இணை 13

அன்று ஆர்யன் வளர்மதி திருமண விழா!

 

பெரியகுளம் அடுத்த தேனியில் இருந்த பெரிய திருமண மண்டத்தில் செழியன் தலைமையில் திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 

ஆர்யன் அணிந்திருந்த வெளிர் நீல நிற சட்டைக்கு ஏற்ற நிறத்தில் வளர்மதியும் அதே வண்ணத்தில் லெகாங்கா அணிந்திருந்தாள். ஆங்கோங்கே அடர்நீலத்தில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அதே போன்ற கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்திருந்தாள். மேடையேறி வந்தவளின் அழகை ரசித்தவன் அவள் அருகே வந்து நின்றதும் அவள் முகத்தை யோசனையோடு ஆராய்ந்தான். 

 

“என்னாச்சு? ஏன் பாக்கறீங்க?” கூச்சத்தோடு கேட்டாள். 

 

“ரொம்ப அழகா இருக்க, ஆனா சந்தோசமா இருக்கியானு பாத்தேன்”

 

“சந்தோசமா தான்” அவள் முடிக்கும் முன் இடையிட்டான்.

 

“நான் போன் பண்ணும் போதெல்லாம் என்கிட்ட நீ சரியாவே பேசலயே, ஏன் மதி? உனக்கு இந்த கல்யாணத்துல…”

 

“அச்சோ, தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க போன் பண்ணும் போதெல்லாம் பக்கத்துல யாராவது நின்னுட்டு வம்பிழுத்துட்டே இருப்பாங்க. எனக்கு அவங்க முன்னாடி பேச சங்கடமா இருந்துச்சு”

 

“தனியா வந்து பேசி இருக்கலாம் இல்ல?”

 

ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தயங்கி, “நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் உங்க கூட தானே இருக்க போறேன். எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசுங்களேன், நான் கேக்கறேன்”

 

“பேசறதுக்கு மட்டும் தான் அனுமதியா? மத்ததுக்கு?” 

 

“வேற எதுக்கு?” என்று அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனுடைய லேசர் விழிகளால் அவள் கண்களை சிறையெடுத்தான்.

 

“சொல்லு மதி, பேசறதுக்கு மட்டும் தான் அனுமதியா?”

 

அவன் கேள்வியை விட அவன் பார்வை வீச்சை சந்திப்பது தான் அவளுக்கு பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. அவன் இருபுருவத்தையும் ஏற்றி இறக்கி தன் கேள்விக்கு பதில் கேட்க, வளர்மதியின் கன்னங்கள் அவளின் கட்டுப்பாட்டை மீறி சிவந்து அவனுக்கு மனநிறைவை கொடுத்தது.

 

அதற்குமேல் அவர்களுக்கு பேச நேரமிருக்கவில்லை. நிச்சயதார்த்தம், நலங்கு என மணமக்களை யோசிக்க கூட விடாமல் அடுத்தடுத்த நிகழ்ச்சிக்கு தயாராவதும் பெரியவர்கள் சொல்வதை செய்வதுமாக அனைத்து சடங்குகளும் நடந்தேறியது. 

 

செழியனும் முத்துபாண்டியும் பட்டுவேட்டி சட்டை அணிந்து அண்ணன் தம்பியாக திருமண வேலைகளை எடுத்து செய்வதை பார்த்த ஊர்மக்கள் இருவரையும் பாராட்டி பேச, ராஜரத்னமும் செல்வரத்னமும் முதல் வரிசையில் அமர்ந்து பெருமையுடன் தங்கள் மீசையை முறுக்கி கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

 

மணமக்களை அவரவர் அறைக்கு அனுப்பி விட்டு மற்றவர்கள் திருமண வேலைகளில் மூழ்கி போயினர்.

 

வளர்மதியின் தாத்தா காலத்திலிருந்து அனைவரும் ஒரே ஊரில் இருந்ததால் ஊர்மக்கள், உறவினர்கள் என மண்டபம் நிறைந்து விடும் என்று செழியன் சொன்னது உண்மை தான். ஆங்காங்கே பலர் படுத்து உறங்கி கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தனர். ஆர்யனை கண்டதும், “மாப்ள இந்நேரத்துல வெளியே போக கூடாது, போய் உறங்குங்க. நாளை ராத்திரிக்கு அதுக்கும் நேரமிருக்காது” என்று சொல்லி சிரிக்க, ஆர்யன் மீண்டும் மாடி ஏறி பால்கனிக்கு வந்தான். 

