இணை 10

ஆர்யனின் நெருக்கத்தில் மூச்சடைக்க பின்னால் நகர்ந்தாள். படபடக்கும் விழிகளோடு அவனை பயம் கலந்த பார்வை பார்த்தாள்.

 

“ரிலாக்ஸ், ஏன் இவ்வளவு பதட்டம்?” என்றான் மெல்லிய குரலில்

 

அவள் பதில் சொல்லாமல் அவனை மிரட்சியாக பார்க்க, “நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். உனக்கு தான் தற்காப்பு கலையோட சிலம்பம் நல்லா தெரியுமே, அப்புறம் எதுக்கு இந்த பதட்டம்?” என்றான் மென்மையாக

 

அவன் கேள்வியில் அவளின் முகம் சற்றே தெளிவானதும், “இப்ப சொல்லு, என்கிட்ட என்ன சொல்லணும்?” என்றான்

 

“என்னை பார்த்ததும் நான் உங்ககிட்ட எதுவோ சொல்ல வந்திருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

 

“உங்க அண்ணன் கொஞ்ச முன்னாடி தான் போன் பண்ணி அடுத்தவாரம் உங்களை பொண்ணு பார்க்க என் அப்பாவோட வரச்சொன்னாரு. இன்னைக்கு நீங்க காலேஜ்ல பங்கஷன்னு சென்னை வந்திருக்கறதாவும் சொன்னாரு. அப்பவே என்னை பாக்கறதுக்கு நீங்க வருவீங்கனு லைட்டா தோணுச்சு”

 

“நான் வருவேன்னு உங்களுக்கு தோணின மாதிரி, என்ன கேக்க போறேன்னும் தெரியுமா?” என்று ஆராய்ச்சியாக அவனை பார்த்தாள். அவன் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை

 

“எனக்கெப்படி தெரியும்? நீங்க சொன்னா தானே தெரியும்?” என்று தோள்களை குலுக்கினான்.

 

“எனக்காக அண்ணன்கிட்ட என்னை பொண்ணு பாக்க வரமுடியாதுனு சொல்றீங்களா?” என்று பச்சைகுழந்தையாய் கேட்பவளின் கன்னத்தை பிடித்து ‘உனக்காக உன்னை வேணாம்னு சொல்லணுமா?’ என்று அவளின் இதழ்களை வன்மையாக கடிக்க வேண்டும் போல இருந்தது ஆர்யனுக்கு.

 

அவள் கண்களை கூர்ந்து நோக்கி “அதெப்படி முகத்துல அடிச்ச மாதிரி வரமுடியாதுனு சொல்லமுடியும் மதி. அநாகரீகமா இருக்காது?” என்றான் 

 

“இல்லனா, பொண்ணு பாக்க வரப்போ, என்னைய புடிக்கல அகல்விழிய பிடிச்சிருக்குனு சொல்றீங்களா?”

 

வளர்மதி பேசியதில் இத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை மாறி ஆர்யனின் முகம் சட்டென இறுகியது. கைகளை கட்டிக் கொண்டு அவளை தீர்க்கமாக பார்த்தான். அவள் நினைத்தது போல அவன் சமானியன் அல்லவோ? அவளுக்கு அவன் தோரணை லேசான கிலியை கொடுத்தது.

 

“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? என் அம்மா இருக்கும் போது எனக்கு பிடிச்ச பொண்ண செலக்ட் பண்ண சொல்லி நிறைய போட்டோ கொடுத்தாங்க. அதுலயே நான் சாய்ஸ் எடுக்க விரும்பல. அப்படியிருக்கும் போது உன்னை பொண்ணு பாக்க வந்துட்டு உன் தங்கச்சிய கேக்கற ஈனமான செயலை என்னால செய்ய முடியாது” என்றான் தீர்மானமாக

 

“சரி, என்னய பிடிக்கலனு சொல்லிடுங்க”

 

ஆர்யன் இப்போது வளர்மதியை மேலிருந்து கீழாக நிதானமாக பார்த்தான். கண்கள் நாசி, இதழ்கள் என்று அவனின் ரசனையான பார்வை நகர்வில் அவள் மிடறு விழுங்க, அவளின் தொண்டைகுழியையே சில விநாடி பார்த்தவன் பின் அவள் கண்களை நேராக சந்தித்து பேசினான்.

