அத்தியாயம் 33
டைனிங் மேசையில் அமர்ந்து பேருக்கு உணவை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள் பிருந்தா.
மனதில் உள்ள கசப்பு இப்போது உணவின் சுவையையே உணர விடாமல் செய்திருந்தது.
இருந்தாலும், கீதாவின் வற்புறுத்தலுக்காகவே அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
கீதாவுக்கோ மகளின் நிலையை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
நேற்றிலிருந்து அவள் ஒழுங்காக சாப்பிடவே இல்லை.
அழுது அழுது கண்களும் வீங்கி போயிருந்தது.
இப்படியே போனால் அவள் உடல் என்ன ஆகும்?
ஒரு தாயாக அவர் மனம் பதறித்தான் போனது.
“இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா…” என்று மெதுவாக கூறியவர், அவளது தட்டில் சிறிது உணவை எடுத்து வைத்தார்.
பிருந்தாவோ மறுப்பாக தலையசைத்தவள், “போதும்மா… எனக்கு வேணாம்…” என்றாள் சோர்வான குரலில்.
“இப்படி சாப்பிடாம இருந்தா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? நடந்ததை மாத்த முடியாது பிருந்தா. முதல்ல உன் உடம்பை பார்த்துக்கோ…” என்று கீதா கவலையுடன் கூற,
அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் பிருந்தா.
இரவு பத்து மணியை தாண்டி இருக்க, எப்போதும் எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்து விடும் கணவர் இன்று பத்து மணியாகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருக்கவும், கீதாவுக்கோ பதட்டம் அதிகரித்து கொண்டே போனது.
அவர் கண்களோ இடையிடையே கடிகார முள்ளை நோக்கிய படி இருக்க, அன்னையின் மடியில் தலை சாய்ந்து படுத்திருந்த பிருந்தாவோ, “ம்மா…. அப்பா ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?” என்று மெல்லிய குரலில் கேட்க,
கீதாவோ, “தெரிலடி… ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும்” என்று கூறினாலும் அவருக்கு நன்றாக தெரியும் அப்படி ஏதாவது வேலையாக இருந்திருந்தால் கணவன் நிச்சயம் தனக்கு அழைத்து விடயத்தை கூறி இருப்பார் என்று.
இதற்கு முன்னர் பல முறை அவ்வாறு அழைத்து சொன்னது உண்டு.
ஆனால் இன்று இவ்வளவு நேரமாகியும் அவர் அழைக்கவும் இல்லை, கீதா பல முறை அழைத்தும் அதை ஏற்கவுமில்லை.
அது தான் கீதாவுக்கு இன்னுமே பயத்தை வரவழைத்தது.
பிருந்தாவோ, “ம்மா…” என்று அழைக்க, அவரும் “என்னடி?” என்றார்.
அவளோ மெதுவாக எழுந்து அமர்ந்தவள், அவரின் கைகளை பற்றிய படி, “உ… உங்களுக்கு என் மேல கோபம் இல்லையாம்மா?” என்று தழு தழுத்த குரலில் வினவ,
கீதாவோ, “என்னடி பேசிட்டு இருக்க? நீ என் பொண்ணு….. முதல்ல உன் மேல கோபம் வந்தது உண்மை தான். இவ்ளோ விஷயம் நடந்தும் என் கிட்ட எல்லாத்தையும் மறச்சிட்டியேன்னு. ஆனா உன் இடத்துல இருந்து பார்க்கும் போது என்னால புரிஞ்சிக்க முடியுது பிருந்தா.” என்று மகளின் தலையை வருடிய படி ஆறுதலாக சொல்ல, பிருந்தாவும் பாய்ந்து அன்னையை அணைத்து கொண்டாள்.
“தேங்ஸ்ம்மா…” என அவள் கண்களில் கண்ணீர் வழிய கூற, கீதாவும் அவள் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்த படியே, “கவலை படாதடி. எல்லாம் கூடிய சீக்கிரமே சரியாகிடும். அம்மா இருக்கேன்” என்று மகளை மாறி அணைத்து கொண்டார்.
இவ்வாறு அரை மணித்தியாலம் கடந்திருக்க, வெளியில் கார் வரும் சத்தம் கேட்டது.
