வேங்குழல் 16

மூத்த மகனை தேடிச் சென்ற இளைய மகனிடம் இருந்து எந்த தகவலும் இல்லாமல் வெற்றிவேந்தன் மிகுந்த கவலையில் இருந்தார்.

 

“ஐயா இப்படி சாப்பிடாம இருந்தா எப்டிங்க, எனக்கு யாதவ் மேல முழு நம்பிக்கை இருக்கு, அவன் எப்படியாச்சும் நம்ம முரளி ஐயாவோட வந்திருவான் பாருங்க” 

 

அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே வாசலில் கார் டாக்சியின் ஹார்ன் சத்தம் சங்கீதமாக ஒலிக்க இருவரும் விருட்டென்று எழுந்து ஒருவரை ஒருவர் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினர்.

 

காரில் இருந்து முதலில் செந்தாழினி இறங்கினாள், அதன் பின் யாதவன் தன் பழைய கார்மேக வண்ணத்தோடு இறங்கினான். வெற்றி மற்றும் வேலுவின் கண்கள் ஆவலோடு முரளியை தேடின? யாதவனோடு முரளியும் ஒரே காரில் வந்திருக்கிறானா? வரலாற்றில் பதிக்க வேண்டிய விஷயமல்லவா? அவன் மிடுக்குடன் இறங்கும் தோற்றத்தை காண இருவரும் காத்திருக்க, மெலிந்த உடலுடன், ஏழெட்டு மாதங்களாக வழிக்கப்படாத தாடி மீசையுடன் வெறித்த பார்வையோடு கீழே இறங்கினான் முரளி கிருஷ்ணா!

 

பெற்றவரே ஒரு கணம் அவனை யாரென்று கூர்ந்து நோக்கினார். வேலு தான் “முரளி ஐயா உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று தலையில் அடித்துக் கொண்டு ஓடினான்.

 

வெற்றிவேந்தன் “வேலு உனக்கென்ன பைத்தியமா? நம்ம முரளியா இது? யாதவ் முரளி எங்கே? நீ அவனை கூட்டிட்டு வரலியா?” 

 

யாதவ் தொண்டையை செருமிக் கொண்டு “இவன் தான் முரளி கிருஷ்ணா, உங்க அருமை புத்திரன்” 

 

அதற்குள் வேலு முரளியின் கைப்பற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றான். நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் ஆயிரம் கேள்விகளோடு அவர்களை பின்தொடர்ந்தார் வெற்றி வேந்தன். எப்போதும் கம்பீரத்துடன் பளிச்சென்று இருக்கும் தன் மகனா இவன்? ஏன் ஏதோ பிச்சைக்காரனை போல உடல் மெலிந்து உடை கிழிந்து, ஆங்காங்கே சிராய்ப்புகளுடன் இருக்கிறான்? பார்வை எங்கோ வெறித்து கொண்டு இருக்கறதே?

 

“முரளி என்னாச்சுடா? ஏன் இப்படி இருக்க?” என்று அவன் தாடையை பற்றி திருப்பினார். அவர் கண்கள் கலங்கியிருந்தது

 

ஆனால் முரளியின் கருமணிகள் எங்கும் அசையாமல் எங்கேயோ வெறித்தபடி இருந்தது. 

 

“வேலு மாமா, சைக்கியாரிஸ்ட் கிட்ட டிரீட்மென்ட் எடுத்தா சரியா போய்டும். ஏதோ ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி காடு மேடு எல்லாம் சுத்தி பிரமை பிடிச்சவன் போல இருக்கான், அவ்வளவு தான் அவரை கவலபட வேணாம்னு சொல்லுங்க” என்றான் யாதவ் அழுத்தமாக தன் தந்தையை பார்த்தவாறு

 

ஒரு நாளாவது இந்த மனுஷன் எனக்காக இப்படி ஏங்கி இருப்பாரா? கடுப்பாக இருந்தது அவனுக்கு.

