“அமுதா! செழியன் கொடுத்துட்டு போன போட்டோவையும் ஜாதகத்தையும் எடுத்துட்டு வா. அப்படியே வளர்மதி ஜாதகத்தையும் கொண்டா. ஜோசியர்கிட்ட போய் பொருத்தம் பாத்துட்டு வாரேன்” என்றார் செல்வரத்தினம் மனைவியிடம்
“வெறும் மல்லிங்கிற பேரை மட்டும் சொல்லி வீரமல்லிகிட்ட என்னய மாட்டி விட்ட மாதிரி, என் தங்கச்சியையும் கோர்த்து விட வேலை பாக்கறானா அந்த வளர்ந்தவன்?” என்று நக்கலாக சொன்னபடி முத்துபாண்டி கூடத்திற்கு வந்தான்.
சமையலறையில் இருந்த வீரமல்லி கையில் கரண்டியுடன் எட்டி பார்க்க, சட்டென மிடறு விழுங்கியன், “அண்ணன் எனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வச்ச மாதிரி, தங்கச்சிக்கும் மாப்பிள்ளை பாக்கறாரானு கேட்டுட்டு இருந்தேன் மல்லி” என்றான் பற்களை காட்டி
எச்சரிக்கையாக கரண்டியை காட்டி விட்டு அவள் உள்ளே சென்றதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
“ஏன்டா, உன் பொஞ்சாதி புள்ளை பொறப்புக்கு ஆத்தா வீட்டுக்கு போனா, நீயும் அவகூடவே வால் புடிச்சுட்டு போனவன் தானே? நேத்து தான் அவ கூடவே வந்தே! இதுல என்னமோ அவகிட்ட மாட்டிகிட்ட மாதிரி பேசுற?” என்றபடி கூடத்திற்கு வந்தார் அமுதா
“நீயும் உங்கப்பாவும் தான் மாப்பிள்ளை பாத்தீங்க. ஒன்னாச்சும் உருப்படியா இருந்துச்சா? செழியன் பாத்த மாப்பிள்ளை பாரு ராஜா மாதிரி ஜம்முனு இருக்காரு. வளர்மதி ஆசைப்பட்ட மாதிரியே மெட்ராஸ் மாப்பிள்ளையா பாத்திருக்கான்” என்று பெருமையாக பேசியபடி ஜாதகத்தையும் போட்டோவையும் முத்துபாண்டியிடம் கொடுத்தார்.
ஆர்யனின் புகைப்படத்தை பார்த்த முத்துபாண்டி “இவரை எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கே” என்று புருவம் சுருக்கினான்.
“செழியன் வீட்ல பாத்திருப்பே” என்றார் செல்வரத்தினம்
அறையில் இருந்தபடி வெளியே நடந்துக்கொண்டிருந்த உரையாடலை அசுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி, இப்போது கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.
“ஆமா செழியன் வீட்ல மட்டுமில்ல, அவர் கனிய இன்னொருக்கா திருப்பதியில பண்ணிக்கிட்ட கல்யாணத்துக்கு கூட வந்திருந்தாப்டி, பேர் கூட ஆர்யன்னு நினைக்கிறேன்”
‘ஆர்யனா?’ வளர்மதி திகைப்புடன் இருக்க,
“ஆமாடா, இன்னொரு விஷயம் தெரியுமா? அந்த இன்பாவுக்கு வளர்மதிய பேசி முடிக்காததுக்கு முன்னாடியே இவரோட அப்பா அம்மா நம்ம வளர்மதிய பொண்ணு கேட்டாங்க. அதுக்குள்ளாற என்னென்னமோ நடந்து போச்சு. செழியன் காலேஜ்ல இருந்து வளர்மதிய கூட்டிட்டு வரப்போ ஆர்யனோட வீட்டுக்கு நன்றி சொல்ல போய் இருக்கான். அங்கன அவர் அப்பா ஆதிசங்கரன் நம்ம வளர்மதிய பாத்துட்டு மறுபடியும் சம்பந்தம் பேசி இருக்காரு. வளருக்கு அவங்க வீட்ல தான் வாக்கப்படணும்னு விதிச்சிருக்கு போல” என்றார் அமுதா பெருமூச்சுடன்
‘ஐயோ ஆர்யனுக்கு அகல்விழி மேல விருப்பம் இருக்கறது தெரியாம அவரோட அப்பா செழியன் அண்ணன்கிட்ட என்னை பெண் கேட்டு சம்பந்தம் பேசியிருக்காரே. பாவம் அந்த ஆர்யன்’ என்று நினைத்தாள்.
