யாதவ், செந்தாழினி மற்றும் பிரதாப் மூவரும் உத்திரபிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தை அடைந்தனர். அங்கே உள்ள கோயில்களை தரிசித்து விட்டு, பிருந்தாவனத்தை அடைந்து அங்கேயும் சுற்றிப் பார்த்தனர். வழியெல்லாம் முரளிகிருஷ்ணாவும் அஸ்வினும் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடியே வந்தான் யாதவ்.
மூவரும் முதுகில் அவர்களுக்கான உடைகளையும் திண்பண்டங்களையும் கொண்ட பெரிய லக்கேஜை முதுகில் சுமந்தபடி பிருந்தாவன் காட்டுக்குள் நுழைந்தனர்
“பிரதாப் நாம பிருந்தாவன்ல இருக்கிற 12 காடுகளுக்கும் போய் பார்த்துடலாம், நாம கார்ல போன நிறைய விஷயங்களை கண்டுபிடிக்க முடியாது. அதனால நடந்து போவோம்” என்றான்
“ஓகே யாதவ்”
“என்ன ஓகேவா, ஒரு காடு இல்ல 12 காட்டுக்கு போகணுமாம். வழியில் புலி சிங்கம் யானைனு வந்தா என்ன பண்றது? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா பிரதாப்?” என்று அவனை முறைத்தாள் செந்தாழினி
“பிரதாப் அவங்களுக்கு கஷ்டமா இருந்தா இப்பவே கிளம்பி போக சொல்லு” என்றான் யாதவ் முன்னால் நடந்துக் கொண்டே
“நான் ஏன் போகணும்? நானும் உங்களோட தான் வருவேன்” என்று சொல்லிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தவள், “நீங்க வழி மாறி போறீங்க, பாதை அந்த பக்கம் இருக்கு பாருங்க” என்றாள்
“எல்லாம் எனக்கு தெரியும், காரணமா தான் வேறே பாதையில் போறேன். நாம கடவுளை தரிசிக்க வரலை. அந்த வழியா போனா, நம்ம இஷ்டதுக்கு எல்லா இடத்துக்குள்ளயும் நுழைய முடியாது” என்றான்
செல்லும் வழியெல்லாம் முட்புதர்களும் அடர்ந்த மரங்களும் இருந்தன. வெகு தூரம் சென்றவர்கள் அங்கே ஒரு குளத்தை பார்த்ததும் ஓய்வுக்காக அங்கேயே தங்கினார்கள். லக்கேஜில் கொண்டு வந்த பிரட்டையும் ஜாம்மையும் சுவைத்தபடி மூவரும் அந்த இடத்தை சுற்றி பார்த்தனர். பார்க்கவே அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருப்பது போல தோன்றியது.
அவர்கள் வரும்போது வெறும் முட்புதர்களாக காட்சியளித்த அந்த இடம் இப்போது பலவண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையாக தெரிந்தது. அந்த மலர்களின் வாசத்தோடு துளசி மனோரஞ்சித மலர்கள் என பல்வேறு வகையான மனதை மயக்கும் நறுமணம் வீசவும் மூவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.
அங்கே குளத்தருகே ஒரு பெண் மார்புவரை புடவையை சுற்றிக் கொண்டு குளிக்க சென்றாள். “என்ன யாதவா இந்த காட்ல யாருமே இருக்க மாட்டாங்கனு சொன்னாங்க, ஒரு பொண்ணு அதுவும் தனியா குளிச்சிட்டு இருக்கா” என்றான் பிரதாப், அவன் கண்கள் தெறித்து விடுவது போல இருந்தது, பின்னே எழிலோவியமாக இருந்த அந்த பெண் இப்போது தன் மேலிருந்த ஆடையை பிரித்துக் கொண்டு இருந்தாள்.
யாதவ் அந்த பக்கம் பார்க்காமலே, “பிரதாப், வந்த வேலையை மட்டும் பாரு, கவனத்தை சிதறவிடாதே” என்றபடி சாப்பிட்டான்.
