இணை 11

 

அன்று தாமரைகுளத்தில் ஆதிசங்கரனும் ஆர்யனும் உறவுக்கார பெண்களை அழைத்துக் கொண்டு செங்கதிர்செழியனின் வீட்டை அடைந்திருந்தனர்.

 

“வாங்க, நீங்க நேரடியா சித்தப்பா வீட்டுக்கு வருவீங்கனு எதிர்பார்த்தேன்” என்று வரவேற்றான் செழியன்

 

“எனக்கு உங்களை தான் முதல்ல தெரியும், அதான் அப்பாவை இங்கே அழைச்சிட்டு வந்தேன். வீட்ல எல்லாரும் எங்கே?” ஆர்யன் விசாரித்தான்

 

“எல்லாரும் உங்க மாமனார் வீட்ல தான் இருக்காங்க மாப்ள” செழியன் கூறவும், “உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பின்னாடி உறவு முறையோட பேசிக்கலாம் செழியன். இந்த கல்யாணம் நடந்தாலும் நடக்கலனாலும் நீங்க எனக்கு எப்பவும் நல்ல நண்பனா இருக்கணும்” என்றான் ஆர்யன்

 

“ஏன் நம்பிக்கை இல்லாம பேசுறீங்க ஆர்யன்? வளர்மதி சம்மதம் சொன்னதால தான் உங்கள வரச்சொன்னேன்”

 

“உங்க மேல நம்பிக்கை இருக்கறதால தான் குடும்பத்தோட கிளம்பி வந்திருக்கேன்” என்றான் ஆர்யன் மெல்லிய புன்னகையுடன்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். மாமனும் மைத்துனனுமாக அரவணைத்துக் கொள்ளும் காட்சி ஆதிசங்கரனுக்கு மனநிறைவை தந்தது

 

செழியனும் அவர்களோடு காரில் ஏறிக் கொண்டு பெரியகுளத்தில் இருந்த செல்வரத்தினம் வீட்டை அடைந்திருந்தனர்.

 

செல்வரத்தினம் மற்றும் முத்துப்பாண்டி அவரவர் மனைவியுடன் வாசலுக்கு வந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றனர். செழியன் இரு குடும்பத்தினரையும் அறிமுகம் செய்து வைத்தான்.

 

அனைவரும் அமர்ந்ததும் செழியன் சமையலறையில் இருந்த பைரவியிடம் சென்று, “அம்மா, வளர்மதி எங்கே? ரெடி ஆயிட்டாளா?”

 

“ரெடி தாண்டா, பின்பக்க தோப்பு வழியா கருப்பசாமிய கும்பிட்டு வர்றதுக்காக அவளை அழைச்சிட்டு உன் பொண்டாட்டியும் அகலும் போய் இருக்காளுங்க”

 

“சரி நான் போய் அவங்களை கூட்டிட்டு வரேன். நீ வந்தவங்களுக்கு காபி தண்ணியும் பலகாரமும் கொடு” என்று செழியன் பின்பக்கம் சென்றான்.

 

செல்வரத்தினமும் ஆதிசங்கரனும் அவர்களின் குடும்பம் தொழில் பற்றி பேசிக் கொண்டிருக்க, ஆர்யன் தன்னருகே இருந்த முத்துபாண்டியிடம், “நீங்க என்ன பண்றீங்க?” என்று விசாரித்தான்.

 

“நான், நானா? அது வந்து” என்று தலையை சொரிந்தான்.

 

“நானும் கனியும் பாடம் சொல்லிக்குடுக்கற கலைக்கூடத்தை என் வீட்டுக்காரர் தான் எடுத்து நடத்தாரு. அவர் தான் இன்சார்ஜ்” என்றாள் வீரமல்லி

 

“வாவ், சூப்பர்ங்க. இதை சொல்றதுக்கு ஏன் இவ்வளவு தயங்கறீங்க? உங்க மனைவி, அண்ணினு ரெண்டு பேரோட திறமைய வெளிஉலகத்துக்கு பயன்படற மாதிரி நீங்க கலைக்கூடம் நடத்தறது எவ்வளவு பெருமையான விஷயம்?” என்று சிலாகித்தான் ஆர்யன்.

