மோகனாவிற்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தான் ஆதவ்.
முதலில் அவனது குறுஞ்செய்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.
ஏனெனில் தனது திட்டத்திற்கு அவள் தேர்ந்தெடுப்பதே மத்திய வயது பணக்கார ஆண்களை மட்டுந்தான்.
இளைஞர்களிடம் சற்று எச்சரிக்கையாகவே செயல்படுவாள்.
எனவே ஆதவ்வின் குறுஞ்செய்திக்கு பதிலேதும் அனுப்பாமல் அமைதி காத்தாள்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர்ந்தது.
ஆதவ் மெல்ல மெல்ல போலித்தனமான அப்பாவியான பேச்சினில் அவளை கவரத் தொடங்கினான்.
“ என்னடா இப்பயெல்லாம் எப்பப் பார்த்தாலும் ஃபோனும் கையுமா தான் உக்காந்திருக்க?” என்றபடி அவனருகே வந்தமர்ந்தாள் கீதாஞ்சலி.
“ ஒண்ணுமில்லை கீதுக்கா..இது வேற மேட்டர்…அப்பறமா சொல்றேன்.”
“ என்னடா ஏதாவது பொண்ணை லவ் பண்ணுறியா என்ன?” என்றாள் கிசுகிசுப்பாக.
“ என்னையப் பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பேசலாமா? நம்ம கேரக்டருக்கு அதெல்லாம் செட்டாகாது…” என்று தோளைக் குலுக்கினான்.
“ ஹலோ…! யாரை வேணாலும் நம்பலாம். ஆனா இந்த மாதிரி பேசி பந்தா பண்ணுற ஆட்களைத் தான் நம்பவே முடியாது..”என்றாள் சலிப்புடன்.
“ சரி அதை விடு கீதுக்கா…என்ன மாம்ஸோட கடலை போடலயா? கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது. ஒருத்தருக்கொருத்தர் பேசி புரிஞ்சிக்க வேண்டாமா? நீ எப்ப பார்த்தாலும் கேஸூ கேஸூன்னு தான் ஓடிட்டு இருக்க..மாம்ஸோட பேசறதேயில்லை போல…” என்றான் தீவிரமான முகத்துடன்.
“ ம்ம்ச்…இங்க பாரு ஆதவ் .எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட்டும் இல்லை நேரமும் இல்லை. ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. முக்கியமா முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. சில விஷயங்களை எப்படி பண்ணுறதுன்னு தெரியாம இருக்கு…” என நெற்றியை நீவி விட்டுக் கொண்டாள்.
“ கீதுக்கா….பசுபதி கேஸ் ஃபைலை பாத்தியா?”
“ இல்ல…அதை பத்தி இப்ப எதுக்கு பேசுற? அது அபிஷியல் .” என்றாள்.
“ இல்ல கீதுக்கா…அந்த பசுபதிக்கும் வஜ்ரவேல் அண்ட் மிருகேன் குரூப் புக்கும் ஏற்கனவே பகை இருக்கு. ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிட்டாலும் போலீஸ் வரைக்கும் அவனுங்களோட பிரச்சனைகளை கொண்டு வர்றதில்ல. பசுபதி குரூப் புக்கும் மிருகேனுக்கும் பிரச்சினை வராத இடம்ன்னா அது பொண்ணுங்களை கடத்துறது அண்ட் போதைப் பொருளை கடத்துற விஷயத்துல மட்டுந்தான். “ என்று கூறி நிறுத்தினான்.
அதுவரை அலட்சியமாக கேட்டுக் கொண்டிருந்தவள் ஆதவ்வின் கடைசி வாக்கியத்தில் நிமிர்ந்து அமர்ந்தாள்
“ என்ன சொல்ற ஆதவ்..? புரியல. “ என்றாள்.
“ ஆமா கீதுக்கா..மிருகேன் சாரு… பெண்ணுங்களை கடத்துறதுலயும் , போதை மருந்து கடத்துறதுலயும் ஈடுபடுறது கிடையாதாம். அதனால இந்த ரெண்டு விஷயத்துல மட்டுந்தான் இந்த ரெண்டு கோஷ்டிக்கும் சண்டை வர்றதே இல்லையாம்” என்றான்.