ஆனால் அதை கேட்க பிரதாப் அங்கே இல்லை. அந்த குளத்தின் அருகே சென்று அந்த பெண்ணின் பின்னால் நின்றான். அவன் மூச்சுக்காற்றை உணர்ந்தாளோ என்னவோ அந்த பெண் பிரதாப்பை திரும்பி பார்த்து புன்னகைத்தாள். தேவலோகத்து ரம்பையா ஊர்வசியா? யப்பா இவ்வளவு அழகா இருக்காளே, அதுவும் என்னை பார்த்து சிரிக்கிறாளே! புல்லாங்குழலாவது முரளியாவது, யாருக்கு வேணும், இவள் மட்டும் கிடைச்சா இந்த காட்டிலேயே என் வாழ்நாள் முழுக்க இருந்திடுவேனே! என்று எண்ணிக் கொண்டு அவனும் அவளை பார்த்து சிரித்தான்.
அவள் குளிப்பதை மறந்தாளோ என்னவோ, முன்னே நடந்தாள். நெஞ்சத்திலிருந்து முழங்கால் வரை இறுக்கமாக சுற்றப்பட்டிருந்த அந்த இறுக்கமாக ஆடை அவளின் அங்க வனப்புகளின் எழிலை எடுத்துரைக்க அவள் பின்னாலே சென்றான் பிரதாப். அவளும் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மென்புன்னகையுடன் அடர்ந்த பூங்காவிற்குள் சென்றாள்.
பிரதாப்பை வெகுநேரம் காணததால் யாதவ் மற்றும் செந்தாழினி மட்டும் தனிமையில் இருந்தனர். குத்தீட்டியாய் அவளின் பார்வை யாதவை துளைக்க சட்டென்று எழுந்துக் கொண்டவன், “நான் பீரதீப்பை தேடி கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
யாதவ் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தான். செந்தாழினி ஆச்சரியமாக அவனை பார்த்து “பிரதாப்பை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனீங்க, என்னாச்சு ஏன் திரும்பி வந்துட்டீங்க?” என்றாள்.
“இந்த தனிமையை வீணாக்க விருப்பமில்லாமல் உனக்குள் உறைய வந்தேன்” என்றான் மயக்கும் குரலில்
“புரியல?” என்று அமர்ந்தவாக்கில் அண்ணாந்து பார்த்தபடி பதில் சொன்னவளை பார்த்து மோகனமாக சிரித்து தன் கைகளை நீட்டினான். நானே நெருங்கி வந்தாலும் விலகி விலகி ஓடுவனான், என்னாச்சு இவனுக்கு திடீர்னு என்று யோசித்தபடி அவன் நீட்டியிருந்த கைகளை பற்றினாள். அவள் உடலில் பல்லாயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள். அவன் காந்த பார்வை அவளுக்கு ஏதேதோ கதைகளை உணர்த்த அவன் கைகளை பற்றிய படி எழுந்து நின்றாள்.
அவனோ தன் இருகைகளையும் அகலமாக விரித்து, “வா என்னை அணைத்துக்கொள்” என்பதாய் குறிப்பு கொடுக்க, அவள் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அவனை நெருங்கி சென்றாள்.
அவன் மீது மனதிற்கு இதமான சுகந்தம் வீசியது, அவன் கண்கள் அவள் மேனியை மேலிருந்து கீழாக ஆசையுடன் வருடியது. அந்த பார்வை என்னவோ செய்ய, அவனை மேலும் நெருங்கி அவன் மார்பில் தலைசாய்க்க போனாள்.
“செந்தாழினி” என்ற யாதவனின் குரல் உரக்க கேட்டது. பக்கத்தில் இருப்பவனின் குரல் ஏன் தூரத்தில் ஒலிக்கிறது என்ற யோசனை ஏற்பட்டாலும் அவன் மேல் வீசிய நறுமணம் அவளை அதற்கு மேல் சிந்திக்க விடவில்லை. அவன் குனிந்து அவள் கழுத்துவளைவை நெருங்கி வாசம் பிடித்தான். இப்போது செந்தாழியின் கைகள் அவனை அணைக்க தயாரானது, அவள் கைகைள் அவனை தொடாமல் தயக்கத்தோடு சுற்றி வளைத்த சமயம் யாரோ அவள் கையை பலமாக பிடித்து இழுத்தார்கள். அவளோ கையை உதறினாள். கைப்பிடி விலகாமல் இறுக பற்றி இருந்ததால் எதிரில் இருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள், “யாதவா யாரோ என்னை இழுக்கறாங்க” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் போகாதே என்பது போல தலையசைத்து அவள் இதழ்நோக்கி குனிந்தான். அவளும் வாகாக தன் இதழ்களை அவனுக்காக மலர்த்தினாள்.