 

அங்கே ஆதிசங்கரனும் நின்றிருக்க “ஆர்யா, உன் அம்மா போனதுக்கு அப்புறம் சொந்த பந்தமெல்லாம் தூரமாயிட்டாங்க. என் மருமகளால நமக்கு மறுபடியும் நிறைய சொந்தங்க கிடைச்சிருக்காங்க. சபை முழுக்க சொந்த பந்தங்களை பார்த்து என் மனசுக்கு நிறைவாக இருந்துச்சு” என்றார்.

 

“ஆமா அப்பா, மதி கழுத்துல தாலி கட்டறதுக்கு முன்னாடியே என்னை அவங்க சொந்தமா நினைச்சு அக்கறையா பேசறதும் கிண்டல் பண்றதும் எனக்கு பிடிச்சிருக்கு.  செழியன் முன்னாடியே சொன்னதால ரிசப்ஷனை சென்னையில வச்சதும் நல்லதா போச்சு. இல்லனா மதியோட சொந்தக்காரங்களையும், நம்ம ஸ்டாஃப்ஸ் பிசினஸ் பார்ட்னர்ஸ்னு தனித்தனியா கவனிக்க முடியாம போயிருக்கும்,” என்றான் ஆர்யன்.

 

“ஆனாலும் யுகி நிஷாவை கல்யாணத்துக்கு அழைச்சிருக்கலாம்டா. காலேஜ்ல இருந்தே அவன் உன் பிரெண்ட், அதுமட்டுமில்லாம அவங்க ரெண்டு பேரும் இந்த ஊருக்கு வந்ததால தானே நீ வளர்மதியை சந்திக்க முடிஞ்சது? வெளியில காட்டிக்கலனாலும் யுகி முகம் என்னவோ போல இருந்துச்சுடா”

 

“அவங்க ரெண்டு பேரும் அங்கே இல்லனா ரிசப்ஷன் வேலையை யாருப்பா கவனிப்பாங்க?” 

 

“அதுவும் சரிதான்” என்று ஒத்துக் கொண்டார் ஆதிசங்கரன்

 

ஆனால் யுகி நிஷாவை திருமணத்திற்கு அழைக்காமல் போனதற்கு வேறு காரணம் இருந்தது. ஆர்யனால் அதை தந்தையிடம் வெளிப்படையாக பேச முடியவில்லை.

 

“மாப்ள, வளரு இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா அவளோட கூட்டிலிருந்து வெளியே வந்துட்டு இருக்கா. நிஷாவையோ, இன்பரசுவோட குடும்பத்தையோ பார்த்தா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவானு தெரியல. அதனால நான் என் அத்தை மாமாவ கூட கல்யாணத்துக்கு அழைக்க கூடாதுனு ஸ்ரிக்ட்டா சொல்லிட்டேன். உங்களோட சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்ட பொறவு, அவ யாரை வேணும்னாலும் சந்திக்க தயாராயிடுவா. நான் சொல்றது சரிதானே?” என்று கேட்டிருந்தான் செழியன்.

 

“புரியுது மச்சான். யுகிநிஷாவுக்கு ரிசப்ஷன் அரேன்ஜ்மென்ட் பொறுப்பை கொடுத்துடறேன். அவங்க அங்கே இருந்தாலும் கூட்டத்துல மதியோட கண்ணுக்கு தெரிய மாட்டாங்க. அவ மனசுல இருக்கற சஞ்சலத்தை போக்கிட்டா போதும் நார்மல் ஆயிடுவா” என்று ஆர்யன் பதிலுரைத்திருந்தான். அதனாலேயே முக்கிய சொந்தங்களை தவிர அலுவல் சார்ந்த யாரையும் அவன் திருமணத்திற்கு அழைத்திருக்கவில்லை.

 

தந்தை மகன் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே யாரோ சண்டையிடுவது போல சலசலப்பு கேட்கவும் இருவரும் எட்டி பார்த்தனர்.

 

செழியனும் பாண்டியும் கோபமாக பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் அவர்களை சமாதானம் செய்வது போல இருந்தது. செழியன் கோபத்தில் அங்கிருந்த வண்டியை எட்டி உதைத்துவிட்டு வேகமாக செல்ல பாண்டியும் அவன் பின்னால் சென்றான். 

 

“என்ன பிரச்சனைனு தெரியலயே, செழியன் ஏன் கோபமா போறாரு?” என்று ஆர்யன் திரும்பி கீழே செல்ல எத்தனிக்க ஆதிசங்கரன் அவனை தடுத்து நிறுத்தினார்.

 

“கல்யாண வீடுனா ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கும். அவங்களா சொல்லாதவரைக்கும் அவங்க விஷயத்துல மூக்கை நுழைக்க கூடாது ஆர்யா” என்று அவர் அறிவுரை கூறவும் அமைதியாகி போனான்.