‘ஆர்யன் அகல்விழிக்கிட்ட அவரை மாமானு சொன்னதும், அவளும் வெட்கப்பட்டா. அவரும் அவளுக்காக ஓடி வந்து உதவி எல்லாம் செஞ்சாரு. வீட்ல இருக்கறவங்க விஷயம் புரியாம அவருக்கு என்னை கட்டி வைக்க பாக்கறாங்களே, என்ன பண்றது? அகல்விழி கிட்ட சொல்லலாமா? செழியன் அண்ணாகிட்ட? கனிக்கிட்ட சொல்றது தான் சரியா இருக்கும். அதை விட ஆர்யன்கிட்டயே நேரடியா விஷயத்தை சொன்னா என்ன?
ஆமா, அவர்கிட்ட விஷயத்தை சொல்லிட்டா போதும். அவர் அவங்க அப்பா கிட்ட பேசி, அகல்விழிய பொண்ணு பாக்கற மாதிரி ஏற்பாடு பண்ணிடுவாரு. நமக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனா வீட்டுக்கு தெரியாம அவரை நேர்ல பார்த்து விவரமா சொல்லணும். அப்போ தான் அவருக்கு புரியும். தனியா எப்படி சென்னைக்கு போறது?’ என்று பலமாக யோசிக்க தொடங்கினாள்.
மறுநாளே வளர்மதியின் கவலையை தீர்க்கும் விதமாக, அகல்விழியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. “அக்கா காலேஜ்ல நம்ம புரபசருக்கு நாளைக்கு கடைசி வொர்க்கிங் டேவாம். பிரெண்ட்ஸ்ங்க அவருக்கு பேர்வெல் (farewell) பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்காங்களாம். வரச்சொல்லி போன் பண்ணியிருந்தாங்க. அண்ணன்கிட்ட சொன்னதுக்கு உன்னை கேக்க சொல்லுச்சு. போவோமா?”
அதெல்லாம் வேணாம் என்று சொல்ல நினைத்தவளுக்கு இது ஆர்யனை சந்திக்க கிடைத்த வாய்ப்பாகவே தோன்றியது.
“சரி போகலாம்”
“நிஜமாவா சொல்றே? என்னால நம்பவே முடியலயே? நீ வேணாம்னு சொல்லுவேனு நினைச்சேன்” என்றாள் அகல்விழி குதூகூலத்துடன்.
“நிஜமா தான் சொல்றேன். ஆனா நாம மட்டும் தனியா போகணும். அண்ணன் நம்ம கூட வரக் கூடாது”
“அண்ணன் வரக் கூடாதுனு நீயா சொல்றே? இன்னைக்கு உலகம் அழியப்போகுதுனு யாராச்சும் சொல்லிட்டாங்களா? ஆனா அண்ணன் வராம நாம எப்படி தனியா போக முடியும்?”
“அது எனக்கு தெரியாது”
“அண்ணன் வந்தா பிரெண்ட்ஸ் கூட ஜாலியா இருக்க முடியாது தான். நான் அப்பாவ வச்சு அண்ணனுக்கு ஏதாச்சும் வேலையிருக்கற மாதிரி செய்ய சொல்றேன்”
“சரி, விடியக் காலைல கிளம்பினா தான் சரியா இருக்கும். கிளம்பும் போது போன் போடு, ரெடியா இருக்கேன்” என்று போனை வைத்தாள்.
