எத்தனை முகங்கள்
என் முன்னால் கடந்தாலும்,
என் விழிகள் தேடுவது
உன் முகத்தை மட்டுமே…
கனவே சேராயோ?? 7
“எந்த ஹாஸ்பிடல்ல உனக்கு ட்ரீட்மென்ட் பார்த்த? டாக்டர் யாரு”? என்று கேட்டான் தேஜா.
“எல்லாமே என்னோட ரிப்போர்ட்ல இருக்கு சார். ஒன்னா, ரெண்டா?? நிறைய டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் பார்த்திருக்காங்க. ஹாஸ்பிடல் பேர் எஸ். கே ஹாஸ்பிடல். கே.கே நகரில் இருக்கு. எனக்கு ஆக்சிடென்ட்டும் அங்கதான் ஆச்சு. அதான் அவசரத்துக்கு அங்கேயே கொண்டு போய் சேர்த்துட்டாங்க. ஹாஸ்பிடல் செலவு பில்லு மட்டும் எவ்வளவு ஆச்சு தெரியுமா”?? என்று கேள்வியாக நிறுத்தினான்.
தேஜா புருவங்களை ஏற்றி இறக்கினான்.
“முப்பது லட்சத்தை தாண்டிடுச்சு சார். நல்லவேளை எங்க அப்பா எனக்கு மெடிகிளைம் போட்டிருந்தாரு. ஆனாலும் பட்ஜெட் அதிகமாகும் போது, ப்ராபர்ட்டிஸை வித்து என்னை காப்பாத்துனாரு.”
அவன் முகத்தை அவதானித்தவரையில் அவன் பொய் சொல்வதாக தெரியவில்லை தேஜாவிற்கு.
இப்போது அவனுடைய தந்தையுமே அவனை உன்னித்து பார்த்தபடியே, அவன் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.
இது போல அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் உண்மையாக இருக்குமா? என்று ஐயம் முதல் முறையாக அவருக்கு தோன்றியது.
“அப்புறம்”? என்று கேட்டான.
“நான் என்ன சார் கதையா சொல்றேன்?? எனக்கு ஆக்சிடென்ட்டான அன்னையிலிருந்து பிடிச்சது சார் சனி. மனுஷனுக்கு பின்னாடி நடக்க போறது முன்னாடியே தெரிஞ்சா எவ்வளவு பிரச்சனை வருமோ?? அவ்வளவு பிரச்சனையை நான் அனுபவிச்சேன். இப்பயும் அனுபவிச்சிட்டிருக்கிறேன்.” என்று விரக்தியாக கூறினான்.
“ஹாஸ்பிடல்ல நீ பார்த்ததை தவிர, வேற ஏதாவது, ஐ மீண் நீ வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் நீ கனவு கண்டது நடந்துச்சா”? என்று கேட்டான் தேஜா.
“ஒண்ணா ரெண்டா சொல்றதுக்கு?? ஹாஸ்பிடல்ல இருந்து மூணு மாசத்துக்கு கிட்டத்தட்ட பத்து விஷன் பார்த்தேன். அப்ப கடந்த இந்த மூணு வருஷத்துல எத்தனை விஷன் பார்த்திருப்பேன்”?? என்றான் சாவதானமாக.
“பரவால்ல சொல்லு? அதான் என் மீட்டிங்கை கேன்சல் பண்ண வச்சிட்டியே? உன் முழு கதையும் கேட்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன்” என்றான் தேஜா.
“சார் அவனுக்கு கனவுகள் வர்றது உண்மைதான். அதுல அவன் பாக்குறது எல்லாம் நடக்கிறதும் உண்மைதான். ஆனா இன்னைக்கு அவன் ஏதோ உளறுறான் சார். அவனுக்கு பைத்தியம் முத்திடுச்சின்னு நினைக்கிறேன். நான் அவனை கூட்டிட்டு போய் டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்குறேன் சார். ரிப்போர்ட்ஸ் எடுத்து வந்து உங்ககிட்டையும் காட்டுறேன். எங்கள விட்டுடுங்க சார்” என்றாள் மானசா.
அவள் பேச பேச அவளை அழுத்தமாக பார்த்தவன். மீண்டும் அவன் புறம் திரும்பினான்.
“சொல்லு? வீட்ல வந்ததுக்கப்புறம் என்ன எல்லாம் பார்த்தேன்னு.”