 

குழப்பத்தோடு அறைக்கு சென்று வளர்மதிக்கு அலைப்பேசியில் அழைத்தான். 

 

“மாமா, அக்காவோட போன் என்கிட்ட இருக்கு. என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றாள் அகல்விழி

 

“சும்மா, ஆல் ஓகேவானு கேக்க தான் போன் பண்ணேன்”

 

“உங்க ஆள் ஓகே தான். நீங்க போய் தூங்குங்க” என்று போனை வைத்தாள்.

 

‘வாண்டுன்னு நினைச்சா, செம வாயாடியா இருக்கா’ என்று மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டு உறங்க சென்றான்.

 

“மாமா போன் பண்ணா ஏன்க்கா எடுக்கவே மாட்டேங்கிறே? நம்பர் வாங்கிட்டு போனதுல இருந்து ஒருமுறை கூட அவர்கிட்ட சரியாவே பேச மாட்டேங்கிற. பாவம் அவரு” அகல்விழி வளர்மதியை முறைத்தாள்.

 

“கல்யாணத்துக்கு பொறவு பேசிட்டு தானே இருக்க போறோம்? எதுக்கு போன்ல பேசிக்கிட்டு”

 

“சரியான பூமர்” என்று திட்டிவிட்டு சென்றாள் அகல்விழி

 

கனிஇதழிக்கு வளர்மதியின் மனநிலை புரிந்தது. இன்று ஒரு நாள் கடந்து விட்டால் போதும். காலை திருமணம் முடிந்ததும் ஆர்யனின் அருகாமையில் வளர்மதி நிச்சயமாக பழைய நினைவுகளில் இருந்து மீண்டு விடுவாள் என்ற நம்பிக்கையுடன் தன் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

காலை ஏழு மணிக்கு மணமகன் ஆர்யன், மணப்பெண் வளர்மதியின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான். அவன் கை அவளை பின்பக்கமாக தன்னருகே வளைக்க, நிமிர்ந்து பார்த்தாள். அவள் நெற்றியில் திலகம் இட்டவன், மென்மையாக அங்கே இதழ் பதிக்க, அதிர்ச்சியும் பதட்டமுமாக அவனை பார்த்தாள்.

 

அவனோ அவள் இதழ்களையும் அவன் கன்னத்தையும் காட்டி முத்தமிடுமாறு சமிக்கை செய்ய, ஆவென்று அவளோடு அங்கிருந்த மற்றவர்களும் அதிர்ந்தார்கள்.

 

“மாப்பிள்ளைக்கு அவசரத்தை பாத்தியா?” என்று கிண்டல் செய்து சிரித்தனர்.

 

ஆர்யனின் விரல்களை பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவது வளர்மதிக்கு விந்தையாக இருந்தது. இனி அவளுக்கு எல்லாமுமாக இருக்க போகிறவன் அவன் தானா? அவள் கேள்வி புரிந்ததோ என்னவோ ஆம் என்பது போல அவளின் உள்ளங்கையை தன் கைகளுக்குள் அழுத்தமாக பற்றிக் கொண்டான். 

 

அன்று இரவே ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவே உடனே அவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. பிறந்த வீட்டையும் ஊரையும் அண்ணன்களையும் பிரிய மனமில்லாமல் அழுது கரையும் மனைவியை தேற்றுவதற்காக ஆர்யன் அவளை அணைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

 

அண்ணன் செழியனிடம் கண்ட அதே கதகதப்பும் பாதுகாப்பு உணர்வும் கணவனின் அணைப்பிலும் தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்.

 

“மதி, நீ அழுவுறது அவங்களுக்கும் கஷ்டமா இருக்காதா? உனக்கு எப்போ இங்கே வரணும்னு தோணுதோ உடனே வரலாம். காலேஜ் ஹாஸ்டல்ல இருக்கும் போது நீ ஊருக்கு வரதும், உன் வீட்டு ஆளுங்க உன்னை பாக்க வரதுமா இருந்தாங்க இல்ல. இனியும் அதே தான் நடக்க போகுது. ஆனா நம்ம வீடு உனக்கு ஹாஸ்டல் இல்ல, சுதந்திரமா இருக்கலாம், உன்னை நானோ அப்பாவோ எந்த கேள்வியும் கேக்க மாட்டோம். இது எல்லாத்தையும் விட உனக்கு சிலம்பம் வேற தெரியும். நான் ஏதாவது எசகுபிசகா நடந்துக்கிட்டா என்னை தூக்கி போட்டு மிதிச்சிட மாட்டே?” என்று அவன் அறிவுரையாக ஆரம்பித்து குறும்புடன் முடிக்க, வளர்மதியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

 

வளர்மதியின் பெற்றோருக்கு ஆர்யனின் பேச்சு மனநிறைவை தந்தது. 

