அத்தியாயம் 16

கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு படுத்திருந்தாள் மோகனா.

லேசாக கதவு திறந்திருக்க அதன் வழியாக வந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளை கூர்த்து கவனித்தான் ஆதவ்.

கஷ்டப்பட்டு தூங்குவது போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.

வட்ட முகம் , உப்பிய கன்னங்களில் குதித்து விளையாடலாம் போல தோன்ற தலையை உலுக்கிக் கொண்டவன் விழிகளால் அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தான். 

நீண்ட குடை போன்ற இமைகள் மூடியிருக்க, நாசியிலிருந்து சீரான சுவாசம் வெளிவந்து கொண்டிருந்தது. 

ஆரஞ்சு பழச்சுளையை வெட்டி வைத்தது போலிருந்த உதட்டின் மேலே சிறிய மச்சம். அதனை மெல்லத் தொட கையை நீட்ட அவளோ பதறி திரும்பி‌ப் படுத்துக் கொண்டாள்.

‘ஆத்தாடி..!  இந்த போலீஸ்…சரியான கேடியா இருப்பான் போலவே…அய்யோ இப்ப எதுக்காக இங்க வந்து நிக்கறான்னு தெரியலையே…பக்கத்துல வந்தாலே பக்கு பக்குன்னு இருக்குது…” என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

மோகனா திரும்பிப் படுக்கவும் நீட்டிய கரங்களை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவன் அவளது உதட்டின் மேலிருந்த மச்சத்தையும் தனது உள்ளங்கையிலிருந்த சிங்க முக மச்சத்தையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டான்.

திரும்பிப் படுத்திருந்ததால் அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் சரடின் முடிச்சு அவனது பார்வையில் விழுந்தது.

“அவனவனுக்கு எப்படி எப்படியோ கல்யாணம் நடக்குது. ம்ம்…என்னோட தலையெழுத்து  நாலு சுவத்துக்குள்ள இந்த‌ மாதிரி ஒரு ஃப்ராடு கழுத்துல‌ தாலிய கட்டணும்னு…சும்மா சொல்லக்கூடாது அம்சமா தான் இருக்கா….எது எது எப்படி எப்படி இருக்கணுமோ அது அது கரெக்டா இருக்குது. பன்னு போல இருக்குற  கன்னத்தையும்,  நீட்ட மூக்கையும் கடிச்சு திங்கணும் போல இருக்குது. அடிக்கடி சுழிக்குற அந்த உதடும் அழகா தான் இருக்குது …. அப்பறம் கழுத்துக்கு கீழே….”என்று ஆரம்பிக்கவும் வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கதவை சாற்றிக் கொண்டு வெளியேறினான்.

அவனது பேச்சில் அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்து படுத்திருந்தாள் மோகனா. அவன் கதவை மூடி விட்டு சென்றவுடன் படக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

“ அடப்பாவி ஏபிசி…இப்படி பேசி வைக்குற நீ. உன்னையெல்லாம் சஸ்பென்ட் பண்ணுனது தப்பேயில்லை. ம்ம்…. ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான் போல .அவங்க அம்மாவையும் அக்காவையும் நல்லா தான் பாத்துக்குறான்.” என தனக்குத்தானே பேசியவள் போர்வை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

தனது அறைக்குள் நுழைந்த கீதாஞ்சலிக்கு மனம் அழுத்தமாகவே இருந்தது. இரவு உடைக்கு மாறியவள் பொத்தென்று மெத்தையில் விழுந்தாள்.

மூடிய விழிகளுக்குள் மிருகேனது பிம்பமே தோன்றி இம்சித்தது. கூடவே வஜ்ரவேலின் முகம் தோன்ற அவளது முகம் இறுகியது.

“ சரி தான் போடி ….நீயில்லன்னா என்ன இந்த உலகத்துல பொண்ணுங்களுக்கா பஞ்சம்? என்ன ஆனாலும் சரி வஜ்ரவேல் அய்யாவை விட்டு நான் வர மாட்டேன்…நீயும் உன்னோட ட்ராமாவை நிப்பாட்டிட்டு வேற வேலை இருந்தா பாரு…” என்ற மிருகேனின் குரல் இன்னமும் செவியில் மோதி கோபத்தை கிளறிக் கொண்டிருந்தது.

