இணை 12

 

வளர்மதியின் பதிலுக்காக ஆர்யன் அவளின் இதழ்களையே பார்த்திருக்க,  அவளுக்கோ அவனை எதிர்கொள்ள முடியவில்லை. ‘அவன் பார்வை அவளுக்குள் என்ன மாதிரியான பாதிப்பை தருகிறது என்றே அவளால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அவன் பார்வை அவளுக்குள் ஒரு வித பதட்டத்தை வரவழைக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அவள் நெற்றியில் வியர்வை துளிகள் வழிய, அதை துடைப்பதற்கு துண்டை எடுப்பது போல திரும்பினாள்.

ஆர்யன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த வெண்ணிற கர்சீப்பை எடுத்து நீட்டினான். அவள் வேண்டாம் என்று தலையை ஆட்டினாலும் அவன் நீட்டிய கையை இறக்காமல் அவளையே கூர்ந்து பார்த்தான்.

வேறுவழியின்றி அதை வாங்கி அவள் நெற்றியில் துடைக்கும் போது அதில் வந்த நறுமணம் அவள் நாசியை தீண்டியது. இதே போன்ற பிரத்யேக வாசனையை ஏற்கனவே உணர்ந்திருக்கிறாள். எங்கே என்ற யோசனையுடன் நின்றிருந்தாள்.

“மதி, கர்சிப்பை கொடுங்க”

“அழுக்காயிடுச்சே”

“பரவால்ல” என்று கையை நீட்டியவனை அப்போது தான் பார்ப்பது போல பார்த்தாள். அன்று நிஷாவின் திருமணத்தின் போது அவளையும் அகல்விழியையும் இவன் தானே அங்கே இருந்த இருக்கையில் அமரச் சொன்னது? கர்சிப் கொடுத்ததும் இவன் தானா? என்று சந்தேகம் வர அதனை விரித்து பார்த்தாள். அதன் ஓரத்தில் பிறைநிலா வடிவில் சிவப்பு நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு இருந்தது.

அன்று ரிசப்ஷனில் அவளுக்கு கொடுக்கப்பட்ட கர்சிப்பிலும் இதே மாதிரியான எம்ப்ராய்டரி இருந்தது. வளர்மதி என்னும் பேருக்கு பொருத்தமாக பிறைநிலா வடிவத்தில் டிசைன் இருக்கவும் இன்னுமே அதை வைத்திருக்கிறாள்.

“மதி என்னோட கேள்விக்கு பதிலும் சொல்ல மாட்டேங்கிற, கர்சிப்பையும் கொடுக்கமாட்டேங்கிற” என்றான் புன்னகையுடன்

“இது அழுக்காயிடுச்சு, வேற தரேன்” என்றவள் அவளுடைய அலமாரியை திறந்து அதில் மடித்து வைத்திருந்த கர்சிப்பை அவனிடம் நீட்டினாள். ஆர்யனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

“வாவ், மூணு வருஷத்துக்கு முன்னாடி நிஷா கல்யாண ரிசப்ஷன்ல கொடுத்த கர்சிப்பை இன்னுமா வச்சிருக்கே” என்றான் வியப்புடன்

அதற்கு பதில் சொல்லாமல் சட்டென உதித்த சந்தேகத்தை கேட்டாள் “அண்ணாகிட்ட நீங்க தான் என்னை பொண்ணு கேட்டீங்களா? எப்போ பேசனீங்க?”

“செழியன் எதுவும் சொல்லலையா?”

“இல்ல”

“நானே உனக்கு சொன்னா தான் சரியா இருக்கும்னு சொல்லாம விட்டிருப்பார்னு நினைக்கிறேன்”

“சரி நீங்களாவது சொல்லுங்க இப்போ”

“உனக்கு கல்யாணத்துல முழு சம்மதம்னா சொல்றேன்” என்று டீல்  பேசினான்.

“சம்மதம், இப்ப சொல்லுங்க”

“எம்புட்டு நேரம் பேசுவீங்க? பேசிட்டு தான் இருக்கீங்களா? உள்ளாற வரலாமா?” என்று ஒரு மூதாட்டி கதவை தட்ட, “அஞ்சே நிமிஷம் பாட்டி” என்றான் ஆர்யன் உள்ளிருந்து.

