பெரியகுளம் கிராமம், செல்வரத்தினம் வீட்டின் வெளிப்புற வாசலில் செங்கதிர் செழியனின் இருசக்கர வாகனத்தின் உறுமல் கேட்டதும் வாசலுக்கு ஓடி வந்தாள் வளர்மதி. அவள் கண்கள் அழுது வீங்கியிருந்ததை கவனித்த செழியன், “பாப்பா என்னாச்சுடா? ஏன் உடனே வர சொன்னே?” என்றபடி வண்டியிலிருந்து இறங்கினான்.
அதற்குள் செல்வரத்தினமும் அமுதாவும் வாசலுக்கு வந்து செழியனை வரவேற்றனர்.
“செழியா உள்ளாற வா, எதுக்கு வெளியே நின்னு பேசிட்டு இருக்கற, அடியே வளரு, அண்ணன உள்ளாற வரச்சொல்லாம சிலை மாதிரி நின்னுட்டு கிடந்தா என்னா அர்த்தம்?” என்று அமுதா மகளை கடிந்துக் கொண்டார்.
“அவள எதுக்கு திட்றீங்க? நான் இப்ப தான் வந்தேன். அவசர வேலையா டவுனுக்கு போவலாம்னு கிளம்பிட்டு இருந்தேன். உடனே வான்னு போன் போட்டதும் என்னவோ ஏதோனு வந்தேன். பாப்பா கண்ணு ஏன் வீங்கி போயிருக்கு? ஏதாச்சும் அவளை திட்டுனீங்களா?” என்றவன் செல்வரத்தினத்தை முறைத்தான்.
“நான் எதுவும் அவன் தங்கச்சிய சொல்லிடல. நல்ல சம்பந்தம் வந்திருக்குனு பொண்ணு பாக்க வரச்சொல்லிட்டு இருந்தேன். அதுக்கே அழுது ஊர கூட்டிட்டு இருக்கா” என்றார் அவர் எங்கோ பார்த்தபடி
“யாரு என்னனு விசாரிக்காமலே பொண்ணு பாக்க வரச்சொல்லிடுவாராமா? அப்போ நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்? வளர் விஷயத்துல நான் ஒதுங்கி போறதா இல்ல. பண்ண வரைக்கும் போதும், அவ கல்யாண விஷயம் என் பொறுப்பு. யாரும் தலையிடாதீங்க. அம்புட்டு தான் சொல்லுவேன்” என்றான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு
அமுதா இப்போது கணவரை பார்க்க, “பொறுப்ப ஏத்துக்கிட்டவன் அதுக்கான வேலைய பாக்கணும். படிப்பு முடியட்டும்னு சொல்லி என் வாயை கட்டி போட்டீங்க. இப்போ படிப்பும் முடிஞ்சாச்சு, எப்போ கல்யாணம்னு எல்லாரும் கேட்டுனு இருக்கானுங்க. பையனுக்கு கல்யாணத்தை முடிச்சிட்டு வயசு பொண்ண வீட்ல வச்சிருந்தா நல்லாவா இருக்கு?” என்றவர் மகளிடம் திரும்பி, “அண்ணங்காரனுக்கு போன் போட்டு வர சொல்ல தெரியுதில்ல. வந்தவனுக்கு காபி தண்ணி கொடுக்க தெரியாதா? போய் கொண்டா” என்றார் அதட்டலாக
தங்கையை அதட்டவும் செழியன் கோபத்தோடு சித்தப்பனை பார்த்தான்.
“அவள உள்ளாற அனுப்பறதுக்காக தான் திட்டினேன். இன்பா ஜெயிலுக்கு போய் மூணு வருஷமாச்சு. தண்டனை காலம் முடியப்போவுதுனு கேள்விப்பட்டேன். அவன் வாரதுக்குள்ள வளருக்கு கண்ணாலத்த முடிச்சுடணும். ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்துட்டா நானும் நிம்மதியா இருப்பேன். அதுக்கு தான் அவசரமா மாப்பிள்ளைய பாக்க சொல்லி பொண்ணு பாக்க வரச்சொன்னேன்” என்றார் மெல்லிய குரலில்
“அதுக்காக ஊர்பேர் தெரியாதவன்கிட்ட அவளை கட்டிக் கொடுத்துட்டா, பிரச்சனை எல்லாம் அத்தோட முடிஞ்சிடுமா?”
“என்னைய என்ன பண்ண சொல்றே?”
