உன் நிழல் நான் தொட ep 13

அத்தியாயம் 13

 

அஜீத் கூறியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டே வீடு வந்த ரத்னா, அஜீத் எதற்காக ஜஸ்வந்தை திருமணம் செய்யக் கூறினான், ஜஸ்வந்த்திடம் தான் எதற்காகப் பேச வேண்டும் என மட்டும் யோசித்தாளே தவிர, அஜீத் திருமணத்தை மறுத்த காரணத்தைக் கேட்கவில்லை; ஜஸ்வந்திற்கு ஆதரவாகப் பேசிய காரணத்தையும் கேட்கவில்லை. கேட்டிருந்தால்…? விதி விளையாட்டின் திருப்பம் ஆரம்பித்தது.

நடந்ததைக் கேள்விப்பட்ட பிரபு, “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ரத்னாகிட்ட அந்த ஜஸ்வந்தைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருக்க!”

“பிரபு, ரத்னா கல்யாணம் ஜஸ்வந்த் கூடத்தான் நடக்கணும். அதுதான் எல்லாருக்கும் நல்லது, குறிப்பா ரத்னாவுக்கு.”

“என்னடா நல்லது? ரத்னாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உன்னைக் கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருப்பா.”

“இல்லடா, எங்க கல்யாணம் நடந்தா சிலர் பிரச்சனை பண்ணனும்னு காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்களால ரத்னா சந்தோஷம் மட்டும் இல்ல, குடும்பத்துல எல்லாருடைய சந்தோஷமும் போயிடும். அது யாரால, எப்படினு என்னால இப்போ மட்டும் இல்ல, எப்பவும் சொல்ல முடியாதுடா. ரத்னாகிட்ட இதைப் பத்தி எதுவும் பேசி வச்சுடாத பிரபு. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு, நான் ரெடியாகிட்டு வரேன். உனக்கு ME அப்ளிகேஷன் கொடுத்துட்டு வரலாம்.”

அஜீத் மாடிக்குச் சென்றதும், அவனது போன் ஒலி எழுப்பியது. அதில் ‘ஜஸ்வந்த் Bro’ என்ற பெயரில் மெசேஜ் வந்திருப்பதாகக் காட்ட, பிரபு ‘இவன் எதுக்கு அஜீத்துக்கு மெசேஜ் பண்றான்’ என்ற யோசனையுடன் எடுத்துப் பார்த்தான். அதில், ‘ரத்னாகிட்ட பேசிட்டியா? ரத்னா ரெஸ்பான்ஸ் என்ன?’ என்று வர, பிரபுவின் மூளை, ‘ஒருவேளை இவனால்தான் அஜீத் ரத்னாவைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுறானோ’ என யோசித்தது. அப்போது ஜஸ்வந்த் பிரெதர் என்ற எண்ணிலிருந்து அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தான் பிரபு. மறுபுறம் இருந்த நபர், 

“அஜீத், நான் சொன்ன மாதிரி ரத்னாகிட்ட பேசிட்டதானே? ரத்னா கல்யாணம் உன் கூட நடந்தா, அதனால வரக்கூடிய விளைவு நிச்சயம் உனக்கும் ரத்னாவுக்கும் சாதகமா இருக்காது” எனக் கூறி போனை வைத்துவிட்டார்.

‘ஓ, நீதான் இவங்க லவ் ஸ்டோரில வில்லனா? நீ வில்லன்னா நான் உனக்கு வில்லாதி வில்லன்டா. இதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.’

அடுத்த நாள் அஜீத் இல்லாத நேரத்தில் கிருஷ்ண சந்திரனைச் சந்தித்து, அஜீத்திற்கு வந்த மிரட்டலைப் பற்றி பிரபு கூறினான். “நீ சொல்றது உண்மையா?” எனக் கேட்டார் கிருஷ்ண சந்திரன். 

“உண்மை தான் அங்கிள், நான் தான் போனை எடுத்தேன். அதுமட்டுமில்ல, ரத்னாவை அஜீத்துக்குப் பிடிக்கும் அங்கிள்.”