“அது முடியாது, பேச வேண்டியதெல்லாம் மொத ராத்திரியில பேசிக்கோங்க, இப்போ வெளிய வாங்க” என்றார் அந்த பாட்டி கறாராக.

“மதி நான் கிளம்பறேன்” என்று அவள் கையில் இருந்த கர்சிப்பை இழுத்தான்.

“பதில் சொல்லிட்டு போங்க”

“பாட்டி சொன்ன மாதிரி உன் கேள்விக்கான பதிலை மொத ராத்திரியிலயே சொல்றேன்” என்று அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். தலை முதல் உள்ளங்கால் வரை சூடான ரத்தம் உடலெங்கும் பாய்ந்தது. முகம் ஜிவ்வென சிவக்க ஆரம்பிக்க தன் வலது கையில் இருந்த கர்சிப்பை அவன் முகத்துக்கு நேரே நீட்டி தன் முகத்தை மறைத்தாள்.

“எனக்கு இது தான் வேணும்” என்று சற்று முன் அவள் வியர்வையை துடைத்த கர்சிப்பை அவளின் இடது கையிலிருந்து இழுத்தான். அவன் அப்படி இழுப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காதவள் சட்டென அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதவும், வெளியே இருந்த பாட்டி கதவை திறந்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

இருவரும் அணைத்துக் கொண்டு நிற்பது போல அவர் கண்ணில் பட, “ஆத்தி” என்று அவர் அலற இருவரும் திரும்பி பார்த்தார்கள். சட்டென வளர்மதி விலகி நின்றாள்.

“இது தான் நடந்துட்டு இருக்கும்னு நினைச்சேன்” என்ற மூதாட்டியின் குறும்பு பார்வையில் “பாட்டி சும்மா பேசிட்டு தான் இருந்தோம், நீங்க நினைக்கிற மாதிரி இல்ல” என்றான் ஆர்யன் அவசரமாக 

“மாப்ள உங்க அவசரம் புரியுது. கண்ணாலத்தை சீக்கிரம் வைக்க சொல்றேன், வெளியே வாங்க” என்று புடவை தலைப்பை வாயில் வைத்து சிரிப்பை அடக்கியபடி சென்றார்.

“மதி, இதுக்கு மேல நின்னா நல்லா இருக்காது. நான் கிளம்பறேன்” என்றான் அவள் கண்களை பார்த்து

“ம், தலைய குனிஞ்சு போங்க. மறுபடியும் வாசப்படியில இடிச்சுக்க போவுது”

போன் செய்வதாக கைவிரல்களை காதில் வைத்து அவளுக்கு குறிப்புக் காட்டிவிட்டு குனிந்து வெளியே சென்றான்.

“ராஜா, செல்வா அடுத்த முகூர்த்தத்துலயே கண்ணாலத்துக்கு நாள் பாருங்க. இப்பவே போய் மண்டபத்துக்கு புக் பண்ணிடுங்க” என்றார் அந்த பாட்டி

“இருங்க ஆச்சி, மொதல்ல பொண்ணும் மாப்பிள்ளையும் கண்ணாலத்துக்கு சம்மதிக்கணும் இல்ல” என்றார் ராஜரத்னம், செல்வரத்தினமும் அண்ணன் பேச்சை ஆதரித்தார். 

“கொஞ்சம் பொறுமையா இருங்க ஆச்சி. ஏற்கனவே அவசரத்துல அள்ளி தெளிச்சதெல்லாம் போதும். ஆர அமர யோசிச்சு தான் எல்லாத்தையும் முடிவெடுக்கணும். முக்கியமா வளர்மதி கண்ணாலத்துக்கு சம்மதிக்கணும்” என்றார் செல்வரத்தினம்.

செழியனும் கனியும் செல்வரத்தினத்தின் மனமாற்றத்தை திருப்தியுடன் பார்த்தார்கள்.

