வேங்குழல் 7

ஜாம்நகர் விமான நிலையம், குஜராத்தில் தரை இறங்கினான் யாதவ் கிருஷ்ணா. சிலுசிலுவென்று காற்று அவன் முகத்தில் வீசியது, அதை ரசித்தபடியே பிரபல அழகு நிலையத்தை தேடிச் சென்றான். அங்கே இருந்த ஒருவனை அழைத்து தனியாக பேசினான்.

 

சில மணி நேரத்திற்கு பிறகு, கருமை நிற கண்ணன் இப்போது தன் அண்ணன் பலராமன் உருவத்தில் வந்தது போல இருந்தது யாதவ் கிருஷ்ணாவின் தோற்றம்! தன் சிவந்த முகத்தை பார்க்க யாரோ போல இருந்தது அவனுக்கு. வாட்டர் ப்ரூப் அழகு சாதனங்களின் உதவியால் தன் நிறத்தை மாற்றி இருந்தான்.

 

முரளியின் போனை எடுத்து அதில் இருந்த தொல்லியல் ஆய்வத்தின் தலைமை அதிகாரி யஷ்வந்த் சிங்கின் அலுவலக எண்ணிற்கு போன் செய்தான்.

 

“ஹலோ முரளி கிருஷ்ணா, ஹவ் மெனி டைம்ஸ் ஐ கால்ட் யூ. வை யு டிட்ன்ட் டேக் மை கால்ஸ்?” என்று பொரிய தொடங்கிவிட்டார். (How many times I called you, why didn’t you take my calls?”

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யாதவ் சற்று நேரம் அமைதி காக்க அவரே மீண்டும் பேசினார் (புரிதலுக்காக தமிழில்) “சாரி சாரி முரளி. நீங்க போனை எடுக்காததால ஓவர் பிரஷர்ல கத்திட்டேன். இங்கே கவர்மென்ட் அபிசியல்ஸ், ஐஏஎஸ் ஆபிசர் எல்லாம் ஆராய்ச்சி தொடங்கிட்டிங்களானு கேட்டுட்டே இருக்காங்க. நீங்க தானே பிரதமர் கிட்ட நிதி ஒதுக்கணும்னு கேட்டீங்க. அவங்களும் நீங்க கேட்டதை செய்து கொடுத்திட்டாங்க. நீங்க தான் டீமை லீட் பண்ண போறதா சொல்லிட்டேன். ஆனா நீங்க ஆளையே காணோம். அதான் உங்க கிட்ட கொஞ்சம் டென்ஷனா பேசிட்டேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” என்று அவர் மேலும் அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே போக யாதவ்க்கு என்னவோ போல ஆகி விட்டது.

 

அவருடைய சூழ்நிலையில் இருந்து பார்த்தால் அவர் கோபப்பட்டது சரி தானே, எதற்கு இப்படி மன்னிப்பு கேட்கிறார் என்று நினைத்தவன், “இட்ஸ் ஓகே” என்றான்.

 

அந்த பக்கத்தில் இருந்து காட்டுக் கத்தலை எதிர்பார்த்து இருந்த யஷ்வந்த் சிங் எதிர்முனையில் கேட்ட ஒற்றை வார்த்தையில் ஆச்சரியப்பட்டடார். “மிஸ்டர் முரளி கிருஷ்ணா தேங்க்ஸ் பார் யுவர் அன்டர்ஸ்டான்டிங். நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?”

 

“ஜாம்நகர் ஏர்போர்ட்ல”

 

“ஓகே நீங்க அங்கேயே வெயிட் பண்ணுங்க, நான் காரை அனுப்பறேன்”

 

“ஓகே”

 

அரைமணி நேரத்தில் கார் வந்துவிட 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் துவாரகாவை நோக்கி பயணம் செய்தான் யாதவ் கிருஷ்ணா.

