வேங்குழல் 11

மூன்று பேரும் ஒரு வழியாக கரையை அடைந்ததும், ஆசுவாசமாக மூச்சு விட்டபடி அங்கிருந்த பாறைகளின் மேல் ஆளுக்கொரு பாறையில் அப்படியே சாய்ந்தனர். பிரதாப் மரண பயத்தை கண்டுவிட்டு இருந்ததால் அவன் இதயம் வேகமாகவே துடித்துக் கொண்டு இருந்தது.

 

“சார் வாண்டடா யாரோ என்னை பிடிச்சு தண்ணிக்குள்ள இழுத்தமாதிரி இருந்துச்சு” என்றான் அங்கிருந்த சின்ன பாறையில் சாய்ந்து படுத்துக் கொண்டு

 

“ஆமா பிரதாப், நானும் பார்த்தேன். நான் பிடிக்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள அந்த உருவம் மின்னல் வேகத்துல தண்ணிக்குள்ள போய் மறைஞ்சுடுச்சு” 

 

“என்னைய மட்டும் ஏன் அந்த உருவம் தண்ணிக்குள்ள இழுத்துச்சுனு தான் தெரியல” என்று தாடையில் கைவைத்து யோசித்தவன் முதுகில் ஏதோ நகர்வது போல தெரியவும் திரும்பி பார்த்தவன், “ஐயோ” என்று அலறினான்.

 

“என்னாச்சி?” என்று செந்தாழினியும் யாதவும் எழுந்து நின்று அவனை பார்க்க, அவர்கள் கண்கள் அதிர்ச்சியில் தெரித்து விழுந்து விடுவது போல ஆனது. ஏனென்றால் பிரதாப் சாய்ந்திருந்தது பாறையின் மேல் அல்ல, பாறையோடு பாறையாக படுத்திருந்த முதலையின் மேல்!

 

“யாதவ் சார், உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என்னை எப்படியாவது காப்பாத்துங்க சார், ப்ளீஸ்” என்று அலறியடி உட்கார்ந்தவாக்கில் அவன் பின்பக்கமாக நகர்ந்து கொண்டிருக்க, முதலை அதற்குரிய வேகத்துடன் வாயை பிளந்துக் கொண்டு அவனை முழுங்க தயாரானது. அவன் அருகே செல்ல முடியாதபடி இப்போது முதலைகள் கூட்டம் அவனை சுற்றி வளைத்திருந்தன.

 

செந்தாழினி பயத்தில் தன்னை அறியாமல் யாதவனின் வலிமையான கரத்தை பற்றியபடி அவன் முதுகில் முகம் புதைத்தபடி எட்டி பிரதாப்பை பார்த்தாள். அவளுக்கு தெரிந்து விட்டது இனி அவனை காப்பாற்றுவது இயலாத காரியம் என்று!

 

யாதவ் தன் இன்னொரு கையால் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவளின் கரத்தை விலக்கினான். “யாதவ் என்ன பண்ண போறீங்க, கிட்ட போகாதீங்க” என்று அவன் கரத்தை மேலும் இறுக பற்றினாள்.

 

“போகாம, அப்படியே நின்னுகிட்டு அவன் முதலை வாய்க்குள்ள போறதை வேடிக்கை பார்க்க சொல்றீயா?” என்றான் கோபமாக.

 

“ம்ஹூம் நான் உங்களை விட மாட்டேன்” என்று அவனை பின்னால் இருந்து இறுக பற்றிக்கொண்டு முதுகில் முகம் புதைத்தவளின் கண்ணில் இருந்து ஏனோ கண்ணீர் நிற்காமல் வழிந்து யாதவனின் முதுகை நனைத்துக் கொண்டிருந்தது.

 

“தாழினி, ஒருத்தன் கண்முன்னாடி சாகப்போறதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது” என்றபடி தன் வயிற்றை சுத்தியிருந்த அவள் கரத்தை பலவந்தமாக அகற்றி அவளை தள்ளி நிற்கவைத்து விட்டு, ஓடிச்சென்று ஹை ஜெம்ப்பில் வானத்தை நோக்கி எகிறினான். செந்தாழினி கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தவள் மெல்ல கண்திறந்து பார்க்கும் போது யாதவ் வாயை அகலமாக திறந்துக் கொண்டிருந்த முதலையின் தலைமேல் நின்றிருந்தான்.