“ ம்ம்…எதனால போதை மருந்து கடத்தல், பொண்ணுங்க கடத்தல்ல அந்த மிரு…மிருகேன் ஈடுபடுறது இல்லைன்னு தெரியுமா?” என்றாள் யோசனையுடன்.
“ பெருசா சொல்றதுக்கு காரணம் இல்லை…ஆனா வஜ்ரவேலுக்கு பிடிக்காதுன்னு மிருகேந்திரன் இந்த ரெண்டு விஷயத்துலயும் கவனம் செலுத்துறதில்லைன்னு கேள்விப்பட்டேன்…” என்று கூறி கொண்டு இருக்கும் போதே அவனது அலைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுப்ப அதனைப் பார்த்தவன் வெற்றிச் சிரிப்புடன் வெளியேறினான்.
ஆதவ் கூறிச் சென்ற விஷயத்தையே மனதினுள் அசைப்போட்டுக் கொண்டிருந்தவளுக்கு உள்ளே ஏதோ கனன்றது . நீண்ட நேரமாக யோசித்தவளுக்கு ஏதோ விஷயம் பிடிபட வன்மச் சிரிப்புடன் நாற்காலியில் நன்கு சாய்ந்தமர்ந்து கால் மீது கால் போட்டுக் கொண்டாள்..
ஆண் சிங்கத்தை கூண்டிலடைக்க பெண் சிங்கமானது எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகியிருந்தது.
‘அவனுக்கென்று அவள் விரிக்கப் போகின்ற வலையில் அவன் சிக்கிக் கொள்வானோ? அல்லது அவளையே சிக்க வைத்து சிறையிடுவானோ?’ பொறுத்திருந்து பார்ப்போம்..
அலைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஆதவ் மோகனாவின் குறுஞ்செய்தியை பார்த்து விட்டு சிரிப்புடன் அவளுக்கு பதிலளித்தான்.
“ ஹாய்…டியர். உன்னோட மெசேஜூக்கு தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்த மாதிரி சாப்டியா தூங்குனியான்னு கேக்க ஒரு ஆள் கூட இல்லை எனக்கு. ஆனா நீ தான் …உன்னோட அக்கறை கலந்த இந்த பேச்சு தான் எனக்கு ஆறுதலா இருக்குற ஒரே விஷயம். வேலை… வேலைன்னு ஓடிட்டு இருக்குற எனக்கு இது போல அழகான , அக்கறையான பேச்சு தான் எனர்ஜியை தருது. எவ்வளவு காசு பணம் இருந்து என்ன பிரயோஜனம். அன்பா ஆறுதலா பேசி சிரிக்கறதுக்கும், சாப்ட்டியான்னு கேக்கறதுக்கும் ஒரு ஆள் இல்லை. இவ்வளவு பணத்தை வச்சிட்டு என்ன செய்யறதுன்னு தவிச்சிட்டு இருக்கேன்…” என்று செய்தி அனுப்பினான்.
அதனை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
இதை மட்டும் ஜானகியோ, கீதாஞ்சலியோ பார்த்திருந்தால் அவனுக்கு மண்டகப்படி நிச்சயம்.
நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து சிரித்தவனுக்கு புரையேறி விட்டது.
அவனது செய்தி நம்பும்படியாக அத்தனை இயல்பாக இருந்தது.
அதனைப் பார்த்த மோகனாவின் கண்கள் ஆசையில் மின்னியது.
பதிலுக்கு அவள், “ நீங்க என்ன பிசினஸ் மேனா?” என்றாள்.
“ ஆமா…எனக்கு நிறைய பிசினஸ் இருக்கு…ஒவ்வொன்னுலையும் கோடிக்கணக்குல டர்ன் ஓவர் வரும். ஆனா அதுல எல்லாம் எனக்கு திருப்தி ஏற்பட்டதே இல்லை. நீ மார்னிங் அண்ட் நைட் அனுப்புற மெசேஜ் ல தான் எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி ஏற்படுது.” என்று தட்டச்சு செய்தவனுக்கு ருத்ரனின் கோபப் பார்வை ஒரு கணம் கண்முன்னே தோன்றி மறைத்தது.
