மிருகேந்திரன் மீது பொய் குற்றச்சாட்டை கூறியவனின் சட்டைக் காலரை பிடித்து தன் புறமாக இழுத்த கீதாஞ்சலி, “ என் கிட்ட உண்மையை மட்டுந்தான் சொல்லணும்னு சொல்லிருக்கேன். பொய் சொன்ன…உடம்புல உயிர் தங்காது…” என்றாள் விரைப்பாக.
“ சந்தியமா தான் மேடம் சொல்றேன்…இந்த கோக்கைன்,, ஓபியம், நாக்ரோடிக் ட்ரக்ஸெல்லாம் இதோ இங்க நிக்குறாரே இந்த மிருகேன் தான் சிங்கப்பூர் ல இருக்குற டேவிட்ங்கற ஆளுக்கு கை மாத்தி விட ஏற்பாடு செஞ்சிருக்காரு. இதோ இந்த மிருகேந்திரன் டேவிட் கிட்ட போட்ட அம்பது கோடிக்கான ஒப்பந்தத்தோட ஜெராக்ஸ் காப்பி. அப்பறம் இந்த பொண்ணுங்களையெல்லாம் வளைகுடா நாட்டுக்கு அடிமைகளாவும், ஸ்பெயின், தாய்லாந்து இருக்குற சில பணாக்கார ஆட்களுக்கு ஒப்பந்த முறையில பாலியல் தொழிலார்களாகவும் அனுப்பப் போறாரு. “என்றவனை பின்னிருந்து எட்டி மிதித்தான் மிருகேந்திரன்.
“ ஏன் டா பொய் சொல்ற? திரும்பத் திரும்ப இதையே சொல்லிட்டு இருந்தன்னா உடம்புல இருந்து உயிர் காணாம போயிடும்…ஜாக்கிரதை..”என்றவன் அவனது முகத்தில் ஓங்கி குத்து விட்டான்.
“ ஆ….ஆ…” என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு அலறினான் பத்ரனின் அடியாள்.
“ ஹலோ…மிஸ்டர் உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? அதான் நாங்க விசாரிச்சிட்டு இருக்கோம்ல…நீங்க கொஞ்சம் நேரம் அமைதியா அந்த ஓரமா போய் நில்லுங்க? நீங்க குற்றவாளியா இல்லையான்னு நாங்க டிசைட் பண்ணுறோம் .நீங்க அடிதடியில இறங்காம தள்ளி நில்லுங்க…” என்றவள் தீயென அவனை முறைத்தாள்.
கேசத்தை அழுந்தக் கோதிய படி உதடு கடித்து திரும்பி நின்றான்.
மேலும் அங்கிருந்த சிலரிடம் விசாரித்தவள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்களிடமும் விசாரணை நடத்தினாள்.
அப்பெண்களும் மருண்ட விழிகளுடன் மிருகேனுக்கு எதிராக பேசி அவன் மீது குற்றத்தை சுமத்தினர்.
அவர்களுடைய பேச்சு அவனை அதிர வைத்தது.
மிருகேனை ‘அண்ணா’ என்றழைத்த பெண்ணும் அவனுக்கெதிராகவே பேச தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவே சில கணங்கள் ஆனது.
கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமாக நடத்தப்பட்ட விசாரணையில் மிருகேந்திரன் தான் பெண்களை கடத்தி விற்க முயன்றதாக உறுதி செய்யப்பட்டது.
மிருகேனுடன் வந்த அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்களை தங்களுடைய இடத்திற்கு அழைத்துச் சென்றதால் அவன் தரப்பு நியாயததை கூறவும் ஆளில்லை அவனது பேச்சும் அங்கு எடுபடவில்லை .
அங்கு குழுமியிருந்த அனைவரது வாக்குமூலமும் அவனுக்கெதிராக இருந்தது.
“ ஒரு நிமிஷம் . என் கூட வந்த ஆட்கள் கிட்டயும் அவங்க கூட போன பொண்ணுங்க கிட்டயும் விசாரணை பண்ணிப் பாருங்க… இங்க இருக்குற எல்லாருமே பத்ரனோட ஆட்கள் தான். உங்களுக்கும் அது நல்லாவே தெரியும். தீர விசாரணை பண்ணாம எந்த ஒரு முடிவுக்கும் வராதீங்க மேடம்…” என்றான்.
“இதுக்கு மேல என்ன விசாரணை பண்ணனும் மிஸ்டர். அதான் எல்லா பொண்ணுங்களும் தெளிவா உங்க பேரை சொல்றாங்களே…! உங்க ஆட்கள் கிட்ட விசாரணை பண்ணுனா அவங்க உங்களுக்கு சாதகமாக தான் பேசுவாங்க. இங்க இருக்குற பொண்ணுங்களும் பொய் சொல்றாங்க னு சொல்றீங்களா?” என்றாள்.