 

யாதவ் ஆபிசிற்குள் நுழைந்ததும் அங்கே இருந்தவர்கள் எல்லாம் பரபரப்புடன் இயங்குவதை கவனித்தான். அங்கிருந்தவர்கள் அவனுக்கு வணக்கம் வைக்க அவர்களுக்கு பதில் வணக்கம் வைத்தவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். ஏனெனில் முரளி கிருஷ்ணா யாரையும் மதித்து பதில் வணக்கம் வைக்கவும் மாட்டான், அவர்களை கண்டு கொள்ளவே மாட்டான். ஆனால் யாராவது வணக்கம் சொல்லவில்லை என்றால் உண்டு இல்லை என்று செய்து விடுவான்.

 

யாதவ் எல்லாரையும் கவனிப்பது போல பார்வையை சுழற்றி முரளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை தேடினான். அந்த இடத்தை சுற்றி அலைபாய்ந்த அவன் பார்வை ஒரு இடத்தில் அப்படியே நின்று விட்டது.

 

அங்கே சிவப்பு நிற சல்வார் கமிசில் நின்றிருந்தவளின் மேலிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான்.   ஊட்டி ஆப்பிள் போன்ற சிவந்த மிருதுவான கன்னங்கள், அதற்கு மேல் படபடக்கும் சிப்பி இமைகள், அதற்குள் சிறைப்பட்டு இருந்த கருந்திராட்சை போன்ற கருவிழிகள். வெட்டி வைக்கப்பட்ட ஆப்பிள் போன்ற மூக்கு, செர்ரி பழம் போன்ற செவ்விதழ்கள், சங்கு கழுத்துக்கு கீழ் மெல்லிய கொடியிடை தாங்குமா என்ற சந்தேகிக்கும் வகையில் முலாம்பழங்கள் என ஒரு பழத்தோட்டமாக நின்றிருந்தவளை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போது

 

செந்தாழினியும் தன் கருவிழிகளால் யாதவனை தான் அளவெடுத்துக் கொண்டு இருந்தாள்.

 

இதுவரை தனக்கு தெரிந்த முரளியிடமும், இப்போது தன் கண்முன்னே நிற்பவனிடமும் காணப்படும் ஆறு வித்தியாசங்களை தான் அவதானித்து கொண்டிருந்தாள்.

 

முரளி எப்போதும் சட்டையில் இரண்டு பட்டன்களை போடவே மாட்டான். இப்போது கழுத்துவரை மூடி இருக்கிறான். எப்போதும் அவன் பார்வையில் காணப்படும் இருக்கும் அலட்சியம், திமிர் இப்போது இல்லை. முக்கியமாக அனைவருக்கும் பதில் வணக்கம் சொல்லி இருக்கிறான். என்ன தான் எல்லாரையும் கவனிப்பது போன்ற தோற்றத்தில் அவன் நின்றிருந்தாலும் அவன் பார்வையில் ஒரு தேடல் தெரிகிறது. அப்படி என்ன தேடுகிறான் என்று தான் தெரியவில்லை. இன்னும் அவனிடம் காணப்பட்ட மற்ற வித்தியாசங்களை தேடிக் கொண்டிருந்தாள்.

 

பொதுவாக முரளியை ஏறெடுத்தும் பார்க்காத தான் இப்போது ஏன் அவனை பார்க்கிறோம்? இதுவும் ஒரு வித்தியாசம் தான் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை!

 

யாதவ் கிருஷ்ணாவும் செந்தாழினியை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு புரிந்தது, முரளியின் போனில் இருந்த புகைப்படத்தில் இருப்பவள் இவள் தான். போட்டோவில் பார்க்கும் போதே இந்த பெண் ரொம்ப அழகா இருந்தாள். நேரில் அதை விட அழகா இருக்கிறாளே? இவளை டிசைன் பண்ண பிரம்மன் கண்டிப்பா ஓவர் டியூட்டி பார்த்திருப்பார், அந்தளவுக்கு ஒவ்வொன்றும் செதுக்கி வைத்த சிலைப் போல இருந்தது.