அதில் திடுக்கிட்டு போய் இருவரும் வாசலை பார்க்க, அடுத்த சில நொடிகளில் சடால் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் குணசேகர்.
அவரோ அங்கே சோபாவில் அமர்ந்திருந்த தன் மகளையோ, மனைவியையோ துளியும் கண்டுகொள்ளாமல் விறு விறு வென தன் அறைக்குள் நுழைந்தவர், கதவை அடித்து சாத்தி இருந்தார்.
அவர் முகத்தில் இருந்த இறுக்கத்தையும், கோபத்தையும் பார்த்த கீதாவுக்கே உள்ளுக்குள் சற்று பயமாக இருந்தது.
பிருந்தாவிடம் திரும்பியவர், “நீ எதை பத்தியும் யோசிக்காம போய் தூங்கு” என்று கூறி அவளை அறைக்கு அனுப்பி வைத்தவர், தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
உடையை மாற்றி விட்டு நேராக வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்த குணசேகரோ, தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடிக் கொண்டார்.
அவரது முகத்தில் தெரிந்த சோர்வும் வேதனையும், கீதாவின் மனதை கனக்க செய்தது.
சில நொடிகள் தயங்கியவர், மெதுவாக அவரின் அருகே சென்று அமர்ந்தார்.
“என்னங்க…” என்று மெல்ல அழைக்க, குணசேகரோ கண்களை திறக்காமல்,
“ம்…” என்றார்.
கீதாவும் சற்று தயங்கிய படி, “ஏன் ஹாஸ்பிடல்ல இருந்து வரதுக்கு இவ்ளோ நேரம்? போன் பண்ணாலும் எடுக்கல. நான் ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்று கூற,
அவரோ கண்களை திறக்காமல், “கொஞ்சம் வேலை” என்றார்.
கீதாவோ “ம்ம்ம்” என்றவர், “சாப்பிட வாங்க. இப்போவே ரொம்ப லேட் ஆயிடுச்சு” என்று சொல்ல,
“எனக்கு எதுவும் வேணாம் கீதா.” என்றார் சற்றே எரிச்சல் கலந்த குரலில்.
கீதாவும் அதன் பிறகு எதுவும் பேசாமல் மெளனமாகி விட, சில நிமிடங்கள் அமைதியாக இருந்த குணசேகரோ,
மெதுவாக கண்களை திறந்து, ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை விட்டவர், “இன்னக்கி அந்த சிம்மன் கிட்ட நான் பேசினேன் கீதா” என்றார்.
அவரின் மனையாளோ சட்டென கணவரை ஏறிட்டு பார்த்தவர், “அந்த பையன் என்ன சொன்னாங்க?” என்று சற்று பதட்டமாக கேட்க,
அவரோ ஒரு கசப்பான புன்னகையை சிந்திய படி, “என்ன சொல்ல போறான்! திமிரா என் முன்னாடியே நின்னு பிருந்தா என் பொண்டாட்டின்னு சொல்லி உரிமை கொண்டாடுறான். ராஸ்கல்.” என்றார்.
கீதாவோ பெரு மூச்சு ஒன்றை வெளி விட்ட படி, “என்ன இருந்தாலும் இப்போ அதானேங்க உண்மை.” என்று மெதுவாக சொல்ல,
அதை கேட்ட குணசேகருக்கோ சுர்ரென்று இருந்தது.
“என்னடி பேசிட்டு இருக்க? தாலி கட்டிட்டா உரிமை வந்துடுமா? அவன் அவளோட சம்மதம் இல்லாம இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கான்டி” என்று கோபமாக கத்த,
கீதாவோ, “என்னங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க…” என்று சொன்னவர்,
“ஆமா… அவளோட விருப்பம் இல்லாம தான் அந்த பையன் அவ கழுத்துல தாலிய கட்டி இருக்கான். ஆனா நம்ம பொண்ணு அதை இன்னும் தூக்கி எறியலயே! … அதை யோசிச்சிங்களா?” என்று கேட்க,
குணசேகரோ குழப்பத்துடன் மனைவியை பார்த்தார்.
