அத்தியாயம் 42
பவானியோ அவன் கன்னத்தில் முத்தம் பதிக்க, இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத விஷ்வாவின் விழிகள் ஒரு கணம் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
அவளும் சட்டென அவனிடமிருந்து விலகியவள், “ஐ அம் சாரி…. நான் வந்து….” என்று விளக்கம் கூற முன்னரே, அவனின் ஐவிரல் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது.
ஆம்…
அறைந்து விட்டான்.
பின்னர் யாரென்றே தெரியாத ஒருத்தி திடீரென்று வந்து இப்படி முத்தம் கொடுத்தால் வேறு என்ன செய்வார்கள்?
அதுவும் அவன் இப்போது இருக்கும் நிலையில் அவளின் இந்த செயல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல இருந்தது.
அதனால் தான் அந் நொடி எதை பற்றியும் யோசிக்காமல் கையோங்கி விட்டான்.
அவன் அறைந்த வேகத்தில் அவள் முகம் மறுபக்கம் திரும்பி கொள்ள, தன்னையும் அறியாமல் அவள் கரங்கள் தன் கன்னத்தை பற்றியது.
“ஹேய் பவானி” என்று அவளின் தோழிகள் பதறியடித்து கொண்டு அவ்விடம் நோக்கி ஓடி வர,
விஷ்வாவோ அவளை கோபமாக பார்த்தவன், “வாட் த ஹெல் ஆர் யூ டூயிங்?” என்று சீறினான்.
அதில் பெண்ணவள் பயந்து போய் இரண்டடி பின்னால் செல்ல, அப்போது தான் அவன் முகத்தையே முழுசாக பார்த்தாள்.
கோபத்திலும், மதுவின் போதையிலும் அவன் விழிகள் சற்று சிவந்து போய் இருக்க, முகமோ இறுகிப் போயிருந்தது.
“டூ யூ ஹாவ் சென்ஸ்? இப்படி தான் தெரியாதவன் கிட்ட வந்து கிஸ் பண்ணுவியா? இடியட்” என்று கர்ஜனையாக அவன் கத்த, பெண்ணவளோ அவனை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஹேய் மேன் எவ்ளோ தைரியம் இருந்தா எங்க பவானி மேலயே கைய வைப்ப?” என்று அவளின் தோழி ஒருத்தி எகிறிய படி வர, விஷ்வாவோ திரும்பி அவளை ஒரு பார்வை தான் பார்த்தான்.
அவள் வாய் தானாகவே மூடிக் கொண்டது.
பவானியிடம் வந்த மற்ற தோழிகள், “ஹேய் நீ ஓகே தானே!” என்று விசாரிக்க, அப்போது கூட அவள் விழிகள் விஷ்வாவை விட்டு நகரவில்லை.
அவளை முறைத்து பார்த்தவன், “நான்சென்ஸ்!” என்று திட்டி விட்டு அங்கிருந்து விறு விறுவென சென்று விட, “சரியான சேடிஸ்ட்…. ஒரு சாரி கூட சொல்லாம எப்படி திமிரா பேசிட்டு போறான் பாரு” என்று ஒருத்தி கூற, மற்றவர்களும் அவனை திட்டினர்.
ஆனால் பவானியோ, “சரி விடுங்கடி… என் மேல தானே தப்பு” என்று தன் சிவந்த கன்னத்தை தடவிய படியே கூற, அவள் பதிலை கேட்ட தோழிகள் அனைவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து போய் பார்த்தனர்.
காரணம் பவானி இப்படி எல்லாம் பேசும் பெண்ணே கிடையாதே!
பார்க்க வேண்டுமானால் அப்பாவி போல தெரியலாம், ஆனால் மிகவும் சண்டைக்காரி.
அதிலும் யாராவது அவளிடம் வம்புக்கு வந்தாலோ, அவள் மீது கை வைத்தாலோ, அவ்வளவு தான்.