 

வீரமல்லி குழந்தை அழுவதால் அறைக்குள் செல்ல, “அட நீங்க வேற மாப்ள. என் நிலைமைய நேர்ல பாத்தா இப்படி சொல்ல மாட்டீங்க” என்றான் முத்துபாண்டி

 

“ஏன் என்னாச்சு?” 

 

“என் தங்கச்சிய கட்டிக்க போறவரு, உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன? ஒரு காலத்துல எப்படி இருந்தவன் தெரியுமா நானு? மது மாதுனு உல்லாசமா மைனரு கணக்கா ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தேன். மயில புடிச்சு காலை உடைச்சு ஆட சொல்றாங்க மாப்ள” என்று வராத கண்ணீரை துடைத்தான்.

 

“புரியல”

 

“என்னை தனியா விட்டா நான் எங்கிட்டாவது குடிக்க போயிருவேன்னு அந்த வளர்ந்தவன் பண்ண சூழ்ச்சி மாப்ள”

 

“யாரை சொல்றீங்க? செழியனையா?”

 

“ஆமா. மொதல்ல என் பொஞ்சாதிக்கும் அவன் பொஞ்சாதிக்கும் சேர்த்து கலைக்கூடம் கட்றேன்னு சொன்னான். கட்டிக்கிட்டு போறான்னு நானும் எந்த கபடமும் இல்லாம சரினு சொன்னேன். அப்புறம் என்னை போய் அப்பப்போ பாத்துக்க சொன்னான். நானும் சரினு சொன்னேன். என் பொஞ்சாதி சிலம்பம் கத்துக் கொடுத்துட்டு இருக்கறப்போ நான் சும்மா உட்கார்ந்து மோட்டு வளைய பார்த்துட்டு இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க?

 

லைட்டா சாப்பிட்டு வரலாம்னு கடை பக்கமா போனேன். வழியில என்னை பார்த்து முறைச்சிட்டே போனான். நானும் போடானு சாவகாசமா கூட்டாளிங்க கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன் போன பத்து நிமிஷத்துல என் பொஞ்சாதிகிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. சரிதான் வத்தி வச்சிட்டான்னு நானும் கிளம்பி கலைக்கூடத்துக்கு போனேன். அப்போ மாட்டினவன் தான் வெளிய வரவே முடியல”

 

“அப்படி என்ன நடந்துச்சு?”

 

“என்ன நடந்துச்சா? தற்காப்பு கலையே என்னை வச்சு தான் என் பொஞ்சாதி சொல்லி கொடுக்கறா மாப்ள. என்னை அவ கைய பிடிச்சுக்க சொன்னா அன்னைக்கு. நானும் ஆசையா அவ கைய பிடிச்சேன். அங்கே இருந்த பொண்ணுங்க கிட்ட சொல்றா, இப்படி எவனாவது உங்க கைய பிடிச்சா அவன் கையை இப்படி முறுக்கி எட்டி உதைக்கணும்னு உதைச்சு காட்றா மாப்ள”

 

“அச்சச்சோ”

“இதுக்கே இப்படிங்கறீங்களே, தினம் இதான் நடக்குது. அவ சண்டை சொல்லி கொடுக்கறதுக்கு நான் தான் எதிராளியா நின்னு அடி வாங்கணும். அவ கூடவே கலைக்கூடத்துக்கு போய் அவ கூடவே வீட்டுக்கு வரணும். இதுல எங்கே இருந்து நான் ஜாலியா இருக்கறது? நீங்களே சொல்லுங்க. இது போதாதுனு அந்த வளர்ந்தவன் பொஞ்சாதி மாசமா இருக்கறானு ஆடி வேற காட்ட சொல்றாய்ங்க மாப்ள. அது என்னமோ மெமோவாமே”

 

“டெமோ”

 

“அதே தான், எப்படி சிக்கி இருக்கேன் பாத்தீங்களா மாப்ள? சொல்லி புலம்பறதுக்கு கூட நாதியில்லாம போயிருச்சு. இனி உங்க கிட்ட தான் புலம்பணும். அவனான்ட சொல்லிடாதீங்க, என் பொஞ்சாதிகிட்ட போட்டு கொடுத்துடுவான்”

