வேங்குழல் 18

“என்ன சொல்றீங்க யாதவ்? முரளி நடிக்கிறார்னு தெரிஞ்சுமா இங்கே வந்தீங்க? அவர் நடிக்கிறார்னு எப்போ கன்பார்ம் பண்ணீங்க?” என்றாள் செந்தாழினி

 

“நம்ம கூட வரும்போது சித்தபிரமை பிடிச்சது போல இருந்தவன், நாம சென்னைக்கு வர்ற வரைக்கும் அமைதியா தானே இருந்தான்?  ஊருக்கு கிளம்பி போனதும் அப்பாகிட்ட ஆக்ரோஷமா நடந்திருக்கான். அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. அவரை கூட்டிட்டு ஊருக்கு கிளம்பி போனதும் மறுபடியும் வேலு மாமா கிட்ட ஆக்ரோஷமா நடந்திருக்கான். என்னை கண்டாலே ஆகாதவன் இப்போ என்கிட்ட அடங்கி நடக்கிறான். இதெல்லாம் பாக்கும் போது என்னை இங்கே வரவைக்கிறது தான் அவனோட பிளானா இருக்கும்னு நினைக்கிறேன்”

 

“ஒரு வேளை புல்லாங்குழலை உங்க கிட்ட இருந்து வாங்கறது தான் அவரோட நோக்கமா இருக்குமா?”

 

யாதவ் “எக்ஸாட்லி, அதுக்கு தான் பய ஓவர் ஆக்டிங் பண்றான்னு நினைக்கிறேன்”

 

“இப்போ என்ன பண்ண போறே யாதவ்? முரளி திட்டம் போட்டு உன்ன பகட காயா யூஸ் பண்ணி புல்லாங்குழலை எடுக்க வச்சிருக்காரு. இப்போ அதை உன் கிட்ட இருந்து அடையணும்னு நினைக்கிறார் போல. ஆனா அது அவர் கையில கிடைச்சா நல்லதுக்கு யூஸ் பண்ண மாட்டாரே” என்றாள் கவலையாக

 

“முரளியை நான் பாத்துக்கறேங்கிற நம்பிக்கையில தான் அப்பாவும் அம்மாவும் ஊர்ல நிம்மதியா இருப்பாங்க. நான் அவனை விட்டு போயிட்டா அப்பா கிளம்பி வந்திடுவாரு. அதுக்கு முதல்ல அவனை பைத்தியம் இல்லனு நிருபிக்கணும்” என்றான் தீவிரமாக

 

“எப்படி நிருபிப்ப? உண்மையான பைத்தியத்தை தெளிய வைக்கிறது ஈசி. ஆனா நடிக்கிறவன எப்படி பைத்தியம் இல்லனு நிருபிக்க முடியும். அவனே அவனை வெளிப்படுத்துனா தான் உண்டு”

 

“சரியா சொன்னே ராதி. அவனே அவன் பைத்தியம் இல்ல, காரியக்காரன் தான்னு வெளிப்படுத்தணும்”

 

“எப்படி யாதவ்? முரளியை அவ்வளவு ஈசியா நினைச்சிடாதீங்க. ரொம்ப அழுத்தம் அவருக்கு”

 

“சரி அதையும் டிரை பண்ணி பாத்துடலாமே” என்றான் யாதவ்.

 

********

 

அடுத்த நாளில் இருந்து யாதவ் முரளியை கூர்ந்து கவனிக்க தொடங்கினான். முரளி பெரும்பாலும் வெறித்த பார்வையுடன் இருந்தான். அவ்வப்போது வேலுவிடம் மூர்க்கத்துடன் நடந்துக் கொண்டான், யாதவ்விடம் மட்டுமே அடங்கி போனான்.

 

யாதவ் வேண்டுமென்றே செந்தாழினியை முரளி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான். மனைவியின் தோள் மேல் கைப்போட்டுக் கொண்டு, முரளியை உற்று நோக்கினான். வேலு அவனை சாப்பிட வைக்கும் வரை இருவருமே ஒன்றாக நின்றுக் கொண்டு அவனை கூர்ந்து பார்த்தனர். முரளியிடம் எந்த சலனமும் இல்லை.