“மேடம்…என்னவோ தப்பா தெரியுது. இது கடத்தல் நாடகமாக கூட இருக்கலாம். உண்மையான கடத்தல் வேற எங்கேயோ நடக்கப் போகுது. ப்ளீஸ்…! முதல்ல அது என்ன ஏதுன்னு பாருங்க. இது எல்லாமே என்னை மாட்டி விடறதுக்கான ப்ளானா கூட இருக்கலாம். ப்ளீஸ் வேற எங்கயாவது பொண்ணுங்க நிஜமாவே மாட்டிக்கப்போறாங்க. அது என்ன ஏதுன்னு விசாரணை பண்ணி அந்த பொண்ணுங்களையும் காப்பாத்தி போதைபொருளையும் பறிமுதல் செய்யுங்க..” என்றான் படபடப்பாக.
கீதாஞ்சலி அவனைப் பார்த்து இகழ்ச்சி யாக சிரித்து விட்டு, “அடாடா…என்னமா நடிக்குறீங்க…இந்த பக்கம் ஒண்ணு பண்ணிட்டு அந்த பக்கமா கடத்தல் பண்ணுறது உங்களுக்கு ஒண்ணும் புதுசில்லையே…! சொல்லுங்க…வேற எந்த இடத்துலே எல்லாம் கடத்தல் நடக்கப் போகுது? என்னென்ன கடத்தப் போறீங்க?” என்றாள்.
“ மேடம் …வேற எதையும் நான் கடத்தப்போறதில்லை. பொண்ணுங்களை விக்கறதையும் போதைப் பொருளை கடத்துறதையெல்லாம் நான் செய்ய மாட்டேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். நீங்க எதையோ மனசுல நினைச்சிட்டு தான் இதையெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான்
பத்ரனைப் பற்றியும் பசுபதியைப் பற்றியும் நன்கு அறிவான் மிருகேன். தன்னை ஏதாவது செய்ய காத்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு இது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது பெரிய விடயமல்லவே…!
தன்னை அப்புறபடுத்தி விட்டு வேறு ஏதோ பெரிதாக செய்ய திட்டமிடுகிறார்கள் என்று சரியாக ஊகித்தான்.
அவனது யோசனைகள் கையில் ஏதோ கனமான பொருள் மாட்டப்படுவதை உணர்ந்து தடைப்பட்டது.
நிமிர்ந்து பார்த்தான். கீதாஞ்சலி தான் அவனது கரங்களுக்கு விலங்கைப் பூட்டிக் கொண்டிருந்தாள்.
“மேடம் என்ன பண்றீங்க? “ என்றான் பல்லைக் கடித்து கொண்டு.
விலங்கை பூட்டிக் கொண்டே , “ ஹான்…பார்த்தா தெரியல அரெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். “ என்றாள் அழுத்தமாக.
“ பழி வாங்குறீங்க. செய்யாத தப்புக்கு அரெஸ்ட் பண்றீங்க”
“ நான் ஏன் சார் உங்களை பழி வாங்கணும். அதானால எனக்கென்ன லாபம்? இதுவரைக்கும் பண்ணுன தப்புக்கு தப்பிச்சுட்டு இருந்தீங்க…இன்னைக்கு வசமா மாட்டிகிட்டீங்க. அதுக்கு நான் பொறுப்பாக முடியாது…” என்றவள் அவன் மேலும் ஏதோ கூற வரும் முனபே கை விலங்கைப் பிடித்து இழுத்துக் கொண்டுச் சென்றாள்.
அவளது இழுப்புக்கு தன்னையறியாமலே அவனது உடல் ஒத்துழைத்தது. ஆதவ்வாக இருந்திருந்தால் கூட ஒரு இன்ச் அந்த இடத்தை விட்டு மிருகேனை நகரத்தியிருக்க முடியாது என்பது உண்மை.
மிருகேந்திரனின் மனம் பாறையென இறுகியது.
கைவிலங்கினை வெறித்துப் பார்த்துவிட்டு அவளையும் அழுத்தமாக பார்த்தான். அவனது பார்வை அவளது முதுகைத் துளைத்தெடுப்பதை நன்றாகவே உணர முடிந்தது அவளால்..
உள்ளத்தின் கொதிப்பு கைவிலங்கின் பிடியை இறுகப் செய்ய.. அவனது கரங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிய தொடங்கியது..
உள்ளம் வலிக்க நெகிழத் தொடங்கிய மனதினை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர இன்னும் இறுக்கமாக விலங்கை பிடித்திழுக்க விலங்கின் கூரியப் பகுதி அவனது கரங்களில் அழுந்த அழுந்த கரங்களில் இரத்தம் நன்றாகவே கசிய ஆரம்பித்தது.