அவர்களை உண்டு இல்லை என பண்ணி விடுவாள்.
அப்படி இருக்க, இவன் அறைந்து விட்டு சென்றும், இவள் அமைதியாக இருக்கிறாள்.
அதை விட தன் மீது தான் தவறு என்றும் ஒத்துக் கொண்டாளே!
“பாவனி நீ தானா இது?” என்று ஒருத்தி கேட்க,
மற்றவளோ “ஹேய் நீ ஓகே தானே! அடிச்சதுல மெமரி லாஸ் ஏதாவது ஆகிடுச்சா என்ன?” என்று அவள் நெற்றியை பற்ற போக, சட்டென அவள் கையை தட்டி விட்டவள்,
“போதும் நிறுத்துங்கடி… எதுக்கு இப்படி ஆளாளுக்கு ஓவரா பண்ணுறீங்க? எனக்கு எதுவும் ஆகல…” என்று சமாளித்தவள்,
“எனக்கு டைமாச்சு நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட, இவர்களோ புரியாமல் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களுக்கு மட்டும் அல்ல…
பவானிக்கே தன் நடவடிக்கையை நினைத்து சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது.
அவன் மீது கோபம் வரவில்லை.
மாறாக ஏதேதோ உணர்வுகள் தான் தோன்றியது.
தன்னை அறைந்தவன் மீது இப்படியான எண்ணங்கள் தோன்றுகிறதே என்று அவளுக்கே வித்தியாசமாக தான் இருந்தது.
“என்னாச்சு எனக்கு?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள், தலையை உலுக்கிய படி காரில் ஏறி புறப்பட்டு இருந்தாள்.
*****
பால்கனியில் நின்று கொண்டு அந்த இரவு நேர நிலவை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் பிருந்தா.
கையில் அலைபேசி இருந்தது.
எப்போதும் போல தான் அவன் அழைப்பு வரும் என்று காத்திருந்தாள்.
‘ப்ச்… இவ்ளோ நேரமாச்சு ஏன் போன் பண்ணல. வேலையில பிஸியா இருப்பாரோ’ என்று யோசித்து கொண்டிருக்கவும், அவளின் அலைபேசி அலறவும் நேரம் சரியாக இருந்தது.
அவன் எண்ணை பார்த்ததும் தான் அவள் இதழ்களில் புன்னகையே பூத்தது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்,
“ஏன் போன் பண்ண இவ்ளோ லேட்? ரொம்ப வேலையா?” என்று மெல்லிய குரலில் கேட்க,
“ம்ம்ம்…” என்றான்.
“வேலை எல்லாம் ஓகே… டைமுக்கு சாப்பிட்டீங்களா?” என்று அக்கறையாக கேட்டாள்.
அவன் இதழ்கள் லேசாக விரிந்து கொண்டது.
இதுவரையில் அவனிடம் இப்படி எல்லாம் யாரும் உரிமையாக கேட்டது இல்லையே!
கேட்கவும் யாரும் இல்லை.
ஆனால் இப்போது தன்னை பற்றியும் யோசிக்க ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே அவனை ஒரு நொடி நெகிழ வைத்தது.
அவன் அமைதியாக இருக்க, “சிம்மா… என்னாச்சு? ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க?” என்று குழப்பமாக அவள் வினவ,
அவனும் சட்டென சுதாகரித்து கொண்டு, “ஒன்னும் இல்லை பேபி… நீ சொல்லு” என்றான்.
“என்ன சொல்ல? நான் கேட்டதுக்கு முதல்ல ஆன்சர் பண்ணுங்க…?? சாப்பிடீங்களா? இல்லையா?” என்று சந்தேகமாக கேட்க,
அவன் பதில் சொல்ல முன்னரே, “எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று அனுமதி கேட்ட படி உள்ளே வந்தாள் நர்ஸ் ஒருத்தி.