 

முடி திருத்தி ஷேவ் செய்த பின்னர் முரளி பழைய நிலைக்கு வந்திருந்தான். ஆனால் உடல் மட்டும் மெலிந்திருந்தது. அவனை கோபப்படுத்தி எப்படியாவது அவனை அவனாகவே வெளிப்படுத்த வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான் யாதவ்.

 

அதன்படி முரளியின் ஆடைகளை எடுத்து தினமும் அணிந்து வந்து அவன் முன்னால் நின்றான். முரளியிடம் ஆக்ரோஷத்தை எதிர்ப்பார்த்தவன் அவன் அமைதியை கண்டு ஏமாந்து போனான். அடுத்து அவனது காரிலேயே முரளியை அழைத்துக் கொண்டு பாக்டரிக்கு சென்று வந்தான். முரளியிடம் எந்த மாற்றமும் இல்லை. 

 

வெற்றிவேந்தனையும் செல்வியையும் சென்னைக்கு வரவழைத்தான். முரளியின் அறைக்கு வரவே செல்வி பயந்தார். “அம்மா பயப்படாதே, உன் மகன் இப்போ சாந்த சொரூபி ஆயிட்டான். உள்ள வா” என்றான் யாதவ் நக்கலாக

 

செல்வி பயந்து கொண்டே மெல்ல அறைக்குள் வந்து யாதவ்வின் பின்னால் நின்றபடி முரளியை எட்டி பார்த்தார். “என் பின்னாடி எதுக்கு நிக்கிற? போய் உன் புருஷன் கூட போய் நில்லு” என்று முரளியின் முகபாவத்தை பார்த்துக் கொண்டே சொன்னான் யாதவ்.

 

வெற்றியும் முரளியை தான் கவலையோடு பார்த்திருந்தார். ஆனால் அவன் முகம் நிர்மலமாக இருக்கவே திரும்பி, “செல்வி கிட்ட வந்து பாரு, உன் மூத்த மகனை பாக்கணும்னு புலம்பிட்டே இருந்தியே” என்றார்

 

செல்வி மெல்ல முரளியின் முன்னால் வந்து, “அய்யா முரளி எப்படிய்யா இருக்கே, இந்த அம்மா மேல உனக்கு கோவம் இல்லயே?” என்றார் தயங்கியபடி

 

முரளி வெறித்த பார்வையோடு அமைதியாக இருக்கவும் மெல்ல அவன் தலையை கோதிவிட்டார் செல்வி. “என் மவன் எப்படி ராஜா கணக்கா இருப்பான்? ஒரு இடத்துல இருக்க மாட்டானே, கடவுளே உனக்கு கண் இல்லயா? என் மவனை இப்படி ஆட்டி வைக்கிறீயே” என்று புலம்பிக் கொண்டே அழுது கரைந்தார் செல்வி.

 

முரளி செல்வியின் கையை தட்டிவிட போகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலுவிற்கும் ஆச்சரியமாக இருந்தது. “வேலுண்ணா சாப்பாடு இருந்தா கொண்டா, நான் என் பிள்ளைக்கு ஊட்டி விடணும்” என்றாள் செல்வி.

 

அடுத்த சில நிமிடங்களில் வேலு கொண்டு வந்த சாப்பாட்டை செல்வி ஊட்ட அதை மறுக்காமல் முரளி சாப்பிட தொடங்கினான். பகல் முழுக்க அமைதியாக வெறித்த பார்வையுடன் இருந்தான் முரளி. அன்று இரவு மீண்டும் ஆக்ரோஷத்துடன் கத்தினான். அங்கிருந்த பொருட்களை திசைக்கு ஒன்றாக தூக்கி வீசினான். வெற்றிவேந்தன் வேலுவால் அவனை அடக்கவே முடியவில்லை. 

 

*********

 

யாதவ் தனியறைக்குள் தன் கைவளைவில் மனைவியை நிறுத்தி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.

 

“ராதி அன்னைக்கு எதுவுமே நடக்கலையாடி” என்றான் கொஞ்சலாக

 

“யோவ் எத்தன முற சொல்றது. எதுவும் நடக்கலய்யா” என்றாள் கடுப்புடன்

 

“ஏன்டி இவ்வளவு லோக்கலா பேசறே?”

