யாதவ் மற்றும் செந்தாழினி வெகுநேரம் ஆற்றில் நடந்து நடந்து அக்கரையை அடைய முடியாமல் களைத்து போய் மீண்டும் பாறைகளும் முதலைகளும் இருந்த இடத்திற்கு வந்தனர். இப்போது அந்த கழுகு அவர்கள் முன்னால் வந்து அமர்ந்தது.
இருவரும் அந்த கழுகை கடந்து முன்னால் சென்றனர். அப்போதும் அது அவர்களையே பின் தொடர்ந்து வந்து அவர்கள் முன்னால் நின்றது. கழுகு அவர்களை விடாமல் பின் தொடரப் போகிறது என்பதை யாதவ் புரிந்து கொண்டான்
“தாழினி, இந்த கழுகு மேலே ஏறி உட்காரு, ஒரு வேளை நம்மளையும் இந்த காட்டை விட்டு வெளியே அனுப்ப டிரை பண்ணுதுனு நினைக்கிறேன்” என்றபடி யாதவ் அதன் மேல் ஏறி அமர்ந்தான்.
“யாதவ் என்ன இது? ஏதோ குதிரை மேல ஏறி உட்கார்ந்து சவாரி செய்யறது போல ஈசியா சொல்லிட்டீங்க? அது எங்காச்சு தூக்கிட்டு போய், கீழே தள்ளிவிட்டா போதும், நம்ம கதி அதோ கதி தான். எந்த தைரியத்துல அது மேல ஏறி உட்கார்றீங்க? பிரதாப்பை என்ன பண்ணுச்சுனு பாத்தீங்க தானே? முதல்ல கீழே இறங்குங்க” என்றான் பதட்டமாக
“இல்ல தாழினி, எனக்கென்னமோ நம்மளை இந்த காட்டுக்குள்ள இருந்து இந்த கழுகு துரத்த நினைக்குதுனு தோணுது. அது தான் முன்னாடி முன்னாடி வந்து நிக்குது. பிரதாப்பை தூக்கிட்டு போன மாதிரி நம்மள்ள ஒருத்தரை தூக்கிட்டு போய் இருக்கலாம் இல்ல? ஆனா நமக்கு எதுவும் தொல்லை கொடுக்காம வந்து நிக்கிறத பார்த்தா, நம்மை கரைக்கு அந்த பக்கமா விட்டுடும்னு நினைக்கிறேன். நம்மால தான் ஆத்தை கடக்க முடியலயே. ஒரு வேளை நமக்கு அது ஹெல்ப் பண்ண நினைக்குதோனு தோணுது. முக்கியமா நாம எங்கே போனாலும் அது பின்னாடி வரத்தான் போகுது. அதுக்கு அதுமேலயே உட்கார்ந்துட்டு போகலமில்ல?”
“ம்ஹூம் எனக்கு பயமா இருக்கு” என்று தயங்கினாள்.
“வா, நான் இருக்கேன் இல்ல, அப்புறம் உனக்கென்ன பயம்?” என்றவனின் பேச்சில் மனமுருகி போனாள் செந்தாழினி. மறுப்பேச்சின்றி அவளும் அந்த கழுகின் மேல் ஏறி அமர, அது ஆற்றை கடந்து பிரதாப் சென்ற கந்தர்வ வனம் நோக்கி செல்லாமல் மீண்டும் அவர்களை அந்த காட்டிற்குள் அழைத்துச் சென்றது.
“யாதவ், இதென்ன காட்டுக்குள்ள அழைச்சிட்டு போகுது?” என்றாள் பயத்தோடு
“அதான் எனக்கும் புரியல, சரியா வந்து மாட்டிக்கிட்டோம். பிரதாப் நிலைமையே பரவாயில்லை. அவன் இந்நேரம் தப்பிச்சிருப்பான், நாம எப்படி இங்கே இருந்து வெளியே போக போறாம்னு தான் தெரியல” என்றான் யாதவ்வும் குழப்பத்தோடு
இவனை நம்பி கழுகின் மேல் ஏறி உட்கார்ந்தால் இப்போது இப்படி சொல்கிறானே என்று செந்தாழினி தன் பின்னால் அமர்ந்திருந்த யாதவை அண்ணாந்து பார்த்தாள். மிக நெருக்கத்தில் அவளின் அழகிய வதனம் தெரிய, இருவரின் இதழ்களும் உரசிக்கொள்ளும் நெருக்கத்தில் இருக்கவும் உடனே பக்கவாட்டாக திரும்பிக் கொண்டே, “என்ன?” என்றான்.