கீதாவோ, “ஏன்னா… அவளும் அந்த பையனை தான்ங்க விரும்புறா. நம்ம அப்பாவோட மானம் போயிட கூடாது. அவர் அவமான படக்கூடாதுன்னு தான் தன்னோட மனசுல இருக்க காதலை மறச்சிட்டு நீங்க பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணியிருக்கா. ஆனா எப்போ அவன் கட்டின தாலி அவ கழுத்துல ஏறிச்சோ அப்போவே அவ மனசளவுல அவனை தன் புருஷனா ஏத்துக்கிட்டாங்க. எந்த பொண்ணும் விருப்பம் இல்லாம கழுத்துல தாலியை கட்டிட்டு இருக்க மாட்டா” என்று அழுத்தமாக கூற,
“அப்போ அவன் பண்ண தப்பெல்லாம் மன்னிச்சிட்டு அவனையே என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு சொல்லுறியா?” என்று வெடுக்கென அவர் கேட்டார்.
கீதாவும் கணவரை அழுத்தமாக பார்த்து, “ஆமாங்க… எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம். அந்த பையன் கூட இருந்தா தான் அவ சந்தோஷமா இருப்பான்னா அவங்களை சேர்த்து வைக்கிறது தான் சரின்னு எனக்கு தோணுது.” என்று ஏற்கனவே தான் முடிவெடுத்ததை கூறி விட,
குணசேகருக்கோ மனைவியின் பேச்சில் கோபம் தான் வந்தது.
“ஏய் என்னடி பைத்தியக்காரி மாதிரி பேசிட்டு இருக்க? எனக்கு மட்டும் என்ன என் பொண்ணோட சந்தோஷம் முக்கியம் இல்லன்னு நினைக்கிறியா? அவ விரும்பினவன் நல்லவனா இருந்திருந்தா நானே முன்னாடி நின்னு அவளுக்கு அவனை கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன்டி.” என்று எரிச்சலாக சொல்ல,
கீதாவோ கணவரை குழப்பதுடன் பார்த்தார்.
குணசேகரோ, “அந்த சிம்மனை பத்தி உனக்கு என்னடி தெரியும்? இதுக்கு முன்னாடி அவன் பல பொண்ணுங்க கூட எப்படி பட்ட உறவுல இருந்து இருக்கான்னு தெரியுமா?” என்று கேட்டவர் மனைவியிடம் சிம்மனின் குணத்தை பற்றியும் அவன் இன்று தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றியும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க,
அதை கேட்ட கீதாவோ அதிர்ந்து போனார்.
“எ… என்னங்க சொல்லுறீங்க? அந்தப் பையன் அப்படிப்பட்டவனா?” என்று தழு தழுத்த குரலில் சொன்னார்.
ஏதோ மகள் மீது உள்ள காதலில் அப்படி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டானே தவிர மற்ற படி அவன் இவ்வளவு மோசமான குணம் கொண்டவனாக இருப்பான் என்று கீதா நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ஆனால் இப்போது பார்க்கும் போது தானே தெரிகிறது அவன் தன்னுடைய மகளுக்கு முன்னரே பல பெண்களோடு எப்படி பட்ட உறவில் இருந்து இருக்கிறான் என்று.
குணசேகரோ, “சரியான திமிரு பிடுச்சவன்டி அவன். இவ்ளோத்தையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட பயப்படாம எப்படி திமிரா நடந்துகிட்டான் தெரியுமா! போலீஸ்க்கு போனா நம்ம பொண்ணு மானம் தான் போகும்னு என் கிட்டயே சொல்லுறான்டி அந்த புறம் போக்கு. இவனுக்கு போய் என் பொண்ண எப்படிடி கட்டி கொடுப்பேன்?” என்று பல்லைக் கடித்து கொண்டு கேட்க,
இதை எல்லாம் மாடியில் நின்று சுவற்றில் சாய்ந்த படி கேட்டுக் கொண்டிருந்தாள் பிருந்தா.
ஆம். அவள் அறைக்கு செல்லவே இல்லை. இவ்வளவு நேரமும் அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.
அனைத்தையும் கேட்டவளுக்கோ கண்கள் குளமாகிப் போனது.