 

“தெய்வமே’ என்று தன்னையும் அறியாமல் பிரதாப் தலைக்கு மேல் கைக்கூப்ப, “அடச்சீ, என் கையை பிடிடா முதல்ல” என்றான் யாதவ் எரிச்சலாக

 

பிரதாப் கையை நீட்டியதும் யாதவ் அவன் கையை எட்டி பிடித்து, தன்னை நோக்கி இழுத்தான், இப்போது இருவருமே முதலையின் மேல் நின்றிருக்க, பாரம் தாங்காமல் அது தன் உடலை முறுக்கி கொண்டு இருந்தது. எந்த வினாடியும் இருவரும் கீழே விழ நூறு சதவீதம் வாய்ப்பு இருந்தது. அப்படி விழுந்தால் அவர்களை சுற்றி வாயை திறந்து கொண்டிருக்கும் மற்ற முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான்.

 

செந்தாழினி அதிர்ச்சியில் தன் இதயம் வெடித்து விடாமல் இருக்க நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டு இருந்தாள். அவள் பார்வை மட்டும் யாதவனை விட்டு விலகாமல் அப்படியே உறைந்து போய் இருந்தது.

 

யாதவ், பிரதாப்பை தூக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு, ஒவ்வொரு முதலையின் முதுகிலும் காலை வைத்து மெல்ல நடந்து வந்தான். பிரதாப் ஒன்னும் கொஞ்ச நஞ்ச பாரம் இல்லை நூறு கிலோவுக்கு மேல் இருப்பான். அவனை தூக்கிக் கொண்டு அநாயசமாக நடந்து வந்து கொண்டிருக்கும் ஆறடி உயர ஆண்மகனை அந்த நேரத்தில் யார் பார்த்தாலும் நிச்சயம் அவன் மேல் காதல் வயப்பட்டு இருப்பார்கள். ஏற்கனவே அவனிடத்தில் தன் மனதை பறிகொடுத்து இருந்த செந்தாழினி மட்டும் விதிவிலக்கா என்ன? 

 

பெருமையுடனும் காதலுடனும் யாதவனை மகிழ்ச்சி பொங்க பார்த்தாள். அவள் விழிகளில் தெரிந்த காதலை கண்டும் காணாதது போல யாதவன் அவள் முன்னே வந்து பிரதாப்பை கீழே இறக்கினான்.

 

பிரதாப் பயத்தில் மூர்ச்சையாகி இருந்தான். “தாழினி தண்ணி எடு” என்றான். அவள் எடுத்து கொடுத்ததும், அதை பிரதாப்பின் முகத்தில் அடித்து நீரை பருக வைத்தான். அவன் சகஜநிலைக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலானது. எழுந்து அமர்ந்தவன் யாதவனின் கைப்பற்றிக் கொண்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

 

“சார் நீங்க மட்டும் இல்லனா என் உயிரே போயிருக்கும், உங்களை என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன் சார்” என்று கண்ணீர் விட்டான்.

 

“பிரதாப், டோன்ட் பி எமோஷனல். இதே எனக்கு நடந்து இருந்தா, நீ பார்த்துட்டு சும்மாவா இருந்து இருப்பே? ரொம்ப யோசிக்காதே, ரிலாக்ஸ்” என்று அவன் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தான் யாதவ்.

 

“பிரதாப், உனக்கு மட்டும் தான் பிரச்சனை வருது. உன் மனசுல புல்லாங்குழலை அடையணும்னு எதாவது திட்டம் வச்சிருந்தியா? ஏன்னா அந்த புத்தகத்துல யமுனா நதி நல்லோர்க்கு வழிவிடுவாள்னு போட்டு இருந்தது. எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல. உனக்கு மட்டும் தொடர்ந்து பிரச்சனை வருது. அதனால தான் கேக்கறேன். நாம் போற பாதையில இன்னும் என்னென்ன இருக்குமோ தெரியாது. எங்ககிட்ட மறைக்காம உண்மையை சொல்லு” என்றாள் செந்தாழினி.

 

பிரதாப் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தான். அவன் பதிலுக்காக மற்ற இருவரும் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, ராட்சச கழுகு ஒன்று பறந்து வந்து பிரதாப்பை அப்படியே தூக்கி செல்ல, நொடியில் சுதாரித்துக் கொண்ட யாதவ் பிரதாப்பின் காலைப்பற்றிக் கொண்டு அவனும் தொங்கினான்.