 

“உன்னை பிடிக்கலனு என்னால பொய் சொல்ல முடியாதே” 

 

“ஏன்?”

 

“ஏன்னா எனக்கு உன்னை பிடிச்சிருக்கே”

 

“என்னோட வெளி அழகை பாத்து பிடிச்சிருக்குனு சொல்றீங்க. என்னை பத்தி உங்களுக்கு தெரியாது. மணமேடை வரைக்கும் போய் என் கல்யாணம் நின்னு போயிருக்கு”

 

“சோ வாட்?”

 

“நான், நான் நல்லவ இல்ல. கெட்ட பொண்ணு”

 

“இட்ஸ் ஓகே, நானும் உத்தமன் இல்ல”

 

“உங்களுக்கு நான் சொல்றது புரியல”

 

“சரி புரியற மாதிரி சொல்லு”

 

“நான் ஏற்கனவே ஒருத்தன லவ் பண்ணவ”

 

“இப்போவும் அவனை லவ் பண்றியா?”

 

“இல்ல” என்று வேகமாக தலையாட்டினாள்

 

“அப்புறம் என்ன பிரச்சனை?”

 

“என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது”

 

“ஏன்?”

 

அவளிடம் பதில் இல்லை.

 

“மதி உங்கள பிடிக்கலனு என்னால பொய் சொல்ல முடியாது. நீங்க வேணும்னா என்னைய பிடிக்கலனு சொல்லிக்கோங்க” என்றான்

 

அவனை விளங்கா பார்வை பார்த்தாள்

 

“என்னாச்சு? நான் சரியா தானே பேசறேன்”

 

“நான் செழியன் அண்ணாகிட்ட அவர்  காட்ற மாப்பிள்ளைய கட்டிக்கறேன்னு வாக்கு கொடுத்திருக்கேனே”

 

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? வாக்கு கொடுத்தது உங்க தப்பு. நீங்க உங்க அண்ணாகிட்ட என்னைய பிடிக்கலனு நம்பற மாதிரி ஏதாவது காரணம் சொல்லிடுங்க” என்று அவனே யோசனை சொன்னான்.

 

“நம்புற மாதிரி என்ன காரணம் சொல்றது?” என்று அவள் அவனை அண்ணாந்து பார்க்க

 

“என்னை பிடிக்கலனு சொல்றதுக்கு என்கிட்டயே காரணம் கேக்கறீயே! உனக்கே இது நியாயமா இருக்கா?” என்றான் கிண்டல் தொணியில்

 

“சாரி” என்றாள் முகம் கன்ற

 

“மதி இன்னொரு விஷயம் யோசிச்சீங்களா? என்னை பிடிக்கலனு நீங்க சொன்னா உங்கண்ணன் நிச்சயமா கல்யாணத்தை நிறுத்திடுவாரு. அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா மாப்பிள்ளை பாக்கறத நிறுத்துவாரா?”

 

அவளுக்கு கல்யாணம் செய்யாமல் வீட்டினர் ஓய மாட்டார்கள் என்பது தான் அவளுக்கு தெரியுமே! இப்போது என்ன செய்வது? என்ற யோசனையுடன் ஆர்யனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“உங்க வீட்ல பாக்குற எல்லா மாப்பிள்ளையையும் இன்னைக்கு மாதிரி உங்க அண்ணனுக்கு தெரியாம மீட் பண்ணி உங்களை பிடிக்கலனு சொல்ல சொல்லுவீங்களா?” என்றான் புருவம் உயர்த்தி

 

ஆர்யன் கூறுவதில் இருந்த உண்மை புரிய வளர்மதியின் முகத்தில் கவலை படிந்தது. குழப்பத்துடன் அவனை பார்த்தாள்.

