ரத்னாவிடமிருந்து இப்படி ஒரு கதறலை எதிர்பார்க்காத அஜீத், முதலில் அதிர்ச்சியும் கவலையும் மேலிட அசையாமல் நின்றது ஒரு சில வினாடிகளே. அதன்பிறகு விரைந்து சென்று ரத்னாவைச் சமாதானம் செய்து, உணவருந்தச் செய்தான்.
பின்னர் ரத்னாவைக் கட்டிலில் உறங்கச் சொல்லிவிட்டு வெளியேற முயன்றபோது, அதுவரை அவன் சொன்னதையே செய்துகொண்டிருந்த ரத்னா, “அஜீத் அத்தான், என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதே” என்று கூறிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.
அருகில் வந்த அஜீத், மெல்ல அவளது தலையைக் கோதி, “நான் எங்கேயும் போகல, உன் கூடவேதான் இருப்பேன்” என்றபடி கட்டிலின் மறுபுறம் அமர்ந்துகொண்டான்.
அதன்பின் அஜீத்திற்குத் தூக்கம் வராமல் போக, அவனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அஜீத்திற்கு முதலாம் ஆண்டிலிருந்தே ரத்னாவின் மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு தோன்றியது உண்மையே. அதனாலேயே ரத்னாவைத் தன் தோழியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைத்தான்.
தோழியாக மாறிய ரத்னா தன் உறவென்று தெரிந்தபின், ஏனோ ரத்னாவுக்கு அனைத்துமாகத் தானே இருக்க வேண்டுமென்ற ஒரு எண்ணம் அவனுக்குள் தோன்றியதும் உண்மை. ஆனால், எந்தக் காரணத்திற்காகவும் ரத்னாவைத் தன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெண்ணாக மாற்ற அவன் நினைத்ததில்லை.
பழகிய சில மாதங்களிலேயே ரத்னாவைப் பற்றி முழுவதும் புரிந்துகொண்ட அஜீத், தன் மனதில் தோன்றிய உணர்வுகளை இப்போது ரத்னாவிடம் கூறுவது சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டான். ரத்னா எப்பொழுதும் தெளிந்த நீரோடை போல; அதில் விழும் ஒரு சிறு கல் கூடக் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அறிந்த அஜீத், அனைவரிடமும் நன்மதிப்பைச் சம்பாதிக்க ஆரம்பித்தான். அதன் மூலம் ரத்னாவைத் தன் வாழ்வில் கொண்டுவர நினைத்தான்.
அனைத்தும் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது, அந்த நபரைச் சந்திக்கும் வரை! யாரைத் தன் வாழ்க்கைத்துணையாக மாற்ற வேண்டும் என நினைத்தானோ, அவளையே மற்றொருவனுக்கு மனைவியாக மாற்றும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டான்.
இப்பொழுது அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது, அன்று சரியாகத் தெரிந்த அனைத்தும் இன்று தவறாகப்பட்டது. எது ரத்னாவிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்தானோ, அதுவே ரத்னாவின் நிம்மதியை அழித்துவிட்டது என்பதே அவனது மனதை வாள்கொண்டு அறுத்தது.
பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்த அஜீத், எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. விழித்துப் பார்க்கும்போது தன் அருகில் ரத்னா இல்லை என்றவுடன் பதறிப்போய், வீடு முழுவதும் தேடினான். ஆனால் ரத்னா எங்குமில்லை. வெளிக்கதவு திறந்து இருப்பதைக் கண்ட அஜீத், அவசரமாக வெளியில் சென்று தேடினான்; ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.
ஹிந்தி தெரிந்த தனக்கே டெல்லியில் ராஜேந்திர நகரை விட்டு வெளியிடங்களுக்குச் சென்றால் திணறலாக இருக்கும்போது, ரத்னாவுக்கு மொழியும் தெரியாது. அதேசமயம் ரத்னா தற்போது இருக்கும் மனநிலையில் எங்குச் சென்று இருப்பாள் என்பதே பெரும் கவலையைக் கொடுக்க, ராஜேந்திர நகர் முழுவதும் தன் தேடுதல் பணியைத் தொடர்ந்தான்.
இரண்டு மணி நேரத் தேடுதலுக்குப் பின், ‘ஒருவேளை வீட்டிற்கு வந்திருப்பாளோ’ என்ற எண்ணத்தில் வீடு திரும்பினான். அவனது எண்ணத்தைப் பொய்யாக்காமல் அங்கு ரத்னா நின்றுகொண்டிருந்தாள்; கூடவே ஒரு பெண்மணியும் நின்றுகொண்டிருந்தார்.
