வேங்குழல் 8

செந்தாழினி சந்தேக கண் கொண்டு பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன பாக்குற, கிளம்பு” என்று அதட்டினான் யாதவ்

 

“என்னவோ சரியில்லையே” என்று மெல்லிய குரலில் புலம்பியபடி வெளியேறினாள்.

 

‘அய்யோ இவ என்ன இவ்வளவு ஷார்ப்பா இருக்கா. அதுசரி புத்திசாலியா இருக்கிறதால தான் இங்கே இருக்கா, இவ என்னை கண்டுபிடிக்கறதுக்குள்ள அந்த முரளி எங்க போயிருக்கான்னு நான் கண்டுபிடிக்கணும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு மீண்டும் தன் தேடலை தொடங்கினான். தான் எதை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் தேடி தேடி தலைவலி வந்தது தான் மிச்சம்.

 

சோர்வுடன் நாற்காலியின் சாய்ந்தபடி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். 

 

அப்போது மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். இப்போ தான் ஒருத்தி போனா. இன்னும் இவனுங்களை வேற சமாளிக்கணுமா? எரிச்சலாக இருந்தது யாதவ்விற்கு. 

 

பிரதாப் என்பவன் முந்திக் கொண்டு பேச ஆரம்பித்தான், “முரளி சார்,  நம்ம அதர்வாவும் நந்தனும் நம்ம டீம்ல தானே இருக்காங்க?” என்று இருவரையும் காட்டி கேட்டான்.

 

யாதவ்விற்கு அவன் குறிப்பு காட்டுவது போல இருந்தது, அவன் ஆமாம் என்று தலையசைத்ததும். “எப்போ கிளம்பணும் சீனியர்? வேற எதாவது எக்யூப்மென்ட் தேவைப்படுமா? இதுவரைக்கும் நிலத்தை தோண்டி அகழ்வாராய்ச்சி தான் செய்திருக்கோம். இப்போ கடலுக்குள்ள எப்படி போக போறோம்? சேப்டியா இருக்குமானு கொஞ்சம் டென்ஷனா இருக்கு சீனியர்” என்று அதர்வாவும் நந்தனும் மாறி மாறி தங்கள் சந்தேகத்தை கேட்டுக் கொண்டிருந்தனர்.

 

“எப்பவும் என்னென்ன எக்யூப்மென்ட் எடுத்துப்பீங்களோ, அதையே எடுத்துக்கோங்க. உங்களுக்கு டவுட்டா இருந்தா கடலுக்குள்ள என்ன இருக்குனு ஆராய்ச்சி செய்யறவங்க இருக்காங்க, அவங்களையும் நம்மளோட வரச் சொல்லுவோம் அவங்க நமக்கு கைட் பண்ணுவாங்க” என்று முடித்தான் யாதவ்

 

“ஓகே சீனியர், எப்போ கிளம்பணும்?” நந்தன் கேட்டான்

 

“இரண்டு நாள்ல சொல்றேன்” என்றதும் நந்தனும் அதர்வாவும் வெளியேறினார்கள். பிரதாப் மட்டும் அங்கேயே நின்றான். யாதவ் அவனை யோசனையுடன் பார்த்தான்.

 

அவர்கள் இருவரும் போகும் வரை அமைதி காத்த பிரதாப், இப்போது குரலை தழைத்து பேச தொடங்கினான். “பரவாயில்லை நல்லாவே சமாளிச்சீங்க. நீங்க துவாரகா போகறதுக்கு முன்னாடி நீங்க வந்த விஷயத்தை தெரிஞ்சுட்டு இங்கே இருந்து கிளம்பிடணும்னு நினைக்கறீங்க. ஆம் ஐ கரெக்ட்? ஆனால் அது அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது” என்றான்

 

“என்ன உளறீங்க?” என்றான் யாதவ் தன் அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல்

 

“எனக்கு தெரியும், நீங்க வருவீங்கனு முரளி கிருஷ்ணா சொல்லிட்டு தான் போனார். நீங்க வந்தா இந்த டைரியை உங்க கிட்ட கொடுக்க சொன்னார்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் யாதவ்