 

கழுகு மேல் நோக்கி பறந்துக் கொண்டிருக்க, அதன் பிடியில் பிரதாப் தொங்கி கொண்டிருந்தான். அவனை பிடித்துக் கொண்டு யாதவ் அவன் மேலே ஏறிக் கொண்டிருந்தான்.

 

செந்தாழினி தன் உயிரை அவள் கண்களில் தேக்கி மேலே பறந்து கொண்டிருந்தவர்களை வலியுடன் பார்த்தாள். கழுகு இறந்த பிணத்தை எடுத்து செல்லும் என்று கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால் அது உயிருடன் ஒருத்தனை தூக்கி செல்லும் அளவிற்கு வலிமையுடையது என்பதை அவள் இப்போது தான் பார்க்கிறாள். பிரதாப் நிச்சயமாக ஏதோ தவறான எண்ணத்தோடு தான் வந்திருக்கான். அதனால தான் அவனுக்கு தொடர்ந்து பிரச்சனையா வந்திட்டு இருக்கு, அவனை காப்பாத்த போய் யாதவ்வுக்கு எதாவது ஆயிடுமோ என்று மனம் பதைக்க தொடங்கியது.

 

‘நான் யாதவனை இங்கே வரவிட்டிருக்கவே கூடாது, எப்படியாவது அவனை தடுத்திருக்க வேண்டும். இப்போ மூவரும் முழுசா உயிருடன் ஊர்போய் சேர்வோமா என்றே தெரியலையே” என்று கண்ணீர் விட்டவள், உடனடியாக தன்னிடமிருந்த புத்தகத்தை எடுத்து, அதில் இருந்த கருட மந்திரத்தை பக்தியுடன் படிக்க தொடங்கினாள்.

 

இதற்கிடையில் யாதவன் கழுகை நெருங்கியிருந்தான், தன் கையால் அதன் பக்கவாட்டில் ஓங்கி குத்துவிடவும், அது வலி தாங்காமல் தன் பிடியை தளர்த்த இப்போது இருவரும் மேலிருந்து கீழே அதிவேகத்துடன் விழுந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கீழே விழுந்தால் நிச்சயம் தலை சின்னாபின்னமாக சிதறி உயிர் போகும்  என்பதை இருவருமே உணர்ந்து இருந்தனர். சாவை ஏற்றுக் கொள்வது போல யாதவன் தன் கண்களை இறுக மூடினான். அப்போதும் அவன் கை பிரதாப்பின் கரத்தை விடாமல் பற்றி இருந்தது.

 

சிறிது நேரத்தில் காற்றை கிழித்துக் கொண்டு கீழே போவது நின்று போனது போல இருக்கவும் யாதவன் கண்களை மெல்ல திறந்து பார்த்தான்.  அவன் எதன் மேலோ படுத்து இருப்பது தெரிந்தது. ஆம் அதே ராட்சச கழுகு தான் அவனை தாங்கி இருந்தது. பக்கவாட்டாக திரும்பி பார்த்தான். பிரதாப் இன்னும் அவன் கைகளை இறுக்கமாக பற்றியபடி தொங்கி கொண்டிருந்தான்.

 

ஆசுவாசத்துடன் யாதவ் கீழே இறங்கி பிரதாப்பினை தரையில் படுக்க வைக்கவும் மீண்டும் கழுகு அவனை கொத்தி தின்ன முனைந்தது. “கருடா, பிரதாப் என்னை நம்பி என் கையை பிடிச்சிட்டு இருக்கான், அது உனக்கு தெரியலையா?” என்று அந்த காடே அதிரும்படி கத்தினான் யாதவ் கிருஷ்ணா.

 

கருடமந்திரத்தை மிகுந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்த செந்தாழினி இப்போது யாதவனின் இடிமுழக்கத்தில் அதிர்ச்சியுடன் தலையை நிமிர்த்தி பார்த்தாள். அப்போது தான் அந்த ராட்சச கழுகு பிரதாப்பை விட்டு சற்று தள்ளிச் சென்றது.