“இந்த நேரத்துல கூட உன்னோட கடமை உணர்வு புல்லரிக்குது யாதவா. திரும்பி போக போறோமோ இல்லையா தெரியல, இவ்வளவு நெருக்கத்துல உட்காந்துட்டு கூட யாரோ மாதிரி ட்ரீட் பண்றீயே” என்று கோபமாக சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இங்கே இருந்து வெளியே போனதும் நீ யாரோ நான் யாரோ தான். அதுக்குள்ள தேவையில்லாத கமிட்மென்ட் இரண்டு பேருக்கும் இடையில் வர்றதை நான் விரும்பல” என்றான் எங்கேயோ பார்த்துக் கொண்டு
மீண்டும் திரும்பி அவனை கோபமாக பார்த்து முறைத்தவள் ‘முரளியும் யாதவ்வும் ஒரே மாதிரி தான் இருக்காங்க, ஆனா முரளிய பிடிக்காத எனக்கு ஏன் யாதவனை மட்டும் பிடிச்சிருக்கு?’ என்று சுய ஆராய்ச்சியில் இருந்தாள் யாழினி
ஆண்மைக்கு இலக்கணமாக இருக்கும் இவனுடைய கார்மேக வண்ணமா? பேசும் போது வார்த்தையில் தென்படும் கரிசனமா? சிரிக்கும் போது அவனோடு சேர்ந்து சிரிக்கும் கண்களா? தனக்கு கெடுதல் செய்தவனுக்கு நல்லது செய்ய வந்திருக்கும் இவனுடைய நற்குணமா? இல்லை உருண்டு திரண்டு இருந்த தசைக்கோளங்களோடு ஆஜானபாகுவான உடலமைப்பா? இவனது ஆறடி உயரமா? தனிமையில் அழகான பெண்ணுடன் இருந்தாலும் கண்ணியம் காக்கும் இவனுடைய ஆண்மையா? என்னை கொஞ்சமும் சங்கடப்பட வைக்காத இவனுடைய நேர்கொண்ட பார்வையா? எது என்னை இவனிடம் கவர்ந்து இழுக்கிறது?
அண்ணாந்து தன்னையே ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பவளின் உள்ளத்தை உணர்ந்தவனாக, “செந்தாழினி, நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்” என்று அவன் தொடங்கும் முன் அவள் பேசி முடித்தாள்
“வீணா கனவு கண்டு மனசை கெடுத்துக்காதே, என் கிட்ட இருந்து தள்ளி இரு, இதை தானே சொல்ல போறீங்க, தேய்ந்து போன ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லி கடுப்பாக்காதீங்க. இனி உங்களை பார்க்கல போதுமா?” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள்.
யாதவனும் தோளைக் குலுக்கிக் கொண்டான். இப்போது கழுகு தரை இறங்கி இருந்தது. அவர்கள் இறங்கிய பகுதி மேலும் அடர்ந்த காடாக இருந்தது, அந்த காடு முழுவதும் துளசியின் மனம் வீசியது.
இருவரும் துளசியின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே கீழே இறங்கினார்கள். அடுத்த கணம் அவர்களை சுமந்து வந்திருந்த ராட்சச கழுகு ஒரு வயதான துறவியாக மாறியது. யாதவ் மற்றும் செந்தாழினி அதிர்ச்சியில் உறைந்தனர்.
அந்த துறவி எழுந்து இருவரையும் வணங்கினார். “தங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்.
“யார் நீங்க? எப்படி கழுகா மாறினீங்க? கழுகா இருந்த நீங்க எப்படி மனுஷனா மாறினீங்க?” என்றான் யாதவ் பதட்டத்தை மறைத்தபடி
“நான் ஒரு பைராகி. பல ஆண்டுகளா தவம் செய்ததுல உருமாறும் சக்தியை அந்த பகவான் எனக்கு கொடுத்திருக்காரு. உங்க பிறப்பு உறுதியானதும் நீங்க கண்டிப்பா ஒருநாள் இங்கே வருவீங்கனு தெரிஞ்சு உங்களை பாக்கறதுக்காக ரொம்ப வருஷமா காத்திட்டு இருந்தேன். இந்த பெண் வச்சிருந்த க்ரந்த மொழி புத்தகத்தை எழுதியதும் நான் தான், அதை ஆருத்ரனிடம் கொடுத்து அனுப்பினதும் நான் தான். இது எல்லாமே ஏற்கனவே விதிக்கப்பட்டது.
