உன் நிழல் நான் தொட ep 15

அத்தியாயம் 15

நடப்பது எதுவும் உணராது பொம்மை போல் இருந்த ரத்னாவைப் பார்த்துக் கண்கலங்கிய அஜீத்திடம் வந்த அர்ச்சனா, “அண்ணா, ரத்னாவை நீ உன் கூடவே கூட்டிட்டுப் போறியா?” என தனது தோழியின் துயரம் பொறுக்க முடியாதுக் கேட்டாள். 

அர்ச்சனா கேட்ட கேள்வி அருகில் நின்ற மைதிலியின் செவியை எட்டவும், “என்ன பேச்சு பேசுற? வாய மூடு!” என்று தன் மகளை அதட்டினாள்.

கூட்டத்தில் நின்ற வயதான பெண்மணி ஒருவர், “என்னமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க பையன் நாங்க ஏதோ ரத்னாவைக் கொடுமைப்படுத்துறதா சொன்னான் தானே? அப்படி அந்தப் பொண்ணுக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிற பரந்த மனசு இருந்தா, அந்தப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கச் சொல்ல வேண்டியதுதானே!” என்றார்.

பேச்சு திசை மாறுவதை உணர்ந்த வைரவேல் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க நினைக்க, அங்கிருந்து வெளியேறிய அஜீத் சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தான். 

அவன் திரும்பி வரும் வரை கூட அதே.நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த ரத்னாவின் அருகில் வந்து, அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரத்னாவின் கழுத்தில் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை அணிவித்தான். 

தன் கழுத்தில் விழுந்த மாங்கல்யத்தை உணர்ந்த ரத்னா அவனை நிமிர்ந்து மட்டும் பார்க்க, அனைவரும் வாயடைத்துப் போயினர்.

அஜீத்திடம் வந்த மைதிலி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? புத்தி இருந்தா இப்படி பண்ணுவியா?” என்றாள் கோபமாக.

“நான் நல்லா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்கேன்” என்றான் அஜீத். உடனே அவனிடம் வந்த முத்துவேல், 

“நீ என்ன பண்ணினாலும் நாங்க அமைதியா இருப்போம்னு நீ நினைச்சுட்டியா அஜீத்? அன்னைக்கு நாங்க ரத்னாவைக் கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னப்போ முடியாதுன்னவே, இப்போ எதுக்காக அவ கழுத்துல இதைக் கட்டுன?” எனக் கோபமாகக் கேட்டார்.

“நீங்க என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை மாமா. ரத்னா இப்போ என்னோட மனைவி” என்றான் அஜீத். ‘மனைவி’ என்ற வார்த்தையைக் கேட்டதும் கோபமாக அவனிடம் வந்த மைதிலி, 

“என்னடா சொன்ன? இவ உனக்கு பொண்டாட்டியா? கல்யாணம் பண்ணிட்டுப் போன மூனாவது மாசமே புருஷனைத் தூக்கிக் கொடுத்துட்டு நிக்கிற இவ உனக்கு பொண்டாட்டியா? எதுக்கு, உன்னையும் எமனுக்குத் தாரைவார்க்கவா?” என்றாள்.

மைதிலியின் பேச்சால் கோபமடைந்த ரத்னாவின் வீட்டார் ஒருபுறம் பேச, மைதிலிக்குச் சார்பாகக் கிருஷ்ணனும் மற்றும் சிலரும் பேச, அந்த வீடே சிறிது நேரத்தில் போர்க்களமாக மாறியது. 

இவ்வளவு நடந்தும் அது எதுவும் தன்னை பாதிக்கவில்லை என்ற ரீதியிலேயே ரத்னா அமைதியாக அமர்ந்திருந்தாள். இறுதியில் மைதிலி, “நடந்ததை கல்யாணம்னு என்னால ஏத்துக்க முடியாது. இப்பவே அவ கழுத்துல நீ கட்டுனதைக் கழட்டுனா என் பையனா இருக்கலாம். இல்ல, நான் அவளுக்கு வாழ்க்கை கொடுத்துத் தியாகியா தான் வருவேன்னு முடிவு பண்ணிட்டா, உனக்கு நம்ம வீட்டுலேயே இடம் இல்லை, அதை ஞாபகம் வச்சுக்கோ!” என எச்சரித்தார்.

