Ep 34,35

அத்தியாயம் 34

தனது கேபினில் உள்ள நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சிம்ம விஷ்ணு.

அவனுக்கு முன்னால் மேசை முழுவதும் நோயாளிகளின் மருத்துவக் கோப்புகள் குவிந்து கிடந்தன.

ஆனால், அவற்றில் எதிலுமே அவனது கவனம் சுத்தமாக இல்லை.

அவன் பார்வை முழுவதும் கையில் இருந்த தனது அலைபேசியின் மீதே நிலைத்திருந்தது.

நேற்று அவள் கோபமாக அழைப்பை துண்டித்த பிறகு அவன் பல முறை அவளுக்கு அழைத்து பார்த்தான்.

ஆனால் அவளோ ஒரு முறையும் அவனின் அழைப்பை ஏற்கவில்லை.

திரும்ப திரும்ப அழைத்து ஒரு கட்டத்தில் அவளே அலைபேசியை ஸ்விச் ஆப் செய்து விட்டாள்.

எரிச்சலாக அலைபேசியை மேசையின் மீது எறிந்தவன், நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

இது வரையில் அவன் வாழ்க்கையில் யாரிடமும் இப்படி இறங்கிப் போனதில்லை.

மிகவும் பிடிவாதக்காரன்.

தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் என்று எப்போதுமே நினைப்பவன்.

அவனது உலகத்தில் சமரசம் என்பதற்கு இடமே இல்லை.

யாராவது அவனை தவறாகப் புரிந்து கொண்டாலும், அதை விளக்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை.

அதற்கான அவசியமும் அவனுக்கிருந்ததில்லை.

அப்படிப்பட்டவன் இன்று அந்த சிறிய பெண்ணுக்காக தன்னுடைய அனைத்து பிடிவாதங்களையும், கர்வத்தையும் ஓரம் கட்டி விட்டு இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறான். 

இந்த காதல் தன்னை இந்த அளவுக்கு மாற்றி விடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. 

அதே நேரம் தனது கட்டிலில் சோர்ந்து போய் படுத்திருந்தாள் பிருந்தா.

உள்ளுக்குள் ஏனென்றே புரியாமல் ஒரு பதட்டம்.

இன்று தந்தை திருமணத்தை நிறுத்த போகிறேன் என்று கூறியதும் அவளுக்குள் ஒரு பெரும் நிம்மதி தோன்றியது.

ஆனால் அதையும் தாண்டி ஏதோ தவறாக நடக்க போகிறது என்ற அச்சமும் அவளுள் துளிர் விட்டது.

எதற்காக தன் மனம் இப்படி தவிக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.

ஒரு பக்கம், இந்தத் திருமணம் நின்று விடப் போகிறது என்ற நிம்மதி.

மறுபக்கம், அந்த முடிவால் பாதிக்கப்படப் போகும் இன்னொரு மனிதனின் முகம் அவள் மனக்கண்ணில் வந்து நின்றது.

விஷ்வஜித்…

அவனை நினைத்ததுமே அவளின் நெஞ்சு பட படவென அடித்துக் கொண்டது.

 

அவன் தன் மீது எந்த அளவுக்கு ஆசை வைத்திருக்கிறான் என்று அவளும் அறிவாள் தானே!

இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க இருந்த திருமணம், இன்று திடீரென்று நின்று விடப் போகிறது.

அந்த ஏமாற்றத்தை அவன் எப்படி தாங்கிக் கொள்வான்?

அவனுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று அவள் கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் விதி அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக வேறு பாதையில் திருப்பி விட்டதே!

அவளோ நடந்ததை எல்லாம் எண்ணி கண்கள் கலங்கி போய் படுத்திருக்க, அந்நொடி அவள் செவிகளில் வந்து விழுந்தது அன்னையின் அலறல் சத்தம்.

அதில் பிருந்தாவோ திடுக்கிட்டு போய் எழுந்து அமர்ந்தவள், “ம்மா…!” என்று பதறியபடி கட்டிலில் இருந்து இறங்கி, நொடியும் தாமதிக்காமல் அறைக் கதவைத் திறந்து வெளியே ஓடினாள்.

மாடிப்படிகளில் அவசரமாக இறங்கி ஹாலுக்குள் வந்தவள், அங்கே கையில் அலைபேசியை இறுகப் பற்றியபடி கதறி அழுது கொண்டிருந்த கீதாவை பார்த்து அதிர்ந்து போனாள்.

“ம்மா… என்னாச்சும்மா?” என்று பதற்றத்துடன் அவரின் தோளைப் பிடித்து உலுக்க,

கீதாவோ அழுகைக்கு நடுவே பேச முடியாமல் திணறியவர், “பி… பிருந்தா… உங்க… அ.. அப்பா… வுக்கு…. ” என்று அதற்கு மேல் வார்த்தைகளை முடிக்க முடியாமல் விம்ம,

இவளோ ‘அப்பா’ என்ற வார்த்தையை கேட்டதும் பதறிப் போனவள், “அப்பாவுக்கு என்னாச்சும்மா….?” என்று கத்திய படி அன்னையின் கையில் இருந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தவள், மறு முனையில் கூறிய விடயத்தை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து போனாள்.

****

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே இருந்த இருக்கையில் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தனர் பிருந்தா மற்றும் கீதா.

ஆம்.

காலையில் குணசேகர் சென்ற கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருந்தது.

அருகில் இருந்த பொதுமக்களே அவரையும், டிரைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்திருந்தனர்.

குணசேகரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்ததால், அவரை நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

டிரைவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

‘கடவுளே! என் புருஷனுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று கடவுளிடம் கை கூப்பிய படி கீதா வேண்டிக் கொண்டிருக்க, பிருந்தாவோ அவரை சமாதானம் செய்த படி இருந்தாள்.

என்ன தான் வெளியில் அன்னையை தேற்ற அவள் தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் அவளுக்குமே தந்தையின் நிலையை எண்ணி நடுக்கமாக தான் இருந்தது.

