வேங்குழல் 9

யாதவ் கிருஷ்ணாவின் வாழ்க்கையை பற்றி கேட்ட செந்தாழினி, அவன் நிலையை எண்ணி வருந்தினாள். ‘இந்த முரளி சின்ன வயசுல இருந்தே வில்லத்தனத்தோட இருந்திருக்கானே! மேனுபேக்சரிங் டிபெக்ட் போல’ என்று நினைத்தவள் “அது சரி உங்க பேரு என்ன?”

“யாதவ் கிருஷ்ணா”

“ம் நல்ல பேரு, யாதவ் உங்க அண்ணன் நல்லவன் இல்லனு நல்லாவே தெரியுது. அவனே உங்களை தேட சொல்லி சொல்லிட்டு போயிருக்கான். இதுல ஏதோ தப்பா தெரியல? உண்மையாவே அவன் அவனை தான் தேட சொல்லியிருக்கானா?”

“எனக்கும் அவன் ஏதோ திட்டம் போட்டு இருக்கான்னு தான் தோணுது. அது என்னனு தான் தெரியல. அவனோட டைரியை பார்த்தால் அதுலயும் முரளியை கண்டுபிடினு தான் கிறுக்கி வச்சிருக்கான் மடையன்” 

“யாதவ் எனக்கென்னவோ முரளிகிருஷ்ணா தொலைஞ்சு எல்லாம் போகல. உங்களை வச்சு முரளியை கண்டுபிடிக்க நினைக்கிறான்னு தோணுது”

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? முரளியே முரளியை தேட வைக்கிறானா?” என்று முறைத்தான் யாதவ்.

“யாதவ் நீங்க பேருல தான் கிருஷ்ணரை வச்சிருக்கீங்க. அவரோட வாழ்க்கை வரலாறு எதுவுமே தெரியாதா உங்களுக்கு? கிருஷ்ணர்னு சொன்னா உங்களுக்கு முதல்ல நியாபகம் வர்றது எது?” என்று கேட்டாள்

“புல்லாங்குழல்” 

“அதே தான். கிருஷ்ணர் உண்மையா வாழ்ந்திருக்கிறார்னு உறுதியானதும், அப்போ அவர் வச்சிருந்த புல்லாங்குழலும் இருக்கும் தானேனு அதை தேடி ஒரு கூட்டம் அலையுது. அதுல முரளிகிருஷ்ணாவும் ஒருத்தரா இருக்க வாய்ப்பு இருக்கு”

“அப்போ அவன் புல்லாங்குழலை கண்டுபிடினு சொல்லியிருக்கலாம் தானே, முரளியை கண்டுபிடினு அவன் பேரை ஏன் எழுதி வச்சிருக்கான்?” என்றான் யாதவ் குழப்பத்துடன்.

“கிருஷ்ணர் பல வகையான புல்லாங்குழல்களை வாசிச்சிருந்தாலும், முக்கியமா அவரால அதிகமா வாசிச்சப்பட்டது மூணு புல்லாங்குழல்கள். அவை வேணு, முரளி, வம்சி. 

வேணு ஆறு அங்குலத்தில இருக்கும் அளவில் சின்னது. முரளி 18 அங்குல நீளமுடையது. வம்சி 15 அங்குல நீளமுடையது. இதுல ரொம்ப முக்கியமானதுனு பார்த்தா முரளி தான். முரளிக்கு பான்சூரினு இன்னொரு பேரும் இருக்கு. ஏன்னா இந்த புல்லாங்குழல் இசை மனசை மயக்கும் வலிமை கொண்டது. அந்த காலத்துல முனிவர்களோட கடுமையான தவத்தையே கலைக்கும் அளவுக்கு அவரோட இசை இருக்குமாம். எல்லா உயிரினங்களும் அந்த புல்லாங்குழலோட மெல்லிசையை கேட்டு உருகி அவர் மேல ஒருவித மயக்கம் வருமாம். மந்திரத்துக்கு கட்டுப்பட்டவங்க போல அந்த கண்ணனோட இசைக்கு மயங்கி தானே கோபியர்கள் எல்லாம் அவர் பின்னால் சுத்தினாங்க? மன்மதனுக்கே சவால் விடும் அளவுக்கு இருக்கும் அவரோட வேணுகானம்!” 

அவள் பாட்டிற்கு ஏதோ கதா காலட்சேபம் செய்வது போல பேசிக் கொண்டே இருக்க காதை குடைந்துக் கொண்டே, “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்றான்

“என் பாட்டி ஸ்ரீகிருஷ்ணரோட கதைகளை சின்ன வயசுல எனக்கு நிறைய சொல்லுவாங்க, நானும் படிச்சிருக்கேன்” என்றாள்

“அப்போ முரளி கிருஷ்ணா, முரளிங்கிற புல்லாங்குழலை தேடி போயிருக்கான். அந்த புல்லாங்குழல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த கிருஷ்ணர் யூஸ் பண்ணது. அவன் என்னையும் அதுக்காக தான் இதுக்குள்ள இழுத்திருக்கான். அப்படினு சொல்றியா?” என்றான் யாதவ் ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வியாக

செந்தாழினி ஆமாம் என்று பலமாக தலையாட்டவும் யாதவ் கிருஷ்ணா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.

