ஆயிற்று, ரத்னா – ஜஸ்வந்த் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ரத்னாவின் இயல்பிலேயே மற்றவர்களின் பேச்சை ஏற்று நடக்கும் குணம், ஜஸ்வந்த் வீட்டிலும் அனைவரையும் எளிதாக ஏற்று நடக்கச் செய்தது.
மேற்படிப்பிற்காக புகழ் பெற்ற கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாள். இருந்தாலும், வீட்டில் ரத்னா செய்யும் சேட்டைகள் அவளை இன்னுமொரு ராதிகாவாகக் காட்ட, அதைத் தடை செய்வார் யாரும் அங்கு இல்லை.
தேவராஜுக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், பிறந்தது இரண்டும் ஆண் குழந்தைகள் என்றாகிவிட்டது. ரூபா மருமகளாய் வீட்டிற்கு வந்த பின் தொழிலில் உதவி செய்தாலும், அது அவருக்கு முழுத் திருப்தி அளிக்கவில்லை. ராதிகா பிறந்த பின்னேதான் வீடு உயிர்ப்புடன் இருப்பதாக அவர் உணர்ந்தார். இப்போது ரத்னாவும் ராதிகாவுடன் சேர்ந்து செய்யும் குறும்புத் தனங்களை ரசித்துப்பார்ப்பதையே அவர் தன் வேலையாக்கிக் கொண்டார்.
வீட்டிற்குள் வந்த ஜஸ்வந்த் நடப்பதைப் பார்த்துவிட்டு மாடிக்குச் செல்ல, ரத்னா எதையும் கவனிக்காமல் ராதிகாவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
தேவராஜ் ரத்னாவை அழைத்து, “ரத்னா, என்னோட கம்பெனி ஃபைல் ஒண்ணு ஜஸ்வந்த் ரூம்ல இருக்குது, அதை எடுத்துட்டு வந்து தறியாமா?” என்றார்.
“இருங்க மாமா, எடுத்துட்டு வந்துடுறேன். அதுவரைக்கும் ராதிகா எதையும் மாத்தி வச்சு என்னை ஏமாத்தாம பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு மாடிக்குத் தனது அறைக்கு வந்தாள் ரத்னா. அங்கு ஜஸ்வந்த் அமர்ந்திருப்பதைப் பார்த்து,
“நீங்க எப்ப வந்தீங்க?” எனக் கேட்டாள்.
“நான் வந்தது கூட கவனிக்காம மேடம் ரொம்ப பிஸியா இருக்கீங்க! சரி, காரணமில்லாமல் மேடம் மேலே வர மாட்டீங்களே, என்ன விஷயம்?”
“அதுவா… மாமா உங்ககிட்ட கம்பெனியோட ஃபைலைக் கொடுத்தாங்களாமே, அதை எடுத்துட்டு வரச் சொன்னாங்க. அதை எடுக்கத்தான் வந்தேன்.”
அப்படி எந்தவொரு கம்பெனியும் தங்களுடன் தொழில் தொடர்பில் இல்லை, ரத்னாவை மேலே அனுப்புவதற்காகவே தன் தந்தை பொய் சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட ஜஸ்வந்த், அலமாரியை நோக்கிச் சென்ற ரத்னாவைப் பிடித்திழுத்தான்.
“நீ ஃபைலை அப்புறமா தேடு. இப்ப எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.”
“வேலை இருந்தா போய் பார்க்க வேண்டியதுதானே? என்னை எதுக்காக இப்படி இழுத்தீங்க?” என காரணமின்றி மனதில் தோன்றிய எரிச்சலை மறைத்துக் கூறினாள்.
“என் வேலையே உன்கூடத்தானே! எப்பவும் எல்லார்கூடவும் இருக்க வேண்டியது… நீ என்னை மட்டும் கவனிச்சா போதும்.”
“அதெல்லாம் முடியாது, என்னை விடுங்க. மாமா காத்துக்கிட்டு இருப்பாங்க.” என்றவள் விலகாவழி தேடினாள்.
“ரதிகுட்டி, நீ இன்னும் குழந்தையாகவே இருக்கியே! நான் வந்ததைக் கவனிச்ச அப்பா, பொய் சொல்லி உன்னை மேலே அனுப்பி இருக்கிறார். என்ன இருந்தாலும் காதல் வாழ்க்கையில நமக்கு சீனியர் அவர்தானே!”