 

இவ இங்கே என்ன செய்யறா? இவளும் இங்கே தான் வேலை செய்றாளா? முரளி அவனோட போன்ல இவளோட போட்டோவ எதுக்கு வச்சிருப்பான்? தன்னோட ஆபிஸ்ல வேலை செய்யறவ என்பதாலா இல்லை இரண்டு பேரும் விரும்பறாங்களா? என்று யோசிக்கும் போதே ஏதோ தனக்கு சொந்தமான பொருள் தன்னை விட்டு போவதை போல மனதில் ஒரு வலி தோன்றியது.

 

தலையை உலுக்கி கொண்டான். ‘பார்த்த ஐந்து நிமிஷத்துல இப்படி ஜர்க் ஆன எப்படி யாதவா? நம்ம மதுரையில் இல்லாத பெண்களா? அது மட்டுமில்லாம இவ அந்த முரளியோட டாவா இருந்தா வேற வினையே வேண்டாம். நல்லபிள்ளையா நடந்துக்கோ’ என்று தனக்கு தானே பேசிக்கொண்டவன் ஒரு வழியாக தனக்கான அறையை கண்டுபிடித்து விட்டான்.

 

அமைதியாக அறைக்குள் நுழைந்தவனின் முதுகை செந்தாழினியின் பார்வை வெறித்து கொண்டு இருந்தது.

 

அறைக்குள் நுழைந்தவன் முரளிகிருஷ்ணாவின் மேஜையில் இருந்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தான். அங்கே அவன் வேலைக்கான குறிப்புகள் அடங்கிய ஒரு டைரி இருந்தது. முரளி எதாவது குறிப்பு எழுதி வைத்திருக்கிறானா என்று அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே யஷ்வந்த் உள்ளே வந்தார்.

 

“ஹாய் முரளி, எப்படி இருக்கீங்க? என்னாச்சு ஏன் ஆறுமாசமா ஆபிசுக்கே வரல? வேறே எதாவது தமிழ்நாட்டுல ஆராய்ச்சி செய்ய போய்டீங்களா?”

 

‘முரளி ஆறு மாசமா ஆபிசுக்கும் வரலையா? அப்போ எங்கே போயிருப்பான்’ என்று யோசனையில் ஆழ்ந்தவனை யஷ்வந்தின் குரல் கலைத்தது.

 

“சும்மா சொல்ல கூடாது முரளி, உங்க உடம்பை ரொம்ப நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க. கடைசியா நீங்க பத்மஸ்ரீ அவார்ட் வாங்கினப்போ பார்த்தேன். ஆனா அன்னைக்கு விட இப்போ இன்னும் யங்கா தெரியறீங்க. அந்த சீக்ரெட்டை எனக்கும் சொல்லலாம் இல்ல?” என்றார் சிரித்துக் கொண்டே

 

யாதவனிடம் மென் புன்னகையே பதிலாக பெற்றவர், “உண்மையை சொல்லுங்க, இந்த ஆறு மாசமா எங்காவது இமயமலைக்கு போய்ட்டு வந்தீங்களா? ஆபிஸ் வந்தாலே எல்லாரையும் நடுங்க வைப்பீங்க, இன்னைக்கு என்ன அமைதியா ஜென் மோட்ல இருக்கீங்க? எனக்கு தெரியும் செந்தாழினியோட கவனத்தை உங்க பக்கம் திருப்பறதுக்கு தானே, இப்படி நடந்துக்கறீங்க?” என்று கண்சிமிட்டினார் யஷ்வந்த்

 

யாதவ் புருவம் சுருக்கி அவரை கேள்வியாக பார்த்தான்.

 

“ஹலோ எனக்கு எல்லாம் தெரியும். உங்க பார்வை அடிக்கடி அந்த பொண்ணு மேல படியறதும், அவ உங்களை கண்டுக்காததால அந்த காண்டுல எல்லார் மேலயும் நீங்க காயறதும், எனக்கு தெரியாதுனு நினைச்சீங்களா?

 

உங்க ஆக்ரோஷத்தை விட்டு, இப்ப இருக்கிற மாதிரி ஆரம்பத்துலயே இருந்திருந்தீங்கனா, அந்த பொண்ணு அப்பவே உங்களை விரும்பி இருப்பா. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஈகோ பாஸ். இன்னைக்கு செந்தாழினியும் நீங்களும் பத்து நிமிஷமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தீங்க. எனக்கென்னவோ உங்க விருப்பம் சீக்கிரம் நிறைவேறிடும்னு தோணுது” என்று அவர் சொல்லவும் புரை ஏறியது யாதவ் கிருஷ்ணாவிற்கு.