அகல்விழியும் தந்தை ராஜரத்னத்தின் உதவியுடன் செழியனை அன்றிரவே வெளியூருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தாள். அப்போதும் கிளம்பும் போது, “அகல், நீயும் வளர்மதியும் வேலுவை அழைச்சுட்டு ரயில்ல மொத வண்டிக்கு சென்னைக்கு கிளம்புங்க. அங்கே போனதும் வாடகை கார் எடுத்துட்டு காலேஜ் போங்க. போய் சேர்ந்ததும் எனக்கு போன் போட்டு சொல்லணும். சரியா?” என்றான் செழியன்
“சரிண்ணே” என்று நல்லபிள்ளையாக தலையாட்டியவள் வளர்மதிக்கு தகவல் சொல்ல, “வேலு அண்ணன் தானே, பரவால்ல. சென்னைக்கு போனதும் அவரை எம்ஜிஆர் சமாதி மெரினா பீச் எல்லாம் சுத்தி பாத்துட்டு வரச் சொல்லி அனுப்பிருவோம்”
“யக்கோவ் நீயா பேசறே? உனக்குள்ள ஏதாச்சும் ஆவி பூந்துருச்சா?”
“ஆவியும் இல்ல, பாவியும் இல்ல. காலைல சீக்கிரம் கிளம்பி வா. நான் கருப்பசாமி கோயிலாண்ட நிக்கறேன்” என்று போனை வைத்தாள்.
மறுநாள் காலை பதினொரு மணிக்கு மூவரும் சென்னையிலிருந்த அவர்களின் கல்லூரிக்கு வந்தனர். செழியனுக்கு தகவல் கொடுத்துவிட்டு வேலுவிடம் திரும்பிய வளர்மதி, “அண்ணா காலேஜ்க்கு வெளியே உட்கார்ந்திருந்தா உங்களுக்கு போர் அடிக்கும். நீங்க வேணும்னா எம்ஜிஆர் சமாதி, மெரினா பீச் எல்லாம் சுத்தி பார்த்துட்டு இருங்க. நான் பங்ஷன் முடிஞ்சதும் உங்களுக்கு போன் பண்றேன்”
“செழியன் தம்பி திட்டுமே” என்று தலையை சொறிந்தார். அவர் கண்களில் ஆசை தோன்றி மறைந்ததை கண்டு கொண்டவள், “நாம சொன்னா தானே அண்ணனுக்கு தெரியும்? நீங்க போய் பார்த்துட்டு வாங்க” என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கவும் வேலு கிளம்பி சென்றார்.
அவர் சென்றதும் அகல்விழி கல்லூரிக்குள் நுழைய எத்தனிக்க, அவளின் கரம் பற்றி நிறுத்தினாள் வளர்மதி. கேள்வியாய் அவள் பார்க்க, “என்கூட வா” என்றவள் அங்கே சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினாள்.
“அக்கா எங்கே போக போறோம்?”
“ஆர்யன் அன்னைக்கு உன்கிட்ட விசிட்டிங் கார்ட் கொடுத்தாரே, இருக்கா?”
“இருக்கு, எதுக்கு கேக்கறே?”
“கொடு சொல்றேன்”
அகல்விழி கார்டை எடுத்து நீட்ட, அதை வாங்கி ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தவள், “இதுல இருக்கற அட்ரஸ்க்கு போங்க” என்றாள்.
“எதுக்கு அங்கே போறோம்?” என்ற கேள்விக்கு வளர்மதி பதில் சொல்லாததால் “அக்கா உன்னை தான் கேக்கறேன்” என்று அடிக்குரலில் கத்தினாள் அகல்விழி.
“அங்க போனதும் சொல்றேன்” என்றவள் வேறு எதுவும் பேசவில்லை.
ஆட்டோவில் அதற்கு மேல் வளர்மதியிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் அகல்விழியும் அமைதியாக இருந்தாள். ஆட்டோ ஆர்யனின் புதிய அலுவலக வாசலில் நின்றது.