மற்ற காவலர்களை அழைத்து மிருகேந்திரனை காவல்துறை வாகனத்தில் ஏற்றுமாறு உத்திரவிட்டவள் தனது சொந்த வாகனத்தில் ஏறிக் கொண்டு காவல்துறை வாகனத்தை பின் தொடர்ந்தாள்.
பின்னால் அமர்ந்திருந்த மிருகேந்திரன் தங்களுடைய வாகனத்தைப் பின் தொடர்ந்து வரும் கீதாஞ்சலியை பார்த்துக் கொண்டே தான் வந்தான்.
இறுகிய முகத்துடன் ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளது கோபத்தின் அளவு வாகனத்தை இயக்குவதிலேயே தெரிந்தது.
மிருகோந்திரன் அமர்ந்திருந்த வாகனத்தை இடிப்பது போல முன்னே வருவதும் பின்னர் சற்று பின் தங்கியிருந்து வருவதுமாக இருந்தாள்.
இடப்பக்கமும் வலப்பக்கமும் செல்வது போல சென்று பின் தங்கி விடுவதுமாக கன்னா பின்னாவென்று ஓட்டிக் கொண்டிருந்தவளை கண்டு கோபம் தான் வந்தது.
“ திமிரு பிடிச்சவ…”என்று முணங்கிக் கொண்டான்.
காவலில் வைக்கப்பட்டான் மிருகேந்திரன்.
தனது மேலதிகாரிகளுக்கு அனைத்து விளக்கங்கள் அளித்தவள் அவனது கைது நடவடிக்கைப் பற்றிய கோப்புகளையும் சமர்பித்து விட்டு வீடு திரும்பும் போது இரவு பதினொன்றை தாண்டியிருந்தது.
சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் கீதாஞ்சலி.
ஹாலில் இருந்த நீள் விரிக்கையிலேயே கண்மூடி சாய்ந்து அமர்ந்து விட்டாள். மூடிய விழிகளில் கன்னக்ககுழி விழ சிரிக்கும் மிருகேனின் முகமே வந்து நின்று இம்சித்தது.
“ ம்ம்ச்…டாமிட்…”என்ற கத்தியவள் ஷூவை மூலைக்கொன்றாக விசிறியடித்தாள்.
அங்கிருந்த வாஷ்பேசினில் முகத்தை அடித்துக் கழுவி விட்டு நிமிர எதிரே இருந்த கண்ணாடியிலும் அவனது பிம்பமே.
பின்னிருந்து அவளது இடை வளைத்து கழுத்து வளைவில் முகம் புதைப்பது போல தோன்ற வலது கையை ‘நங்’கென்று வாஷ் பேசினில் ஆத்திரமாக குத்தினாள்.
வாஷ் பேசினின் ஓரம் உடைந்து அவளது கையை பதம் பார்க்க இரத்தம் கசியத் தொடங்கியது.
“ ஷ்ஷ்…ஆ..” என்று கையை உதறி விட்டு சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்த ஆதவ் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்த கீதாஞ்சலியை கண்டு புருவத்தை சுருக்கினான்.
அவள் நின்றிருந்த கோலம் ஏதோ சரியில்லை என்று உணர்த்த வேகமாக அவளருகே சென்று, “ கீதுக்கா…என்னாச்சு..? இங்க எதுக்கு நிக்குற? எதுக்கு இன்னைக்கு இவ்வளவு லேட்.?” என்றான் அவளது தோளைத் தொட்டு.
அவனை ஒரு பார்வை பார்த்தவள் தன்னை நிதானத்திற்கு கொண்டுவர முயன்றாள்.
“ ஒ…ஒண்ணுமில்லை ஆ…ஆதவ்… அது…இன்னைக்கு அந்த…அந்த…ஆள்… மிரு..மிருகேந்திரனை அரெஸ்ட் பண்ணியாச்சு.. அதான் லேட்..” தடுமாற்ற்ததுடன்.
அவளது தடுமாற்றம் அவனது கவனத்தில் பதியவில்லை போலும் .
அவள் கூறிய செய்தி ஆதவ்வின் உதட்டில் புன்னகையை வரவழைத்தது.
அவனுக்குத் தலை கால் புரியவில்லை
“ என்ன சொன்ன கீதுக்கா…எனக்கு தான் சரியா கேக்கலை யா?” என்றவன் இடுப்பில் இரு பக்கமும் கை கொண்டே லேசாக எம்பிக் குதிப்பது போல பாதங்களை தூக்கிக் நிறுத்தினான்.
அத்தனை மகிழ்ச்சி ஆதவ்வின் முகத்தில்.
வெறுமையாக அவனைப் பார்த்தவள் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள் .