 

சொத்துக்காக கெடுதலை மட்டுமே செய்த தனக்கு நல்ல மருமகளும் மருமகனும் கிடைக்க காரணமாக இருந்த செழியனை பார்த்து செல்வரத்தினம் கை கூப்ப, அவன் சட்டென அவரை தடுத்து மற்ற வேலைகளை கவனிக்க அங்கிருந்து அகன்றான்.

 

மணமக்களை முதலில் காரில் வழி அனுப்பி விட்டு, பெண் வீட்டாரும் சென்னைக்கு கிளம்பினர். ஆர்யனின் தோளோடு வளர்மதியின் தோள் உரசிக் கொண்டு இருக்க, அவளின் உள்ளங்கை இன்னுமே அவன் கரங்களுக்குள் தான் சிறைப்பட்டிருந்தது.

 

ஆர்யனின் விரல்கள் வளர்மதியின் உள்ளங்கையை சுரண்ட, நிமிர்ந்து பார்த்தாள். அவன் எதுவுமே தெரியாதது போல என்ன என்று புருவம் உயர்த்தினான். பதில் சொல்லவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலையில் அவள் அருகில் ஆர்யனின் அத்தை அமர்ந்திருந்தார். முன்புறமும் ஆதிசங்கரன் அமர்ந்திருக்க என்ன பேச முடியும்?

 

ஒன்றுமில்லை என்று தலையாட்டியவள் அமைதியாகவே பயணத்தை மேற்கொள்ள சற்று நேரத்தில் உறங்கியிருந்தாள். அவள் கண்விழிக்கும் போது ஆர்யனின் மார்பில் சாய்ந்திருந்தாள். அவனும் அவள் தலை மீது தாடையை வைத்து அவளை கிட்டத்தட்ட மொத்தமாக அவன் கைவளைவில் வைத்திருந்தான். பதட்டத்தோடு நிமிர்ந்து கண்களை சுழற்றினாள்.

 

டிரைவரை தவிர, அனைவருமே உறங்கி இருந்தார்கள். பக்கத்தில் இருந்த ஆர்யனின் அத்தை ஒரு பக்கம் அவள் மேல் சாய்ந்து நன்றாக உறங்கி கொண்டிருந்தார். 

 

அவளிடம் அசைவை உணர்ந்தவன், “மதி தூங்கு, அப்ப தான் டயர்ட் போகும். ஈவ்னிங் ரிசப்ஷன் இருக்கு இல்ல” என்று அவள் காதில் ரகசியம் போல பேச, அவன் இதழ்களும் மூச்சுக்காற்றும் அவள் காதில் குறுகுறுப்பை கொடுக்க உடல் சிலிர்த்தது. 

 

அதை உணர்ந்தானோ என்னவோ, “இதுக்கே இப்படி சிலிர்த்தா எப்படி மதி?” என்று அவள் காது மடலில் இதழ்கள் உரசும்படி மிக மெல்லிய குரலில் அவன் கிசுகிசுக்க, அவன் கை வளைவிற்குள் இருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்தாள். 

திமிறி எழுந்தால் அத்தையின் தூக்கம் வேறு கெடும். அதை விட ஆளை விழுங்கும் அவன் லேசர் கண்களை சந்திக்க வேண்டுமே! மீண்டும் தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள்.

 

அதன்பிறகு ஆர்யன் அவர்கள் வீடு வரும் வரை எந்த தொந்தரவும் செய்யாமல் இருந்தான். வீட்டை அடைந்ததும் அவளை எழுப்பினான். தூக்க கலக்கத்தில் அவளின் தலைமுடி லேசாக கலைந்திருக்க, அவன் உரிமையுடன் ஒதுக்கி விட்டான். அவள் இதழ்களை ஒற்றை விரலால் அழுத்தி துடைத்தான். அதில் அதிர்ந்தவள் அவசரமாக சுற்றிலும் நோட்டம் விட, அவர்களை தவிர காரில் எவரும் இல்லை என்று உணர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

 

மனைவியின் பதட்டத்தை ரசித்தவன், அவள் முகம் நோக்கி குனிந்து “கார்ல யாருமில்ல, இப்போ தொடலாம் தானே?” என்று அவள் கன்னத்தை புறங்கையால் வருடினான். 

 

முகத்தில் அதிர்ச்சியும், உடலில் சிலிர்ப்பும், கன்னத்தில் சிவப்பும் என ஒரே நேரத்தில் அவளுக்குள் பல பிரதிபலிப்பு!

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
error: Content is protected !!
Scroll to Top