக் கொண்டு யாதவ் நேராக அலங்காநல்லூர் ஓட்டு வீட்டிற்கு சென்றான். வேலு முரளியை பார்த்துக் கொள்ள சென்னையிலேயே இருந்து விட்டார். 

 

கிராமத்து வீட்டில் செல்வி சின்ன பெண் போல ஓடி ஒடி தன் கணவனுக்கு பணிவிடைகள் செய்தார். வெற்றிவேந்தன் மனைவியை ஆதுரமாக பார்த்து “தேங்க்ஸ் செல்வி” என்று சொன்னதும் அவள் முகம் பூரித்து போகும்.

 

செல்வி ஓடியாடி அவருக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்வதும் வெற்றிவேந்தன் படுக்கையில் படுத்தபடி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் கண் இமைக்காமல் பார்ப்பதையும் பார்த்த யாதவ் அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்தான்.

 

“அப்பா நானும் ராதியும் போய் முரளிக்கு என்னாச்சுனு பார்க்கிறோம். அவனுக்கு சீக்கிரம் குணமாக ஏற்பாடு செய்யறேன். நீங்க இங்கேயே ரெஸ்ட் எடுங்க”

 

மனைவியிடம் மனம் விட்டு பேச தனிமை கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருந்த வெற்றிவேந்தன், ஒரு பேச்சுக்காக கூட வேண்டாம் என்று சொல்லாமல், “சரி யாதவா” என்றார் பட்டென்று. 

 

யாதவ் சிரித்துக் கொண்டே, “ராதி சீக்கிரம் கிளம்புடி. சின்னஞ்சிறுசுங்களுக்கு முன்னாடி நாம நந்தியா இருக்க கூடாது” என்றான் சிரித்துக் கொண்டே

 

“டேய் போக்கிரி” என்று செல்வி கையில் இருந்த மத்து கோலால் மகன் முதுகில் ஒன்று கொடுத்தார்.

 

“பாருடி நான் இன்னும் கிளம்பலனு என்னய என் அம்மா மத்து கோல்ல அடிக்கிறாங்க. நீ உன் புருஷனை காப்பாத்த மாட்டியா?” என்று பொய்யாக முறைத்தான் மனைவியை

 

செந்தாழினி சிரித்துக் கொண்டே, “இதை ஏன்டா முன்னாடியே செய்யலனு நல்லா அடிங்க அத்தை” என்றாள்.

 

“பார்டா என் மருமக எனக்கு தான் சப்போர்ட்டா இருக்கா” என்று இன்னும் செல்லமாக செல்வி அடிக்க, அவன் வலிப்பது போல முதுகை வளைத்து நெளித்து “அய்யோ அம்மா” என்று கூவினான்.

 

வெகுநாட்களுக்கு பிறகு வெற்றிவேந்தன் மனம் விட்டு சிரித்தார். “செல்வி என் மகனை என் கண்முன்னாடியே அடிக்கிறியா?” என்று கேட்டதும் செல்வி உடனே அந்த கோலை கீழே போட்டு “மன்னிச்சிடுங்க ஐயா, மெதுவா தான்” என்றார் மெல்லிய குரலில் தலையை குனிந்துக் கொண்டு

 

கணவன் பேச்சுக்கு உடனே கட்டுப்படும் தன் அன்னையை கண்களால் காட்டி, “ராதி பாத்துக்க, என் அம்மாகிட்ட இருந்து கத்துக்க” என்றான் குறும்பாக. அவளோ உதட்டை சுழித்து அவனுக்கு அழகு காட்டினாள். அவன் அவள் உதட்டை தின்று விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“தனியா கூட்டிட்டு போய் அடி செல்வி” என்ற குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து வெற்றிவேந்தனை பார்த்தான்.

 

அவர் குறும்புடன் மகனை பார்த்து சிரித்தார். செல்வி இப்போது யாதவ்வின் காதை பிடித்து தூக்க, மற்றொரு காதை செந்தாழினி பிடித்து இழுத்தாள், “வாங்க அத்த பக்கத்து ரூமுக்கு போய் கும்மிருவோம்” என்றாள்.

 

“அடப்பாவிங்களா, பழி ஒரு இடம் பாவம் ஒரு இடமா? இரண்டு பேரையும் பிரிச்சி விட்டவன் சென்னையில் இருக்கான். அவனை கண்டா உங்களுக்கு பயம். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டியாம்., இந்த பச்ச புள்ளைய அடிக்க திட்டம் போடறீங்களே” என்று அலறினான் யாதவ்

 

மற்ற மூவரும் அவன் பேச்சைக் கேட்டு கலகலவென்று சிரித்துக் கொண்டிருக்கும் போதே யாதவ்வின் போன் அலறியது.

 

“சொல்லுங்க மாமா”

 

“இதோ நானும் ராதியும் கிளம்பி இன்னைக்கு நைட்குள்ள சென்னை வந்திடுவோம். நீங்க அதுவரைக்கும் அவன் கிட்ட போக வேணாம்” என்று சொல்லி போனை வைத்தான்.