அண்ணாந்து பார்க்குமளவிற்கு பல மாடி அடுக்குகள் கொண்ட கட்டிடத்தை இருவரும் பார்த்தபடி உள்ளே நுழைந்தனர். அங்கே இருந்த வரவேற்பாளரிடம் ஆர்யனின் விசிட்டிங் கார்டை நீட்டி, “ஆர்யன் சாரை மீட் பண்ணனும்” என்றாள்
“அப்பாயிண்ட்மென்ட் வாங்கி இருக்கீங்களா?”
“இல்ல”
“என்ன விஷயம்னு சொன்னா, சார் கிட்ட கேட்டு சொல்லுவேன்”
வளர்மதி பதில் சொல்ல தயங்கவும், “அட்லீஸ்ட் உங்க பேரையாச்சும் சொல்லுங்க”
“வளர்மதி”
“சார் கிட்ட பேசிட்டு சொல்றேன். வெயிட் பண்ணுங்க” என்று அவர் காட்டிய நாற்காலியில் அமர போனவள் நினைவு வந்தவளாக, “வளர்மதினு சொன்னா அவருக்கு ஞாபகம் இருக்குமானு தெரியல. செழியனோட தங்கச்சினு சொல்லுங்க” என்றாள்.
“சரி சொல்றேன்”
சற்று தூரத்தில் நின்றிருந்த அகல்விழி குழப்பத்துடன் வளர்மதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆர்யன் சாரை எதுக்கு பாக்க வந்திருக்கே? அது ஏன் அண்ணனுக்கு தெரியக்கூடாதுனு நினைக்கிறே?” என்று அவள் பல்வேறு விதங்களில் கேட்டு பார்த்து பதிலில்லாமல் போகவே சோர்ந்து போய் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
வரவேற்பாளர் ஆர்யனை இன்டர்காமில் அழைத்து, “சார் உங்கள பாக்க வளர்மதினு” அவர் சொல்லி முடிக்கும் முன், “ரியலி?” என்றபடி நாற்காலியிலிருந்து அவசரமாக எழுந்தவன் சிசிடிவி திரையின் முன்னே வந்து நின்றான்.
அங்கே வளர்மதி மட்டுமே அவன் கண்களில் பட அவளின் உருவத்தை கண்களில் நிறைத்துக் கொண்டான். அடர்நீல நிறப்புடவையில் நீல நிலவாக நின்றிருந்தாள். நிலவின் மேடுபள்ளங்களில் மனம் தடுமாற தலையை உலுக்கி பார்வையை நிமிர்த்தினான், முகமெங்கும் வியர்வை துளிகள் முகாமிட்டு இருக்க, உதடுகளோ உலர்ந்து போயிருந்தது.
குளிர்சாதனப் பெட்டியில் குளிரை அதிகரித்தபடி “அவங்கள உடனே உள்ளே அனுப்புங்க. அவங்க பேசிட்டு வெளியே போற வரைக்கும் என் ரூமுக்கு யாரும் வரக்கூடாது. அன்ட் எனக்கு போனும் பண்ணக்கூடாது” என்று கட்டளையிட்டான்.
“ஓகே சார்” என்றவர் வளர்மதியிடம் ஓடிச்சென்று, “மேடம் சார் உங்களை வரச்சொல்றாரு” என்றார் பவ்யமாக
வளர்மதி முதலில் அறைக்குள் நுழைந்ததும் உள்ளே சில்லென்ற ஏசி காற்று அவள் முகத்தை வருடியது. புடவை தலைப்பால் முகத்திலிருந்த வியர்வையை துடைத்துவிட்டு பார்க்கும் போது ஆர்யன் அவன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு அவளையே ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் வெளியே இருந்த குளிர் உள்ளுக்குள்ளும் பரவியது.
“வாங்க மதி, நீங்க வருவீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணேன். ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவீங்கனு நினைக்கல” என்றான்.
“நான் வருவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணீங்களா?” குழப்பத்துடன் கேட்டவள் அறைவாயிலை பார்த்து, “அகல் உள்ளாற வா” என்று தங்கையை துணைக்கு அழைத்தாள்.
