அத்தியாயம் 12 (2)
அன்று இரவு அஜீத், ரத்னா, தங்கமுத்து ஆகிய மூவருக்கும் உறங்காத இரவாகிவிட, அடுத்த நாள் தீபாவளி மூவருக்கும் கலக்கம் நிறைந்ததாகவே விடிந்தது. மூவரும் கலக்கத்தை முகத்தில் காட்டாமல் இருக்க முயற்சி செய்ய, ரத்னா கன்னம் கன்றி இருப்பதே ஏதோ பிரச்சனை என்பதை காட்டிக்கொடுத்துவிடும் என்பதால், அதை மறைக்க அவளிடம் கிரீம் ஒன்றை அஜீத் தந்தான்.
“அத்தான், அண்ணா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.”
“ஓய், என்ன ஒரு அடி வாங்குனதுக்கே இப்படி மன்னிப்பு கேட்கிற? அடுத்த அடி வாங்குனா என்ன பண்ணுவ?”
“என்ன பண்ணுவேன்? நான் வாங்குனதை என் அத்தானுக்குக் கொடுத்துடுவேன்.”
“அம்மாடி! நீ செஞ்சாலும் செய்வ. ரத்னா ப்ளீஸ், உங்க அண்ணன் நேத்து உன்கிட்ட நடந்துகிட்டதை மறந்துடு.”
“எப்படி மறக்க முடியும்? தப்பே பண்ணாம எனக்கு எதுக்குத் தண்டனை தரணும்? ஒருவேளை நான் உங்களைக் காதலித்தாலும் அதுல என்ன தப்பு இருக்கு?”
“தப்பு இருக்கு”
“என்ன தப்பு?
“என்னோட அக்கா! அவ ஒருத்தி போதும். தேவையில்லாம உனக்கு இருக்க குட்டி மூளையை ரொம்ப கஷ்டப்படுத்தாதே. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்துருவாங்க. ரூமுக்குள்ளேயே இருக்காதே, அம்மா வேற நீ இன்னும் வெளியே வரலன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க, சீக்கிரம் வா.”
“சரி சரி நீங்க போங்க, நான் வரேன்.”
அதன் பிறகு அஜீத்தின் நண்பர்கள் அனைவரும் வந்த பின்பு தீபாவளி கொண்டாட்டத்தில் தங்களை மூழ்கடிக்க, அந்நேரம் ஸ்டெல்லாவின் தந்தை ராபர்ட் வர, அஜீத்தும் ரத்னாவும் அவரிடம் வந்து,
“நான் கூப்பிட்டதுக்காக எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் அங்கிள்” என்றனர். ரத்னா ஸ்டெல்லாவிடம் திரும்பி,
“என்ன ஸ்டெல்லா, எப்பவுமே உங்க அப்பா பிசினஸ் பிசினஸ்னு சுத்திக்கிட்டு இருக்கிறதா சொல்லுவ தானே? இன்னைக்கு முழுக்க உங்க அப்பா நம்ம கூட இருக்கப் போறாரு, என்ன உனக்கு ஓகேவா?” எனக் கேட்க, நடப்பது எதுவும் புரியாமல் ராபர்ட் அஜீத்தைப் பார்த்தார்.
“இன்னைக்கு முழுக்க நீங்க என் கூட இருக்கப் போறீங்களா அப்பா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” எனச் சந்தோஷத்தில் தந்தையைக் கட்டிக்கொள்ள, ரத்னா ஸ்டெல்லாவிடம்,
“உங்க அப்பா இன்னைக்கு இங்கதான் இருக்கப் போறாங்க, போதும் அப்பாவை விடு. அங்கிள் முதல்ல உட்காருங்க” என்றாள்.
ஸ்டெல்லாவின் தந்தையை அமர வைத்துவிட்டு அவருக்குக் காபி கொடுப்பது, இனிப்பு கொடுப்பது என அனைத்தையும் ஸ்டெல்லாவே செய்ய, ஸ்டெல்லா மகிழ்ச்சியாக இருந்ததைவிட, அவள் மகிழ்ந்த முகத்தைப் பார்த்து ராபர்ட் மகிழ்ந்ததே அதிகம்.