“வளர்மதியை பத்தி முழுசா தெரிஞ்சவனுக்கு தான் அவளை கட்டி கொடுக்கணும். அப்போ தான் நாளை பின்ன கண்ணை கசக்கிட்டு வந்து நிக்க மாட்டா”
“கல்யாணம் பேசி தடை பட்ருச்சுனு மேலோட்டமா சொல்லியிருக்கேன்”
“அது போதாது. இன்பரசு ஜெயில்ல திருந்திட்டான்னு நாம சொல்ல முடியாது. அவனால வளரோட கல்யாண வாழ்க்கையில பிரச்சனை வந்தா என்ன பண்றது?”
“என்னென்னவோ சொல்றீயா செழியா? வயித்துல புளிய கரைக்கற மாதிரி இருக்கு” என்றார் அமுதா கலக்கத்துடன்
“என்னை மீறி அவனால எதுவும் பண்ண முடியாது சித்தி. இருந்தாலும் நாம ஜாக்கிரதையா இருக்கணும், பாப்பாவை நல்லா புரிஞ்சுக்கிட்ட ஒருத்தனுக்கு தான் அவளை கட்டிக் கொடுக்கணும்”
“அப்படி ஒருத்தன எங்கிட்டு போய் தேட சொல்லுத? அந்த ராஸ்கல் வாரதுக்குள்ளாற வளர்மதி கண்ணாலத்தை முடிச்சாகணும்” என்றார் செல்வரத்தினம்
“தேட வேண்டிய அவசியமே இல்ல. நீங்க வளர்மதிக்கு ஏற்கனவே பார்த்து வச்ச மாப்பிள்ளை ரெடியா இருக்காரு. நீங்க சரினு சொன்னா பொண்ணு பாக்க வர சொல்றேன்”
“ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளையா? யார சொல்லுதே?” நாடியை தடவியபடி யோசித்தார்
“இன்பரசு வளர்மதி கண்ணாலம் முடிவாகறதுக்கு முன்னாடி வெளியூர் தரகர் கிட்ட வளர்மதிக்கு சென்னையில மாப்பிள்ளை பாக்க சொன்னீங்களா?”
“ஆமா, ஒரு குடும்பம் பொண்ண பிடிச்சிருக்குனு சொல்லி, பாக்க வரலாமானு கேட்டதா தரகர் சொன்னாரு. பையனோட அப்பா ஆதிசங்கரன், அம்மா பார்வதினு சொன்ன மாதிரி ஞாபகம்” என்றார் செல்வரத்தினம் யோசனையுடன்
“அவங்களே தான். இன்பரசு வேலை செஞ்ச கம்பெனியோட முதலாளியும் அவங்க தான். அவங்க மகன் பேரு ஆர்யன். அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா அவரோட அம்மா காலமாயிட்டாங்களாம்”
“இந்த விஷயம் உனக்கெப்படி தெரியும்?”
“நிஷானு ஒரு புள்ளைய இன்பா ஏமாத்திட்டானு தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்க. அந்த புள்ளையும் ஆர்யனும் பிரெண்ட்ஸ். அந்த சமயத்துல நம்ம வீட்டுக்கு வந்தாரு, வளர்மதிய பாத்திருக்காரு. நடந்த விஷயமெல்லாம் கேள்விப்பட்ட பின்னாடியும் அப்பவே என்கிட்ட உங்க தங்கச்சிய கட்டி கொடுங்கனு கேட்டாரு. நான் தான் இப்போதைக்கு அவ மனசு ஒரு நிலையில இல்ல. படிக்கட்டும் அப்புறம் பாக்கலாம்னு சொன்னேன்.
மனுசன் நான் சொன்னத நம்பி மூணு வருஷம் நம்ம பாப்பாவுக்காக காத்திட்டு இருந்திருக்காரு. அவருக்கு அவங்க அம்மா பாத்த பொண்ணுனு வேற மனசுக்குள்ள இருக்கு. அவர விட நம்ம வளர்மதிக்கு பொருத்தமான மாப்பிள்ளைய எங்கே தேடினாலும் கிடைக்காது”
“அப்புறம் எதுக்கு காத்திட்டு இருக்கணும்? அவங்கள உடனே வரச்சொல்லு, பேசி முடிச்சிடலாம்”
“அதுக்கு முன்னாடி வளர்கிட்ட பேசிடறேன்” என்று செழியன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வளர்மதி காபி டம்ளருடன் வந்தாள்.