 

“நான் பொண்ணு பாக்க வர்ற வரைக்கும் நல்லா யோசிங்க. யோசிச்சிட்டு என்னை பிடிச்சிருந்தாலும் பிடிக்கலனாலும் தயக்கமில்லாம சொல்லுங்க. நான் உங்க அண்ணனை கன்வின்ஸ் பண்ணிக்கறேன்” என்றான்.

 

சம்மதமாக தலையை அசைத்தாள்.

 

“வாங்க உங்க ரெண்டு பேரையும் காலேஜ்ல டிராப் பண்ணிடறேன்”

 

“இல்ல வேணாம்”

 

“லஞ்ச் சாப்பிட நான் உங்க காலேஜ் வழியா தான் போகணும். போற வழியில டிராப் பண்ணிடறேன் வாங்க” என்று அவன் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு இருக்கும் போதே அகல்விழி உள்ளே வந்தாள்.

 

“அக்கா, அண்ணன் உன்கிட்ட பேசணுமாம்” என்று அவளின் கைபேசியை நீட்டினாள். வளர்மதி அவளுடன் அறைக்கு வெளியே சென்று மிடறு விழுங்கியபடி கைபேசியை காதில் வைத்து, “அண்ணா” என்றாள் குற்ற உணர்ச்சியுடன்

 

“பேசி முடிச்சிட்டியா?”

 

“என்ன சொல்றேனு புரியலண்ணா”

 

“ஆர்யன்கிட்ட தானே பேசிட்டு இருக்கே, அதான் பேசி முடிச்சிட்டியானு கேட்டேன்” செழியனின் அழுத்தமான குரலில் அவன் கோபம் நன்றாகவே தெரிந்தது

 

“அது வந்து, சும்மா பேசிட்டு போகலாம்னு”

 

“வேலு வெளியே காத்திட்டு இருக்கான். பேசி முடிச்சிட்டு இருந்தா சாப்பிட்டு ஊருக்கு கிளம்புங்க. வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்” என்று போனை வைத்து விட்டான்.

 

“அண்ணனுக்கு நாம இங்கே இருக்கறது எப்படிடி தெரியும்?” என்று வளர்மதி தங்கையிடம் கேட்டாள்.

 

“அண்ணன் தான் போன் பண்ணி பங்ஷன் முடிஞ்சதா, சாப்பிட்டீங்களானு கேட்டுச்சு. எனக்கு பொய் சொல்ல மனசு வரல. அதான் ஆர்யன் சாரை மீட் பண்ண வந்திருக்கோம்னு சொன்னேன். எதிர்பார்த்தது தான் ஆனா இவ்வளவு சீக்கிரம் எனக்கு தெரியாம செய்வானு எதிர்பார்க்கல, வளர்மதி ஆர்யன்கிட்ட என்ன பேசினானு கேட்டுச்சு. நானும் நடந்ததை அண்ணன்கிட்ட சொல்லிட்டேன்” என்றாள் அகல்விழி

 

“உள்ளே நான் பேசிட்டு இருந்தத ஒட்டு கேட்டியா?” அடிக்குரலில் சீறினாள்

 

“நீ என்ன பேசியிருப்பேனு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல” 

 

“ஏன்டி, அண்ணன் கிட்ட எல்லாத்தையும் உளறி தொலைச்சே?” என்றாள் வளர்மதி ஆற்றாமையுடன்.

 

“நீ காலேஜ்ல பேர்வெல் பார்ட்டிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு என்னைய இங்கே கூட்டிட்டு வந்துட்டே. இதுல கல்யாணத்தை நிறுத்தறதுக்கு அண்ணனுக்கு தெரியாம ஏதோ பிளான் வேற போடறே. நான் உண்மைய சொல்லலனா என்னைய தான் எல்லாரும் திட்டுவாங்க. அதான் சொல்லிட்டேன்”

 

“உன்னை” வளர்மதி பற்களை கடிக்க

 

“நீ மட்டும் எத்தனை முறை என்னைய அண்ணன்கிட்ட மாட்டி விட்டிருக்க. எனக்கு எப்படி இருந்திருக்கும்னு இப்ப புரியுதா?” என்றாள் அழகு காட்டி

 

“என்னைய பழி வாங்கறதுக்கு இதான் நேரமாடி?” 

