விதேஷின் கைவளைவில் நடந்து கொண்டிருந்தவள் அந்தப் பாதையின் முடிவில் ஒரே ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தாள் . மிருகேனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை உணர்ந்து வெடுக்கென்று தலையை முன்புறமாக திரும்பிக் கொண்டு சென்றாள்.
கையில் வைத்திருந்த பைகளை ஒரு கணம் பார்த்தவன் அதனை தூக்கிக் கொண்டு தன் காரை நோக்கிச் சென்றான்.
ஜவுளிகளை வாங்கி முடித்துவிட்டு ஜானகி ,ருத்ரன் மோகனா மற்றும் கீதாஞ்சலி வீடு திரும்பினர்.
டைனிங் டேபிளில் அமர்ந்து பிரட்டில் ஜாமைத் தடவி உண்டு கொண்டிருந்தான் ஆதவ்.
அதைப் பார்த்தவுடன் ஜானகிக்கு கோபம் வந்தது.
அவனருகே வேகமாக வந்தவள் அவனது கையிலிருந்த பிரட்டையும் ஜாமையும் பிடுங்கியவள், “ ஏன்டா சமைச்சு வச்சிட்டு தானே போனேன். எடுத்துப் போட்டு சாப்பிட வேண்டியது தானே? இதென்னடா நோக்கு பிடிக்காததை சாப்ட்டுண்டு இருக்க…” என்றாள் காட்டமாக.
ஜானகியின் கையிலிருந்து பிரட் பாக்கெட்டை மீண்டும் பிடுங்கித் தன் புறமாக வைத்துக் கொண்டவன், “அப்படியே எனக்கு பிடிச்சதை தான் இங்க எல்லாரும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க. இதை சாப்பிடறதுனால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன்…” என்று மோகனாவை முறைத்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றான்.
“சரியான அடங்காப்பிடாரன்…” என்று அவனைத் திட்டிய படி சென்றாள் ஜானகி.
இரவு உணவையும் ஆதவ் வெளியே உண்டு விட்டு வந்துவிட்டான்.
அவரவர் அறையினுள் சென்று முடங்கிக் கொண்டனர்.
நள்ளிரவு ஆதவ்விற்கு திடீரென முழிப்பு வந்தது. சிறிது நேரம் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது மோகனாவுடன் நெருக்கமாக இருக்கும் செய்தி காணொளியாகவும் ரீல்ஸிலும் வந்து விட கடுப்பாகிப் போனது ஆதவ்விற்கு. அலைப்பேசியை மெத்தையில் எறிந்து விட்டு சிகரெட்டை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.
சிகரெட்டை பற்ற வைக்க தீப்பெட்டியைத் தேடியவன் சமயலறையிலிருந்து எடுத்து வந்து பால்கனியில் நின்று கொண்டு புகைக்க ஆரம்பித்தான்.
மோகனாவின் அறையில் வெளிச்சமாக இருந்தது..
“இந்த ஃப்ராடு இன்னும் தூங்கலயா?” என்று முணுமுணுத்துக் கொண்டே தொலைதூர நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.
அவளது அறை திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான்.
பூனை போல கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மோகனா சுற்றிலும் பார்த்தாள். பின்னர் அங்குமிங்கும் நடை பயின்றவள் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்து ஏதோ உருட்டினாள்.
அவள் தேடி வந்தது கிடைக்கவில்லை போலும்.. சிறிது நேரம் கீதாஞ்சலி அறையை பார்வையிட்டுக் கொண்டிருந்தவள் மீண்டும் அருகிலிருந்த அறைக்குள் நழைந்து ஏதோ தேடிக் கொண்டிருந்தாள்.
கடைசியாக மிச்சமிருந்த சிறு துண்டு சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு வேகமாக அவளிருந்த அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.
கதவு சாற்றப்படும் சத்தம் கேட்டு பதறி திரும்பினாள் மோகனா.
கதவின் மேல் சாய்ந்து நின்றவன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
“ அது…வந்து…சும்மா..தூக்கம் வரல அதான்…” என்று உளறியவளின் அருகில் வந்து அவளது முழங்கையைப் பிடித்து எழுந்து நிற்க வைத்தான்.
நீண்ட விழிகள் அலைபாய மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள் மோகனா. ஏனோ ஆதவ்வை பார்க்கும் போது காவல்துறையை சேர்ந்தவன் என்ற எண்ணமே தோன்றவில்லை அவளுக்கு.