 

‘இது என்னடா வம்பா போச்சு, அந்த முரளி அந்த பொண்ணை விரும்பி இருக்கான், அவன் நினைச்சு இப்போ அவ என்கிட்ட நெருங்கினா என்ன பண்றது? யாதவ் 9 வயது சிறுவனாக இருக்கும் போது, முரளிக்கு 18 வயது. அந்த ஒன்பது ஆண்டுகள் பழைய உடையை யாதவன் போட்டதற்கே, அன்று அவன் நடந்துக் கொண்டதை இன்றும் அவனால் மறக்க முடியவில்லை

 

முரளி கோபத்தோடு சொன்ன வார்த்தைகள் இப்போது சொன்னது போல காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது, “என் துணியை போடறதுக்கு கூட ஒரு தராதரம் வேணும். இவன் எப்படி என் டிரஸ்ஸை போடலாம்?” என்று கேட்டு தன் தந்தையிடம் ஆர்பாட்டம் செய்தான். அத்தோடு நிற்காமல் எல்லார் முன்பும் யாதவனை மிரட்டி அவன் போட்டிருந்த ஆடையை கழட்டும் வரை அவன் விடவில்லை.

 

சிறுவனாக இருந்த யாதவனால் வலிமையான இளைஞனாக இருந்த தன் அண்ணனை திருப்பி அடிக்க கூட முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவன் அணிந்திருந்த உடைகளை கழட்டி போட, அதை நெருப்பில் போட்டு சாம்பலாக்கிய பின்பும் தான் ஓய்ந்தான் முரளி கிருஷ்ணா. அதைப்பார்த்தும் அவன் தந்தை வெற்றிவேந்தன் கையை பிசைந்து கொண்டு தான் இருந்தாரே தவிர மூத்த மகனை ஒரு வார்த்தை கேட்கவில்லை. அந்த சின்ன வயதில் ஏற்பட்ட அவமானத்தை யாதவனால் இன்று வரை மறக்க முடியவில்லை.

 

முரளியால் இனி அணிந்துக் கொள்ள முடியாமல் வேண்டாம் என்று தூக்கி போட்ட உடையை உடுத்தியதற்கே அரக்கன் போல நடந்துக் கொண்டான். இன்று அவன் விரும்பிய பெண்ணை… யாதவனால் அதற்கு மேல் யோசிக்க கூட முடியவில்லை. முரளி யாரையும் திருமணம் செய்து கொண்டு வாழும் ரகம் இல்லை என்றாலும், ஏதோ ஒரு வகையில் அவனுக்கு இவளை பிடித்திருக்கும் போலயே, இனி அந்த பெண் இருக்கும் திசைப்பக்கம் திரும்பவே கூடாது என்று நினைத்துக் கொண்டான்.

 

யஷ்வந்த் சிங் இன்னும் பேசிக் கொண்டே இருந்தார். “முரளி, துவாரகா பத்தின ஆராய்ச்சிக்கான டீமில் உங்களை லீடா போட்டு இருக்கேன். செந்தாழினிக்கும் இந்த ஆராய்ச்சியில் ரொம்ப ஆர்வம் இருக்கிறதா சொன்னாங்க. அவங்களை உங்களுக்கு அசிஸ்டென்டா போட்டு இருக்கேன். அதை தவிர பிரதாப், அதர்வா, நந்தன் இவங்க மூணு பேரும் உங்களோட இருப்பாங்க.