 

“பின்ன என்னவாம், நடக்காததை நடந்துச்சுனு சொல்லியே வெறுப்பேத்திட்டு இருக்க” என்றாள் உதட்டை சுழித்து

 

“அப்போ இன்னைக்கு நடத்திடலாமா?” என்றான் அவள் காதில் தன் இதழ்கள் உரச, அவன் உடல் மொத்தமாக அவளை பின்னால் இருந்து அணைத்தபடி இருக்க, கைவிரல்கள் அவளின் தோள்களுக்கும் இடைக்கும் இடையே மாறி மாறி வருடிக் கொண்டிருந்தது.

 

அவள் மெளனமாக இருக்கவும் “சொல்லுடி” என்றபடி அவளை தன் பக்கம் திருப்பி அவள் கன்னத்தை தன் இருகைகளால் பற்றினான். அவள் தன்னவனின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி, “வேங்குழலை எடுத்து எனக்காக வாசி யாதவா” என்றாள் ஆழ்ந்த குரலில்

 

அவன் தான் கொண்டு வந்திருந்த அழகான பெட்டிக்குள் இருந்த பான்சூரி புல்லாங்குழலை எடுத்து இனிமையானதொரு ராகத்தை வாசித்தான். தன்னவன் அவளுக்காக பிரத்யேகமாக வாசிக்கும் இசையில் தன்னை மறந்து அவனையே காதலுடன் பார்த்தபடி இருந்தாள். இப்போது அவன் மெய்மறந்து விழி மூடி  வாசித்துக் கொண்டிருந்தான். இருவருமே தங்கள் நிகழ்காலத்தை மறந்து கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

 

வேங்குழலின் மேல் செந்தாழினிக்கு பொறாமை எட்டிப்பார்க்க, எட்டி அதன் துளைகளை மூடினாள். இசை தடைபடவே கண்திறந்து அவளை கூர்ந்து பார்த்தான். “யாதவா நான் தான் உன்னோட வேங்குழலி, இப்போ என்னை வாசி” என்றாள் நாணத்துடன்

 

அடுத்தகணம் யாதவனின் இதழ்கள் வேங்குழலில் இருந்து வேங்குழலியின் இதழுக்கு இடம் மாறி இருந்தது. நான்கு இதழ்களும் ஏகாந்த இசைமீட்டிக் கொண்டிருந்த வேளையில் அபஸ்வரமாய் பெரும் சத்தம் கேட்கவும் இருவரின் மோன நிலை கட்டறுந்தது. சுயம் உணர்ந்து தாங்கள் இருக்கும் நிலையை பார்த்து செந்தாழினி வெட்கத்துடன் யாதவனின் மார்பில் முகம் புதைத்தாள்.

 

அவன் குறும்புடன் மனைவியின் கன்னத்தை செல்லமாக கிள்ளினான். அதே சமயம் வெற்றிவேந்தன் வேலுவின் “முரளி வேணாம்பா” என்ற அலறல் சத்தம் கேட்கவும் இருவரும் திடுக்கிட்டு விலகினர். “இரு ராதி என்னாச்சுனு பாத்துட்டு வர்றேன்” என்று அவசரமாக முரளியின் அறைக்கு ஓடினான்.

 

முரளி ஹிஸ்டிரியா வந்தவன் போல கத்திக் கொண்டிருந்தான். அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசிக் கொண்டிருந்தான். கீழே கண்ணாடி உடைந்து இருந்தது, கூர்மையான உடைந்த பகுதியை எடுத்துக் கொண்டு வெற்றியை குறிபார்த்து குத்த வந்தான்.

 

நொடியில் சூழ்நிலையை புரிந்துக் கொண்ட யாதவ் பாய்ந்து சென்று முரளியை பின்னால் இருந்து பிடித்து அவன் கரத்தை முறுக்கி அந்த கண்ணாடியை கீழே விழச் செய்தான். 

 

“மாமா சீக்கிரமா கீழ இருக்கிற உடைஞ்ச கண்ணாடியை எல்லாம் க்ளீன் பண்ணுங்க” என்றபடி முரளியை விடாமல் இறுக பிடித்துக் கொண்டான் யாதவ்.