 

“பழி வாங்கணும்னு சொல்லல. உண்மைய மறைக்காம சொல்லுனு அண்ணன் கேட்டதால சொல்லிட்டேன்”

 

தான் வீட்டுக்கு தெரியாமல் செய்த கள்ளத்தனம் வெளிப்பட்டு விட்டதில் அண்ணனை எப்படி சந்திக்க போகிறோம் என்ற கவலையில் வளர்மதி இருக்க, இருவரும் அறையின் வாசலிலேயே இருப்பது தெரியாமல் ஆர்யன் அறையிலிருந்து கதவை திறந்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தான்.

 

அவன் வந்த வேகத்தில் வளர்மதியின் பின்பக்கம் வேகமாக மோதிவிட, அவள் நிலைதடுமாறி குப்புற விழப்போனாள், ஆர்யன் வளர்மதியின் இடையை இருகரங்களால் அழுத்தி பிடித்து தன்னை நோக்கி இழுத்து அவளை விழாமல் நிற்க வைத்தான்.

 

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விட்டதால் வளர்மதி அதிர்ச்சியோடு ஆர்யனை திரும்பி பார்த்திருக்க, அவனோ நெருக்கத்தில் மதியின் மதிவதனத்தை கண்களால் பருகி கொண்டிருந்தான்.

 

“க்கும்” அகல்விழி சத்தமாக கணைக்கவும் வளர்மதியை தள்ளி நிறுத்தி, “சாரி நீங்க டோர் கிட்ட நின்னுட்டு இருப்பீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணாம வேகமா வந்துட்டேன்” என்றான்.

 

“பரவால்லங்க, நான் இங்கே வந்தது அண்ணனுக்கு தெரிஞ்சிடுச்சு. நாங்க உடனே கிளம்பணும்”

 

“அதனாலென்ன? பயப்படாதீங்க! நான் செழியன் கிட்ட பேசறேன். நல்லா டைம் எடுத்து யோசிங்க, உங்களுக்கு பிடிக்கலைனா தைரியமா சொல்லுங்க. அவர் கட்டாயப்படுத்த மாட்டாரு. கேட்டுக்க கூடிய ஆள் தான்”

 

தலையை ஆட்டிவிட்டு அகல்விழியுடன் கிளம்பினாள்.

 

செல்லும் வழியெங்கும் வேலு புலம்பி கொண்டே வந்தான்.

 

“உங்க ரெண்டு பேரால செழியன் கிட்ட நல்லா திட்டு விழுந்துச்சு. ‘என் தங்கச்சிங்களுக்கு பாதுகாப்பா போன்னு சொன்னா ஊரை சுத்த போயிட்டியா? ஊரை சுத்தி பாக்கறவன் தனியா போறது தானேனு’ கேட்டு திட்டிட்டாரு”

 

பெண்கள் இருவரும் வீடு வந்து சேரும் வரை வாயை திறக்க வில்லை.

 

செழியன் வீட்டு வாசலின் முன்பிருந்த திண்ணையில் கால்மீது கால் போட்டபடி தோரணையுடன் அமர்ந்திருந்தான். அவன் முகம் இறுகி போய் இருந்ததில் அவன் கோபமாய் இருப்பது புரிய அவனுடைய மகள் கூட அருகில் செல்லாமல் பைரவியிடமே இருந்தாள்.

 

வளர்மதி செழியன் முன்னால் வந்து நின்றாள். அவளை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டு கைபேசியை எடுத்தவன் முத்து பாண்டிக்கு அழைத்தான்.

 

“ஏலே பாண்டி”

 

“சொல்லு”

 

“வந்து உன் தங்கச்சிய அழைச்சுட்டு போலே”

 

“என் தங்கச்சியா? ஏன் அவ உன் தங்கச்சி இல்லையா?”