 

அவன் நீட்டிய டைரியை கையில் வாங்கி கொண்டே “நீ என்ன சொல்றேனு எனக்கு புரியல. நான் வருவேன்னு முரளி உன்கிட்ட எப்போ சொன்னான்? அவன் எங்கே போறேன்னு சொல்லிட்டு போனானா?” என்றான் யாதவ் அழுத்தமான குரலில்

 

“சார் கொஞ்சம் மெதுவா பேசுங்க,  விஷயம் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும். என் பெயர் பிரதாப். எங்கே போகணும்னு முரளிக்குமே தெரியாது. எதையோ தேடி எங்கேயோ போயிருக்காருனு மட்டும் தெரியும். அதுக்கான க்ளூ இந்த டைரியில் இருக்கலாம். நீங்க வந்ததும் இந்த டைரியை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க, அது மட்டும் தான் என் வேலை 

 

அப்புறம் துவாரகா போறதை தட்டி கழிக்காதீங்க. அங்கேயும் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கலாம் இது என்னோட பர்சனல் ஒப்பீனியன்” என்றான்.

 

“எல்லாம் சரி, எனக்கு தொல்லியல் ஆராய்ச்சியை பத்தி எதுவுமே தெரியாது, நான் போய் என்ன செய்யறது? ஈசியா மாட்டிக்குவேன்” என்றான் யாதவ்

 

“சார் நான் ஒரு ஐடியா சொல்றேன். செந்தாழினிக்கு கல்வெட்டுகளில் இருக்கும் எழுத்துக்களை படிக்க தெரியும். எல்லா பிராஜெக்ட்லயும் வேலை பார்த்திருக்காங்க. அவங்களோட அப்பாவும் இதே துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்னு கேள்விபட்டிருக்கேன். அதனால அவரோட அனுபவ அறிவும் அவங்களுக்கு இருக்கும். நீங்க அவங்களை டீம்ல சேர்த்துக்கிட்டா அவங்களே எல்லாரையும் வேலை வாங்கி ரிப்போர்ட்டையும் ரெடி செய்திடுவாங்க, நீங்க அங்கே கிடைக்கும் விஷயங்களை மட்டும் கவனிங்க” என்றான்.

 

சிறிது நேரம் யோசித்தவன் “சரி ஓகே, நீங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க. நாளைக்கே நாம துவாரகா ஆராய்ச்சிக்கு போகலாம்” என்றான்.

 

சம்மதமாக தலையை ஆட்டிவிட்டு பிரதாப் சென்றதும், அவன் கொடுத்த டைரியை கையில் எடுத்தான். அதன் முகப்பு பக்கத்தில் இருந்த ஓவியத்தை ஆழ்ந்து நோக்கினான். பின்பு பக்கங்களை புரட்டினான்.

 

அதில் ஆங்காங்கே சில பல வரலாற்று குறிப்புகள், மகாபாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவை பற்றி விளக்கமாக எழுதப்பட்டு இருந்தது, அடுத்து அவர் வளர்ந்த இடமான பிருந்தாவனத்தை பற்றியும், கடைசியாக அவர் வாழ்ந்த இடமான துவாரகா பற்றியும் முக்கிய குறிப்புகள் இருந்தது.

 

அவன் ஆராய்ச்சி செய்த விஷயத்தையும், இதிகாசத்தையும் சேர்த்து எழுதி வைத்திருக்கிறான். இதில் என்ன இருக்கிறது? என்று கடுப்புடன் பக்கங்களை திருப்பி பார்த்தவனுக்கு கடைசியாக “Find Murali, முரளியை கண்டுபிடி” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி எழுதப்பட்டு இருந்தது.

 

யாதவனுக்கு கடுப்பாக இருந்தது, “இவனே வான்டடா தொலைஞ்சு போவானாம், இவனே இவனை தேடச் சொல்லிட்டும் போவானாம். இதுல பைன்ட் முரளினு எழுதி வச்சிட்டு போயிருக்கான். கூமுட்டை. வீட்டை விட்டு வந்து அலங்காநல்லூர்ல ஓட்டு வீட்டுல இருந்தாலும் நிம்மதியா இருந்தேன். அது பொறுக்கலையே இவனுக்கு?