எண்ணங்கள் உருவம் கொண்டு விஸ்வரூபமாக கண்முன்னே விரிய அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

மறுநாள் காலை தாமதமாகவே எழுந்தாள். ஆதவ் ஜானகியிடம் கீதாஞ்சலியை எழுப்ப வேண்டாம் என்று கூறியிருந்ததால் ஜானகியும் அவளை தொந்தரவு செய்ய வில்லை.

காலை கடன்களை முடித்துக் கொண்டவள் வீட்டின் மேல் தளத்தில் இருக்கும் ஜிம்மிற்குச் சென்று திரட் மில்லில் ‌ஓட‌ ஆரம்பித்தாள்.  

முதலில் மெதுவாக ஓட ஆரம்பித்தவள் வேகத்தை கூட்டிக் கொண்டே போனாள். அவளின் ‌மன‌ வேகத்திற்கு இது ஒன்றுமேயில்லை என்பது போல இருந்தது.

முப்பது நிமிடங்கள் இடைவிடாது ஓடிக் கொண்டிருந்தவள் வியர்வையில் நனைந்திருந்தாள்..

ஆர்ம் கட் பனியன் மற்றும் ட்ராக் பேன்ட்டுடன் அங்கு வந்து நின்றான் ருத்ரன். 

அத்தனை வேகமாக திரட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தவளைக் கண்டு புருவம் சுருக்கியவன் அவளருகே விரைந்து வந்து வேகத்தை குறைத்து வைத்தான். 

திடீரென்று வேகம் குறையவும் சமநிலை தடுமாறியவள் திரட்மில்லின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு சமாளித்து நின்றாள்.

“ கீது வாட் இஸ் திஸ்?” என்றான் அழுத்தமாக.

“அதையே தான் நானும் கேக்குறேன்…இப்படி திடீர்னு வந்து ஸ்பீடை கம்மி பண்ணுவீங்களா? கீழ விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?”

“ம்ம்ச்… கீதும்மா…அதையே  தான்‌ நானும் சொல்றேன். இவ்வளவு ஸ்பீட்ல  இன்க்லைனையும் அதிகமா வச்சிட்டு திரட் மில் பண்ணினா லெக் இன்ஞ்சூரி ஆகும் னு தெரியாதா? எதுக்கு இவ்வளவு வேகம்?”  என்றவன் அவளது கையிலிருந்த கட்டைப்‌ பார்த்து விட்டு,  “ஏய்…என்னாச்சு கீது? கையில எப்படி அடி பட்டுச்சு? பாத்து வேலை பாக்க மாட்டியா? சின்னக் குழந்தை மாதிரி அடிபட்டுட்டு வந்து நிக்குற..” என்றவன் அவளது கரத்தை திருப்பிப் பார்த்தான்.

“ ம்ம்ச்…ஒண்ணுமில்லை ப்பா…விடுங்க“என்று கரங்களை விடுவித்துக் கொண்டவளுக்கு அலைப்பேசியில் அழைப்பு வர அதனை எடுத்துக் கொண்டு பால்கனி கதவை திறந்து வெளியே சென்றாள்.

சலிப்புடன் தலையை இருபக்கமும் ஆட்டியவன்  திரட்மில்லில் ஓட ஆரம்பித்தான்  .

அலைப்பேசியில் ஏதோ பேசியவள் ,  “ம்ம்ச்..சரி நான் வர்றேன்…வச்சிடுங்க…”என்று கூறி விட்டு  தனது அறைக்குச் சென்று குளித்து கிளம்பத் தயாரானாள்.

அனைவரும் உணவருந்தும் மேசையில் அமர்ந்திருந்தனர். கீதாஞ்சலியின் கையிலிருந்த கட்டைப்‌ பார்த்து விட்டு பதறினாள் ஜானகி.