ரத்னாவை கட்டாயப்படுத்தி ஒற்றை முத்தம் பெற்ற பின் தான் ஜஸ்வந்த் அவளை விடுவித்தான்.
கலைந்த தன் ஆடைகளைச் சரிசெய்துகொண்டு கீழே வந்த ரத்னாவுக்கு, வீட்டில் தேவராஜ் இல்லை என்பதே ஜஸ்வந்த் கூறியது உண்மை என்பதை நிரூபித்தது. அவள் ஒரு சிறு கசந்த முறுவலுடன் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அடுத்த நாள் உணவு அருந்தும்போது ரூபா கூறினாள், “ஜஸ்வந்த், நாளைக்கு வீட்ல இருந்து எல்லாரும் வராங்க.”
“வரட்டும் ரூப்ஸ், அதுக்காக நீங்க ஏன் மூஞ்சியை இப்படி வச்சிருக்கீங்க?”
“ஏன்னா, அவங்க வந்து சொல்லப்போற விஷயம் அப்படி.”
“அப்படி என்ன சொல்லப் போறாங்க?”
“அது வந்து… அடுத்த வாரம் ஆடி ஆரம்பிக்குது. சோ, ரத்னாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுக்காக வராங்க.”
“ஓகே, இதுல என்ன இருக்கு? ரத்னா, நீ காலேஜுக்கு லீவ் சொல்லிடு. நானும் என்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டு வாரேன், நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்.” என கூற,
“ஜஸ்வந்த், ஆடி மாசம் முழுக்கப் பொண்ணுங்க அம்மா வீட்டுலதான் இருக்கணும். நீ இங்கதான் இருக்கணும்.”
“ரூப்ஸ், நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை, இந்த ஆடி மாசம் அப்படின்னா என்னன்னு தெரியாம இருக்குறதுக்கு! அதான் இப்ப வர்ற எல்லா சீரியல் கதைகளையும் இந்த ஆடி மாசத்தை வச்சு ஒன்னு ரெண்டு எபிசோட் டெவலப் பண்ணிட்டு இருக்காங்களே. ஆடி மாசம் முழுக்க ரத்னா அம்மா வீட்டுக்குப் போனா படிப்புக்கு டாட்டா சொல்லிட வேண்டியதுதான்.”
“கடைசியா என்ன சொல்ல வர்ற?”
“நானும் ரத்னாவும் உங்க அம்மா வீட்டுக்குப் போறோம். ஒரு வாரம் அங்க தங்கப் போறோம். ரத்னா திரும்பி வந்து காலேஜ் போகப் போறா. நான் உங்க ஊர்ல ஒரு மாசம் தங்கப் போறேன்.” தம்பியின் பதிலைக் கேட்டுத் திகைத்த ஹர்ஷத்,
“என்னடா சொல்ற?” என்றான்.
“அண்ணா, தென்காசியில என் பிரெண்ட் விமலுக்கு ஒரு ஹோட்டல் கட்டித்தரச் சொல்லி கேட்டிருந்தான். அதுக்கான வேலை கூட நாளைக்கு ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. ஒரு மாசம் அங்கிருந்து பார்த்துட்டு வரப்போறேன். அதுவரைக்கும் மாமனார் வீட்டுல தங்கிப்பேன்.” என்று தனது திட்டத்தை கூற அனைவரும் ஏற்று கொண்டனர்.
**டெல்லி**
அஜீத் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான அகாடமியில் ஐஏஎஸ் (IAS) படிப்பதற்காகச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. படிப்பு ஒரு பக்கம் நன்றாகச் சென்று கொண்டிருந்தாலும், ரத்னாவின் நினைவு மட்டும் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய் அவனுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது. ‘நான் செய்தது தவறா, சரியா?’ என லட்சம் முறையாவது தன் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பான்.
டெல்லி வந்த பிறகு தேவைக்கு மட்டுமே தன் பெற்றோரைத் தொடர்பு கொள்பவன், ரத்னாவின் அழைப்புகளை மட்டும் கவனமாகத் தவிர்த்து வந்தான். இனி ரத்னாவின் வாழ்வில் தனக்கு இடமில்லை என்பதை அஜீத் ஒருவாறாக ஏற்றுக்கொள்ளப் பழகி, தன் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்தத் தொடங்கியிருந்தான்.