“உள்ளாற வாண்ணே”
“இருக்கட்டும், இன்னொரு நாள் வரேன்”
பங்காளி சண்டை நடந்து முடிந்திருந்தாலும் செழியன் எப்போதும் சித்தப்பனின் வீட்டுக்குள் செல்வதே இல்லை. எதுவாக இருந்தாலும் வீட்டு வாசலிலேயே நின்று பேசிவிட்டு போவான்.
“ஏன் உள்ளாற வரவே மாட்டேங்கிறே? எனக்காக கூட வர மாட்டியா?” என்றாள் வளர்மதி பொறுமையிழந்து
“கண்டிப்பா உன் கண்ணாலத்த பேசி முடிக்கறப்போ உள்ளாற வருவேன்”
“நீயும் இவிங்க கூட சேர்ந்துட்டியா?” என்று அலுத்துக் கொண்டே காபி டம்ளரை செழியனிடம் நீட்டினாள்.
அதை வாங்கியவன் தங்கையை அழுத்தமாக பார்த்தபடி, “எனக்கு வாக்கு கொடுத்திருக்கியே, நினைவிருக்கா?” என்றான்.
மிடறு விழுங்கியபடி அண்ணனை பார்த்தாள். அவன் என்ன சொல்ல போகிறான் என்பது அவள் அறியாததா என்ன?
“படிப்பு முடிஞ்சதும் நான் சொல்றவனை கட்டிக்கறேன்னு சொல்லியிருக்கே. பொண்ணு பாக்க வரச்சொல்லலாம்னு இருக்கேன். என்ன சொல்றே?”
“இவிங்க உன் மூளைய கழுவிட்டாய்ங்களா? முன்ன பின்ன தெரியாதவன கட்டிக்கிட்டு போக மாட்டேன்”
“சரி, அவிங்க சொல்றவன் வேணாம். முன்ன பின்ன தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு. அவரை வர சொல்லலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்லுதே”
அண்ணனை எதிர்த்து பேச முடியாமல் திணறியவள், “எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்” என்றாள் தலையை குனிந்து கொண்டு
“சரி எப்போ கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லு” என்றான் விடாமல்
அவளிடம் பதில் இல்லை.
“உனக்கு யார்மேலயாச்சும் விருப்பமிருந்தா சொல்லு, அவனையே கட்டி வைக்கிறேன்” என்றான் செழியன்.
“எனக்கு யார் மேலயும் விருப்பமே வராது”
“அப்போ நான் சொல்லறவனை கட்டு. தானா விருப்பம் வரும்”
‘முடியாது’ என்று சொல்ல வாயை திறந்தவள் செங்கதிர்செழியனின் சிவந்த கண்களை பார்த்ததும், அண்ணன் கோபத்தில் இருக்கிறான் என்று உணர்ந்து வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள்.
“மாப்பிள்ளை வீட்டாரை வர சொல்லவா? உனக்கு பின்னாடி அகல்விழி இருக்கா. உனக்கு முடிஞ்சதும் அவளுக்கும் பாக்கணும். அண்ணங்காரனுங்க நாங்க மட்டும் வருஷத்துக்கு ஒன்னுனு பெத்து போட்டுட்டு இருந்தா ஊர்காரங்க முன்னாடி விட்டு பின்னாடி பொறணி பேசுவாய்ங்க”
“அவங்க பொறணி பேசறதுக்காக என்னய கண்ணாலம் கட்ட சொல்றீயா?” உதட்டுக்குள் முனகினாள்.
“என்னைக்கு இருந்தாலும் கல்யாணம் பண்ணி தானே ஆகணும்? தனியாவே இருந்துடுவியா?”
“இருப்பேன்” என்றாள் மெல்லிய குரலில்
“அப்படி தனியாவே இருக்கறதா இருந்தா செழியன்னு ஒரு அண்ணன் இருக்கிறாங்கிறதையே மறந்துடு. உனக்காக மட்டும் தான் இந்த வீட்டு வாசப்படியில நின்னு பேசிட்டு இருக்கேன். இனிமே அதுக்கும் அவசியமில்ல. நான் வாரேன்” என்று கையில் இருந்த காபி டம்ளரை வீசியெறிந்து விட்டு தன் இருசக்கர வாகனத்தில் ஏறினான்.
வளர்மதி வேகமாக சென்று அவன் வண்டியில் இருந்த சாவியை எடுத்தாள்.