“ என்ன டி என்ன ஆச்சு? கையில கட்டு போட்டுண்டு இருக்க? “ என்றாள்.

“ ம்ம்ச்.‌‌..சாப்பாடை போடும்மா. என்கொய்ரி பண்ணிட்டு இருக்காத.. நான் அர்ஜெண்டா போகணும்.‌ நிதானமா என்ன ஆச்சுன்னு அப்பறம் சொல்றேன்.‌‌ இப்ப சாம்பாரை ஊத்து…” ‌என்றவள் தாய் தந்தையின் முறைப்பை சட்டை செய்யாமல் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

ஆதவ் மனதினுள் ,” இவளை என்ன டிசைன் ல பெத்து வச்சிருக்காங்களோ?”  என்று முணுமுணுத்துக் கொண்டான்.

அனைவரது பார்வையும் தன் மீதுதான் என்று அறிந்திருந்தாலும் யாரையும் கண்டுகொள்ளாமல் உண்டு விட்டு எழுந்து சென்றாள்.

அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மோகனாவிற்கு சற்று ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூரி கிழங்கை பார்த்ததும் நாவில் நீர் ஊற ஆரம்பித்தது விட்டது..

ஆதவ்வை தாண்டி தான் பூரி மற்றும் கிழங்கின் பாத்திரத்தை எடுக்க முடியும்.  

அனைவரும் யோசனையாக கீதாஞ்சலியை பார்த்தார்கள் என்றால் இங்கு ஒருத்தி பூரி கிழங்கு பாத்திரத்தை எப்படி எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

யாரும் பூரியை தொடுவதற்கான அறிகுறியே தென் படவில்லை.

‘ மானம்‌ ரோசம் பார்க்காம கேட்டுடு டி மோகனா…பூரியை பார்த்தவுடனே அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு போயிடற…’ என மனதினுள் நினைத்துக் கொண்டு, “ ஆன்ட்டி…அந்த பூரியையும் கிழங்கையும் இந்த பக்கம் கொஞ்சம் நகர்த்தி விடுறீங்களா..? ப்ளீஸ்…” என்றதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதவ்விற்கு புரையேற அவளை முறைத்து வைத்தான்.

ஜானகி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு பாத்திரத்தை நகர்த்தி வைத்தாள்.

பூரியை பிய்த்து சிறு விள்ளலை கிழங்கில் தொட்டு உண்டாள்.

“ ம்ம்….ஆன்ட்டி ரொம்ப சூப்பரா இருக்கு. டேஸ்ட் அப்படியே நாக்குல நிக்குது. சூப்பர். அங்கிள் ரொம்ப கொடுத்து வச்சவரு…”என்றவள் மூவரும் தன்னை ஓரு மாதிரியாக பார்ப்பதை உண்ர்ந்து, “ சாரி..ஆன்ட்டி இந்த மாதிரி நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு….நான் கொஞ்சம் ஃபுட்டி(foodie) அதான்…ஹி…ஹி… “என்று கோணலாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

ஆதவ் மோகனாவின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு அவளிடம் யாரும் எதுவும் வேண்டுமா என்று கேட்டதில்லை. 

தினமும் உணவு மேசைக்கு வருவாள் தனக்குத் தேவையானதை எடுத்துப் போட்டுக் கொண்டு உண்டு விட்டு சென்று விடுவாள். அவளும் யாரிடமும் பெரிதாக பேச மாட்டாள்.. ஏனென்றே தெரியாத இடைவெளி இருபக்கமும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் மோகனா கவலைப்படவில்லை. 

உண்பதற்கு வேளா வேளைக்கு உணவு கிடைத்து விடுகிறது. அலைப்பேசி இருக்கின்றது. நேரம் போவது தெரியாமல் அதனை நோண்டிக் கொண்டிருப்பாள். 

அவளுக்கு கடுப்பாக இருந்த ஒரே விஷயம் கைச்செலவிற்கு பணம். 

ஆதவ்விடம் சென்று கேட்க மனம் ஒப்பவில்லை. அவளுக்கென்று பணத்தேவை இருந்தது தான். 