கையில் இருந்த காபியை அவனருகில் வைத்தவள், “வேற எதுவும் வேணுமா சார்?” என்று கேட்க,
“நோ” என்றவன், “அப்புறம் சரண்யா… மிஸ்டர் அரவிந்தோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்துடுச்சா?” என்று கேட்க,
“யெஸ் சார்… வந்திருக்கு.” என்றாள்.
“அதை எடுத்துட்டு வா” என்றவன்,
மீண்டும் தனது அலைபேசியில் கவனம் செலுத்த,
“ஓகே சார்…” என்று கூறியவள் அங்கிருந்து வெளியேறினாள்.
மறுமுனையில் இருந்த பிருந்தாவோ, “யாரு இந்த சரண்யா?” என்று கேட்க,
அவனோ காபியை எடுத்து பருகிய படி, “என்னோட நியூ அசிஸ்டன்ட்” என்றான்.
இவளுக்கோ புரையேறி விட்டது.
“வாட்? நியூ அசிஸ்டன்டா?” என்று கேட்டவள், “அவ எப்போ ஜாயின் பண்ணா?” என்று கேட்க,
அவள் குரலில் தெரிந்த அதிர்ச்சியை உணர்ந்து லேசாக புருவம் சுருக்கியவன்,
“நீ எப்போ ஹாஸ்பிடல் வரதை நிறுத்துனியோ… அப்போ தான்” என்றான் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.
இவளுக்கு தான் கடுப்பாக இருந்தது.
தான் அவனுக்கு செய்ய வேண்டிய வேலையெல்லாம் இப்போது வேறு ஒருத்தி செய்கிறாள் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வேலையாக இருந்தாலும் அங்கே கூட அவனோடு தான் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று எண்ணியது அவள் மனம்.
“ஆமா உங்களுக்கு பொண்ணுங்கள தான் அசிஸ்டன்டா போடுவாங்களா? ஏன் ஒரு ஆம்பளைய போட மாட்டாங்க?” என்று கடுப்பாகக் கேட்க,
அவள் கேள்வியில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
தன்னை அடக்கி கொண்டவன், “ஆம்பளையா? எதுக்கு பேபி? பொண்ணு அசிஸ்டன்டா இருந்தா தான் எனக்கு கம்பர்டபிளா இருக்கும்…” என்றானே பார்க்கலாம், அவள் முகமோ கோபத்தில் சிவந்து போனது.
“வாட்? கம்பர்டபிளா? சிம்மா நீங்க என்ன பேச்சு பேசுறீங்க?” என்று அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் கத்தி விட்டாள்.
அவனோ இதழ் கடித்து புன்னகையை அடக்கிக் கொண்டவன், “ஹேய் நான் வேலைய தான்டி சொன்னேன்! அதுக்கு ஏன் இவ்ளோ கோபம்?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவளோ தன்னை சமாளித்து கொண்டே, “ந… நான் ஒன்னும் கோப படல… அ… அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்றவள் சட்டென அமைதியாகி விட,
அவனுக்கு அவளின் இந்த கோபம், பயம் எதுவும் புரியாமல் இல்லை.
“பேபி…” என்று மென்மையான குரலில் அழைக்க, “ம்ம்ம்” என்றாள் அவள்.
“நான் உன்னை ஏமாத்திடுவனோன்னு பயப்படுறியா?” என்று சற்றே அழுத்தம் கொடுத்த படி கேட்க, பெண்ணவளால் அதற்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.
அவன் பழைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று அவளும் அறிவாள் தான்.
ஆனால் இப்போது தனக்காக அவன் எப்படி மாறி இருக்கிறான் என்றும் அவளுக்கு தெரியும் தானே!
உண்மையில் அவன் தன்னை ஏமாற்றுவான் என்ற எண்ணமெல்லாம் அவள் மனதில் துளியும் இருக்கவில்லை.