 

“என்னாச்சு யாதவ்? வேலு என்ன சொன்னான்? முரளி வேலுவையும் அடிச்சிட்டானா?” என்றார் வெற்றி சிரிப்பு மறைந்து கவலையான குரலில்

 

“அதெல்லாம் இல்லப்பா, அறைக்குள்ள போறதுக்கு மாமாவுக்கு பயமா இருக்காம். உள்ள இருக்க சாமானை எல்லாம் எடுத்து உடைச்சிட்டு மூர்க்கமா கத்திட்டு இருக்கானாம்”

 

“ஐயோ என் மவன் ராஜா மாதிரி இருந்தானே. இப்படி ஆயிடுச்சே” என்று அழ ஆரம்பித்தார் செல்வி

 

“அம்மா அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, நான் போய் பார்த்துக்கிறேன். நீங்க அப்பாவை பார்த்துக்கோங்க. எதாவது தேவைனா எனக்கு போன் பண்ணுங்க” என்றவன் மனைவியிடம் திரும்பி “ராதி கிளம்பு போகலாம்” என்றான்.

 

அவர்கள் கிளம்பும் போது “யாதவ் பிசினசையும் அப்படியே பார்த்துக்க, வேலுவுக்கு எல்லா விவரமும் தெரியும், அவன் உனக்கு உதவியா இருப்பான். முரளிகிட்ட எப்பவும் ஜாக்கிரதையா இரு” என்று எச்சரித்தார் வெற்றிவேந்தன்.

 

மென்புன்னகையுடன் அவரை பார்த்து “சரிப்பா நான் பார்த்துக்கிறேன்” என்று சென்னைக்கு கிளம்பினான் யாதவ்.

 

**********

 

யாதவ் செந்தாழினியோடு வீட்டிற்குள் நுழையும் போதே “ஹா” என்ற முரளியின் ஆக்ரோஷமான சத்தம் கேட்டது. அவசரமாக உள்ளே ஓடினான் யாதவ். முரளியின் அறைவாசலில் வேலு கீழே விழுந்து கிடந்தார்.

 

சாப்பாடு கொண்டு போயிருப்பார் போல, தட்டு ஹாலில் விழுந்து உருண்டோடிக் கொண்டிருந்தது. அதிலிருந்த உணவு எல்லாம் சிதறி அந்த அறை முழுவதும் தெறிந்து இருந்தது.

 

வேலுவை தூக்கி நிறுத்தி அங்கே சோபாவில் அமர வைத்து விட்டு யாதவ் அழுத்தமான காலடிகளுடன் நிதானமாக அந்த அறைக்குள் நுழைந்தான்.

 

ஒரு வெறிக் கொண்ட சிங்கத்தை மற்றொரு சிங்கத்தால் தானே அடித்து வீழ்த்த முடியும்?

 

யாதவ் அறைக்குள் நுழைந்ததும் முரளி ஆவேசமாக அங்கிருந்த நாற்காலியை ஒரு சுழற்று சுழற்றி சுவற்றில் அடித்தான். அது நாலு பீசா உடைந்து விழ அதிலிருந்து ஒரு கட்டையை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் யாதவனை நோக்கி வீசினான்.

 

நொடியில் புரிந்துக் கொண்டு யாதவ் அந்த கட்டையை கேட்ச் பிடித்தான். இப்போது முரளி குனிந்து இன்னொரு கட்டையை தூக்கி கொண்டு யாதவனை தாக்க வர, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்துக் கொண்டே தங்களுக்கு அடிபடாமலும் காத்துக் கொண்டனர்.

 

மொத்தத்தில் இருவர் மேலும் ஒரு அடியும் படவில்லை. அவர்கள் சண்டையை பார்த்துக் கொண்டிருந்த வேலுவுக்கும் செந்தாழினிக்கும் தான் நெஞ்சில் நீர்வற்றி போயிருந்தது. கடைசியாக யாதவ் முரளியின் கையில் இருந்த கட்டையை பிடுங்கி அவனை கட்டில் மீது சாய்த்து அவன் கழுத்தை நெருக்கி பிடித்திருந்தான்.

 

ஒரு கையால் அவன் கழுத்தை நெருக்கி பிடித்தபடி மற்றொரு கையால் மேஜை மேல் இருந்த கத்தியை எடுத்தான்.

 

வேலு அவசரமாக ஓடி வந்தார், “யாதவ் முரளி ஐயாவ விட்டுடுப்பா” என்றார் பதற்றமாக.

 

“மாமா சீக்கிரமா போய் ஷேவிவ் லோஷன், ஷேவிங் மிஷின் எல்லாம் கொண்டு வாங்க. இந்த கோலத்துல இவன பார்க்க சகிக்கல” என்றான்.

 

அப்போது தான் அவன் எண்ணம் புரிய வேலு குளியலறைப் பக்கம் ஓடினார். முரளி யாதவனை வெறித்து பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.