ருத்ரனது வீட்டில் மாட்டிக் கொண்டு விட்டதால் பணத்தை ஈட்டுவததற்கான(?) வழி தடைப்பட்டு தான்‌ போனது. செய்வதறியாது திகைத்து நின்றாள்‌..

அவளையறியாமலேயே இருபக்கமும் இருந்த இடைவெளியை தனது துடுக்கான பேச்சில் சற்று பலகீனப் படுத்தியிருந்தாள்.

அவள் பேசியதற்கு யாரும் எதிர்வினையாற்றவில்லை என்பதால் அவளே மீண்டும் தொடர்ந்தாள்.

“ ஆன்ட்டி..நான்  வீட்டுக்கு போய் என்னோட திங்க்ஸையெல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்…”என்றாள்‌

“ ம்ம்…சரிம்மா…ஆனா தனியா போக வேண்டாம். ஆதவ்வை கூட கூட்டிண்டு போ. அப்படியே உன்னோட தங்கச்சியை பாத்துட்டு வா. உன் தங்கச்சிக்கு ஹாஸ்டல்ல இருக்க கஷ்டமாயிருந்தா நம்ம ஆத்துக்கு அழைச்சிண்டு‌ வந்துடு. டேய் ஆதவ்…அவளை அழைச்சிண்டு போயிட்டு வந்துடு…” என்றாள் ஜானகி.

“என்னால முடியாது ம்மா…வேலையிருக்கு… “ என்று‌ கடுகடுத்தான் ஆதவ்.

“ ம்ம்ச்…போ டா…ரொம்ப பண்ணாத…”

“ பரவாயில்ல ஆன்ட்டி அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். நானே பாத்துக்குறேன்..அப்பறம் என்னோட தங்கச்சி கொஞ்சம் ஷை டைப் . வெளி ஆட்கள் வந்தா அவ திரும்பவும் ஹாஸ்டல் ரூமுக்கே போயிடுவா” என்றவளின் பேச்சில் லேசாக துள்ளல் தென்பட்டது போலிருந்தது ஆதவ்விறகு.

‘ இது தப்பாச்சே…இந்த ஃப்ராடு எதுக்காக தனியா போகணும்னு குதிக்குது. .தனியா‌ விடாத ஆதவ்…”என்று நினைத்தவன் அவள் முன்பு சொடக்கிட்டு, “ஏய்…! ரெடியா இரு…சாயங்காலம் உன் வீட்டுக்கு போகலாம்…” என்று கூறி விட்டு சென்றான்.

மிருகேந்திரன் காவலில் வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்திற்கு விரைந்தாள் கீதாஞ்சலி.

கைகளை கோர்த்து கொண்டு தலை குனிந்து அமரந்திருந்தான்‌ மிருகேன்‌ . முகம் முழுவதும் வீங்கி போய் இரத்தம் கட்டியிருந்தது.

பத்ரனின் கைகூலியாக இருக்கும் மூத்த காவல் அதிகாரி தான் விசாரணை என்ற பெயரில் அவனை அடித்து துவம்சம் செய்திருந்தார்.

தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் லாக்கப்பின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு மெல்ல தலையை மட்டும் உயர்த்தி பார்த்தான்

கீதாஞ்சலி தான் அவன்‌ முன்பு வந்து நின்றாள்.

பத்ரனின் கைகூலியான அந்த காவலர், “ எவ்வளவு அடி அடிச்சாலும் அசர மாட்டேங்குறான்‌ மேடம்.‌ வாயைவே  திறக்கல. அடிச்சு அடிச்சு கை தான் வலிக்குது. மரம் மாதிரி அப்படியே தெனாவெட்டா நிக்குறான் பாருங்க…திமிரு…உடம்பு பூராவும் திமிரு…” என்றவரை கூர்ந்து பார்த்தான் மிருகேந்திரன்.

அதில் அவரது வாய்  தானாக மூடிக்கொண்டது. 