 

‘என்ன இவன்? அந்த கழுகை இப்படி மிரட்றான்? அதுவும் பழக்கப்பட்ட நாய்க்குட்டி போல எஜமான் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஓரமா போய் நிக்குது’ என்று எண்ணிக் கொண்டு எழுந்தவள், “யாதவ் ஏன் இப்படி கத்தறீங்க, என்னாச்சு?” என்று அவன் தோளை உலுக்கினாள்.

 

யாதவ் தூக்கத்திலிருந்து விழித்தவன் போல “ஹாங்” என்றான். அவள் மீண்டும் தன் மனதில் நினைத்த கேள்வியை அவனிடத்தில் கேட்க “நானா? நான் எங்க கத்தினேன். உளராத. முதல்ல குடிக்க தண்ணி கொண்டு வா” என்றான்.

 

செந்தாழினி தன் பேகிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து அவனிடத்தில் கொடுத்தாள். அவன் அதை பிரதாப்புக்கு புகட்டி விட்டு பின்பு அவனும் அருந்தினான்.

 

அவர்கள் வெகுதூரம் கூட பயணம் செய்யவில்லை, அதற்குள் தொடர்ந்து பிரச்சனை. மேற்கொண்டு உள்ளே செல்ல செல்ல இன்னும் என்னவெல்லாம் ஆபத்து இருக்குமோ என்று மூவரும் ஒரே நேரத்தில் நினைத்தனர்.

 

“சார், என்னை ஆத்துக்கு அந்த பக்கம் கொண்டு போய் விட்டுடுங்க சார், நான் போயிடுறேன்” என்றான் பிரதாப்.

 

“இந்த இடம் ஆபத்தானதுனு தெரிஞ்சு தானே வந்தே, அப்புறம் என்ன, பார்த்துக்கலாம் விடு” என்றான் யாதவ்

 

“சார், ஒவ்வொரு முறையும் உயிர் போய் உயிர் வருது, நீங்க காப்பத்திடுவீங்கனு எனக்கு நம்பிக்கை இருந்தாலும் இந்த மரணபயத்தால எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும் போல இருக்கு சார். வெளியே இருந்து வர்ற அட்டாக்கை உங்களால தடுக்க முடியும், உள்ளேயிருந்து வர்ற அட்டாக்கை என்ன பண்ண முடியும்? நான் போறேன், அந்த முரளி பேச்சை கேட்டு வந்தது தப்பா போச்சு, எனக்கு புல்லாங்குழலை விட உயிர் தான் முக்கியம்” என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.

 

இப்போது யாதவ் செந்தாழினி ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர். அவர்களிடத்தில் இருந்து எந்த பதிலும் வராததால் “என்ன அப்படி பாக்குறீங்க?” என்றான் குழப்பத்தோடு

 

“முரளி பேச்சை கேட்டு வந்தியா? அப்போ முரளி எங்கே இருக்கான்னு உனக்கு ஏற்கனவே தெரியும் அப்படி தானே?” என்றான் யாதவ் ஒரு மாதிரி குரலில்

 

“சார், என் உயிரை மூணு முறை காப்பத்தி இருக்கீங்க. இதுக்கும் மேல உங்க கிட்ட உண்மையை மறைக்க விரும்பல. முரளி கிருஷ்ணா சார் தான் ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ணரோட புல்லாங்குழல் பத்தின ஆராய்ச்சியில மும்மரமா இருந்தாரு. அவர் கூட அஸ்வின் சாரும் நானும் இருந்தோம். அப்பப்போ எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்கறதால அவங்க சொல்ற வேலை எல்லாம் செஞ்சுட்டு இருந்தேன். டெல்லில அவார்ட் வாங்கின மறுநாள் முரளி சார் என்னை கூப்பிட்டு பேசினார்” என்று அன்று அவன் சொன்னதை கூற தொடங்கினான்.

 

“பிரதாப், நானும் அஸ்வினும் முரளிங்கிற புல்லாங்குழலை தேடி போறோம்” என்றான் முரளிகிருஷ்ணா.

 

“சார், நானும் உங்க கூட வர்றேன், என்னையும் கூட்டிட்டு போங்க” என்றான் பிரதாப்.