“சரி, என்கிட்ட சொல்லிட்டல, நான் பார்த்துக்கிறேன்.”

எந்தவொரு தந்தையும் மகனின் விருப்பம் என்று வரும்போது மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். அதிலும் மகனுக்குப் பிடித்ததை ஒருவர் மிரட்டித் தட்டிப்பறிக்க நினைத்தால், எப்பாடுபட்டாவது அதைத் தன் பிள்ளைக்குத் தர நினைப்பார்கள். கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் முத்துவேலிடம் கூற வேண்டியதைக் கூறி சம்மதத்தைப் பெற, அடுத்த நாள் தேனுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ரத்னா வீட்டிலும் ரத்னாவிற்கு அஜீத்துடனான திருமணமே சிறந்தது எனக் கூற, பார்வதி, “ரூபா வீட்டுலயும், என் அக்கா வீட்டுலேயும் என்ன பதில் சொல்ல?” எனக் கேட்டாள். முத்துவேல் பதில் கூறுவதற்கு முன் வைரவேல் குறுக்கிட்டார்.

“பார்வதி, நீ எதுக்கு இப்படி யோசிக்கிறனு புரியுது. விசாரிச்சுப் பார்த்ததுல உங்க அக்கா சொந்தக்காரப் பையனுக்குக் குடிக்கிற பழக்கம் இருக்காம். அந்தப் பையன் வேண்டாம்னு சொல்லிடு. ரூபா கொழுந்தனுக்குக் கொடுத்தா பிரச்சனைதான் வரும். ஏற்கனவே ரூபாவை வேற ஆளுங்களுக்குக் கொடுத்ததுல நிறைய கேள்வி வந்துச்சு. இப்போ ரத்னாவையும் வேற இடத்துல கொடுத்தா நம்ம சொந்தத்திலேயும், ஊருக்குள்ளேயும் பெரிய வீட்டுக்காரங்கனு நமக்கு இருக்குற மரியாதை இல்லாம போயிடும். 

அப்புறம் பொண்ணு கொடுத்த இடத்தைவிட, பொண்ணு எடுத்த இடத்துல பொண்ணைக் கொடுத்தா நல்லபடியா பார்த்துக்குவாங்க. அதுமட்டுமில்ல, நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் முத்து நண்பன் வீட்டுல தைரியமா பேசலாம். அதுமட்டுமில்லாம அந்தப் பையன் IAS படிக்கப் போறானாமே, கவர்மெண்ட் உத்தியோகம்னாலே பெருமையா பேசுற நம்ம ஊருக்குள்ள நம்ம வீட்டு மாப்பிள்ளை கலெக்டர்னு பெருமையா சொல்லிக்கலாம். பணத்தால அதை வாங்க முடியாது. ரத்னா மூணு வருஷம் அவங்க வீட்டுலதான் இருந்து படிச்சா, அவங்களுக்கு ரத்னாவைப் பார்த்துப் பழகிப் பிடிச்சு கேக்குறாங்க. நல்லாப் பார்த்துக்குவாங்க, யோசிச்சுச் சொல்லுங்க.”

அனைவரும் தங்கள் சம்மதத்தைக் கூறினர். கோவிலுக்குச் சென்ற ரத்னாவிடம் சம்மதத்தைக் கேட்கவும் இல்லை, நாளை அஜீத் வீட்டார் வரப்போவதைக் கூறவும் இல்லை. நடப்பதை எவ்வாறு தடுக்கலாம் என ஆர்த்தி யோசித்துக் கொண்டு இருக்க, தங்கவேலு அவளை எச்சரித்தான்.

“இங்க பாரு, என் தங்கச்சி கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை பண்ண நினைச்சேன்னு தெரிஞ்சா கூட, உன் குணத்தைப் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லுறது மட்டும் இல்ல, நீ எனக்குத் தேவையில்லைனு அத்து விட்டுருவேன், ஞாபகம் வச்சுக்கோ.”

“நான் சும்மா கூட எதையும் யோசிக்கக்கூடாதா? நாளைக்கு என்ன சமையல் பண்ணலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.”