 

மனதை சமநிலை படுத்திக் கொண்டு திரும்பியவர் அவன் அருகில் நின்றிருந்த செந்தாழினியை அப்போது தான் பார்த்தார். புருவம் சுருக்கி, “யாதவ் இந்த பொண்ணு”

 

“என்னோட மனைவி”

 

“என்னடா சொல்ற?” உச்சபட்ச அதிர்ச்சியில் கூவினார் வெற்றிவேந்தன். அவர் கண்கள் தெறித்து விடுவது போல இருந்தது, மெல்ல கால்கள் தள்ளாடின.

 

“அய்யா, ஏதோ போன இடத்துல ஒரு பொண்ணை விரும்பிட்டான் போல, வயசு பையன் தான அதுக்கு போய் இப்படி அதிர்ச்சியாகலாமா?” என்று வேலு வெற்றியின் கரத்தை பற்றி அழுத்தினார்.

 

“வேலு புரியாம பேசாதே. முரளி கடைசியா என்கிட்ட சொல்லிட்டு கிளம்பும் போது இந்த பொண்ணை தான் நான் கல்யாணம் கட்டிக்க போறேன்னு சொல்லிட்டு போனான். இப்போ இவன் கட்டிட்டு வந்து நிக்கிறான். என்ன நடக்கும்னு நான் உனக்கு சொல்லணுமா?”

 

வேலு மட்டுமல்ல யாதவ் செந்தாழினி கூட அதிர்ச்சியில் உறைந்து போயினர். துளிர்விடாத ஒருதலைக் காதல் இருந்திருக்கும் என்று தான் யாதவ் நினைத்திருந்தான். பிரிந்து வாழ்ந்திருந்தாலும் முரளியை பற்றி யாதவ்வுக்கு நன்றாகவே தெரியும். அவன் யாரையும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டான். பூவில் தேனை பருகும் வண்டின் ரகம் அவன். வேலை முடிந்ததும் பறந்து விடுவானே தவிர கல்யாணம் செய்து சம்சார கடலில் தத்தளிக்க அவன் விரும்பவே மாட்டான்.

 

அப்படிப்பட்டவன் அப்பாகிட்ட கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லிட்டு போயிருக்கான்னா, சீரியசா செந்தாழினியை விரும்பி இருக்கான் போல இருக்கே? யோசனையோடு மனைவியை பார்த்தான்.

 

“அங்கிள்” செந்தாழினியின் குரலில் முரளியை தவிர மற்ற மூவரும் அவளை பார்த்தனர்.

 

“எனக்கு முரளி மேல எந்த எண்ணமும் இல்ல. இன்பாக்ட் எனக்கு அவரை பிடிக்காது. ஆனா யாதவ்வை பார்த்த உடனே பிடிச்சிருந்தது. இத்தனைக்கும் அவரை முதல் முதலா முரளியோட உருவத்துல தான் பார்த்தேன். போன இடத்துல எங்களுக்கு கல்யாணம் நடந்து போச்சு. முடிஞ்சா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. பிரிக்கணும்னு மட்டும் நினைக்காதீங்க ப்ளீஸ்”

 

வெற்றிவேந்தன் “நான் அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் மா. நீங்க இரண்டு பேரும் நீடூழி வாழணும். அவன் கிளம்பும் போது உன் போட்டோவை காட்டி இவ தான் உங்க மருமகனு சொன்னான். அது உண்மையா தான் போச்சு. முதல்ல அவனுக்கு பிரமை பிடிச்சிருக்கும்னு நான் அவ்வளவா நம்பல. ஆனா உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதை பார்த்துட்டும் உங்க கூடவே சும்மா வந்திருக்கான்னா, அவனுக்கு சித்தபிரமை தான் பிடிச்சிருக்கும்னு இப்ப முழுசா நம்பறேன். நான் அவனுக்கு சீக்கிரம் குணமாகணும்னு வேண்டிக்கிறதா? குணமாகவே கூடாதுனு நினைக்கிறதா? எனக்கு ஒண்ணுமே புரியலம்மா” என்றார் கலங்கிய குரலில்

 

“நீங்க உங்க புள்ளையை குணமாக்கற வழிய பாருங்க, நாங்க கிளம்பறோம்” என்ற யாதவ் மனையிடம் திரும்பி “ராதி கிளம்பு போகலாம்” என்றான்

 

“யாதவ், முரளி இந்த நிலையில் இருக்கிறப்போ இப்படியே விட்டுட்டு போனா எப்படிப்பா?” என்றார் வேலு

 

“என்ன பண்ண சொல்றீங்க மாமா? அவனை குளிப்பாட்டி சீராட்டி பாத்துக்க சொல்றீங்களா என்னய?”