ஆனால், ஏனென்றே புரியாமல் ஒரு சிறு பயம் அவள் மனதில் தோன்றியது.
இதை பயம் என்று சொல்லுவதை விட, தனக்கு சொந்தமான பொருளை யாரும் நெருங்கி விட கூடாது என்ற உரிமை கலந்த தவிப்பு எனலாம்.
அவள் அமைதியை உணர்ந்து கொண்டவன், “பேபி…. நீ என்ன யோசிக்கிறன்னு எனக்கு நல்லாவே தெரியும்டி…. பட் லிசன் டூ மீ…. இப்போ நான் உன்னோட சிம்மன்….. உனக்கு மட்டும் தான் நான் சொந்தம்… ஐ நோ… என் பாஸ்ட் எப்படி இருந்ததுன்னு…. பட் தட்ஸ் ஓவர் பேபி… அந்த லைஃப்க்குள்ள திரும்பிப் போக நான் எப்பவுமே விரும்ப மாட்டேன். பிகாஸ்….” என்று நிறுத்தியவன்,
“இப்போ எனக்காக ஒருத்தி இருக்கா… என்னை பத்தி மட்டும் யோசிக்கிறதுக்கு…. அந்த ஒருத்திய நான் எப்பவுமே என் லைப்ல இழக்க கூடாதுன்னு நினைக்கிறேன்….. அவளை தவிர எனக்கு வேற எதுவுமே முக்கியம் இல்லடி… புரிஞ்சிதா?” என்று அழுத்தமாகக் கேட்டான்.
பெண்ணவளுக்கோ என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
அந்நொடி அவன் வாழ்க்கையில் தான் எந்த அளவுக்கு அவனுக்கு முக்கியமானவள் என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து கொண்டாள்.
அவள் கண்களோ லேசாக கலங்கிக் போக, இப்போதே அவனை கட்டியணைக்க வேண்டும் போல தோன்றியது.
ஆனாலும் தன் உணர்வுகளை அடக்கி கொண்டு, “அது… நான் ஒன்னும் உங்களை சந்தேக படல…” என்று ஆரம்பிக்க, அவள் தடுமாற்றத்தை உணர்ந்து லேசாக புன்னகைத்துக் கொண்டவன், “எனக்கு தெரியும்” என்று முடித்தான்.
****
சற்று கோபமாக வீட்டுக்குள் நுழைந்த விஷ்வாவை கண்ட அவனின் தந்தை விஷ்வேந்திரன், “விஷ்வா எங்க போயிருந்த?” என்று வினவ,
அவனோ அதை காதில் கூட வாங்காமல் செல்ல, “டேய் விஷ்வா… உன் கிட்ட தான்டா பேசுறேன். கேக்குதா இல்லையா?” என்று அவர் குரல் உயர்த்த,
எரிச்சலாக அவர் புறம் திரும்பியவன், “இப்போ என்ன உங்களுக்கு வேணும்?” என்று கடுப்பாக கேட்டான்.
அவனின் அன்னையோ “விஷ்வா” என்று சத்தம் போட, “அம்மா ப்ளீஸ்…. என்னை தயவு செஞ்சு யாரும் டிஸ்டப் பண்ணாதீங்க” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன், விறு விறுவென மடியேறி அறைக்கு சென்று விட, அவர்களுக்கோ என்ன சொல்லுவது என்றே புரியவில்லை.
திருமணம் நின்றதில் இருந்தே அவன் இப்படி தானே நடந்து கொண்டு இருக்கிறான்.
இரண்டு மூன்று நாட்களில் சரியாகி விடுவான் என்று நினைத்தார்கள்.
ஆனால் தினம் தினம் அவன் நடவடிக்கை மோசமாக தான் மாறியது.
வீட்டில் யாரோடும் முகம் கொடுத்து பேசுவதில்லை.
அலுவலகத்துக்கும் செல்லுவதில்லை.
தினமும் குடித்து கொண்டு தான் வீட்டுக்கு வருகிறான்.