“கோபமா வண்டியில போவாதண்ணா. தண்ணி குடிச்சிட்டு போ”
“இனிமே உன் கையால பச்சை தண்ணி கூட குடிக்கறதா இல்ல” என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு
“நீ கூட என்னைய புரிஞ்சுக்காம கண்ணாலத்துக்கு கட்டாயப்படுத்துனா எப்படி அண்ணா?” என்றாள் கமறும் குரலில்
“நான் உன்னைய கட்டாயப் படுத்தறனா? உன்னோட படிப்பு முடியறதுக்குள்ளாற உன் அப்பாவும் சின்ன அண்ணனும் எத்தனை சம்பந்தம் கொண்டு வந்தாங்கனு அவங்களையே கேளு. எல்லாத்தையும் வேணாம்னு சொல்லி தடுத்திருக்கேன். எதுக்கு? என் தங்கச்சி எனக்கு கொடுத்த வாக்கை மீற மாட்டானு நினைச்சேன். ஆனா அது நடக்கல, இனி யாரும் என்கிட்ட பேச வேணாம்” என்றான் முகத்தை திருப்பிக்கொண்டு
வளர்மதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பாவமாக செழியனை பார்க்க அவனோ எட்டி அவள் கையிலிருந்த சாவியை பிடுங்கி கொண்டு வண்டியை திருப்பி புழுதி பறக்க சென்றான். அவன் செல்லும் வேகத்திலேயே அவன் கோபம் தெரிந்தது.
வளர்மதி வீட்டிற்குள் ஓடி தன் கைபேசியை எடுத்து கனிஇதழிக்கு அழைத்தாள். “அண்ணா என்கிட்ட கோவிச்சுக்கிட்டு போயிருச்சு. இதுக்கு மேல என்கிட்ட பேசாதாம்” என்று அவள் ஓவென்று கதறி அழ, கனிஇதழியோ பதறி போனாள்.
“வளரு, என்ன நடந்துச்சுனு சொன்னா தானே தெரியும்? அழாம நடந்தத சொல்லு. மாமா வந்ததும் நான் சமாதானம் செய்யறேன்” என்றாள்.
வளர்மதியும் நடந்ததை சொல்ல, “மாப்பிள்ளைய பொண்ணு பாக்க தானே வர சொல்லியிருக்காங்க. அவர் வரணும், எல்லாத்துக்கும் புடிக்கணும், எம்புட்டு வேலை இருக்கு? நீ ஏன் கவலை படறே? கல்யாண பேச்சு ஆரம்பிச்சு, அது முடியறதுக்கே வருஷக் கணக்கா ஆயிடும். அதுக்குள்ளாற மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிக்கலனு கூட சொல்லிடலாம். வரட்டும் பாத்துக்கலாம்”
“வரசொல்லிட்டு அப்புறம் எல்லாம் கைய மீறி போயிட்டா என்ன பண்றது கனி?”
“நான் இருக்கும் போது எப்படி கையை மீறி போயிடும்?”
“கனி இந்த விஷயத்துல நீ எனக்கு உதவி செய்வியா?”
“கண்டிப்பா செய்வேன்டி. அதுல உனக்கென்ன சந்தேகம்?”
“நீ எங்க அண்ணன் சொல்றது தானே கேப்பே”
“மாமாவ கட்றதுக்கு முன்னாடியே நீ எனக்கு பிரெண்ட். உனக்கு பொறவு தான் மாமா. உனக்கு உதவி செய்யாம யாருக்கு உதவி செய்ய போறேன். நீ தைரியமா இரு. நான் பாத்துக்கறேன்”
“என்ன பண்ண போறே?”
“அது சஸ்பென்ஸ்”
“சொந்த அண்ணங்காரன் கெட்டவன்னு தெரிஞ்சதும் என் வாழ்க்கைய காப்பாத்தறதுக்காக நம்ம ரெண்டு பேர் கல்யாணத்தையும் பிளான் போட்டு நிறுத்தினவ நீ. அந்த நம்பிக்கையில தான் உன்னைய நம்பி அண்ணன்கிட்ட பொண்ணு பாக்க வர சொல்லுனு சொல்ல போறேன். சொல்லிடலாமா?”
“என்னைய நம்பாம வேற யார நம்ப போறே?” எனும் போதே செழியனின் வண்டி சத்தம் கேட்டது.