 

செல்வியும் செந்தாழினியும் அவர்கள் இருந்த அறையை எட்டிப்பார்க்க, “அம்மா ராதியை அழைச்சிட்டு போய் உன் ரூம்ல தூங்கும்மா. நான் இவனை பார்த்துக்கிறேன். இப்போ யாரும் ரூமுக்கு வரவேண்டாம்” என்றான் யாதவ்

 

அதன்பிறகு இருவரும் சென்றுவிட, யாதவ் முரளியை பார்த்து கத்தினான், “டேய் ராஸ்கல் எதுக்குடா நடிக்கிற? நீ நடிக்கிறனு எனக்கு நல்லாவே தெரியும். எதுக்கு அப்பாவ கொல்ல பாத்தே? மரியாதையா சொல்லு. உனக்கு என்ன வேணும்னு சொல்லி தொலை. இப்படி எல்லாரையும் டென்ஷன் பண்ணாதே” என்றான் ஆத்திரத்துடன்

 

முரளி எப்போதும் போல அமைதியாக இருக்கவும் அவன் சட்டையை பிடித்து உலுக்கினான். “நடிக்காதடா, சொல்லு என்ன வேணும் உனக்கு?” என்று கத்தி கொண்டிருக்க முரளி அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்றான்.

 

வெற்றிவேந்தன் “யாதவ்” என்று அதட்டினார். அவன் திரும்பி தன் அப்பாவை பார்த்தான் “முரளி நடிக்கிறான்னு நினைக்கிறயா? அவனோட குணத்தை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் நடிக்கலப்பா. உண்மையாவே அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்ல. இப்போ நீ அவன் சட்டையை புடிச்சு உலுக்கினியே, அவன் நல்லா இருந்திருந்தா உன்னை சும்மா விட்டு இருப்பானா?

 

அவன் பிறந்து வளர்ற வரைக்கும் கூடவே இருந்து பார்த்ததால சொல்றேன். அவனுக்கு எல்லாத்தையும் விட அவனோட ஈகோ தான் முக்கியம். எதுக்காகவும் அதை விட்டு தரமாட்டான். எவ்வளவு தான் கோவக்காரனா இருந்தாலும் அவனுக்கு என் மேல பாசம் இருக்கு. என்னை இப்படி கொல்ல பார்க்க மாட்டான். நீ அவனை சந்தேகப்படாத” என்றார்

 

“அப்பா உங்களுக்கு இவனை பத்தி தெரியாது. அவன் வேணும்னே தான் தொலைஞ்சு போயிருக்கான். என்னை யூஸ் பண்ணி கிருஷ்ணரோட புல்லாங்குழலை தேடறது தான் அவனோட பிளான். இப்போ அதை என்கிட்ட இருந்து பிடுங்கறதுக்கு தான் இப்படி எல்லாம் பண்றான்”

 

“என்ன யாதவா? என்னென்னவோ சொல்றே? கிருஷ்ணர் கடவுள், பல்லாயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த அவரோட புல்லாங்குழலை நீ எப்படி எடுக்க முடியும்? அவன் தான் எதையோ ஆராய்ச்சி பண்றேன்னு போய் மூளை குழம்பி போய் வந்திருக்கான்னு நினைச்சேன். அவனை தேடிப்போன உனக்கும் மூளை குழம்பிருச்சா?” என்றார் வெற்றி குழப்பத்துடன்

 

யாதவ் தன் இடையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து அவரிடம் காண்பிக்க நினைத்தான். ஆனால் பைராகி சொன்னது நினைவிற்கு வந்தது. ‘அவசியம் இல்லாமல் அதை யாருக்கும் கொடுக்க கூடாது. கட்டாயம் உபயோகிக்கணும்னு தோணும் போதும் மனிதனால கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை வரும்போது மட்டும் தான் அதனுடைய மந்திர சக்தியை பயன்படுத்தணும்’ என்று அவர் சொன்னது நினைவில் வரவும் சற்று நிதானித்தான்.