அந்த காவல் நிலையத்தில் அனைவருக்கும் மிருகேந்திரனைப் பற்றி நன்கு தெரியும். 

கிட்டத்தட்ட அனைத்து காவலர்களுக்குமே மறைமுகமாக உதவி செய்திருந்தான். அந்த விசுவாசத்தின்‌ காரணமாக அவன் மீது கை வைக்கவோ விசாரிக்கவோ அனைவருக்கும் அத்தனை தயக்கம்.

ஆனால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பத்ரனின் கைகூலியாக இருக்கும் காவலர் ஒருவர் பணியில் இருப்பார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பத்ரனிற்கு ஆதரவாக இருந்த அந்த காவலர் விசாரணை என்ற பெயரில் மிருகேனை காட்டுத்தனமாக அடித்திருந்தார்.

கீதாஞ்சலியின் அலைப்பேசிக்கு அழைத்துப் பேசியவரும் இவரே. 

எனவே தான் அந்த காவல் நிலையத்திற்கு உடனே புறப்பட்டு வந்திருந்தாள்.

இரத்தம் கன்றிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தவள், “ நீங்க வெளியே போகலாம் செல்வம்…நான் பாத்துக்குறேன்…” என்றாள் அவர் புறம் திரும்பாமலேயே‌.

“மேம்…அது வந்து…” என்று ஆரம்பித்தவரை இடை மறித்து, “நீங்க போகலாம்னு  சொன்னேன். காதுல விழலயா?” என்றவுடன் ,” சாரி…மேடம்…” என்று கூறி விட்டு இடத்தை விட்டு நகர்ந்தார்.

லாக்கப்பை பூட்டிவிட்டு வந்தவள் அவனை நிதானமாக பார்த்தாள் . 

அவனோ தலையை நிமிரவே இல்லை.

“ஹலோ…மிஸ்டர்….” என்று அவன் முகத்தின் முன்பு சொடக்கிட்டாள்.

அப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. இன்னும் நெருங்கி நின்றவளின் பூட்ஸ் அணிந்த  கால்கள் பார்வைக்குத் தெரிந்தாலும் அவன் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

“பாரு..டா…எந்த கேஸ்லயும் மாட்டாத இன்டெலிஜென்ட் மிருகேந்திரன் இப்ப ஆஃப்டரால் பொண்ணுங்க விஷயத்துல மாட்டி உள்ள உக்காந்திருக்குறதை….! சோ..சேட்.. என்ன நிமிர்ந்து பாக்க மாட்டியா?” என்று கூறிக்கொண்டே குனிந்திருந்தவனது  தலை முடியை பிடித்து தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தினாள்.

அவளோ அவன் புறமாக குனிந்திருக்க,  வலியில் முகம் சுணங்கினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளை அண்ணாந்து பார்த்தான். 

அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தான். 

அதில் ஏதோ சாதித்து விட்ட திருப்தி காணப்பட்டது. 

அவனது பார்வை விழிகளிலிருந்து மெல்ல இறங்கி நாசி , உதடுகள் கழுத்து என்று பயணித்து பெண்ணின் மென்மையில் தாரளாமாக பயணித்து அங்கேயே நின்று இளைப்பாறியது.

அவனது பார்வை மாற்றத்தை அறியாத பெண்ணவள் இன்னும் அவன் முகத்திற்கு நேராக குனிய அது இன்னும் வசதியாக போய்விட்டது அவனுக்கு.

உதடுகளில் வழக்கம் போல சிறிய புன்னகை தவழ்ந்தது. அதைக் கண்டு கடுப்பானவள் அவனது முடியை இன்னமும் இறுக்கிப் பிடிததாள்.

“ இவ்வளவு அடியிலும் உனக்கு எப்படி சிரிக்க வருது..?”என்றாள் காட்டமாக.

உதட்டின் ஓரமாக வழிந்து கொண்டிருந்த உதிரத்தை சுண்டி விட்டவன் அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் தனது தலையை அவளது மார்புக்கு நேராக சற்று நிமிர்த்தி வைத்துக் கொண்டு , “கொஞ்சம் கிட்ட வாங்க கமிஷ்னர் மேடம்…” என்றான்.