“உன் அண்ணன் வந்துட்டாரு, முகத்தல எள்ளும் கொள்ளும் வெடிக்குது. போனை தாரேன். சம்மதம்னு மட்டும் சொல்லு. மத்ததை நான் பாத்துக்கறேன்”
“உன்னை நம்பி தான் அண்ணன்கிட்ட சம்மதம் சொல்ல போறேன் கனி” வளர்மதி பேசிக் கொண்டிருக்கும் போதே கனிஇதழி வாசலுக்கு ஓடினாள்.
“மாமா, வளர்மதி லைன்ல இருக்கா. உன் கிட்ட பேசணுமாம்”
“நான் பேச மாட்டேன்னு சொல்லு”
“என்ன சொல்றானு தான் கேளுங்களேன்” என்றாள் கண்களை சிமிட்டி
செழியன் கனியை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே கைபேசியை வாங்கி காதில் வைத்தான்.
“அண்ணா நீ என்ன சொல்றீயோ கேக்கறேன். யாரை வேணும்னாலும் பொண்ணு பாக்க வரச்சொல்லு”
“நிஜமா தான் சொல்றீயா? அப்புறம் மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்த பின்னாடி அவங்க கிட்ட கட்டாயப்படுத்துறாங்கனு சொல்லக் கூடாது. அது எனக்கு தலைகுனிவா போயிரும்”
“நான் அப்படி சொல்ல மாட்டேன். ஒருவேளை மாப்பிள்ளைக்கு என்னய பிடிக்கலனா?”
“பிடிக்கலனு சொல்றவனுக்கு உன்னைய கட்டி வைப்பனா?”
“சரிண்ணா வரச்சொல்லு”
அழைப்பை துண்டித்தவன் “ரெண்டு பேரும் என்னடி பிளான் போட்டு வச்சிருக்கீங்க?” மனைவியை சந்தேகத்துடன் பார்த்தான்.
“பிளானா? அப்படின்னா?” என்று அப்பாவியாய் கண்களை அகல விரித்தாள்.
“அடிங்க” என்றவன் அவளின் காதை பிடித்து திருகியபடி அவர்களின் அறைக்குள் அழைத்து சென்றான்.
உள்ளே சென்றதும் கதவை தாழிட்டு அவளின் நாடியை இறுகப்பற்றி, “கண்ணாலம் வேணாம்னு என்கிட்ட நேராவே சொன்னவ, நீ போன்ல பேசினதும் ஒத்துக்கிட்டாளே? எப்படி? என்ன பிளான் போட்டு வச்சிருக்கே?”
“நான் எந்த பிளானும் போடல மாமா, அவளே”
மேற்கொண்டு பேசவிடாமல் கனிஇதழியின் இதழ்களை விரல்களால் நசுக்கினான். “என் காதுல பூவ சுத்தி கழுத்துல தாலிய வாங்கினவ தானே நீயி, என்னய நம்ப சொல்றீயா?”
“உங்கள ஏமாத்தினதுக்கு தண்டனையா தான் கையில ஒன்னுனு வயித்துல ஒன்னுனு கொடுத்துட்டீங்களே” என்றாள் அவளும் விடாமல்
“பேச்சை மாத்தாதடி. என்ன சொல்லி பாப்பாவ சம்மதிக்க வச்சே?”
“அவ பாப்பாவா? என் புருஷனை ஏமாத்தறதுக்கு என்னையே கூட்டு சேர்க்கறா. நானும் அவ போக்குலயே பேசியிருக்கேன். முதல்ல ஆர்யனை பொண்ணு பாக்க வரச்சொல்லுங்க. எல்லாம் நீங்க நினைச்ச மாதிரி நடக்கும்”
“வளர் உனக்கு பிரெண்ட் ஆச்சே, உன்னை நம்பலாமா?” என்றான் புருவம் உயர்த்தி
“நான் உங்கள நம்பி என்னையே முழுசா கொடுத்திருக்கேன். நீங்க என்னைய நம்ப மாட்டீங்களா?” உதட்டை சுழித்தாள்.
“முழுசா எங்கடி கொடுத்தே, இன்னும் நிறைய பாக்கியிருக்கே” என்றவன் கனியின் கனிந்த இதழ்களை ஆழமாக கவ்விக் கொள்ள அதற்கு பிறகு அவர்களுக்குள் முத்த சண்டை ஆரம்பித்து கட்டிலில் யுத்த சண்டைக்கு மாறியிருந்தது.
(தொடரும்)