ராபர்ட் அஜீத்தின் வீட்டிற்கு வந்தது தொழில் ஒப்பந்தத்தைப் பேசி முடித்துக் கையொப்பமிட. கிருஷ்ணசந்திரன் இரண்டாவதாக ஆரம்பித்த சூப்பர் மார்க்கெட்டை நல்ல முறையில் கட்டிக் கொடுத்தது ராபர்ட் NSR construction.
அதே போல மீண்டும் ஒரு மூன்று அடுக்கு மாடியில் சூப்பர் மார்க்கெட்டோடு சேர்த்து வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்ய முடிவு செய்திருக்க, அதற்கான பொறுப்பையும் ராபர்ட்டிடமே கொடுக்க கிருஷ்ணசந்திரன் அவரை அழைத்திருந்தார்.
இதை அறிந்த அஜீத், சூழ்நிலையை ஸ்டெல்லாவிற்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தே, ரத்னாவின் மூலம் மாற்றிச் சொல்ல வைத்தான். கொண்டாட்டம் முடிந்து ரத்னாவிடமும் அஜீத்திடமும் ராபர்ட் நன்றி கூறி விடைபெற்றுச் செல்ல, நாள் முழுதும் ரத்னா தங்கமுத்துவிடம் எது பேசினாலும் ஓரிரு வார்த்தைகளில் மட்டும் பதில் கூறிவிட்டு விலகிச் சென்றாள். இதைக் கவனித்த அஜீத்,
“நீங்க உடனே போய் உங்க தங்கச்சிகிட்ட பேசாதீங்க. அவ கோபத்தில் இருக்கும்போது எதுவும் பேசவே மாட்டா. ரெண்டு நாள் போச்சுன்னா நடந்ததை அவளே மறந்துட்டு உன்கிட்ட வந்து பேசப் போறா. அப்படி அவ பேசாமல் இருந்தாலும் நான் உங்ககிட்ட பேச வைக்கிறேன்” என்றான்.
“இந்த உலகத்திலேயே என் தங்கச்சியப் பற்றி எனக்கு மட்டும் தான் ரொம்பத் தெரியும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அது தப்புன்னு இந்த ஒரு நாளில் நான் தெரிஞ்சுக்கிட்டேன். ரத்னா என்கிட்ட பேசாம இருக்கிறது தான் நான் பண்ண தப்புக்கு எனக்குக் கிடைக்கிற மிகப்பெரிய தண்டனை.”
“என்னதான் தண்டனை இருந்தாலும் அதுக்குன்னு ஒரு கால அளவு இருக்குதானே. தண்டனை காலம் முடிவதற்கு முன்னாடியே உங்களுக்குப் பொதுமன்னிப்பு வாங்கி கொடுத்துடுவோம், கவலைப்படாதீங்க.”
ஆர்த்தி அதன் பின்பு ரத்னாவையும் அஜீத்தையும் பற்றித் தவறான கருத்தைக் கூறினால் அதைக்கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிய தங்கமுத்து கோபத்தில் ஒரு நாள், “நீ சொல்றது எல்லாம் பொய் என்று எனக்கு நல்லா தெரியும். இருந்தும் இந்த குடும்பம் அமைதியாக இருக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதியா போய்க்கிட்டு இருக்கேன். இதுக்கு மேல ஏதாவது பண்ணுனா நான் சும்மா இருக்க மாட்டேன்” என எச்சரிக்க, எரிச்சலடைந்த ஆர்த்தி மனதுக்குள், ‘என் புருஷனையும் எனக்கு எதிரா திருப்பிட்டீங்களா? பார்த்துக்கலாம், உங்க ரெண்டு பேரையும் நான் சும்மா விடமாட்டேன்’ என வன்மம் கொண்டாள்.