 

“வேணாம் பிரதாப், நாங்க போக போறது அத்துவான காட்டு பகுதி, புல்லாங்குழலை அடையறது அவ்வளவு ஈசி இல்ல, எங்களுக்கு வழியில் நிறைய ஆபத்து வரலாம், மூணு பேரா போய் மாட்டிக்கிறதை விட, நீ ஒரு ஆளாவது பாதுகாப்பா இருந்தா தான், எங்களை தேடி வந்து காப்பாத்த முடியும், அதனால நீ இங்கேயே இரு”

 

முரளி பேசிக் கொண்டு இருக்குமே போதே ஏதோ நகைச்சுவை கேட்டது போல கலகலவென்று சிரித்தான் பிரதாப். “என்ன சார் நீங்க? உங்களை நான் காப்பாத்த போறேனா? என்னோட குண்டு உடம்ப பார்த்தாலே தெரியலையா? நீங்க நினைக்கிற அளவுக்கு நான் வொர்த் இல்ல சார். நீங்க புத்திசாலிதனமா தானே யோசிப்பீங்க? இப்போ என்ன இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க?” என்று சிரித்த பிரதாப்பை முறைத்தான் முரளி கிருஷ்ணா.

 

“நான் சொல்ல வர்றதை முழுசா கேட்காம உளறிட்டு இருந்தா கன்னம் பழுத்துடும்” என்று அடிக்குரலில் முரளி சீறவும் அமைதியாகி போனான் பிரதாப்.

 

“நான் ஆராய்ச்சி செஞ்சு படிச்ச ஓலைச்சுவடில எல்லாம் ‘எவன் ஒருவன் புல்லாங்குழலை அடையணும்னு நினைக்காம அதை தேடி வர்றானோ அவனுக்கு அது கிடைக்கும், அவன் கிருஷ்ணரோட அம்சத்தோடவும் குணாதிசியத்தோடும் பிறந்தவனா இருக்கணும்னு’ போட்டு இருந்தது.

  

எனக்கு பின்னாடி என் அப்பனுக்கு பொறந்தவன் ஒருத்தன் இருக்கான். அவன் பேரு யாதவ் கிருஷ்ணா, ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த அதே நாள், நேரம், நட்சத்திரத்துல பிறந்தவன். அவனும் மாடு தான் மேய்ச்சிட்டு இருக்கான். அவன் புல்லாங்குழலை எடுக்க முயற்சி பண்ணா, கண்டிப்பா அது நடக்கும்னு என்னோட ஆறாம் அறிவு சொல்லுது. 

 

ஆனா அதை முழுசா நம்பி என்னோட ஆராய்ச்சியை எல்லாம் அவன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது, சொன்னாலும் அவன் என் பேச்சை கேட்க மாட்டான். அதனால நானும் அஸ்வினும் முரளியை (புல்லாங்குழல்) தேடி போறாேம். எங்களுக்கு நிறைய ஆபத்து வர வாய்ப்பு இருக்கு, உயிரை பணயம் வைக்காம முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்வோம். என்னோட டைம் லைன் ஆறு மாசம் தான். அதுக்குள்ள எங்களால அதை நெருங்க முடியலனா நான் திரும்பி வர மாட்டேன். அதை புரிஞ்சுகிட்டு நீ புல்லாங்குழலை தேடிட்டு யாதவனோடு வரணும். 

 

யாதவனோட ஜாதகப்படியும் தசாபுத்தி படியும் அவன் முரளிங்கிற விஷயத்தை தேடி வந்தாலே அதுக்கான வழி தன்னால அவனுக்கு கிடைக்கும். அவனுக்கு எந்த தடையும் வராது. என்னைய தேடறது போல நீ அவன் கூடவே போகணும். அவன் புல்லாங்குழலை கண்டுபிடிச்சதும், அதை கொண்டு வந்து என்கிட்ட கொடுக்கணும். இதுல எதாவது தகிடுதத்தம் பண்ண நினைச்சா உன்னை கொன்னுட்டு அந்த புல்லாங்குழலை நான் எடுத்துப்பேன். அவன்கிட்ட இருந்து முரளியை அடிக்கிறது மட்டும் தான் உன்னோட டாஸ்க். மத்ததெல்லாம் அவனே பார்த்துப்பான்” என்றான் முரளி கிருஷ்ணா

 

“முரளி சார் நீங்க சொல்றத பார்த்தா உங்களுக்கும் அவருக்கும் ஆகாது போலிருக்கே சார். அவர் நீங்க சொல்ற விஷயத்தை எல்லாம் உயிர பணயம் வச்சு செய்வாரா?” என்றான் பிரதாப் 

 

“நான் போய் அவன்கிட்ட இதை எல்லாம் செய்ய சொல்லி தலைகீழ நின்னாலும் கண்டிப்பா செய்ய மாட்டான். ஆனா எங்கப்பனும், அவனோட ஆத்தாளும்  எமோஷனல் இடியட்ஸ்ங்க. நான் வீட்டில இருந்து கிளம்பும் போது எப்படி பேசினா வேலை ஆகுமோ அப்படி பேசிட்டு வருவேன். மத்ததெல்லாம் எங்கப்பன் பார்த்துப்பான்.

