என் உயிரோடு கலந்த
என் காதலே
மீண்டும் சேராயோ…
…
கனவே சேராயோ?? 6
“அப்பா, காயினுக்கு ரெண்டு பக்கம் இருக்குற மாதிரி, எந்த பிரச்சினையா இருந்தாலும் அதற்கு ரெண்டு பக்கம் இருக்கும்னு நீங்க சொல்லிக் கொடுத்திருக்கீங்க. அவங்களோட இன்னொரு வெர்ஷன் என்னன்னு பார்க்கலாம்? உண்மையிலேயே இவங்க நாடகம் தான் நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சுதுனா?? அப்ப இவங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கலாம். இல்ல என்னோட இன்ஜினியர் சொல்ற மாதிரி, அவன் தம்பிக்கு ஏதாவது பிரச்சனை இருந்ததுனா மன்னிச்சு விட்டுடலாம்” என்று கூறியபடி மானசாவை பார்த்தான்.
அவளைத்தான் தன்னுடைய இன்ஜினியர் என்று கூறுகிறான் என்பது, தாமதமாகத்தான் அவளுக்கு உரைத்தது.
அதுவரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள். அவன் பார்வையை எதிர் நோக்கியதும், அவசரமாக பார்வையை தாழ்த்தினாள்.
“ம்ம்ம், சொல்றேன்ல?? போங்க, போய் அங்க உட்காருங்க” என்று
அங்கிருந்த வட்ட மேசையை பார்வையால் சுட்டிக்காட்டினான்.
வேறு வழியில்லாமல் தமக்கையின் கையைப் பிடித்தபடி மேசையை நோக்கி நடந்து சென்றான் நிர்மல்.
அந்த செய்கையில் அவர்கள் இருவரின் பிணைப்பு தேஜாவிற்கு புரிந்தது.
இம்முறை அந்த பெரிய சேரின் அருகில் எல்லாம் அவன் செல்லவில்லை. அவர்கள் அமர்ந்ததும். அதற்கு அருகில் இருந்து சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன். தந்தையை அழைத்து அவனுக்கு அருகில் இருந்த சேரில் அமர சொன்னான்.
“நான் என் எதிரிகளுக்கு கூட ஒரு சான்ஸ் கொடுப்பேன். அந்த ஒரு சான்ஸ் இதுதான் உங்களுக்கு. எனக்கு பொய் தேவை இல்லை. உண்மை மட்டும்தான் வேணும். இப்போ இன்னைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த டிராமாவுக்கான ரீசன் எனக்கு தெரியணும்”? என்று அழுத்தமாக கேட்டான்.
மகன் பேசுவதால், அவனுடைய தந்தை அமைதிக் காத்தார். ஆனால் இருவரையும் முறைக்க மறக்கவில்லை.
“சார் நான் சொன்னதெல்லாம் உண்மைதான். பொய்யில்ல. பொய் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. நீங்க கொஞ்சம் டைம் கொடுங்க. நான் வீட்டுக்கு போய் இவனோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து காட்டுறேன்” என்றாள் மானசா.
“என்ன பிரச்சனை இவனுக்கு”? என்று கேட்டான்.
அவள் வாயை திறக்க வர. அவளை கை பிடித்து நிறுத்தினான் சகோதரன்.
“சார், அந்த சோக கதையை நான் சொல்றேன். சரியா மூணு வருஷத்துக்கு முன்னாடி ரொம்ப ஆசையா வண்டி கேட்டேன். அதுவும் மூணு லட்சம் ரூபாய் இருக்கிற (Duke 250) டுயூக் 250. அப்பாவும் ஆசை ஆசையா தான் வாங்கி கொடுத்தாரு. ஆனால் என் போராத காலம் ஒரே மாசத்துல பெரிய ஆக்சிடென்ட்ல மாட்டிக்கிட்டேன். மூன்று லட்ச ரூபாய் ஸ்வாகா. வண்டி செம டேமேஜ். அதுக்கு மேல என் மண்டையும் டேமேஜ் ஆயிடுச்சு. ஹெல்மெட் போட்டிருந்ததுனால கொஞ்சம் உயிர் தப்பிச்சுது. இல்லன்னா அன்னைக்கே பரலோகம் தான்” என்று கழுத்தை கட் செய்வது போல செய்கை செய்து காட்டினான் நிர்மல்.