சிம்மன் இவ்வளவு மோசமாக தந்தையிடம் நடந்து கொள்ளுவான் என்று அவள் துளியும் எதிர் பார்க்கவில்லையே!
அதுவும் தன்னை வைத்தே மிரட்டி பேசி இருக்கிறானா?
இவனுக்கு நிஜமாகவே தன் மீது காதல் இருக்கிறதா இல்லை தன்னை அடைய வேண்டும் என்ற பிடிவாதம் அவனை இந்த அளவுக்கு மோசமாக பேச வைக்கிறதா?
அவளுக்கே தெரியவில்லை!
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் விறுவிறுவெனத் தன் அறைக்குள் சென்றவள், கதவை உள்பக்கமாகத் தாழிட்டாள்.
இப்போதே சிம்மனுக்கு அழைத்து நான்கு நறுக்கென்று கேட்க வேண்டும் போல தோன்றியது.
‘பொறுக்கி எவ்ளோ மோசமா என்னை வச்சே எங்கப்பாவை மிரட்டி இருக்கான்.’ என மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தாள்.
இதுவரை சிம்மன் செய்த எல்லா தவறுகளுக்கும் தன் மீது உள்ள காதலால் தான் அப்படி செய்து விட்டான் என்று ஒரு காரணத்தை தேடி அவனை நியாயப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் இதை அவளால் அப்படி பார்க்க முடியவில்லை.
ஒரு பக்கம் தன்னுடைய தந்தையிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறான். இன்னொரு பக்கம் தன்னை வைத்தே அவரை மிரட்டி இருக்கிறான். அதுவும் காதலித்த பெண் என்று கூட பார்க்காமல் எப்படி பட்ட வார்த்தைகளை எல்லாம் கூறி இருக்கிறான்.
நினைக்க நினைக்க அவன் மீது கொலை வெறி தான் வந்தது.
அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் மேசையில் இருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்தவள், நொடியும் தாமதிக்காது சிம்மனுக்கு அழைத்தாள்.
அந்த இரவு நேர களியாட்ட விடுதியில் அமர்ந்து மதுவை அருந்தி கொண்டிருந்தான் சிம்ம விஷ்ணு.
சுற்றிலும் இரைச்சலான இசை, ஆட்டம் பாட்டம் என அந்த இடமே போதையில் மிதந்து கொண்டிருக்க, அதையெல்லாம் சட்டை செய்யாமல் தனது கையில் இருந்த மதுக் கோப்பையை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
காலையில் குணசேகரிடம் அவ்வாறு பேசிவிட்டு வந்ததில் அவனுக்கு எவ்வித குற்ற உணர்ச்சியோ, சிறு வருத்தமோ இருப்பதாக தெரியவில்லை.
அவனது அகராதியில் யாரை எப்படி கையாள வேண்டுமோ அப்படித் தான் கையாளுவான். அவர் பிருந்தாவின் தந்தையாகவே இருந்தாலும், அவனது வழியில் குறுக்கே வந்தால் அவன் எதற்காகவும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டான்.
தன்னை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுப்பது தான் அவனுடைய குணமே!
அதனால் தான் குணசேகரிடமும் நடக்க கூடிய உண்மையை அவரின் முகத்துக்கு நேராகவே சொல்லி இருந்தான்.
ஆனால், நிதர்சனத்தை புரிய வைக்க அவன் பயன்படுத்திய வார்த்தைகளே அவனை காதலிக்கும் அந்த சிறிய பெண்ணின் மனதை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை அந்நொடி அவன் உணரவில்லை.
நேரம் நள்ளிரவு 12 மணியை தொட்டிருக்க, மேசையில் இருந்த அவனின் அலைபேசி அலறியது.
சிம்மனோ சற்று எரிச்சலாக அலைபேசியை எடுத்துப் பார்க்க, திரையில் ‘பிருந்தா’ என்ற பெயர் ஒளிர்ந்தது.
அத்தனை நேரம் அவனது முகத்தில் இருந்த எரிச்சலும், இறுக்கமும் நொடியில் காணாமல் போக, அவனையறியாமலே ஒரு மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் வந்து குடி கொண்டது.