 

“வேலு எனக்கென்னவோ மனநலம் பாக்கற டாக்டரை வீட்டுக்கே வரச்சொல்லி மூத்தவனுக்கு டீரிட்மெண்ட் பண்ணும் போது சின்னவனுக்கும் செக்கப் பண்ண சொல்லணும்” என்றார் தன்னருகில் இருந்த வேலுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

யாதவ்விற்கு தந்தையின் பேச்சு காதில் விழுந்தாலும் கேட்காதது போல இருந்தான். அன்று மூவருமே தூங்கவில்லை. மறுநாளே குடும்ப டாக்டரை அழைத்து பேசினார் வெற்றிவேந்தன். “டாக்டர் என்னோட மகனுக்கு கொஞ்சம் மனநல மருத்தவர்கிட்ட சிகிச்சை எடுக்கணும்னு தோணுது. அவனை கூட்டிட்டு ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் போக முடியாது. யாருக்காவது விஷயம் தெரிஞ்சா மீடியால போட்டு மானத்தை வாங்கிடுவாங்க. வீட்டுக்கே வந்து மருத்துவம் பாக்கற மாதிரி யாராவது இருந்தா அனுப்பி வையுங்க” என்றார். 

 

மருத்துவரின் பரிந்துரையின்படி சிறந்த மனநல மருத்துவர் அவர்கள் வீட்டிற்கு வந்தார். அவர் சிறிது நேரம் முரளியிடம் பேசி அவன் மனதில் இருப்பதை வெளிக் கொண்டு வர முயன்றார். ஆனால் முரளி அசைந்து கொடுக்கவில்லை.

 

“சார் தினமும் வந்து பாக்கறேன். கொஞ்ச கொஞ்சமா தான் சரியாகும்” என்று சொல்லிவிட்டு சென்றார் அவர்.

 

அதன் பிறகும் முரளியின் போக்கில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. பகலெல்லாம் அமைதியின் உருவமாக வெறித்த பார்வையுடன் இருப்பான். இரவானதும் வெறித்தனத்துடன் நடந்துக் கொள்வான். யாரையும் அந்த வீட்டில் நிம்மதியாக அவன் தூங்க விடவில்லை. யாதவ் அறைக்கு வந்து அவனை பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரை ஹிஸ்டீரியா வந்தவன் போல நடந்துக் கொண்டான்.

 

வலிப்பு வந்தவருக்கு கையில் சாவி கொடுப்பது போல முரளி ஆக்ரோஷமாக நடக்கும் சமயங்களில் யாதவ் கரம் பற்றினால் மட்டுமே அடங்கி போனான். முரளியை குறித்து யாதவ்விற்கு குழப்பமாகவே இருந்தது, அவனால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

 

நாளுக்கு நாள் முரளியின் ஆக்ரோஷம் அதிகரித்துக் கொண்டே போவதை பார்த்த செல்விக்கு மனது தாங்கவே இல்லை “ஐயா, எனக்கென்னவோ எங்காவது கோயிலுக்கு போய் பரிகாரம் பண்ணா நம்ம முரளிக்கு குணம் ஆகும்னு தோணுது. அவனை கூட்டிட்டு எங்கேயாவது போய் வரலாமா?” என்றாள் செல்வி

 

“அவன் எப்போ எப்படி நடந்துக்குவான்னே தெரியலயே செல்வி. வீட்லயே சமாளிக்க முடியல, வெளியில யாரையாவது எதாவது செய்ய போய்ட்டானா என்ன பண்றது? வேணும்னா நாம மட்டும் போய்ட்டு வரலாம். நானும் நீயும் மறுபடியும் சேர்ந்தா கும்பகோணத்துல இருக்கற அக்னீஸ்வரர் கோயிலுக்கு வர்றதா வேண்டிக்கிட்டேன். நாம வேணும்னா போய் ஒரு பூஜை கொடுத்துட்டு அப்படியே பசங்களுக்கும் வேண்டிட்டு வருவோமா?” என்றார் வெற்றிவேந்தன்.