 

“கேள்வி கேக்காம சொன்னத செய்” என்று அழைப்பை துண்டித்தான்.

 

“அண்ணா, ஆர்யன்கிட்ட சும்மா தான் பேச போனேன்”

 

“எல்லாம் எனக்கு தெரியும், என் மேல நம்பிக்கை இல்லாம தானே நேர்ல போய் இருக்க? அவர்கிட்ட உனக்கு விருப்பமில்லனு சொல்றதுக்கு என்கிட்டயே சொல்லியிருக்கலாம். நான் ஒண்ணும் உன்னை கட்டாயப்படுத்த போறதில்ல” என்றான் கடுமையான குரலில்

 

செழியன் முகத்தை திருப்புவதும் கோபமாக பேசுவதும் வளர்மதிக்கு புதிது, அவளின் கண்கள் கலங்கி விட்டது.

 

“வேலுவ ஏமாத்தி ஊர சுத்தி பாக்க சொல்லிட்டு யாருக்கும் தெரியாம ஆர்யனை போய் பாக்கணும்னு என்ன அவசியம் இருக்கு? என்கிட்டயே விருப்பமில்லனு சொல்லியிருக்கலாமே. நீ காட்ற மாப்பிள்ளைய கட்டிக்கிறேன்னு நீ சொன்னதால தானே அவங்களுக்கு வரச்சொல்லி தகவல் சொன்னேன்? 

 

உன் உடன்பிறப்பு முத்துபாண்டிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. எப்பவும் என்கிட்ட முட்டிகிட்டு நிப்பான். அவனே நான் காட்டின பொண்ணை ஒத்த வார்த்தை மறுத்து பேசாம கட்டிக்கிட்டான். ஆனா நீ? 

 

அதுசரி, உனக்கு சம்மந்தம் பேசி முடிக்க நான் என்ன உன் கூட பொறந்தவனா? என்னைய எல்லாம் நீங்க எங்கே வச்சிருக்கீங்கங்கிறது தெரிஞ்ச விஷயம் தானே. அது தெரிஞ்சும் ஏற்பாடு பண்ணது என் தப்பு தான். நான் தான் நமக்கெதுக்கு தேவையில்லாத ஆணினு ஒதுங்கி இருந்திருக்கணும்” என்று செழியன் கோபத்தில் வார்த்தைகளை அமிலமாய் கொட்டிக் கொண்டிருந்தான்.

 

வளர்மதி சமாதானமாக பேச முயற்சித்தும் அவள் பேச்சை அவன் கேட்பதாக இல்லை. முத்துபாண்டியும் ஏதோ பிரச்சனை என்று நினைத்து உடனே வந்து நின்றான்.

 

அவனை கண்டதும், “நான் பாத்த மாப்பிள்ளைய உன் தங்கச்சிக்கு புடிக்கலையாம். நீயும் உங்க அப்பாவும் என்ன முடிவு பண்றீங்களோ உங்க இஷ்டம். இனி உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிடறதா இல்ல. உன் தங்கச்சிய அழைச்சிட்டு கிளம்பு” 

 

“செழியா ஏன்டா இப்படி பேசறே? உன் சித்தப்பன பத்தி தெரியாதா? அந்தாளும், அப்பத்தா கிழவியும் சேர்ந்து சொத்து ஜாதினு பார்த்து அனலரசு மாமன மாதிரி ஒரு மாப்பிள்ளை பாத்து அவ தலையில கட்டி வச்சுடுவாங்கடா” பைரவி பதறினார்

 

செழியன் பதில் பேசாமல் வேகமாக திண்ணையிலிருந்து  இறங்கி விடுவிடுவென்று தென்னந்தோப்பிற்குள் சென்று விட்டான். அதன் பின்பு கனிஇதழி நடன பள்ளியில் பயிற்சி நேரம் முடிந்ததால் ஸ்கூட்டியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.