 

அவன் எதுக்காக வர்றோம்னு தெரியாம என்னை தேடிட்டு என்னை போலவே வந்தான்னா, அவனை பத்தின என்னோட கணிப்பு சரினு அர்த்தம். முரளிங்கிறது புல்லாங்குழல் தானேன்னு உங்கிட்ட என்னைக்கு கேக்கறானோ அன்னைக்கு அவனோட கிளம்பி போ. 

 

வழியில் எந்த பிரச்சனைனாலும் அவன் பார்த்துப்பான். நீ அவன்கிட்ட இருந்து புல்லாங்குழலை அடைறதுல கவனமாயிரு. உன் கைக்கு அது கிடைச்சதும் நானே உன்னை தேடிவந்துடுவேன்” என்றான் முரளி கிருஷ்ணா.

 

“நாங்க எங்கே இருக்கோம்னு உங்களுக்கு எப்படி தெரியும் சார்? எப்படி சரியா என்னை தேடி வருவீங்க?” என்றான் பிரதாப் குழப்பத்தாேடு

 

“அதை பத்தி எல்லாம் நீ யோசிக்காத. நான் சொல்ற வேலையை மட்டும் சரியா செஞ்சா, நீ மட்டும் இல்ல உன் பரம்பரையே உக்காந்து சாப்பிடற மாதிரி ஒரு அமெளண்ட்ஐ உனக்கு செட்டில் பண்றேன்” என்றான் முரளி கிருஷ்ணா.

 

அவன் இப்படி பேசி சென்றதிலிருந்து பிரதாப் யாதவனின் வரவுக்காக காத்திருக்க தொடங்கினான். அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே யாதவ் கிருஷ்ணா, முரளி கிருஷ்ணாவின் ஆபிசிற்கு வந்து சேர்ந்தான். பிரதாப்பும் முரளியின் அறிவுரைப்படி இப்போது வரை யாதவனோடு இருக்கிறான். இதையெல்லாம் பிரதாப் விளக்கமாக சொல்லவும் யாதவ் கிருஷ்ணாவிற்கு எல்லையில்லா கோபம் வந்தது. உடல் முழுக்க உஷ்ணமேறி நரம்புகள் முறுக்கேறின.

 

“தாழினி கிளம்பு, உன்னைய வீட்டில் விட்டுட்டு நான் என் ஊருக்கு போறேன்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்

 

“யாதவ், என்ன சொல்றீங்க? இவ்வளவு தூரம் வந்துட்டோம், புல்லாங்குழலை தேட வேண்டாமா?” என்றாள் செந்தாழினி

 

“உனக்கு வேணும்னா நீ தேடு, எனக்கு எந்த அவசியமும் இல்ல. நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு தன் லக்கேஜை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பி யமுனை ஆற்றை நோக்கி நடந்தான்.

 

செந்தாழினி அவனை போக விடாமல் அவன் கரம் பற்றினாள். “யாதவ் நான் சொல்றதை கேளுங்க, கெட்டவங்க கையில அந்த புல்லாங்குழல் கிடைக்கிறதுக்கு முன்னாடி நாம அதை தேடி, கோயில்ல கொடுத்திடுவோம். இல்லனா கவர்மென்ட்ல கொடுக்கலாம். நடக்கறதை எல்லாம் வச்சு பார்த்தா, உங்களால தான் புல்லாங்குழலை நெருங்க முடியும்னு தோணுது, ப்ளீஸ் போகாதீங்க” என்று அவனை இழுத்தாள்.

 

அசையாமல் சிலை போல நின்றவன் பேச தொடங்கினான்.