அதே வேளை குணசேகருக்கு விபத்து நடந்த விடயம் மருத்துவமனை முழுக்க பரவியிருக்க, இந்த செய்தி அப்போது தான் ஒரு அறுவை சிகிச்சையை முடித்து விட்டு வந்த சிம்மனின் காதுகளுக்கும் வந்திருந்தது.

அதை அறிந்தவனோ அவசரமாக அங்கு விரைந்தான்.

அங்கே வந்தவன் விழிகளில் முதலில் விழுந்தது என்னவோ அவனின் பிருந்தா தான்.

அழுதழுது கண்கள் சிவந்து,  முகமெல்லாம் வாடி போனவளாய் அன்னையின் தோளில் சாய்ந்திருந்தவளை பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் அவ்வளவு வலித்தது.

மெதுவாக அவர்களை நோக்கி அவன் வர, பிருந்தாவோ அவனின் காலடி சத்தத்தில் மெல்ல தலையை திருப்பி பார்த்தாள்.

அங்கே வந்தவனை பார்த்தவளுக்கோ நேற்று இரவு நடந்த விடயங்களே ஒரு கணம் எண்ணத்தில் வந்து போனது.

ஆனால் இப்போது அவள் சண்டை போடும் நிலையில் இல்லையே!

கீதாவோ அங்கே வந்த சிம்மனை கண்டதும் கோபமாக பார்வையை வேறு புறம் திருப்பிக் கொள்ள, பிருந்தாவோ கண்ணீரோடு தலையை குனிந்து கொண்டாள்.

அவனை பார்க்க கூட அவளுக்கு இப்போது பிடிக்கவில்லை.

அதை புரிந்து கொண்டவன் ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளி விட்ட படி, “டாக்டர் எப்படி இருக்காரு? என்ன சொன்னாங்க?” என்று வினவ,

பிருந்தாவும் கண்ணீரை உள்ளே இழுத்த படி, “இன்னும்… எதுவும் சொல்லல. உள்ளே ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு…” என்று மட்டும் கூறினாள். ஆனால் அவள் பார்வை மட்டும் அவன் புறம் சற்றும் திரும்பவில்லை.

அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்த படி நின்றான்.

சிறிது நேரத்திலேயே கதவை திறந்து கொண்டு வைத்தியர் வெளியே வர, அவரை கண்டதும் அவசரமாக இருவரும்   அவரிடம் ஓடினர்.

கீதாவோ, “டாக்டர் என்…. என் புருஷனுக்கு எப்படி இருக்கு? அ… அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!” என்று கண்ணீரோடு கேட்க,

வைத்தியரோ, “பயப்படுற மாதிரி எதுவும் இல்லை மிஸஸ் குணசேகர். அவரோட உயிருக்கு இப்போ ஆபத்து இல்ல.” என்று கூறவே தான் அவர்கள் இருவருக்கும் பெரும் நிம்மதி தோன்றியது.

வைத்தியரோ தொடர்ந்து, “பட் தலையில கொஞ்சம் பலமா அடி பட்டு இருக்கு. அதனால தான் கொஞ்ச நேரம் அவரை ஆப்சர்வேஷன்ல வைக்க வேண்டியிருக்கும். இப்போ அவர் மயக்கத்துல இருக்காரு. ஸ்கேன் ரிப்போர்ட் வந்த பிறகு தான் அடுத்த கட்ட ட்ரீட்மெண்ட் பத்தி முடிவு பண்ண முடியும்.” என்று கூறினார்.

அதை கேட்டதும் கீதாவின் முகத்தில் மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. 

“டாக்டர்… ரொம்ப பெரிய பிரச்சனை எதுவும் இல்லையே? அவருக்கு எதுவும் ஆகாதுல்ல?” என்று கண்ணீரோடு கேட்க,

வைத்தியரும், “இப்போதைக்கு அவர் ஸ்டேபிளா தான் இருக்காரு. நீங்க கவலை பட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

“நாங்க போயி அவரை பார்க்கலாமா டாக்டர்?” என்று கீதா தவிப்புடன் கேட்க,

டாக்டரோ, “ஓகே… பட் ஒருத்தர் மட்டும் போயி பாருங்க. அவரை டிஸ்டர்ப் பண்ணாம தூரத்துல இருந்து பார்த்துட்டு வந்துடுங்க” என்று கூறி விட்டு அவர் அங்கிருந்து செல்ல,

பிருந்தாவோ, “ம்மா… நீங்க போயி அப்பாவை பார்த்துட்டு வாங்க” என்றாள்.

அவரோ ஒரு கணம் அங்கே நின்றிருந்த சிம்மனை பார்த்து விட்டு, மகளின் புறம் திரும்பியவர், “நீ இங்கயே இருடி. நான் சீக்கிரமா போயி உங்க அப்பாவை பார்த்துட்டு வரேன்” என்றவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்து கொண்டார்.

இப்போது அங்கே பிருந்தா மற்றும் சிம்மன் இருவர் மட்டும் தான் இருந்தனர்.

சிம்மனோ அவளிடம் பேச முயற்சித்தாலும் அவளோ அவனை கண்டு கொள்ளாமல் அமைதியாக சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஆனாலும் அவளிடம் பேசாமல் அங்கிருந்து செல்ல விரும்பாதவன், அவளை நெருங்கி வந்து அமர்ந்து, “பேபி…” என்று அவள் கரங்களை பற்ற போக, அவளோ சட்டென அவள் கரங்களை இழுத்தெடுத்துக் கொண்டாள்.

அவன் புருவங்கள் சற்று இடுங்க, “இப்போ எதுக்குடி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்றான் சற்றே கர கரப்பான குரலில்.

பிருந்தாவோ, “ப்ளீஸ் சிம்மா தயவு செஞ்சு என்னை தனியா விடுங்க. எனக்கு உங்க கூட பேச சுத்தமா இஷ்டம் இல்ல” என்றவள் அங்கிருந்து எழுந்து செல்லப் பார்க்க,

சிம்மனோ சட்டென அவள் கரங்களை பற்றினான்.