 

“முரளி இப்படி இருக்கும் போது எப்படிங்க அவனை விட்டுட்டு போறது?” என்றார் செல்வி தயங்கியபடி

 

“அம்மா, அப்பா வேண்டுதலை நிறைவேத்தணும்னு சொல்றாரு இல்ல. நீங்க இரண்டு பேரும் போய்ட்டு வாங்க. நான் இவனை பாத்துக்கிறேன். நல்லா சாப்பிட்டு தடிமாடு கணக்கா இருக்கானே. இன்னும் என்ன பச்சபுள்ளைய விட்டுட்டு போற மாதிரி கிடந்து தவிக்கிறே?” என்றான் நக்கலாக

 

“ஆமா செல்வி, ஐயா கூட கும்பகோணத்துக்கு போய் வாம்மா. இதுக்கு மேலயாவது நீங்க இரண்டு பேரும் பிரியாம இருக்கணும்னு வேண்டிட்டு வாங்க. நானும் அந்த கோயில பத்தி கேள்விப்பட்டிருக்கேன்” என்றார் வேலு.

 

“மாமா நீங்களும் அப்பா அம்மா கூட போய்ட்டு வாங்க” என்றான் யாதவ் இப்போது வேலுவிடம்

 

“நீ எப்படி யாதவ் தனியா முரளியை சமாளிப்ப?”

 

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். இரண்டு நாள் தானே போய்ட்டு வாங்க” என்றான் யாதவ் முடிவாக. அவர்கள் திரும்பி வருவதற்குள் முரளியின் நடிப்பை முடிவுக்கு கொண்டு வரணும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். நினைப்பது எங்கே நடக்கிறது?

 

*******

 

வெற்றிவேந்தன் செல்வி மற்றும் வேலுவுடன் காரில் கிளம்பிச் சென்றார். அவர்கள் சென்றதும் யாதவ் முரளியின் அறையிலேயே இருந்தான். கணவன் ஏதோ திட்டத்தோடு இருக்கிறான் என்று செந்தாழினிக்கு தெரிந்தது.

 

அவன் அறையை விட்டு வெளியே வரும் சமயம் ஓடிச்சென்று அவனை கட்டிக் கொண்டாள் “யாதவ் எனக்கென்னவோ பதட்டமா இருக்கு. ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம், முரளி நடிச்சா என்ன? நடிக்கலைனா என்ன? பேசாம அத்தை மாமா வந்ததும் நாம கொஞ்ச நாளைக்கு எங்காவது போய்ட்டு வரலாம். நாம இங்கே வந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆயிடுச்சு, ஒரு நாள் நைட் கூட நீ என்னோட தங்கல. அதைவிட முரளி நம்மளை சேர விடலனு தான் தோணுது. சரியா இராத்திரி நேரத்தில மட்டும் அவனுக்கு பேய் பிடிச்சுடுமா என்ன?” என்றாள் அலுப்புடன்

 

“எனக்கு இரண்டு நாள் மட்டும் டைம் கொடு ராதி. அவன் சுயரூபத்த எப்படியாவது வெளியே கொண்டு வரேன். அப்படி முடியலனா, அப்பா அம்மா வந்ததும் அவனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திட்டு நாம கிளம்பி போயிடலாம்” என்றான் அவள் தலையை ஆதரவாக வருடியபடி

 

“ஓகே உனக்கு இரண்டு நாள் தான் டைம்”

 

“சரி, இப்போதைக்கு பசிக்குது சாப்பிட எதாவது எடுத்துட்டு வா” என்று அவளை அனுப்பி விட்டு தீவிரமாக யோசித்து பின்பு ஒரு முடிவுக்கு வந்தான்.

 

செந்தாழினி கொடுத்த சாப்பாட்டை இருவரும் சாப்பிட்டு விட்டு, “ராதி நீ ரூம்லயே கதவை உள்பக்கமாக பூட்டிகிட்டு இரு, நான் வந்து கூப்பிட்டா மட்டும் கதவை திற. முரளியோட ரூம் பக்கமா வராத” என்று சொல்லிவிட்டு முரளிக்கு சாப்பாடு கொண்டு போனான். 

 

முரளியை ஆழ்ந்து பார்த்தபடி தன் சட்டைக்குள் இருந்த புல்லாங்குழலை அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் வைத்துவிட்டு முரளியை மிகுந்த கவனத்துடன் பார்த்தான் யாதவ் கிருஷ்ணா. ஆனால் முரளி அதே வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தானே தவிர அவன் அந்த புல்லாங்குழலை ஏறேடுத்தும் பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் முரளி அந்த புல்லாங்குழலை எடுப்பான் என்று அதன் மேல் ஒரு கண்ணும் முரளியின் மேல் ஒரு கண்ணும் வைத்தபடி அவனுக்கு சாப்பாடு ஊட்டினான்.