நீங்க இந்த காட்டுக்குள்ள நுழைந்ததுமே முட்புதர்களா இருந்த இந்த காடுகள் எல்லாமே நந்தவனமா மாறிடுச்சு. அப்பவே எனக்கு புரிஞ்சுடுச்சு நீங்க தான் வர்றீங்கனு. ஆனால் உங்க கூட வந்தவன் நல்லவனில்ல. அதனால தான் இடையூறு செய்ய வேண்டியதா போச்சு, என்னை மன்னிச்சுடுங்க” என்று காலில் விழுந்தார் அந்த முதியவர்.
“என்ன உளர்றீங்க? உங்க வயசு என்ன? என் வயசு என்ன? நீங்க ஏன் என் கால்ல விழறீங்க?” என்று பதறிக் கொண்டு விலகி நின்றான் யாதவ்.
“ஐயா, அப்போ நாங்க இங்கே வரப்போறது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்னா, எதுக்கு இங்கே வந்திருக்கோம்னு கூட உங்களுக்கு தெரியுமா?” என்றாள் செந்தாழினி
“நீங்க எதுக்கு வந்திருக்கீங்கனு எனக்கு நல்லா தெரியும் அம்மா, ஆனால் உங்களுக்கு தான் அது இன்னும் புரியல. புரிந்து கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த நிமிஷத்துக்காக நாங்க எல்லாரும் காத்துட்டு இருக்கோம்” என்றார் அவர்.
“யாதவ் இவர் என்ன புரியாத மாதிரி பேசறார்? இவர்கிட்ட பேசினா எனக்கு தலைசுத்துது. நீயே அவர்கிட்ட விசாரி” என்றாள் அலுப்புடன்.
“ஐயா, நீங்க யாரையோ நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. நான் என் அண்ணன் முரளி கிருஷ்ணாவையும் அவன் நண்பன் அஸ்வினையும் தேடி வந்தேன். நீங்க இதே இடத்துல ரொம்ப வருஷமா இருக்கறதா சொல்றீங்களே, அவங்களை பார்த்தீங்களா? அவங்க இங்கே வந்தாங்களா?”
“இதுவரைக்கும் சுற்றியிருக்கிற எல்லா வனத்துக்கும் நான் தான் காவலா இருக்கேன், எனக்கு தெரிந்தவரை இங்கே வந்தவங்க உயிரோட திரும்பனதே இல்லை. யாராலயும் கந்தரவ வனத்தை கடக்கவே முடியாது. கந்தர்வர்களோட காம வலை, எதிராளியை கதிகலங்க செய்து, அவங்களுக்கு மோகத்தை கிளர்ந்தெழ செய்யும். இதிலிருந்து யாராலும் தப்பிக்கவே முடியாது.
அப்படி மோகத்தோடு அந்த கந்தர்வர்களை யார் நெருங்கறாங்களோ, அவங்க இறந்துடுவாங்க, இல்லைனா பைத்தியம் ஆகிடுவாங்க. நீங்க சொன்ன மாதிரி இரண்டு பேர் வந்தாங்க. அதில் ஒருத்தன் இறந்துட்டான். அவனை நான் தான் புதைச்சு வச்சேன். இன்னொருத்தன் பைத்தியமா அந்த வனத்துல சுத்திட்டு இருந்தான். அவனால இங்கே இருந்து வெளியே போகவே முடியாது” என்றார் அந்த பைராகி
இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். “அய்யோ, அது யாருனு நான் இப்பவே பாக்கணுமே, அது முரளியா இருக்க கூடாது கடவுளே” என்று தவித்தான் யாதவ்
“நீங்க புதைச்சு வச்ச ஆளை காட்ட முடியுமா? அது எங்களை சார்ந்தவங்களானு பார்த்துக்கிறோம்”
“சரி வாங்க என்னோட” என்று சிறிது தூரம் அழைத்து சென்றவர், அங்கிருந்த மரத்தில் இருந்த கிளையை உடைத்து பூமியை தோண்ட துவங்கினார். யாதவனும் அந்த குழியை பைராகியுடன் சேர்ந்து தோண்டினான். இருவருமாக சேர்ந்து குழிக்குள் இருந்த உடலை எடுத்து மேல வைத்தனர்.