“ஓ தங்கச்சிய கூட்டிட்டு வந்திருக்கீங்களா? தனியா வந்திருக்கீங்கனு நினைச்சேன்” என்றவன் “வெல்கம் அகல்விழி” என்றான் புன்னகையுடன்
இருவரையும் அமரச் சொல்லி இருக்கையை காட்டியவன், தன் அறைக்குள் இருந்த போர்டபிள் பிரிட்ஜ்லிருந்த பழச்சாறை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
வளர்மதி அதை வாங்க மறுக்க, “வெயில்ல வந்திருக்கீங்க. லிப்ஸ் எல்லாம் உலர்ந்து போயிருக்கு பாருங்க. முதல்ல ஜூஸை குடிங்க” என்றான் அவளின் இதழ்களை பார்த்தவாறு
இருவரும் அதை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் “சொல்லுங்க மதி, செழியனுக்கு தெரியாம என்கிட்ட என்ன பேசனும்?” என்று அவன் நேரடியாக விஷயத்திற்கு வர, வளர்மதி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.
“அண்ணனுக்கு தெரியாம இவர்கிட்ட பேசறதுக்கு தான் என்னய சென்னைக்கு கூட்டிட்டு வந்தியா? அப்படி என்ன பேச போறே?” என்று அகல்விழி வேறு கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
“ரிலாக்ஸ், பயப்படாதீங்க. நான் உங்க அண்ணன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். என்ன பேசனும்னு வந்தீங்களோ தயங்காம வெளிப்படையா பேசுங்க” என்றான்.
“எங்க வீட்ல கல்யாண பேச்சு போயிட்டு இருக்கு, உங்களுக்கு தெரியுமா?” மெல்லிய குரலில் கேட்டாள்
“உங்க வீட்ல கல்யாண பேச்சு போயிட்டு இருக்கறது எனக்கெப்படி தெரியும்? யாருக்கு கல்யாணம்?” என்று கேட்டான் வேண்டுமென்றே
“உங்களுக்கும் எனக்கும் கல்யாணம்னு பேசிட்டு இருக்காங்க” என்றாள் தயங்கியபடி
“அப்படியா?” என்றான் ஆர்யன் ஆச்சர்யம் போல
அகல்விழி இதுதான் விஷயமா என்று திகைப்புடன் அக்காவை பார்க்க, அவளோ ஆர்யனின் ஆச்சர்யத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“நான் நினைச்சது சரியா போச்சு. உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாது தானே” என்று சகஜமாக பேசினாள்.
“ஆமா” என்றான் புன்முறுவலோடு
“அதுக்கு தான் அகல்விழி அழைச்சிட்டு நேர்ல சந்திச்சு உங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்”
“எனக்கு விஷயம் தெரியாதுனு நேர்ல வந்து சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றான் விஷம புன்னகையுடன்
“வந்த வேலை இவ்வளவு சுலபமா முடியும்னு நான் எதிர்பார்க்கல. இதுக்கு மேல மத்த விஷயங்கள நீங்க பாத்துப்பீங்க தானே” என்றாள் நிம்மதி பெருமூச்சுடன்
“என்ன மத்த விஷயம்?” புருவம் சுருக்கினான்
“அதான் உங்களுக்கு அகல்விழிய தானே புடிக்கும். அண்ணன்கிட்ட தயங்காம சொல்லிடுங்க. அப்போ தான் பொண்ணு பாக்கும் போது குடும்பத்துல குழப்பம் வராது”
“நான் எப்போ அகல்விழிய புடிக்கும்னு சொன்னேன்?” ஆர்யன் அதிர்ச்சியோடு அகல்விழியை பார்க்க, “என் அக்காவுக்கு மறை கழண்டுருச்சுனு நினைக்கிறேன்” என்றவள்
வளர்மதியை இழுத்து “காலைல கிளம்பும் போது மூளைய கழட்டி கருப்பசாமி கோயில்ல படையல் போட்டுட்டு வந்துட்டியா?” என்றாள் எரிச்சலுடன்.