 

“இல்ல, நான் அப்படி சொல்லல. வெற்றி ஐயா தனிமையிலே அவர் காலத்தை வாழ்ந்து முடிச்சுட்டாரு. செல்வியோட வாழ்ந்த ஒன்பது வருஷம் தான் அவர் வாழ்க்கையில வசந்த காலம். மத்தபடி அவரோட வாழ்க்கை பாலைவனமாயிடுச்சு”

 

“அதுக்கு நான் காரணம் இல்லயே?”

 

“நீ காரணம்னு நான் சொல்லலப்பா. முரளி அவரை உங்களோட சேரவே விடல. கொஞ்ச காலமாவது செல்வியை கூட்டிட்டு வந்து நீயும் உன் மனைவியோட வாழ்ந்தா அவர் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். கொஞ்ச நாளாவது பொண்டாட்டி மகன் மருமகளோட வாழற கொடுப்பினையை அவருக்கு கொடுப்பா”

 

“ஏன் மாமா? முரளிக்கு குணமாகாதுனு முடிவே பண்ணீட்டிங்களா? அவன் குணமாகி என்னையும் என் அம்மாவையும் அவமானப்படுத்தறது பத்தாதுனு என் பொண்டாட்டியும் அவமான படுத்தனுமா? நான் கிளம்பறேன். என் அம்மாவையும் இங்கே வர விடமாட்டேன்”

 

“அது செல்வி சொல்லட்டும், அவளுக்கு முரளி இந்த நிலையில் இருக்கிறது தெரிஞ்சா உடனே ஓடியாந்துடுவா, அவளுக்கு மூத்த மகன் மேல அம்புட்டு பாசம்” என்றார் வேலு

 

“இந்த பாசத்தை வச்சு தானே என் அம்மா வாழ்க்கையை கெடுத்ததுமில்லாம என் வாழ்க்கையும் சேர்த்து கெடுத்தீங்க”

 

அதற்கு பதில் சொல்ல முடியாமல் வேலு தலைகுனிய, “சொல்லுங்க மாமா, உங்களுக்கு தங்கச்சி பாசத்தை விட முதலாளிகிட்ட இருக்கிற நன்றி தானே பெருசு. அதனால தான நானும் என் அம்மாவும் செத்தமா பொழைச்சமானு கூட பார்க்கா வராம எங்களுக்கு துணையாவும் இருக்காம இதோ இந்த மனுஷனோடவே காலம் கழிச்சிட்டீங்க. கேட்டா செல்வரத்தினம் ஐயாவுக்கு வாக்கு கொடுத்திட்டேன்னு சொல்லுவீங்க” என்றான் நக்கலாக

 

“இப்பவும் உங்க ஐயாவோட நிலைமையை பத்தி தான் யோசிக்கறீங்க. என் அம்மாவுக்கு ஒரு புள்ளையை கொடுத்துட்டு வீட்டை விட்டு துரத்தினாரே, அப்போ என் அம்மாவை பத்தி நீங்க யோசிக்கவே இல்லை அப்படிதானே? நீங்க ஏன் யோசிக்க போறீங்க? அவங்க என்ன உங்க கூட பொறந்தவங்களா? ஒன்னு விட்ட தங்கச்சி தானே?”

 

“யாதவ் போதும் நிறுத்து, வேலுவை பத்தி இனி ஒரு வார்த்தை யாரும் பேச கூடாது. இப்போ என்ன உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போகணுமா? தாராளமா போ. என் மூத்த மகனை கண்டுபிடிச்சு அழைச்சிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி” என்றார் வெற்றி உணர்ச்சியற்ற குரலில் சத்தமாக

 

“உங்க நன்றியை நீங்களே வச்சுக்கோங்க, ராதி கிளம்பு போகலாம்” என்று மனைவியின் கரம் பற்றி வெளியே நின்றிருந்த காரை நோக்கி சென்றான்.