பெண்ணவளோ அவனின் தொடுகையில் திரும்பிப் பார்க்க,

அவனோ எழுந்து அவளை நெருங்கி வந்தவன், “ஐ நோவ் பேபி. நான் பண்ணது உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணி இருக்கு. பட் அதுக்காக இப்படி…” என்று அவன் வார்த்தைகளை முடிக்க முன்னரே,

“பிருந்தா…” என்ற குரலில் அவர்கள் இருவரும் அந்த திசையை திரும்பிப் பார்த்தனர்.

அங்கே கீதா தான் சற்று கோபமாக நின்று இருந்தார். 

சிம்மன் பிருந்தாவின் கையை பற்றி இருப்பதை கண்டவரின் முகமோ மேலும் இறுகிப் போனது.

பிருந்தாவோ “ம்மா..” என்க,

கீதாவோ சிம்மன் அவள் கையை இன்னுமே பற்றி இருப்பதை கண்டு கோபமுற்றவர் விறு விறுவென அவர்கள் இருவரை நோக்கி வந்து,  சட்டென பிருந்தாவின் கரத்தை அவனிடமிருந்து பிரித்து தன் பக்கம் அவளை இழுத்துக் கொண்டார்.

“தயவு செஞ்சு என் பொண்ண நெருங்க நினைக்காதீங்க” என்று எச்சரிப்பது போல சொன்னவர்,

அங்கிருந்த இருக்கையில் சென்று அமர,

பிருந்தாவும் எதுவும் பேசாமல் அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஆழ்ந்த மூச்சொன்றை உள்ளிழுத்து வெளிவிட்ட சிம்மனோ, அதற்கு மேல் எதுவும் பேசாமல் விறு விறுவென அங்கிருந்து செல்ல, பிருந்தாவோ கண்களில் நீர் கோர்க்க அவனை பார்த்திருந்தாள்.

என்ன தான் அவன் மீது கோபம் இருந்தாலும், அவனை மொத்தமாக அவளால் வெறுக்கவும் முடியவில்லை.

குணசேகரின் விபத்து விடயம் கேள்வி பட்டு அவரின் குடும்பத்தார்களும், நெருங்கிய நண்பர்களும் அவரை பார்த்து விட்டு செல்ல மருத்துவமனைக்கு வந்து இருந்தனர்.

சிம்மனுக்கும் மருத்துவமனையில் அதிகமாக வேலை இருந்ததால் அதன் பிறகு பிருந்தாவை சந்திக்கவே அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவன் வரும் நேரத்தில் பிருந்தாவை சுற்றி அவளின் உறவினர்கள் இருந்ததால் அவனால் அவளை சுத்தமாக நெருங்க முடியவில்லை.

அவளுக்கு அழைத்தாலும் வேண்டும் என்றே அழைப்பை துண்டித்து விடுவாள்.

அவனும் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக அவளை தூரத்திலிருந்து பார்த்து விட்டு சென்று விடுவான்.

அடுத்த நாள் குணசேகரை பரிசோதித்த வைத்தியர்களும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தனர்.

தலையில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தொடர்ந்து கண்காணிப்பு தேவைப்பட்டாலும், அவரது உடல்நிலை சீராக இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண தனியார் அறைக்கு அவரை மாற்றி இருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கண் மூடாமல் மருத்துவமனையிலேயே இருந்த இருவரின் முகத்திலும் அப்போது தான் சிறிதளவு நிம்மதி தோன்றியது.

பிருந்தாவோ, “ம்மா… நீங்க நேத்துல இருந்து எதுவுமே சாப்பிடல. நான் போயி கேன்டீன்ல இருந்து ஏதாவது வாங்கிட்டு வரேன்…” என்றாள்.

கீதாவோ, “எனக்கு எதுவும் வேண்டாம்டி… நீயும், தங்கச்சியும் போயி ஏதாவது சாப்பிடுங்க” என்று கூற,

“ப்ளீஸ்ம்மா… கொஞ்சமாவது சாப்பிடணும். இல்லனா உடம்பு முடியாம போயிடும்…” என்று வற்புறுத்தினாள் பிருந்தா.

அங்கே நின்றிருந்த அவளின் தங்கை மிருதுளாவோ “அக்கா… நான் அம்மா கூட இருக்கேன். நீ போயி வாங்கிட்டு வா” என்றாள்.

“சரிடி… அம்மாவை பார்த்துக்கோ…” என்று கூறிய பிருந்தா, கேன்டீனை நோக்கி நடந்தாள்.

மருத்துவமனை கேன்டீனில் உணவை வாங்கிக் கொண்டிருந்தவளை பார்த்த ஜானவி, அவளிடம் விரைந்து வந்தாள்.

“பிருந்தா… அங்கிள் இப்போ எப்படி இருக்காரு? நேத்து நான் ஹாஸ்பிடல் வராததுனால இன்னக்கி தான்டி விஷயம் தெரிஞ்சிது… அவருக்கு எந்த ப்ரோப்லமும் இல்லையே!” என்று அக்கறையோடு கேட்க,

“இப்போ கொஞ்சம் பரவாயில்ல ஜானு… ஐ சி யூல இருந்து ரூமுக்கு மாத்திட்டாங்க…” என்றாள்.

ஜானவியும் அவளோடு பேசி விட்டு அங்கிருந்து செல்ல,

பிருந்தாவும் உணவை வாங்கிக் கொண்டு காரிடர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போது அவள் பின்னாலிருந்து காலடி சத்தம் கேட்க, அதை தொடர்ந்து, “பேபி ஒன் செக்கன்” என்ற குரல் அவள் செவிகளில் வந்து விழுந்தது.

அந்த குரலை கேட்டதுமே அவளது நடையும் ஒரு நொடி தடுமாறியது.

அவன்தான் என்று தெரிந்தும் திரும்பி பார்க்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

‘இவ சொன்னா கேட்க மாட்டா…’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவன், இரண்டெட்டில் அவள் கரங்களை பற்றி சட்டென தன்னை நோக்கி இழுத்திருக்க, 

அதை கொஞ்சமும் எதிர்பாராத பெண்ணவளோ, “அஹ்…!” என்று அலறிய படி அவன் மார்பில் வந்து மோதியிருந்தாள்.