 

வேலு கொண்டு வந்து கொடுத்த பொருட்களை வைத்து, யாதவன் முரளியின் முடியை திருத்தி, அவனுக்கு ஷேவ் செய்தான். முரளி வெறித்த கண்களோடு அமர்ந்திருந்தானே தவிர யாதவனை தடுக்க வில்லை. 

 

வேலுவுக்கு அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டார். ‘என்ன நடக்குது இங்க’ என்று கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தார். முரளி யாதவனை தடுக்காமல் அப்படியே அமர்ந்திருக்கவும், “யாதவா அப்படியே ஐயாவை குளிக்க வச்சு, சாப்பிட வச்சிட்டா…” என்று அவர் இழுக்கவும் திரும்பி அவரை முறைத்தான்.

 

“இவனுக்கு ஆயா வேலை செய்யறதுக்கு தான் அலங்காநல்லூர்ல இருந்து கிளம்பி வந்தனா?” என்றான் எரிச்சலாக

 

“ஏதோ பாக்க கேவலமா இருக்கானே. இதே வீட்ல இந்த முகத்தை பார்த்துட்டு எப்படி நடமாடறதுனு தான் ஷேவ் பண்ணேன். விட்டா இவனுக்கு ஹக்கீஸ் மாத்திடவிட சொல்லுவீங்க போல இருக்கு” என்றான் நக்கலாக

 

“பண்ணா என்னடா, உன் அண்ணன் தானே” என்றார் வேலு தயங்கி கொண்டே

 

திரும்பி பார்த்து தன் மாமனை முறைத்தவன், “இதையே அவன் கிட்ட சொல்றது தானே. உன் தம்பி தானேனு இதுவரைக்கும் எனக்காக பேசியிருக்கீங்களா?” என்றான் குற்றம் சாட்டும் குரலில்

 

“இந்த மாமா சொன்னா நீ கேப்ப, அவரு கேக்க மாட்டாருய்யா, எனக்கு உன்கிட்ட தானே உரிமை இருக்கு” என்றார் வேலு தலையை குனிந்து கொண்டு

 

அவரும் பாவம் தானே, ஒரு வேலைக்காரனாக இந்த வீட்டில் இருந்து கொண்டு அவரால் என்ன செய்து விட முடியும்? திருமணமே செய்துக்காம வெற்றிவேந்தனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேலு மாமனை நினைத்து கழிவிரக்கம் கொண்டான் யாதவ் கிருஷ்ணா.

 

“அப்ப சும்மா மசமசனு நிக்காம அவனை ஒரு கை பிடிங்க, குளிக்க வச்சிடலாம்” என்றான்

 

“நானா?” 

 

“மாமா எனக்கு முத்துகருப்பனை (காளை மாட்டை) குளிச்ச வச்சு தான் பழக்கம், எரும மாட்டை இதுவரைக்கும் குளிப்பாட்டினது இல்ல” என்றான் நக்கலாக

 

வேலு பதட்டத்துடன் முரளியை பார்த்து, “ஐயா அவன் ஏதோ உளர்றான், நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க” என்றார் பதட்டமாக

 

“என்ன மாமா இது? சித்தபிரமை பிடிச்சிருக்கு, அவனை அவனுக்கே அடையாளம் தெரியல, அப்படிவும் பயப்படுறீங்க” என்று சிரித்தான் யாதவ்.

 

“எப்படி இருந்தாலும் மரியாதை கொடுத்து பழகிட்டேன். இனிமே ஐயாவ அப்படி சொல்லாத யாதவா” என்றபடி யாதவனோடு முரளியை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார் 

 

முரளி எந்த முரண்டும் பிடிக்காமல் அமைதியாக இருந்தான். இருவரும் சேர்ந்து அவனை குளிக்க வைத்தனர். வேலு மீண்டும் சாப்பாடு கொண்டு வந்து முரளிக்கு ஊட்டி விட்டார். அவன் யாதவனை வெறித்து பார்த்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

 

ஒருவாறு வேலுவுடன் சேர்ந்து அந்த அறையை சுத்தம் செய்து முரளியை படுக்கையில் படுக்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தான் யாதவ் கிருஷ்ணா.

 

செந்தாழினி ஹாலில் அமர்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.

 

“என்ன ராதி பலமா யோசிக்கிற?”

 

“யாதவ் எனக்கென்னவோ முரளி நடிக்கிறாரோனு தோணுது, அதெப்படி இவ்வளவு நாள் பழகின உங்கப்பாவையும் வேலுவையும் கிட்ட சேக்காதவரு, உங்களை மட்டும் சேர்த்துக்கிட்டாரு. இத்தனைக்கும் உங்கள பரம எதிரியா பாக்கிற மனுஷன், நீங்க செய்யறதை எல்லாம் ஏத்துக்கிறதை பார்த்தா எனக்கு நம்பவே முடியல”

 

“நீ சந்தேகம் எல்லாம் படவே வேண்டாம். அவன் நிச்சயமா நடிக்கிறான்” என்ற யாதவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் செந்தாழினி

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top