இந்த முறை அவளை யாரோ ராட்சச பலத்துடன் இழுக்கவும், இப்போது அந்த உருவத்தின் மேல் மோதி நின்றாள். தன்னிச்சையாக அந்த உருவத்திடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள போராடியபடி “ஐயோ யாதவா, என்னை காப்பாத்து, நான் ஏதோ உருவத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்” என்றபடி திரும்பியவள் அங்கே யாரும் இல்லாததை பார்த்து திடுக்கிட்டாள்.
மனதிற்குள் பயப்பந்து பந்தயக்குதிரையாய் ஓட, திடுக்கிடலோடு “ஐயோ யாதவா, எங்கே போயிட்டே, எனக்கு பயமா இருக்கு, என்னை காப்பாத்து யாதவா” என்று உச்சஸ்தாயில் கத்தினாள்.
“ஏன்டி இப்படி கத்தறே, பக்கத்துல தானே இருக்கேன்” என்ற யாதவனின் குரலில் திடுக்கிட்டு தன்னை பற்றியிருந்தவனை இப்போது தான் பார்த்தாள். யாதவ் கிருஷ்ணா தான் முறைத்தபடி நின்றிருந்தான்.
“நீ…நீ அங்கே தான இருந்தே, இங்கே எப்படி வந்தே? ஒரு வேளை நீ யாதவனோட உருவத்தில் வந்திருக்கிற மாயாவியா? ஐயோ விடு என்னை” என்று அலறினாள்.
“செந்தாழினி” என்று அழுத்தமான குரலில் யாதவ் கிருஷ்ணா அவளை அழைத்தான். அவள் அவனை கையிலிருந்து விடுபடுவதிலேயே குறியாக இருந்தாள்.
“ஏய் லூசு, கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணு. நான் உன்னை கட்டிபிடிச்சு முத்தம் கொடுப்பேனா? உன் கிட்ட இருந்து விலகி போறேன்னு உனக்கும் தெரியும் தானே?” என்றான் ஆழ்ந்த குரலில்
செந்தாழினிக்கு இப்போது தான் உண்மை உறைத்தது. ‘அதானே நானே அவனை நெருங்கினாலும், ஏதோ தீண்டதகாதவன் போல ஓடுவானே, இப்போ ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்தான், அவன் பார்வை வா வந்து என்னை கட்டிக்கோனு சொல்ற மாதிரியே இருந்துச்சே’ என்ற யோசனையுடன் அவனை பார்த்தாள்.
“செந்தாழினி, நான் பிரதாப்பை கூட்டிட்டு வரதுக்கு போனேன். அவன் ஒரு பொண்ணு பின்னாடி போயிட்டு இருந்தான். நான் எவ்வளவு கூப்பிட்டாலும் அவன் காது கேட்கவே இல்லை. அங்கிருந்த ஆலமர விழுதை பிடிச்சு தொங்கிட்டே அவன் முதுகுல ஓங்கி உதைச்சேன். அவன் அப்படியே விழுந்துட்டான். அந்த பொண்ணு மாயமா மறைஞ்சு போயிட்டா!