அவள் கையில் இருந்த உணவு பொட்டலங்கள் அவனின் திடீர் இழுப்பில் தவறி கீழே விழ, அதை பார்த்ததும் பிருந்தாவின் முகம் கோபத்தில் மேலும் சிவந்து போனது.

“சிம்மா… என்ன பண்றீங்க நீங்க? மரியாதையா என் கையை விடுங்க!” என்று அவனை விட்டு விலக முயன்றாள்.

ஆனால் அவனோ அவளை இழுத்து வந்து அங்கிருந்த சுவற்றில் சாத்தியவன், அவள் தப்பிக்க முடியாத படி இரு புறமும் கைகளை ஊன்றி சிறை செய்திருந்தான்.

பெண்ணவளோ அனல் தெறிக்கும் பார்வையுடன் அவனை பார்த்தவள், “இப்போ என்னை போக விடலன்னா நான் சத்தியமா கத்திடுவேன் சிம்மா. அப்புறம் உங்களுக்கு தான் அசிங்கமாயிடும்… விடுங்க…” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ள,

சிம்மனோ பொறுமையை இழுத்து பிடித்த படி, “எதுக்குடி இப்படி பண்ணுற? போன் பண்ணா கட் பண்ணுற?… முகத்தை வேணும்னு திருப்பிக்கிட்டு போற? என் மேல கோபம் இருந்தா திட்டு, ஏன் அடிக்க வேணாலும் செய்… பட் இப்படி அவாய்ட் பண்ணாத… கடுப்பா இருக்கு” என்றான் அதற்கு மேல் தன்னை அடக்க முடியாமல்.

பிருந்தாவோ, “பேசி முடிச்சிடீங்களா?” என்றவள், “என் அம்மா என்னை தேடுவாங்க… தயவு செஞ்சு என்னை போக விடுங்க சிம்மா… ” என்று கண்கள் கலங்கிய படியே, அவன் கரங்களை விலக்க முயல,

சிம்மனோ அதற்கெல்லாம் துளியும் அசராமல், “போக விடுறேன்… பட் அதுக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு…” என்றான் பிடிவாதமாக,

பிருந்தாவோ எரிச்சலாக, “எனக்கு உங்க கூட பேசவே இஷ்டம் இல்லை. தள்ளுங்க….” என்று பல்லை கடித்த படி சொன்னவள், அவனை தள்ளி விட்டு அங்கிருந்து விறு விறுவென முன்னால் செல்ல,

சிம்மனோ அவ்வளவு எளிதாக அவளை விடவில்லை.

மீண்டும் அவள் முன் வந்து வழியை மறித்த படி நின்றவன்,

“பேபி லிசன்… நான் பேசுறதை ஒரு நிமிஷம் கேளுடி.” என்று அவள் கரங்களை பற்ற போக,

அடுத்த நொடி அவன் பின்னால் வந்த அந்த நபரோ, சிம்மனை இழுத்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

அத்தியாயம் 35

குணசேகர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் அறையில் இருந்த கீதாவோ, கணவரின் அருகில் அமர்ந்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இன்னும் முழுமையாக விழிப்பு வராமல் இருந்த குணசேகர், கண்களை மூடியபடி அமைதியாக படுத்திருக்க, அவரை இப்படி ஒரு நிலையில் பார்த்த கீதாவின் கண்களோ மேலும் கலங்கிப் போனது.

அவர் கரங்களை பற்றிய படி, “என்னங்க… சீக்கிரமா கண்ணை திறங்க. உங்களை இப்படி பார்க்க என்னால முடியல…” என்று கண்ணீர் நிறைந்த குரலில் மெதுவாக கூறிக்கொண்டார்.

அதே சமயம் அவர்கள் இருந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க, யாராவது வைத்தியர்கள் தான் வந்திருப்பார்கள் என்று திரும்பிப் பார்த்தார் கீதா.

ஆனால் அங்கே வந்தவர்களை கண்டதும் அவருக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

‘சம்பந்தியா?’ என்று மனதுக்குள் எண்ண, அங்கே வாசலில் விஷ்வஜித்தின் தந்தை விஷ்வேந்திரன் மற்றும் அவருக்குப் பின்னால் விஷ்வாவும், அஸ்வந்தும் நின்று இருந்தனர்.

ஆம்…

அவர்களுக்கு இன்று தான் குணசேகருக்கு விபத்து நடந்து இருந்தது  தெரிந்தவர்கள் மூலம் அறிய வந்திருந்தது.

விடயத்தை அறிந்ததுமே அவர்களும் காலையிலேயே புறப்பட்டு சென்னைக்கு வந்து இருந்தனர்.

கீதாவும் சற்று தயக்கத்துடன், “வாங்க சம்பந்தி” என்று அழைக்க,

அவர்களும் உள்ளே நுழைந்தனர்.

“எப்படி இருக்காரு சம்பந்தி? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விஷ்வேந்திரன் விசாரிக்க,

கீதாவும், “இப்போ பரவாயில்ல… டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லன்னு சொல்லி இருக்காங்க. ஆனா இன்னும் கண்ணு முழிக்கல…” என்று கலங்கிய குரலில் பதிலளித்தார்.

அவரும் “இந்த நேரத்துல குணசேகருக்கு இப்படி ஆகும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல… நீங்க கவலை படாதீங்க சம்பந்தி… அவருக்கு சீக்கிரம் குணமாயிடும்” என்று ஆறுதலாக கூற, கீதாவும் கண்ணீரை துடைத்தபடி மெதுவாக தலையசைத்தார்.

இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்க, தந்தையின் அருகில் நின்று இருந்த விஷ்வஜித்தின் விழிகளோ அந்த அறையையே ஒரு கணம் சுற்றி வந்தது.

அவனது பார்வை முழுக்க அவனின் மணப்பெண்ணையே தேடியது.

அவள் எங்கே இருக்கிறாள்?

எப்படி இருக்கிறாள்?