அடுத்த வருடத்தில் ஆர்த்தி, ரூபா இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்க, ஜஸ்வந்த் தன் வேலையை முடித்துவிட்டு இந்தியா வர ஒரு வாரமே மீதம் இருந்தது.
ரத்னா அஜீத் இருவரும் தங்களின் இளங்கலைப் படிப்பை முடித்திருக்க, இரு வீட்டாரும் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் காத்திருக்க, அஜீத் தன் தந்தையிடம், “அப்பா என்னால உங்க விருப்பப்படி இஞ்சினியராவோ இல்லன்னா புரொபசராவோ ஆக முடியாது. நான் ஐஏஎஸ் படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆன்லைன் மூலமா டெல்லியில் இருக்க ஒரு அகாடமி சீட்டு கூட ஏற்பாடு பண்ணியிருக்கேன். நான் எடுத்த இந்த முடிவு உங்களுக்குக் கஷ்டமா இருக்கலாம், பட் என்னால என்னுடைய ட்ரீம்மை சேக்ரிஃபைஸ் பண்ணிக்க முடியல. டிகிரி முடிச்சுட்டு ஐஏஎஸ் ஆகலாம்னு நினைச்சேன், உங்க விருப்பப்படி பிஈ படிச்சதால ஒரு வருசம் லேட் ஆனாலும் ஐஏஎஸ் ஆகிடுவேன்” என்றான்.
“உன்னோட விருப்பம். நீ எது செஞ்சாலும் நல்லா பண்ணுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அஜீத், ரத்னா உன் வாழ்க்கையில் வந்தது உனக்கு மிகப்பெரிய கிஃப்ட் தான். அந்த கிஃப்ட் உன் வாழ்க்கை முழுக்க உன் கூடவே இருக்கணும்னு உன்னோட அம்மா ஆசைப்படுறா, நானும் தான்.”
“அப்பா நான்…”
“நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு நல்லா தெரியும். இப்போ நான் உன்கிட்ட இதைப் பற்றிப் பேச ஆரம்பிச்சா அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. ஆர்த்தி கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கும்போது உனக்கும் பார்த்தோம். அதுல 25 வயசில் உனக்குக் கல்யாணம் நடந்துச்சுன்னா நீ வாழ்க்கையில் ரொம்பப் பெரிய இடத்துல இருப்பேன்னு அந்த ஜோசியக்காரன் சொன்னாரு. உங்க அம்மா அளவுக்கு எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை, ஆனால் ரத்னா உன்கூட இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.”
“இல்லப்பா, எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை. ரத்னாவுக்கு வேலைக்கு போகணும்னு ஆசை, என்னோட சுயநலத்துக்காக ரத்னா ஆசையை என்னால அழிக்க முடியாது. ப்ளீஸ் பா, என் கல்யாணத்தைப் பத்தி இப்போப் பேச வேண்டாமே.”
மகன் சென்றதும் கிருஷ்ணன் தன் மனைவியிடம், “நான் இதைப் பற்றிப் பேச வேணாம்னு சொன்னேன், கேட்டியா?” என்றார்.
“அஜீத் இப்போதான் கல்யாணம் வேணாம்னு சொன்னான். எப்பவும் வேணாம்னு சொல்லல. அவன் வேணாம்னு சொன்னது கூட ரத்னாவுக்காகத்தான்.”
“சரி இப்போ என்ன பண்ண?”
“ஓகே, இப்போ கல்யாணம் வேண்டாம், மூணு நாலு வருஷம் போகட்டும். ஆனா இதைப் பற்றி நான் ரத்னா வீட்டுல பேசலாம். முடிச்சா நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம்.” என மைதிலி கூற,
“சரி உன் இஷ்டம். ரத்னா வீட்டில பேசலாம்.”