மயங்கி விழுந்த பிரதாப்பை எழுப்பறதை விட தனியா விட்டுட்டு வந்த உன்னை காப்பதறதுதான் முக்கியம்னு இங்கே ஓடி வந்தா, நீ தனியா நின்னுட்டு யாரையோ கட்டிபிடிக்க டிரை பண்றது போலவும் கிஸ் பண்றது போலவும் லூசு மாதிரி பண்ணிட்டு இருந்தே. ஆனா அங்கே யாருமில்ல. என்னடா இது வந்த இடத்துல இவளுக்கு மர கிர கழண்டு போச்சோனு கையை பிடிச்சு நான் இழுத்தா, யாதவா என்னை யாரோ இழுக்கறாங்கனு எங்கேயோ பார்த்து சொல்லிட்டு இருக்கே. அப்போ தான் நான்னு நினைச்சு நீ ஏதோ அருவத்துக்கிட்ட மாட்டிக்கிட்ட போலனு தோணுச்சு. ஏதோ சரியில்லனு தோணவும் பலவந்தமாக உன்னை புடிச்சு இழுத்தேன். என்னாச்சு உனக்கு?” என்றான் புருவம் சுருக்கி
செந்தாழினிக்கு தலையே சுற்றியது, கொஞ்ச நேரத்துக்கு முன்பு என்னை அணைக்க வந்தவன் யாதவனா இல்லை இப்போ என்கிட்ட பேசிட்டு இருக்கிறவன் யாதவனா? இதில் யார் நிஜம்? யார் பொய்? என்று திகைத்தவள் சற்றும் யோசிக்காமல் அவன் கையை பிடித்து முழங்கையில் நறுக்கென்று கடித்தாள்
“ஆ” என்று அலறியவன், “ஏய் லூசு உண்மையாவே உனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா? எதுக்கு இப்போ என்னை கடிக்கிறே?” என்றான் கையை தேய்த்துக் கொண்டே
“நீ உண்மையான யாதவனானு கன்பார்ம் பண்ணிக்க தான் கடிச்சேன்” என்றாள்
“அப்போ பொய்யான யாதவன்னு யாராச்சும் இருக்காங்களா என்ன?” என்றான் நக்கலாக
“ஆமா, நீ பிரதாப்பை கூப்பிடறேன்னு சொல்லிட்டு போனதும் உன்னை போலவே ஒருத்தன் வந்தான். எப்பவும் இல்லாம என்னை ஒரு மாதிரி பார்த்து கையை விரித்து முத்தம் கொடுக்க கூப்பிட்டது போல இருந்துச்சு. நீதான்னு நினைச்சு அவனை கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்க போனேன். நீ வந்து என்னை இழுத்ததும் அந்த உருவம் மறைஞ்சு போயிடுச்சு. அப்படின்னா இந்த இடத்துல கந்தர்வன்கள் சுத்துறாங்கனு நினைக்கிறேன். நாம இங்கே இருக்கிறது சேப்டி இல்ல, சீக்கிரம் இங்கிருந்து கிளம்பலாம் யாதவா” என்றாள் பரபரப்புடன் தன் லக்கேஜை தூக்கிக் கொண்டே
யாதவ் கிருஷ்ணா அசையாமல் செந்தாழினியை அழுத்தமாக பார்த்தபடி நின்றான்.
“என்ன?” என்றாள்
“கொஞ்சம் முன்னாடி என்ன சொன்னே?”
“என்ன சொன்னேன்?” என்று அவனையே திருப்பி கேட்டாள்
“நான்னு நினைச்சு அவனுக்கு முத்தம் கொடுக்க போனீயா?” என்றான் ஒரு மாதிரி பார்த்து
“இல்லயே”
“அதான் பார்த்தனே, யாதவானு அந்த நிழலுருவத்துக்கு முத்தம் கொடுக்க சரியான பொசிஷன்ல நின்னியே”
தன் குட்டு வெளிப்பட்டதையும் உளறியதையும் எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், “ஹி ஹி” என்று சிரித்தாள்
“தாழினி ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ. நாம என்னைக்குமே ஒண்ணு சேர முடியாது. ஏன்னா நீ முரளி விரும்பன பொண்ணு, தேவையில்லாத கற்பனைகளை மனசுல வளர்த்துக்காதே” என்றான் அழுத்தி
“உன் நொண்ணன் உலகத்துல எல்லாரையும் விரும்புவான். அதுக்காக நீ யாரையும் விரும்ப மாட்டியா? உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன், நான் அந்த முரளியை விரும்பல. என்ன நடந்தாலும் அவன் என் வாழ்க்கையில் வர்றதுக்கு நான் விடவே மாட்டேன். புரியுதா?” என்றாள் கோபமாக
“அவன் உன் வாழ்க்கையில் இருப்பானா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா நான் மட்டும் உன் வாழ்க்கையில் எப்பவும் இருக்கமாட்டேன்” என்று சொல்லி விட்டு தன் லக்கேஜை தூக்கிக் கொண்டு விறுவிறுவென்று முன்னே நடந்தான்.