“எதுக்கு இப்ப சிரிக்கறீங்க?” அவள் முறைத்தாள்.

“பின்ன சிரிக்காம? பார்க்கறதுக்கு தான் இந்த காலத்து பொண்ணு போல மாடர்னா இருக்க. ஆனா பழைய பஞ்சாங்கம் பேசிட்டு இருக்க. பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்கு முன்னாடி வாழ்ந்த கிருஷ்ணர் வச்சிருந்த புல்லாங்குழல் இன்னும் அப்படியே பாழாகாம இருக்கும் நினைக்கிற பாத்தியா? நான் கூட உன்னை புத்திசாலினு தப்பா  நினைச்சிட்டேன். சாரி” என்றான் மீண்டும் சிரிப்பை அடக்கி கொண்டு.

அவன் கிண்டல் செந்தாழினிக்கு கோபத்தை மூட்ட, அவனை அப்படியே பிடித்து தள்ளினாள். எதிர்பாராத நேரத்தில் அவள் தள்ளிவிடவும், கீழே விழப்போனவன் விழுந்து விடாமல் இருக்க, தன்னிச்சையாக செந்தாழினியின் கரத்தை வலிமையுடன் பற்ற, அவளும் கடற்கரை மணலில் கால் இடறி, அவன் மேலேயே சரிந்தாள்.

திண்ணிய அவன் மார்பில் பூமாலையென விழுந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்த யாதவ் தீச்சுட்டாற் போல அவளை விலக்கினான். ஆனால் செந்தாழினி யாதவனின் சட்டை காலரை இறுக்கமாக பற்றியபடி அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தக் கொண்டு இருந்தாள். 

நொடியும் தாமதிக்காமல் தன் பலம் கொண்டு அவளை பிடித்து தள்ளினான். அந்த அளவுக்கு அவனிடம் வேகத்தை எதிர்ப்பார்க்காதவள் தூரமாக போய் விழுந்தாள்.

அதிர்ச்சியிலிருந்து அவள் மீளும் முன்னரே, “இதெல்லாம் முரளிகிட்ட வச்சுக்க, என்கிட்ட வேணாம்” என்று ஆட்காட்டி விரலை காட்டி அவளை எச்சரித்துவிட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.

அவன் சொன்னதை கேட்டு கோபமாக அவன் பின்னாலே ஓடி அவனுக்கு முன்னால் வந்து நின்றாள். “ஹலோ நான் என்னவோ வேணும்னு உங்க மேல விழுந்த மாதிரி சொல்றீங்க? அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் என்ன மன்மதன்னு நினைப்பா? எல்லா பொண்ணுங்களும் உங்களை தான் விரும்பறாங்கனு கற்பனை பண்ணிக்கிற மாதிரி எதாவது மனவியாதி இருக்குதா உங்களுக்கு? அந்த முரளியோட என்னை எப்படி சேர்த்து வச்சு பேசலாம் நீங்க?” என்று அவள் ஏகத்துக்கும் எகிற

கடல் நீரில் நனைந்த உடை அவள் உடலோட உடலாக ஒட்டியிருக்க, செதுக்கி வைத்த சிலை போல நின்றிருந்தவளை பார்க்க பிடிக்காமல் தலையை பக்கவாட்டாக திருப்பி கொண்டு “முதல்ல போய் டிரஸ் மாத்திட்டு வந்து என்கிட்ட பேசு” என்றான் அழுத்தமான குரலில்

அப்போது தான் தன்னை குனிந்து பார்த்தாள். தாவணி அணிந்திருந்ததால் அது ஏகத்துக்கும் விலகி அவள் இடையையும் மேனி வனப்பையும் அப்பட்டமாக பறைச் சாற்றிக் கொண்டு இருந்தது. அவசரமாக அதை சரி செய்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றாள்.

யாதவ் உடனே செல்லாமல் சற்று நேரம் காலாற நடந்துவிட்டு பின்பு தன் அறைக்கு பின்புறமாக சென்று தன் மேக்கப்பை முடித்துக் கொண்டு, விடுதியின் ஹாலிற்கு சென்றான். எல்லோரும் அவன் வரவிற்காக உணவு உண்ணாமல் காத்திருந்தார்கள். செந்தாழினி இப்போது வேறு உடைக்கு மாறி இருந்தாள். யாதவ் அவளை கவனிக்காமல் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

ஆனால் செந்தாழியின் பார்வை மட்டும் யாதவ்வின் மேல் அழுத்தமாக பதிந்திருந்தது. அதை உணர்ந்தவன் அவசரமாக சாப்பிட்டு விட்டு மொட்டை மாடிக்கு சென்று அங்கே இருந்த கைப்பிடி சுவரில் ஒற்றைக்கையை தலையில் வைத்தபடி படுத்திருந்தான். ஆகாயத்தில் தெரியும் நிலவொளியின் அழகில் மெய்மறந்து அதில் லயித்து இருந்தவனை செந்தாழினியின் குரல் கலைத்தது.