தாயின் பேச்சில் அதிர்ந்த அஜீத், தன் தந்தையின் முகம் பார்க்க, அவரோ ‘என் முடிவும் அதுதான்’ என்ற ரீதியில் நின்றார். ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட அஜீத், “இதுதான் உங்க முடிவுன்னா அதை நான் மனசார ஏத்துக்குறேன். நான் தியாகியா மாற ரத்னாவைக் கல்யாணம் பண்ணல. அது என் மனசுக்குத் தெரியும்.” என்றான் உறுதியாக.

“மனசாம் மனசு, பொல்லாத மனசு! மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த மனசு எங்கடா போச்சு?” என மகனிடம் வாதாடிக்கொண்டிருந்த மைதிலியிடம் வந்த கிருஷ்ணன், 

“நீ இப்போ எது சொன்னாலும் இவனுடைய மனசுலயும் சரி, மூளையிலயும் சரி ஏறப்போறது இல்லை. வா போகலாம்” என மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

சிறிது நேரம் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்த வீட்டில் அனைவரும் அமைதியாக இருக்க, தேவராஜ் நடுவில் வந்து பேசினார், “நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. எப்போ கல்யாணம் பண்ணி ரத்னாவை நீங்க தாரை வார்த்துக் கொடுத்தீங்களோ, அப்பவே ரத்னா எங்க வீட்டுப் பொண்ணு ஆகிட்டா. 

ஆமா, என்னோட பையன் இப்போ இந்த உலகத்துல இல்லை, அதுக்காக ரத்னாவோட வாழ்க்கை இப்படியே இருக்கட்டும்னு எங்களால விட முடியாது. நிச்சயமா அவளோட வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கணும்னு நான் ஆசைப்பட்டேன், அது சீக்கிரமா நடந்துடுச்சு. இதை மறுத்துப் பேசும் உரிமை இந்த வீட்டுல இப்ப யாருக்கும் கிடையாது. ரத்னாவுக்கு அந்த உரிமை இருக்கு, அப்படி பிரச்சனை வந்தா அதை இனிமேல் அஜீத் பார்த்துப்பான்.”

பிரச்சனையை வளர்க்க வேண்டும் என நினைத்த ஆர்த்தி குறுக்கிட்டு, “அதுக்குன்னு இவன் நடந்துகிட்டது எல்லாம் சரின்னு சொல்ல வர்றீங்களா?” என்றாள்.

“எல்லாம் சரின்னு சொல்லல, அஜீத் எடுத்த முடிவு சரிதான். அதைப்பக்குவமா எல்லார்கிட்டயும் எடுத்துச் சொல்லிட்டு மெதுவா செஞ்சிருக்கலாம்” என்றார் தேவராஜ்.

அனைவரையும் ஒருவழியாகத் தேவராஜ் பேசியே சமாளித்துவிட்டார். தங்கள் மகளின் வாழ்வு என்னவாகுமோ என நினைத்துக் கொண்டிருந்த ரத்னாவின் வீட்டார், அஜீத்தின் முடிவால் சிறிது நிம்மதி அடைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தங்களைப் பற்றி ஊர் என்ன பேசுமோ என்ற அச்சம், அவர்களின் உள்ளத்தின் மகிழ்ச்சியை முகத்தில் பிரதிபலிக்காமல் செய்தது.

தான் ஒன்றை நினைத்துப் பேச, அது வேறு வகையில் திரும்பியதை நினைத்து ஆத்திரமுற்ற ஆர்த்தி ‘அடுத்து என்ன செய்யலாம்’ என நினைத்திருக்க, அவளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் தங்கவேலு. தங்கள் அறைக்குச் சென்றதும், “நான் சொல்லுற வரைக்கும் நீ இந்த ரூமை விட்டு வெளியே வரக்கூடாது!” எனக் கூறிவிட்டுச் சென்றான். அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்திலிருந்த நெருங்கிய உறவுகள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர்.