பெற்றவர்கள் அல்லவா!
மகனை இந்த நிலையில் அவர்களால் பார்க்க முடியவில்லை.
மனம் பதறியது.
“சண்டாளி! என் புள்ளைய இந்த நிலைமைக்கு மாத்திட்டாளே! அவ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டா” என்று அவனின் அன்னை மனமுடைந்து போய் சாபம் விட,
“மீனா என்ன பேசிட்டு இருக்க?” என சத்தமிட்டார் விஷ்வேந்திரன்.
அவர் புறம் திரும்பிய மீனா, “ஏன்?? நான் எதுவும் சொல்லக் கூடாதா? என் புள்ளையோட இந்த நிலைமைக்கு அவ தானே காரணம். அவளை கல்யாணம் பண்ணிகணும்னு எவ்ளோ ஆசையா இருந்தான். ஆனா கடைசி நேரத்துல அவனை வேணாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டா… இப்போ இவன் தானே அவளை நினைச்சி இப்படி குடிச்சி அவன் உடம்ப கெடுத்துட்டு இருக்கான். என்னால எப்படி இதெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியும்னு நினைக்கிறீங்க?” என்று ஆதங்கமாக கேட்க,
அவருக்கும் அது புரியாமல் இல்லை.
ஆனால் நடந்து முடிந்ததை யாரால் மாற்ற முடியும்?
விஷ்வாவோ தனது அறைக்குள் நுழைந்தவன், கோபமாக கோர்ட்டை கழட்டி வீசி விட்டு தொப்பென கட்டிலில் விழுந்தான்.
கண்ணை மூடினாலே அவள் நினைவு தான்.
“எதுக்குடி இப்படி பண்ண? இப்படி கொஞ்ச கொஞ்சமா என்னை கொல்லுறதுக்கு என்னை மொத்தமா கொன்னுட்டு அவன் கூட போயிருக்கலாம்ல?” என்று சொல்லும் போதே அவன் விழியோரம் சிறு நீர்த்துளிகள்.
*****
அன்று தோழியை பார்க்க போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு, மருத்துவமனைக்கு அவனை பார்க்க வந்திருந்தாள் பிருந்தா.
என்ன செய்வது?
இப்போதெல்லாம் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லையே!
அலைபேசியில் அவனோடு எவ்வளவு நேரம் பேசினாலும், நேரில் அவனை பார்க்க வேண்டும் என்று தான் அவள் மனம் துடித்தது.
அதனால் தான் இதற்கு மேல் முடியாமல் வீட்டில் பொய் சொல்லி விட்டு வந்து விட்டாள்.
தான் செய்வது தவறு என்று தெரியும்.
ஆனால் அவன் மீது இருந்த காதல் அவளை இந்த அளவுக்கு மாற்றியிருந்தது.
வெள்ளை நிற சுடிதார் அணிந்து காதில் சிறிய ஜிமிக்கி மட்டும் போட்டு இருந்தாள்.
பெரிதாக அவளுக்கு ஒப்பனை செய்து கொள்ள பிடிக்காது.
எந்த ஒரு அலங்காரமும் இல்லாமலே அழகாக தான் இருந்தாள் பெண்ணவள்.
நேராக அவனின் கேபினுக்கு வந்தவள், பழக்க தோஷத்தில் அனுமதி எதுவும் கேட்காமல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, அங்கே இருந்தவர்களை கண்டு விழி விரித்து தான் போனாள்.
அவள் பார்க்க வந்தது சிம்மனை மட்டும் தான்.
ஆனால் அங்கே இருந்தது அவன் மட்டுமல்ல…
அவளின் தந்தை குணசேகரும் தான்.
சிம்மனின் பக்கத்தில் சரண்யாவும் பைலுடன் நின்றிருந்தாள்.
வேலை விடயமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள், இவள் அறையை திறந்ததும் அந்த சத்தத்தில் சட்டென மூவரும் திரும்பினர்.