யாதவ் கிருஷ்ணா சொல்லி சென்ற வார்த்தைகள் செந்தாழினியின் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தது போல வலித்தது.
********
யாதவ் பிரதாப்பை எழுப்பி கொண்டிருந்தான். மெல்ல கண்விழித்த பிரதாப் அவனை பார்த்து முறைத்தான், “நீங்க தானே என்னை எட்டி உதைச்சது? ச்சே உங்கள விட முரளி சாரே மேல் போல இருக்கு. உங்க கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கல யாதவ்” என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு
“நீ என்ன சொல்றே?” என்றான் யாதவ் அழுத்தமான குரலில்
“அந்த பொண்ணு முதல்ல என்னை பார்த்து தான் சிரிச்சா, நான் அவ கூட ரொமான்ஸ் பண்ணலாம்னு போனா, நீங்க பின்னாடியே மோப்பம் பிடிச்சு வந்து என்னை எட்டி உதைச்சுட்டு, அவளோட போய் இருக்கீங்க. என்ன பழக்கம் இதெல்லாம்” என்றான் அருவருப்பான குரலில்
“அடச்சீ, வாயை மூடு. நான் அந்த பொண்ணை அடையறதுக்காக உன்னை எட்டி உதைச்சேன்னு சொல்றீயா?” என்று கர்ஜித்தான் யாதவ்
“பின்ன இல்லையா?” என்றான் பிரதாப் விடாமல்
“நீ எங்கே அவளை முதல்ல பார்த்தே, சொல்லு?”
“அதோ அங்கே இருக்கிற குளத்துல குளிக்க வந்தா” என்றபடி திரும்பி குளம் இருந்த பக்கம் கைநீட்டி காட்டினான்.
“எங்கேடா குளம்?” என்றான் யாதவ் கோபத்தை அடக்கி கொண்டு
“ஏன் கண்ணு தெரியலையா? அங்கே தானே இருக்கு” என்று பிரதாப்பும் திரும்பி பார்க்க, அங்கே குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. எழுந்து ஓடினான், “ஐயோ இங்கே இருந்த குளத்தை காணோமே. எங்கே போச்சு” என்று தலையை இருகைகளால் தேய்த்தபடி சுற்றும் முற்றும் தேடினான்.
பிரதாப்பை முறைத்தபடி, “கிணத்தை காணோம்னு வடிவேல் கம்ளெய்ண்ட் பண்ணது போல நாம வேணும்னா குளத்தை காணோம்னு கம்ளெய்ண்ட் செய்வோமா?” என்றான் கைகளை கட்டிக் கொண்டு
ஆனால் அவனோ சுற்றும் முற்றும் பார்த்தான். கொஞ்ச நேரத்திற்கு முன்பு நந்தவனம் போல பூச்செடிகளால் சூழ்ந்திருந்த அந்த இடம் இப்போது முட்புதர்களால் சூழ்ந்திருந்தது.
“எனக்கு தலைசுத்துது, கொஞ்ச முன்னாடி இங்கே ஒரு குளம் இருந்தது. அங்கே ஒரு பொண்ணு குளிக்க வந்தா”
“நீ அவளுக்கு சோப் போட போனீயா? நான் தான் எங்கேயும் கவனத்த சிதறவிடாதேனு சொன்னேன் தானே? நான் மட்டும் வரலைனா, நீ அவளோட போயிருப்ப, நான் உன்னை தடுத்ததும் மாயமா மறைஞ்சு போயிட்டா”
“அப்போ அவ பேயா?” என்றான் பிரதாப் அதிர்ச்சியாக. மீண்டும் ஒரு பெருமூச்சோடு “நல்ல சான்ஸ், பேயா இருந்தா தான் என்ன, செமயா இருந்தா. என்னை கொஞ்ச நேரம் அவளோட விட்டிருக்கலாம் சார் நீங்க” என்றான் ஏமாற்றமான குரலில்
அதற்குள் செந்தாழினி அவளுடைய அப்பா கிளம்பும் போது கொடுத்த புத்தகத்தை புரட்டி பார்த்தாள். “காடுகள் எங்கும் கந்தர்வர்களும் தேவகன்னிகைகளும் உலவுகின்றனர். யார் ஒருவன் அவர்களின் காம வலையில் சிக்குகிறானோ அவனுக்கு மரணம் நிச்சயம்” இதை செந்தாழினி உரக்க படித்தாள்.