 

எங்கு பார்த்தாலும் “முரளியை கண்டுபிடி” என்று கிறுக்கி இருந்ததை பார்த்து எரிச்சலடைந்தான் யாதவ் கிருஷ்ணா.

 

யாதவ் கிருஷ்ணா முரளியை கண்டுபிடித்து விடுவானா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

*******

 

ருக்மணி ஆற்றின் அழகை ரசித்தபடி துவாரகையின் கடற்கரையை அடைந்தார்கள், யாதவ் கிருஷ்ணா மற்றும் அவன் குழுவினர்

 

செந்தாழினி மன நெகிழ்ச்சியுடன் அங்கேயிருந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தாள். “செந்தாழினி, எல்லாரையும் கோஆர்னினேட் பண்ணிக்கோங்க, எதாவது டவுட்னா என்னை கேளுங்க” என்றான் யாதவ் கெத்தாக.

 

எல்லாவற்றிலும் தான் மட்டுமே முன்னிலை வகிக்க வேண்டும் என்று நினைப்பவன் இன்று அவளை பார்த்துக் கொள்ள சொல்கிறானே என்று அவள் சந்தேகத்தோடு அவனை பார்த்தாலும் கிடைத்த வாய்ப்பை அவள் நழுவ விட விரும்பவில்லை.

 

அங்கிருந்த எல்லாருக்கும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக் கொடுத்தாள். கடலுக்குள் செல்பவர்களிடம் எதாவது சேம்பிள் எடுத்துவரச் சொன்னாள்.

 

ஆக்சிஜன் உபகரணங்களை மாட்டிக் கொண்டு யாதவ் கிருஷ்ணாவும் கடலுக்கு அடியில் சென்றான். அங்கே ஒரு உலகமே இருப்பதாக தோன்றியது. கொடிமரம் போன்ற ஸ்தூபிகளும் பழுதடைந்த கட்டிடங்களும் இருந்தன. கடல் மட்டம் ஏறியதாலோ இல்லை சுனாமி போன்றதொரு பேரழிவாலோ ஒரு நகரமே கடலுக்குள் மூழ்கி இருக்கிறது என்றால், கிருஷ்ணர் வாழ்ந்திருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மைதானே? அவன் அந்த இடத்தில் இருப்பதை நினைக்கும் போதே யாதவ் கிருஷ்ணாவிற்கு உடல் சிலிர்த்தது. 

 

அவனும் தன்னால் முடிந்த சில கற்களையும், உலோகம் போன்ற பொருட்களையும் எடுத்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தான். கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் ஆராய்ச்சி கூடத்தில் இருந்த ஒரு நீண்ட மேஜையில் கடைபரப்ப பட்டன. 

 

அந்த மேஜையை சுற்றி யாதவ், செந்தாழினி, அதர்வா, பிரதாப் மற்றும் நந்தன் என் ஐவரும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியர், சில முக்கியஸ்தர்கள், மற்றும் மீடியாகாரர்களும் நின்றிருந்தார்கள்.

 

யாதவ் தன்னையும் அறியாமல் அங்கிருந்த தட்டையான உலோகங்களை எடுத்து அதை துடைத்தான், அதில் மங்கலாக தெரிந்த உருவத்தை பார்த்து, “இதில் பலராமன் உருவம் இருக்கிறது, இதில் கிருஷ்ணர் உருவம் இருக்கு. அப்படினா அவங்களோட உருவம் பதித்த காசுகளை மக்கள் அந்த காலத்தில் பயன்படுத்தி இருக்காங்க” என்றான்

 