 

“நீங்க ஏதாச்சும் உங்களுக்குனு ஒரு தொழில் வேலைனு செய்யலாமில்ல. அப்போ இந்த பிரச்சனை இருக்காதே”

 

“செய்யலாம் தான். இந்த ஊர்ல என்னை தனியா விட்டா கூட்டாளிங்க எல்லாம் சேர்ந்து என்னையும் குடிக்க வச்சிடுவானுங்கனு என் பொஞ்சாதி சொல்றா. அவ சொல்றதுலயும் உண்மை இருக்கு. அதே சமயம் அவளுக்கும் அங்கே ஒத்தாசைக்கு ஆள் வேணுமில்ல, பாவம் தனியா எப்படி எல்லாத்தையும் சமாளிப்பா? அதனால நானும் அவ கூடவே இருக்கேன். ஆனா ஒன்னு மாப்ள, காலைல கொடுத்த அடிக்கெல்லாம் சேர்த்து வச்சு ராத்திரி நல்லா கவனிச்சுக்குவா, மதுவே இல்லாம என் மாதுவோட போதையில நானும் சிக்கிக்கிட்டேன். என்னாலயும் அவளை விட்டு இருக்க முடியாது” என்றான் வெட்கத்தோடு

 

ஆர்யன் சட்டென சத்தமாக சிரித்து விட்டான்.

 

முத்துபாண்டி வெட்கத்தில் நெளிய, ஆர்யனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. செல்வரத்தினம் ஆதிசங்கரன் இருவரும் பேச்சை நிறுத்தி இவர்களை பார்க்க, அங்கிருந்த பெண்களும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஆர்யன் கண்களில் நீர் வர அப்படி சிரித்து கொண்டிருந்தான். கருப்ப சாமியை கும்பிட்டு விட்டு பின்பக்க வாசல் வழியாக செழியனுடன் கூடத்திற்கு வந்த வளர்மதி ஆர்யனின் சிரிப்பை கண்டு அப்படியே நின்று விட்டாள்.

 

தன்னெதிரே மயில் பச்சை நிறத்தில் கருநீல நிற பார்டர் புடவை தெரிய, அதே சிரிப்புடன் ஆர்யன் நிமிர்ந்து யாரென பார்த்தான். வளர்மதி நின்றிருக்கவே அவன் சிரிப்பு குறைந்து புன்னகையில் முகம் மலர்ந்தது.

 

கருநீல நிற சட்டை அணிந்திருந்த ஆர்யனின் முத்து பற்கள் அவன் புன்னகையில் பளிச்சிட்டது. அவன் சிரிக்கும் போது கண்களும் சேர்ந்து சிரிப்பது போல கண்களில் வசீகரம் இன்னும் கூடியிருந்தது. லேசாக வளர்ந்திருந்த தாடியை டிரிம் செய்து மீசையை வெட்டியதில் பார்க்க இன்னுமே அழகாக இருந்தான்.

 

ஆர்யனும் அவளை அளவெடுக்கும் பார்வையில் தான் இருந்தான். கருநீல நிற பார்டருக்கு தகுந்தாற் போல தோடு, வளையல் அணிந்திருந்தாள். மெல்லிய அலங்காரத்தில் பேரழகியாக தோன்றினாள். மயில் பச்சை நிறத்தில் மயிலாய் ஜொலித்தவளின் கன்னங்கள் வேறு அவன் பார்வையில் லேசாக மயிலாஞ்சியை (மருதாணியை) பூசிக் கொள்ள அதன் காரணத்தை அறியும் பொருட்டு அவள் கண்களை ஆவலுடன் பார்த்தான். 

 

அவளோ சட்டென பார்வையை தழைத்துக் கொண்டாள்.

 

“வளரு, வந்தவங்களுக்கு உன் கையால சாப்பிட ஏதாச்சும் பலகாரம் கொண்டு வந்து கொடு” என்றான் செழியன்

 

விட்டால் போதுமென அவள் சமையலறைக்குள் புகுந்து கொள்ள, பாண்டி மீண்டும் பேச ஆரம்பித்தான்.

