அலுவலகத்திற்கு சற்று நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.
கீதாஞ்சலியிடம் பேச வந்த ஜானகி ஒரு கணம் தயங்கி நின்று பின்னர் மகளிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
“ கீதும்மா…சொல்றேன்னு கோவிச்சுக்காத…புடவை எடுக்கறதுக்கும் திருமாங்கல்யம் செய்ய கொடுக்கறதுக்கும் மட்டும் எங்க கூட வா. பையன் ஆத்துல அவா சொந்தக்காரா சில பேர் உன்னை பாக்கணும் னு ஆசைப்படுறா…நோக்கு எப்ப நேரம் தோதுப்படறதோ அப்ப சொல்லு போயிட்டு வந்துடலாம். ஞாயித்து கிழமையானாலும் பரவாயில்ல டி. போகலன்னா ரொம்பத் தப்பா நினைச்சுப்பா…”என்றான்.
ஜானகியை நுனி மூக்கு சிவக்க முறைத்தாள் கீதாஞ்சலி.
கோபம் வந்துவிட்டால் ஜானகிக்கும் கீதாஞ்சலிக்கும் நுனி மூக்கு சிவந்து விடும்.
“ ஏம்மா நோக்கு எத்தனை தரம் சொல்றது. இதுக்கெல்லாம் என்னை எதிர்பார்க்காதேன்னு.. சொல்றதையே கேக்க மாட்டியா நீ? நேக்கு இருக்குறதே ஞாயித்து கிழமை மட்டுந்தான். அதையும் உன் கூட கடை கடையா ஏறி இறங்கி ஷாப்பிங் பண்ணி வேஸ்ட் பண்ணிண்டு இருக்க முடியாது. எத்தனை தடவை சொன்னாலும் புரிஞ்சிக்காம ஏன்ம்மா இப்படி உயிரை வாங்குற? நீயே எல்லாத்தையும் முடிச்சிண்டு வந்துடு.நேக்கு இங்க ஆயிரத்தெட்டு வேலை இருக்கறது என்னால இப்போதைக்கு வர முடியாது. சும்…மா அவா கூப்பிடுறா இவா கூப்பிடுறான்னு நொச்சு பண்ணிண்டு இருக்காதே…! ” என்று கூறினாள் அழுத்தமாக.
எப்பொழுதாவது அத்தி பூத்தார் போல் அக்ரஹாரத்து பேச்சு வழக்கு கீதாஞ்சலியிடம் தென்படும். அதை வைத்தே அவள் ஏதேனும் அழுத்தத்திலோ அல்லது கோபத்திலோ இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளலாம்.
ஜானகி முகம் வாடியது. மேலும் மேலும் மகளிடம் பேசி வாதிட தெம்பில்லாமல் அறைக்குள் நுழைந்தாள்
தொப்பென்று சோஃபாவில் அமர்ந்து விழிகளை மூடிக் கொண்டாள் கீதாஞ்சலி.
ஏதேதோ யோசனைகள். அதனை செயல்படுத்த அத்தனை தயக்கம் அவளுள்.
திடுமென்று ஏதோ சத்தம் கேட்க அவளது சிந்தனை கலைந்தது.
கண்களை திறந்தாள் எதிரே நீல நிற டீ சர்ட் மற்றும் ஜீன்ஸூடன் அலைப்பேசியை நோண்டிக் கொண்டே வந்து டீப்பாயில் கால் இடித்தது கூட தெரியாமல் அதன் மீதே அமர்ந்தான் ஆதவ்.
மிக ஆர்வமாக அலைப்பேசியில் மூழ்கியிருந்தவனுக்கு சோஃபாவில் அமர்வதற்கு பதிலாக டீப்பாயில் அமர்ந்து கொண்டிருப்பது கூட உறைக்கவில்லை போலும்
அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள் கைக்கடிக்காரத்தை கட்டிக் கொண்டு அவனருகே வந்து நின்றாள் கீதாஞ்சலி.