“இந்த ரூம்ல நீ திருடறதுக்கு ஒண்ணுமில்லை. என்னத்தை திருட இங்க வந்த? கீதுக்கா ரூமை வேற நோட்டம் விடுற..என்ன விஷயம்?” என்றான் கடுமையாக.
“ அதில்ல…கீதுக்காட்ட….” என்றவளை இடைமறித்து, “ ஷ்ஷ்…நீ ஏன் எங்கக்காவை கீதுக்கான்னு கூப்பிடற? நான் மட்டுந்தான் அப்படி கூப்பிடுவேன். உனக்கு அப்படி கூப்பிட எந்த ரைட்ஸூம் இல்ல…என்ன புரியுதா?” என்றான் அவளை நெருங்கி நின்று.
“ ம்ம்…பு.. புரியுது.. கொஞ்சம் தள்ளி நில்லுங்க. சிகரெட் ஸ்மெல் எனக்கு ஒத்துக்.. காது…ப்ளீஸ்…” என்றான் முகத்தை சுளித்துக் கொண்டே..
“ ஆ..ஹான்…என்ன ஒரு நடிப்பு? உன்னோட நடிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம். சரியான ஃப்ராடு..சரி சொல்லு எதுக்கு ரூமை விட்டு வெளியே வந்து நோட்டம் விட்டுட்டு இருக்க?”
“அது…கொஞ்சம் நகருங்க ப்ளீஸ்…நா…கீதாஞ்சலி மேடம் கிட்ட பேசணும்…கொஞ்சம் அர்ஜெண்ட்..” என்றாள் நெளிந்து கொண்டே.
அவளுக்கு இரு புறமும் கையை அணைவாக வைத்து அவளை நகர முடியாமல் செய்தவன். “ முடியாது …இப்ப என்ன பண்ணிட்டிருந்த? அதை சொல்லு முதல்ல…” என்று இன்னும் நெருக்கினான்.
“ அய்யோ…! கடவுளே..! ம்ம்ச்…எனக்கு பிரீயட்ஸ் ஆகிடுச்சு…நாப்கின் வாங்க மறந்துட்டேன்…அதான் கீதாஞ்சலி மேடம் கிட்ட கேக்கலாம்னு…வந்தேன். இந்த ரூம்ல ஏதாவது இருக்குமான்னு பாத்துட்டு இருந்தேன்…ப்ளீஸ் வழிய விடுங்க…என்னால நிக்க முடியல….” என்று வயிற்றைச் பிடித்துக் கொண்டே சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
அவளை மேலும் கீழுமாக பார்த்தவன் , “நான் உன்னை எப்படி நம்புறது?” என்றான் யோசனையாக.
“ அய்யா…! சாமி அதுக்குன்னு நான் என்ன…எல்லாத்தையும்….” என்று ஏதோ கூற வந்தவள் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “ ப்ளீஸ்ங்க…வழிய விடுங்க…வயித்துவலி தாங்க முடியல…சத்தியமா “என கண்கள் கலங்க அவளைப் பார்த்தாள்.
“ ஏய் ச்சீ…! அழுது ட்ராமா பண்ணாத….போ..போ…” என்று விரட்டியவன் அவளுக்கு வழி விட்டு நின்றான்.
ஆடையை பின்பக்கமாக பிடித்துக் கொண்டே நகர்ந்து கீதாஞ்சலியின் அறைக்குச் சென்று அவளது அறையின் கதவைத் தட்டினாள்.
தூக்கக்கலக்கத்தில் எழுந்து வந்த கீதாஞ்சலியிடம் தனக்கு வேண்டியதை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.
“இவளைப் பாத்தாலே..பத்திட்டு தன் வருது…” என்று கூறி நகர முயன்றவனின் பார்வை தரையில் சொட்டியிருந்த இரத்தத்திட்டுக்கள் மீது பதிந்தது.
சற்று முன்னர் அவள் நின்றிருந்த இடம் தான்..அவளது நிலையை தெளிவாக எடுத்துரைத்தது.
“ம்ம்ச்…” என்று நெற்றியயை நீவியவன் அவனை கடந்து செல்ல முயன்ற மோகனாவை சொடக்கிட்டு அழைத்தான்.
“க்ளீன் பண்ணிட்டு போ…” என்று கூறி விட்டு இருஇரு படிகளாகத் தாவி மாடிக்குச் சென்றான்.
அவனை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தாள்.
தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள் வேறு ஆடையை மாற்றிக் கொண்டு வந்து இரத்தத்திட்டுக்களை சுத்தம் செய்தாள்.
வஜ்ரவேலினருகே அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தான் மிருகேன்.