“யாரு நீயா? சமையலைப் பத்தி நினைச்சதை நான் நம்பணும்? கட்டுன சேலை மடிப்பு கலையாம, போட்டுருக்குற பவுடர் குறையாம சுத்துற நீ சமையலைப் பத்தி யோசிச்சேன்னு சொன்னா நம்ம பையன் கூட நம்ப மாட்டான். என் தங்கச்சி மருமகளா அங்க போனாதான் நீ இங்க இருக்க முடியும். இல்ல எது நடந்தாலும் பரவாயில்லைனு நீ ஏதாவது பண்ணா, நான் எனக்கு வேற நல்ல பொண்ணா தேட வேண்டியதா இருக்கும், அப்புறம் உன் இஷ்டம்.”

வீட்டிற்குள் வரும்போதே எரிச்சலுடன் வந்த அஜீத், நாளை ரத்னா வீட்டிற்குத் திருமணம் பற்றிப் பேசச் செல்வதைக் கேள்விப்பட்டான். “அம்மா, நான் தான் கல்யாணம் இப்போ வேண்டாம்னு சொன்னேன் தானே?”

“நீ ரத்னாவை வேண்டாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் சொல்லு, கல்யாணம் வேண்டாம். ரத்னா இங்க தங்கி வேலைக்கு போகப்போறா. அது மருமகளா, இல்ல வருங்கால மருமகளான்னு மட்டும்தான் முடிவு பண்ணப்போறோம். எல்லாருக்கும் பிடிச்சிருக்கு, முக்கியமா ரத்னாவுக்கு. போ, போய் தூங்கு, காலையில சீக்கிரம் கிளம்பணும்.”

தான் கூறியதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை உணர்ந்த அஜீத்தின் மொத்த கோபமும் ரத்னாவின் மீது திரும்பியது. ரத்னாவை அழைக்க, அழைப்பை ஏற்ற ரத்னா, 

“ஹலோ அஜீத் அத்தான், இப்பதான் உங்களை நினைச்சேன், நீங்களே போன் பண்ணிட்டீங்க. நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன், ஏன் தெரியுமா?”

“ஆமா, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போட்டி போட்ட மூணு முட்டாள்ல என்னைத் தானே செலக்ட் பண்ணிருக்கீங்க? அந்த சந்தோஷம் தானே? சின்ன குழந்தைக்குச் சொல்லுற மாதிரி நான் உன்கிட்ட எவ்வளவு பொறுமையா ரெண்டு நாளைக்கு முன்னாடி எடுத்துச் சொன்னேன். எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரிதான். இதுநாள் வரைக்கும் உனக்குச் சுயபுத்திதான் இல்லைனு நினைச்சேன், இப்பதானே புரியுது உனக்குச் சொல்புத்தியும் இல்லைனு!”

“அத்தான், இப்போ என்ன நடந்ததுன்னு இவ்வளவு கோபமா பேசுறீங்க?”

“இன்னும் என்ன நடக்கணும்? எல்லாருமா சேர்ந்து உன்னை என் தலையில கட்ட முடிவு பண்ணிட்டாங்க. உன்னைப் மாதிரி புத்தி இல்லாத முட்டாளைக் காலம் முழுதும் வேதாளத்தை விக்ரமாதித்யன் சுமந்த மாதிரி சுமக்கணும்னு முடிவெடுக்க வச்சுட்ட இல்ல?” எனக் கூறிவிட்டுப் போனைத் தூக்கி எறிய, அது ‘நச்’ என்ற சத்தத்துடன் உடைந்து தன் உயிரை இழந்தது. ஆத்திரம் குறைந்ததும் தான் கூறிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்து தன் போனைப் பார்த்தான், அது பல துண்டுகளாக உடைந்திருந்தது.

வெகுநேரம் சுய உணர்வின்றி அமர்ந்திருந்த ரத்னா, கலக்மத்துடனே அந்த நேரத்தை கழித்தாள்.