 

கண்கலங்க நின்றிருந்த வேலுவை ஆர தழுவிக் கொண்டார் வெற்றி. “வேலு, சின்னவன் பேசினதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், மனசில எதுவும் வச்சுக்காதய்யா” என்றார் கரகரப்பான குரலில்.

 

“விடுங்கய்யா, என் மருமகன் கேட்டதுல என்ன தப்பு? அவன் செல்விய பாத்துப்பான்னு நான் உங்களை பாத்துக்கிட்டு இருந்துட்டேன். அவன் சரியா தானே கேட்டான். பரவாயில்ல என் மருமகன் தானே” என்று கண்களை துடைத்துக் கொண்டே சமையலறைக்குள் புகுந்து கொண்டார் வேலு

 

அவர் பேச்சு யாதவ்வின் காதுகளில் விழுந்தது. உணர்ச்சியை அடக்க கண்களை இறுக மூடினான். செந்தாழினி அவன் கரம் பற்றி அழுத்தினாள், பின்பு இருவரும் மீண்டும் காரில் ஏறி அலங்காநல்லூர் சென்றனர். கார் செல்வியின் வீட்டு முன்பு நிற்கவும் பக்கத்து வீட்டு கருப்பி என்று யாதவனால் செல்லமாக அழைக்கப்படும் அருவி ஆர்வத்துடன் வெளியே வந்து பார்த்தாள்.

 

காரில் இருந்து யாதவ் ஜீன்ஸ் பேண்ட் டிசர்ட் என்று ஹீரோ போல ஸ்டைலாக வந்து இறங்கவும். “என்ன யாதவா டிப்டாப்பா வந்து இறங்குற? ஏதாவது சினிமாவுல சான்ஸ் கிடைச்சதா?” என்று வாயை பிளந்தபடி அவனை நோக்கி வந்தாள்.

 

“ஏய் கருப்பி எப்படி இருக்க?” என்றான் கண்களை சிமிட்டி

 

“உன்னையும் கருப்பானு சொல்லிப்புடுவேன் பாத்துக்க, ஆனா பாலிஷ் போட்ட மாதிரி பளபளனு இருக்கறீயே எப்பிடி?” என்று முகவாயில் தன் கையை வைத்து அவனை மேலிருந்து கீழாக பார்த்தாள்.

 

அப்போது அந்தப்பக்கம் கதவை திறந்துக் கொண்டு செந்தாழினி இறங்கவும் கண்களை அகல விரித்து, “இதாரு? செக்க செவர்னு இருக்காக? எந்த படத்துலயும் இவங்கள நான் பாக்கலயே? ஒரு வேள புது ஹீரோயினா? எங்க சூட்டிங்?”

 

“ஏய் லூசு, சூட்டிங்கும் இல்ல, நான் சினிமாவலயும் நடிக்கல. அவ என்னோட பொஞ்சாதி பேரு செந்தாழினி” என்று அவள் தலையில் குட்டினான்.

 

அதற்கே அருவியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.

 

“ஏய் கருப்பி ஓங்கி அடிச்சிட்டனா? வலிக்குதாடி” என்று தலையில் தேய்த்தான்.

 

அவள் பதில் சொல்லாமல் அவன் கையை விலக்கி விட்டு அழுதுக் கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள். “கருப்பி. அருவி நில்லுடி” என்று கத்தினான். 

 

“எதுக்கு இப்படி அழுதுட்டு ஓடுறா?” என்று மனைவியை பார்த்து கேட்டான்.

 

“உன் கை இரும்பு போல இருக்கு, பாவம் அந்த பொண்ணுக்கு ரொம்ப வலிச்சதோ என்னவோ” என்று கணவனை முறைத்தாள்

 

அதிர்ச்சியாக அவன் செந்தாழினையை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே வெளியே பேச்சுக்குரல் கேட்டு செல்வி வெளியே வந்தார். அதற்குள் வேலு யாதவ் தன்னிடம் பேசியதை தவிர்த்து அனைத்தையும் போன் செய்து சொல்லியிருந்தார். “நம்ம யாதவ் தேவதை மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். நீ அவனை எதுவும் பேசாம ஆரத்தி எடுத்து உள்ளே கூப்பிடு. நடக்க வேண்டிய சடங்கை எல்லாம் சரியா செஞ்சுடு” என்று தங்கைக்கு ஆணையிட்டார்.