வந்தவர்கள் ஆளுக்கு ஒவ்வொன்று பேச, இறுதியில் வைரவேலின் குடும்பத்தின் மீது அனைவருக்கும் இருந்த மரியாதையின் காரணமாக அவரிடம் பணிவாகவே பேசினர். 

“ஐயா, என்ன இருந்தாலும் நீங்க பாப்பாவோட வாழ்க்கையைப் பார்க்கணும் தானே? வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்குது. அதுக்குக் கடவுளா பார்த்து ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்காரு, அதை நீங்க கெடுக்க வேண்டாமே!” என்றனர்.

ஊர் பெரியவர்களே இவ்வாறு கூறவும், தங்கள் மனதில் இருந்த கலக்கம் அகன்ற வைரவேல், “நீங்க சொல்றது ஏத்துக்கக் கூடிய விஷயம்தான். ஆனா, பையனோட அப்பா பிரச்சனை பண்ணுவாரே, என்ன பண்ண?” என்றார். 

“பையன் முடிவுல உறுதியா இருக்கும்போது அவரால் என்ன பண்ண முடியும்?” என்றனர் பெரியவர்கள்.

இங்கு அனைவரும் பேசிக்கொண்டிருக்க, அஜீத் வெகுநேரமாக ரத்னா நாற்காலியிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்து, மெதுவாக அழைத்துச் சென்று அவள் அறையில் ஓய்வெடுக்க வைத்தான். பின்னர் பார்வதியிடம் வந்து, “அத்தை, ரத்னா சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆயிருக்கும். அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துட்டு, மருந்து மாத்திரை ஏதாவது இருந்தா கொடுங்க” என்றான். 

இதையெல்லாம் கவனித்த அந்தப் பெரியவர், “இத்தனை பேர் இருக்கோம், உங்க யாருக்காவது இது தோணுச்சா? கொஞ்ச நாள் போச்சுன்னா ரத்னாவுக்குன்னு ஒரு துணை வேணும், அது இந்தத் தம்பிதான்னு கடவுள் எழுதி வச்சிருக்காரோ என்னவோ!” என்று கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அஜீத்திடம் வந்த வைரவேல், “ஒரு தடவை உங்க அப்பா சொன்னதை நம்பி எங்க பொண்ணை உனக்குத் தர சம்மதித்தோம். இப்ப நாங்க சம்மதிக்கக் காரணம் எதுவும் உன்கிட்ட இல்லை. எதை நம்பி எங்க பொண்ணை உனக்குக் கொடுக்கிறது?” எனக் கேட்டார்.

“நீங்க என்னை மட்டும் நம்புங்க மாமா. நான் ரத்னாவைப் பார்த்துப்பேன்” என்றான் அஜீத். 

அதன்பிறகு ஒரு வாரம் ரத்னாவின் வீட்டிலேயே தங்கியிருந்தான் அஜீத். ரத்னாவின் உடல் நலம் குணமாகிவிட்டது, இனி பயணம் செய்யலாம் எனத் தங்கவேல் கூறிய அடுத்த நாள் டெல்லிக்குக் கிளம்பத் தயாரானான். அதைத் தடுக்க நினைத்த ரத்னாவின் வீட்டாரிடம், 

“என்னால ரத்னாவைப் பார்த்துக்க முடியும். மூணு வருஷம் எங்க அப்பாகிட்ட வேலை பார்த்துச் சேர்த்த பணம் என்கிட்ட போதும் என்கிற அளவு இருக்கு, பயப்படாதீங்க” என அனைவரையும் சமாளித்துவிட்டு, ரத்னாவை டெல்லிக்கு அழைத்து வந்துவிட்டான்.