மாலையில் வீடு பரபரப்புடன் இருப்பதைப் பார்த்து, காரணம் அறிந்தும் எதுவும் பேசாது வீட்டின் நடுக் கூடத்தில் வந்து அமர்ந்திருந்தாள் ரத்னா. பார்வதி அவளிடம், “ரத்னா, குளிச்சுட்டு முதல் வருஷம் உங்க காலேஜ் பொங்கலுக்கு எடுத்த புடவையைக் கட்டு” என்றாள்.

“எதுக்குமா புடவை கட்டணும்? ஏதாவது விசேஷ வீட்டுக்குப் போறோமா?” ரத்னாவின் பதிலில் ஒரு நிமிடம் அதிர்ந்த பார்வதி, 

“என்னடி உனக்கு எதுவும் தெரியாதா? இன்னைக்கு அஜீத் வீட்டுல இருந்து உன்னைப் பேசி முடிக்க வராங்க. போ, போய் சீக்கிரம் கிளம்பு.”

“ஏம்மா, என் கல்யாணம் என் விருப்பம்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி வரை எல்லாரும் சொன்னீங்க. இப்போ என்கிட்ட சொல்லணும்னு கூட இந்த வீட்டுல யாருக்கும் தோணவே இல்லையா?”

“தேவையில்லாம ஏதாவது பேசினா அடி பிச்சுடுவேன். போய் புடவையை மாத்து.”

குறித்த நேரத்தில் அஜீத் வீட்டினர் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அஜீத் ரத்னாவிடம் பேசிவிட்டுப் பின் இந்த கல்யாணப் பேச்சை நிறுத்த வேண்டும் என நினைத்தான். 

அப்போது வீட்டின் முன் வந்து நின்ற காரிலிருந்து ரூபா, ஹர்ஷத், ராதிகா, ஜஸ்வந்த் மற்றும் ஜஸ்வந்தின் பெற்றோர் தாம்பூலத்துடன் வந்து இறங்கினர்.

அமர்ந்திருந்த எவரும் இவர்களின் வருகையை எதிர்பார்க்கவில்லை. ரத்னாவின் திருமணத் தேதியை உறுதிப்படுத்திய பின் ரூபாவிடம் கூறலாம் என நினைத்திருக்க, திடீரென்று இப்படி வந்து நிற்பார்கள் என நினைக்கவில்லை. உள்ளே வந்தவர்கள் டீப்பாய் மீதிருந்த தாம்பூலத்தையும் அஜீத் வீட்டாரையும் பார்த்து நொடியில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். ஜஸ்வந்தின் தந்தை தேவராஜ் பேசினார்:

“ரூபாவை நாங்க முழுமனசா எங்க வீட்டுப் பொண்ணா ஏத்துக்கிட்ட மாதிரி, என் பையனையும் ஏத்துக்கிட்டீங்கனு நினைச்சுதான் உங்க வீட்டுக்கு வந்தோம். சொந்தமா நினைச்சிருந்தா வீட்டு விசேஷத்துக்குச் சொல்லியாவது இருக்கலாம். ரத்னாவைப் பத்தி ரூபா சொல்லிக்கிட்டே இருப்பா, ரத்னாவுக்கு இதை எங்க ஆசீர்வாதமா கொடுத்துடுங்க” என மேக்னா கையிலிருந்த தாம்பூலத்தை வாங்கி டீப்பாயில் வைத்துவிட்டு நகர முயன்றாரை ஜஸ்வந்த் தடுத்தான்.

“அப்பா ஒரு நிமிஷம். ரத்னாவுக்கு என்னைப் பிடிக்குமா பிடிக்காதாங்கிற கேள்விக்குப் பதில் தெரியாம பத்து வருஷமா காத்துக்கிட்டு இருக்கேன். எனக்கு அது மட்டும் தெரியணும்ப்பா, எனக்குப் பதில் தெரியணும். என்னைப் பிடிக்கலைனு சொல்லிடா  உன் கையாலயே ஆசீர்வாதத்தைக் கொடுத்துட்டுப் போகலாம்.” பிரச்சனை வேண்டாம் என நினைத்த ரூபா, 

“ஜஸ் ப்ளீஸ், நம்மளால எந்தப் பிரச்சனையும் வேண்டாம். வா போகலாம்” என்றாள்.