“யாதவ், உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” அவனிடம் பதில் இல்லை

“நான் முரளியை ஒரு நொடி கூட எனக்காக யோசிச்சதே இல்லை. உங்களை விட அவர் ஒன்பது வயசு பெரியவர். நான் உங்களை விட நாலு வயசு சின்னவ. எனக்கும் அவருக்கும் 13 வயசு வித்தியாசம். வயசு மட்டும் வித்தியாசம் இல்ல. அவரோட கேரக்டருக்கும் எனக்கும் கொஞ்சமும் செட்டாகாது. அவரை நான் திரும்பி கூட பார்த்தது இல்ல. அவர் தான் என் மேல…” என்று அவள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க,

“ஷட் அப், இதை எல்லாம் நான் உன்கிட்ட கேட்டேனா? இட்ஸ் நன் ஆப் மை பிசினஸ். நீ முதல்ல கீழே போ” என்றான் எரிச்சலாக

“கேக்கலைனாலும் சொல்லணும்னு தோணுச்சு. ஏன் சொல்லணும்னு தோணுச்சுனு கேட்டா எனக்கே பதில் தெரியாது. அடுத்து என்ன பண்ண போறீங்க யாதவ்?”

“அத நான் பார்த்துக்கிறேன். நீ முதல்ல கீழே போ”

அதற்கு மேல் நிற்காமல் அவள் சென்று விட, இப்போது அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே பிரதாப் யாதவ்விடம் வந்தான்.

“செந்தாழினி என்ன சொல்லிட்டு போறாங்க?”

“அதை அவ கிட்டயே கேளு, நான் அவ வந்ததையே கவனிக்கல, பேசினதை எங்கே கவனிக்க போறேன். அத விடு உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும், மறைக்காம என்கிட்ட உண்மையை சொல்லு” என்றான் யாதவ் நிலவின் மேலிருந்த பார்வையை விலக்காமல்

“சொல்லுங்க”

“முரளி கிருஷ்ணா எதை தேடிப் போனான்னு உனக்கு தெரியுமா?”

பிரதாப்பிடம் மெளனம், “சொல்லு எனக்கு விஷயம் தெரியும். தெரிஞ்சுட்டு தான் கேக்கறேன். அவன் கிருஷ்ணரோட புல்லாங்குழலை தானே தேடிப்போனான்?”

“ஆமா” என்றான் தலை குனிந்துக் கொண்டு

இப்போது கைப்பிடிச்சுவரிலிருந்து லாவகமாக காலை தரையில் பதித்து எழுத்து அமர்ந்தவன், “அப்போ ஏன் அன்னைக்கு நான் கேட்டதுக்கு தெரியலனு சொன்னே” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி

“அது, அது வந்து. முரளி தான் என்னை தேடி என்னை போல ஒருத்தன் வருவான். அவன் என்னை மாதிரியே வேஷத்துல வந்தான்னா அவனுக்கு நான் வச்ச டெஸ்ட்ல பாஸ்னு அர்த்தம். அடுத்தது அவன் என்னை தேடி தான் வந்திருப்பதா நினைச்சிருப்பான், அவன் கிட்ட நீ எந்த விஷயத்தையும் சொல்லாம இந்த டைரிய கொடு. அவனா நான் முரளியை தேடிப்போனதை கண்டுபிடிச்சுட்டான்னா, அவனுக்கு கிருஷ்ணரோட புல்லாங்குழலை தேடி கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் இருக்குனு அர்த்தம். அதுக்கு பின்னாடி நீ அவன் கூடவே இருந்து தேவையான உதவிகளை செய்” என்று முரளி தன்னிடம் சொல்லிவிட்டு சென்றதை பிரதாப் கூறினான்.

“இந்தளவுக்கு பிளான் பண்ண கூமுட்டையால, அந்த புல்லாங்குழலை தேடி கண்டுபிடிக்க முடியலையாமா? இங்கே நடக்கறதை எல்லாம் பார்த்தா முரளிகிருஷ்ணா காணாமல் எல்லாம் போகல. காணாம போனவனை தேடி கண்டுபிடிக்கலாம். ஆனா ஓடி ஒளிஞ்சு இருக்கவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது என்னோட வேலையும் இல்ல. நாளைக்கே நான் என் ஊருக்கு கிளம்பறேன்”  என்றான் யாதவ் கோபத்துடன்

“அய்யோ சார், நீங்க நினைக்கிறது போல இல்ல. முரளி கிருஷ்ணா அவரோட பிரண்ட் அஸ்வின் இரண்டு பேரும் உண்மையாவே புல்லாங்குழலை தேடி போயிருக்காங்க. எங்க மூணு பேருக்கும் தான் இந்த விஷயம் தெரியும். இதைப்பத்தி யாருக்கும் சொல்ல முரளிக்கு விருப்பமில்ல. ஆனா போற பாதை மிகவும் கொடியது, இதுவரை தேடி போனவங்களுக்கு மரணம் தான் நடந்திருக்குனு எங்க ஆராய்ச்சியில தெரிஞ்சுக்கிட்டோம். ஆனாலும் துணிஞ்சு அவங்க இரண்டு பேரும் போய் இருக்காங்க. ஒருவேளை போற இடத்துல அவங்களுக்கு எதாவது ஆபத்துனா உதவி செய்ய ஆள் இருக்கணும்னு என்னை அவங்க இங்கேயே விட்டுட்டு போய்ட்டாங்க.