“விடுக்கா, அவருக்கு போர் அடிக்குது போல. கதை கேட்க ஆசைப்படுறாரு. நானும் இந்த கதையெல்லாம் ரீவைண்ட் பண்ணி எத்தனை நாள் ஆச்சு?? நீ அமைதியா உட்காரு அக்கா. நான் டீடைலா நடந்த கதையை சொல்றேன்” என்று தமக்கையிடம் கூறியவன்.
“ஊர்ல இருக்க தாத்தா மண்டைய போடுற மாதிரி கனவு கண்டேன். எங்க அம்மாவை பக்கத்து வீட்டு அங்கிள் கரெக்ட் பண்ண துடிக்கிறாரு. அவங்க வீட்டு பொண்ணு ஓடிப் போயிடும்னு கனவு கண்டேன். பக்கத்து தெருவுல திருடன் வந்து நகை எல்லாம் எடுத்துட்டு போயிடுவான்னு கனவு கண்டேன். ஆனா இதெல்லாம் சொன்னா, எங்க வீட்ல இருக்கவங்க அவங்க கிட்ட சொல்லல்ல. சொல்லி இருந்தா மே பீ தடுத்திருக்கலாம். அதனால இதெல்லாம் அப்படியே நடந்துச்சு. இது இல்லாம இன்னும் சின்ன சின்ன விஷயங்கள். பெரிய பெரிய விஷயங்கள்” என்று தேஜா சொல்லிக்கொண்டே போனான்.
“அப்போ உன்னோட பிரச்சனையே?? உன்னோட தூக்கம் தான். நீ தூங்காம இருந்தா உனக்கு கனவு வராது. அப்படித்தானே”? என்று கேட்டான்.
“சார் போக்கிரி படத்துல பிரகாஷ் ராஜ் தூங்காமல் இருக்கிறதுக்கு என்னென்னமோ பண்ணுவாங்களே?? அதுபோல என்னையும் தூங்க வைக்காம இருக்கறதுக்கு ஏதாவது பண்ணுவீங்களா”? என்று கேட்டுவிட்டான்.
“இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு. பாரேன் உனக்கு கொடுக்க வேண்டிய பனிஷ்மென்ட்டை நீயே சொல்ற”? என்று அவன் தோரணையாக சொல்ல.
“ஐயோ”! என்று தலையில் கையை வைத்துக் கொண்டான்.
“எரும மாடு, சும்மா இருக்க மாட்டியா”? என்று அவன் காலை மிதித்தாள் பாவையவள்.
தனியாக பேசுவதை விட. இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது, தேஜாவிற்கு சுவாரசியத்தை கொடுத்தது. ரசிக்க சொல்லியும் தூண்டியது. ஆனால் முகத்தில் அதை வெளி காட்டிக் கொள்ளவில்லை தேஜா.
“ரொம்ப சில்லியான விஷயம் எல்லாம் இருக்கு சார். பரவாயில்லையா”?? என்றவன் கேட்க.
“பரவாயில்லையே” என்று கூறினான் தேஜா.
“அக்காவோட கோல்டு கம்மல் காணாமல் போகப் போகுதுன்னு சொன்னேன். அதேபோல காணாம போயிடுச்சு. அது இருக்கிற இடத்தையும் சொன்னேன். அதுக்கப்புறம் தேடிப் பார்க்கும்போது கிடைச்சுது. என்னோட வாட்ச் அப்புறம் அப்பாவோட கார். அதுக்கப்புறம் அம்மாவோட ஹேண்ட் பேக். அக்கம் பக்கத்து வீட்டு கதைகள் கூட நிறைய இருக்கு சார். அப்புறம் பிரண்ட்ஸ். அவங்க வீட்டு பிரச்சினைகள். இப்படி சொல்லிட்டே போகலாம்” என்றான்.
“அப்படின்னா உனக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் கனவில் வருவாங்க”? என்றவன் கேட்க.
“இதுவரைக்கும் அப்படித்தான் சார் நடந்திருக்கு என்றான் நிர்மல் .
“இதுக்கு முன்னாடி, ஐ மீன் இன்னைக்கு இல்லாம, வேற என்னைக்காவது நீ என்னை பார்த்திருக்கியா”? என்று கேட்டான்.