முதலில் தயங்கினாலும், தேவராஜ் “நான் பார்த்துக் கொள்கின்றேன்” என நம்பிக்கை அளித்ததன் பேரில், அரைகுறை மனதுடன் இருவரையும் அவர்கள் வழியனுப்பி வைத்தனர். டெல்லிக்கு வந்து இறங்கியதும் அவர்களுக்காகத் தேவராஜ், ஹர்ஷத் இருவரும் காத்திருப்பதைக்கண்டு அவர்களிடம் ரத்னாவை அழைத்துச் சென்றான் அஜீத்.

“நீங்க இங்க வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல அங்கிள்.”

“நான் அன்னைக்கே சொன்னேன், ரத்னா எங்க வீட்டுப் பொண்ணுன்னு.”

அனைவரும் அஜீத் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அது ஒரு ஹால், கிச்சன், பெட்ரூம் என மிகச்சிறிய வீடாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் தேவராஜ் கேட்டார், “நீங்க இங்கதான் இருக்கப் போறீங்களா அஜீத்?”

“ஆமாங்க, உங்களுக்கே தெரியும் டெல்லியில வீட்டு வாடகை எவ்வளவு இருக்கும்னு. இது பிரபுவோட சித்தப்பா ஒருத்தரோட வீடு, அதனாலதான் கம்மியான வாடகைக்குத் தந்திருக்காங்க.”

“இனி என்ன செய்யப் போற?”

“என்ன செய்யப் போறேன்னா? நீங்க சொல்றது எனக்குப் புரியல அங்கிள்.”

“இவ்வளவு நாள் உங்க அப்பாவோட பணத்துல படிச்சுட்டு இருந்த, இனி?”

“படிச்சுக்கிட்டு மட்டுமில்லாமல் வேலையும் பார்த்துட்டு இருந்தேன். அதுல சம்பாதிச்ச பணத்தை நான் எப்பவும் செலவு பண்ணவே இல்லை. அந்தப் பணம் அப்படியே என்னோட அக்கவுண்ட்லதான் இருக்கு, அது இப்போதைக்கு எனக்குப் போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் இந்தத் தடவை யுபிஎஸ்சி (UPSC) எக்ஸாம்ல பாஸ் பண்ணிடுவேன். அப்புறம் எந்தக் கவலையும் இல்லை.”

“ரத்னாவைக் கவனிச்சுக்கிட்டு உன்னால படிக்க முடியுமா, நிச்சயமா?”

“முடியும் அங்கிள்.”

“உனக்கு என்ன உதவினாலும் என்னை மறக்காம கேளுப்பா.”

“கண்டிப்பா கேக்குறேன் அங்கிள்.”

“நான் ரத்னாவுக்குத்தான் மாமா முறை, உனக்கு எப்பவுமே அப்பாதான்” என்றார் தேவராஜ் பாசத்துடன்.

“மன்னிச்சிடுங்க அங்கிள், என்னால எங்க அப்பாவைத் தவிர வேறு யாரையும் வெறும் வார்த்தைக்காகக் கூட அப்பான்னு கூப்பிட முடியாது. வேணும்னா பெரியப்பான்னு கூப்பிடுறேன், பரவாயில்லையா?” என்றான் அஜீத்.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றுவிட, கடையில் வாங்கி வந்த உணவைப் பிரித்து வைத்துவிட்டு ரத்னாவை அழைக்கச் சென்றான். அறையின் மூலையில் அமர்ந்திருந்த ரத்னாவைப் பார்த்து அருகில் செல்ல முயன்றபோது அவனை பார்த்த ரத்னா பயத்தில் அலறினாள்.

“கிட்ட வராதே! போ என்கிட்ட இருந்து… கிட்ட வராதே! நான் இனி அஜீத் பத்திப் பேசமாட்டேன். கிட்ட வராதே!” எனக் கத்திவிட்டு அப்படியே மயக்கமடைந்தாள். அதிர்ச்சியும் கவலையும் நிறைந்த முகத்துடன் நின்றிருந்தான் அஜீத்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top