கடைசி வாய்ப்பா தான் உங்களை வரவழைக்கிறதா பிளான் பண்ணி இருந்தோம். இப்போ நீங்க வரவேண்டியதா போச்சுனா முரளிக்கும் அஸ்வினுக்கும் ஏதோ ஆபத்து வந்திருக்கும்னு தானே அர்த்தம். நீங்க புல்லாங்குழலை தேடலைனா கூட பரவாயில்லை, முரளிகிருஷ்ணாவை காப்பாத்திட்டு போய்டுங்க. அதுக்கப்புறம் நாங்க பார்த்துக்கிறோம்” என்ற பிரதாப்பை யோசனையுடன் பார்த்தான் யாதவ்

“எந்த இடத்திற்கு போய் இருக்காங்கனு உனக்கு தெரியுமா?”

“அது தெரிஞ்சு இருந்தா முதல்ல நான் போயிருக்க மாட்டேனா சார்?”

“அதுவும் சரிதான்” என்று நெற்றிப்பொட்டை ஒற்றை விரலால் தட்டிக் கொண்டே இருந்தவனுக்கு முரளியின் டைரியில் படித்தது நினைவில் வந்தது. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் இன்றும் இருக்கிறது, அதுவும் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவும், வளர்ந்த இடமான பிருந்தாவனமும், கடைசி காலத்தில் வாழ்ந்த இடமான துவாரகாவும் இருக்கிறது என்றால் இந்த இடத்தை சுற்றி தான் தேட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அதையே பிரதாப்பிடம் கூறினான். “ஆல்ரெடி நாம இருக்கிறது துவாரகா, இங்கே சுத்துவட்டாரத்துல தேடிட்டு, அப்புறம் ஒவ்வொரு இடமா போவோமா சார்” என்று பிரதாப் ஆர்வத்துடன் கேட்க

“ஒவ்வொரு இடமா ஆராய்ச்சி செஞ்சு முடிக்கிறதுக்குள்ள, நீயும் நானும் கிழவனாயிடுவோம், பரவாயில்லையா?” என்றான் யாதவ் ஒற்றை புருவம் உயர்த்தி.

“இப்போ என்ன சார் பண்றது?”

“என்னோட கணிப்புபடி, புல்லாங்குழல் துவாரகாவலயோ அல்லது வேற அவர் வாழ்ந்த இடத்திலயோ இருக்கிறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. கிருஷ்ணர் தன் இளமை காலத்துல சந்தோஷமா ஓடி ஆடி விளையாடி புல்லாங்குழல் வாசிச்சது எல்லாம் பிருந்தாவனத்துல தான். எனக்கென்னவோ அங்கே போனா ஒரு விடை கிடைக்கும்னு தோணுது”

“பிரில்லியண்ட் சார், முரளி சார் உங்க புத்திசாலிதனத்தை சரியா கணிச்சிருக்காரு. உங்க அண்ணனும் உங்களை போல தான் யோசிச்சிருப்பாரு, அவங்களும் பிருந்தாவனத்துக்கு தான் போய் இருப்பாங்க”

“முரளியை இனி எப்பவும் என் அண்ணன்னு என்கிட்ட சொல்லாதே” என்றான் யாதவ் அழுத்தமாக குரலில். அவன் குரலில் இருந்த தீவிரத்தை பார்த்து, “சரி சார், அவரை உங்களுக்கு பிடிக்காமலே அவரை தேடி அவருக்காக வந்திருக்கீங்களே, நீங்க கிரேட் சார்”

“நான் ஒண்ணும் அவனுக்காக வரல. என் அம்மாவுக்காக வந்தேன். நாம வேறே டாப்பிக் பேசலாமா? நாளைக்கே மதுராவுக்கு கிளம்பி போய் பிருந்தாவனத்தை சுத்தி நம்ம தேடலை தொடங்கலாம். அப்புறம் இன்னொரு விஷயம், நான் யாதவ்னு அந்த செந்தாழினிக்கு தெரிஞ்சு போச்சு. சோ இனி இங்கே இருக்கிறது அவ்வளவு நல்லது இல்ல”

“என்ன தெரிஞ்சு போச்சா? அப்போ ஏன் சைலண்டா இருக்காங்க. இந்நேரம் அந்த பொண்ணு கம்ளெய்ண்ட் பண்ணியிருக்கலாமே?” என்று தாடையை தடவினான் பிரதாப்

“அதைவிடு, பிருந்தாவனத்தை பத்தி வேற யாராவது ஆராய்ச்சி செஞ்ச குறிப்புகள் இருக்கா, அதை படிச்சுட்டு போனா நம்ம வேலை கொஞ்சம் சீக்கிரம் முடியும்” என்றான் யாதவ்

“சார் எங்களோட சீனியர் ஆருத்ரன், ரிட்டயர் ஆயிட்டாரு. அவரு பிருந்தாவனத்துல நிறைய ஆர்வத்தோட ஆராய்ச்சி செய்ததா கேள்வி பட்டு இருக்கேன். நாம நேரா அவரை போய் மீட் பண்ணா என்ன? விஷயம் இன்னும் சீக்கிரம் கிடைச்சுடும் இல்லயா?”