தந்தையை சிம்மனின் அறையில் கொஞ்சமும் எதிர்பார்க்காத பிருந்தாவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அவர் கண்களில் பட்டு விடக்கூடாது என்பதற்காக மறைந்து மறைந்து வந்தவள், அவர் இங்கே இருப்பார் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.
இந்த நேரத்தில் மகளை இங்கே கண்ட குணசேகரும் ஒரு கணம் அதிர்ந்து தான் போனார்.
ஆனால் அடுத்த நொடியே அவள் ஏன் இங்கு வந்தால் என்று அவருக்கு நன்றாகவே புரிந்து விட்டது.
வேறு எதற்காக வந்து இருப்பாள்?
அவனைக் காணத்தானே வந்திருக்க வேண்டும்!
தன் மகளின் முகத்தில் தெரிந்த பதற்றமே அதற்கு போதுமான சாட்சியாக இருந்தது.
சிம்மனோ அவளை கண்டு அதிர்ந்தாலும் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல இதழ் கடித்து புன்னகையை அடக்கிய படி அமைதியாக இருந்தான்.
பிருந்தா தான் பொறியில் மாட்டிய எலி போல திரு திருவென விழித்து கொண்டிருந்தாள்.
இப்படி தந்தையிடமே வந்து கையும் களவுமாக மாட்டுவாள் என்று எதிர்பார்த்தாளா என்ன?
அவள் தடுமாறுவதை கண்ட குணசேகர், “பிருந்தா… இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கறாரான குரலில் கேட்க,
அவளுக்கோ வாயில் இருந்து வார்த்தையே வரவில்லை.
“அது… வந்து…. அப்பா… நான்.. நான்…” என்று வார்த்தைகளை தேட, அவள் திணறுவதை கண்ட சிம்மன் என்ன நினைத்தானோ, “நான் தான் பிருந்தாவை இங்க வர சொன்னேன்” என்று கூற, குணசேகரோடு சேர்த்து பிருந்தாவும் அவனை புரியாமல் பார்த்தாள்.
“நீயா?” என்று அவர் புருவம் சுருக்கி கேட்க, சிம்மனோ பிருந்தாவை ஒரு கணம் பார்த்து விட்டு, “ஆமா டாக்டர் நான் தான் அவளை இங்க வர சொன்னேன்…” என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்த படி.
அதில் கோபமாக இருக்கையில் இருந்து எழுந்தவர், “சிம்மா… உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்டயே என் பொண்ணை இங்க வர சொன்னேன்னு சொல்லுவ…” என்று கத்த,
பிருந்தாவுக்கோ என்ன பேசுவது என்றே புரியவில்லை.
தேவை இல்லாமல் தான் இங்கே வந்து பிரச்சனையை உண்டு பண்ணி விட்டோமே என்று தான் திணறினாள்.
அங்கிருந்த சரண்யாவோ அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
குணசேகரோ பிருந்தாவின் புறம் திரும்பியவர், “அவன் வர சொன்னா நீயும் இங்க வந்துடுவியா? என் வார்த்தைக்கு எந்த மதிப்பும் கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா…” என்று கர்ஜனையாக கத்த,
அவளோ நடுங்கி தான் போனாள்.
சிம்மனோ ஒரு கணம் விழிகளை மூடித் திறந்தவன், “டாக்டர் அவ மேல எந்த தப்பும் இல்லை. எனக்கு என் பொண்டாட்டியை பார்க்கணும்னு தோணுச்சு… அதுனால தான் அவ வர முடியாதுன்னு சொல்லியும் பொய் சொல்லி அவளை இங்க வர வச்சேன்.” என்றான் கர கரப்பான குரலில்.
அதை கேட்ட குணசேகருக்கோ சுர்ரென்று இருந்தது.