“ரூப்ஸ், நான் எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டேன். ரத்னா பதில் என்னனு தெரிஞ்சுட்டுப் போகலாம்.”

நடப்பதைப் பார்த்த ஆர்த்தி ‘ஆகா, நாம ஒன்றும் பண்ணாமலே பிரச்சனை நடக்கப் போகுது’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டே ரத்னாவை அழைத்து வந்தாள். 

அனைவரும் மௌனம் காக்க, தேவராஜ் கூறினார்: “ரத்னா, நீ இங்க உன்னோட விருப்பம் எதுவாக இருந்தாலும் சொல்லலாம். ரூபாவை நினைச்சு நீ பயப்பட வேண்டாம், ரூபா எப்பவும் என் வீட்டுப் பொண்ணுதான்.”

“நான், ஜஸ்வந்த், அஜீத் மூணு பேரும் ரொம்ப லக்கி. மூணு பேருடைய அப்பா அம்மாவும் பிள்ளைங்களுடைய சந்தோஷத்துக்காக மட்டும்தான் இங்க நிக்குறீங்க. எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும், பிரெண்டா மட்டும்தான், அதுக்கு மேல நான் யோசிச்சது இல்லை. ஏன்னா எனக்கு என் வாழ்க்கை யாரு கூட இருந்தா நல்லா இருக்கும்னு யோசிக்கிற அளவு சுயபுத்தி எனக்குக் கிடையாது. எனக்குப் பிடிச்சவங்களுடைய சொல்புத்தியிலேயே வாழ்ந்துட்டேன். இப்பவும் சுயமா முடிவெடுத்து நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பல.”

தன் பேச்சு ரத்னாவை எந்தளவு காயப்படுத்தியிருந்தால் இப்படிப் பேசுவாள் என்பதை உணர்ந்து, அஜீத் இனியும் மௌனம் காப்பது நல்லதல்ல என நினைத்து, “நான் இப்போ பேசுறதை யாரும் தப்பா எடுத்துக்கக் கூடாது. ரத்னாவை எனக்குப் பிடிக்கும், பட் லைஃப் பார்ட்னரா நான் நினைச்சுப் பார்த்ததும் இல்லை. எனக்கு ரத்னாவை வேண்டாம்னு சொல்ல எந்தக் காரணமும் இல்லை, ஆனா கல்யாணம் இப்போ வேண்டாம்னு சொல்லக் காரணம் இருக்கு. படிக்கணும், எந்தவித டிஸ்டர்பன்ஸும் இல்லாம படிக்கணும்” என்றான். அஜீத்தைத் தன்புறம் திருப்பிய கிருஷ்ணன், 

“நீ ஏன் இப்படிப் பேசுறேன்னு எனக்குத் தெரியும், இவனாலதான்” என ஜஸ்வந்தை நோக்கிக் கூறினார். அஜீத் மறுத்தான், 

“நான் யாராலயும் இப்படிப் பேசல. ஒருவேளை ஜஸ்வந்த் வீட்டுல இருந்து வரலைனாலும் நான் இதைத்தான் சொல்லியிருப்பேன்.”

பல்வேறு குழப்பமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், அஜீத் தன் பிடியில் உறுதியாக இருக்க, வேறு வழியின்றி ஜஸ்வந்த் – ரத்னா திருமண நிச்சயப் பேச்சு ஆரம்பமானது. 

“இஃப் யூ ஆல் டோன்ட் மைண்ட், நான் ரத்னாகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசலாமா? பத்து வருஷத்துல பாடிகார்ட் இல்லாம நான் ரத்னாவைப் பார்த்தது இல்லை. ரூபா, தங்கவேலு, அஜீத் இப்படி யாராவது ஒருத்தர் இல்லாம தனியா வந்ததும் இல்லை, சோ ஒரு பத்து நிமிஷம்.” என ஜஸ்வந்த கேட்டான்.