“ஆத்தாடி, என்னம்மா சொல்றே. அந்த பொண்ணை தொட்டிருந்தா நான் செத்து இருப்பேனா?” என்றான் பிரதாப் உச்சகட்ட அதிர்ச்சியில்
இதுல அப்படி தான் போட்டு இருந்தது. “அப்போ என்கிட்ட வந்தது கூட கந்தர்வன் தான் போலிருக்கு யாதவா” என்றாள் செந்தாழினி
“அப்போ நீகூட அந்த கந்தர்வனோட வலையில் சிக்கிட்டியா?” என்றான் பிரதாப் நக்கலாக
“சரிசரி வெட்டியா பேசிட்டு இருக்காம கிளம்புங்க நேரமாச்சு” என்றான் யாதவ் கிருஷ்ணா எரிச்சலுடன். ஏனோ யாதவனின் முகம் கோபத்தில் தீப்பிழம்பாக ஜொலித்தது.
அதைக் கண்ட பிரதாப் செந்தாழினியின் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “உன்னை தேடி கந்தர்வனும் என்னை தேடி தேவகன்னிகையும் வந்திருக்காங்க. இந்த யாதவனை தேடி யாரும் வரல. அந்த காண்டுல தான் இப்படி டென்டஷனா பேசுறான்” என்றான் கிசுகிசுப்பான குரலில்
“முட்டாள், நம்மளை தேடிவந்தது நம்ம உயிரை வாங்க வந்த எமனுங்க, இதுல யாதவ் ஏன் பொறாமை படப்போறார்” என்று அவனை நன்றாக முறைத்துவிட்டு யாதவ் பின்னால் சென்றாள் செந்தாழினி.
வெகு தூரம் நடந்து சென்றவர்கள், இப்போது எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் திகைத்தனர். அவர்கள் வந்த வழியில் ஒரு நதி ஓடிக் கொண்டு இருந்தது. அதை தாண்டி செல்ல வேண்டுமா, இல்லை இடம் வலம் என்று எந்ந பக்கம் போகவேண்டும் என்று தெரியாமல் திகைத்தனர்.
செந்தாழினி அந்த புத்தகத்தை எடுத்து வாசித்தாள். “வழியில் யமுனா குறுக்கிடுவாள், நல்லோர்க்கு வழிவிடுவாள்” அப்படினு போட்டு இருக்கு என்றாள்.
“எனக்கு புல்லாங்குழலை அடையணும்னு எந்த எண்ணமும் இல்ல. உண்மையாவே அப்படி ஒரு விஷயம் இருந்ததுனா, அதை அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைப்பேன். இல்லனா மதுராவில் இருக்கிற கிருஷ்ணர் கோயில்ல கொடுத்திடுவேன். நீங்க என்ன நினைக்கறீங்க?” என்றான் இருவரையும் பார்த்து
செந்தாழினி சற்றும் யோசிக்காமல் “எனக்கு சம்மதம்” என்றாள். பிரதாப் சிறிது நேரம் யோசித்து விட்டு “நான் கூட ஓகே தான் சார்” என்றான்.
“சரி வாங்க மூணு பேரும் கையை பிடிச்சுட்டு ஒண்ணாவே தண்ணிக்குள்ள இறங்கலாம்” என்று யாதவ் தன் இருகைகளையும் நீட்டினான்.
பிரதாப் அவனின் ஒரு கையை பற்ற, செந்தாழினி தயங்கியபடி யாதவனின் பெரிய உள்ளங்கையில் தன் பஞ்சு போன்ற கையை வைத்தாள். அவள் கரம் தன் மேனியில் பட்டதும் என்ன நினைத்தானோ, “தாழினி, நீ பிரதாப்போட கையை பிடிச்சுக்கோ” என்றான் தன் மேல் இருந்த அவள் கரத்தை உதறியபடி.