 

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடலுக்கடியில் ஆராய்ச்சியை முடிச்சுட்டு கிடைக்கிற முக்கியமான சேம்பல்களை கொண்டு வாங்க. நீங்க அதை கார்பன் டேட்டிங் மூலமா ஆய்வு செஞ்சு எத்தனை வருஷம் பழமையானதுனு ரிப்போர்ட் மட்டும் கொடுங்க. அந்த பழங்கால பொருட்களை பத்திரப்படுத்தி மியூசியம்ல பாதுகாத்து வைக்கிறதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

 

‘இது என்னடா வம்பா போச்சு? தொல்லியல் பற்றி எதுவும் தெரியாமல் நான் என்ன செய்றது?’ என்று உள்ளுக்குள் திகைத்தவனுக்கு செந்தாழினியின் ஆராய்ச்சி பார்வையும் நினைவிற்கு வந்ததது, அதை முகத்தில் காட்டாமல், “மிஸ்டர் யஸ்வந்த், இந்த டீம்ல செந்தாழினி, அவங்க வேண்டாம். மத்தவங்களே போதும்” என்றான் தொண்டையை செருமிக் கொண்டு.

 

“வாட், நிஜமா தான் சொல்றீங்களா? செந்தாழினி உங்களுக்கு உதவியா இருப்பாங்க முரளி. உங்களுக்கே தெரியும் அவங்க கல்வெட்டுகளை படிச்சு அதன் அர்த்தத்தை உடனே சொல்லிடுவாங்க. தொல்லியல் துறையில் இருக்கிற ஆர்வத்தால அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசா இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாம நம்ம கூட சேர்ந்து மூணு வருஷமாக வேலை செய்திட்டு வர்றாங்க.

 

பொதுவா அவங்க தான் உங்க டீம்ல இருக்கறதுக்கு தயங்குவாங்க. இந்த முறை துவாரகைல ஆராய்ச்சினு சொன்னதும் டீம் மெம்பர்ஸ் பத்தி எல்லாம் கேக்கவே இல்ல. உடனே ஓகே சொல்லிட்டாங்க. உங்க கிட்ட சொன்னா நீங்க சந்தோஷப்படுவீங்க. அதை நேர்ல பார்க்கணும்னு தான் நானே வந்து சொல்லிட்டு இருக்கேன். இப்படி பட்டுனு அவங்கள வேணாம்னு சொல்றீங்களே முரளி” என்றார் ஆச்சரியமும் ஆதங்கமுமாக

 

“அப்ப அவங்களையும் டீமையும் அனுப்பி வச்சுடுங்க, நான் போகல, எனக்கு வேற வேலை இருக்கு” என்றான் முரளியாக வந்திருக்கும் யாதவ்

 

“நோ நோ, உங்களுக்கு இதுல பதினைந்து வருஷ அனுபவம் இருக்கு. நீங்க தான் எனக்கு முக்கியம். நான் செந்தாழினி கிட்ட சொல்லிடுறேன். யு கோ ஹெட் (you go ahead)” என்று விட்டு வெளியே சென்றார்.

 

இந்த வேலை ஆரம்பிக்கிறதுக்குள்ள முதல்ல, முரளி எங்கே போனான்னு கண்டுபிடிக்கணும் என்று நினைத்து அவசரமாக அனைத்து கப்போர்ட்களையும் திறந்து எதாவது துருப்பு கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.

 

அரைமணி நேரமாக தனியாக அந்த அறையில் தேடிக் கொண்டிருந்தவனுக்கு இப்போது யாரோ அறையில் இருப்பது போல தோன்ற திரும்பி பார்த்தான். 

 

செந்தாழினி கைகைளை கட்டிக் கொண்டு தலையை சாய்த்து அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

முரளியை போன்று இருக்க வேண்டும் என்று முயன்று கடுமையை வரவழைத்து, “ஹலோ மிஸ் உள்ளே வரும் போது அனுமதி கேட்டு வரணும்ங்கிற சின்ன மேனர்ஸ் கூட உங்களுக்கு கிடையாதா?” என்றான் எரிச்சலுடன்.

 

அவள் விழிகள் சாசர் போல விரிந்துக் கொண்டது. இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறா இவ? என்று நினைத்தவன், “என்ன அப்படி பார்க்கறீங்க?” என்றான்

 

“நீங்க முரளி கிருஷ்ணாவா?” 