என்ற எண்ணங்கள் தான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அவனது பார்வையை கவனித்துக் கொண்டிருந்த அஸ்வந்தோ, அவன் அருகில் சற்று குனிந்து,

“என்னண்ணா… மாமாவை பார்க்க வந்தீங்களா? இல்ல வேற யாரையாவது தேடி வந்தீங்களா?” என்று மெதுவாக கேட்க,

அதில் சற்று திடுக்கிட்ட விஷ்வா, அவனை திரும்பிப் பார்த்தான்.

அஸ்வந்தோ அடக்க முடியாமல் சிரித்தபடி, “வந்ததுல இருந்து உங்க பார்வை ரூம் முழுக்க ஏதோ முக்கியமான ஆள தேடிட்டு இருக்கு போல! கண்ணு ஒரு இடத்துல நிக்க மாட்டேங்குதே!” என்க,

விஷ்வஜித்தோ அவனை முறைத்து பார்த்தவன், “வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” என்று பற்களை கடித்த படி சொல்ல,

அஸ்வந்தும் இதழ்களை கடித்து புன்னகையை அடக்கிக் கொண்டான்.

ஒரு வழியாக அவர்களும் பேசி விட்டு வெளியில் செல்ல, அறையிலிருந்து வெளியில் வந்த விஷ்வேந்திரனின் அலைபேசி அலறியது.

அதை எடுத்துப் பார்த்தவர், மகன்களிடம் திரும்பி “நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க… ஒரு முக்கியமான கால். பேசிட்டு வந்திடுறேன்…” என்று கூறிவிட்டு சற்று தள்ளி நடந்து சென்றார்.

விஷ்வாவும், அஸ்வந்தும் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க, விஷ்வேந்திரன் மட்டும் போனில் பேசியபடி காரிடாரின் மறுபுறம் சென்றார்.

அவரோ அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருக்க, அப்போது தான் மறு முனையில் ஒரு பெண்ணின் பதற்றமான குரல் அவரது செவிகளில் மெல்ல வந்து விழுந்தது.

முதலில் அதை பெரிதாக கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தவர், அந்த குரல் மீண்டும் சற்று சத்தமாகக் கேட்கவே இயல்பாகவே அந்த திசையை திரும்பிப் பார்த்தார்.

ஒரு மாஸ்க் போட்ட இளைஞன் ஒரு இளம்பெண்ணின் வழியை மறித்து நின்று ஏதோ பேசிக் கொண்டிருப்பது அவரது பார்வையில் பட்டது.

முதலில் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டவர், மீண்டும் அந்தப் பெண் அவனை விட்டு விலகிச் செல்ல முயற்சிப்பதையும், அவனோ அவள் கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்துவதையும் கண்டதும், விஷ்வேந்திரனின் முகம் கோபத்தில் இறுகியது.

‘ஒரு டாக்டரா இருந்துட்டு ஹாஸ்பிடல்ல வச்சே ஒரு பொண்ணு கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்குறான்!’ என்று மனதுக்குள் எண்ணியவர், 

“ஐ வில் கால் யூ லேட்டர்…” என்று அலைபேசியில் இருந்தவரிடம் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவர், வேகமாக அவர்களை நோக்கி நடந்தார்.

அருகில் நெருங்க நெருங்க தான் அந்த இளம்பெண்ணின் முகம் தெளிவாக அவரது பார்வையில் விழுந்தது.

பிருந்தா…!

அவளை கண்டதும் அவரின் முகமோ மேலும் கோபத்தில் சிவந்து போனது.

யாரோ ஒரு பெண் என்று தானே நினைத்தார்.

ஆனால் தனது வருங்கால மருமகளிடமே ஒருவன் இப்படி அத்துமீறி நடந்து கொண்டதை கண்டவருக்கு கோபம் தலைக்கேற, வேகமாக அவர்களை நெருங்கி வந்தவர், “பொறுக்கி ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா என் மருமக கிட்டயே இப்படி அத்து மீறி நடந்துப்ப?” என்று கர்ஜித்தவர், சிம்மனை தன் புறம் திருப்பி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

பிருந்தாவோ அதிர்ந்து போய் தன் முன்னால் நின்று இருந்தவரை பார்த்தவள், “ம… மாமா…” என்று மெதுவாக அழைத்தாள்.

இப்படி ஒரு நேரத்தில் அவர் இங்கே வருவார் என்று அவள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையே!

விஷ்வேந்திரனோ சிம்மனை அனல் தெறிக்கும் பார்வையில் பார்த்தவர், “என்னடா முறைக்குற? வெள்ளை கோட் போட்டுட்டா எதை வேணாலும் பண்ணலாம்னு நினைச்சிட்டியா? டாக்டர் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கணும். ஹாஸ்பிடல்ல வச்சே தனியா வர பொண்ணு கிட்ட இவ்ளோ கேவலமா நடந்துக்குறியே உனக்கெல்லாம் வெக்கமா இல்லை?” என்று கோபமாக சீற, 

சிம்மனோ அவர் அறைந்த கன்னத்தை ஒரு முறை நாவால் அழுத்திய படியே,  எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தான்.

அவனின் அமைதியே அவருக்கு மேலும் கோபத்தை தூண்ட, “என்னடா வாய மூடிட்டு நிக்கிற? நீ அமைதியா இருந்தா உன்ன விட்டுடுவேன்னு நினைச்சியா? பொறுக்கி” என்று ஆத்திரத்தோடு அவன் காலரை பற்ற போக,

பிருந்தாவோ அவசரமாக அவரை வந்து தடுத்தவள், “மாமா…. ப்ளீஸ்…. எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க…. பிரச்சனை வேணாம். வாங்க இங்கிருந்து போகலாம்” என்று கண்கள் கலங்கிய படி கூற,

அவரோ அங்கே சுற்றி அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை ஒரு கணம் பார்த்து விட்டு, சற்று நிதானத்துக்கு வந்தவர், “பிருந்தா… நீ இங்கிருந்து கிளம்பு. இந்த பொறுக்கிய நான் பார்த்துக்குறேன்” என்று இன்னுமே கோபம் குறையாமல் கூற,

அவளோ, “மாமா… ப்ளீஸ் இதை பெருசு பண்ணாதீங்க… அவரு… அவரு… என் கிட்ட எதுவும் பண்ணல. ஜஸ்ட் பேசினார் அவ்ளோ தான்” என்று திக்கி திணறிய படி சொல்ல,

சிம்மனோ அவளை அழுத்தமாக பார்த்தான்.