“ சாரி…டாட்..” என மானசீகமாக தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
இருவரது உரையாடலும் தினமும் மணிக்கணிக்கில் நீண்டு கொண்டே போனது.
சில நேரங்களில் எதற்காக அவளிடம் உரையாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதையே மறந்து போய் இயல்பாக ஒன்றிப் போனான்.
இறுதியில் அவளே ஒரு நாள் அவனைக் நேரில் காண வேண்டி அழைப்பு விடுத்திருந்தாள்.
அவனும் சரியென்று கூறி இடத்தையும் நேரத்தையும் உறுதி செய்து கொண்டான்.
சனிக்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் நடக்கும் இரவு நேர கேளிக்கை விருந்தில் பங்கேற்கலாம் என்றாள்.
இதைத்தானே அவன் எதிர்பார்த்தது.
“வாங்க மிஸ் கேடி…நேர்ல இருக்கு உனக்கு…” என முணுமுணுத்துக் கொண்டு அலைப்பேசியை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
கீதாஞ்சலியின் திருமணத்திற்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. ஜானகி தான் மிகவும் பரபரப்பாக இருந்தாள்.
கீதாஞ்சலி திருமண ஏற்பாடுகளில் எதிலும் தலையிட்டுக் கொள்ளாமல் மிருகேந்திரனைப் பிடிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
” உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யுர் ம்ருத்யும் நமாம் யஹம்..”
என கம்பீரமாக குரல் ஒலிக்க எதிரேயிருந்த உக்ர நரசிம்மரின் படத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.
கணீர் கணீரென்ற மணியோசை பூஜையறையை தாண்டி வாசல் வரை எதிரொலித்தது.
படத்திற்கு தீபாராதனை காட்டி விட்டு நெற்றியில் செந்தூரத்தை வைத்து நிமிர்ந்தார் வஜ்ரவேல்.
வயது எழுவதை தாண்டியிருப்பவர் என கற்பூரம் அடித்துக் கூறினாலும் நம்ப முடியாத ஆஜானுபாகுவான தோற்றம்.
தீட்சண்யமான கூரிய பார்வை எதிராளிகளை ஒரு கணம் செயல்படாமல் திகைத்து நிற்க வைத்து விடும்.
வர்மக்கலை, கராத்தே , ஜூடோ என அனைத்து தற்காப்பு கலைகளை முறைப்படி பயின்றவர்.
இஸ்திரிப் போடப்பட்ட வெள்ளை ஜிப்பா அவருக்கு தனி ஒரு காம்பீரத்தையும் மரியாதையையும் கொடுத்தது.
“மிருகேன் எழுந்துட்டானா?” என்று தனக்கெதிரே நின்றிருந்த வேலையாள் முத்துவிடம் கேட்டார் .
“ சின்ன அய்யா விடியக் காலையிலேயே எழுந்து கிளம்பிட்டாருங்க. ஃபோன் பண்ணுறேன்னு சொல்லிருக்காருய்யா. அதுக்கு அப்புறம் நாம கிளம்பினா போதும்..”
தாடையை தடவியபடி, “ம்ம்…போலீஸ் கெடுபிடி அதிகமா?” என்றார்.
“ ஆமாங்க…நிதானமா தான் சரக்கை கை மாத்தி விடணும்ன்னு சின்னய்யா சொன்னாருங்க..”
” சரி பாத்துக்கலாம்..”என்றவர் காலை உணவை முடித்துக் கொண்டார்
யானைத் தந்தங்கள் மற்றும் விலையுயர்ந்த மரகதகற்களை கை மாற்றி விட வேண்டும்..
வெளிநாடுகளில் கோடிகளில் விலை போகும் பொருட்கள் இவை.
சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் மிருகேந்திரன் மற்றும் வஜ்ரவேல் .