 

கப்போர்டிலிருந்த கவனத்தை திருப்பி “ஆஆமா, ஏன் அப்படி கேட்கிற?” என்றான் பதட்டத்தை மறைத்து

 

“முன்னாடி எல்லாம் உங்க ரூமுக்கு வரும்போது நான் அனுமதி கேட்டு வருவேன். அனுமதி இல்லாமல் என் இதயத்துக்குள் நுழைஞ்சிட்ட, அறைக்குள்ள வர்றதுக்கு மட்டும் எதுக்கு அனுமதி கேக்கிற? உனக்காக எப்பவும் என் இதய கதவும் அறைக்கதவும் திறந்தே இருக்கும்னு மொக்கையா டயலாக் எல்லாம் பேசுவீங்க. இப்போ இப்படி பேசறீங்க?” 

 

இதற்கு அவனிடம் பதில் இல்லாததால், “பழைய கதை எல்லாம் எதுக்கு? வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றான்

 

“அதுவும் சரி தான். என்னை எதுக்கு துவாரகா ஆராய்ச்சிக்கான குழுல இருந்து தூக்கினீங்க. நான் இருந்தா நீங்க இந்த டீம்ல இருக்க முடியாதுங்கறது போல சொன்னீங்களாமே”

 

யாதவ் அமைதியாகவே நின்றிருந்தான்.

 

“எனக்கு தெரியும், நான் சில விஷயங்களை ஓபனாவே பேசலாம்னு தான் இன்னைக்கு உங்க ரூமுக்கு வந்தேன். ஆமா எனக்கு உங்களை பிடிக்காது. சுத்தமா பிடிக்காது. ஐ ஹேட் யூ. நீங்களும் என்னோட கருத்தை கவர முயற்சி செய்யறீங்கனு எனக்கு நல்லாவே தெரியுது. உங்க சிரிப்புக்கு பின்னாடி ஒரு குள்ள நரித்தனம் இருக்கு, உங்க மனசுல ஒரு கள்ளத்தனம் இருக்கு. நீங்க ஆராய்ச்சி செய்து நாட்டோட பழமையை பற்றி பெருமைபடுத்த இந்த துறைக்கு வரல. வேறே ஏதோ தேடி வந்திருக்கீங்க. அது எனக்கு நல்லாவே தெரியும்.

 

எனக்கு வரப்போற கணவன் வசதியாவோ புத்திசாலியாகவோ இருக்கிறதை விட நல்லவனா இருக்கணும்னு விரும்பறேன். உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாதுனு அன்னைக்கே உங்க கிட்ட தெளிவா சொல்லிட்டேன். ஆனா நீங்க தொடர்ந்து குடைச்சல் கொடுத்திட்டே இருந்தீங்க. அதனால் நான் விலகி இருக்க ஆரம்பிச்சுட்டேன்.

 

அதுக்கு பழிவாங்கவோ இல்லை உங்க வழிக்கு என்னை கொண்டு வரவோ நீங்க பிளான் பண்றீங்க. அதுக்கு தான் என்னை துவாரகா பற்றின ஆராய்ச்சியில் இருந்து விலக்க நினைக்கறீங்க, ஆம் ஐ கரெக்ட்?” என்றாள் மெல்லிய அழுத்தத்துடன்

 

இப்போது யாதவ் கைகளை கட்டிக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தான். “நீங்க தொல்லியல் ஆராய்ச்சிக்கு வந்ததுக்கு பதிலா கதை எழுத போயிருக்கலாம். நல்லாவே கதை கட்றீங்க” என்றான் நக்கலாக

 

“அப்போ என்னை எதுக்கு டீம்ல இருந்து தூக்கனீங்க. சரியான காரணத்தை சொல்லுங்க” என்றாள் செந்தாழினி பல்லை கடித்துக் கொண்டு

 

“மிஸ், என் கூட நீங்க வர்றதை தான் வேண்டாம்னு சொன்னேன். மத்தபடி துவாராகவை ஆராய்ச்சி செய்யுங்க, ஏன் அங்கேயே குடித்தனம் கூட நடத்துங்க. ஐ டோன்ட் கேர் அபெளட் இட்” என்றான் விட்டேற்றியாக

 