“ என்னப்பா மிருகேன்…பணமெல்லாம் கரெக்டா ட்ரஸ்ட்டுக்கு போகுதுல்ல.. ஞானம் பொண்ணுக்கு காலேஜ் ல அட்மிஷன் போட்டாச்சுல்ல…மரியன் பொண்ணு காலேஜ் ஃபீஸ் கட்டியாச்சா? வேற ஏதாவது செய்யணுமா? இன்கம்டாக்ஸ் சரியா கட்டியாச்சுல …அடுத்ததா என்ன ப்ராஜெக்ட்?” என்றார் வஜ்ரவேல்.
“ எல்லாமே சரியா நடந்துட்டு இருக்குங்கய்யா..இப்போதைக்கு யாரும் தேவைன்னு வரல. வந்தா நான் பாத்துக்குறேன். அடுத்த ப்ராஜெக்ட் வெண்கல சிலைங்க தான்..இந்த தடவை கடல் வழியா இல்லாம வேற வழிய தான் யோசிக்கணும். “ என்றான்.
“ ம்ம்…” என்றவர் ,” இன்னும் எவ்வளவு நாளைக்கு நீ இப்படியே இருக்கப் போற? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா? போதும் மிருகேன்…இதோட நிறுத்திக்க.. இவ்வளவு நாள் மாட்டிக்காம எப்படியோ சாமர்த்தியமா தப்பிச்சிட்ட… வர வர போலீஸ் கெடுபிடியும் அதிகமா இருக்கு. என்னைக்காவது நீ மாட்டிட்டா என்ன பண்றது ? எல்லா நேரங்களிலும் நம்மளோட சாமர்த்தியம் ஒர்க் அவுட் ஆகாது…சோ….நீ ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும் . ஒரு பக்கம் போலீஸ் மறுபக்கம் அந்த பத்ரனும் பசுபதியும் உன்னையப் போட காத்திருக்காங்க. எல்லாத்தையும் சீக்கிரமா செட்டில் பண்ணிட்டு லைஃப்ல குழந்தை குட்டின்னு செட்டில் ஆகு..” என்றவுடன் மிருகேனுடைய முகம் இறுகிப் போனது.
உள்ளம் ஏனோ நெருப்புக் குழம்பை கக்கத் தயாரக இருக்கும் எரிமலையை போல கொதித்துக் கொண்டிருந்தது.
அவன் அமைதியாக இருப்பதை பார்த்தவர், “என்ன மிருகேன்..? என்னாச்சு? நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பாக்குறியா?” என்றார் வாஞ்சையாக..
சின்னச் சிரிப்புடன் அவரது கரங்களை இறுகப் பிடித்துக் கொண்வன், “இப்போதைக்கு நீங்க மட்டும் எனக்குப் போதுங்கய்யா…வேற எதுவும் வேணாம்…”என்றான்.
குளித்து விட்டு பூந்துவாலையை மட்டும் அணிந்து கொண்டு வந்த கீதாஞ்சலி கட்டில் மீதிருந்த மாற்று ஆடையை அணிந்து கொண்டு ஆளுயர கண்ணாடியில் முன்னும் பின்னும் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
“ கொஞ்சம் தொப்பை போடுது போலவே…வெர்க் அவுட்டை அதிகப்படுத்தணும் …” என்று தனக்குத்தானே கூறியவள் மேல் சட்டையை மட்டும் மெல்லத் தூக்கி தனது வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னை தானே ரசித்துப் பார்க்கின்றாள்..
அவளது விரல்கள் வயிற்றுப் பகுதியைத் தொட்டுத் தடவிக் கொண்டே இருக்க , அதற்கு நேர்மாறாக அவளது எண்ணங்களோ வேறு திசையில் பயணித்தது.
அலைப்பேசி ஒலியெழுப்பி அவளது சிந்தனையை கலைத்தது.
“ஹலோ…”
“ குட் மார்னிங் மேடம்…நான் முருகன் பேசுறேன். சிட்டிக்கு அவுட்டர்ல இருக்குற சர்வீஸ் பங்களால சட்ட விரோதமா போதைப்பொருளையும் பொண்ணுங்களையும் கை மாத்தி விடப் போறாங்கன்னு தகவல். இது பத்ரனுடைய வேலையா தான் இருக்கும். எந்த இடம்னு நல்லா விசாரிச்சிட்டு உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்ணுறேன். அப்பறம் நீங்க கிளம்பி வாங்க மேடம்..நான் வச்சிடவா..?”என்றார் அந்தக் காவலர் .