யாதவ் கிருஷ்ணா படக் படக் என்று அடித்துக் கொள்ளும் இதயத்தோடு, அந்த உடலின் மேலிருந்த மண்ணை எல்லாம் அகற்றினான். இறந்து கிடந்தவனின் முகத்தை பார்த்தான். பெருமூச்சு விட்டபடி செந்தாழினியை பார்த்து, “நல்ல வேளை முரளி இல்லை, இவன் வேற யாரோ” என்றான்.
ஆனால் செந்தாழினியின் முகம் வெளுத்து போயிருந்தது. “என்னாச்சு தாழினி?” என்றான் புருவம் சுருக்கி
“யாதவ், இது முரளியோட வந்த அஸ்வின்”
“அப்போ முரளி கிருஷ்ணா?” என்றான் பதட்டமாக
“அவன் இன்னும் யமுனை ஆற்றுக்கு முன்னாடி இருந்த கந்தர்வவனத்துல பைத்தியமா சுத்திட்டு இருப்பான்” என்றார் பைராகி
“இல்ல முரளிக்கு அவ்வளவு பலவீனமான இதயம் இல்ல. அவன் கண்டிப்பா தேவகன்னியோட மாய வலையில் சிக்கி இருக்க மாட்டான்” என்றான் யாதவ் உறுதியாக
“அதைப்பற்றி எனக்கு தெரியாது, ஆனா அவனால கந்தர்வ வனத்தை விட்டு வெளியே போகவே முடியாது” என்றார் பைராகியும் உறுதியாக
“யாராலயும் கந்தர்வ வனத்தை கடக்கவே முடியாதுனு சொன்னீங்க, நாங்க மட்டும் எப்படி அந்த வனத்தை கடந்து யமுனை ஆற்றில் நடந்து இங்கே வரைக்கும் வரமுடிஞ்சது?” என்றான் கேள்வியாக
“அது தான் சொன்னேனே, உங்க வரவுக்காக தான் எல்லாரும் காத்திட்டு இருக்கோம். மாயோனை மாய வலையில் சிக்க வைக்க முடியுமா என்ன?” என்று பலமாக சிரித்தார் பைராகி.
“என்ன உளர்றீங்க? பிரதாப் கூட எங்க கூட தானே வந்தான்? அவனால மட்டும் யமுனையை விட்டு அக்கரைக்கு போக முடிஞ்சது, ஏன் எங்களால முடியல?”
“அந்த பையன் உங்களோட ஆதரவால தான் கந்தர்வவனத்துல நடக்க இருந்த ஆபத்தில் இருந்து தப்பினான். நீங்க விடாம அவன் கையை பிடிச்சுட்டு வந்ததால தான், அவனால யமுனை ஆத்தை கடக்க முடிஞ்சது. ஆனா இதுக்கு மேல அவனுக்கு உள்ளே வர அனுமதி இல்ல. அதனால தான் அவன் மறுபடியும் போய் கந்தர்வ வனத்துல மாட்டிக்கிட்டான். நீங்க வந்த வேலையை முடிச்சுட்டு தாராளமா இங்கிருந்து கிளம்பலாம்” என்றார் பைராகி.
“வந்த வேலையை முடிக்கிறதா? நான் தேடி வந்தது முரளிகிருஷ்ணாவை, அவன் தான் கந்தர்வ வனத்தை தான்டி போயிருக்க வாய்ப்பில்லைனு சொல்றீங்களே? இது முதல்லயே தெரிஞ்சு இருந்தா நான் அவனை அங்கேயே தேடி இருப்பேன்” என்றவன் “தாழினி கிளம்பு கந்தர்வ வனத்துக்கு போகலாம்” என்றான் அவளிடம்
“மன்னிக்கணும் நீங்க திரும்பி போக முடியாது. ஆனா இந்த துளசி வனத்தின் வழியா போனீங்கனா, உங்களுக்கு வேண்டியது கிடைக்கும், எங்களுக்கு வேண்டியதும் கிடைக்கும், நீங்க இரண்டு பேரும் உங்களை உணரும் தருணம் வந்தாச்சு. அதுக்கு பிறகும் நீங்க போகணும்னு விருப்பப்பட்டா போகலாம். ஆனால் இங்கே நடந்தது எல்லாம் மறந்துடுவீங்க” என்றார் பைராகி
“என்ன இந்த ஆளு புரியாத மாதிரியே பேசிட்டு இருக்காரு” என்று யாதவனின் காதில் கிசுகிசுத்தாள் செந்தாழினி.
“ம்ம், கந்தர்வன வனத்துல சுத்தற பைத்தியங்கள்ல இவரும் ஒண்ணுனு நினைக்கிறேன்” என்றான் அவனும் கிசுகிசுப்பாக.
