Ep 41

அத்தியாயம் 41

நாட்கள் மெல்ல நகர்ந்தது. 

குணசேகரும் நல்ல படியாக குணமாகி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அதன் பிறகு பிருந்தாவுக்கும் சிம்மனை சந்திக்க முடியாமல் போனது.

கடைசியாக அந்த சம்பவம் நடந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்

கொள்ளவில்லை.

வேலை அதிகமாக இருப்பதால் அவ்வப்போது இரவில் அவளிடம் அழைத்து பேசுவான்.

அதோடு அவளை தன்னோடு அழைத்து கொண்டு செல்லவா என்றும் பல முறை கேட்பான்.

இதுவே பழைய சிம்மனாக இருந்திருந்தால் அவன் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டி இருக்காது.

அவன் எதை நினைக்கிறானோ அதை செய்திருப்பான்.

ஆனால் இந்த விடயத்தில், அவளின் விருப்பதுக்கு மாறாக நடந்து கொள்ள அவனுக்கும் இஷ்டம் இருக்கவில்லை.

பிருந்தாவுக்கு அவளின் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்று அவனும் அறிவான் தானே!

ஒரு வேளை அவர்களை எதிர்த்து அவளை அழைத்து கொண்டு சென்றாலும் அவள் நிச்சயம் சந்தோஷமாக இருக்க மாட்டாள்.

அது மட்டும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த ஒரு காரணத்துக்காக தான் அவளின் சூழ்நிலையை புரிந்து கொண்டு இப்போதைக்கு அமைதியாக இருந்தான்.

இங்கே பிருந்தாவுக்கும் அதே நிலை தான்.

அவனை பிரிந்து இருக்க வேண்டும் என்று அவளுக்கு மட்டும் ஆசையா என்ன? 

எப்போதுமே அவன் நினைவாக தான் இருக்கும். 

முன்னரெல்லாம் அவன் பெயரை கேட்டாலே கோபம் வரும். ஆனால் இப்போது அவள் இதழ்களில் வெட்கப்புன்னகை தான்.

ஏன் தன்னை இப்படி மாற்றினான் என்று கூட அவளுக்கே தெரியவில்லை.

அவனோடு ஒன்றாக வாழ வேண்டும் என்று ஆசை தான்.

ஆனால் என்ன செய்வது?

அதற்கு அவள் பெற்றோர்கள் சம்மதம்  வேண்டுமே!

அவர்கள் தான் சிம்மனை இன்னும் ஏற்றுக் கொள்ளவே இல்லையே!

தன் காதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தன் குடும்பமும் அவளுக்கு முக்கியம்.

தனக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவர்கள். 

தனக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஏற்பாடு செய்த திருமணத்தையே நிறுத்தினார்கள்.

ஒரு வேளை அவர்கள் நினைத்திருந்தால் தன்னை வற்புறுத்தி விஷ்வாவுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கலாம்.

ஆனால் அப்படி செய்யவில்லையே!

தான் அவர்களுக்கு அவ்வளவு பெரிய அவமானத்தை தேடிக் கொடுத்தும் அவர்கள் தன்னை வெறுக்கவில்லை.

அப்படி இருக்க அவர்கள் விருப்பதுக்கு மாறாக அவளால் எப்படி நடந்து கொள்ள முடியும்?

****

பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

இதோடு எத்தனை ரவுண்டு குடித்தான் என்று அவனுக்கே நியாபகம் இல்லை.

அவன் ஒன்றும் தினமும் குடிக்கும் குடிகாரன் கிடையாது.

எப்போதாவது தான் குடிப்பான்.

ஆனால் இப்போது குடிக்கக் காரணம் அவன் மனதை உடைத்து விட்டு போன அந்த ஒருத்திக்காக.

அவளின் இழப்பை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அவள் நினைவுகளில் இருந்து வெளிவரவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம்.…

அந்த பாரின் மறுபுறம் இருந்த பெரிய டேபிளை சுற்றி அமர்ந்திருந்தனர் சில இளம் பெண்கள்.

அனைவரும் கையில் இருந்த மதுவை அருந்திக் கொண்டு, ஒருவரை ஒருவர் கலாய்த்த படியே ட்ரூத் ஆர் டேர் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவே இருந்த ஒருத்தி மட்டும் கையில் இருந்த பழச்சாறை சுவைத்துக் கொண்டு இருந்தாள்.

அவள் தான் பவானி…

இருபத்தேழு வயதிருக்கும்.

பார்ப்பவரை கவர்ந்திழுக்கக் கூடிய அழகு.

அவள் அழகை மேலும் மெருகூட்டும் விதமாக அவள் அணிந்திருந்த அந்த கறுப்பு நிற கவுன் அவளின் மெல்லிய தேகத்தோடு கச்சிதமாக பொருந்தியிருந்தது. 

கழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயின் அணிந்து இருக்க, கையில் விலையுயர்ந்த கைக் கடிகாரம் கட்டியிருந்தாள். 

இதையெல்லாம் தாண்டி, அவளது கழுத்தோரத்தில் இருந்த அந்த சிறிய வண்ணத்துப்பூச்சி டாட்டூ தான் அவளது தோற்றத்திற்கே ஒரு தனித்துவமான அழகையே சேர்த்திருந்தது.

“ஏய்!… பாட்டிலை கொஞ்சம் பார்த்து சுத்துங்கடி…  ஒவ்வொரு வாட்டியும் என்னையே குறி வைக்குது” என்று புலம்பாத குறையாக அவள் சொல்ல, 

அவள் நண்பிகளில் ஒருத்தி அவளின் தோளில் கை வைத்து, “அது ஒன்னும் இல்லை பவானி… அதுக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்காம். அதான் உன்னோட அழகான முகத்தை பார்க்கணும்னு திரும்ப திரும்ப உன் கிட்டயே வந்து நிக்கிது” என்று கலாய்த்த படி சொல்ல, அதை கேட்ட மற்ற தோழிகள் கல கலவென சிரித்தனர்.

பவானியோ, “வாய மூடுங்கடி… என்னை ஓட்டுரதே உங்க வேலையா போச்சுல்ல!” என்று சிணுங்கிக் கொண்டாள்.

அவர்களும் புன்னகைத்துக் கொண்டே மீண்டும் அந்த போத்தலை சுற்றி விட்டார்கள்.

ஆனால் என்ன ஒரு துரதிஷ்டம் அது மறுபடியும் பவானியிடமே வந்து நிற்க, அவளுக்கோ புரையேறி விட்டது.

“இன்னக்கி நல்லா சிக்கிட்டா” என்று தோழிகள் புன்னகைக்க, 

பவானியோ, “ஆண்டவா! இதுக்கு ஒரு எண்டே இல்லையா?” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“எதுக்கு தேவை இல்லாம அவரை டிஸ்டப் பண்ணுற? சீக்கிரம் சொல்லு? ட்ரூத்தா டேரா?” என்று அவசரப்படுத்தினார்கள்.

அவர்களை முறைத்து பார்த்தவள், “டேர்” என்று தயக்கத்துடன் கூற,

அவர்களோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நக்கலாக சிரித்தனர்.

இதை கவனித்த பவானியோ, “ஹேய் இப்போ எதுக்குடி எல்லாரும் டூத் பேஸ்ட்   விளம்பரத்துல வர மாதிரி ஈன்னு பல்ல காட்டுறீங்க?….. எனக்கு டைம் ஆச்சு… சீக்கிரம் என்ன டாஸ்க்குன்னு சொல்லுங்க… இல்லன்னா நான் கிளம்புறேன்” என்று சமாளிப்பாக சொல்ல,

“பார்த்தியா! எஸ்கேப் ஆகலாம்னு பிளான் பண்ணுறா…” என்றாள் ஒருத்தி.

மற்றவளோ, “அவ்ளோ சீக்கிரம் விட்ருவோமா?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தியவள், அருகில் இருந்த மது கோப்பையை அவளிடம் தள்ளி, “இதை ஒரே மூச்சுல குடிச்சி முடிக்கணும்….” என்றாள் சாதாரணமாக…

அதை கேட்ட பவானியோ, “வாட்?” என்று விழிகளை விரிக்க, “இன்னக்கி நல்லா மாட்டினா” என்று தோழிகள் கிசு கிசுத்தனர்.

“என்னாச்சுடி… நீ தானே டாஸ்க் கேட்ட… இதான் உன்னோட டாஸ்ட்… சீக்கிரம் குடி” என்று ஆரவாரம் செய்ய, இவளோ முகத்தை சுளித்தவள், “சான்ஸே இல்லை… நான் குடிக்க மாட்டேன்னு உங்களுக்கே தெரியும்…. மரியாதையா எனக்கு வேற டாஸ்க் கொடுங்க” என்றாள் கைகளை கட்டிய படி.

அவர்களோ, “அதெல்லாம் முடியாது… இன்னக்கி நீ குடிச்சு தான் ஆகணும்” என்றனர்.

இவளோ “ஹேய் புரிஞ்சிக்கோங்கடி… நான் குடிக்க மாட்டேன்னு அப்பாவுக்கு ப்ரோமிஸ் பண்ணியிருக்கேன். அதை பிரேக் பண்ண முடியாது. வேற ஏதாவது சொல்லுங்க” என்றாள் பிடிவாதமாக.