“முரளி, என்ன இது புது பழக்கம்? கிடைச்ச பொருட்களை எக்ஸாமின் பண்ணாம எப்படி முடிவ சொல்றீங்க? வேறே யாருச்சும் கூட அதை கடல்ல போட்டு இருக்கலாம். முதல்ல கார்பன் டைமிங் வச்சு கண்டுபிடிங்க, எல்லா ஆராய்ச்சியும் முடிச்சுட்டு கடைசியா தானே ரிப்போர்ட் கொடுக்கணும். எங்களுக்கு பாடம் எடுக்கற நீங்களே சட்டுனு இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் தர்றீங்களே, மீடியாகாரங்க நியூஸ்ல போட்டுட்டால் என்ன பண்றது” என்றாள் செந்தாழினி படப்படப்புடன்

 

“எனக்கு நல்லா தெரியும், இது துவாரகை மக்கள் பயன்படுத்திய நாணயம் தான். நீ வேணும்னா கார்பன் டேட்டிங் செஞ்சு பாரு” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு செந்தாழினியை முறைத்தான்.

 

அவள் அவனை கண்டு கொள்ளாமல், மற்றவர்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தாள். அதற்கு மேல் யாதவ்விற்கு அங்கே நிற்க பிடிக்காமல் வெளியே வந்து விட்டான்.

 

******

 

அன்று மாலை அலுவலகத்தின் வெளி வராந்தாவில் இருந்த மரத்தின் மீது சாய்ந்தபடி யோசனையிலிருந்தான் யாதவ் கிருஷ்ணா.

 

“முரளி சார்” என்ற குரலை கேட்டு திரும்பினான். நந்தன், அவனோடு அதர்வாவும் செந்தாழினியும் நின்றிருந்தார்கள்.

 

செந்தாழினி, பாவாடை தாவணி உடுத்தி இருந்தாள். மேல் சட்டையும், பாவாடையும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது, அதில் ஆங்காங்கே தங்க நிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றாற் போல தங்க நிறத்தில் இருந்த அவளுடைய தாவணி, அவளை தங்க தாரகையாக காட்டியது.

 

அவளை கோபமாக பார்த்தபடி “என்ன?” என்றான் நந்தனிடம்

 

“நீங்க சொன்னது கரெக்ட் தான். அந்த உலோகத்தை கார்பன் டேட்டிங் செஞ்சதுல அது பல்லாயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி யூஸ் பண்ணதுனு தெரிஞ்சது. அதை க்ளீன் பண்ணி பாத்ததுல பலராமன் மற்றும் கிருஷ்ணரோட உருவமும் இருந்துச்சு. உங்க எக்ஸ்பிரியன்ஸ் வச்சே பாத்ததும் சொல்லீட்டிங்களே, யு ஆர் ரியலி கிரேட் சீனியர். நாங்க எல்லாம் துவாரகதீஷ் கோயிலுக்கு போக போறாேம், நீங்களும் எங்க கூட வர்றீங்களா?” என்று கேட்டான் நந்தன்

 

ஒரு முறை செந்தாழினியை ஏற இறங்க பார்த்து விட்டு அவளை முறைத்துக் கொண்டே “இல்ல நீங்க போயிட்டு வாங்க, நான் வரல” என்றான்.

 

அவளும் யாதவ்வை உற்று பார்த்துவிட்டு அவர்களிடம், “வாங்க நாம மட்டும் போகலாம்” என்றாள். 

 

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் அந்த ஆராய்ச்சி கூடத்திலேயே இருந்தான். அங்கிருந்த வரலாற்று புத்தகத்தை எடுத்து துவாரகையின் வரலாற்றை பற்றி படிக்க தொடங்கினான். அதில் அரபிக்கடலில் அமைந்துள்ள துவாரகையின் கடற்கரையில் அடிவானத்திற்கு கீழே சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருட்ட தொடங்கவே, சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம்  என்று தோன்ற அறையை விட்டு வெளியே வந்தவன் கடற்கரை மணலில் சற்று நேரம் அமர்ந்தபடி அந்த இடத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தான். 

 

அதற்குபின்பு கடற்கரை மணலில் காலாற நடக்க தொடங்கினான். அப்போது தூரத்தில் ஒரு பெண் கடல் நீரில் தத்தளிப்பது போல தெரிந்தது. ஒரு வேளை விளையாடிக் கொண்டு இருக்கிறாளா? என்று கூர்ந்து நோக்கினான், பார்த்தால் அப்படி தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி கொண்டிருந்தாள்.