விஷ்வேந்திரனோ “பிருந்தா நீ எதுக்கும்மா பயப்படுற? இந்த பொறுக்கி என்ன பண்ணான்னு நான் என் கண்ணாலயே பார்த்துட்டேன். இவனை எல்லாம் சும்மா விட கூடாது” என்றவர், 

மீண்டும் சிம்மனை நோக்கி திரும்பி, “தப்பு பண்ணிட்டு என் கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சியா? முதல்ல உன் பேரை சொல்லுடா…” என்று கோபமாக கேட்டார்.

சிம்மனோ அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே நிற்க,

அவனது அமைதி விஷ்வேந்திரனின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

“என்ன? வாயே திறக்க மாட்டியா? இல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைச்சியா?  அவ்ளோ திமிராடா உனக்கு?” என்று சீறியவர்,

ஒரு நொடி அவனை மேலிருந்து கீழாக பார்த்தார்.

அவன் முகத்தை முழுவதுமாக மறைத்திருந்த மாஸ்க்கில் அவரது பார்வை இப்போது நிலைத்தது.

முகத்தில் விழுந்து கிடந்த முடிகளுக்கு நடுவே அவனின் கூரிய விழிகள் அவரையே நோக்க, அதை பார்த்தவருக்கோ இந்த விழிகள் ஏற்கனவே பழக்கப் பட்டது போன்ற உணர்வு. 

ஆனால் கோபம் அவரை எதையும் யோசிக்க விடாமல் தடுத்து விட, 

புருவம் சுருக்கிய படி, “முதல்ல அந்த மாஸ்க்கை கழட்டுடா… தப்பு பண்ணிட்டு முகத்தை மறச்சிட்டு இங்கிருந்து ஓடிடலாம்னு நினைச்சியா? இங்க இருக்க எல்லாரும் உன் மூஞ்சிய பார்க்கணும். கழட்டு அதை” என்றார் அழுத்தமாக.

பிருந்தாவோ “மாமா…. ப்ளீஸ்… விடுங்க நம்ம போலாம்” என்று மெல்லிய குரலில் சொல்ல,

அவரோ “நீ இரும்மா” என்று அவளை பின்னால் நிற்க வைத்து விட்டு, அங்கே எந்த உணர்வும் இல்லாமல் அமைதியாக நின்று இருந்த சிம்மனின் புறம் திரும்பி, “என்னடா? இன்னும் என்ன யோசனை? முகத்தை காட்ட பயமா? இல்ல நீ யாருன்னு தெரிஞ்சா உனக்கு பிரச்சனை வரும்னு பயப்படுறியா?” என்று கிண்டலாக கேட்டார்.

சிம்மனோ அவரை சற்று புருவம் உயர்த்தி பார்த்தவன், ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளி விட்ட படி, தன் முகத்தில் அணிந்திருந்த முகக் கவசத்தை கழட்டி விட்டு, அவன் முகத்தில் படர்ந்து கிடந்த முடிகளையும் மெல்ல ஒதுக்கினான்.

இப்போது அவன் முகம் தெளிவாக அவர் 

பார்வையில் விழ, விஷ்வேந்திரனின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து போனது.

“வி…. விஷ்ணு… நீயா?…” என்று அவர் திகைத்து போய் கேட்க,

சிம்மனும் தனது கீழ் இதழ்களை கடித்த படியே, “நானே தான் டேட்” என்றானே பார்க்கலாம் அதை கேட்ட பிருந்தாவின் விழிகள் இப்போது அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

ஆம்.…

சிம்மன் வேறு யாரும் அல்ல, விஷ்வேந்திரனின் மூத்த புதல்வன் ஆவான்.

பிருந்தாவோ ‘என்ன டேட் ஆ?’ என்று வாய்க்குள்ளயே முணு முணுக்க, 

அதே சமயம் “அப்பா…” என்று அழைத்த படி அங்கே விஷ்வா மற்றும் அஸ்வந்த் இருவரும் வர, அங்கே நின்றிருந்த சிம்மனை கண்ட விஷ்வாவின் முகமோ சட்டென மாறியது.

பிருந்தாவோ இங்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் குழப்பதுடன் நின்று இருக்க, 

அங்க வந்த விஷ்வாவோ “அப்பா என்னாச்சு?” என்று அவர் தோள்களை பற்றி கேட்டான்.

விஷ்வேந்திரனோ மகனின் தொடுகையில் சட்டென சுய உணர்வுக்கு வந்தவர், “அ… அது… ஒன்னும் இல்லடா…” என்றார் அவசரமாக.

ஆனால் அவர் முக மாற்றத்தை கவனித்த விஷ்வாவுக்கோ அவர் ஏதோ மறைப்பது போல தோன்றியது.

பிருந்தாவோ விஷ்வேந்திரனின் பதிலில் சற்று திகைத்து போய் அவரை பார்த்தாள். 

இவ்வளவு நேரமும் அவன் மீது குற்றம் சாட்டியவர் இப்போது விஷ்வாவிடம் எதுவுமே நடக்கவில்லை என்கிறாரே!

அதே வேளை சிம்மனின் அலைபேசி அலற, தனது பாக்கேட்டில் இருந்த போனை அட்டன் செய்து காதில் வைத்தவன், மறு முனையில் ஏதோ கூறவும், “ஓகே… ஐயம் ஆன் மை வே…” என்று சொன்னவன், அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து விறு விறுவென சென்று விட்டான்.

பிருந்தாவோ போகும் அவன் முதுகையே வெறித்த படி நின்று இருக்க, அவள் முக மாற்றத்தை கவனித்த விஷ்வாவோ அவளிடம் நெருங்கி வந்தவன், “பிந்து” என்று அழைத்தான்.