அவன் ஏதோ கூறப் போவதாக நினைத்து குனிந்து தனது செவியை அவன் அருகே கொண்டு செல்ல, “உங்களுக்கு இப்ப கொஞ்சம் சதை போட்டுடுச்சு….தேர்ட்டி சிக்ஸ் ,தேர்ட்டி ஃபோர் , தேர்டி சிக்ஸ்…” என்று அவளது அங்க வளைவுகளின் அளவினை கூற பட்டென்று நிமிர்ந்து நின்றாள்.

மேல் சட்டையை நன்றாக நீவி விட்டவள் அவனை முறைத்தாள்.

அவனோ கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

“ இந்த முறை சறுக்கிடுச்சு…இதே மாதிரி எல்லா முறையும் சறுக்க விட மாட்டேன்…” என்றான் கழுத்தை இடப்புறமும் வலப்புறமும் திருப்பிக் கொண்டே‌. 

என்ன நினைத்தாளோ இரண்டே எட்டில் அவனருகே வந்து நின்றவள் லத்தியால் அவனது காலில் சுரீரென்று அடித்தாள்.

அவளது திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன் அதே இடத்தில் காலை பிடித்துக் கொண்டு  அமர்ந்து விட்டான்.

“ என்ன வலிக்குதா? வலிக்கட்டும்‌ வலிக்கட்டும். இனி அடிக்குற அடியில இந்த தொழிலை விட்டே நீ ஓடிப்போயிடணும்…இருக்குற இடமே தெரியக்கூடாது….” என்றவள் லத்தியால் அவனது மார்பு , கால், முதுகு என்று ஒரு இடம் மிச்சம் வைக்காமல் அடித்தாள். 

எத்தனை வருடக் கோபமோ? எதற்காக இ்ந்த கோபமோ? அத்தனையும் ஒரே நாளில் அவன் மீது பாய்ந்திருந்தது. 

ஏற்கனவே இரத்தக் கன்றலுடன் இருந்தவனுக்கு அவளது அடிகள் அதிக வலியை கொடுத்தாலும் அவனது மனவலிமை அதை விட அதிகமாக இருந்தது. 

அவன் கத்தவோ,  கதறவோ இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு  நின்றிருந்தான்  

அது இன்னும் ஆத்திரத்தை வரவழைத்தது கீதாஞ்சலிக்கு. வலியுடன் நிமிர்ந்து நின்றிருந்தவனை தோளில் ஓங்கி அடித்தாள்.

“ யாருக்கா இதெல்லாம் ? ஒழுங்கு மரியாதையா இதையெல்லாத்தையும் விட்டுட்டு போயிடு….” என்று கூறி மீண்டும்  லத்தியை ஓங்கினாள் . 

ஓங்கிய லத்தியை லாவகமாக பிடித்து இழுத்தவன் அவளை தன் புறமாக இழுத்து நிறுத்தி வைத்தான். 

லத்தியை அவள் கரம் பற்றியிருக்க, அவளது கரத்தின் மீது அவன் கரம் அழுத்தமாக படிந்திருந்தது.

அவளுக்கு பின்புறமாக நின்றிருந்தவன் லத்தியை அவளது கழுத்துக்கு கீழே வைத்து அழுத்தி அவள் செவி மடலருகே குனிந்து , “எதுக்கு டி இப்படி பண்ணுற?” என்றான் கோபமாக.

“ நா…நா என்ன பண்ணுறேன்?”என்று திமிறியவளை லத்தியால் இன்னும் அழுத்தம் கொடுத்து தன் பக்கமாக அழுத்திச் சாய்த்தவன் , “ வேணாம் கீது…என்னோட கோபத்தை ரொம்ப கிளறிட்டு இருக்க..தாங்க மாட்ட நீ…” என்றான்  உதடுகள் அவளது செவியில் உரச. அதில் ஒரே ஒரு கணம் அவளது தேகம் சிலிர்த்து அடங்கியது

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top