 

எனவே பேச்சுக்குரல் கேட்கவும் செல்வி தயாராக ஆரத்தி தட்டுடன் வந்தார். 

 

“என்னம்மா நாங்க வர்றதுக்குள்ள அண்ணன் விடு தூது போன்லயே நடந்திருக்கும் போல? சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியோட வர்றோமே இங்கே ஒரு பூகம்பமே நடக்க போகுதுனு பயந்துட்டே வந்தேன். இப்போ என்னடானா புஸ்வானமா போயிடுச்சே” என்றான் சோகம் போல

 

“டேய் போக்கிரி பயலே, வெளிய வச்சு உன் மானத்தை வாங்க வேணாம்னு பாக்கேன். உள்ளே வாலே விளக்கமாறு ரெடியாத்தான் இருக்கு” என்று மிரட்டிக் கொண்டே இருவருக்கும் ஆரத்தி எடுத்தார் செல்வி.

 

யாதவ் மனைவியை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான். பின்னால் வந்த செல்வியின் காலில் விழுந்து வணங்கினாள் செந்தாழினி, “அத்த என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க”

 

“அம்மா மகமாயி, நீ ஏதோ இளவரசி போல இருக்க. நீ என்னமா என் காலுல விழுற” என்று பதறி விலகினார் செல்வி.

 

“இளவரசி தான் இந்த வீட்டுக்கு இளவரசி, ஆனா உங்களுக்கு மாட்டு பொண்ணு” என்று சிரித்தாள் செந்தாழினி.

 

“ஆத்தி ரொம்ப படிச்ச பொண்ணுனு வேலுண்ணா சொன்னாரு. திமிரா இருக்கும்னு இல்ல நினைச்சேன். இவ என்னடா என்னய ஒரு வார்த்தையில சாய்ச்சிபுட்டா?” என்ற தாயின் தோளை பற்றிக் கொண்டே “ஆமாம்மா என்னையும் இப்படி தான் பேசியே கவுத்துட்டா” என்றான் மனைவியை பார்த்து கண்சிமிட்டியபடி.

 

“சரி சரி, நீ அவகிட்ட பேசிட்டு இரு, இருட்டறதுக்குள்ள நலங்கு வைக்க ஏற்பாடு பண்றேன்” என்று வாசலை நோக்கி ஓடினார்

 

“எதுக்குமா?”

 

“எல்லாம் சாந்தி முகூர்த்ததுக்கு தான்டா” என்று சொல்லிக் கொண்டே அவர் வெளி வாசலை தாண்டி இருந்தார்.

 

இப்போது யாதவ் செந்தாழினியை ஆழ்ந்து பார்த்தான். “ராதி உனக்கு இங்கே ஓகேவா”

 

“ஏன் இங்கே என்ன?”

 

“இல்லடி ரூம் ரொம்ப சின்னதா இருக்கே, உனக்கு கம்பர்டபிளா இருக்குமானு யோசிக்கிறேன். நம்மளோடது பால்கோவா பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு. மதுரையில இடம் வாங்கி போட்டு இருக்கேன். அங்கே வீடு கட்டி செட்டில் ஆனதும் நம்ம வாழ்க்கையை தொடங்கலாமா? அதுவரைக்கும்” என்று தொண்டையை கனைத்தான்.

 

“அதுவரைக்கும் தனித்தனியா இருக்கணும்னு சொல்றீங்களா? நீங்க வேணும்னா இருங்க, ஆனா என்னால முடியாது” என்று அவனை கட்டிக் கொண்டாள்.

 

“ராதி டெம்ப்ட் பண்ணாதடி, அம்மா வந்துடுவாங்க” என்றான் ஹஸ்கி வாய்சில்.

 

“இல்லனா மட்டும் ஐயா என்ன பண்ணிட போறீங்க?” என்று வம்பிழுத்தாள்.

 

மீசையை முறுக்கிக் கொண்டே, “என்னை பத்தி தெரியாம பேசாதே ராதி, உன் பழத்தோட்டத்தை மொத்தமா ஜூஸ் போட்டு குடிச்சிடுவேன்” என்றபடி தன் மேல் சாய்ந்திருந்தவளின் இடையைப் பற்றி மேலும் தன்னை நோக்கி இறுக்கினான்.