கையில் இருந்த மதுக் குவளையை அப்படியே மேசையில் வைத்தவன், அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு அந்த இரைச்சலான சூழலை விட்டு வெளியே சென்றான்.
களியாட்ட விடுதியின் கண்ணாடிக் கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்தவனை, அந்த நள்ளிரவின் குளிர்ந்த காற்று மெதுவாகத் தீண்டியது.
காற்றில் கலைந்த தனது கேசத்தை ஒரு கையால் கோதியபடி, அழைப்பை ஏற்றவனின் காதில் முதலில் விழுந்தது பெண்ணவளின் கோபமான மூச்சுக்காற்று தான்.
அதில் சற்றே புருவம் சுருக்கியவன், “சொல்லு பேபி. இந்த டைம்ல கால் பண்ணி இருக்க? உன் புருஷனை ரொம்ப மிஸ் பண்ணியோ!” என்று ஒரு வித நக்கல் கலந்த குரலில் கேட்க,
அவ்வளவு தான்.
அவனது அந்த அலட்சியமான பேச்சிலேயே பிருந்தாவுக்குள் இருந்த கோபம் பல மடங்கு அதிகரித்தது.
“நீங்க எல்லாம் மனுஷனா? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? எங்க அப்பா கிட்ட போய் எவ்ளோ மோசமா பேசி இருக்கீங்க?” என்று வெடித்து சிதறினாள் பெண்ணவள்.
அவளது கோபமான வார்த்தைகளே, இந்த நள்ளிரவில் அவள் எதற்காக அழைத்திருக்கிறாள் என்பதை சிம்மனுக்கு தெளிவாக உணர்த்தியது.
ஆனாலும் அதை கண்டு கொள்ளாதவன், “என்னடி? மிட் நைட்ல புருஷன் கூட ரொமான்ஸ் பண்ண கால் பண்ணணு பார்த்தா, எடுத்த உடனே இப்படி கத்துறியே!” என்று இதழோரம் அரும்பிய குறுநகை மாறாமல் அவன் கேட்க,
இவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. அவன் காதல் வார்த்தைகளை ரசிக்கும் நிலையிலா அந்த பெண் இருக்கிறாள்.
“விளையாடாதீங்க சிம்மா… நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்” என்று பல்லை கடித்த கொண்டு சொன்னவள்,
“எதுக்கு?… எதுக்காக என் அப்பா கிட்ட அப்படி பேசினீங்க? உங்களை காப்பாத்திக்க கடைசில என்னையே யூஸ் பண்ணிட்டீங்கல்ல?” என்று அழுகை தொண்டையை அடைக்க, தழு தழுத்த குரலில் கேட்டாள் பிருந்தா.
அதில் அவனுடைய புருவங்கள் சற்று சுருங்க, இதழ்களில் அரும்பிய நக்கல் புன்னகை கொஞ்ச கொஞ்சமாக மறைந்தது.
“பேபி… நான் உன்ன யூஸ் பண்ணிக்கிட்டேனா?” என்றவன் குரல் இப்போது சற்று அழுத்தமாக ஒலித்தது.
பெண்ணவளோ, “அப்போ நீங்க பேசினதுக்கு என்ன அர்த்தம்? என் அப்பா கிட்டயே போலீஸ்க்கு போனா உங்க பொண்ணோட மானம் தான் போகும்னு சொல்லி அவரை மிரட்டல?” என்று சற்றும் கோபம் குறையாமல் கேட்க,
சிம்மனோ ஒரு கணம் விழிகளை மூடித் திறந்தவன், “நான் யாரையும் மிரட்டல பேபி. அதுக்கான அவசியமும் எனக்கு இல்ல. அவர் என்னை ஜெயில்ல தள்ளுறதுல மட்டும் தான் குறியா இருந்தாரு. ஆனா அந்த முடிவுக்குப் அப்புறம் அவர் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிக்கவே இல்லை. நான் அதை அவருக்கு ஞாபகப்படுத்தினேன். அவ்ளோ தான்” என்றான் சற்றும் உறுதி மாறாத குரலில்.