 

“நான் ஒன்னும் புல்லாங்குழலுக்காக இங்கே வரல. அந்த ராஸ்கலை தேட சொல்லி என் அம்மா சொன்னதால தான் இங்கே வந்தேன். எனக்கு அப்பவே தெரியும், என்னைய ஒரு ஆளா மதிச்சு அவனை தேட சொல்லியிருக்கானேனு சந்தேகமா தான் இருந்துச்சு. ஆனா என்னைய வச்சு எப்படி எல்லாம் திட்டம் போட்டு இருக்கான்னு தெரிஞ்சும் அதை செய்ய சொல்றியா தாழினி? ஒரு வேளை உனக்கும் அந்த புல்லாங்குழலை அடையணும்னு ஆசை இருக்கா?

 

“ச்சே, என்ன இப்படி சொல்லீட்டிங்க, எனக்கு உங்களை தவிர இந்த உலகத்துல எதுவுமே பெரிசு இல்ல யாதவ்” என்றவளை திரும்பி அழுத்தமாக பார்த்தவன், 

 

“தாழினி வீணான கற்பனைகளை மனசுல வளர்த்துக்காதனு நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன்”, என்று சொல்லியபடி தன் கரத்தை பற்றியிருந்தவளின் கரத்தை வலுக்கட்டாயமாக விலக்கிவிட்டு முன்னால் நடந்தான்.

 

“சார் என்னைய விட்டுட்டு போகாதீங்க, முரளி சார் கொடுக்க போற லைப் டைம் செட்டில்மென்ட் பணத்தைவிட நான் உயிரோட இருக்கிறது தான் முக்கியம். உங்க கையை பிடிச்சுட்டு இருந்ததால தான் நான் உயிரோடவே இருக்கேன். என் கையை பிடிச்சு ஆத்தை தாண்டி, அந்த கந்தர்வ வனத்தை தாண்டி விட்டுடுங்க சார். நான் என் ஊருக்கே போயிடுறேன்” என்று கத்திக் கொண்டே பிரதாப் அவன் பின்னால் ஓடி சென்றான்.

 

மூவரும் மீண்டும் யமுனை நதியில் இறங்கி நடக்க தொடங்கினர். இப்போது பிரதீப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. நன்றாக நடக்க முடிந்தது. அவன் முன்னே சென்று கொண்டிருந்தான். ஆனால் யாதவ் மற்றும் செந்தாழினியால் தான் இப்போது ஆற்றை கடக்க முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் ஆரம்பித்த இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தார்கள்.

 

பிரதாப் பேசிக்கொண்டே பாதி ஆற்றை கடந்து விட்டவன், அப்போது தான் பின்னால் திரும்பி பார்த்தான். யாதவனும் செந்தாழினியும் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

“சார் ஏன் அங்கேயே இருக்கீங்க, சீக்கிரம் வாங்க” என்றான் சத்தமாக

 

“பிரதாப் என்னனு தெரியல, எங்களால வரமுடியல. உன்னோட வேகமா நடந்தாலும் ஏதோ த்ரட் மில்லுல நடக்கறது போல இருக்கு. இருக்கிற இடத்தை விட்டு நகர முடியல” என்றான் யாதவ் சத்தமாக

 

“ஐயோ சார் இதுக்கு பேரு தான் நட்டாத்துல விடறதா? என்னைய இப்படி ஆத்துக்கு நடுவுல விட்டுட்டீங்களே, நீங்க பின்னாடி வர்றீங்கனு நானும் தைரியமா இவ்வளவு தூரம் வந்துட்டேனே. இப்போ எப்படி தனியா போறது?” என்றான் கலங்கிய குரலில்

 

“சரி, நீயும் இங்கேயே வந்துடு” என்றான் யாதவ்.

 

பிரதாப் திரும்பி வந்தவழியே நடக்க தொடங்க இப்போது ஆழம் அதிகமானது. முழங்கால் வரை இருந்த தண்ணீர் இப்போது இடுப்பு, நெஞ்சுவரை ஏறி, கழுத்தருகே வந்து விட்டது. அதிவேகத்தோடு பாய்ந்தோடும் ஆற்றின் குறுக்கே நீச்சலடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதாப்புக்கு ஏதோ புரிவது போல இருந்தது. இப்போது கந்தர்வ வன காட்டை நோக்கி திரும்பி நடக்க முயற்சித்தான். ஆற்றின் வெள்ளம் குறைவது போல இருந்தது. நடக்கவும் இலகுவாக இருந்தது.