 

முரளி மறுக்காமல் சாப்பிட வாய் திறந்தான். “டேய் நீ நடிக்கிறயா இல்லையானு தெரியல. ஆனா இந்த சுவிட்ச்வேஷனை நான் ரொம்ப ரசிக்கிறேன். சின்ன வயசுல என்னய ஏதோ தீண்ட தகாதவன் போல பார்ப்ப, தொடக்கூட மாட்டே. உன் ரூமுக்குள்ள என்னைய விடவே மாட்டே. உன் டிரஸ்ஸை போட விடமாட்டே.

 

இப்போ பார்த்தியா உன் டிரஸ்ஸை போட்டுட்டு, உன் ரூமுல உனக்கே சாப்பாடு ஊட்றேன். என் கையால நீ சாப்பிடணும்னு உனக்கு தலையெழுத்து இருக்கு பாரு. அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா” என்று யாதவ் முரளியை வம்பிழுத்தான்.

 

முரளியிடம் அப்போதும் மெளனம். அதற்கடுத்து ஓயாமல் முரளியை வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டே இருந்தான். அவன் எதிரிலேயே புல்லாங்குழலை வைத்துவிட்டு அவன் அதை எடுக்கிறானா என்று கவனித்துக் கொண்டிருந்தான். முரளியின் பார்வை புல்லாங்குழல் இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்ப வில்லை.

 

ஒரு வேளை அதை எடுக்கும் போது நான் சுதாரிச்சுடுவேன்னு நினைச்சுட்டு அப்படியே நடிப்பை கண்டினியூ பண்றானோ என்று பலமாக யோசித்த யாதவ், மறந்து விட்டு செல்வது போல அடிக்கடி புல்லாங்குழலை முரளியின் பார்வை படும் இடத்தில் வைத்துவிட்டு போவதும். பின்பு வந்து எடுத்து செல்வதுமாக இருந்தான். முதல் நாள் இரவும் முரளி எப்போதும் போல கொஞ்ச நேரம் ஆர்பாட்டம் செய்து விட்டு பின்பு உறங்க தொடங்கினான்.

 

அன்று இரவு முரளியின் எதிரிலேயே புல்லாங்குழலை வைத்து விட்டு உறங்க செல்வது போல அந்த அறையை விட்டு வெளியே சென்று முரளியின் நடவடிக்கையை கவனித்தான். ஆனால் முரளி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். யாதவ் ஒரு முடிவோடு அன்று ஹாலிலேயே படுத்து உறங்கினான். யாதவனின் காதுகள் மட்டும் முரளியின் அறையை நோக்கி கூர்மையுடன் காத்திருந்தது.

 

மறுநாள் விடிந்ததும் யாதவ் அறைக்கு சென்று பார்த்தான். அந்த புல்லாங்குழல் கொஞ்சமும் நகர்த்தப்படாமல் அப்படியே வைத்த இடத்திலேயே இருக்கவும் யாதவ் மேலும் குழம்பினான். உண்மையாவே இவனுக்கு சித்தம் கலங்கிருச்சா? ஆனாலும் முயற்சியை கைவிடாமல் இரண்டு நாட்களும் முரளியோடு முரளியை (புல்லாங்குழலை) வைத்து பல பரிட்சைகள் செய்து பார்த்து விட்டான். விடை என்னவோ பூஜ்ஜியம் தான்!

 

அன்று இரவு முரளிக்கு சாப்பாடு கொண்டு வந்த யாதவ் அவனை பார்த்து அதிர்ந்தான். 

 

காரணம் அவன் கை மேஜையை நோக்கி சென்றது. மேஜையில் இருக்கும் புல்லாங்குழலை எடுக்க போகிறான் என்று யாதவ் தயாராக நின்றிருந்தான். ஆனால் முரளி மேஜையில் புல்லாங்குழலுக்கு பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்தான். தன்னை தான் தாக்க வரப்போகிறான் என்று தயாராக நின்ற யாதவ் அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த சமயம், முரளி அந்த கத்தியின் கூர் முனையை பார்த்தபடி அதை தன் உள்ளங்கையில் ஆழமாக ஓங்கி ஒரு குத்து குத்தினான்.