அவள் அருகில் நிற்பது கூட தெரியாமல் சேட்டில் ஆழ்ந்து போயிருந்தான் ஆதவ்.
பத்து நிமிடத்துக்கு மேலாகியும் அவனது விழிகள் அலைப்பேசியை விட்டு அங்குமிங்கும் சிறிது கூட நகரவில்லை. அதற்கு மேல் அவளுக்கு பொறுமையில்லை. அவனது தோளினைத் தட்டினாள்.
அவனோ அவளது கரங்களை தட்டி விட்டுட்டு மோகனாவிடம் சுவாரஸ்யமாக சேட் செய்து கொண்டிருந்தான்.
“ ஹலோ…! என்ன டா பண்ணிட்டு இருக்க?” என அவனைப் பிடித்து உலுக்கினாள் கீதாஞ்சலி.
மோகனாவிடம் ஆயிரம் முறை ,”பை” கூறி விட்டு நிதானமாக நிமிர்ந்து கீதாஞ்சலியை பார்த்தான்.
“ என்ன கீதுக்கா வேணும் உனக்கு?” என்றான் சலிப்புடன்.
“சரி தான்…வர வர உன்னோட போக்கே சரியில்லை டா…எவ்வளவு நேரமா உன்னையே கூப்பிடுறது? காதுல விழலயா? எப்பப் பார்த்தாலும் ஏன் இ்ப்படி ஃபோன்லயே மூழ்கிப்போயிருக்கன்னு தெரியலையே? ம்ம்..” என்றாள் ஆராய்ச்சியாக.
“ அதெல்லாம் ஒண்ணுமில்லை ..நீ என்னவோ சொல்ல வந்தியே …என்னன்னு சொல்லு…”
“செக்கிங் போயிட்டு தானே இருக்கு?என்றாள் மொட்டையாக.
“ என்ன செக்கிங்? “என்றான் அலட்சியமாக.
“ ஆதவ்வ்வ்…” என்று பல்லைக் கடித்தாள் கீதாஞ்சலி.
“ கீதுக்கா…மொட்டையா செக்கிங்ன்னு சொன்னா என்னன்னு நினைக்கறது? சொல்ல வந்ததை தெளிவா சொல்லு…” என்றான்.
“ ஊபஃப்…” என இடுப்பில் கை வைத்து மூச்சை இழுத்து விட்டவள் ,” அந்த மிருகேந்திரனை ஃபாலோவ்…. பண்ணிட்டு தானே இருக்க…இது வரைக்கும் ஏதாவது சந்தேகம்படும் படியா கப்பலோ படகுகளோ இராமேஸ்வரத்தை தாண்டிருக்கா…?” என்றாள்.
“ ம்ம்ச்…இல்ல கீதுக்கா…இதுவரை அந்த மாதிரி எந்த கப்பலும் போகலை. டிபார்ட்மெண்ட் ஆளுங்க அலர்ட்டா தான் இருக்காங்க. எதுனாலும் உனக்கு இன்பஃர்மேஷன் ஷேயர் பண்ணிடுறேன்…ஓஃபன் சேலன்ஜா விடுறான்…? இந்த தடவை கண்டிப்பா அவன் மாட்டுவான் பாரு …அப்ப இருக்கு அவனுக்கு மாப்பிள்ளை விருந்து..” என்று கோபத்தில் கொதித்தவனை பார்த்து நக்கலாக சிரித்தாள் கீதாஞ்சலி.
“ என்ன கீதுக்கா…? ஏன் இப்படி நக்கலா சிரிக்குற? இந்த தடவையும் அவனை கோட்டை விட்டுடுவேன்னு நினைக்குறியா? இல்ல என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான் கடுப்பாக.