 

“மாப்ள, உங்களுக்கு சிலம்பம் தெரியும்?”

 

“தெரியாது, ஆனா கராத்தேல பிளாக் பெல்ட். ஏன் கேக்கறீங்க?”

 

“என் தங்கச்சி வளர்மதியும் சிலம்பம் கத்துக்கிட்டா. என் நிலைமை உங்களுக்கு வரக்கூடாதேனு நினைச்சு கல்யாணத்துக்குள்ள சிலம்பம் குத்துசண்டை இதுமாதிரி ஏதாச்சும் கத்துக் சொல்லலாம்னு கேட்டேன். உங்களுக்கு தான் கராத்தே தெரியும்னு சொல்றீங்களே. சிலம்பம் பெரிசா, கராத்தே பெரிசா மாப்ள?”

 

“தெரியலயே” என்றான் ஆர்யன்

 

“வீரமல்லி அளவுக்கு வளர்மதி இருக்க மாட்டா. சாதுவான பொண்ணு தான். இருந்தாலும் பாத்து சூதனமா இருந்துக்கோங்க மாப்ள”

“சரிங்க” என்று ஆர்யன் கூறிக் கொண்டு இருக்கும் போதே வளர்மதி கையில் பலகாரத்தட்டுடன் வந்தாள். 

 

அவளருகே இருந்த அமுதா என்ன சொன்னாரே தெரியவில்லை, ஆதிசங்கரனிடம் பலகாரத்தட்டை கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்து வணங்கினாள். மீண்டும் இன்னொன்றை எடுத்துக் கொண்டு ஆர்யனின் எதிரே குனிந்தாள். அவள் கழுத்தில் இருந்த டாலர் ஜெயின் அவன் கண் முன்னால் தொங்கியது. அவன் அணிவிக்கும் மாங்கல்யம் அவள் கழுத்தை இதே மாதிரி அலங்கரிக்குமா? என்ற ஆசையுடன் அவளை பார்த்தான்.

 

அவள் அவனை பார்க்காமல் கைகளை நீட்டிக் கொண்டே தட்டிலிருந்த பலகாரத்தில் பார்வையை பதித்திருந்தாள். அவள் தன்னை நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக, “தட்டுல இருக்கறது என்ன பலகாரம் மதி? புதுசா இருக்கு” என்றான்.

 

அனைவரின் முன்னிலையிலும் அவன் நன்றாக தெரிந்தவன் போல இயல்பாக பேசவும் திடுக்கிட்டு விழி நிமிர்த்தி அவனை பார்த்தாள். ஆர்யனின் ஆழ்ந்த பார்வை அவள் கண்களுக்குள் ஜெட் வேகத்தில் ஊடுருவ பேச மறந்திருந்தாள்.

 

“இந்த பலகாரம் சாப்பிட்டதில்லையா மாப்ள? உங்க ஊர்ல குலோப்ஜாமுன் செய்யறது போல எங்க ஊர்ல இதை செய்வாங்க. உளுத்தம் மாவுல சின்ன உருண்டையா எண்ணெய்ல போட்டு பொரிச்சு எடுத்து பால் சக்கரை பாகுல ஊறவைச்சு தருவாங்க. இதுக்கு பேரு அத்திக்கா பணியாரம்”

 

“உன்னை கேட்டாய்ங்களா? உன் பேரு தான் மதியா? மதி கெட்டவனே” என்று செழியன் மெல்லிய குரலில் அதட்டினான். 

 

‘இவருக்கு மட்டும் மதி கொட்டி கிடக்குதாக்கும், எனக்கு வீரமல்லிய கட்டி வச்சதால தான் உன்னைய சும்மா விடறேன்’ என்று பார்வையால் அண்ணனுக்கு சவால் விட்டான் முத்துபாண்டி

 

“என்னலே முறைக்கிறே?” செழியன் புருவம் உயர்த்த

 

“நான் எங்கே முறைச்சேன்? என் கண்ணு பெருசா இருக்கறதால உனக்கு அப்படி தெரியுது” என்றான் முத்து பாண்டி

 

இவர்கள் இருவரும் பேசி முடித்தும் கூட ஆர்யன் வளர்மதி மீதிருந்த பார்வையை விலக்கி இருக்கவில்லை. அவளையும் விலக வைத்திருக்கவில்லை. ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அதே நிலையில் நின்றிருந்தாள்.