“பேசிட்டு இருந்த பொண்ணையும் மாப்பிள்ளையையும் கூப்பிடறதுக்கு நீங்க ரெண்டு பேரும் போயிருந்தா இப்படி பேசமாட்டீங்கடா” என்று அவர் சென்று அமர்ந்து கொண்டார்.

ஆர்யன் தலையை கோதியபடி வந்து இருக்கையில் அமர்ந்தான். அந்த பாட்டி மட்டும் அவனை குறுகுறுவென்று பார்ப்பதும் நமட்டு சிரிப்பு சிரிப்பதுவுமாக இருக்க சங்கடத்துடன் நெளிந்தான். 

“வளர்மதி” செழியன் அழைக்கவும் தலையை குனிந்தபடி வெளியே வந்தாள்.

“மாப்பிளைய உனக்கு புடிச்சிருக்கா இல்லையானு தைரியமா சொல்லும்மா?” என்றார் ராஜரத்னம்

தலையை குனிந்திருந்தவள் நிமிர்ந்து செழியனை பார்த்தாள்

“என்னய எதுக்கு பாக்குறே? பெரியப்பா கேக்கறாரு இல்ல. அவருக்கு பதில் சொல்லு”

தலை குனிந்திருக்க, அப்படியே ஆட்டினாள்.

“வாயை தொறந்து சொல்லும்மா”

சற்றே நிமிர்ந்து அவரை பார்த்து “பிடிச்சிருக்கு பெரியப்பா” என்றாள்.

“பிடிச்சிருக்குனு மாப்ளைய பாத்து சொல்லாம பெரியப்பன பாத்து சொல்றே? மாப்ள முகம் தொங்கிருச்சு பாரு” என்றார் அந்த பாட்டி.

தலையை நிமிர்த்தாமல் பார்வையை மட்டும் உயர்த்தி ஆர்யனை பார்த்தாள். அவன் புன்னகையுடன் அவளை பார்த்திருந்தான்.

“கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாமா மருமகளே?” என்றார் ஆதிசங்கரன்

இப்போதும் செழியனை திரும்பி பார்த்தாள். அவன் பார்வையில் என்ன புரிந்ததோ, திரும்பி ஆதிசங்கரனை நேராக பார்த்து, “சரிங்க மாமா” என்றாள்.

“இம்புட்டு நேரம் உள்ளாற மாப்பிள்ளை கூட ரவுசு பண்ணிட்டு, என்னமோ அண்ணங்காரன் சொல்லி தான் கண்ணாலத்துக்கு ஒத்துக்கற மாதிரி என்னமா நடிக்கிறா” என்று அந்த பாட்டி அதிசயத்தை கண்டது போல தாடையை தோளில் இடித்துக் கொள்ள அங்கிருந்த அத்தனை பேரும் கொல்லென சிரித்தார்கள்.

வளர்மதி அங்கே நிற்காமல் வேகமாக அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ஆர்யனுக்கும் வெட்கமாகிவிட பாண்டியிடம் பேசுவது போல முகத்தை திருப்பிக் கொண்டான். அவனோ ஆர்யனின் நெற்றியில் லேசாக வீங்கி இருப்பதை சுட்டிக்காட்டி “என்னையாவது என் பொஞ்சாதி கண்ணாலத்துக்கு பொறவு தான் கரண்டியால அடிப்பா. என் தங்கச்சி இப்பவே ஆரம்பிச்சிட்டாளா? வாழ்த்துக்கள்” என்று கை குலுக்கினான்.

“இல்ல மச்சான். வாசப்படியில மோதினதுல லேசா வீங்கிருச்சு”

“வெளியில கேக்கறவங்களுக்கு நானும் இப்படி தான் சொல்லுவேன் மாப்ள. நீங்களும் என்னைய மாதிரி நல்லாவே சமாளிக்கிறீங்க. பேசாம  நான் நடத்துற பாவப்பட்ட கணவர்கள் சங்கத்துல நீங்களும் உறுப்பினர் ஆயிடுங்களேன்”

“இதுக்கு சங்கம் எல்லாம் வச்சு நடத்தறீங்களா?” என்றான் ஆர்யன் ஆச்சர்யத்துடன்

“ம்”

“எத்தனை பேர் இருக்காங்க?”