“இனி உங்களுக்கான தருணம் வந்தாச்சு. உங்களுக்கு இடையூறாக இருக்க நான் விரும்பல. மறுபடியும் வந்து உங்களை சந்திக்கிறேன். இப்போ நான் கிளம்பட்டுமா?” என்றார் பைராகி.
“அச்சோ இன்னும் என்னென்ன ஆபத்து எல்லாம் காத்திருக்கோ தெரியலையே”
“பயப்படாதீங்க அம்மா, இடையில் யாராவது தென்பட்டால் யாரையும் கூர்ந்து கவனிக்காதீங்க, அந்த மாதிரி சமயங்கள்ல இவரை பாருங்க” என்று யாதவனை கைக்காட்டிவிட்டு மறைந்தார் பைராகி.
“இப்போ என்ன பண்றது யாதவ்?”
“வேறே வழியில்ல, பாதை இருக்கிற வரைக்கும் போய்ட்டே இருப்போம். பார்த்துக்கலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு துளசிவனம் என்றழைக்கப்படும் பந்திர்வன் காட்டுக்குள் நுழைந்தான்.
இருவரும் வெகு தூரம் சென்றதால் களைப்பாக உணர்ந்தனர், “யாதவா ரொம்ப பசிக்குது” என்றாள் வயிற்றை தடவிக் கொண்டு
யாதவ் இருவரின் லக்கேஜிலும் சாப்பிட எதாவது இருக்கிறதா என்று தேடினான். எதுவும் இல்லாததால் அந்த காட்டில் சாப்பிடும் படி எதாவது கிடைக்குமா என்று தேடினான், “தாழினி அங்கே பாரு” என்று அங்கே இருந்த மரங்களை காட்டினான். அங்கே கொய்யா, மா, பலா வாழை என பலவகையான மரங்கள் இருந்தன. இருவரும் ஓடிச் சென்று பசி தீரும் வரை சாப்பிட்டு முடித்தனர்.
சிறிது தூரம் நடந்தவர்களுக்கு களைப்பு மேலாங்கியது, இருட்டவும் தொடங்கி விட்டதால் இருவருக்குமே தூக்கம் கண்களை சுழற்றியது. அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் கிளைகள் தரையில் படர்ந்திருக்க, அதன் மேல் இருவரும் சாய்ந்து கண் அயர்ந்தனர்.
இரண்டு மணி நேரம் கடந்திருக்கும், யாதவ் கிருஷ்ணாவிற்கு விழிப்பு வந்தது. பக்கவாட்டாக திரும்பி கையை தலைக்கு முட்டு கொடுத்தபடி படுத்து செந்தாழினியை ஆழ்ந்து பார்த்தான். அவளின் கள்ளூறும் இதழ்களின் மேல் சின்ன தேனி அமர்ந்ததும் அதைப் பார்த்து முறைத்தான். அது பயந்து கொண்டு அங்கிருந்து பறந்து அவள் மேனியை வட்டமடித்தது.
“என் ராதி பழத்தோட்டம் தான், ஆனால் இந்த தோட்டம் முற்றிலும் எனக்கு சொந்தமானது. புரிந்ததா? நீ போய் அங்கே இருக்கும் பழங்கைளை ருசி பாரு” என்றான் ஆழ்ந்த குரலில்
அதுக்கு என்ன புரிந்ததோ அங்கிருந்து பறந்து சென்று விட்டது. அரை தூக்கத்தில் இருந்த செந்தாழினிக்கு அவன் சொன்ன வார்த்தைகள் காதில் விழ மகிழ்ச்சியுடன் மெல்ல கண்திறந்து பார்த்தாள். ஆனால் அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஒருவேளை நான் தான் கனவு கண்டேனா? என்று நினைத்துக் கொண்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
மாயவன் இப்போது கண்களை திறந்து திருட்டு தனமாக சிறு புன்னகையுடன் அவளை ரசித்து பார்த்தான். யாதவன் தான் இப்போது மாயவனின் மாயவலையில் இருக்கிறானே!
காலை பொழுது புலர்ந்ததும், இருவரும் நடக்க தொடங்கினார்கள். “ராதி பைராகி சொன்னது நியாபகம் இருக்கா, எதிரில் யார் வந்தாலும் அவங்களை கவனிக்க கூடாது. வர்றவங்க கந்தர்வர்களா கூட இருக்கலாம். அதனால என்னையே பார்த்துட்டு நடந்து வா” என்றபடி அவளின் கரத்தை பற்றினான் யாதவன்.