“குட் ஐடியா பிரதாப், நாம நாளைக்கே போகலாம்”

இருவரின் உரையாடலையும் படிக்கட்டில் நின்றபடியே கேட்டுக் கொண்டிருந்த செந்தாழினி, “யாதவா என் வீட்டுக்கு தான் வரப்போறீயா, வா, உன்னை அங்கே வச்சு கவனிச்சுக்கிறேன்” என்று உதட்டை சுழித்து சொல்லிக் கொண்டு கீழே இறங்கினாள்.

*****

மறுநாள் யாதவ் மற்றும் பிரதாப் இருவரும் துவாரகாவின் ஆராய்ச்சி வேலைகளை அதர்வா மற்றும் நந்தனை கவனிக்க சொல்லிவிட்டு, சீனியர் யஷ்வந்த் சிங்கிற்கு போன் செய்து, “மிஸ்டர் யஷ்வந்த், துவாரகாவுல தேவையான சேம்பல்ஸ் கலெக்ட் பண்ணியாச்சு, இனி அதை நம்ம டீம் கார்பன் டேட்டிங் முடிச்சு ரிப்போர்ட் கொடுத்துடுவாங்க. நீங்க மியூசியம்ல பாதுகாப்பா வச்சுட்டு கவர்மெண்ட்க்கு ரிப்போர்ட் கொடுத்துடுங்க. நான் பிரதாப்பை அழைச்சிட்டு மதுராவுக்கு போறேன். மதுராவுல இருந்தவங்க தான் துவாரகாவுக்கு குடிபெயர்ந்தாங்களானு ஆராய்ச்சி செய்ய போறேன். இப்போதைக்கு இந்த விஷயம் சீக்ரெட்டா இருக்கட்டும். முன்னாடியே சொன்னா எதிர்ப்பார்ப்பு அதிகமாயிடும், அதான்” என்று வாய்க்கு வந்ததை உளறினான் யாதவ்

ஆனால் அவன் பேச்சை பிரதாப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“முரளி யு ஆர் பிரில்லியண்ட், அன்ட் யு ஆர் டிரஷர் பார் அவர் கண்ட்ரி” (Murali you are brilliant and you are treasure for our country) என்று கூவினார் யஷ்வந்த்

க்கும் தொண்டை கனைத்துக் கொண்டு, “டோன்ட் எக்ஸ்பக்ட் மோர்” என்று சொல்லிவிட்டு போனை அணைத்தான் (Dont expect more)

“என்ன பிரதாப், உங்க ஹெட் என்ன அடிச்சுவிட்டாலும் அப்படியே நம்பறாரு, பாவம் இந்த அப்பாவி மனுஷனை நல்லாவே ஏமாத்திட்டு இருந்திருக்கீங்க நீங்க மூணு பேரும்”

“சார் நீங்க தெரிஞ்சு சொன்னீங்களோ தெரியாம சொன்னீங்களோ, இப்படி ஒரு நம்பிக்கை மக்களிடையே இருக்கு. அது தான் ஹெட் உங்களை பாராட்டி இருக்காரு” என்றான் பிரதாப்

தோளை குலுக்கி கொண்டு, “சரி மிஸ்டர் ஆருத்ரனை பார்க்க போகலாம்”

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆருத்ரனின் வீட்டை அடைந்தனர். முரளியின் வேஷத்தை போடாமல் யாதவ் தன் இயற்கையான கார்மேக நிறத்திலேயே இருந்தான். 

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த ஆருத்ரன், யாதவனை கண்டதும் புருவம் சுருக்கி, “நீங்க ஏற்கனவே இங்கே வந்திருக்கீங்களா? எங்கேயோ பார்த்தது போலவே இருக்கே?” என்றார் யோசனையோடு

“சார் என்னோட பேரு யாதவ் கிருஷ்ணா” என்று தொடங்கியவன் சுருக்கமாக தான் வந்ததற்கான நோக்கத்தை தெரிவித்தான்.