 

குனிந்திருந்தவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தி அவள் இதழ்களை தன் ஆட்காட்டி விரலால் வருடினான். செந்தாழினி இமைகளை தானாக மூடிக் கொள்ள தன் இருவிரல்களால் அவள் இதழ்களை பிதுக்கினான். மறுகையால் அவள் இடையை அழுத்திக் கொண்டே “ராதி கண்ணை திறந்து பாருடி” என்றான்.

 

மெல்ல கண்திறந்து அவன் கண்களை நேராக பார்த்தாள். அவனுடைய ஆளை விழுங்கும் பார்வையில் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தன. கண்களை தாழ்த்தி கொண்டாள், “ராதி என்னைய பார்க்க சொன்னேன்” என்றான் அழுத்தி

 

“பாக்க முடியல யாதவ் வெட்கமா இருக்கு” என்றாள் அவன் தோளில் முகம் சாய்த்துக் கொண்டு

 

“இதுக்கேவா” என்றவன் இப்போது அவளை மொத்தமாக இறுக அணைத்தான். இருவரின் சுயநினைவோடு நடந்த முதல் அணைப்பு, இருவருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது. இருவரின் கைகளும் மற்றவரின் முதுகை ஆதூரமாய் வருடிக் கொண்டிருந்த சமயம் வெளியே பேச்சுக் குரல் கேட்டது. மனமே இல்லாம் மனைவியை விட்டு விலகி நின்றான்.

 

செல்வி அக்கம் பக்கம் இருந்த பெண்களை அழைத்து வந்திருந்தார். வந்த பெண்களில் ஒருத்தி “என்ன யாதவா? நம்ம ஊர்ல இருக்கற வயசு பொண்ணுங்க எல்லாம் உன்னைய கட்டிக்க நான் நீனு போட்டி போட்டுட்டு திரியறாளுக. நீ என்னடான்னா எவளையும் கண்டுக்காம வடக்கு பக்கம் போய் தேவத மாதிரி ஒரு பொண்ணை கண்ணாலம் பண்ணி கூட்டியாந்துட்ட. உன் ஆத்தா வந்து விஷயத்தை சொல்லி எங்கள கூப்பிட வந்தப்போ எங்க வூட்டு பொண்ணுங்க எல்லாம் யாதவனுக்கு கன்னாலம் ஆயிடுச்சானு ஓனு ஒப்பாரி வைக்கிறாளுக. பொறந்ததுல இருந்து இங்கனயே தான்ல இருந்தே? இந்த புள்ளய எப்போ பாத்தே? எங்கே பழக்கமாச்சு? நம்ம ஊர்ல வாழ ஒத்துக்கிடுச்சா?” என்று  தாடையில் கைவைத்தபடி ஆச்சரியமாக கேட்க

 

“அத்த அது பெரிய கத, இன்னொரு நாள் சொல்றேன். ஆமா நம்ம ஊரு பொண்ணுங்க எதுக்கு அழுவறாளுங்க? நான் எல்லார்கிட்டயும் தள்ளி தானே இருந்தேன்?”

 

“நீ கழுவுற மீன்ல நழுவற மீன் கணக்கா தான்யா இருந்தே. என்ன பண்றது ஊருலயே கண்ணுக்கு லட்சணமா, நல்லவனா, வாட்டசாட்டமா இருந்த ஒரே ஆம்பள சிங்கம் நீதானே, உன்னைய பாத்து எந்த பொண்ணுக்கு தான் ஆசை வராது? உன் பொஞ்சாதிய பார்த்தா, அவ தான் உனக்கு சரியான ஜோடினு புரிஞ்சுப்பாளுங்க, எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிடும். நீ உன் பொஞ்சாதி கூட சந்தோஷமா வாழு, அதுபோதும்.

 

செல்வி! முதல்ல அவங்களுக்கு எதாவது சாப்பிட கொடு. அருவி தோட்டத்துல இருந்து மல்லிப்பூ பறிச்சுட்டு வந்தா, நான் வாங்கியாறேன். அப்புறமா நலங்கு வைப்போம்” என்று வெளியே சென்றாள் அந்த பெண்மணி.