 

மீண்டும் யாதவன் இருந்த பக்கம் திரும்பி நடந்தான். ஆற்றின் ஆர்பரிப்பு அவனை அசர வைத்தது. மீண்டும் எழுந்து கந்தரவவன காட்டை நோக்கி நடந்துக் கொண்டே சத்தமாக பேசினான் “சார் எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு, என்னையே இங்கே இருந்து துரத்தறதுக்காக இயற்கையே சதி செய்யுது. இயற்கைக்கு எதிரா என்னால எதுவும் செய்ய முடியாது. நான் மட்டும் போறேன்” என்றான்

 

“பிரதாப் நீ கரையோரம் போய் நில்லு, நாங்க எப்படியாவது வந்துடுறோம்” என்ற யாதவ் செந்தாழினியின் கரத்தை பற்றிக் கொண்டு வேகமாக நடந்தான். வேகம் அதிகரித்ததே தவிர, அவர்கள் ஒரு இன்ச் கூட நகரவில்லை.

 

அக்கரைக்கு சென்ற பிரதாப் அவர்கள் வராமல் போகவே பதறிப்போனான், இப்போது ஆற்று நீர் சுனாமி பேரலைபோல கரை புரண்டு ஓடியது. அந்த பக்கம் இருந்தவர்களை பிரதாப்பால் பார்க்க கூட முடியவில்லை. “ஐயோ சார், இப்போ இந்த கந்தர்வ வனத்தை எப்படி கடப்பேன். தேவ கன்னிகைகள் வந்து என் கற்பை சூறையாடி என் உயிரை எடுத்துட்டா நான் என்ன செய்வேன்?” என்று அவன் அலறுவது யாதவனுக்கு கேட்டதோ இல்லையோ, அந்த வனம் முழுவதும் பிரதாப்பின் குரல் எதிரொலித்தது.

 

மீண்டும் சுகந்தமான நறுமணம் வீசவும் நடுக்கத்தோடு திரும்பி பார்த்தான் பிரதாப். சற்று முன் முட்புதர்களால் காட்சியளிந்த அந்த காடு இப்போது மலர் வனமாக பூத்து குலுங்கியது. மனோரஞ்சித மலர்களின் வாசம் மனதை மயக்க, அல்லி மலர்களை கையில் வைத்தபடி ஒரு யுவதி பிரதாப்பை மோகனமாக பார்த்துக் கொண்டே அவனருகில் வந்தாள்.

 

அழகு பதுமையென அவன் முன்னால் வந்து நின்றவளின் வெண்ணிற கச்சைக்கும் இடையில் முழங்கால் வரை இருந்த ஆடைக்கும் நடுவில் தெரிந்த  மணிவயிற்றில் அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன. சற்றே  நிமிர்ந்து அவளின் யெளவனங்களை பார்த்து மூச்சடைத்தது பிரதாப்பிற்கு. மற்றது எல்லாம் அவளை பார்த்த மாத்திரத்தில் மறந்து போக, அவள் மேல் மோகம் துளிர் விட ஆரம்பித்தது. அதைபுரிந்துக் கொண்டு அந்த பெண் முன்னால் நடக்க பிரதாப் பின்னால் நடந்தான்.

 

அவளின் மேல் கச்சை முதுகில் முடிச்சிட்டு இருந்தது. மோகத்துடன் அதைப்பிடித்து இழுத்தான். அது கழண்டு அவன் கையோடு வந்து விட்டது. அவளின் முன்னழகை கண்டுவிடும் ஆவேசத்தோடு அவன் வேகமாக அவளுக்கு முன்னால் வர, அவள் வெட்கத்துடன் அவன் கையிலிருந்து அவளின் மேலாடையை பறித்துக் கொண்டு மலர் வனத்துக்குள் ஓடினாள். பிரதாப்பும் சிரித்துக் கொண்டே அவள் பின்னாலே துரத்திக் கொண்டே ஓடினான். 

 

அப்போது அந்த இடமே அதிரும் படி பலமான சிரிப்பு சத்தம் கேட்டது. ஒரு உருவம் நக்கலாக சிரித்துக் கொண்டே “சாவறதுக்கு எவ்வளவு சந்தோஷமா போறான் பாரு” என்றது. அது பிரதாப்பை ஆற்றில் பிடித்து இழுத்த  அதே உருவம்!

 

 

(தொடரும்) 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top