“ஹேய் என்னடி இவ இப்படி இருக்கா…” என்று அனைவரும் சலித்து கொள்ள,

அதிலிருந்த ஒருத்தி மட்டும், “சரி விடுங்கடி… பாக்க பாவமா இருக்கு. வேற டாஸ்க் கொடுக்கலாமா?” என்று கேட்க,

பவானியயோடு சேர்த்து மற்றவர்களும் என்ன என்பது போல அவள் முகத்தை பார்த்தனர்,

அவளோ “அதோ பாரு…. அங்க தனியா ஒரு ஹேண்ட்ஸமான பையன் ஒக்காந்துட்டு இருக்கான்ல!” என்று சற்றே தொலைவில் அமர்ந்து குடித்து கொண்டிருந்த விஷ்வாவை நோக்கி கைகாட்டினாள்.

பவானியோ அவனை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, “அதுக்கு?” என்று புரியாமல் கேட்க,

“நேரா அவன் கிட்ட போய் அவன் கன்னத்துல ஒரு கிஸ் பண்ணிட்டு வா” என்றாள் தோள்களை குலுக்கிய படி…

அதை கேட்ட மற்ற தோழிகள் பக்கென சிரித்து விட, பவானியோ “என்ன முத்தம் கொடுக்கணுமா?” என்று சத்தமாக கேட்டே விட்டாள்.

அவள் போட்ட சத்தத்தில் அருகில் இருந்தவர்கள் ஒரு மாதிரியாக அவளை பார்க்க, அதை கண்டு கொள்ளாதவள், 

“திஸ் ஈஸ் டூ மச் டி! ஒன்னு குடிக்க சொல்லுறீங்க.. இல்லை தெரியாதவனை போய் கிஸ் பண்ணுங்குறீங்க…. வேணும்னே எதுக்கு கஷ்டமான டாஸ்க் கொடுக்குறீங்க?” என்று பாவமாக முகத்தை வைத்து கேட்க,

இவர்களோ கிண்டலாக புன்னகைத்து கொண்டனர்.

“உனக்கு வேற ஆப்ஷனே இல்லை. ஒன்னு இந்த விஸ்கிய குடி. இல்ல அவனுக்கு போய் கிஸ் அடி” என்று கண்ணடித்து கொண்டே சொன்னவள், 

“என்னங்கடி?” என்று மற்ற தோழிகளிடம் கேட்க, அவர்களும் ஆமோதிப்பது போல் ஒரு சேர தலையாட்டினார்கள்.

‘ரைட்டு… இன்னக்கி நம்மளை ஒரு வழி பண்ணாம விட மாட்டாளுங்க’ என்று மனதுக்குள் புலம்பியவள், மது கோப்பையை சற்று தள்ளி வைத்து விட்டு சட்டென எழுந்தாள்.

அவள் எழுந்ததை பார்த்த நண்பிகள், “ஏய் நிஜமாவே அவனை கிஸ் பண்ண போறியா?” என்று ஆச்சர்யமாகக் கேட்க,

“ஆமா….” என்று பதிலளித்தவள் மெல்ல அவனை நோக்கி சென்றாள்.

குடிப்பதை விட இதுவே பரவாயில்லை என்று தோன்றியது போலும்.

“என்னடி கிளம்பிட்டா?” என்று ஒருத்தி கேட்க, 

மற்றவளோ, “பின்ன… இதுல கிடைக்கிற போதையை விட… அவன் கிட்ட கிடைக்கிற போதை இன்னும் அதிகமா இருக்கும்ல்ல!… அதான்…” என்றாள் நக்கல் குரலில்.

மெல்ல விஷ்வாவை நோக்கி வந்த பவானிக்கோ, அவனை நெருங்கியதும் இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது.

தைரியமாக வந்து விட்டாள்.

ஆனால் இப்போது அவனை நெருங்கவே பயமாக இருந்தது.

‘ஐயோ! பார்க்க வேற ரவுடி மாதிரி இருக்கானே!’ என்று அவனின் அஜானுபாகுவான தோற்றத்தை கண்டு உள்ளுக்குள் பயந்து கொண்டாள்.

மெல்ல திரும்பி தன் தோழிகளை பார்க்க, அவர்களோ ஆர்வமாக அவளை பார்த்து கொண்டு இருந்தனர்.

‘யமகாதகிங்க… மாட்டி விட்டுட்டு வேடிக்கை வேற பார்க்குறாளுங்க!’ என்று திட்டியவள், அவனை நெருங்கி சென்று, “எக்ஸ்கியூஸ் மீ…” என்று மெதுவாக அழைத்தாள்.

குடித்து கொண்டிருந்த விஷ்வாவும் தலையை உயர்த்தி பார்க்க, அதற்காகவே காத்திருந்தவள் போல சட்டென அவனை நோக்கி குனிந்தவள் தன் இதழ்களை குவித்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டிருந்தாள். 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top