அனுமதி கிடைத்ததும் மாடியில் இருந்த ஊஞ்சல் அருகே வந்தனர். “ஜஸ்வந்த், அஜீத் என்னை வேண்டாம்னு சொன்னதாலதான் நம்ம கல்யாணம் நடக்குறதா நீங்க நினைக்கிறீங்களா? இதனால உங்களுக்கு ஏதாவது கோபமா?” என ரத்னா கேட்டாள்

“நாட் அட் ஆல், என்னோட கெஸ்ஸிங் சரியா இருந்தா உனக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருந்திருக்காது, சரியா?”

“அது எப்படி சொல்லுறீங்க? ஒருவேளை நான் ஓகே சொல்லியிருந்தா?” வீம்பாகப் பேசிய ரத்னாவிடம் ஒரு புகைப்படத்தைக் காட்டி, 

“இந்த ஒரு காரணம் போதும் நீ வேண்டாம்னு சொல்ல” என்றான்.

“இது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தெரியும், அவ்வளவுதான். அதனாலதான் பொறுமையா எல்லா வேலையையும் முடிச்சுட்டு நமக்கான நேரத்தை உருவாக்கிட்டு வந்தேன். நீ என்னைக் காதலிக்க மாட்டேன்னு புரிஞ்சுக்கிட்டேன். சோ, கல்யாணம் முடிஞ்சதும் என் காதலை உனக்கு உணர்த்தலாம்னு முடிவு பண்ணிட்டேன். 

அப்புறம் ரதி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ‘யோசிக்கிற அளவு சுயபுத்தி எனக்குக் கிடையாது, எனக்குப் பிடிச்சவங்களுடைய சொல்புத்தியிலேயே வாழ்ந்துட்டேன்’னு சொன்னதானே? நீ முடிவெடுக்காம இருக்குறதுக்குக் காரணம் புத்தி இல்லாம இல்ல, பிடிச்சவங்க மேல நீ வச்சிருக்க பாசம், அவங்க உனக்கு நல்லதை மட்டும்தான் செய்வாங்கனு உனக்கிருக்கிற நம்பிக்கை. 

அந்தப் பாசத்தையும் நம்பிக்கையையும் என் மேலயும் வர வைப்பேன். உனக்கு ஓகேனா இப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம், இல்லைனா டைம் எடுத்துக்கோ, நீ மாஸ்டர்ஸ் படிச்சதுக்குப் அப்புறம் வச்சுக்கலாம்.”

ரத்னா இடைமறித்து, “நான் எதுலயும் ஃபர்ஸ்ட் கிடையாது” என்றாள். 

ஜஸ்வந்த் சிரித்துக்கொண்டே, “என் வாழ்க்கையில நீதான் ஃபர்ஸ்ட், அது போதும். என்னை கல்யாணத்துக்கு ஓகேவா?” எனக் கேட்டான். 

“என்கிட்ட அடி வாங்க ஒரு அடிமை சிக்குனா மாட்டேன்னா சொல்லப் போறேன்?” என்றாள் ரத்னா.

எந்தவொரு விஷயத்தையும் கவனமாகக் கையாளும் போது வெற்றி கிடைக்கின்றதோ இல்லையோ, தோல்வி தவிர்க்கப்படுகின்றது. ஜஸ்வந்த் காட்டிய நிதானம் வெற்றியைத் தர, அஜீத்தின் ஆத்திரம் ரத்னாவின் நட்பில் விரிசலை ஏற்படுத்திவிட்டது.

அதன்பின் நடந்தது அனைத்தும் மின்னல் வேகம்தான். ஒரு வாரத்தில் நிச்சயம், அடுத்த மாதத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டு வேலைகள் நடந்தன. அஜீத் வீட்டில் மற்றவர்கள் பெயருக்கு மட்டுமே கலந்துகொள்ள, அஜீத் விருப்பம் இருப்பது போலவே கலந்து கொண்டான்.

நிச்சய நாளில் தட்டு மாற்றிய பின் மோதிரம் மாற்றும் போது, ஜஸ்வந்த் தன் அண்ணன் தந்த மோதிரத்தை வாங்காமல், ரூபாவின் கைப்பையிலிருந்த இரு பெட்டிகளை எடுத்து, “இப்போ உனக்கு ஓகேவா?” எனக் கேட்டான். 