‘இதை கூட யாராவது இவ்வளவு லகுவாக கூறுவார்களா’?? என்ற எண்ணம் எழுந்தது தேஜாவிற்கு.
‘ஆனால் கூறிக் கொண்டிருக்கிறானே? அவனுடைய இயல்பே அதுதானோ?? எல்லாவற்றையும் விளையாட்டாக இலகுவாக பேசிக் கொண்டிருக்கிறான்.’ அவனை ஆழ பார்த்தவனுக்கு. அவனுடைய குணமே இதுதான் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது. அவனோ இன்னும் தன் கதையை தொடர்ந்து கொண்டிருக்க. தேஜாவும் அதில் கவனம் செலுத்தினான்.
“ஒரு வழியா என் அம்மாவோட வேண்டுதல்ல பொழச்சிட்டேன். ஆனா என்ன?? ஆபரேஷன் பண்ண வேண்டியதா போச்சு. ஆனா அந்த டாக்டருங்க எங்க அப்பாவோட பணத்தை எல்லாம் ஸ்வாகா பண்ணிட்டு தான் என்னை காப்பாத்துனாங்க” என்று கூறியவன். தன் முடியை தளர்த்தி காட்டினான்.
அதில் ஸ்டிச்சஸ்கான தழும்புகள் பெரிய கோடாக தெரிந்தது. அதுவே, பெரிய அடி தான் என்று தேஜாவிற்கு புரிய வைத்தது. இதற்காகத்தான் இவன் எவ்வளவு நீளமாக முடி வளர்த்திருக்கிறானோ என்று தோன்றியது.
தன் தலையை சாய்த்து அதை பார்த்தவன். மேலும் சொல்லும்படி பார்வையால் கட்டளையிட்டான்.
“அங்க தான் சார் புடிச்சது சனி. ஹாஸ்பிட்டல்லையே மூணு மாச டிரீட்மென்ட். எல்லாரும் வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் அலையோ அலைன்னு அலைஞ்சு, என் உயிரைக் காப்பாத்தி கொண்டு வந்தாங்க. ஆனா பிரச்சனை அதோட முடியல” கதை சொல்லுவது போல அவன் பேசிக் கொண்டிருக்க.
வெங்கடேசன் தன் கடுப்பை மறைக்க அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்தார். ஆனால் மகனை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி செய்தால், அது அவனை அவமானப்படுத்துவது போல் ஆகும் என்று தோன்றியது.
முதலில் அவருக்கு கீழாகத்தான் ஜீ. எம் மாக சேர்ந்தான் தேஜா. ஆனால் அவன் தொட்டதெல்லாம் துலங்கியது. அதில் அவனுடைய கடுமையான உழைப்பும் இருக்கத்தான் செய்தது. அவன் அறிவாற்றலை பார்த்து அவரே பிரம்மித்து போய்விட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்பாக நியூ ஐக்கானிக் அவார்டை பெற்றவன். இன்று வரை எல்லாவற்றிலும் ஏறு முகம் தான்.
அப்படிப்பட்டவனை வளைக்க எத்தனை பெண்கள், எத்தனை பெரிய ஜாம்பவான்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய இரண்டு சிறியவர்கள் வந்து வலைக்குள் இழுக்க பார்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அவன் தந்தையால் சும்மா இருக்க முடியுமா என்ன?? ஆனால் மகன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்.
“என்ன பிரச்சனை?? முதல்ல அதை சொல்லுங்க? என்று அழுத்தமாக கேட்டான் தேஜா.
“ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போதே பிரச்சனை ஸ்டார்ட் ஆயிடுச்சு சார். ஐ சி. யூவில் இருக்கும் போதே பக்கத்துல இருக்கறவங்க யார் யார் எப்ப சாக போறாங்கன்னு முதல் நாளிலேயே எனக்கு கனவுல வந்துருச்சு. அதை சொன்னா யாரும் நம்பல?? முதல்ல நானே நம்பல. ஒரு சாவுக்கு அப்புறம்தான் எனக்கே நம்பிக்கை வந்துச்சு. இதுல நானே போட்டு தள்ளிட்டேன்னு கூட என்மேல சந்தேகப்பட்டாங்க. இப்ப நீங்க எங்க மேல படுற மாதிரி. சி.சி.டிவி கேமரா எல்லாத்தையும் செக் பண்ணாங்க. என்னை காப்பாத்துனதே அந்த சிசிடிவி புண்ணியவான் தான்” என்று நிறுத்தினான் நிர்மல்.