 

“என்னாச்சு?” என்று முத்துபாண்டி, வளர்மதியையும் அகல்விழியையும் பார்த்து கேட்க, அகல்விழி நடந்ததை சுருக்கமாக சொன்னாள். 

 

“சரி கிளம்பு” என்று முத்துபாண்டி வளர்மதியை அழைக்க, அவளுக்கு தந்தையை நினைத்து பயமாக இருந்தது. செழியன் வரன் பார்ப்பதால் தான் அவர் பொறுமையாக காத்திருக்கிறார். இப்போது விஷயம் தெரிந்தால் யாரையாவது உடனே வரச்சொல்லி திருமணத்தை நடத்திவிட்டு தான் வேறு வேலை பார்ப்பார்.

 

செழியன் திரும்பி வரும் வரை அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

 

லேசாக இருட்டிய பின்பு வந்த செழியன், அவன் செல்லும் போது நின்றிருந்த அதே நிலையில் வளர்மதி நின்றிருப்பதைக் கண்டும் காணாமல் வீட்டிற்குள் சென்றான். அதுவரை அவளை உள்ளே அழைத்து பார்த்து ஓய்ந்து போய் திண்ணையில் அமர்ந்திருந்த கனிஇதழியும் அகல்விழியும் அவன் பின்னாலேயே வீட்டிற்குள் வந்தனர்.

 

கூடத்தில் பைரவி உணவு பரிமாறிக் கொண்டிருக்க பாண்டி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

 

“வயசு பொண்ணு வெளியே நின்னுட்டு இருக்கா. நீ இங்கே கொட்டிக்கிட்டு இருக்கியா?” என்று அதட்டினான்.

 

“நீ கட்டி வச்சியே வீரமல்லி, அவ அங்கிட்டு இங்கிட்டு நகர விடாம என்னைய வாங்குற வேலைல நானே கொலைபசியில இருந்தேன். என்னை வரச்சொல்லிட்டு நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்டே. உன் தங்கச்சிய கூப்பிட்டா, சிலை மாதிரி அசையாம நிக்கறா. என்ன பண்ண சொல்றே? அடிவாங்கறதுக்காவது உடம்புல தெம்பு வேணாமா? அதான் பெரியம்மாகிட்ட பசிக்குதுனு கேட்டேன். தப்பா?”

 

“சீக்கிரம் சாப்பிட்டு அவளை அழைச்சிட்டு போ” என்று விட்டு அறைக்குள் நுழைந்தான். அவன் பின்னாலேயே சென்ற கனிஇதழி அவனின் கரத்தை பிடித்து இழுத்து அறை வாசலிலேயே நிறுத்தினாள்.

 

“மாமா”

 

“என்ன?” என்று திரும்பி பார்த்து முறைத்தான்.

 

“என்னை எதுக்கு இப்போ முறைக்கிறே?”

 

“அவளுக்கு கல்யாணத்தை நிறுத்தறதுக்கு ஐடியா கொடுத்தவளே நீதானே?”

 

“நான் எந்த ஐடியாவும் கொடுக்கல மாமா”

 

“பேசாதடி. அன்னைக்கு நீயும் அவளும் போன்ல கல்யாணத்தை நிறுத்தறது பத்தி தானே பேசிட்டு இருந்தீங்க.  இல்லனா அவளுக்கு ஏது இம்புட்டு தைரியம்?” என்று செழியன் பேச இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை அதிகரித்து சண்டையே வந்துவிட்டது. 

 

செழியன் கோபத்தில் கனிஇதழியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட, “செழியா, புள்ளதாசி பொண்ணு அவளை ஏன்டா அடிக்கிற?” என்று உரக்க கத்திய பைரவி கையிலிருந்த பாத்திரத்தை கீழே போட்டு விட்டு அவனை தடுக்க ஓடினார்.

 

பாண்டியின் தலையில் சாதம் கொட்டியிருக்க, வாயிலிருந்த சோற்றை விழுங்காமல் விழிகள் பிதுங்க இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே நடக்கும் சண்டையின் தீவிரத்தை உணர்ந்த வளர்மதி வீட்டுக்குள் பாய்ந்து வந்தாள்.