அன்று காலையிலிருந்தே மனதுக்குள் ஏதோ நெருடலாக இருக்க, காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருந்தான். படிப்பில் கவனம் செலுத்த முடியது தவித்து கொண்டிருந்த வேளையில் அவனது போன் ஒலி எழுப்பியது. அதை எடுத்துப் பார்க்க, அதில் ‘பிரபு’ என்ற பெயர் வரவும் உடனே அழைப்பை ஏற்றுப் பேசினான்.
“என்னடா, ஒரு வழியா என் மேல இருந்த கோபம் போயிருச்சா? இப்ப தான் என்கிட்ட உனக்கு பேசணும்னு தோணுச்சா?” நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நண்பன் அழைத்ததால் மகிழ்ச்சியுடன் அஜீத் பேச, அதற்கு பிரபு கூறிய பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் போனைத் தவறவிட்டான். உடனே வேகமாக அங்கிருந்து கிளம்பி, அடுத்த விமானத்தில் மதுரை வந்து, அங்கிருந்து தென்காசி வந்து சேர்ந்தான்.
தென்காசியில் உள்ள ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்னாவைப் பார்த்த அஜீத் அருகில் வந்தான். ரத்னாவோ எங்கோ வெறித்துப் பார்த்தபடி, தன் அருகில் வந்த அஜீத்தைக் கூட உணராமல் அமர்ந்திருந்தாள்.
உணர்வெல்லாம் மரத்துவிட்ட நிலையில் இருக்கும் தன் மகளை உணவு உண்ணும்படி அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் பார்வதி. அஜீத்தைப் பார்த்ததும் சேலை முந்தானையால் தன் வாயை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். இதை எதையும் பார்க்க விரும்பாமல் அஜீத் வெளியேற முயன்றபோது, அவனது தோளைப் பிரபு தொட்டான்.
“என்னடா ஆச்சு என் ரத்னாவுக்கு?”
“இங்க பேச வேண்டாம்டா, வா வெளிய போகலாம்.”
இருவரும் வெளியில் வந்தனர். அப்பொழுதுதான் பொழுது விடிந்து சிறிது நேரமே ஆகியிருந்ததால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் மட்டுமே அந்த மருத்துவ வளாகத்தில் இருந்தனர். அஜீத்தை அங்கிருந்த ஒரு மரத்தடியின் சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்துப் பிரபு பேசத் தொடங்கினான்.
“ஆடி முடிஞ்சு ரத்னாவும் ஜஸ்வந்தும் ஊருக்குக் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்திலேயே தென்காசி டு மதுரை ரோட்ல ஆக்சிடென்ட் ஆயிட்டு. ரத்னாக்கு அடி பெருசா இல்ல, ஆனா அதிர்ச்சி மட்டும்தான். இப்போதைக்கு வேற பிரச்சனை இல்லைனு சொல்லிட்டாங்க.”
“ரத்னா இங்க இப்படி இருக்கா, ஆனா அவங்க வீட்டுல அவங்க அம்மாவைத் தவிர வேறு யாரும் இங்க ஏன் இல்லை?” என புரியாது கேட்க,
“நடந்த ஆக்சிடென்ட்ல ஜஸ்வந்த் ஸ்பாட் அவுட். அதனால ரத்னா வீட்டுல உள்ள எல்லாரும் சென்னை போயிருக்காங்க. இன்னைக்கு பதினாறாவது நாள். ஏதோ பூஜை இருக்காம், எப்படியும் ரத்னாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வந்துடுவாங்க.”
“ஏண்டா இத்தனை நாளா என்கிட்ட சொல்லல?”
“சொல்லியிருந்தா மட்டும் என்னடா பண்ணியிருப்ப? இன்னைக்கு இந்த நிலைமையில ரத்னா இருக்குறதுக்கு முக்கிய காரணம் நீ மட்டும்தான்டா.”
“நானா? நான் எப்படிடா காரணமாக முடியும்?”