அதை கேட்டவளோ கசப்பான ஒரு புன்னகையை உதிர்த்த படி, “நியாபகப்படுத்துனீங்களா? இல்லை போலீஸ்க்கு பயந்து என் பேரை சொல்லி தப்பிச்சுகிட்டீங்களா?” என்று குத்தலாக கேட்க,
அவள் கேள்வியில் அவனின் புருவங்கள் சற்றே உயர, இதழ்களில் ஒரு வித ஏளன புன்னகை தவழ்ந்தது.
“பேபி…. நான் போலீஸ்க்கு பயந்திருந்தா உன் வாழ்க்கைக்குள்ள இவ்வளவு தூரம் வந்திருக்கவும் மாட்டேன். உன் கழுத்துல தாலியும் கட்டி இருக்க மாட்டேன்டி. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கப்புறம் இந்த மாதிரி ப்ராப்ளம் எல்லாம் வரும்னு எனக்கு முன்னாடியே தெரியாதா என்ன?” என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவன் கேட்க,
அதில் இருக்கும் கசப்பான உண்மையை உணர்ந்து கொண்ட பாவையவளால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.
அவளுக்கே அது நிஜம் என்று தெரியும் தானே!
அவன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கு பின்னாலும் எவ்வளவு பிரச்சனைகள் வரப் போகிறது என்று அவன் அறியாமலா அவளை திருமணம் செய்திருக்க போகிறான்?
இவ்வளவு யோசிப்பவன் இதை பற்றி யோசிக்காமலா இருந்திருப்பான்.
ஆனாலும் அவளால் அவன் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளுடைய பார்வையில் அவன் தன்னை வைத்தே தந்தையை மிரட்டி இருக்கிறான் என்ற எண்ணமே இன்னும் அவளின் எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருக்க,
“அப்போ எதுக்காக என்னை யூஸ் பண்ணி என்னோட அப்பாவை மிரட்டினீங்க?” என்று கோபத்தை அடக்க முடியாமல் மீண்டும் அவன் மீது குற்றம் சாட்ட,
சுவற்றில் சாய்ந்து நின்று விழிகளை ஒரு கணம் மூடித் திறந்தவன், “ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லுறதுனால அது உண்மையாகிடாது பேபி. நான் உன்னை யூஸ் பண்ணவும் இல்லை. உன் அப்பாவை மிரட்டவும் இல்லை. ரியாலிட்டியை அவர் முகத்துக்கு நேரா சொன்னேன்டி. அது உனக்கு மிரட்டல் மாதிரி தெரிஞ்சா என்னால எதுவும் பண்ண முடியாது” என்று சற்று கர கரப்பான குரலில் சொன்னான்.
ஆனால் ஏற்கனவே அவனால் நொந்து போயிருந்தவள், அவன் இப்படி பேசவும் மேலும் உடைந்து போனவளாய்,
கையில் உள்ள அலைபேசியை இறுக்கி பற்றியவள், “ஓஹ்… ரியாலிட்டிய இப்படி தான் சொல்லுவாங்களா? எந்த இளிச்சவாய் உங்க பொண்ண கட்டிப்பான்னு கேட்டு இருக்கீங்க? லவ் பண்ணுற பொண்ணையே இப்படி பேசுறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்தது சிம்மா? மத்தவங்க என்ன பேசினாலும் நான் கவலை பட போறது இல்லை. ஆனா நீங்க இந்த மாதிரி பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. இதை கேட்கும் போது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்றவளால் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை இனியும் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள்.
சிம்மனுக்கோ அவள் அழுகை சத்தம் அலைபேசியின் வழியாக அவனின் செவிகளில் விழ, அடுத்த கணம் அவன் முகமோ மாறியது.
அவன் புருவங்கள் இரண்டும் சுருங்க, “பெ… பேபி…” என்றவன் குரலோ இவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் தளர்ந்து ஒரு வித பதற்றத்துடன் ஒலித்தது.
அவள் கோபமாக திட்டினாலும், வெறுத்து பேசினாலும்… ஏன் அவனை தவறாக புரிந்து கொண்டாலும் கூட, அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் அவள் உடைந்து போய் இப்படி அழுவதை மட்டும் அவனால் சத்தியமாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதுவும் தன்னுடைய வார்த்தைகள் அவளை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லையே!