“இதுவரைக்கும் நான் மட்டும் தான். இனிமே நீங்களும் நானும். நாம ரெண்டு பேரும் தான் தலைவர் துணை தலைவர்” என்றதும் ஆர்யன் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டான்.

இருவரும் சேர்ந்து சிரிப்பதை கண்ட செழியன் முத்துபாண்டியை வரச்சொல்லி அழைத்து விட்டு பின்பக்கமாக சென்றான்.

“எதுக்கு கூப்பிட்ட?” என்ற முத்துபாண்டி வேட்டியை மடித்தபடி அவன் பின்னால் சென்றான்.

“மாப்ள கிட்ட என்னடா சொன்னே, அப்படி சிரிக்கிறாரு”

“அதுவா, வளர்மதிய கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறதுக்காக நீ உன் பொண்டாட்டிய அடிக்கிற மாதிரி வெளியே நடிச்சிட்டு உள்ளாற போய் அவங்க கிட்ட அடிவாங்கின கதையை சொல்லிட்டு இருந்தேன்”

“டேய், அதையேன்டா அவர்கிட்ட சொன்னே?” என்று பற்களை கடித்தான் செழியன்

“எதுக்கு இப்போ முறைக்கிற? பல்லை வேற கடிக்கிறே? இதுக்கெல்லாம் மசிய மாட்டான் இந்த பாண்டி. உன் கெத்து எல்லாம் வெளியில தான். அன்னைக்கே உன்னை பாத்துட்டேன். வலிக்குதா ப்ரூட்டி” என்று செழியன் பேசியதை அப்படியே பேசி பாண்டி நையாண்டி செய்ய,

“உன் கோமாளித்தனத்தை நிறுத்தறீயா? இல்லையா?”

“முடியாது. என்ன பண்ணுவே?”

“மல்லி” என்றான் சத்தமாக

அடுத்த நொடி அவர்களின் முன்னால் நின்றாள் வீரமல்லி 

“பொண்ணுக்கு அண்ணனா மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு கவனிக்காம ஏதோ மாப்பிள்ளை வீட்டார் கூட வந்தவரு மாதிரி அவங்களோட உட்கார்ந்து பேசிட்டு இருக்கே? சாப்பாடு ரெடியாயிடுச்சானு பாக்கலாமே, பந்திக்கு ரெடி பண்ணலாமேனு ஏதாச்சும் அக்கறை இருக்கா? எல்லாத்தையும் செழியன் மாமாவே ஒத்தையில பண்ணிட்டு இருக்காரு. உனக்கு எப்போ தான் பொறுப்பு வரும்னு தெரியல. இன்னும் மனசுல மைனருனு நினைப்பு” என்று அவள் பொரிய தொடங்கிவிட்டாள்.

செழியன் நமட்டு சிரிப்பு சிரிக்க, முத்துபாண்டி அண்ணனை முறைத்தான். 

“போங்க, போய் வராண்டாவுல சாப்பிடறதுக்கு டேபிள் சேர் எல்லாம் போட சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

புயல் அடித்து ஓய்ந்தது போல நின்ற தம்பியை பார்த்து இருபுருவங்களையும் ஏற்றி இறக்கினான் செழியன்.

“என்னை எப்படி லாக் பண்ணனும் தெரிஞ்சு வச்சுட்டு ஆட்டம் போடற இல்ல? இரு என் பொஞ்சாதிகிட்ட சொல்லி உன் பொஞ்சாதிக்கு டிரைனிங் கொடுக்க சொல்றேன்” என்றான் சவாலாக

“நான் தான் கேப் கிடைச்சா போதும் எந்த ஒயின்ஸ் ஷாப்புக்கு போகலாம்னு அலைஞ்சிட்டு இருக்கேன் பாரு. நாம சரியில்லனா எந்த பொண்டாட்டியா இருந்தாலும் கேள்வி தான் கேப்பா. அவங்க கேள்வி கேக்காத மாதிரி ஒழுங்கா நடந்துக்கிட்டா அவங்க ஏன்டா கேள்வி கேக்க போறாங்க. பண்றதையெல்லாம் நாம பண்ணிட்டு பொண்டாட்டி கொடுமை படுத்தற மாதிரி வெளியில சொல்லிக்கிறது நல்லாவா இருக்கு?”