“பகவானை தரிசிக்க மதுராவுக்கும் பிருந்தாவனத்துக்கும் தாராளமா போங்க. உங்களுக்கு கடவுளோட ஆசி கிடைக்கும். ஆனா தப்பான எண்ணத்துல போனா மரணம் தான் பரிசா கிடைக்கும், அப்படி  போனவங்க பல பேர் இறந்ததையும், திரும்பியே வராமல் காணாம போனதையும் பார்த்திருக்கேன். அதுமட்டுமில்லாம கிருஷ்ணரோட புல்லாங்குழலை பத்தி வேறுப்பட்ட கருத்துக்கள் இருக்கு. அதுல எது உண்மைனு சரியா தெரியல. என்னை பொறுத்தவரைக்கும் புல்லாங்குழல் இப்பவும் இருக்குங்கிறது எல்லாம் கட்டுக்கதை” என்றார் இருவரையும் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே

யாதவ் “சார் நான் முரளிகிருஷ்ணாவை தான் தேடி வந்திருக்கேன். எனக்கு அந்த புல்லாங்குழல் மேல எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்ல, ஆர்வமும் இல்ல. ஆனா நீங்க இப்ப சொன்னதால கேட்கிறேன். புல்லாங்குழல் இப்போ இருக்கிறதுக்கு வாய்ப்பு இல்லனு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“ஏன்னா, புராணத்துல கிருஷ்ணர் ராதை இரண்டு பேரும் காதலிச்சாங்களே தவிர, அவங்க காதல் திருமணத்துல முடியல. ராதையை அயன் என்பவர் தான் திருமணம் செஞ்சுகிட்டார். கிருஷ்ணரும் பாமா ருக்மணியை திருமணம் செய்துகிட்டு துவாரகாவில் வாழ்ந்தார்”

“அய்யோ என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? எப்பவும் ராதா கிருஷ்ணானு தானே நாம சொல்லிட்டு இருக்கோம் அப்போ அவங்க காதல் நிறைவேறலயா?” என்றான் பிரதாப் அதிர்ச்சியாக

யாதவ் அவனை பார்த்து முறைத்தான், 

ஆருத்ரன் தொடர்ந்தார் “நீயெல்லாம் ஆர்க்கியாலஜிஸ்ட்டா இருக்கே, ஹிஸ்டரி தெரியாதப்பா உனக்கு? எப்பவுமே நிறைவேறாத காதலை தானே உலகம் போற்றும். அவங்களோடது தெய்வீக காதல், எப்பவுமே ராதாவோட பேரு கிருஷ்ணனோட இணைந்து இருக்கணும்னு அப்படி வரம் கொடுத்திருக்காரு. ராதை கடைசி காலத்துல ஸ்ரீகிருஷ்ணரை பார்க்கணும்னு ஆசைப்பட்டு அவரை தேடி வந்திருக்காங்க, ராதையோட வேண்டுகோளின்படி கடைசியா தன் புல்லாங்குழலை எடுத்து கிருஷ்ணர் வாசிச்சுட்டு இருக்கும் போதே அவங்க உயிர் பிரிஞ்சதா சொல்லப்படுது. அவங்களோட இறப்பை தாங்க முடியாத ஸ்ரீகிருஷ்ணர் அந்த புல்லாங்குழலை உடைச்சுப்போட்டுடதா மக்கள் ஒருபக்கம் நம்பறாங்க. சிலபேர் அது இன்னும் இருக்குனு தேடி அலையறாங்க. இதுல நீங்க இரண்டாவது ரகம்” என்றார் ஆருத்ரன்.

“அப்போ மதுராவில் இருக்கிற பந்திர்வன் காடுகளை நீங்க ஆராய்ச்சி செய்ய போனதில்லையா சார்?” என்ற யாதவ்வின் கேள்வியில் திடுக்கிட்டு போய் அவனை கூர்ந்து பார்த்தார் ஆருத்ரன்.

ஏனெனில் ராதா கிருஷ்ணரின் தெய்வீக திருமணம் பந்திர்வன் காட்டில் நடந்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.

யாதவ்வின் கண்களில் ஒரு தீட்சண்யம் தெரிந்தது. அவனும் அவரை கூர்மையாக பார்த்துக் கொண்டு இருந்தான். “தம்பி உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கே? நீங்க ஏற்கனவே மதுராவை சுத்தி ஆராய்ச்சி செய்து இருக்கீங்களா?”

இல்லை என்பது போல பலமாக தலையாட்டினான், “சொல்லப்போனா கிருஷ்ணர் என்கிற கடவுள் இருக்காரு என்பதை தவிர எனக்கு எதுவுமே தெரியாது. இங்கே வந்த பின்னாடி தான் முரளியோட டைரியில் கொஞ்சம் படிச்சேன்” என்பவனை இப்போது பிரதாப் அதிர்ச்சியோடு பார்த்தான்.

“சார் நீங்க வர்றதுக்கு முன்னாடி அந்த டைரியை நான் பத்துமுறைக்கு மேல படிச்சேன். பந்திர்வன் காடு என்ற பேரே அந்த டைரியில் இல்லையே, நீங்க எப்படி அந்த பேரை சரியா சொன்னீங்க?”

“தெரியல பிரதாப், எங்கேயோ படிச்சிருப்பேன் போல, சட்டுனு இவர் கிட்ட அந்த கேள்வியை கேட்கணும்னு தோணுச்சு. இப்போ எனக்கென்னவோ பந்திர்வன் காடுக்கு போகணும்னு தோணுது” என்றான் தீவிரமாக

ஆருத்ரன் யாதவை அழுத்தமாக பார்த்தபடி, “உங்களோட பிறந்த தேதியை சொல்ல முடியுமா மிஸ்டர் யாதவ்?” என்றார்.