“நீ எந்த உண்மையை எங்ககிட்ட இருந்து, குறிப்பா ரத்னாகிட்ட இருந்து மறைக்க நினைச்சியோ, அது ரத்னாவுக்குத் தெரியும். உண்மையை மறைச்சு அவளோட பாதி சந்தோஷத்தை நீ அழிச்சுட்ட. மகராசன் அவன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப செத்துப்போய் அவளோட மீதி சந்தோஷத்தையும் எடுத்துட்டுப் போயிட்டான்.”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ரத்னாவின் வீட்டார் வந்துவிட அவர்கள் பேச்சு அப்போதைக்கு தடைபட்டது.
ரத்னாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதை அறிந்த அஜீத் அவர்களின் பின்னே வீட்டிற்குச் சென்றான். அங்கு அவன் பார்த்த காட்சி, அவனை வேதனையின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது.
உடலின் காயங்கள் கூட முழுதாகக் குணமடையாத நிலையில், ரத்னாவை வீட்டின் நடுக்கூடத்தில் அமரவைத்து, கணவனை இழந்த பெண்ணிற்குச் செய்யும் சடங்கு எனச் சொல்லி வயதான பெண்கள் சில கொடுமைகளைச் செய்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்து விரைந்து சென்று அவர்களிடம் சத்தம் போட்டான் அஜீத்.
“உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா? ஏற்கனவே உடல் அளவிலும், மனசு அளவிலும் காயப்பட்டு இருக்குற ஒரு பொண்ணை இப்படித்தான் கொடுமைப்படுத்துவீங்களா?”
“தம்பி, புரியாம பேசாதீங்க. இதெல்லாம் காலங்காலமா நடக்குறதுதான்” என்றாள் ஒரு பாட்டி.
“காலம் மாறினாலும் உங்களை மாதிரி சில முட்டாள்கள் இருக்குற வரைக்கும் எதையும் மாத்த முடியாது.” சத்தம் கேட்டு அனைவரும் கூடத்திற்கு வந்தனர்.
“அவங்களுக்குத்தான் அறிவு இல்லைனா, உங்களுக்கெல்லாம் எங்க போச்சு?” என ரத்னாவின் வீட்டாரை நோக்கி அஜீத் கேட்க, அவனது அருகில் வந்த கிருஷ்ணன்,
“அஜீத், தேவையில்லாம எதுவும் பேசாத, நீ அமைதியா இரு” என்றார்.
“எப்படிப்பா கண்ணுக்கு முன்னாடி நடக்குற கொடுமையைப் பார்த்துகிட்டு அமைதியா இருக்க முடியும்?”
எப்பொழுதும் தம்பியை மட்டம் தட்ட வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கும் ஆர்த்தி, இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி “என்னடா கொடுமை நடக்குது? நீ ரத்னாவுக்குப் பண்ணின கொடுமையை விடவா? நீ மட்டும் ரத்னாவைக் கல்யாணம் பண்ணியிருந்தா இந்த மாதிரி ஒரு நிலைமை ரத்னாவுக்கு வந்திருக்குமா? நீ அவளை வேண்டாம்னு சொன்ன, அதனாலதானே ஜஸ்வந்த்துக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க! எல்லாம் உன்னாலதான். பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப ரொம்ப நல்லவன் மாதிரி நாங்க கொடுமை பண்றோம் அப்படின்னு பேசிக்கிட்டு இருக்க. நாங்க பண்றது கொடுமைனா நீ பண்ணினதுக்கு பேரு என்ன? ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ, இப்போ ரத்னா கஷ்டப்படுறதுக்கும், காலம் முழுக்க அவ வடிக்கப் போற கண்ணீருக்கும் நீ மட்டும்தான் காரணம்!”
எப்பொழுதும் பிறரின் மனதைக் காயப்படுத்துவதற்காக மட்டுமே ஆர்த்தி இவ்வாறு பேசுவாள் என்பதை அஜீத் உணர்ந்திருந்தாலும், தற்போது ஆர்த்தி கூறும் குற்றச்சாட்டில் இருக்கும் உண்மை சுட, அவன் அப்படியே மௌனமாய் நின்றான்.
கதை பற்றி சிறு குறிப்பு, "உயிர் பிரிந்தாலும் உன்னைத் தொடரும் என் காதல் நிழல்!" ஒரு பெண்ணின் இதயம்... அதைத் தேடி வந்த இருவேறு காதல்! கல்லூரிக் காலத்தின் அழகான அந்த நாட்களில் தன் இயல்பாலும், சிறு வயதில் தன் துள்ளலான…