ரத்னா வீட்டில் அஜீத்திற்கு ரத்னாவைப் பெண் கேட்க, அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் மௌனம் காக்க, மைதிலி “ரத்னா படிப்பைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். படிப்பு முடிஞ்ச பின்ன கூடக் கல்யாணம் வச்சுக்கலாம்” என்றார்.
ரத்னாவின் தாத்தா “நாங்க அதுக்காக யோசிக்கலம்மா, ரத்னா முதல் வருஷம் படிக்கும் போதே ஒரு சம்பந்தம் வந்துச்சு, பையன் வேற யாரும் இல்ல ரூபா கொழுந்தன் தான். இப்போ ஒரு மாசமா பார்வதி அக்கா சம்பந்த வழியில் இருந்தும் ரத்னாவைக் கேட்டாங்க. நாங்க கலந்து பேசிட்டு இந்த வாரத்தில் சொல்லுறோம்” என்றார்.
வீட்டில் நடந்த அனைத்தையும் ரத்னாவிடம் கூறிய தங்கமுத்து, “கொஞ்ச நாளுக்கு முன்ன என்கிட்ட இதைப் பற்றி கேட்ட ஜஸ்வந்த் தான் என்னோட முடிவா இருந்திருக்கும். பட் இப்போ உன் முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே மா” என்றார்.
படிப்பு முடிந்ததும் திருமணத்தை ஓரளவு எதிர்பார்த்த ரத்னாவால் ஏனோ எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. படிப்பு முடிந்ததற்கான சான்றிதழ் வாங்கச் சென்றபோது அஜீத் ரத்னாவிடம் “ரத்னா, எதுக்காக இப்படி மூஞ்சை உம்முனு வச்சுருக்க?” எனக் கேட்டான்.
“ஏன்னு உங்களுக்குத் தெரியாதா? தெரிஞ்சுகிட்டே இப்படிக் கேட்டா நான் என்ன பண்ண?”
“நான் உன்னோட ஃப்ரெண்டா இதுல ஒரு கருத்து சொன்னா உனக்கு ஓகேவா?”
“ம்ம் சொல்லுங்க சொல்லுங்க.”
“என்னை கேட்டா ஜஸ்வந்த் தான் உனக்கு ரைட் சாய்ஸ்.”
“அத்தான்!”
“ஏய் இரு இரு, நான் உன்ன பிடிக்காம தள்ளிவிட நினைக்கல. தெரியாத ஒருத்தரை விடத் தெரிஞ்சவங்களிடம் லைஃப் நல்லா இருக்கும். சோ, அந்த லிஸ்ட்ல இருக்கிறதுல நானும், ஜஸ்வந்தும் தான் உன்னைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கவங்க.”
“இந்த நாழு வருஷத்துல நீ நிறைய விஷயத்துல, டிரஸ்ல இருந்து எல்லாம் என்னைக் கேட்டு மட்டும்தான் முடிவு எடுப்ப. சில சமயம் நான் உனக்கு பிடிக்காததை சொன்னா கூட நீ செய்வ. நான் உன் வாழ்க்கையில் வந்தா நீ யோசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது என்கிட்ட நீ எப்போதுமே அஜீத்தா தான் இருப்ப. ஆனா ஜஸ்வந்த் கிட்ட நீ ‘நீயா’ தான் இருப்ப.
இது ஜஸ்வந்த் நம்பர், அவர்கிட்ட பேசிப் பாரு. இந்த பாடிகார்டு இல்லாம! அவர் மனசுல என்ன இருக்குங்கிறதை நான் அவர்கிட்ட பேசிப் புரிஞ்சுக்கிட்டேன். அதை நான் சொல்றதை விட நீ கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாதான் சரியா வரும்” எனக் கூறிவிட்டு அஜீத் செல்ல, ரத்னா தான் கையில் இருந்த போன் நம்பரையும் அஜீத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தனக்காகக் காத்திருக்கும் டிரைவருடன் தன் ஊர் நோக்கி அஜீத் கூறியதை நினைத்த வண்ணம் பயணித்தாள்.