“ஹலோ, இதெல்லாம் ரொம்ப ஓவர். என் கையை பிடிச்சுக்கிட்டா உங்க கற்பு போயிடுமா என்ன? அந்த பிரதாப்பை நம்பி எல்லாம் என்னால தண்ணிக்குள்ள இறங்க முடியாது. எதாவது கடல் கன்னி போல ஆத்து கன்னி வந்தா அவன் என்னை விட்டுட்டு போய்டுவான்” என்றவளை பார்த்து வந்த சிரிப்பை அடக்கினான் யாதவ்.
“அதெல்லாம் உன்னை விட்டுட மாட்டான். அப்படியே அவன் விட்டாலும் நானும் இங்கே தானே இருக்கேன். உன் கையை நான் விட்டுட மாட்டேன்” என்றான் அவளுக்கு சமாதானம் செய்யும் நோக்கில்
“என்னை கை விட்டுட மாட்டீங்களே” என்றாள் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில்.
யாதவ் பதில் சொல்லாமல் இறுக்கத்துடன் நின்றிருந்தான். “ரொம்ப பண்றான் இவன்” என்று முனகிக் கொண்டே செந்தாழினி பிரதாப்பின் கையை பிடித்துக் கொண்டாள்.
இப்போது யாதவ் மற்றும் செந்தாழினிக்கு நடுவில் பிரதாப் என மூவரும் அந்த யமுனை ஆற்றில் இறங்கினார்கள். இடுப்புவரையே மூவருக்கும் தண்ணீர் இருந்ததால் கைகளை விடாமல் நடக்க தொடங்கினார்கள். பாதி ஆற்றை கடந்த நிலையில் பிரதாப் மட்டும் ஆற்றுக்குள் மூழ்க தொடங்கினான்.
யாதவ் மற்றும் செந்தாழினிக்கு இடைவரையே தண்ணீர் இருந்தது. ஆனால் பிரதாப் ஆழத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தான். இரண்டு பக்கமும் யாதவனும் செந்தாழினியும் சேர்ந்து அவனை தூக்க முயற்சித்தார்கள். ஆனால் அவன் காலை யாரோ பிடித்து இழுப்பது போல தோன்றியது.
“சார் யாரோ என்னை கீழே பிடிச்சு இழுக்கறாங்க” என்று அலறினான்.
சட்டென்று யாதவ் நீருக்கடியில் நீந்த தொடங்கினான். ஆளரவமில்லா இந்த காட்டில் யார் பிரதாபை நீருக்குள் இழுக்கிறார்கள் என்று யோசித்தபடி அவன் நீந்தியபடி உள்ளே செல்ல செல்ல நீரின் ஆழம் நீண்டு கொண்டே போனது. இடுப்பு வரைக்கும் தானே தண்ணி இருந்துச்சு. நல்லா தானே நடந்து போனாேம், இப்போ என்ன இவ்வளவு ஆழமா இருக்கு என்று யோசனையோடு மீண்டும் மேலே வந்து பார்த்தான்.
செந்தாழினிக்கு இடை வரையே தண்ணீர் இருந்தது. அவள் பிரதாபை உள்ளே மூழ்க விடாமல் தன் இருகைகைளால் இறுக பற்றி இருந்தாள். மீண்டும் நீருக்குள் பாய்ந்தான் யாதவ். இப்போது வேகமாக நீந்தி பிரதாப்பின் காலைப்பற்றி இழுக்கும் உருவத்தை கண்டுவிட்டான்.
நொடியும் தாமதிக்காமல், அந்த உருவத்தை பின்னாலிருந்து இறுகப்பற்றினான். அவ்வளவு தான் அந்த உருவம் பிரதாப்பின் மேலிருந்த தன் பிடியை விட்டு, தன் இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கி விட்டு, மின்னல் வேகத்தில் நீருக்கடியில் நீந்தி மறைந்தது.
யாதவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, மேலே எழுந்து வந்து பார்த்தான். பிரதாப் மயங்கிய நிலையில் இருந்தான். அவனை தூக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு யாதவ் முன்னால் நடக்க செந்தாழினி அவன் பின்னால் நடக்க தொடங்கினாள்.
அவர்கள் கரையை அடைந்தபோது, அந்த உருவம் மீண்டும் நீருக்கடியில் இருந்து மேலே வந்து மூவரையும் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தது!
(தொடரும்)