“பேபி… டோன்ட் க்ரை…”
என்று அவனையும் மீறி அவளை சமாதானம் செய்ய முயல, பெண்ணவளோ, “போதும் சிம்மா…. இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க. என்னை லவ் பண்ணுற பையனே என்னை இவ்ளோ சீப்பா பேசுவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. ஐ ஹேட் யூ… ஐ ஹேட் யூ சோ மச்” என்றவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல், விம்மல்களுக்கு நடுவே சட்டென அழைப்பை துண்டித்து விட்டாள்.
அதை உணர்ந்து கொண்டவனோ, “ச்சே” என்று பற்களைக் கடித்தபடி அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்தி இருந்தான்.
****
அடுத்த நாள்.…
குணசேகரோ சோபாவில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கி இருக்க, அதே வேளை சமையலறையில் இருந்து வந்த கீதாவோ, “என்னங்க இன்னும் காபிய குடிக்கலையா?” என்று கேட்டார்.
மனைவியின் குரலில் சட்டென நடைமுறைக்கு வந்தவர், “ஹாங்… குடிக்கிறேன்” என்ற படி மேசையில் வைத்திருந்த காபியை எடுத்து பேருக்காக ஒரு மிடர் பருக,
அவர் அருகில் வந்து அமர்ந்த கீதாவோ,
சற்று தயங்கிய படி, “என்னங்க… நேத்து நைட் முழுக்க நீங்க தூங்கவே இல்ல. இப்பவும் எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க.? என்ன விஷயம்?” என்று மெதுவாகக் கேட்டார்.
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளி விட்ட குணசேகரோ, “எல்லாம் நம்ம பொண்ணோட கல்யாணத்தை பத்தி தான் கீதா…. இதுக்கு மேல அதை நடத்துறது சரின்னு எனக்கு தோணல.” என்று கூற,
கீதாவோ சட்டென கணவரை நிமிர்ந்து பார்த்தவர், “எ… என்ன..” என்று இழுக்க,
குணசேகரோ தொண்டையை செருமிய படி, “இன்னக்கே சம்மந்தி வீட்டுக்கு போயி இந்த கல்யாணத்தை நிறுத்துறது பத்தி பேசலாம்னு இருக்கேன்” என்று கூறவும், மாடியில் இருந்து பிருந்தா கீழே இறங்கி வரவும் நேரம் சரியாக இருந்தது.
தந்தையின் கூற்றில் பெண்ணவள் கால்கள் அதே இடத்தில் நின்று விட, கீதாவோ கணவரை சற்று அதிர்ந்து போய் பார்த்தார்.
இதை பற்றி ஏற்கனவே பேச வேண்டும் என்ற முடிவில் தான் கீதாவுமே இருந்தார்.
ஆம்…
திருமணமான பெண்ணை இன்னோருவனுக்கு அவரால் எப்படி மீண்டும் திருமணம் செய்து கொடுக்க முடியும்?
அதுவும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். மகளின் காதலை புரிந்து கொண்ட தாயாக அவர்களை சேர்த்து வைப்பதை பற்றி மட்டும் தான் எண்ணிக் கொண்டு இருந்தார்.
அதனால் தான் இதை கணவரிடம் சொல்ல வேண்டி நேற்றே அவரிடம் அதை பற்றி பேசினார்.
ஆனால் நேற்று அவர் சிம்மனை பற்றி கூறியதில் இருந்தே கீதாவுக்கு தெளிவாக ஒன்று மட்டும் புரிந்தது. சிம்மனை தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க கணவருக்கு துளியும் விருப்பம் இல்லை என்று. எது எப்படி இருந்தாலும் இப்போது மகள் இருக்கும் நிலைமையில் அவனை வேறொருவனுக்கு திருமணம் செய்து கொடுக்கவும் முடியாதே!
அது அவளின் வாழ்க்கையை மேலும் சிக்கலில் மட்டும் தான் கொண்டு போய் விடும். அதனால் அந்த திருமணத்தை நிறுத்துவதை பற்றி கூடிய சீக்கிரமே கணவரிடம் பேச வேண்டும் என்று தான் எண்ணி இருந்தார்.