 

இருவரும் சாப்பிட்டு முடிப்பதற்குள், அந்த பெண்மணி படுக்கையறையை அலங்கரித்து முடித்திருந்தார். அதன் பிறகு வந்திருந்தவர்கள் அனைவரும் இருவருக்கும் நலங்கு வைத்து ஆசிர்வதித்து அறைக்குள் அனுப்பினர்.

 

“யாதவா நான் அருவியோட வீட்டில படுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு செல்வியும் வெளியே கிளம்பி விட, யாதவ் அந்த வீட்டின் கதவை உள்புறம் தாளிட்டான்.

 

தன் தாயின் கண்டாங்கி சேலையை உடுத்திக் கொண்டு தலையில் கொண்டை போட்டு அதில் மல்லிகைப்பூவை சுற்றிக் கொண்டு நெற்றி நிறைய பெரிய பொட்டை வைத்துக் கொண்டு அந்த ஊர் பெண் போல நின்றிருந்தவளை ரசனையோடு பார்த்தான் யாதவ்.

 

தன் இருகைகளையும் அகல விரித்து வா என்பது போல தலையசைக்கவும் அவள் நாணத்துடன் அவன் அருகில் வந்து மெல்ல அவன் மார்பில் தலைசாய்த்தாள்.

 

“ராதி” என்றான் அவள் காதில் மீசை உரச

 

“ம்”

 

“அன்னைக்கு ராத்திரி என்ன தான்டி நடந்துச்சு? நிஜமாவே நமக்குள்ள ஒண்ணும் நடக்கலயா?”

 

“என்ன நடந்துச்சுனு எனக்கும் நியாபகம் இல்ல. ஆனா நமக்குள்ள எதுவும் நடக்கல” என்றாள் மெல்லிய குரலில்

 

“அது எப்படி உறுதியா சொல்றே? எனக்கு உன் கூட ஒண்ணா இருந்த பீலிங் இப்பவும் இருக்கு. நான் நம்ப மாட்டேன். நீ பொய் சொல்றே” என்றான்.

 

“ப்ச், இதுல யாராவது பொய் சொல்லுவாங்களா? எதுவும் நடக்கல”

 

“ம்ஹூம் நான் நம்ப மாட்டேன், இரு நானே பாத்து கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்று அவள் இடையை பற்றி அழுத்தினான்.

 

“ச்சீ” என்று விலகி ஓட நினைத்தவளின் முந்தாணையை பற்றி இழுத்தான். அவன் வலிமையாக இழுத்ததில் அது அவன் கையோடு வரவும் அசையாமல் அப்படியே நின்றாள். மெல்ல அவள் அருகில் வந்து பின்னால் இருந்து அவளை அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

 

“ராதி” என்றபடி அவள் தோள்ப்பட்டையில் தன் இதழ்களை அவன் அழுத்தமாக பதித்த நேரம், யாரோ அவசரமாக கதவை தட்டும் ஓசை கேட்டது.

 

“யாதவா சீக்கிரம் கதவை திறடா, அங்கே முரளி அப்பாவோட தலையில அடிச்சிட்டானாம். வேலுண்ணா என்னென்னவோ சொல்றாரு எனக்கு பயமா இருக்கு. சித்த வாடா போய் பார்த்துட்டு வந்துடலாம். ஐயாவுக்கு என்னாச்சோனு எனக்கு படபடனு இருக்குடா, கதவை திறடா” செல்வி ஈனஸ்வரத்தில் கத்தினார்.

 

நொடியும் யோசிக்காமல் செந்தாழினியின் மீது புடவையை போர்த்திவிட்டு தலையை கோதிக் கொண்டு அவசரமாக கதவை திறந்தான்.

 

செல்வி மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார் என்று அவர் உடல் உதறலிலேயே தெரிந்தது. “ஐயாவுக்கு என்ன ஆச்சோ போய் பார்க்கணும்டா, என்னைய அவர்கிட்ட கூட்டிட்டு போடா” என்றபடி மயங்கி சரிந்தார் செல்வி!

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top