அவன் சொன்னதும் அந்த தேதியை கணக்கிட்டவர், இப்போது யாதவனை பார்த்து கைக்கூப்பினார். யாதவனும் பிரதாப்பும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “என்னாச்சு சார், தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போயிடுங்கனு சொல்ல வர்றீங்களா?” என்றான் யாதவ் திகைப்புடன்.

“அச்சோ, உங்களை போய் அப்படி சொல்வேனா, என்னவோ கும்பிடணும்னு தோணுச்சு, இருங்க வர்றேன்” என்று எழுந்து உள்ளே போனார்.

திரும்பி வந்து ஒரு நாேட்டு புத்தகத்தை யாதவனிடம் நீட்டினார். அதை திறந்து பார்த்தவனுக்கு அதில் எழுதியிருந்த வார்த்தைகள் ஒன்றுமே புரியவில்லை. என்னசார் இதுல என்ன எழுதி இருக்குனே புரியலயே? இது என்ன மொழி?”

“நான் ஆராய்ச்சிக்காக பிருந்தாவனம் போகும் போது ஒரு பைராகி இதை என் கையில கொடுத்தார். உனக்கு யாருகிட்ட இந்த புத்தகத்தை கொடுக்கணும்னு தோணுதோ அவங்க கிட்ட கொடுனு சொன்னாரு. அவர் கொடுத்து இருபது வருஷத்துக்கும் மேல ஆச்சு. இதைப்பத்தி நான் மறந்தே போயிட்டேன். ஏனோ உன்னை பார்த்தபின்னாடி தான் இந்த புத்தகத்தை பத்தின நினைவே வந்தது. இப்போ நீ அந்த காட்டை பத்தி பேசினதும் உன்கிட்ட இதை கொடுத்தே ஆகணும்னு தோணுச்சு” என்றார் ஆருத்ரன்.

“பைராகியா யாரு அவரு?” என்றான் பிரதாப்

“பைராகிங்கிறது வைணவ குருமார்கள், கடுமையான துறவறம் பூண்டு கடவுளுக்காகவே வாழறவங்க. இப்போ சிவனுக்கு சித்தர்கள் இருப்பாங்க இல்லையா? அதுபோல பெருமாளுக்கு பைராகிகள் இருப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு பைராகி தான் என்கிட்ட இதை கொடுத்தாரு. அப்பவே அவருக்கு ரொம்ப வயசாயிடுச்சு, பலவீனமா இருந்தாரு. இப்போ இறந்திருப்பாருனு நினைக்கிறேன்” என்றார் ஆருத்ரன்.

“எல்லாம் சரி, இந்த புக்குல என்ன எழுதி இருக்குனே தெரியலயே. இதை வச்சு நான் என்ன பண்றது. நீங்களே இதுக்கான அர்த்தத்தை சொல்லிடுங்க”

“இதுல இருக்கிறது சமஸ்கிருதத்தின் எழுத்துவடிவங்களில் ஒன்னான க்ரந்தா (Grantha). எனக்கும் இதை படிக்க தெரியாது. ஆனா என் பொண்ணுக்கு நல்லாவே படிக்க தெரியும். இப்போ நீங்க படிச்சாலும் பொதுவான வரலாற்று குறிப்பு மட்டும் தான் இதுல இருக்கும். தேவைப்படும் போது படிச்சா, நமக்கு தேவையான விடை இதுல கிடைக்கும். இதுதான் இந்த புத்தகத்தோட முன்னுரையில் இருக்கிறதா என் பொண்ணு சொன்னா”

“நீங்க தப்பா நினைச்சுக்கலைனா, எங்க கூட உங்க பொண்ணையும் அனுப்ப முடியுமா சார்?” என்றான் யாதவ் தயங்கி கொண்டே

“தாராளமா அழைச்சிட்டு போங்க. இருங்க அவளை கூப்பிடுறேன். ராதிம்மா” என்று அவர் குரல் கொடுக்க மாடிப்படியிலிருந்து அவள் இறங்கி வருவதற்கு அடையாளமாக கால் கொலுசொலி கேட்க, யாதவ் மற்றும் பிரதாப் இருவரும் மாடியை நோக்கி அண்ணாந்து பார்த்தனர். இருவரின் விழிகளும் ஆச்சரியத்தில் அகல விரிந்துக் கொண்டன.

செந்தாழினி தான் எழிலோவியமாக இறங்கி கொண்டிருந்தாள்! அவள் மயக்கும் மோகினி பார்வையை யாதவனின் மேல் செலுத்த, அவன் பக்கவாட்டாக திரும்பி பிரதாப்பை பார்த்தான்.

“என்ன பிரதாப்? இந்த பொண்ணு ஏதோ ராஜா பரம்பரைனு யஷ்வந்த் சார் சொன்னாரு. இவ என்ன இங்கே இருக்கா?” 