செந்தாழினி ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாள். அவனாக அவள் கரத்தை பற்றியிருக்கிறான். குனித்து தன் கரத்தை பற்றியிருந்த வலிமையான அவன் கரத்தை பார்த்தாள்.
“என்னாச்சு ராதி?” என்றான்
“என்ன திடீர்னு கையை எல்லாம் புடிக்கிறீங்க? புதுசா ராதினு கூப்படறீங்க?” எனக்கெதுவும் புரியலையே?” என்றாள் ஆச்சர்யத்தோடு
“நான் உன் கையை பிடிக்க கூடாதா? அப்ப சரி” என்று பட்டென்று கையை எடுத்துக் கொண்டான்.
“யாதவா, புதுசா இருக்கேனு தான் கேட்டேன். கையை பிடிக்க கூடாதுனு சொன்னேனா?” என்று அவளாக மீண்டும் தன் கையை அவனிடத்தில் கொடுத்தாள். அவனும் மனோகரமாக சிரித்தபடி அவள் கரத்தை இறுகப்பற்றினான்.
உடலெங்கும் மின்னல் தாக்கியது போன்ற உணர்வில் திடுக்கிட்டாள் செந்தாழினி. யாதவ் அவள் கரத்தை பற்றியபடி அவள் கண்களை பார்த்துக் கொண்டே நடந்தான். இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்தன. இதுவரை அவர்கள் பேசிக்கொள்ளாத வார்த்தைகளெல்லாம் அவர்களின் விழிகள் பேசிக் கொண்டன. காதல் மொழி பேசுவது இதழ்கள் மட்டும் தானா என்ன? அதைவிட பலமடங்கு காதலை பறிமாறிக் கொள்வது கண்கள் தானே!
இருவரும் தங்களை மறந்து காதலில் திளைத்து ஒருவரை ஒருவர் கண்களால் தீண்டி தீண்டி தங்களுக்குள் தீயை மூட்டிக் கொண்டிருந்தனர். யாதவனின் கைப்பிடி இறுகிக் கொண்டே போனது. அவள் கையை பிடித்து வேகமாக தன் பக்கம் இழுத்தான், அதில் மொத்தமாக அவன் மீது சாய்ந்தாள்.
“ராதி” என்றபடி அவள் நாடியைப் பற்றி நிமிர்த்தினான். அவள் வெட்கத்தில் கண்களை நிமிர்த்தாமல் இருந்தாள். “ராதி எனக்கு இப்போ புல்லாங்குழல் வாசிக்கணும் போல இருக்கு” என்றான்.
“அது பந்திர்வனத்துல நம்முடைய இடத்துல தானே இருக்கு” என்றாள் அவளையும் அறியாமல் மெல்லியகுரலில்.
“அங்கே போறவரைக்கும் எனக்கு பொறுமையில்லை, இப்போதைக்கு நீதான் என் வேங்குழல்” என்றபடி அவள் இதழின் மீது தன் இதழ்களை பதித்தான் யாதவ் கிருஷ்ணா.
யாதவனின் இதழ்கள் பட்டதும் வேங்குழலி சிணுங்கல் கீதம் இசைக்க தொடங்கினாள். அவன் தோளில் மாலையாக தன் இருகைகளையும் கோர்த்துக் கொண்டாள். அவளின் இடையைப் பற்றியபடி அவள் இதழில் இடைவிடாது இசை மீட்டிக் கொண்டிருந்தான் அந்த கள்வன்.
அப்போது தூரத்தில் எங்கோ கோயில் மணி ஓசை கேட்கவும், யாதவ் கிருஷ்ணா சுயம் பெற்றான். தன் மேல் பூமாலையாக இருப்பவளை பார்த்து அதிர்ந்தவன், இப்போது அவள் இதழ்கள் தன் இதழ்களுக்குள் இருப்பதை பார்த்து உச்சபட்ச அதிர்ச்சியில் அவளை உதறி தள்ளினான்.
ஏகாந்தத்தில் திளைத்திருந்த செந்தாழினிக்கு எதுவுமே புரியவில்லை. யாதவனை அதிர்ச்சியோடு பார்த்தாள். அவன் ஒற்றை விரல் நீட்டி மிரட்டுவது போல சொன்னான், “உனக்கு பலமுறை சொல்லியிருக்கேன், என்கிட்ட எட்டி இருனு. உனக்கு ஏன் சொல்றேன்னு புரியுதா இல்லையா? ஏன் தாழினி இப்படி நடந்துக்குறே, ச்சே” என்றான் மெல்லிய கோபத்துடன்.