 

சற்றும் யோசிக்காமல் அவளை நோக்கி ஓடினான். அவன் அவளை தூக்க முயன்றான், ஆனால் அவள் அவனை மேலும் நீருக்குள் இழுத்தாள். “ஹலோ நான் உன்னை காப்பாத்த வந்தா நீ என்னையும் சேர்த்து பரலோகம் கூட்டிட்டு போயிடுவ போலருக்கே” என்றபடி அவளை பலம் கொண்டு இழுத்து தன் ஒற்றைக்கையால் அவள் இடையைப் பற்றி தன்னோடு சேர்த்து அணைத்தபடி தூக்கினான். தொங்கி கொண்டிருந்த அவள் தலையை மற்றொரு கையால் நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தவன் அதிர்ந்தான்.

 

அவள் வேறு யாருமில்லை செந்தாழினி தான்! 

 

“ஏய் உனக்கு நல்லா நீச்சல் தெரியும் தானே? நீ எப்படி?” என்று அவன் கேட்டு கொண்டு இருக்கும் போதே, கண்களை மூடிக்கொண்டிருந்தவள் பட்டென்று கண்களை திறந்து தன் கைகளால் அவனை முகத்தை அழுந்த தேய்க்க தொடங்கி விட்டாள்.

 

“ஏய் என்னடி பண்றே, விடு என்னை” என்று அவன் முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பி அவள் கைகள் அவன் முகத்தில் படாதவாறு எக்கினான்.  

 

அவளோ அவனை விடாமல் எட்டி அவன் தாடையை பற்றி முகம் மற்றும் கழுத்து பகுதி என எல்லா இடத்திலும் உள்ளங்கையால் தேய்க்க முயற்சி செய்தாள். ஒரு பக்கம் தன் குட்டு வெளிப்பட்டு விடும் என்று அவன் உள் மனம் எச்சரித்தாலும், அவளின் ஈரமான தேகம் முழுவதும் அவனை மொத்தமாக உரசிக் கொண்டதில் பக்கென்று தீப்பிடித்தாற் போன்ற உணர்வு தோன்ற அவள் இடையை பிடித்திருந்த கையை சட்டென்று விலக்கினான்.

 

அதில் அப்படியே அவள் கடல் நீரில் தொபக்கென்று விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் கரையை நோக்கி அவசரமாக நடக்க தொடங்கினான். “ஹலோ நில்லுங்க” என்று கத்தினாள் செந்தாழினி.

 

யாதவ் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென்று நடக்க தொடங்கினான்.

 

“நீங்க முரளி இல்லனு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு. நீங்க யாருனு என்கிட்ட சொல்லலனா அரசாங்கத்துக்கிட்டயே ஆள்மாறாட்டம் செஞ்சதா புகார் செய்ய வேண்டியிருக்கும், ஒழுங்கா நீங்க போட்டிருக்கிற முகமூடிய கழட்டுங்க” என்றாள் பிசிரற்ற குரலில்

 

இப்போது திரும்பி செந்தாழினியை பார்த்து முறைத்தவன் அவள் எதிரே வந்து நின்றான்.

 

“என்ன உளர்ற? நான் தான் முரளி” என்றான்.

 

“அப்படியா? அங்கங்கே திட்டு திட்டா கரைஞ்சு போன மேக்கப்பை மொத்தமா கழுவிட்டு வாங்க, அப்போ நம்பறேன்” என்றாள் நக்கலாக.

 

அவரசமாக தன் முகத்தில் கை வைத்து பார்த்தான் யாதவ். செந்தாழினி கலகலவென்று சிரித்தாள். 