ரோஜா, ஒரு திருநங்கை. வயது நாற்பதைத் தொட்டிருக்கலாம். டெல்லி வந்த புதிதில், தான் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து அகாடமிக்குச் செல்லும் வழியில் அஜீத் அவரைத் தினமும் பார்த்திருக்கிறான். ஒருநாள் பேருந்தில் ஒரு பெண்மணியின் நகை காணாமல் போனதற்காக ரோஜாவைக் குற்றம் சாட்டியபோது, அவருக்காக அஜீத் பரிந்து பேசினான். காணாமல் சென்றதாகக் கூறப்பட்ட நகை கீழே அறுந்து கிடப்பதை எடுத்து அவர் கையில் தந்துவிட்டுப் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றவன், இப்பொழுதுதான் மீண்டும் ரோஜாவைப் பார்க்கிறான்.
“ரத்னா, நீ எங்க போயிருந்த? இப்படித்தான் எங்கேயும் சொல்லாம போவியா? உன்னைக் காணாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? எங்க போயிருந்த ரத்னா?” என்று அஜீத் கேட்க, எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் ரத்னா. அருகிலிருந்த ரோஜா பேசினார்:
“தம்பி, பாப்பா இரண்டு தெரு தள்ளி நடந்து வந்துக்கிட்டு இருந்தாங்க. கேட்டா எதுவும் பதில் சொல்லல. அதுதான் உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன்.”
“நமக்கு உதவி பண்ணவங்களை உயிர் இருக்கிற வரைக்கும் மறக்கக் கூடாது தம்பி. ரெண்டு மூணு தடவை நான் உங்களை இந்த வீட்டுக்குள்ள வர்றதைப் பார்த்திருக்கேன். அப்புறம் இந்த்ப் பொண்ணை நீங்க ஆட்டோவுல நேத்து கூட்டிக்கிட்டு வந்ததையும் பார்த்தேன்” என்றார்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியல அக்கா.”
“இருக்கட்டும்ப்பா, இனி பத்திரமா பார்த்துக்கோ.”
“அக்கா, நீங்க என்ன பண்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“என்ன வேலை கிடைக்குதோ அதைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்பா.”
“உங்களுக்குப் பிரச்சனை இல்லைன்னா நீங்க எங்ககூட தங்க முடியுமா?” எனக் கேட்டான் அஜீத். ரத்னாவைச் சிறிது நேரம் காணாமல் போனதற்கே அஜீத்தின் மனம் பயத்தில் பலவித கற்பனைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தது.
டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் அனைத்தும் அவன் கண்முன் வந்து செல்ல, மீண்டும் ரத்னாவைப் பார்க்கும் வரை அவனது உயிர் அவனிடம் இல்லை. இனியும் ரத்னாவைத் தனியே விட்டுச் செல்ல முடியாது என்பதற்காகவே ரோஜாவைத் தங்களுடன் தங்கக் கூறினான். சில முறை மட்டுமே பார்த்த அவரிடம், எந்த நம்பிக்கையில் தங்களுடன் தங்கக் கேட்டோம் என்று அஜீத்தே அறியவில்லை.
ரத்னாவை ஒருமுறை பார்த்த ரோஜா, எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘சரி’ என்று சம்மதித்தார். அதன்பிறகு ரோஜாவும் அந்த வீட்டின் ஒரு உறுப்பினராக மாறிப்போனார்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, அகாடமி சென்று படிப்பது, மாலை நேரத்தில் அருகில் இருக்கும் சில குழந்தைகளுக்குத் டியூஷன் எடுப்பது போன்ற வேலைகளையும் அஜீத் செய்து வந்தான். கையில் பணம் இருந்தாலும் அதை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ரோஜாவும் காலையில் சமைப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது, அதன்பிறகு ரத்னாவுடன் அமர்ந்து பேசுவது என்பதைத் தன் வழக்கமாக மாற்றிக்கொண்டார்.