அவனருகே வந்து நின்று அவனை நேராகப் பார்த்தவள், “ உன் மேல நிறையவே நம்பிக்கையிருக்குது ஆதவ்…அதே சமயம் அந்த மிருகேந்திரனை லேசா எடைப் போட்டுட்டாத…! அவனைப் பத்தி உனக்குத் தெரியாது…நீ ஒண்ணு நினைச்சு செஞ்சன்னா அவன் வேற மாதிரி அதை டீல் பண்ணுவான்.. சோ..பீ…கேர் ஃபுல் ..” என்று கூறி விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தவளின் நடை ஆதவ்வின் கேள்வியில் தடைப்பட்டது.
“ அவன்…என்ன பெரிய்ய ..… ***யா ? எனக்கு அவனைப் பத்தி தெரியாது…ஆனா உனக்கு மட்டும் அவனைப் பத்தி ரொம்பத் தெரியுமோ?” என்றான் காட்டமாக.
ஏனோ ஒவ்வொரு முறையும் கீதாஞ்சலி அவனது புத்திசாலித்தனத்தை மெச்சும் விதமாக பேசும் போதும் அவனுக்கு பெட்ரோலை ஊற்றியதைப் போல தேகமெல்லாம் எரியும். அதிலும் அவனை நேரில் பார்த்து விட்டால் கொன்று விடும் அளவிற்கு தான் ஆத்திரம் தான் ஆதவ்விற்கு. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றான்.
ஆதவ்வின் கேள்விக்கு பதில் கூறாமல் அவனை ஒரு பார்வை பார்த்தவள் தொப்பியை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
‘ ம்ம்கூம்…இவ மட்டும் நம்ம கிட்ட ஆயிரம் கேள்வி கேப்பா…நாம ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதிலே வராது. என்ன நினைக்குறான்னும் தெரியாது . என்ன டிசைனோ…? ‘ என சலித்துக் கொண்டான்.
ஆம்..! உண்மையில் கீதாஞ்சலி ஒரு புரியாத புதிராக தான் இருந்தாள்.
சென்னை முதல் இராமேஸ்வரம் வரையிலான துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்டது..
அனைத்து விசைப்படகுகள், சிறிய ரக கப்பல்கள் என அனைத்திலும் சோதனை மேற்கொண்டனர் போலீசார்.
உல்லாச சொகுசுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு செல்ல தயாராக நின்றிருந்தது.
நான்கடுக்குகள் கொண்ட அந்தப் பிரம்மாண்டமான சொகுசு கப்பல் கம்பீரமாக துறைமுகத்தில் நின்றிருந்தது.
ஒரிரு பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.
காவல்துறையினர் சாதாரண உடையில் நோட்டமிட்டுக் கொண்டே சோதனை மேற்கொண்டனர் .
தரை தளம் முதல் மூன்றாம் தளம் வரை அலசி ஆராய்ந்தனர்.
இரண்டாம் தளத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான அறையினுள் நவீன ரக சக்கர நாற்காலியில் வயதான முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவரிடமும் சோதனையை மேற் கொண்டனர் காவல் துறையினர்.
அவரை தனியே அழைத்துச் சென்று அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியையும் சோதனை செய்தனர்.
இவையனைத்தையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ் .
அவனது கூரிய பார்வை அனைவரையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.
கப்பல் சிப்பந்திகள், பயணியாளர்கள் அவர்களின் உதவியாளர்கள் என அனைவரையும் சோதனை செய்துவிட்டு வந்திருந்தான் ஆதவ்.
மாற்றுத்திறனாளியான அப்பெரியவரின் சக்கர நாற்காலியில் விலையுயர்ந்த யானைத் தந்தங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் அவரது பயணப் பொதியில் மரகத கற்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அவையெல்லாம் உண்மையான மரகதக் கற்கள்தானா என்று பரிசோதித்தனர் காவல்துறையினர்.
அப்பெரியவரிடம் கிடுக்கிப்பிடி போட்டு விசாரணை செய்ததில் யானைத் தந்தம் மற்றும் மரகத கற்களை கடத்த முயன்றதாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அவரை கப்பலிலிருந்து இறக்கி ஆதவ்விடம் அழைத்துச் சென்றனர் காவலர்கள்.