இப்போது செந்தாழினிக்கு கோபம் புசுபுசுவென்று வந்தது. அவனே இழுத்து முத்தமிட்டதும் இல்லாம என்மேல பழி போடறானே என்று நினைத்தவள் “நான் என்ன தப்பா நடந்துக்கிட்டேன்? நீங்க தானே சும்மா வந்திட்டு இருந்தவ கிட்ட புல்லாங்குழல் வாசிக்கணும் போல இருக்குனு சொல்லி என் உதட்டை கடிச்சி தின்னுட்டு இருந்தீங்க. இப்போ என்னவோ எதுவுமே தெரியாதது போல கேக்கறீங்க” என்று எகிறினாள்.
“என்ன உளர்ற? புல்லாங்குழல் வாசிக்கணும் போல இருக்குனு சொன்னேனா? அப்படி சொல்லியிருந்தாலும் உன் லிப்ஸ் என்ன புல்லாங்குழலா?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி நம்பாத தொனியில்
“ஓ அப்படியா சேதி? சரிங்க சார். நான் தான் கிட்ட வந்து உங்களுக்கு முத்தம் கொடுத்ததாவே இருக்கட்டும். உங்க கை ஏன் என் இடுப்பை பிடிச்சிட்டு இருந்தது. நீங்க என்ன சின்ன பாப்பாவா? நான் வந்ததும் எப்பவும் தள்ளி விடறது போல தள்ளி விட வேண்டியது தானே?” என்றாள் நக்கலாக.
யாதவ் கிருஷ்ணா தாடையை சொறிந்தபடி யோசித்தான். அவள் சொல்லியது போல அவன் கைகைள் அவள் இடையை பற்றியிருந்தது உண்மை தான். ஆனால் அந்த மரங்களில் பழத்தை சாப்பிட்டு படுத்து உறங்கியது மட்டும் தான் அவன் நினைவில் இருந்தது. மற்றது எதுவுமே அவன் நினைவில் இல்லை.
தொண்டையை செருமிக் கொண்டு, “சரி சரி வா போகலாம். அந்த பக்கம் ஏதோ கோயில் இருக்கு போல. அங்கே போய் மனுஷங்க இருக்காங்களானு பார்க்கலாம். அப்படி இருந்தா ஜனங்களோட ஜனங்களா நாமளும் இங்கே இருந்து போயிடுவோம்” என்றான்.
“ஆர் யூ ஸ்யர்? நாம புல்லாங்குழலை தேட வேண்டாமா?”
“எதுவும் தேட வேண்டாம். இங்கிருந்து கிளம்பினாலே போதும். அந்த பைராகி தான் திரும்பி போக முடியாதுனு சொல்லிட்டாரே. நாம கோயிலுக்கு போய் அங்கே இருக்கிறவங்களோட சேர்ந்து பக்தர்களோட பக்தர்களா போயிடலாம் வா. இங்கே இருந்தா நம்ம இரண்டு பேருக்குமே நல்லது இல்ல” என்றான் ஆழ்ந்த குரலில்
அவன் என்ன சொல்கிறான் என்று செந்தாழினிக்கு புரிந்தே இருந்தது. இருவருக்கும் இடையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களுக்கு அந்த இடமே காரணம் என்று நினைக்கிறான். ஒரு பெருமூச்சோடு, “சரி வாங்க போகலாம்” என்றாள்.
கோயிலின் மணியோசை கேட்கும் திசையை நோக்கி இருவரும் ஓட்டமும் நடையுமாக சென்றனர்.
நிதிவன் என்று அழைக்கப்படும் அந்த காட்டில் இப்போது துளசி செடிகளாக இல்லாமல் மரங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்தன. அந்த பகுதி முழுவதும் துளசி மரங்கள் ஜோடி ஜோடியாக இருந்தது. ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே கோயில் மணியோசையை கேட்டபடி அங்கே சென்றனர்.
அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக இறைவனை தரிசித்துக் கொண்டு சென்றனர்.
யாதவ் கிருஷ்ணாவும் செந்தாழினியும் கருவறைக்குள் நுழைந்து ராதா கிருஷ்ணா சமேதர்களை பார்த்து கைக்கூப்பி வணங்கினார்கள். இருவரும் அமைதியாக அமர்ந்துக் கொண்டு அங்கே வருவோர் போவோர்களை பார்த்தபடி இருந்தனர்.