ஆனால், ஒரு தாயாக அவர் மகளின் விருப்பதையும், உணர்வுகளையும் பற்றி எந்த அளவுக்கு யோசித்தாரோ, அதே அளவுக்கு தான் ஒரு தந்தையாக குணசேகரும் தன்னுடைய மகளின் வாழ்க்கையையும், அவளின் சந்தோஷத்தை பற்றியும் யோசித்தார்.
அவள் தவறு செய்து விட்டாள் தான். அந்த கோபம் இன்னுமே அவருக்கு இருக்கிறது உண்மை.
ஆனால் அதற்காக அவளை இப்படி பிடிக்காத ஒரு திருமண பந்தத்துக்குள் நுழைக்கும் எண்ணம் எல்லாம் அவருக்கு துளியும் இல்லை.
ஏற்கனவே ஒருவனால் மகளுடைய வாழ்க்கை இந்த நிலைக்கு மாறி விட்டது.
அதனாலேயே இப்போதைக்கு அவளின் திருமணத்தை விட, அவளின் மன நிலையை மாற்றுவதே அவருக்கு முக்கியமாகப் பட்டது.
அதுவும் இல்லாமல் நடந்த அனைத்தையும் விஷ்வஜித்தின் குடும்பத்திடம் மறைத்து விட்டு மகளை திருமணம் செய்து கொடுக்க அவரின் மனசாட்சியும் இடம் கொடுக்காது.
அப்படி செய்தால் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் தான் நரகமாகி விடும்.
எப்போதும் மகளின் சந்தோஷத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நடந்து கொள்ளும் அவர் இப்போதும் அவளின் எதிர்காலத்தையும், நிம்மதியையும் மட்டும் தான் கருத்தில் கொண்டார்.
அதை தாண்டி இந்த திருமணம் நின்றால் அதனால் அவருக்கு வரும் அவமானங்களை பற்றியோ, மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை பற்றியோ அவர் துளியும் பொருட்படுத்தவில்லை.
கீதாவும் கணவரின் முடிவை ஆமோதித்த படி, “ஆனா அவங்க கிட்ட என்னங்க சொல்ல போறீங்க? இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சிட்டு இப்போ திடீர்னு கல்யாணத்தை நிறுத்திடலாம்னா அவங்க என்ன நினைப்பாங்க?” என்று வருத்தமாக கேட்க,
குணசேகரோ விரக்தியான குரலில், “எனக்கு அவங்க என்ன நினைச்சாலும் அதை பத்தி கவலை இல்லை கீதா. இப்போதைக்கு என் பொண்ணுக்கு எது சரியோ அதை தான் பண்ணுறேன்” என்றவர் அங்கிருந்து எழுந்து அறைக்கு சென்று விட,
அவர் பேசியதை எல்லாம் கேட்ட பிருந்தாவுக்கோ கண்கள் கலங்கிப் போனது.
தான் இவ்வளவு தவறு செய்தும் தன்னுடைய பெற்றோர்கள் இப்போது கூட அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் யோசிக்கிறார்கள்.
திருமணம் என்பது சாதாரண விடயம் அல்ல.
அதுவும் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து இன்னும் இரு வாரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தினால் எத்தனை கேள்விகள், எவ்வளவு அவமானங்களை சந்திக்க வேண்டி வரும் என்று தெரிந்தும் மகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்று எண்ணி அந்த முடிவை எடுக்கத் தயங்கவில்லை அவர்கள்.
ஆனால் தன்னை காதலித்தவன் மட்டும் ஏன் தன்னுடைய உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் இவ்வளவு பிடிவாதமாக நடந்து கொள்ளுகிறான்.
ஒரு பக்கம் தன்னுடைய பெற்றோர்கள், இன்னொரு பக்கம் தன்னை காதலிப்பவன், இவர்களுக்கு இடையே சிக்கி தவித்து கொண்டிருந்த பெண்ணவளுக்கு அப்போது தெரியவில்லை, அவள் வாழ்க்கையில் இனி தான் நிஜமான புயலே வீசப் போகிறது என்று.