“ இவர் கிட்டயிருந்நு யானைத் தந்தமும் மரகத கல்லையும் பறிமுதல் செஞ்சிருக்கோம் சார். ஷிப் ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கு. ப்ரிட்ஜ் (Bridge room) ரூம்ல இருந்து கேப்டன் சீக்கிரமா ஷிப்பை எடுக்கணும்னு சொல்றாரு . ரொம்ப நேரம் ஷிப்பை நிக்க வைக்க முடியாதுங்குறார். என்ன பண்றது?” என்றார் காவலர் ஒருவர்.
“அந்தப் பெரியவர் கிட்டயிருந்து எத்தனை தந்தம் பறிமுதல் செஞ்சிருக்கீஙக? எத்தனை மரகத கல் வச்சிருந்தாரு.? எங்கிருந்து அதையெல்லாம் எடுத்தீங்க?” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டான்.
“ சார் அவரோட வீல் சேர் சீட்டுக்கு அடியில சின்னச் சின்னத் துண்டா யானைத் தந்தம் இருந்தது. அந்த வீல் சேராட கால் பகுதியில உள்ள ஸ்டீல்ல டியூப் வச்சி அதுல மரகத கல்லையெல்லாம் ஒளிச்சு வச்சிருக்காங்க….அந்தப் பெரியவரை கஸ்டடியில எடுத்திடலாமா?” என்றார் அந்த காவலர்.
“ வேற எதுவும் கிடைக்கலையா? “ என்றான் தாடையைத் தடவியபடி.
“ இல்ல சார்…எல்லாத்தையும் தரோவா செக் பண்ணிட்டோம். எல்லா பேசஞ்சர்ஸோட பேக்கேஜ் , குழந்தைங்களோட பேக், வயசானவங்களோட பேக்கேஜ் , ஷிப் எம்ப்ளாயியிஸோட பேக்கேஜையும் செக் பண்ணிட்டோம்…இதைத் தவிர வேற எங்கயும் எந்தப் பொருளும் இல்லை சார்..”என்றார் உறுதியாக.
அவனுக்கு கப்பல் மாலுமிகளிடம் அலைப்பேசி அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.
இதற்கு மேலும் அந்த சொகுசுக் கப்பலை நிறுத்தி வைத்து தாமதப்படுத்த முடியாது என்பதினால் கப்பல் கிளம்புவதற்கு அனுமதி கொடுத்து விட்டான்.
ஆனாலும் அவனுக்கு ஏதோ ஒன்று மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.
பல்வேறு யோசனைகளுடன் கீதாஞ்லியை அழைத்து விஷயத்தைக் கூறினான்.
“ஆதவ்.. நிஜமாவே யானைத் தந்தமும் மரகதக் கல்லும் கிடைச்சிடுச்சா…?”என்றாள் வெறுமையான குரலில்.
“ ஆமா மேடம்…” என்றவனது குரல் இறங்கியே ஒலித்தது.
எங்கோ ஏதோ மிகப்பெரிய பிழை நிகழ்ந்துள்ளது என்று இருவருக்குமே புரிந்தது.
சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்தவளின் உதடுகள், “ ஹீ கம்ப்ளீடட் ஹிஸ் மிஷன்… ( He completed his mission)” என்று கோபமாக முணுமுணுத்துக் கொண்டது.
பிழையை வெற்றிகரமாக நிகழ்த்தியவனோ செஃப் உடையில் சுடச்சுடச் இனிப்பு வகைகளை தயாரித்துக் கொண்டிருந்தான்.
இரவு உணவுக்கென்று அமர்ந்திருந்த பயணிகளிடம் சிறிய தங்க நிறத் தட்டில் இனிப்பை வைத்துக் கொடுத்தான்.