ஏனோ இருவருக்கும் அங்கிருந்து செல்லவே மனம் இல்லை. ஒருவருக்கொருவர் பேசாமல் அந்த இடத்தையும் அதன் எழிலையும் ரசித்தபடி அமர்ந்திருந்தனர். அங்கே கொடுக்கப்பட்ட பிரசாதத்தை உண்டு விட்டு சற்று நேரம் கோயில் பிரகாரத்தில் ஓய்வெடுத்தனர்.
சூரியன் மெல்ல மெல்ல மறைய தொடங்கவும் அந்த இடத்தில் பெரிதாக சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் அங்கே இருந்த கடைகளை எல்லாம் காலி செய்துக் கொண்டு சென்றனர். கடவுளை தரிசிக்க வந்தவர்கள் எல்லாம் அவசரமாக கிளம்பி செல்ல தயாராகினர்.
தன் இருகைகைளையும் கோர்த்துக் கொண்டு அதன் மேல் தலையை வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த யாதவனை எழுப்பினாள் செந்தாழினி.
“யாதவா, எல்லாரும் போறாங்க, வாங்க போகலாம்”
“என்ன அவசரம் ராதி, இன்னைக்கு இங்கேயே தங்கலாமே” என்றான் கண்களை திறக்காமலே
“உனக்கென்ன பைத்தியமா? நீதானே சொன்னே, இங்கிருக்கிற மக்களாோட மக்களா போயிடலாம்னு, கிளம்பு சீக்கிரம் எல்லாரும் போறாங்க பாரு” அவனை உலுக்கினாள்.
அவன் தான் அவனாகவே இல்லையே! கண்மூடி புன்னகையுடன் படுத்திருந்தான். அந்த வழியாக சென்ற அர்ச்சகர் இவர்களை பார்த்து, “இன்னும் ஏன் இங்கே இருக்கீங்க, மணி ஆறே முக்கால் ஆயிடுச்சு, ஏழு மணிக்கு மேல இங்கே தங்க கூடாது தெரியுமோல்லியோ? கிளம்புங்க சீக்கிரம்” என்று அவசரமாக ஓடினார்
“தங்கினா என்ன ஆகும் சாமி?” என்றாள் செந்தாழினி
“ம்ம் இங்கே தினமும் ராத்திரியில ராதா கிருஷ்ணரோட ராச லீலா நடக்கறதா ஐதீகம் இருக்கு. அதை மனுசங்க யாரும் பார்க்க கூடாது. அதனால இங்கே ராத்திரி ஏழு மணிக்கு மேல தங்க அனுமதி இல்ல. மீறி தங்கறவங்க காலையில உயிரோட இருக்க மாட்டாங்க, அப்படியே இருந்தாலும் பைத்தியமா ஆயிருப்பாங்க, நீங்களும் சீக்கிரமா கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடினார் அந்த மனிதர்.
செந்தாழினிக்கு இப்போது பதட்டம் மேலோங்க, யாதவனை பலமாக உலுக்கினாள். “யாதவா எந்திரிங்க, சீக்கிரம் கிளம்பலாம்”
அவள் கரத்தை பலமாக பற்றி இழுத்து தன் கழுத்து வளைவில் மாலையாக போட்டுக் கொண்டவன், “என்னடி அவசரம்? கிளம்பறதுக்கா இவ்வளவு தூரம் வந்தோம்?” என்று அவளை தன் மேல் சாய்த்தான், அப்படியே உருண்டு அவளை தனக்கு கீழே கொண்டு வந்தவன் அவள் கண்களை ஊடுருவுவது போல பார்த்தான். அவன் பார்வை அவளுக்கு புதுவிதமான பரவசத்தை கொடுத்தது.
ஆனாலும் அதை ரசிக்க முடியாமல் ‘‘ஐயோ இவன் வேற நேரங்காலம் தெரியாம ரொமான்ஸ் பண்றானே! இப்போ இவன் இவனாக இல்லை போலிருக்குதே. நான் இவன் செய்யறதை அக்சப்ட் பண்ணா, பண்றதை எல்லாம் பண்ணிட்டு, நான் தான் இவன் கிட்ட வந்த மாதிரி சீன் போடுவானே. இன்னைக்கு நைட் தங்கினா காலையில் இதே இடத்தில் பிணமா தான் கிடக்கணும். இப்போ இவனுக்கு எப்படி சுயநினைவு வரவைக்கிறது?’ என்று புரியாமல் குழம்பி தவித்தாள் செந்தாழினி!
(தொடரும்)