புருவம் சுருக்கி, “நீங்க வொர்க் பண்ற எல்லா டீம்லயும் நான் இருக்கணும்னு அழுத்தம் கொடுப்பீங்க. இப்போ என்ன புதுசா?” என்றாள் நம்ப மாட்டாமல்

 

“ம் ஆறுமாசமா நல்லா யோசிச்சேன். இந்த பொண்ணு ஒரு டம்மி பீசு. மைதா மாவுல செஞ்சு வச்ச சூனிய பொம்மை மாதிரி இருக்கு. இதுக்காக எல்லாம் நம்ம நேரத்தை வீணாக்க கூடாது. நமக்கெல்லாம் கருப்பா நாட்டுக் கட்டை தான் சரியா இருக்கும்னு தோணுச்சு, எப்பவும் என்னை முறைச்சுட்டு இருக்கிற பேட் வைப்ரேஷன் வேணாம்னு தோணுச்சு. போதுமா விளக்கம்?” என்றான் யாதவ் நக்கலாக

 

தன்னை இந்த அளவுக்கு மட்டம் தட்டி யாருமே பேசியதில்லை என்பதால் செந்தாழினிக்கு புசுபுசுவென்று கோபம் வந்தது. கூடவே முரளி இந்த அளவுக்கு லோக்கலாக பேச மாட்டானே. அவன் பார்வையில் எப்போதும் அவள் அழகை பற்றின மெச்சுதல் இருக்குமே, அதை கண்டு கொள்ளாமல் இருந்தவளுக்கு, இப்போது யாதவ்வின் நக்கலான பேச்சை அப்படியே விட முடியவில்லை.

 

“ஹலோ வார்த்தையை அளந்து பேசுங்க” என்றாள் முறைத்துக் கொண்டே

 

“ஸ்கேல் வச்சு எல்லாம் அளந்து பேச முடியாது. நான் பேசுறேன் நீ வேணா அளந்துக்கோ” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே

 

“உனக்கென்ன பெரிய ரதினு மனுசுல நினைப்போ? நீ வேணாம்னு சொல்லிட்டா போடினு வேறொருத்தியை பார்க்க போறேன். அதைவிட்டுட்டு மூளையை கசக்கி உன்னை பழிவாங்கி என் வழிக்கு கொண்டு வர்ற அளவுக்கு நீ ஒண்ணும் அவ்வளவு வொர்த் இல்லையே” என்று மேலும் கீழும் அவளை நக்கலாக பார்த்தான்.

 

செந்தாழினிக்கு இப்போது கோபத்தை விட சந்தேகமே துளிர்விட்டது. தன் முன்னால் பேசிக் கொண்டிருப்பது உண்மையில் முரளி கிருஷ்ணா தானா? என்ன தான் எதிரில் இருப்பவன் அவளை நக்கல் செய்து கொண்டிருந்தாலும் அந்த கண்களில் துவேஷமாே வெறுப்போ இல்லை. முகத்திலோ கண்களிலோ கள்ளம் இல்லை. முக்கியமா ஈகோ தென்படவில்லை. அவன் பேச்சில் வெளிப்பட்டது குறும்புதனம் மட்டுமே!

 

முரளியால் எப்போதும் இப்படி எல்லாம் நடந்து கொள்ளவே முடியாது. ஒரு வேளை இந்த ஆறு மாதத்தில் முரளிக்கு தலையில் அடிப்பட்டு மூளை கலங்கி இருக்க கூடுமோ? என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

 

அப்படியே அவனை தலைமுதல் கால் வரை ஆராய்ச்சியாக பார்த்தவளின் கண்கள் அவன் கால்களில் நிலைத்தது. காலில் இருந்த ஷூவை கழற்றி இருந்தான்.  வெற்றுக் கால்களோடு நின்றிருந்தவனின் கால்கள் மாநிறத்தில் இருந்தன. முகத்தின் சிவந்த நிறத்திற்கும் காலின் மாநிறத்திற்கும் சம்மந்தமே இல்லை!

 

மாயவன் (யாதவன்) மாட்டிக் கொள்ள போகிறானோ?

 

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top