“ ம்ம் சரி…” என்று வைத்து விட்டாள்.
அதற்குள் மிருகேந்திரனுக்கும் விஷயம் தெரிந்து விட தனது ஆட்களுடன் கிளம்பி விட்டான்.
வேறு பொருட்களை கடத்துவதாக இருந்தால் பத்ரனுக்கு முன்பே அதை தான் கைப்பற்றி அதை வேறு ஆட்களிடம் மாற்றி விட்டுவிடுவான். அதனை தடுக்க மாட்டான்.
போதைப்பொருள் மற்றும் இளம்பெண்கள் கடத்தலை அவன் என்றுமே ஊக்குவிப்பதில்லை. முடிந்த அளவிற்கு அதனை தடுக்கத் தான் பார்ப்பான் . ஏனோ பல வருடங்களாக அவன் கடைப்பிடிக்கும் தொழில் தர்மம் அது.
இப்போதும் பத்ரனிற்கு எதிராக செயல்படவே மிருகேன் தனது ஆட்களுடன் கடத்தல் நடக்க இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தடுக்கக் கிளம்பி விட்டான். ஆனால் அது அவனுக்கு விரித்திருக்கும் வலையென்று அறியாமல் போனான்.
எப்படியோ கடத்தி வரப்பட்ட பெண்கள் இருக்குமிடத்தை தேடிப் பிடித்து அந்த சொகுசு பங்களாவை அடைந்தவன் அதிரடியாக உள்ளே நுழைந்தான்.
வாயில் காவலாளி மிருகேனைத் தடுத்து நிறுத்த முயல அவரைத் தள்ளி விட்டுவிட்டு தனது ஆட்களுடன் உள்ளே நுழைந்தான்.
இரு அடுக்கு மாடிளை கொண்ட அந்த பங்களாவில் ஒவ்வொரு அறையாக தட்டினான் மிருகேன்.
உள்ளே இருந்த சில ஆட்களை அடித்து துவைத்து விட்டு அங்கிருந்த ஒரு அறையின் கதவை தட்டினான். உட்புறமாக பூட்டியிருந்தது .
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் மிருகேன்.
அறைக்குள் கிட்டத்தட்ட பத்து பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
“ சிவா…சிவா..இங்க வா…ஏலேய்…மணி. இங்க வாங்க டா…” என்று கத்தியவன் அப்பெண்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் தனது காரில் நம்பகமான ஆட்களுடன் அவர்களை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் உள்ளே சென்றான்.
இரண்டாவது தளத்திற்கு சென்றவன் அங்கிருந்த அறைக்குள் நுழைந்தான்.
பத்ரனது அடியாட்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை பலவந்தப்படுத்திக் கொண்டிருந்ததை பார்த்தவன் அவர்களை அடித்து விரட்டினான் .
பாதி ஆடை களைந்த நிலையிலிருந்த அப்பெண் மிருகேனை “அண்ணா…என்னைய காப்பாத்துங்கண்ணா…” என்ற கேவலுடன் மிருகேனை அணைத்துக் கொண்டாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த பத்ரன் அவனது அடியாட்களுடன் வர அப்பெண்ணை அணைத்தாவறே , “ஏய்…எவனாவது கிட்ட வந்தீங்க…உடம்புல உசிரு இருக்காது…” என்று கூறிக் கொண்டே நகர அதற்குள் அப்பெண்ணை பிடிக்க ஒருவன் வேகமாக வர அப்பெண்ணோ பயந்து அவனை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.
அதே சமயம் வெளியே இருந்து உள்ளே வந்த கீதாஞ்சலி மிருகேனையும் அவனை அணைத்துக்கொண்டு நிற்கும் அப்பெண்ணையும் பார்த்து விட்டாள்.
கீதாஞ்சலியை பார்த்தவுடனேயே பத்ரனும் அவனது ஆட்களும் மெல்ல நகர்ந்து வெளியேறி விட்டனர்.
கீதாஞ்சலியின் கண்ணில் பத்ரனும் அவனது முக்கியமான அடியாட்களும் படவில்லை.
“எல்லா இடத்துலயும் தேடுங்க சீக்கிரம்.” என்றவள் மிருகேனை உறுத்து விழித்தாள்.
“ பயப்படாத ம்மா…பயப்படாத…” என்று அப்பெண்ணின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ…! மிஸ்டர் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள் ஆத்திரமாக.