“உங்களோட இந்த செயலே நீங்க முரளிகிருஷ்ணா இல்லனு சொல்லாம சொல்லுது, என்ன தான் வாட்டர் ப்ருப் மேக்கப்னாலும் கடல் தண்ணி முகத்துல பட்டதுலயும் என் கைவண்ணத்துலயும் பல்லை இளிச்சுட்டு உங்க உண்மையான நிறத்தை காட்டுது, உங்க உண்மையான முகத்தை எனக்கு காட்டுங்க, எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கீங்கனு மறைக்காமல் சொல்லுங்க, நியாயமானதா இருந்தா கட்டாயம் நான் உங்களுக்கு உதவி செய்யறேன்” 

 

“செந்தாழினி, நான் எந்த கெட்ட எண்ணத்தோடும் வரல, முரளியை தேடி தான் வந்தேன்” என்றான் இப்போது யாதவ் கிருஷ்ணா தணிந்த குரலில்

 

“எந்த கெட்ட எண்ணத்தோடயும் வரலைனு சொல்றீங்க, ஆனா முரளியை தேடி வந்ததா சொல்றீங்க? இது கெட்ட எண்ணம் இல்லயா?” என்றாள் செந்தாழினி அழுத்தமான குரலில்

 

“இதுல என்ன கெட்ட எண்ணம் இருக்கு? நான் முரளி கிருஷ்ணாவை தேடி வந்தேன், அவனை ஆறுமாசமா காணலைனு” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சத்தமாக சிரித்தாள் செந்தாழினி.

 

“எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிறே?” என்றான் எரிச்சலாக

 

“முரளி கிருஷ்ணா என்ன சின்ன பாப்பாவா தொலைஞ்சு போக? அவனால யாரும் தொலையாம இருந்தாலே போதாதா? அவனை தேடி நீங்க வந்தீங்களா? நம்பற மாதிரி இல்லையே? முரளியை தேடி வந்ததா தானே முதல்ல சொன்னீங்க? இப்போ முரளி கிருஷ்ணானு அப்படியே ப்ளேட்டை மாத்தறீங்களா?” என்றாள் கோபமாக

 

இவ என்ன லூசா? என்பதை போல பார்த்தான் யாதவ்.

 

“உனக்கென்ன பைத்தியமா? முரளியை தேடி வந்தா என்ன? முரளி கிருஷ்ணாவை தேடி வந்தா என்ன? இரண்டும் ஒண்ணு தானே?” என்றான் எரிச்சலாக

 

“அதெப்படி ஒண்ணாக முடியும்? நானும் மூணு வருஷமா பார்த்துட்டு தான் இருக்கேன். அந்த முரளி கிருஷ்ணாவும் முரளியை தானே தேடிட்டு இருந்தான். அவனால தேட முடியலைனு இப்போ உன்னை தேட அனுப்பிட்டானா?” என்றாள் நக்கலாக

 

“என்ன உளர்ற?” முரளியே எப்படி முரளியை தேட முடியும்? நீ உண்மையாவே பைத்தியம் தான்” என்று சொல்லிவிட்டு தன் பாதையில் நடக்க எத்தனித்தான் யாதவ் கிருஷ்ணா

 

“முரளிங்கறது உங்க பாஸ் முரளி கிருஷ்ணா இல்ல” என்றவளின் குரலை கேட்டு திரும்பினான்.

 

“முரளியை தேடி போனா திரும்பி வரவே முடியாதுனு தான் உன் பாஸ் இப்போ உன்னை அனுப்பி இருக்கான். அதை பத்தி தெரிஞ்சு தான் நீயும் வந்திருக்கனு எனக்கு தெரியும். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். கெட்ட எண்ணத்தோட வர்றவங்களால முரளியை நெருங்கவே முடியாது, அப்படி நெருங்க நினைக்கிறவங்களுக்கு சாவு நிச்சயம். உயிரோட இருக்கணும்னா ஊர் போய் சேரு. அவங்க கொடுத்த பணத்துக்காக வீணா உயிரை விடாதே” என்றாள் செந்தாழினி.

 

அவள் பேச்சு யாதவ் கிருஷ்ணாவின் பொறுமையை இழக்க செய்தது

 

“ஏய் நீயென்ன லூசா? ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க? நான் ஒண்ணும் பணத்துக்காக இங்கே வரல. உண்மையாவே முரளி கிருஷ்ணாவை தான் தேடி வந்தேன்” என்றான்.