“நான் ஓழுக்கமா தான் இருக்கேன்” என்றான் ரோஷமாக

“நீ ஒழுக்கமா இருந்தா பொண்டாட்டிக்கு பயப்பட வேண்டிய அவசியமே இருக்காதே” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்தபக்கமாக வந்த வீரமல்லியின் காதில் விழ, “மாமா, முத்துமாமா இப்போ எவ்வளவோ பரவால்ல. நான் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போனப்போ இவர் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிடுவாரோனு நினைச்சேன். ஆனா என்கூடவே எங்க அம்மா வீட்ல தான் இருந்தாரு, அத்தையும் மாமாவும் தப்பா நினைச்சுப்பாங்கனு கிளம்ப சொன்னேன். அதுக்கு நீ என்கூட இருந்தா தான், நீ திட்டுவியேனு நான் குடிக்காம இருப்பேன், நீ என் பக்கத்துல இல்லனு நான் மறுபடியும் வழி மாறிடக்கூடாது, இங்கனயே உன் கூடவே இருக்கேன்னு சொல்லிட்டாரு”

செழியன் முத்துபாண்டியை ஆச்சரியமாக பார்த்தான். அவனோ மீசையை முறுக்கிவிட்டு கெத்து காட்டினான்.

“உன் பொண்டாட்டியே உனக்கு சர்டிபிகேட் கொடுத்துட்டா. அப்புறம் என்ன? நீ திருந்தி வாழ்ந்தா எனக்கு ரொம்ப சந்தோசம்டா. மல்லி நான் நினைச்ச மாதிரி என் தம்பியை உன் வழிக்கு கொண்டு வந்துட்டே. உன் சாமர்த்தியம் யாருக்கும் வராது” என்று விட்டு செழியன் உள்ளே சென்றான்.

“மல்லி” என்று முத்துபாண்டி பல்லை காட்ட

“சொல்லுங்க முத்து மாமா”

“முத்தும் மல்லியும் சேர்ந்து பெத்த முத்துமல்லி என்ன பண்றா?”

“தூங்கறா”

“முத்துமல்லிக்கு துணையா நாம ஒரு வீரபாண்டிய கொண்டு வரலாமா?”

வீரமல்லியின் வீரத்தையும் முத்துபாண்டியிலிருந்து பாண்டியையும் சேர்த்து சொல்கிறான் என்று புரிய வெட்கத்தில் சிவந்தாள் மல்லி.

சமையலறைக்குள் இருந்த அமுதா பைரவியிடம் புலம்பி கொண்டிருந்தார்.

“கேட்டியா அக்கா கதைய? கண்ணாலத்துக்கு முன்னாடி குடிக்காதடானு நான் எம்புட்டு திட்டி இருப்பேன், அடிச்சிருப்பேன். அப்போ எல்லாம் திருந்தாதவன், பொண்டாட்டி திட்றதுக்கு பயந்து திருந்திட்டானாம். இதுல அவ பக்கத்துல இல்லனா குடிக்க போயிருவானாம், அதனால தான் மாமியா வீட்ல போய் மூணுமாசமா குத்த வச்சிருந்திருக்கான்” 

“அமுதா, நாம பெத்து வளர்த்து இருந்தாலும் எல்லா விஷயத்துலயும் கூட இருக்கறதும், கடைசி வரைக்கும் கூட இருக்க போறதும் அவனுங்க பொண்டாட்டிங்க தான். நம்மால நம்ம புருஷனுங்களை திருத்த முடிஞ்சதா? வீரமல்லி முத்துபாண்டிய திருத்தி இருக்கா. இது சாதனை தான். அதுக்கு நீ அவள பாராட்டணும்” என்று அறிவுரை கூறினார்.