“பத்ரனும் அவனோட ஆட்களும் போதைப் பொருளோட பொண்ணுங்களையும் கடத்துறதா கேள்விப்பட்டு இங்க வந்தேன். அவனோட ஆட்கள் இந்த பொண்ணுங்களையெல்லாம் அடைச்சி வச்சிருந்தாங்க…அதான்…இவங்களையெல்லாம் காப்பாத்தி கூட்டிட்டு போகலாம்னு வந்தேன். போதைப் பொருள் எங்கன்னு தெரியல மேடம். பத்ரனையும் அவனோட ஆட்களையும் கைது பண்ணுங்க… சீக்கிரம்…இந்த பொண்ணுங்களை எல்லாம் சேஃபான இடத்துக்கு கூட்டிட்டு போங்க ப்ளீஸ்…” என்று வியர்வையை சட்டையில் துடைத்துக் கொண்டே கூறினான்.
அவனைப் பார்த்து எள்ளலாக சிரித்தவள் , “ பாருடா…அதை யாரு சொல்றதுன்னு விவஸ்தை இல்லை. நீங்க ரொம்ப யோக்கியமோ?என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். நீங்க அட்வைஸ் பண்ற வேலையை வச்சிக்காதீங்க..” என்றாள்
“ ஒரு இடம் விடாம எல்லா இடத்தையும் சோதனை போடுங்க..போதைப் பொருளை எங்க ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு கண்டுபிடிங்க…” என்றவள் மிருகேனை அணைத்துக் கொண்டிருந்த அப்பெண்ணை அவனிடமிருந்து விலக்கியவள் அங்கிருந்த சில பெண்களையும் அமர வைத்தாள்.
அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே ஒருவனை காவலர்கள் பிடித்து வந்தனர்.
அவர்களின் கையில் பெரிய பெரிய பைகள் இருந்தது.
“ மேடம் ட்ரக்ஸ் எல்லாம் இந்த ஆள் கிட்ட தான் இருக்குது…” என்றார் ஒரு காவலர்.
“அவனை இங்க அழைச்சிட்டு வாங்க…” என்றாள்.
அவனையும் பைகளையும் பரிசோதித்துப் பார்த்தவள் அவனை ஓங்கி ஒரு அறை விட்டாள் .
“ ஆ.ஆ…”என்று வலி தாங்க முடியாமல் அலறினான் அவன்.
அவனது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துத் தன்னருகே நிற்க வைத்தவள் ,” சொல்லு இதெல்லாம் பண்ணச் சொன்னது யாரு? யாருக்காக இதெல்லாம் பண்ணுன? இப்ப உண்மையை நீ சொல்லலன்னா என்னோட ட்ரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும். எனக்கு உண்மை மட்டுந்தான் வேணும். மாத்தி பேசுன…அவ்வளவு தான் “ என்றாள் அழுத்தமாக.
“மேடம்…அது வந்து…அது..வந்து..” என்று திணறினான் அவன்.
“சொல்லுறியா இல்லையா?” என்று அவனது சட்டைக் காலரை பிடித்து இழுத்தாள் கீதாஞ்சலி.
“ சொல்லிடுறேன்…மேடம்….இந்த பொண்ணுங்களையெல்லாம் கடத்தி கை மாத்தி விடுறதையும் போதைப் பொருளையெல்லாம் வெளிநாட்டுக்கு கடத்துறதுக்கும் ஏற்பாடு பண்ணுனது….பண்ணுனது..” என்று தயங்கி நின்றான்.
“ம்ம்…சொல்லு..”என்று அகட்டினாள்.
“இதோ நிக்குறாரே…இந்த மிருகேன் தான்” என்றான் தயக்கத்துடன்.
பளாரென்று அறை விழுந்து அவனது கன்னத்தில். மிருகேந்திரன் தான் அடித்திருந்தான்.
“பொய் சொல்லுறியா டா…பொய்..அந்த பத்ரனை காப்பாத்த தானே பொய் சொல்லிட்டு இருக்க நீ…” என்று அவன் மீது பாய்ந்தான்.
“ஹலோ…! மிஸ்டர் மிருகேந்திரன் அதான் நான் விசாரிச்சிட்டு இருக்கேன் ல . பேசிட்டு இருக்கும் போதே இப்படி காட்டுமிராண்டித்தனமா நடந்துக்குறீங்க… கொஞ்சம் தள்ளி நில்லுங்க ” என்றவள் லத்தியை அவனது நெஞ்சின் மீது வைத்து தள்ளி நிற்க வைத்தாள்.
தன் நெஞ்சின் மீதிருந்த லத்தியை பார்த்து விட்டு அவளையும் ஒரு கணம் பார்த்தவன் தள்ளி நின்று கொண்டான்.