முதலில் தனக்குள் இறுகி இருந்த ரத்னா, சிறிது சிறிதாகத் தன் கூட்டை விட்டு வெளியில் வர ஆரம்பித்தாள். தனக்கு ஏற்பட்டது அனைத்தும் புரிந்தபின், தன்னவனுடன் சேர்ந்த நிம்மதியையும் பாதுகாப்பான உணர்வையும் அடைந்தாள் என்பதே உண்மை. இருந்தாலும் ஒருநாள் அஜீத்திடம்,
“என் மேல இரக்கப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுத்தீங்களா அத்தான்?” எனக் கேட்டாள்.
“நான் உன்மேல இரக்கப்பட்டதாகவும், உனக்கு வாழ்க்கை கொடுத்ததாகவும் யாரு சொன்னா?”
“நிலைமை உனக்குத் தப்பா சொல்லுது. போய் சாப்பிட்டுத் தூங்கு.”
“அத்தான், நான் உங்களுக்கு வேண்டாம். நான் வீட்டுக்குப் போறேன்.”
“சரி, உனக்கு நான் வேண்டாம்… வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறே?”
“என்னமோ செஞ்சுட்டுப் போறேன். என்னை எங்க ஊர்ல கொண்டு போய் விடுங்கள்.”
“நான் வாழ்க்கையில ஒரு தப்பு பண்ணிட்டேன். தெரியாமத்தான் அந்தத் தப்பைப் பண்ணுனேன்; தெரிஞ்சே மறுபடி என்னால அதை பண்ண முடியாது” என்றவன் குரலில் வேதனையும் உறுதியும் சரிசமமாகக் கலந்திருந்தது.
“நீங்க என்னை வேண்டாம்னு சொன்னது எனக்கு நிச்சயமா கஷ்டமா இல்லை. இப்ப நான் உங்க கூட இருந்தா ஸ்டெல்லா உங்க வாழ்க்கையில வர முடியாது” என்றவளைப் புரியாமல் பார்த்தான் அஜீத்.
“ஸ்டெல்லா என்னோட வாழ்க்கையில ஏன் வரணும்?” எனக் கேட்க, “நீங்களும் ஸ்டெல்லாவும் லவ் பண்றீங்கதானே?” என்றாள் ரத்னா.
“புல்ஷிட்! நான் லவ் பண்றேன்னு உன்கிட்ட யாரு சொன்னா?” என அஜீத் கோபமாகப் பார்க்க,
“நான் பார்த்தேன்… நீங்க அன்னைக்கு ஸ்டெல்லா கையைப் பிடிச்சுப் பேசிக்கிட்டு இருந்தது, அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவையும் பார்த்தேன். அதனாலதானே நீங்க என்னை வேண்டாம்னு சொன்னீங்க?” என்றாள்.
“ரத்னா, நீ எந்தக் காலத்துல இருக்க? கையைப் பிடிச்சா காதலாகிடுமா, போட்டோல ஒண்ணா இருந்தா அதுக்குப்பேரு லவ்வா? ஏன், இதுவரைக்கும் நான் உன் கையைப் பிடிச்சதே இல்லையா, அதுமாதிரி உன் கூட நான் போட்டோ எடுத்ததே கிடையாதா?”
“அப்படியா? அப்படின்னா நீங்க ஸ்டெல்லாவை லவ் பண்ணலையா?”
“பண்ணல, போதுமா? உனக்கு இருக்குற சின்ன மூளையைக் குழப்பி என்னையும் குழப்பாம இரு. ரத்னா, இது நம்ம வாழ்க்கை, இதை யாராலும் மாத்த முடியாது. எனக்கு நீதான், உனக்கு நான் தான்!”
“ம்ம்ம்…” என்றவளின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு,
“உன்கிட்ட இதை யாரு சொன்னா?” எனக் கேட்டான்.
“யாருன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க என்கிட்ட பேசுறதுக்கு முந்தின நாள் என்னோட வாட்ஸ்அப்புக்கு.அந்தப் போட்டோ வந்துச்சு. அதைப் பார்த்து நானா யோசிச்சு கண்டுபிடிச்சேன்.”
“நீ கண்டுபிடிச்சதை தயவுசெஞ்சு வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதே தாயே!” என்றவன், அப்போதைக்கு ரத்னாவைச் சமாதானம் செய்துவிட்டு, டியூஷன் பிள்ளைகளைக் கவனித்து அனுப்பிவிட்டு வந்தான். ஆனால், அவனது மனம் மட்டும் ‘யார் இதை இவ்வாறு ரத்னாவிடம் கூறியிருப்பார்கள்’ என்பதையே நினைத்துக் கொண்டிருந்தது.