“ஏய், எனக்கு உன் மனசு தெரியும்டி. இவர் உன்கிட்ட அவரோட மாமானு சொன்னதும் நீ எப்படி வெட்கப்பட்டே! அவரும் உன்மேல இருக்கற ஆசையால தானே அப்படி சொன்னாரு. நீ போன் போட்டதும் ஓடிவந்து உதவியெல்லாம் செஞ்சிருக்காரு. உங்க ரெண்டு பேரோட மனசு தெரியாம நம்ம அண்ணனும் இவரோட அப்பாவும் எனக்கும் இவருக்கும் கல்யாணம் பேசிட்டு இருக்காங்க. அதை தெளிவு படுத்தறதுக்கு தான் நான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றாள்.
‘நாசமா போச்சு’ என்று தலையில் கைவைத்துக் கொண்ட ஆர்யன், அகல்விழியை பார்த்து, “நான் சொன்னதோட அர்த்தம் வேற, நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க, நானும் கவனிக்கல. ரியலி ஐயம் வெரி சாரிம்மா”
“ஐயோ அதெல்லாம் இல்ல சார். பிரெண்ட்ஸ்ங்க உங்கள காட்டி என்னை கலாய்ச்சிட்டே இருந்தாங்க. நான் சும்மா அவங்க முன்னாடி வெட்க படற மாதிரி சிரிச்சேன். ஒரே நாள்ல மனசுல ஆசைய வளர்த்துக்கறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. சில சமயம் யாராச்சும் பிளர்ட் பண்ணா நம்மளையும் அறியாம வெட்கம் வந்துடும். அதுக்காக உடனே அவங்களை விரும்பிடுவாங்களா என்ன? அதுமட்டுமில்லாம நீங்க என்னைய சரியா கூட கவனிச்சு பாக்கலனு எனக்கு அப்பவே தெரியும்.
மாமானு கூப்பிட சொன்னது மட்டும் தான் குழப்பமா இருந்துச்சு. அன்னைக்கு எங்கண்ணா கிட்ட பேசனதுக்கு அப்புறம் தான் நான் ஓரளவு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்”
“என்ன தெரிஞ்சுக்கிட்டே?” என்றான் ஆர்யன்
“நீங்க என் அக்காவை கட்டிக்கிட்டா எனக்கு மாமா தானே. அந்த முறைய தான் சொல்லியிருக்கீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்”
“உங்க அக்காவ விட நீ புத்திசாலி தான்” பாராட்டினான்
“எக்ஸ்க்யூஸ் மீ, ரெண்டு பேரும் என்னைய பத்தியா பேசிட்டு இருக்கீங்க?” வளர்மதி இருவரையும் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“ம், வளர்மதினு பேர் வச்சிருக்கறதால உன்னோட மதி இன்னும் வளரும் மதியாவே இருக்கே தவிர, மதி வளர்ந்த மாதிரியே தெரியல” என்று உதட்டை பிதுக்கினாள் சின்னவள்.
“அகல்விழி, என் எதிர்லயே மதியை கிண்டல் பண்ணி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன். பாத்துக்க” என்று பொய்யாக மிரட்டினான் ஆர்யன்.
“நீங்க மிரட்டுனா நானும் சும்மா இருக்க மாட்டேன். கோவிச்சுக்கிட்டு வெளியே போயிருவேன்” என்று அவன் பாணியிலேயே கூறியவள் அறையை விட்டு வெளியேறினாள்.
“அகல் நில்லுடி” என்ற வளர்மதியின் அழைப்பை அவள் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அவளுடனே சென்று விடலாம் என்று பார்த்தால் ஆர்யனிடம் அவளுடனான திருமணத்தை நிறுத்துவதை பற்றி பேச வேண்டியிருந்தது.
திரும்பிய போது ஆர்யன் அவளுக்கு எதிரே நெருங்கி நின்றிருந்தான். அந்த ஏசி அறையிலும் அவளுக்கு இப்போது வியர்த்து வழிந்தது.
(தொடரும்)