 

“எல்லா பிரச்சனைக்கும் நீதான்டி காரணம். முத தடவை கல்யாணத்தை நிறுத்தினது போதாதுனு இந்த முறையும் கல்யாணத்தை நிறுத்தறதுக்கு அவளுக்கு ஐடியாவா கொடுத்துட்டு இருக்கே” என்று செழியன் மீண்டும் கையை ஓங்க வளர்மதி எட்டி செழியனின் கரத்தை பிடித்திருந்தாள்.

 

“அண்ணா, கனிக்கு இதுல எந்த சம்மந்தமும் இல்ல. அவளை ஏன் அடிக்குற”

 

செழியன் பதில் பேசாமல் முகத்தை திருப்பி கொள்ள, “இப்போ என்ன? என் கல்யாணம் நடக்கணும், அவ்ளோ தானே? யாரை வரச்சொல்றியோ வரச்சொல்லு, கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள் அழுதுக் கொண்டே

 

“ஊர்சனங்க முன்னாடி மாப்பிள்ளைய பிடிக்கலனு சொல்லி என்னை அவமானப்படுத்தறது பத்தாதுனு பாவம் அந்த மனுஷனும் நேர்ல வந்து வேற அவமானப்படணுமா? தேவையில்ல” என்றான் செழியன்

 

“இனி நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன். கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. கனிய அடிக்காதே” என்றவள் அகல்விழியின் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து அழ தொடங்கினாள்.

 

அகல்விழியும் வளர்மதியை சமாதானம் செய்ய அவள் பின்னால் போனதும், “சாரிடி ப்ரூட்டி” என்று செழியன் சட்டென மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.

 

பைரவியும் பாண்டியும் அதிர்ச்சியில் திறந்த வாயை மூடாமல் பார்த்திருந்தனர்.

 

“பரவால்ல மாமா”

 

“வலிக்குதாடி, மெதுவா தான் கையை ஓங்கினேன், அடி பலமா விழுந்த மாதிரி இருந்துச்சே” 

 

“எனக்கு வலிக்கல மாமா” என்று அவள் சொன்னதை நம்பாமல் மனைவியின் முகத்தை நிமிர்த்தி அவளின் கன்னத்தை ஆராய்ந்தான்.

 

செழியனின் விரல் தடம் அவளின் கன்னத்தில் தெளிவாக பதிந்திருக்க அவன் முகத்தில் கவலை ரேகை படிந்தது. வேகமாக அவளை இழுத்து தனக்குள் அழுத்திக் கொண்டவன் அவள் கன்னத்தில் தன் இதழ்களால் மென்மையாக ஒத்தடம் கொடுத்தான்.

 

“பெரியம்மா ரசம் இருக்கா?” என்று பாண்டி சத்தமாக குரல் கொடுத்ததும் தான் இருவரும் சுயம் பெற்று விலகி நின்றார்கள்.

 

பைரவி அவசரமாக சமையலறை பக்கம் ஓடினார்.

 

“நான் கூட பொண்டாட்டி விஷயத்துல என் அண்ணன்ங்காரன் என்னை மாதிரி இல்லாம வீரனா இருக்கானே பரவால்லயேனு நினைச்சேன். இதெல்லாம் பொண்டாட்டியோட டிரைனிங்னு இப்போ தானே தெரியுது” என்றான் முத்துபாண்டி கிண்டலான குரலில்

 

“வாயை மூடு, வளருக்கிட்ட ஏதாச்சும் உளர்ன கொன்னுருவேன்” என்று செழியன் ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு “சாப்பிட்டு கிளம்பு. வர்ற திங்க கிழமை வளர்மதிய பொண்ணு பாக்க வராங்கனு வீட்ல சொல்லிடு” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

கனியின் சிவந்த கன்னத்தை வருத்தத்தோடு வருடியவன், விரல் தடம் பதிந்திருந்த இடத்தில் தன் இதழ் தடத்தால் மருந்திட்டான்.

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top