இவன் கதை சொல்கிறானா?? அல்லது உண்மையாக நிகழ்ந்த நிகழ்வுகளா?? என்ற கேள்வி எழுந்தாலும். சுவாரசியமாகத்தான் இருந்தது தேஜாவிற்கு.
“தூக்கமே எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிடுச்சு சார். அப்படித்தான் ஒரு நாள் மதியானத்துல தூங்கிட்டேன். அப்ப கனவு வந்து தொலையனுமா?? ஆனா, வந்து தொலைச்சிடுச்சு. அதுவும் பக்கத்துல இருக்குற பத்து வயசு பொண்ணு பத்தி. இதுவரைக்கும் வந்ததுங்களாவது கிழடுகட்டைங்க. ஆனா அந்த பொண்ணுக்கு வந்தது ரொம்ப சங்கடமா போயிடுச்சு. அவளுக்கு ஏதோ சீரியஸாக போறதா தான் கனவு வந்துச்சு. உடனே டாக்டரை அலர்ட் பண்ணினேன். நான் ஏற்கனவே சொன்ன மூணு பேர் இறந்ததினால், கொஞ்சம் ஸ்லாக்னெஸா இல்லாம அந்த பொண்ணுக்கு உடனே ட்ரீட்மென்ட் குடுத்தாங்க. நல்லவேளையா அந்த பொண்ணு பொழச்சிட்டா. எனக்கு அப்பதான் நிம்மதியா மூச்சு விட முடிஞ்சுது.”
“அப்போ நீ கனவு கான்றது மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கு அப்படித்தானே”? என்று புருவங்களை உயர்த்தி கேட்டான் தேஜா.
“நான் எல்லாரும் சாகுற மாதிரி கனவு காணல. ஒரு பாட்டி மட்டும்தான் சாகுற மாதிரி கனவு கண்டேன். மத்தவங்க எல்லாம் உயிருக்கு போராடுற மாதிரி தான் கனவு கண்டேன். அதனால அந்த பொண்ண காப்பாத்திட்டாங்களோ என்னவோ?? எனக்கு இது எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல தெரியல?? ஏன்னா இதெல்லாம் என்னன்னு எனக்கே புரியல? டாக்டர்களுக்குமே புரியாமல் மண்ட காஞ்சி தான் இருந்தாங்க” என்றான்.
தேஜா புருவம் இடுங்க பார்த்தான்.
“அதுக்கப்புறம் என்ன?? எல்லாரும் என்னை வச்சு ரிசர்ச் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. சும்மா அடிபட்டிருந்தால் கூட ஒரு மாசத்துல வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்க. இந்த பிரச்சனையினால என்னை மூணு மாசம் ஹாஸ்பிடல்லையே வச்சிருந்தாங்க. அப்படி இல்லனா ஜெயிலுக்கு அனுப்பி இருப்பாங்க.”
“நல்லவேளையா என்னை அப்ப காப்பாத்துனது அந்த ஐ. சி. யூ ல இருக்க சி.சி. டிவி ஃபுட்டேஜ் தான். நான் என்னமோ தூங்கிட்டு தான் இருந்தேன். அவங்களா உயிருக்கு போராடி தான் செத்தாங்க. நீங்களே சொல்லுங்க சார்?? நானே கை-கால் உடைஞ்சு, மண்டை உடைஞ்சு உபகரணங்களுக்கு மத்தியில படுத்துட்டிருக்கும் போது. கஷ்டப்பட்டு இறங்கி போய் கொலை பண்ணுவேனா?? என் முகத்தை பாருங்க?? பால் வடியிற முகம். என்னால ஒருத்தரையே கொலை பண்ண முடியாதே?? இதுல மூணு பேர் எப்படி சார் கொலை பண்ண முடியும்”? என்று கேட்க.
தேஜா முகத்தை சுளித்தான்.