 

கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியின் கூர்முனை முரளியின் உள்ளங்கையில் நுழைந்து புறங்கை வழியாக வெளியே எட்டிப்பார்த்தது. இரத்தம் பீறிட்டு வர அதிர்ந்து போய் சாப்பாடு தட்டை போட்டு விட்டு முரளியை நோக்கி ஓடினான் யாதவ் கிருஷ்ணா.

 

“டேய் உனக்கென்ன பைத்தியமாடா? ஏண்டா இப்படி பண்றே” என்று அவன் அருகில் சென்று அந்த கத்தியை அவன் கையில் இருந்து பிடுங்கினான். ஆனால் நரம்புகள் அறுந்து உடலில் இருந்த இரத்தம் பீறிட்டு வருவதை அவனால் நிறுத்த முடியவில்லை.

 

“ராதி” என்று சத்தமாக அழைத்தான்.

 

முரளியின் அறையில் இருந்து செந்தாழினிக்கு அழைத்தால் கேட்காது, அதுவும் இல்லாமல் அவள் கதவை உள்பக்கமாக சாத்தியிருப்பாள் என்பது நினைவுக்கு வர, அவளை அழைப்பதை விடுத்து தன் பேண்டில் இருந்து கர்ச்சிப்பை எடுத்து முரளியின் உள்ளங்கையை அழுத்தி இரத்தம் வராமல் கட்டினான்.

 

ஆனால் அவன் முயற்சி வீண் என்பது போல இரத்தம் அந்த கர்ச்சிப்பை மொத்தமாக நனைத்துவிட்டிருந்தது. முரளி மெல்ல மயங்க தொடங்கினான். நரம்புகள் அறுப்பட்டதால் மருத்துவமனை கொண்டு செல்லும் வரை தாங்குவானா என்ற அச்சம் எழ, யாதவ்விற்கு அவனை எப்படியாவது பிழைக்க வைத்துவிட வேண்டும் என்று தோன்றியது.

 

சற்றும் யோசிக்காமல் அந்த மேஜை மேலிருந்த புல்லாங்குழலை எடுத்து முரளியின் உள்ளங்கையில் வைத்து அழுத்தினான். கடவுளே இந்த புல்லாங்குழலுக்கு மந்திர சக்தி இருக்குதா இல்லையானு நான் சோதிச்சு கூட பார்க்கல. அப்படி மந்திர சக்தி இருக்கிறது உண்மையா இருந்தா முரளி கையில் இருக்கிற வெட்டுக் காயம் சரியாகிடணும் என்று கண்மூடி ஒரு கணம் கடவுளை வணங்கினான்.

 

பின்பு மெல்ல கண்திறந்து முரளியின் கையை பார்த்தான். என்னவொரு ஆச்சரியம்! அவன் கையில் எந்த காயமும் இல்லை. இதுவரை ரத்தம் வந்ததற்கான சுவடே இல்லை. ஒரு பெருமூச்சுடன் முரளியின் உள்ளங்கையில் சிறைப்பட்டு இருந்த புல்லாங்குழலை உருவினான்.

 

முரளி அதை இறுக்கமாக பிடித்திருந்ததால் எளிதாக வரவில்லை. எனவே அழுத்தி பிடித்து இழுத்தான். முரளியில் உள்ளங்கையை திருப்பி அதன் விரல்களை விலக்க பார்த்தான். விரல்களின் இறுக்கத்தை கண்டு சந்தேகத்தோடு மெல்ல தன் உடன்பிறப்பை நிமிர்ந்து பார்த்தான்.

 

முரளி கிருஷ்ணா யாதவ் கிருஷ்ணாவை பார்த்து விஷம புன்னகையுடன், “டேய் நான் உன் அண்ணன்டா” என்று புல்லாங்குழலை வைத்திருந்த கையாலேயே யாதவனை ஓங்கி தள்ளவிட்டு, அந்த அறையே அதிரும்படி உரக்க சிரித்தான்!

 

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top