“ கீதுக்கா…நிஜமா தான் சொல்றியா? “
“ ஆமா..”
“ வாவ் சூப்பர்… நான் மட்டும் அங்க இருந்திருந்தேன்னா அவனை நாயை அடிக்குற மாதிரி அடிச்சி இழுத்துட்டு வந்திருப்பேன்…எனிவே…ஐ யம் சோ ஹேப்பி..” என்று அவளது இரு கன்னத்தை பிடித்து ஆட்டியவன் அவளே லேசாக அணைத்து விடுவித்து விட்டு,”கங்கிராட்ஸ்…சிஸ்டர்” என்று கையை பிடித்து குலுக்கினான் .
“எதுக்கு கங்கிராட்ஸ்?” என்றாள் புரியாமல் .
”அது சரி…எத்தனை நாள் நம்ம கிட்ட ஆட்டம் காமிச்சிட்டு இருந்தான் அந்த மிருகேன். இன்னைக்கு கையும் களவுமாக மாட்டிருக்கான். அதுக்கு தான்…” என்றான் சிரித்துக் கொண்டே
அவளால் எதுவுமே பேச முடியவில்லை. அமைதியாக நின்றாள்.
“ஆமா என்ன கேஸ்?”
“போதைப் பொருள் கடத்தல், பொண்ணுங்களை நாடு கடத்துறது”என்றாள் மொட்டையாக.
யோசனையுடன் அவளைப் பார்த்தான் ஆதவ்.
“ இல்ல கீதுக்கா…சம்திங் பிஃஷி…” என்றான்
“ ம்ம்ச்…அதை விடு ஆதவ்…எனக்கு டயர்ட்டா இருக்கு…கொஞ்சம் பால் மட்டும் இருந்தா சூடு பண்ணித் தர்றீயா?” என்றாள்.
“ ம்ம்…ஒரு நிமிஷம் இரு…” என்று திரும்பியவனின் பார்வை மூலைக்கொன்றாக சிதறிய ஷூக்களின் மீது படிந்தது.
அதனை அப்படியே பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வை உடைந்திருந்த வாஷ்பேசினின் மீதும் அவளது கையிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரத்தின் மீது படிந்தது..
“ ஏய்…கீது…என்ன இது கையில இரத்தம்.? எதுக்கு வாஷ் பேசின் உடைஞ்சிருக்கு? ஆர் யூ ஓகே?” என்றவன் அவளது கரங்களை பிடித்துக் கொண்டு வழிந்து கொண்டிருந்த உதிரத்தை அருகிலிருந்த சிறிய பூந்துவாலையால் துடைத்து விட்டான்.
அவளது முகத்தை கூர்ந்து கவனித்தான். அவள் அவளாக இல்லை என்று தெளிவாக புரிந்தது.
அவளை சோஃபாவில் அமர வைத்து விட்டு சமயலறைக்கு சென்று பாலை சிம்மில் சுட வைத்து விட்டு வெளியே வந்தவன் கஃப்போர்டிலிருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து அவளது இரத்தத்தை சுத்தம் செய்து கட்டுப் போட்டான்.
ஷூக்களை அதன் ரேக்கில் அடுக்கி வைத்து விட்டு மிதமான சூட்டில் பாலை குடிக்க கொடுத்தான்.
அதனை வாங்கிப் பருகியவள் , “ ஐ யம் டிஸ்டர்ப்ட் ஆதவ்…ஜானுவை காலங்காத்தாலயே வந்து எழுப்பாதேன்னு சொல்லிடு. கட்டுப் போட்டு விட்டதுக்கும் பால் கொடுத்ததுக்கும் தேங்க்ஸ் …டா” என்றவள் அவனது கேசத்தை கலைத்து விட்டுவிட்டு மெல்லிய புன்னகையுடன் தனதறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
இவையனைத்தையும் தனதறையின் கதவை லேசாக திறந்து வைத்துக் கொண்டு இடுக்கின் வழியாக பார்த்துக் கொண்டிந்தாள் மோகனா.
கீதாஞ்சலி குடித்து விட்டுக் கொடுத்த குவளையை கையில் எடுத்துக் கொண்டவன் சமயலறையில் வைத்து விட்டு வர எத்தனிக்கும் போதும் மோகனாவின் அறை லேசாக திறந்திருப்பதை கண்டு கொண்டான்.
“என்ன கதவு திறந்திருக்கு?”என்று முணங்கியபடி வேகமாக அவளது அறையை நோக்கிச் சென்றான்.
அவன் தனது அறையை நோக்கி வருவான் என்று எதிர்பார்க்காதவள் வேகமாக சென்று கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டாள்.
படாரென்று கதவைத் திறந்து கொண்டு நுழைந்தான் ஆதவ்.