“ஓகே ஓகே பால்வடியில தான், ஒரு பேச்சுக்கு சொன்னேன். கால்ல நட்டும் போல்டும் முடிக்கி இருக்கும்போது என்னால நடக்கவே முடியாது. பெட் பேன்ல தான் யூரினே போனேன். அப்புறம் எப்படி சார் பக்கத்துல இருக்குறவங்கள கொலை பண்ண முடியும்?? அங்கிருந்த மரமண்டைகளுக்கு இது புரியல. ஹாஸ்பிடல் பேரை காப்பாத்திக்கறதுக்கு என்னை பலிகடா ஆக்க நினைச்சாங்க. ஆனால் எங்க அக்கா விடலையே. பாயிண்ட் பாயிண்டா கேள்வி கேட்டு என்னை காப்பாத்தினாள்” என்று நீண்ட பெருமூச்சோடு முடித்தான்.
“அப்புறம்?? அப்புறம் என்ன ஆச்சு”? என்று கேட்டான் தேஜா.
“அப்புறம் என்ன?? ரிசர்ச்சுன்ற பெயரில் என் மண்டையில நிறைய குழாவை மாட்டி செக் பண்ணதுக்கப்புறம், எனக்கு வரதுக்கு பேரு ஃப்ரீ கோக்கனட்டிவ் ட்ரீம்னு (Precognitive dream) (முன்கூட்டிக் காணும் கனவு) ஒரு முடிவுக்கு வந்தாங்க.. எனக்கு ஒரு சர்டிபிகேட் கொடுத்து வீட்டுக்கு போப்பான்னு அனுப்பி வச்சிட்டாங்க. இப்பயும் விடாது கருப்பு போல, என்ன கூப்பிட்டு அடிக்கடி எக்ஸாமின் பண்ணுவாங்க. ஃபாரின்ல இருந்து வர டாக்டர் ரிசர்ச்சுக்கு என்னுடைய மண்டையை யூஸ் பண்ணிக்கிறாங்க. ஆக்சிடென்ட்ல இருந்து தப்பிச்ச மண்டை, டாக்டருங்க கிட்ட மாட்டிக்கிச்சு.” சோகமாக கூறினான் நிர்மல்.
தேஜா தாடையை நீவியபடி அவனைப் பார்த்தான்.
“அவன் இஷ்டத்துக்கும் கதை சொல்லிட்டிருக்கான். நேத்து ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்துட்டு வந்திருப்பான். அவன் பண்ண வேலைக்கு பனிஷ்மென்ட் பண்ணாம? அவனை உட்கார வச்சு கதை கேட்டுட்டிருக்க”? குறைப்பட்டுக் கொண்டார் வெங்கடேசன்.
தந்தையை ஒரு பார்வை பார்த்தவன். அவருக்கு எதுவும் பதில் சொல்லவில்லை. பார்வையால் எதையோ அவருக்கு உணர்த்திவிட்டு. நிர்மல் புறம் திரும்பினான்.
ஏதோ அவனைப் பார்க்கும்போது அன்னியமாக தோன்றவில்லை. அவனும் நீண்ட காலம் பழகியவர்களிடம் பேசுவது போல தான் பேசிக் கொண்டிருந்தான். தேஜாவிற்கும் மனதினுள் ஏதோ ஒன்று பிசைந்தது. அதை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. நிர்மல் சொல்வதை நம்ப தான் தோன்றியது.
“ஓகே எனக்கு அந்த ரிப்போர்ட்ஸ் வேணும்” என்றான் தேஜா.
“சரி சார் வீட்டுக்கு போய் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றான் அவன்.
“மேல சொல்லு”? என்று கேட்டான்.
“என்னத்த சொல்றது சார்?? இந்த மூணு வருஷமா இதே மாதிரி கனவுகள் தொடர்ந்துட்டே இருக்கு. நான் எப்பெல்லாம் தூங்குறேனோ?? அப்பெல்லாம் கனவு வரும்னு அர்த்தம் இல்ல. சில நேரங்கள்ல தான் வரும். அப்படி வர்ற கனவுகள் எல்லாமே பலிக்குது. அதுதான் பிரச்சனை.
“சோ நீ கண்ட கனவுகள் எல்லாம் உண்மையா நடக்கும்ன்னு சொல்ற”? என்று தன் சீட்டின் முன்னாள் வந்து அமர்ந்து கேட்டான் தேஜா.
“இதுவரைக்கும் நடந்திட்டிருக்கு. ஆனா இனிமேலும் நடக்குமான்னு தெரியல”? என்றவன். தன் அக்காளையும் அவனையும் மாறி மாறி பார்த்தான்.
அவளோ பல்லை கடித்தாள். ‘இவன் தனக்கு முடிவு கட்டாமல் விடமாட்டான் போலயே’? என்ற ரீதியில்.