“அது தான் சார் எனக்கும் புரியல. இவளோட அப்பாவும் முன்னாள் ஆர்க்கியாலஜிஸ்ட்னு தெரியும். ஆனால் ஆருத்ரனோட பொண்ணா இருப்பானு நானும் எதிர்பார்க்கல, இத்தனை நாள் ஒண்ணா வேலை செய்திருக்கோம், ஒரு நாள் கூட இவ என்கிட்ட சொன்னதே இல்லையே சார்” என்றான் பிரதாப் கிசுகிசுப்பாக

“என்ன மிஸ்டர் யாதவ்? இரண்டு பேரும் ரகசியம் பேசிக்கறீங்க, அதை என்கிட்டயும் சொல்லலாம் இல்ல” என்றாள் செந்தாழினி

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.

“ராதிம்மா மிஸ்டர் யாதவை உனக்கும் தெரியுமா? நல்லதா போச்சு. உன்னையும் அவரோட ஆராய்ச்சிக்கு பிருந்தாவனத்திற்கு கூப்பிடுறார், போறீயாம்மா, உனக்கு தானே க்ரந்தா எழுத்துக்களை படிக்க தெரியும்?” என்றார் ஆருத்ரன் 

செந்தாழினி பதில் சொல்வதற்குள், “என்ன ராதிம்மாவா?” என்றான் பிரதாப் இடைபுகுந்து

“ஆமாப்பா எங்க குடும்பம் பர்சானாவில் வாழ்ந்த ராஜகுடும்பம். அங்கே தான் ராதை பிறந்ததா புராணங்கள் சொல்லுது. அதனால எங்க வீட்ல பிறந்த பெண்களை நாங்க செல்லமா ராதா, ராதிகானு பேரு வச்சு அழைப்போம். ஸ்கூல்லயும் வெளியிடங்கள்லயும் கூப்பிட செந்தாழினினு பேரு வச்சோம்” என்றார் விளக்கமாக

அவர்கள் பேச்சை கண்டுக் கொள்ளாமல் செந்தாழினி யாதவனையே ஆர்வத்துடன் பார்த்தபடி, “எப்போ கிளம்பணும் யாதவ்?” என்றாள்.

“இல்ல, நாங்க போறது ஆபத்தான இடம்னு உங்க அப்பாவே சொல்றாரு. நீங்க வர்றது சரியா இருக்காது. அதுமட்டுமில்லாம ஆண்கள் நாங்க எங்க வேணா தங்கிப்போம். உங்களால அது முடியாது. க்ரந்தா மொழி தெரிஞ்ச யாராவது ஆண் இருந்தா நாங்க தேடி கண்டுபிடிச்சுக்குறோம். உங்க உதவிக்கு நன்றி” என்று சொல்லியபடி எழுந்தவன் ஆருத்ரன் கொடுத்த புத்தகத்தை மேஜை மேலிருந்து எடுக்க போனான்.

அதற்குள் செந்தாழினி அதை குனிந்து எடுத்து விட்டு அவனை பார்த்து முறுவலித்தாள்.

“என்ன இது? உங்கப்பாவே என்கிட்ட கொடுத்த புக்கை நீங்க ஏன் எடுத்துக்கறீங்க? என்ன சார் இது?” என்றான் யாதவ் ஆருத்ரனை பார்த்து

“ராதிம்மா, என்ன இது? அவர்கிட்ட அந்த புக்கை கொடு”

“முடியாதுப்பா, அவர் என்னையும் அவர்கூட பந்திர்வன் காட்டுக்கு அழைச்சிட்டு போனா தான் தருவேன். இது நம்மோடது தானே, இவர் எடுத்துட்டு ஓடிட்டா என்ன பண்றது? நானும் கூட போனா தான் இதுக்கு பாதுகாப்பு” என்று ஓரப்பார்வையால் யாதவனை பார்த்துக் கொண்டே தந்தைக்கு பதில் சொன்னாள்.

“பிரதாப் கிளம்பு போகலாம்” என்று திரும்பிய யாதவனின் கைப்பற்றி நிறுத்தினான் பிரதாப்.

“சார், வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைச்ச கதையா, எல்லாம் கூடி வரும்போது இப்படி பண்றீங்களே சார்! அவங்க வந்தா உங்களுக்கு என்ன சார்? வழியில் முரளி சாரை பார்த்தா இந்த புக்கையும் செந்தாழினியையும் அவர்கிட்ட ஒப்படைச்சிட்டு நீங்க பாட்டுக்கு ஊர்பக்கம் கிளம்பி போகலாமே!” என்றான் பிரதாப்

“நீ சொல்றது போல நடந்துட்டா நிம்மதியா கிளம்பி ஊருக்கு போய்டுவேன் பிரதாப்” என்றான் யாதவ்

செந்தாழினியின் காந்த விழிகளை நேராக பார்க்காமல், “சரி சரி வந்து தொலை, ஆனா என்கிட்ட கொஞ்சம் தள்ளி இருக்கணும், புரியுதா?” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“அதையே தான் நானும் உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்” என்றவளை பார்த்து நன்றாக முறைத்துவிட்டு பிரதாப்புடன் கிளம்பி சென்றான்.

“யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ? யார் பெயரோடு யார் பெயரை இயற்கை எழுதி வைத்திருக்கிறதோ என்று இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top