வீட்டின் கூடத்தில் ராஜரத்னம் பேசிக் கொண்டிருந்தார்.

“பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சு போச்சு, கைய நனைச்சுடறீங்களா? ஏதாச்சும் பேசணுமா?”

“உங்க பொண்ணை மட்டும் அனுப்பி வையுங்க, வேற பேசறதுக்கு எதுவும் இல்ல. சீக்கிரம் நாள் குறிச்சிட்டா நல்லா இருக்கும்.” என்றார் ஆதிசங்கரன்

பெரியவர்கள் பேசிக் கொண்டு இருக்க, அங்கிருந்த பாத்திரங்களை அகற்ற வந்த அகல்விழியிடம், “அகல், மதியோட நம்பரை சொல்லு, நான் மிஸ்ட் கால் தரேன். மதிக்கிட்ட என்னோட நம்பரை சேவ் பண்ணிக்க சொல்லு” என்றான் ஆர்யன் மெல்லிய குரலில்

“அண்ணன்கிட்டயே நம்பர் கேட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டு சென்ற மச்சினியை குத்தவா வெட்டவா என்பது போல முறைத்து கொண்டிருந்தான் ஆர்யன்.

செழியனும் முத்துபாண்டியும் ஒன்றாக வந்து மாப்பிள்ளை வீட்டாரை சாப்பிட சொல்லி அழைக்க, “மாமா ஏதோ கை நனைக்கணும்னு சொன்னாரே, நனைச்சுட்டு அப்புறம் சாப்பிடலாமா?” என்றான் ஆர்யன்

அதை கேட்டு அனைவரும் சிரிக்க, ஆர்யனுக்கு எதுவும் புரியவில்லை.  “சம்பந்தம் பேச வந்த வீட்ல சாப்பிடுறதை தான், கை நனைக்கறதுனு சொல்றது. நீங்க எங்க வீட்ல சாப்பிட்டா கல்யாணம் உறுதியான மாதிரி” என்றான் செழியன் விளக்கமாக.

“அப்ப வாங்க சாப்பிடலாம்” என்று ஆர்யன் எழுந்து கொள்ள, மீண்டும் அங்கே சிரிப்பலை தொடர்ந்தது.

உள்ளே கனிஇதழி வளர்மதியிடம் விசாரித்து கொண்டிருந்தாள்.

“வளரு, உனக்கு நிஜமாவே ஆர்யன பிடிச்சிருக்கா? இல்ல உன் அண்ணனுக்காக சம்மதம் சொன்னியா?”

“எனக்கு உண்மையாவே பிடிச்சிருக்கானு தெரியல கனி. ஆனா பிடிக்காமலும் போகல. அண்ணனுக்காக என்னைய பொண்ணு பாக்க ஒத்துக்கிட்டாலும் ஆர்யன்கிட்ட தனியா பேச சொல்லி அனுப்பினதும் எனக்கு என்ன பேசறதுனே தெரியல. பயத்துல வார்த்தையே வரல, குப்புனு வேர்த்துடுச்சு. பழசெல்லாம் ஞாபகம் வர ஆரம்பிச்சிடுச்சு. எங்கே பழைய கதையெல்லாம் நினைச்சு அழுதுடுவேனோனு தான் பயந்தேன். ஆனா ஆர்யன் என் நிலைமையை வேற மாதிரி சமாளிச்சாரு. எந்த ஒதுக்கமும் இல்லாம சகஜமா அவர்கிட்ட என்னால எப்படி பேச முடிஞ்சதுனு எனக்கே ஆச்சரியமா இருக்கு கனி” என்று அவர்கள் பேசிக் கொண்ட அத்தனையையும் தோழியிடம் ஒப்பித்தாள்.

“அந்த கர்சிப் தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருக்குனு சொல்லு”

“அவர் மூணுவருஷத்துக்கு முன்னாடி கொடுத்த கர்சிப்பை ஞாபகம் வச்சு பேசவும், அப்பவே அண்ணன்கிட்ட பொண்ணு கேட்டிருப்பாருனு தோணுச்சு. உனக்கு அதப்பத்தி தெரியுமா கனி?”