அதில் அவளும் தன் பார்வையை சட்டென அவன் புறம் திருப்ப, “என்னாச்சு பிந்து ஏதாவது ப்ரோப்லமா?” என்று அவளிடம் சந்தேகமாக வினவினான்.

அவளோ சற்று தடுமாறிய படி, அங்கே நின்றிருந்த விஷ்வேந்திரனை பார்க்க, அவரோ அவளின் தடுமாற்றத்தை புரிந்து கொண்டவர், 

“விஷ்வா…. அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்… வாங்க” என்று பேச்சை மாற்றி அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றார்.

இரவு…

மருத்துவமனையின் தனியார் அறைக்கு வெளியே இருந்த நீண்ட இருக்கையில் உறக்கம் வராமல் ஏதோ யோசனையில் மூழ்கி போய் அமர்ந்திருந்தாள் பிருந்தா.

அவளால் இப்போது கூட நம்ப முடியவில்லை.

சிம்மன் விஷ்வாவின் அண்ணன் என்பதை.

அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும் என்று மட்டும் தானே நினைத்து இருந்தாள்.

அன்று கூட விஷ்வா அவனை பற்றி எதுவுமே கூறவில்லையே! ஏதோ எதிரி போல தானே அவனை பார்த்தான்.

ஆனால் இப்போது தான் தெரிகிறது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று.

அதுவும் இன்று விஷ்வேந்திரன் கிளம்பும் முன்னர் அவளிடம் வந்து பேசியதை எண்ணி அவளுக்கு மேலும் வருத்தமாக இருந்தது.

“பிருந்தா இன்னைக்கு விஷ்ணு உன் கிட்ட அப்படி நடந்ததுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேம்மா” என்று அவர் வருத்தத்தோடு கூற,

அதை கேட்டவளோ, “ஐயோ மாமா நீங்க எதுக்காக என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க?” என்றாள் பதறிய படி.

அவரோ “இல்லம்மா என் பையன் உன் கிட்ட எப்படி நடந்துகிட்டான்னு நான் என் கண்ணாலயே பார்த்தேன். அவன் பிடிவாதக்காரன் தான். அதிகமா கோப படுவான். ஆனா ஒரு பொண்ணு கிட்ட இப்படி மோசமா நடக்குற அளவுக்கு போவான்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று ஒரு தந்தையின் வலியோடு கூற,

இவளுக்கோ என்ன பதில் சொல்லுவது என்றே புரியவில்லை.

மகன் செய்யாத குற்றத்திற்காக ஒரு தந்தை தன்னிடம் மன்னிப்பு கேட்கிறார்.

சிம்மன் எந்த தவறுமே செய்யவில்லை என்று அவள் கூற நினைத்தாலும், அந் நொடி அவளால் எதுவும் பேச முடியவில்லை.

அப்படி கூறினால் அனைத்து உண்மையையும் சேர்த்து அல்லவா சொல்ல வேண்டி வரும்.

ஒரு தந்தையின் மனதில் தன் மகனைப் பற்றிய தவறான எண்ணம் உருவாக தான் காரணமாகி விட்டோமே என்று நினைக்கும் போதே அவளுக்கு மிகவும் குற்ற உணர்வாக இருந்தது.

தன்னை மட்டும் இந்த விதி ஏன் இந்த அளவுக்கு கஷ்டப்படுத்துகிறது என்றே புரியவில்லை.

கண்கள் இரண்டும் கலங்கிக் போக, தலையை இரு கரங்களாலும் பற்றிய படி அமர்ந்திருந்தவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக அங்கே காற்றில் கலந்து வந்த சிகரட்டின் புகை அவள் நாசியை வந்து துளைக்க,

அடுத்த நொடி…

‘லொக் லொக்’ என்று இருமினாள்.

‘இங்க யாரு ஸ்மோக் பண்ணுறா?’ என முகத்தை சுளித்தவள் நிமிர்ந்து பார்க்க, அப்போது தான் அங்கே சிம்மன் சிகரட்டை புகைத்த படி சுவற்றில் சாய்ந்து நின்று அவளையே பார்த்து கொண்டு நின்று இருந்தான்.

அவனை கண்டவளுக்கு சற்று அதிர்ச்சி தான்.

அவன் எப்போது அங்கு வந்து நின்றான் என்பதே அவளுக்கு தெரியவில்லை.

இத்தனை நேரமும் தன் மனதிற்குள் இருந்த போராட்டத்தில் மூழ்கி இருந்ததால், அவனது வருகையை கூட அவள் உணரவில்லை.

ஆனால் அவனோ வெகு நேரமாக அவளையே தான் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

பிருந்தாவும், “இங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்க,

அவனோ சிகரட்டை புகைத்த படியே அவள் அருகில் வந்து நெருங்கி அமர்ந்தவன்,

“அதை நான் தான் உன் கிட்ட கேக்கணும். இன்னும் தூங்காம எதுக்கு இங்க தனியா ஒக்காந்துட்டு இருக்க?” என்று மாறி அவன் வினவ,

அவளோ “எனக்கு தூக்கம் வரல” என்றாள் மெல்லிய குரலில்.

சிம்மனோ புகையை இழுத்து விட்ட படி, “ஏன்?” என்று கேட்க,

அவளோ கண்கள் கலங்கிய படி, “நீங்க தான் காரணம்” என்றாள்.

அவனோ புருவம் சுருக்கி அவளை பார்த்து, “நான் என்னடி பண்ணேன்?” என்றான் புரியாமல்,

அவளோ, “எதுக்கு என் கிட்ட உண்மைய மறச்சிங்க சிம்மா?” என்று அவள் சற்று கோபமாக கேட்க,

சிம்மனோ, “என்ன உண்மை?” என்று அவளை பார்த்தபடி கேட்க,

“விஷ்வாவோட அண்ணன் நீங்கன்னு ஏன் என் கிட்ட சொல்லல? எதுக்கு அந்த உண்மைய மறச்சீங்க?” என்று அழுத்தமாக கேட்டாள்.