வெளிநாட்டவர் ஒருவர் அதனை சுவைத்துப் பார்த்துவிட்டு, “வாவ்….வாட் எ டெலிஷியஸ் டெஸர்ட். மே ஐ நோ தி நேம் ஆஃப் திஸ் டிஸெர்ட்… ( இந்த இனிப்பின் சுவை அருமையாக உள்ளது. இனிப்பின் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?) ” என்றார்.
வசீகரிக்கும் புன்னகையை சிந்தியவன், “ திஸ் டிஸேர்ட் நேம் இஸ்..” என்று கூறி இடைவெளி விட்டவன் , “வேர்ல்ட் ஃபேமஸ் திருநெல்வேலி ஹல்வா…” என்று முடித்தான்.
“ ஹேல்வா…” என்று உச்சரித்துப் பார்த்த அந்த வெளிநாட்டவர் விழி மூடி இனிப்பின் சுவையை ரசித்து உண்டார்.
சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவன் , தலையில் அணிந்திருந்த செஃப் தொப்பியை கழற்றிய படி சமயலறை அமைந்திருக்கும் டெக்கிற்கு (Deck) சென்றான்.
அவனை போல ஓரிரண்டு பேர் வேலை செய்து கொண்டிருக்க பெரிய அளவிலான ஐந்தாறு தண்ணீர் ஊற்றும் பெரிய அளவிலான காலிக் குவளைகளை உதவியாளர்களின் உதவியோடு இரண்டாம் தளத்திற்கு எடுத்துச் சென்றான்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஜாம் செய்தவன் தான் கொண்டு வந்த குவளைகளை அங்கு வைக்கப்பட்டிருந்த சில காலி குவளைகளோடு அடுக்கி வைத்தான்.
மேலும் அனைத்து தளங்களுக்கும் சென்று பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஜாம் செய்து வைத்தான்.
எனவே கப்பலின் பின் பகுதியில் என்ன நடந்தாலும் எதுவுமே மாலுமியின் கவனத்திற்கு செல்லாது.
செல்லாதவாறு மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் மிருகேந்திரன். ஆங்காங்கே தனது ஆட்களை நிறுத்தி வைத்து மாலுமிகள் ஏதேனும் தகவல் கேட்டால் சமாளிக்க சொல்லி வைத்திருந்தான்.
நள்ளிரவு அனைவரும் உறங்கிய பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த உல்லாச சொகுசு கப்பலுக்கருகே சரியான நேரத்திற்கு சற்று பெரிய அளவிலான விசைப்படகுகள் ஐந்தாறு ஓசையின்றி வந்து சேர்ந்தது.
இரண்டாம் தளத்தின் பின்பக்கமாக வந்தவன் இருவரின் உதவியுடன் காலி குவளைகளை கயிறு கட்டி கடலில் இறக்கி அங்கிருந்து விசை படகிற்கு மாற்றினான்.
கிட்டத்தட்ட பத்து பெரிய குவளைகள் இறக்கப்பட்டு மீண்டும் விசைப்படகுகளில் ஏற்றப்பட்டது. பின்னர் வேறு திசையில் அந்த விசைப்படகுகள் ஓசையின்றி மெதுவாக செல்ல ஆரம்பித்தது.
மிக மிக மெதுவாக இயக்கினார்கள் மிருகேந்திரனின் ஆட்கள்.
இறுதியில் சொகுசு கப்பலில்லிருந்து மிருகேனும் கயிறு மூலம் இறங்கி விசை படகினுள் நுழைந்துக் கொண்டான்.
வியர்வையில் குளித்திருந்தான். எனவே தனது சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு இலகுவான கட்டம் போட்ட பருத்தி சட்டையை அணிந்து கொண்டான்.
படகை இயக்கும் நபரின் அருகில் வந்து நின்றவன் அவரை அமரச் சொல்லிவிட்டு மிகக் கவனமாக படகை செலுத்த ஆரம்பித்தான்.