“ஆர்யன் கிட்டயே கேக்க வேண்டியது தானே?”

“கேட்டேனே”

“என்ன சொன்னாரு?”

மொத ராத்திரியில சொல்றேன் என்று அவன் சொன்னதை அவளிடம் எப்படி சொல்வது என்று தவித்தவள் “அதுக்குள்ளாற ஆச்சி வந்து அவரை கூட்டிட்டு போயிருச்சு. உனக்கு தெரிஞ்சா சொல்லேன்”

“எனக்கு தெரியும், அவரோட காதலை அவரே சொன்னா தான் நல்லா இருக்கும்னு மாமா சொல்லுச்சு அதனால நான் சொல்ல மாட்டேன்”

“காதலா?”

யாரோ அறைக்கதவை தட்டவும் இருவரும் வெளியே வந்தார்கள்.

“மாப்ள வீட்டுக்காரங்க சாப்பிட்டாச்சு, கிளம்ப போறாங்க, அவங்களை வழியணுப்பனும்” என்றான் செழியன்

வளர்மதி கனிஇதழியுடன் வந்து நுழைவாயிலின் கதவருகே நின்றாள். ஆர்யன் கண்களால் விடைபெற, அவளும் தலையசைத்தாள். மனமே இல்லாமல் காரில் ஏறினான் போலும் உடனே இறங்கி செழியனிடம் வந்தான். அவன் காதில் ஏதோ அவன் ரகசியம் பேசவும் அனைவரும் என்னவாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆர்யன் பேசி முடிக்கும் வரை அமைதியாக நின்றிருந்த செழியன் இப்போது வளர்மதியை பார்த்தான். “பாப்பா, மாப்பிள்ளைக்கு உன் நம்பர் வேணுமாம், நம்பரை சொல்லு” என்றான் சத்தமாக. அதில் அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டனர்

ஆர்யன் அதிர்ந்து செழியனை பார்த்தான். “ஏன் மச்சான் சபையில மானத்தை வாங்குறீங்க? பாண்டி மச்சான் சொன்ன மாதிரி உங்களுக்கு ஊமை குசும்பு அதிகம் தான்” என்றான்.

“அப்படியா சொன்னான் அவன்?” என்று பாண்டியை முறைத்துவிட்டு, தங்கையிடம் திரும்பி, “நம்பரை சொல்லுனு சொன்னேன்” என்றான் மீண்டும்.

வளர்மதி சங்கடத்துடன் ஆர்யனை பார்த்து எண்களை சொல்ல, ஒரு கையால் கைப்பேசியில் அதை குறித்துக் கொண்டு, மற்றொரு கையால் கர்சிப்பினால் அவன் இதழ்களில் ஒற்றினான். வளர்மதிக்கு அடுத்த எண்ணை சொல்ல முடியாமல் நாக்கு குழறியது. 

அவளின் நிலையை உணர்ந்தவன் கண்கள் அவளிடம் மட்டும் ரகசிய புன்னகையை வீச, அவளுக்கு மீண்டும் வியர்த்தது. ஆர்யன் மீண்டும் கர்சிப்பை நீட்டினான். அவளோ வேகமாக மற்ற எண்களை சொல்லவிட்டு கனிஇதழியின் பின்னால் சென்று நின்றுக் கொண்டாள்.

ஆர்யன் அவளுடைய எண்ணிற்கு அழைக்கவும் இடுப்பில் புடவை கொசுவத்தில் செருகியிருந்த அவளின் கைபேசி அலறியது. ஆர்யனின் பார்வை அங்கே செல்ல அவசரமாக அதை கையில் எடுத்தாள்.

“என் நம்பரை சேவ் பண்ணிக்கோ மதி, உங்க வீட்ல எல்லாருக்கும் கொடுத்துடு, வரட்டுமா?” என்றான் அவளிடம் நேரடியாக

அவளும் சரியென்று தலையாட்ட அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி சென்றனர் ஆர்யனும் அவன் குடும்பமும்.

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top