பெட்டியைப் பார்த்ததும் புரிந்துகொண்ட ரத்னா அஜீத்தை பார்த்து தயங்கி பின் தன் இரு கரங்களையும் நீட்டினாள். ஜஸ்வந்த் தான் இரண்டாவதாக வாங்கிய வளையலைப் போட்டுவிட்டு, மற்றொன்றைக் கையில் தர, கலக்கத்துடனே பெற்றுக்கொண்டாள்.

இதைப் பார்த்துப் பலர் மகிழ, சிலர் மட்டும் வெறுப்பு, வேதனை, பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இருபக்கச் சொந்தமும் அதிகம் என்பதால் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருமணம்; தென்காசியிலேயே மிகப்பெரிய மண்டபத்தில் திருமண விருந்து; தேவராஜ், ஹர்ஷத், ஜஸ்வந்த் நண்பர்களுக்கும் தொழில் வட்டாரத்திற்கும் சென்னையில் ஒரு விருந்து; மேக்னாவிற்காக மும்பையில் ஒரு விருந்து என ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் சிறப்பாக நடந்தன. 

நாட்கள் வெகு விரைவாக ஓடி விடிந்தால் திருமணம் என்ற நிலையில், ஜஸ்வந்த் ரத்னாவை வீட்டு மொட்டை மாடிக்கு வருமாறு செய்தி அனுப்பினான். அனைவரும் உறங்கியபின் ரூபாவிடம் மட்டும் கூறிவிட்டு, தன் முகத்தை மறைத்தபடி ரத்னா மேலே வந்தாள்.

“ரதி பேபி, என்ன இது கொள்ளைக்காரி மாதிரி முகத்தை மூடிக்கிட்டு? உன் திருமுகம் காணத் திருடன் போல் கஷ்டப்பட்டு வந்த என்னை ஏமாற்றாதே பேபி.”

“சினிமா டயலாக் எல்லாம் பேச வேண்டாம். அண்ணாகிட்ட மாடி சாவி வாங்கிட்டுப் பின்பக்கம் வந்ததுல என்ன கஷ்டம்? நிச்சயத்துக்கு அப்புறம் கல்யாண மாப்பிள்ளையும் பொண்ணும் பார்த்துக்கிட்டா தோஷம் வந்துடுமாம்னு அத்தை சொன்னாங்க, அதான் இப்படி.”

“உனக்கு இந்த ஐடியா யாரு கொடுத்தாங்க?”

“உங்க அண்ணா தான், நாங்க தினம் போன்ல பேசுவோமே. நீங்க வந்தா முகத்தை மூடிக்கச் சொன்னாங்க.”

“அண்ணாவா? என்னைத் தவிர எல்லார்கிட்டயும் பேசுறார்.”

“ஆமாம் அவங்க தான் சொன்னாங்க, உங்களுக்கு விவரம் பத்தாதாம், நான்தான் விவரமா நடந்துக்கணுமாம். மாமா அத்தையை 2 மாசத்துல லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம், ஹர்ஷத் அத்தானுக்கு 2 வருஷம் ஆச்சாம். உங்களுக்கு மட்டும்தான் 10 வருஷம் ஆகியும் அப்பா அம்மா உதவி தேவைப்படுதாம்.”

“எனக்கு விவரம் பத்தாதா? நாளைக்கு இதே நேரம் எனக்கு எவ்வளவு விவரம் தெரியும்னு காட்டுறேன்.”

“காட்டும்போது பார்த்துக்கிறேன், இப்போ எதுக்கு வரச் சொன்னீங்க?”

“அஜீத்…” என பேச ஆரம்பித்த ஜஸ்வந்தை கையமர்த்தித் தடுத்தாள் ரத்னா. 

“ஜஸ்வந்த், நாளைல இருந்து நாம கணவன் மனைவி. நமக்கு நடுவுல யாரையும் வரவிட மாட்டேன். அது மாதிரி நட்புக்கும் ஒரு புனிதம் இருக்கு, எனக்கும் அஜீத்துக்கும் நடுவுல உங்களுக்குக் கூட இடம் கிடையாது. எனக்கு எப்ப பேசணும்னு தோணுதோ அப்போ பேசுவேன்.” என கூறும் போதே ரத்னா விழிகள் கலங்க ஆரம்பித்தது.