 

அவள் மனதிற்குள் இவனுடனான தன் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது? வீட்டினருக்காக நான் சம்மதம் சொன்னாலும் இவனோடு என்னால் இசைந்து இணைந்து இருக்க முடியுமா? அது சாத்தியமா? 

 

ஒரு வேளை என்னால் இவனோடு இணக்கமாக இருக்க முடியவில்லை என்றால்? இவனுடைய எதிர்வினை எப்படி இருக்கும்? வீட்டினருக்கு சொல்லி விருப்பமில்லாத பொண்ண எதுக்கு என் தலையில கட்டினீங்க என்று செழியனிடம் சண்டை போடுவானோ? என்று அவளுக்குள் ஆயிரம் கேள்விகள். அதற்கான பதில்கள் அனைத்தும் அவன் கண்களில் கிடைத்து விடும் என்று நினைத்தாளோ என்னவோ அவளும் அவன் கண்களுக்குள் தான் தொலைந்திருந்தாள்.

 

“க்கும், ரெண்டு பேரும் தனியா பேசணும்னா பேசிட்டு வாங்க” என்றாள் கனி சத்தமாக

 

ஆர்யன் சற்றும் யோசிக்கவில்லை. பலகாரத்தட்டை அருகில் அமர்ந்திருந்த பாண்டியிடம் கொடுத்துவிட்டு எழுந்து கொண்டான். வளர்மதி சில விநாடிகள் மலங்க விழித்தவள், கனியின் பேச்சு புரிந்து திரும்பி அவளை முறைத்தாள்.

 

“எங்ககிட்ட கல்யாணம் வேணாம்னு ஆர்பாட்டம் பண்ணிட்டு, பெருசுங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டு இருக்கறதுக்கு பதிலா, தனியா போய் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தங்க சைட் அடிச்சுக்கோங்க” மெல்லிய குரலில் கனி கிசுகிசுத்தாள்.

 

“லூசு, நான் எங்கடி சைட் அடிச்சேன்” வளரும் மெல்லிய குரலில் அதட்டினாள்

 

“இம்புட்டு நேரம் நீங்க ரெண்டு பேரும் பார்த்ததுக்கு அதான்டி பேரு. உள்ளாற போய் பேசு. பேசறப்போ என் வாழ்க்கையும் உன் கையில தான் இருக்குங்கிறத மறந்துடாதே” என்றாள் கனிஇதழி

 

கருப்பசாமி கோயிலுக்கு செல்லும் வழியில் கனி பேசியது நினைவு வந்தது. “வளரு, உன்னைய என் அண்ணன் கிட்ட இருந்து காப்பாத்த தான் உன் அண்ணனுக்கு வாக்கப் பட்டேன். ஆனா உன் அண்ணனுக்கு இன்னும் என் மேல சந்தேகம் போகலடி. நான் உன்கூட சேர்ந்து கல்யாணத்தை நிறுத்திபுடுவேன்னு நினைச்சுட்டு இருக்கு. எம்புட்டு சொன்னாலும் நம்ப மாட்டேங்குது. உன் கல்யாணம் மட்டும் நின்னுச்சு, என்னைய என் அம்மா வீட்டுக்கு அனுப்பிடுமாம். நான் வாழ்றதும் வாழாம போறதும் உன் கையில தான் இருக்கு வளரு. அப்படி நடந்துச்சுனா என் அப்பன்காரன் இன்னும் மாமாவ கேவலமா தான் பேசுவாரு. அவரப் பத்தி உனக்கே தெரியும். நான் அம்மா வீட்டுக்கு கூட போக முடியாது வளரு” என்று உருக்கமாக பேசியது இப்போது நினைத்தாலும் வளர்மதியின் நெஞ்சை உலுக்கியது.