இதைப் பற்றி மற்றொரு நாள் ரத்னாவிடம் கேட்கும் போதும் ‘அது யாரென்று தெரியவில்லை’ என்றே பதில் வர, அதைப்பற்றி மேலும் ரத்னாவிடம் கேட்க அஜீத் விரும்பவில்லை. பிரபுவிடம் இதைப் பற்றிக் கூறியபொழுது அவன் கேட்டான்:
“அப்படின்னா நீ ஸ்டெல்லாவை லவ் பண்றதால ரத்னாவை வேண்டாம்னு சொல்லலையா?”
“நான் ஸ்டெல்லாவை லவ் பண்றேன்னு உன்கிட்ட எப்ப சொன்னேன்? நான் இந்த உண்மையை மறைச்சுதான் ரத்னாவை ஜஸ்வந்த்தைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னதா நீங்க நினைச்சீங்களா?” என அஜீத் கேட்க,
“ஆமா, அப்படின்னா நீ வேற எதுவும் உண்மையை எங்ககிட்ட இருந்து மறைக்கிறியா?” எனப் பிரபு கேட்டான். உடனே பதற்றமடைந்த அஜீத்,
“வேற எதுவும் இல்லைடா, போனை வை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
பிரபுவிடம் பேசிய பின்பு அவனது மனம் மேலும் குழப்பமடைய, ‘அனைத்தையும் ஒருவேளை ஜஸ்வந்த் தான் செய்திருப்பானோ?’ என்ற குழப்பத்தையே விடையாக மாற்றிக் கொண்டான்.
இனி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரத்னாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டான். கொஞ்சம் தன் சந்தேகப் பார்வையை ஜஸ்வந்தை விட்டுத் திருப்பி, வேறு பக்கமாக ஆராய்ந்திருந்தால், பின்னாளில் நடைபெறவிருந்த பெரிய விபரீதத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அஜீத்தின் முதல் தவறு ரத்னாவின் மனதைக் காயப்படுத்தியது; அடுத்தது, இப்பொழுது தன் மனதில் எழுந்த சந்தேகத்தைச் சரியான முறையில் ஆராயாமல் விட்டது. இந்தத் தவறு ரத்னாவின் உயிரையும் தங்கள் வாழ்வையும் பாதிக்கப்போகிறது என்று அஜீத் அப்போது அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால்…?
அதேநேரம், அஜீத்தைச் சந்தித்து அவனது வாயாலேயே ரத்னாவை மறுக்கும்படி செய்த நபர் பேசிக்கொண்டிருந்தார்: “நம்ம திட்டப்படி எல்லாம் நடந்துச்சு, பட் கடைசியில அந்த ரத்னா தப்பிச்சுட்டா” எனக் கொலைவெறி கண்களில் மின்னக் கூறினார்.
அருகிலிருந்த மற்றொரு நபர், “எங்க போயிடப் போறா? நம்மளப் பத்தி எல்லாம் தெரிஞ்ச ஜஸ்வந்த்தையே இந்த உலகத்தை விட்டு அனுப்பியாச்சு. இந்த ரத்னா எல்லாம் நமக்குக் கால் தூசி மாதிரி” என அலட்சியமாகக் கூறினார்.
“ரத்னா நடந்த எல்லாத்தையும் சொன்னா கூட நம்ம மேல அவனுக்குச் சந்தேகம் வராது. அவனுக்கும் ரத்னாவுக்கும் சந்தேகம் வந்தாலும், அது முழுக்க ஜஸ்வந்த் மேலதான் இருக்கும். சந்தேகம் வராத வரைக்கும் ஓகே; ஒருவேளை வந்துட்டா, காதலிச்சவன் கூடவே அவன் காதலியையும் சேர்த்து வச்சுடலாம்” எனக் கூறிவிட்டுப் பயங்கரமாகச் சிரிக்க, மற்றொரு நபரும் அந்தச் சிரிப்பில் இணைந்து கொண்டார்.
கதை பற்றி சிறு குறிப்பு, "உயிர் பிரிந்தாலும் உன்னைத் தொடரும் என் காதல் நிழல்!" ஒரு பெண்ணின் இதயம்... அதைத் தேடி வந்த இருவேறு காதல்! கல்லூரிக் காலத்தின் அழகான அந்த நாட்களில் தன் இயல்பாலும், சிறு வயதில் தன் துள்ளலான…