அவள் கேள்வியில் அவனின் முகமோ இறுகிப் போக, அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

பிருந்தாவோ, “சிம்மா நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா இல்லையா?” என்று வினவ,

“பேபி ப்ளீஸ்… எனக்கு பிடிக்காத விஷயத்த பத்தி கேட்காத” என்றான் கர கரப்பான குரலில்.

அவளோ “ஆனா… அவர உங்க தம்பின்னு சொல்லுறதுல…” என்று அவள் முடிக்க முன்னரே,

“அவன் ஒன்னும் என் தம்பி கிடையாது. அவன் அம்மா வேற என் அம்மா வேற… போதுமா?” என்றான் கோபமாக.

அவளோ அவன் கத்தலில் சற்று பயந்து போனவள், “இப்போ எதுக்கு கத்துறீங்க? நான் என்ன தப்பா கேட்டுட்டேன்” என்று மூக்கை உறிஞ்சிய படி சொல்ல,

சிம்மனோ உஷ்ண பெரு மூச்சு ஒன்றை வெளி விட்ட படி, கையில் உள்ள சிகரட்டை வாயில் வைத்து புகையை இழுத்து விட்டான்.

“எனக்கு மூணு வயசா இருக்கும் போதே என் அம்மா இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவங்களுக்கு பிறந்த பசங்க தான், விஷ்வாவும் அஸ்வந்தும்” என்றான்.

அதை கேட்ட பிருந்தாவுக்கோ சற்று அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது தான் அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை என்று அவளுக்கும் புரிந்தது.

சிம்மனோ மேலும் புகையை இழுத்து விட்ட படி, “அதுக்கப்புறம் வீட்டுல எல்லாமே மாறிடுச்சு பேபி. சித்திக்கு ஆரம்பத்துல இருந்தே என்னை பெருசா பிடிக்காது. அப்பாவும் பிசினஸ், வேலைனு எப்பவும் பிஸியா இருந்தாரு. அதனால நான் சின்ன வயசுல இருந்தே யாருடைய அரவணைப்பும் இல்லாம தனியாவே இருந்து பழகிட்டேன்” என்று கூறும் போது அவன் குரலில் உள்ள வலி பிருந்தாவுக்கு நன்றாகவே புரிந்தது.

“எனக்கு அடுத்தவங்க தயவுல வாழுறது சுத்தமா பிடிக்காது. அதனாலயே ஸ்கூல், காலேஜ் எல்லாம் ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சேன். படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் என் வாழ்க்கையை தனியா வாழ ஆரம்பிச்சிட்டேன். அப்பா கூட எப்பவாவது போன்ல பேசுவேன். பெருசா டச்ல இல்லை.” என்றவன் முகத்திலோ எந்த உணர்வும் இருக்கவில்லை.

பிருந்தாவுக்கோ அவனை எண்ணி மனதுக்குள் வருத்தமாக இருந்தது.

எப்போதும் திமிராகவும், எதற்கும் அசையாதவனாகவும் தெரியும் அவனுக்குள் இவ்வளவு தனிமையும், வலியும் புதைந்து கிடக்கும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

சிறு வயதில் தாயை இழந்து…

தந்தையின் அருகாமையையும் பெறாமல்…

யாருடைய அன்பையும் முழுமையாக அனுபவிக்காமல் வளர்ந்தவன்.

அதனால் தான் அவன் இவ்வளவு கடினமானவனாக மாறி விட்டானோ என்று அவளுக்கு தோன்றியது.

வெளியில் அனைவரிடமும் கோபத்தையும், அலட்சியத்தையும் காட்டும் அவனுக்குள் இவ்வளவு ஆழமான காயங்கள் இருப்பதை நினைத்து அவளது மனம் வலித்தது.

சில நொடிகள் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.

அந்த அமைதியை கலைத்த பிருந்தாவோ, 

சற்று தயங்கிய படி, “நான் கேக்குறேன்னு கோப படாதீங்க! உங்களுக்கும் விஷ்வாவுக்கும் இடையில அப்படி என்ன பிரச்சனை? ஏன் உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் புடிக்கல?” என்று கேட்க,

அவனோ சிகரட்டை கீழே போட்டு அதை காலால் மிதித்து அணைத்தவன், அவளின் புறம் திரும்பி, “எல்லாத்துக்கும் காரணம் இருக்கணும்னு அவசியம் இல்லை பேபி.  சின்ன வயசுல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் பெருசா ஒத்துப் போனது இல்லை. எல்லாத்துக்கும் போட்டி போட்டுட்டு தான் இருப்போம். அவனுக்கு புடிச்சது எனக்கு புடிக்காது. எனக்கு புடிச்சது அவனுக்கு புடிக்காது.” என்று கூற,

பிருந்தாவோ, “அப்போ என்னை மட்டும் எதுக்கு ரெண்டு பேருக்கும் பிடிச்சது?” என்று கேட்டவளோ சட்டென நாக்கை கடித்துக் கொண்டாள்.

எதற்காக தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டோம் என்று அவளுக்கே புரியவில்லை. 

அவனோ “வாட்?” என்று புருவம் உயர்த்தி அவளிடம் கேட்க,

பெண்ணவளோ இதழ்களை கடித்த படி, “ஒ… ஒன்னும் இல்லைங்க” என்றாள்.

அவனோ அவளின் முகத்தை தன் புறம் திருப்பியவன், “அதான் எனக்கும் தெரில பேபி. இந்த விஷயத்துல மட்டும் எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போயிருக்கே!” என்று கிறக்கமான குரலில் சொன்னவன் மெல்ல அவள் இதழ்களை தன் பெரு விரலால் வருட,

பெண்ணவளுக்கோ மேனி மொத்தமும் சிலிர்த்து போனது. 

ஆனால் அடுத்த நொடியே அங்கிருந்து அவசரமாக எழுந்தவள், “எ…. எனக்கு தூக்கம் வருது… ந… நான் போறேன்” என்று அவசரமாக அங்கிருந்து அறைக்குள் நுழைந்து விட,

சிம்மனோ அவளின் எண்ணம் அறிந்து உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top