“உங்க நட்பைச் சேர்த்த பெருமை எனக்குக் கிடைக்கும்னு பார்த்தேன்.”

“உண்மையான நட்பை யாராலயும் பிரிக்க முடியாது, பிரியாத நட்பைச் சேர்க்கவும் முடியாது” எனப் பேசிய ரத்னாவின் இருபுறமும் கையால் சிறை செய்தான் ஜஸ்வந்த்.

“சரி விடு, ரொம்ப சீரியஸா பேச வேண்டாம். இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைப் பார்க்க வந்ததுக்கு ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடு, நான் கிளம்புறேன்.” 

‘முத்தம்’ என்றதும் ரத்னாவின் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தைத் தொடாமலே உணர்ந்த ஜஸ்வந்த், “உன்னை பேபின்னு கூப்பிட்டது தப்பா போச்சு, ஒரு முத்தம் கேட்டதுக்கே இப்படி நடுங்குற! என்னை நிமிர்ந்தாவது பாரு, நான் கிளம்பணும்.”

“மாட்டேன்” என்று ரத்னாவிற்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

காரணம் இல்லாது அஜீத் முகம் வேறு நினைவில் தோன்றி மறைய கலங்கும் கண்களை மறைத்து கொள்ளவே தலை நிமிர்த்த மறுத்தாள்.

தனக்கு வெகு அருகில் இருப்பவன் நாளை தன் கணவனாக போகின்றவன். அவனிடமிருந்து விலகாதே என்றும் அவனது அண்மை உனக்கு வேண்டாம் விலகு என்ற வேறுபட்ட உணர்வுடன் ரசவாதம் ரத்னாவினுள் நிகழ்வது இதுவே முதல் முறை. 

ரத்னா முகத்தை மறைத்திருந்தாலும் கண்களில் ஒரு நிமிடம் தோன்றிய உணர்வலைகள் ரத்னாவின் உள்ளத்தைக் காட்ட, தன் ஒரு கையால் ரத்னா முகத்தைப் பார்க்க நினைத்து நிமிர்த்தி, மறு கையால் முகத்தை மறைத்த துணியை விலக்கினான் ஜஸ்வந்த். 

தனது மன குழப்பத்தை காட்ட கூடது என்று அவனது முகத்தைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டாள் ரத்னா.

“ரதி பேபி, இப்போ உன் கண்ணுல எனக்காக வந்திருக்கிற இந்த ஒரு மயக்கம் இப்போ போதும், பட் நாளைக்கு இது போதாது. நல்லாத் தூங்கு, நாளைக்குத் தூங்க முடியாது, போ.”

அதன்பிறகு ரத்னா எப்படித் தன் அறைக்கு வந்தாள், எப்போது உறங்கினாள் என்று கேட்டால் அதற்கு அவளிடம் பதில் இல்லை. தனது கண்உளில் தோன்றிய உணர்வு அஜீத்காக என யாரிடமும் கூற முடியது அன்றைய இரவை கடந்தாள்.

விடிந்ததும், ஜஸ்வந்த் தன் அருகில் அழகுப் பதுமையாய் வந்து அமர்ந்த ரத்னாவை மூன்று முடிச்சிட்டுத் தன் ரதியாக மாற்றிக்கொண்டான். ரத்னாவே கண்கள் கலங்காது தடுக்க நினைத்தும் அவள் விழிநீர் தாலி கட்டியவன் கையில் பட்டு சிதறியது.

அதுவரை தன்னையும் தன் காதலையும் பிறர் அறியாமல் அடக்கிக்கொண்டிருந்த அஜீத், மணக்கோலத்தில் இருந்த ரத்னாவைப் பார்த்து, வாய்விட்டு கதறத் துடித்த இதயத்தை அடக்கிக்கொண்டு வெளியேறினான். விருந்து முடிந்து ரத்னா மாலை வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க, அஜீத் விமானத்தில் டெல்லி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top