 

அவள் நக்கலாக சிரிக்கவும், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவள் தாவணியின் முந்தாணை பிடித்து இழுத்தான். “ஏய் என்ன பண்றே” என்றாள் பதட்டமாக

 

அவன் பதில் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டே அவளின் முந்தாணையை எடுத்து அவன் முகத்தை அழுந்த துடைத்தான். முரளி கிருஷ்ணா இப்போது கார்மேக வண்ணத்துக்கு மாறியது போல தோன்றியது அவளுக்கு.

 

செந்தாழினி குழப்பத்துடன் அவனை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்க, அவன் அவள் கைகளை எடுத்து அவன் கன்னத்தில் வைத்து, “எப்படி வேணா தேய்ச்சு பாரு, இது தான் என்னுடைய உண்மையான முகம்” என்றான். செந்தாழினி மறுக்காமல் அவன் முகத்தில் இருந்து எதாவது மெலிதான முகமூடி கழட்ட முடிகிறதா என்று முயற்சி செய்தாள். ஆனால் உண்மையாக முகம் போல தான் தோன்றியது.

 

“நீங்க யாரு? முரளி கிருஷ்ணா மாதிரியே இருக்கீங்களே. எனக்கு நல்லா தெரியும் நீங்க அவன் இல்லை. நீங்க வந்த முதல் நாளே உங்க காலை வச்சு நான் கண்டு பிடிச்சுட்டேன், உங்களோட முகத்திரையை கிழிக்கணும்னு தான் கடல்ல விழுந்து தத்தளிக்கிறது போல நடிச்சேன்” என்றாள்.

 

“கையும் களவுமா மாட்டிக்கிட்ட பிறகு சொல்லி தானே ஆகணும் சொல்றேன். ஆனா இந்த விஷயத்தை நீ யார்கிட்டயும் சொல்ல கூடாது. அதுக்கான உறுதி கொடுத்தா நான் சொல்றேன்” என்றான் யாதவ் கிருஷ்ணா

 

“உங்க பக்கம் நியாயம் இருந்தா கட்டாயம் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், உங்களுக்கு உதவியாகவும் இருப்பேன். என்னை நீங்க நம்பலாம்” 

 

“முரளி கிருஷ்ணா என்னோட அண்ணன்முறை எங்க இரண்டு பேருக்கும் அப்பா ஒருத்தர், அம்மா வேறே வேற” என்று ஆரம்பித்தவன் தங்கள் வாழ்க்கையில் நடந்த கதையை அவனுக்கு தெரிந்த வகையில் சொல்லி முடித்து அவளை நேராக பார்த்தான்.

 

செந்தாழினியின் பார்வையில் புதிதாக தெரிந்தான் யாதவ் கிருஷ்ணா! ஆண்மையின் நிறம் கருப்பா என்ன? கடல் நீரில் தொப்பலாக நனைந்திருந்த யாதவ் கிருஷ்ணாவின் ஆளுமையான தோற்றமும் நிறமும் அவளை ஈர்த்தது. தனியாக உடற்பயிற்சியெல்லாம் செய்யாமலே இயல்பாகவே கிராமத்தில் முரட்டு காளையை அடக்கியாண்டு கொண்டிருந்த காளையனின் உடற்கட்டும், அவன் நேர் கொண்ட பார்வையும் அவளுக்குள் புதிதாக இராசாயன மாற்றங்களை உண்டு பண்ணியது.

 

அவளின் உள்ள கிளர்ச்சியை புரியாதவன் அவளை கூர்ந்து நோக்கியபடி, “ஆமா முரளிகிருஷ்ணா முரளியை தேடிட்டு இருந்ததா சொல்றீயே, அவனும் டைரி முழுசா ஸ்ரீராம ஜெயம் எழுதறமாதிரி முரளியை கண்டுபிடினு எழுது வச்சிருக்கான். யார் அந்த இன்னொரு முரளி?” என்றான் யாதவ் கிருஷ்ணா

 

 

யாரந்த முரளி? கண்டுபிடி! கண்டுபிடி! முரளியை கண்டுபிடி!

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top