 

“எனக்காக நீ எம்புட்டு தியாகம் பண்ணியிருக்க கனி. அத புரிஞ்சுக்காம நான் உன்னையும் அண்ணனையும் ஏசியிருக்கேன். அப்பவும் நீங்க எனக்கு நல்லது நடக்கணும் கிடந்து அடிச்சுக்கறீங்கனு எனக்கு நல்லாவே புரியுது. உங்களுக்கு முன்னாடி நான் கெட்டவளா கூனி குறுகி நிக்கறேன். இதுல இன்னொரு மனுஷன் வாழ்க்கையில வேற நான் விளையாடணுமா? என்னால அவர் கூட சகஜமா இருக்க முடியுமானு தெரியல கனி. உனக்கு புரியுதா?”

 

“நல்லாவே புரியுது வளரு. தாலிக் கயிறுக்கு ஒரு மேஜிக் இருக்குடி. அது உன் கழுத்துல ஏறினதும், அத கட்டிவன் மேல தானாவே ஒரு பாசம் வந்துடும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீயும் ஆர்யனும் சந்தோஷமா வாழுவீங்க. உன் பேச்சை நம்பி மாமா அவங்கள பொண்ணு பாக்க வரவச்சிடுச்சு. அவருக்கு தலைகுனிவு வர விடமாட்டேனு நம்பறேன்”

 

கோயிலுக்கு செல்லும் போது இவ்வாறு அவர்களின் பேச்சு இருந்தது.

 

“வளர்மதி, என்ன யோசிச்சுட்டு இருக்கே, மாப்பிள்ளைய உன் ரூமுக்கு அழைச்சிட்டு போய் பேசும்மா. ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா தானே மத்த விஷயங்கள பேச முடியும்?” என்றார் செழியனின் தந்தை ராஜரத்னம்.

 

வளர்மதி முன்னால் செல்ல, ஆர்யன் அவள் பின்னால் சென்றான். கதவை திறந்து அறைக்குள் சென்றவள், திரும்பி அவனை பார்த்தாள். அவன் உயரத்திற்கு அறையில் வாசலின் நிலைப்படி நிச்சயம் தலையில் இடிக்க வாய்ப்பிருந்தது.

 

அவள் சொல்வதற்குள் ஆர்யன் அறைக்குள் நுழைய நெற்றியில் லேசாக இடித்துக் கொண்டான்.

 

“அச்சோ பாத்துங்க, அடிபட்ருச்சா?” பதறினாள்

“அதெல்லாம் இல்ல” என்றபடி உள்ளே நுழைந்தவன் கதவை சாத்த எத்தனிக்க

 

“மாப்ள, கதவை முழுசா சாத்திக்கிடாதீங்க, கண்ணாலத்துக்கு பொறவு தான் அதுக்கெல்லாம் அனுமதி. பாதி கதவ திறந்தே வையுங்க. எப்போ வேணும்னாலும் உள்ளாற வருவோம்” என்றார் யாரோ ஒரு மூதாட்டி கிண்டலாக சிரித்தபடி.

 

“எப்போ வேணும்னாலும் வாங்க, ஆனா வர்றதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு வாங்க. நாங்க சூதனமா இருந்துப்போம்” என்று பதில் கொடுக்க, கூடத்தில் இருந்தவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

 

வளர்மதி அவன் பேச்சை கவனிக்காமல் அவன் நெற்றியை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

“என்னாச்சு மதி?

 

“நெத்தியில லேசா வீங்கின மாதிரி இருக்குங்க. இது பழைய காலத்து வீடு, வாசற்படி உங்க உசரத்துக்கு இருக்காது. கொஞ்சம் தலைய குனிஞ்சு வாங்கனு சொல்றதுக்குள்ளாற வந்துட்டிங்க. வலிக்குதா?”