“யாருக்கு யாருடா பொண்டாட்டி? அவ கழுத்துல இழுத்துட்டு போயி தாலி கட்டிட்டு பொண்டாட்டின்னு உரிமை கொண்டாடுறியா?” என்று எகிறினார் அவர்.…
சிம்மனோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
இப்போதைக்கு அவர் கோபம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக தான் அவர் கோபத்தை சீண்டுவது போல பேசிக் கொண்டிருந்தான்.
பிருந்தாவோ அவனை கண்களில் நீர் வழிய பார்த்தாள்.
அவளுக்கும் அவன் எண்ணம் நன்றாகவே புரிந்தது.
தன்னை காப்பாற்ற அவன் மீது பழியை சுமத்தி கொண்டிருக்கிறான் என்று.
குணசேகரோ “இதோ பாரு சிம்மா நான் உன் கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். என் பொண்ண நெருங்க நினைக்காதன்னு… நீ மறுபடியும் இதே தப்ப பண்ண அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என்று எச்சரிப்பது போல சொன்னவர்,
மகளை அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறி விட, சிம்மனும் பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த குணசேகருக்கோ கோபம் இன்னும் அடங்கியபாடில்லை.
“ராஸ்கல்… எவ்ளோ திமிரா என் கிட்டயே பேசுறான். இவனை போய் எப்படி உனக்கு புடிச்சி தொலைச்சது?” என்று கடுப்பாக கேட்க,
பிருந்தாவோ கண்களில் கண்ணீர் வழிய, அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
பாவம் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
“எத்தனை பொண்ணுங்க கூட ஊர் மேஞ்சிட்டு இப்போ திடீர்னு என் பொண்ணு மேல காதல் வந்துடுச்சுன்னு சொன்னா…. நான் நம்பி இவனுக்கு என் பொண்ணை கொடுத்துடணுமா? என்னை என்ன கேனயன்னா நினைச்சிட்டு இருக்கான்?” என்று பொரிந்து தள்ள,
இவளுக்கோ அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதை வலிக்க செய்தது.
சிம்மனின் கடந்த காலத்தை பற்றி அவளுக்கும் தெரியாதது இல்லை.
ஆனால்…
இப்போது அவன் எப்படி மாறி இருக்கிறான் என்பதையும் அவள் பார்த்திருக்கிறாளே!
அதனால் தான் தந்தை அவனை பற்றி இப்படி பேசும்போது அவளுக்கு அமைதியாக இருக்க முடியவில்லை.
“அப்பா… ப்ளீஸ்” என்றாள் மெல்லிய குரலில்…
அவரோ ஸ்டேரிங்கை அழுத்தமாக பற்றிய படி, “என்னடி நான் சொல்லுறதுல என்ன தப்பிருக்கு??…” என்று அவள் மீதும் பாய்ந்தவர்,
“எல்லாத்துக்கும் காரணம் அவனோட வளர்ப்பு தான்… புள்ளைய பெத்து விட சொன்னா ஒரு தறுதலையை பெத்து விட்டு இருக்காங்க… சின்ன வயசுல இருந்தே இவன் அப்பா, அம்மா இவனை அடிச்சி ஒழுங்கா வளர்த்திருந்தா இந்நேரம் இவன் இப்படி பொறுக்கி மாதிரி சுத்தியிருப்பானா?….. சரியா வளர்க்காம விட்டதுனால தான் இப்படி தலைக்கணம் புடிச்சி திரியிறான்….” என்று அவர் சிம்மன் மீது உள்ள கோபத்தில் பேசிக் கொண்டே போக,
பிருந்தாவோ தன் பொறுமையை மொத்தமாக இழந்து விட்டாள்.
“அப்பா போதும் நிறுத்துங்க” என்று அதற்கு மேலும் அவனை பற்றி இப்படி எல்லாம் பேசுவதை கேட்க முடியாமல் கத்தி விட, குணசேகரோ அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தி இருந்தார்.