படகுகளையும் கப்பல்களையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான் மிருகேன்.
ஒருவனை அடித்து இழுத்துக்கொண்டு வந்தனர் மிருகேனின் ஆட்கள்.
கடத்தப்படும் பொருட்களை எங்கு எவ்வாறு வைப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனின் கவனம் அங்கு ஏற்பட்ட சலசலப்பில் திரும்பியது.
அவனது அடியாட்கள் இருவர் ஒருவனை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து இழுத்துக் கொண்டு வந்திருந்தனர்.
“ என்ன ஆதி ? என்ன பிரச்சினை? யார் இவன்?” என்றவன் அப்புதியவனைக் கண்டு புருவத்தை சுருக்கினான்.
“அண்ணே…! வழக்கம் போல தான்… பத்ரனோட கையாள் இவன்… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நம்ம கிட்ட வேலை கேட்டு வந்தான். ஆனா பாவம் அவங்க நொண்ணன் சொன்ன வேலையை சரியாக பாக்க முடியாம மாட்டிக்கினாரு…” என்று கூறி சிரித்தான் ஆதி.
ஆதியை பார்த்து புன்னகைத்தவன் புதியவனின் அருகில் வந்து நின்று தொங்கியிருந்த முகத்தை நிமிர்த்தினான்.
“ ஏன்டா ….உனக்கு இது தேவையில்லாத வேலை? உங்க அண்ணன் பத்ரன் என்னைய வேவு பார்க்கச் சொல்லி அனுப்பிருக்கான். அவனை நம்பி நீ இங்க வந்துருக்க. ஏற்கனவே அவனோட ஆளுங்க சரியா வேவு பாக்க முடியாம இருந்த இடம் தெரியாம போயிட்டாங்க. இதுல நீ வேற ?ம்ம்ச்.. தேடித் தேடி வந்து உசுரை விடுவீர்களா டா…”என்றவன் ஆதியை பார்த்தான்.
“ அண்ணே…இவனை போட்ருலாமா?”என்றான்.
ஒரு கணம் யோசித்தவன், “ இல்ல இப்ப வேணாம்..இவன் உயிரோட இருக்கட்டும். தப்பிக்காம பாத்துக்கோங்க…நாளைக்கு நைட் கப்பல் இராமேஸ்வரத்துக்கு கிளம்பியாகனும்.. தந்தங்களையும் மரகதக் கல்லையும் என்ன பண்ணனும்னு சொல்றேன். அது மாதிரி செஞ்சிடுங்க…” என்றான்.
“ அண்ணே..! இந்த தடவையும் கமிஷ்னர் மேடம் வந்து செக் பண்ணுனா என்னண்ணே பண்ணுறது?”
“ இந்த தடவை கண்டிப்பா கமிஷனர் மேடம் வர மாட்டாங்க…”
“ அப்ப போலீஸ் மட்டும் தான் வருவாங்களாண்ணே?”
தாடையை தடவிய படி இங்குமங்கும் நடந்தவன், “ கமிஷ்னர் மேடம் வரலைன்னா என்ன அவங்களோட அருமைத் தம்பி ஏபிசி சார் வருவாரு” என்றான்.
“ சார்….! அண்ணே..!” என மிருகேனின் இரு அடியாட்களும் அலறினர்.
ஏற்கனவே ஆதவ்விடம் அடி வாங்கி வெளியே வந்தவர்கள் தான் இருவரும். எனவே அவனை பற்றி இருவருக்கும் நன்கு தெரியும். எனவே ஆதவ்விடம் சற்று பயம் இருந்து கொண்டே தான் இருந்தது மிருகேனின் அடியாட்களுக்கு.
“ பயப்படாதீங்க டா…பாத்துக்கலாம்…போனா தடவை கமிஷ்னர் மேடம். இந்த தடவை ஏ சி பி சார்.. ரெண்டு பேரும் வெறுங்கையை வீசிட்டு தான் போகப் போறாங்க” என்று கூறி கண் சிமிட்டி அழகாக புன்னகைத்தான் மிருகேன்