 

‘உன் கூட இருக்கறப்போ எனக்கு வலிக்குமா? உன் வீட்டு வாசற்படி மேல மோதினது உன் மேல மோதின மாதிரி சுகமா இருந்துச்சுனு சொன்னா நம்புவியா?’ ஆர்யன் கேள்வியாய் பார்க்க

 

“ஏன் பேச மாட்டேங்கறீங்க? ரொம்ப வலிக்குதா? இருங்க நான் போய் ப்ரிஜ்ல இருந்து ஐஸ்கட்டி எடுத்துட்டு வரேன், வீக்கம் குறைஞ்சிடும்?” என்றவள் வெளியே செல்ல எத்தனிக்க சட்டென அவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

 

ஆர்யனின் வலிய கரம் வளர்மதியை அழுத்தமாக பற்றி இருந்ததில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து விழித்தாள்.

 

“சாரி. வலிக்கல ஐஸ் வேணாம்னு சொல்றதுக்குள்ள நீங்க போயிட போறீங்கனு கைய பிடிச்சிட்டேன், சாரி” என்று அவள் கையை விடுவித்தான்.

 

வளர்மதி அமைதியாக நின்றுவிட, “என்ன முடிவு பண்ணியிருக்கீங்க மதி?”

 

“எத பத்தி?”

 

“நம்ம கல்யாணத்தை பத்தி?”

 

வளர்மதி பதில் சொல்லாமல் சங்கடத்துடன் நின்றிருக்க, “உங்களுக்கு இப்பவும் கல்யாணத்துல விருப்பமில்லனா தயங்காம சொல்லுங்க. நான் உங்களுக்கு பிரச்சனை வராம பாத்துக்கறேன்”

 

“எனக்கு விருப்பம் தான்” என்றாள் மெல்லிய குரலில்

 

“நிஜமாவா சொல்றீங்க?” ஆர்யன் நம்பமுடியாமல் கேட்டான். இந்த திருமணத்தை செழியன் எப்படியாவது நடத்துவான் என்று ஆர்யனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அது வளர்மதியின் முழு சம்மத்துடன் நடக்க வேண்டும் என்று விரும்பினான். அவள் வாயால் எனக்கு விருப்பம் தான் என்று சொன்னதும் அவனால் நம்பவே முடியவில்லை.

 

“உங்களை யாராச்சும் கட்டாயப்படுத்தினாங்களா மதி? எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க. உங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசணும்னு சொல்லி உங்க கூட வந்தேன். பயப்படாம உண்மைய சொல்லுங்க”

 

“நான் உண்மைய சொன்னா என்னை தப்பா நினைக்க கூடாது” என்றாள் மெல்லிய குரலில்

 

என்ன சொல்ல போகிறாளோ என்ற கலக்கம் இருந்தாலும், “நீங்க என்ன சொன்னாலும் தப்பா நினைக்க மாட்டேன். தயங்காம சொல்லுங்க” என்றான். அவனுக்குள் இத்தனை நேரம் இருந்த எதிர்பார்ப்பும் துள்ளலும் எங்கோ ஓடி சென்று மறைந்திருந்தது. அதில் முகத்தில் லேசான இறுக்கம் கூடியிருந்தது.

 

வளர்மதி மிடறு விழுங்கியபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

 

“உங்க ஆபிஸ்ல வச்சு நீங்க என்கிட்ட சொன்னது கரெக்ட் தான். நான் உங்களை வேணாம்னு சொன்னாலும் என் வீட்ல வேற மாப்பிள்ளை பாப்பாங்க. அவங்க எப்படிப்பட்டவங்கனு தெரியாது. ஆனா உங்களை செழியன் அண்ணாவுக்கு ரொம்ப புடிக்கும். அவருக்கு ஒருத்தரை பிடிச்சிருக்குனா அவர் கண்டிப்பா நல்லவரா தான் இருப்பாரு. அதனால எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான். உங்களுக்கு நான் தகுதியானவளானு நீங்க யோசிச்சு முடிவெடுங்க” என்றாள்

 

“முழு மனசோட தானே சம்மதம் சொல்றீங்க?”

 

“ம்”

 

“அப்போ என்னை நேரா பாத்து சொல்லலாமே”

 

வளர்மதி நிமிர்ந்து ஆர்யனை பார்த்தாள். நேரடியான ஆர்யனின் லேசர் பார்வை வளர்மதியின் கண்களுக்குள் ஊடுருவி செல்ல பேச்சற்று போனாள். 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top