உதட்டைப் பிதுக்கி தோள்களை குலுக்கியபடி இல்லை என்று பதில் கூறினான்.
“இன்னைக்கு காலைல உன் கனவுல வந்தது நான் தான்னா?? அப்ப நீ எங்கேயாவது என்னை பார்த்திருக்கணும் இல்லையா”? என்று கேட்டான்.
“சார் உங்கள பாக்கணும்னு அவசியம் இல்ல?? எங்க அக்கா கூட நீங்க தொடர்புடையவங்களா இருக்கீங்கள்ள?? ஐ மீன் எங்க அக்காவை எனக்கு தெரியும்ன்றதனால, அவங்களோட தொடர்புடைய கனவுகள் எனக்கு வரும். அதனால நீங்களும் கனவுல வந்தீங்க? பக்கத்து வீட்டு பொண்ணை தான் எனக்கு தெரியும். ஆனா அவங்க யாரு கூட ஓடிப் போனாங்களோ? அந்த ஆளையும் நான் கனவுல பார்த்தேன்” என்றான் அவசரமாக.
தேஜாவிற்கு புரிவது போல தான் இருந்தது.
“சூயரா, கனவுல என்னை தான் பார்த்தியா”? என்று கேட்டான் தேஜா.
அவன் தயக்கமாக தலையை கோதியபடி. ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.
“சரி, கனவுல என்ன பார்த்தேன்னு எலாப்ரேட்டா சொல்லு”? என்று நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.
அவன் தன் தமக்கையை திரும்பி பார்த்தான். அவள் பற்களை கடித்தாள். ‘இன்னைக்கு நைட்டுக்கு மண்டை கட்டு இருக்கு. சோறு போடுவாங்களான்னு தெரியலையே’? என்று சிந்தித்தபடி தேஜாவை திரும்பி பார்த்தான்.
அவன் நிர்மலையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ‘இவரு விடமாட்டார் போல? மாட்டுன டா நீ’ என்று நினைத்தவன் கனவில் கண்டதை சொல்ல ஆரம்பித்தான்.
“ஒரு பெரிய மண்டபம். அது கண்ணாடிகளால டெகரேட் பண்ணி இருக்கு. அந்த மண்டபத்தோட வாசல்ல எங்க அப்பா அம்மா நின்னு வர்றவங்களை வரவேற்கிறாங்க. அப்படியே உள்ள போனா மேடை மேல நீங்க உக்காந்திருக்கீங்க. யாருடா இவரு சம்பந்தமே இல்லாம நம்ம கனவுல வராருன்னு யோசிக்கும் போது தான். ஐயரு மணமகளை கூட்டிட்டு வாங்கன்னு சொல்றாரு. யாருன்னு திரும்பி பார்த்தா?? எங்க அக்கா” என்றவன் வாயை பிளந்து தன் தமக்கையை பார்த்தான்.
அவள் வெட்டவா குத்தவா?? என்று நின்று கொண்டிருந்தாள்.
‘அந்தப் பக்கம் திரும்பாதடா நிர்மளு. வாஸ்து சரி இல்ல’ என்று நினைத்தவன். தேஜாவின் புறம் திரும்பி அமர்ந்து கொண்டான்.
“அவளை என் சித்தியும் அத்தையும் கூட்டிட்டு வராங்க. எனக்கு ஒரே ஷாக். விடிய காலை மூணு மணிக்கு வந்த கனவு இதுதான். அதுக்கப்புறம் அதிர்ச்சியில எழுந்துட்டேன்.’
“அப்புறம் திருப்பியும் தூங்குனியா”? என்றவன் கேட்க.
நிர்மல், ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.
“அப்ப திரும்பவும் கனவு கண்டியா”? என்று தேஜா கேட்க.
“ஆமாங்க ஆமாம்” என்று சோகமாக கூறினான்.
“அப்ப என்ன வந்துச்சு”?
“பெரிய வீடு அதோட முன் பகுதி ஃபுல்லா ப்ளூ கலர்ல பெயிண்ட் அடிச்சு இருந்தது. ரெண்டு வைட் கலர் கார். அங்க வாசல்ல மஞ்சள் பூசி தெய்வ கடாட்சமா ஒரு அம்மா நிக்கிறாங்க. அவங்க கையில ஆரத்தி. அவங்க யாரையோ எதிர்பார்த்திருக்க. ரோஸ் டெகரேட் பண்ண கார் அந்த வீட்டுக்குள்ள வருது.”
அவன் ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்தி சொல்லும் போதெல்லாம், பார்வையை எங்கோ சுழற்றிய படி கூறியது. அவன் நினைவுகளை மீட்டு எடுத்துக் கொண்டு கூறுகிறான் என்பதை தேஜாவிற்கு புரிய வைத்திருந்தது.
அவன் பார்வை அவனையும் அறியாமல் மானசாவின் புறம் போனது. அவள் வாயை திறந்தபடி தன் தம்பியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கார்ல இருந்து நீங்க ரெண்டு பேரும் இறங்குரீங்க. மாப்பிள்ளை தோழனா நானும் கூட இருக்கிறேன். வாயை பிளந்தபடி உங்க வீட்ட அண்ணாந்து பார்க்கிறேன். நான் சொன்ன அந்த தெய்வ கடாட்சம் லேடி உங்க ரெண்டு பேரையும் நிக்க வச்சு, ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறாங்க.”
“அப்ப நாலஞ்சு பேரு ஜாடை மாடையா பேசுறாங்க. ‘பார்த்தியா?? வேலைக்கு சேர்ந்து கம்பெனியோட முதலாளியே வளைச்சு போட்டுட்டானு.’ ப்ளூ கலர் சாரி கட்டின ஆன்ட்டி சொல்றாங்க.”
“அதுக்கு ரெட் கலர் சாரி கட்டின ஆன்ட்டி, ‘பாக்க அழகா தானே இருக்காள்?? அதான் ஏதாவது பண்ணி வளைச்சு போட்டிருப்பானு பேசுறாங்க.’ அதைக் கேட்ட எனக்கு கோவம் வந்துருச்சு. அவங்கள போய் திட்டுறேன். உடனே நீங்க வந்து சமாதானப்படுத்தி வைக்கிறீங்க. பேசிட்டு இருந்த லேடியை ‘அத்தை தூரம் போங்கன்னு சொன்னீங்க.”
“அப்புறம் தான் நான் கவனிக்கிறேன். அங்க இருக்க எல்லாருமே எங்க அக்காவை ரொம்ப பொறாமையா பாக்குறாங்க. இதை வச்சு தான் அவளோட பாஸ் நீங்கன்னு எனக்கு தெரிஞ்சது.”
“எங்க அக்கா, சொன்ன வரைக்கும் என் பாஸ் சரியான சிடுமூஞ்சின்னு சொன்னாள். ஆனா நீங்க ரொம்ப ஹேண்ட்ஸமா இருந்தீங்க. அழகா சிரிச்சிட்டிருந்தீங்க. என்கிட்ட நல்லா பேசினீங்க. கல்யாணம் முடிஞ்சு உங்க கால்ல நான் மெட்டியை போடும்போது என்னை ஹக் பண்ணி என் கையில மோதிரத்தை போட்டீங்க” என்று அவன் புன்னகை ததும்ப கூறிக் கொண்டிருந்தான்.
“அப்புறம்”? என்று கேட்டான் தேஜா. அவன் சொல்வதெல்லாம் கண் முன்னால் நடப்பது போல தேஜாவிற்கே தோற்றமளித்தது. அவ்வளவு தத்துரூபமாக தோன்றியது. அவனுக்கே கல்யாண ஆசை துளிர் விட்டது.
“எங்க அம்மாவும் அப்பாவும் விட்டுட்டு போகும்போது ஒரே அழுகை. எங்க அக்கா என்னை கட்டி புடிச்சிட்டு அழுவுறாங்க. நான் இங்க இருக்க மாட்டேன். உங்க கூடவே வந்துடுறேன். அப்படி இப்படின்னு சொல்றாங்க. உடனே நான் பெரிய மனுஷ தனமா அவங்களை சமாதானப்படுத்துறேன். அவங்களுக்கு துணைக்கு அன்னைக்கு நைட் நானும் அங்கேயே தங்குகிறேன்” என்று அவன் தன் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
புருவம் ஏறி இறங்க மெச்சுதலாக சுளித்தவன். புன்னகையை அடக்கியபடி தன் உதடுகளை கட்டுப்படுத்திக் கொண்டான் தேஜா.
“அப்புறம்”? என்று மீண்டும் கேட்டான் தேஜா.