உன் நிழல் நான் தொட ep 9

அத்தியாயம் 9

அடுத்த நாள் அஜீத்திடம் மன்னிப்புக் கேட்டு, மறுத்த அஜீத்தை அழைத்துக்கொண்டு சென்று உடைந்த போன் மாதிரி ஒன்றையே வாங்கிக் கொடுத்துவிட்டாள். தனக்கானதைத் தேர்வு செய்யச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் வந்த அஜீத்,

“ரத்னா, உனக்கு அதுக்கப்புறம் எந்தப் பிரச்சினையும் இல்லையே?”

“என்ன பிரச்சினை? ஜஸ்வந்த் பத்திச் சொல்றியா? நான் அதை அப்பவே மறந்துட்டேன்.”

“நீ மறந்துட்ட, ஆனா ஜஸ்வந்த் இதை மறந்து இருக்கணுமே.”

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. சரி அதை விடு, இந்த போன் எப்படி இருக்கு?” ரத்னா எடுத்த பட்டன் போனைப் பார்த்து,

“இந்த போனா? வேற ஏதாவது நல்ல போனா எடு.”

“இந்த போன்லதான் எனக்குப் பிடிச்ச கேம் இருக்கும். அதான் நான் இதையே எடுத்துக்கிறேன்.”

“புது போன் வாங்கி யாராவது கேம் விளையாடுவாங்களா?”

“நான் விளையாடுவேன்.”

“இந்த போன் வாங்கு. அதுல வேணும்னா உனக்குப் புடிச்ச மாதிரி நிறைய கேம் டவுன்லோட் பண்ணி வச்சுக்கலாம்.” ஒருவழியாக போன் வாங்கிவிட்டு வெளியேற, ரத்னாவை ஒருவன் பின்தொடர்வதை அறிந்த அஜீத்,

“ரத்னா வா, நான் உன்னை ஹாஸ்டல்ல விடுறேன்.”

“வேண்டாம் அஜீத், நான் பஸ்ல போயிடுறேன்.”

“ஓகே, இந்த சிம் கார்டை உன் போன்ல போட்டுக்கோ. நீ ரீச் ஆனதும் கால் பண்ணு.”

“சரி பாய்.”

அதன் பின் வந்த நாள்களில் வேறு வேறு நபர்களால் ரத்னா கண்காணிக்கப்படுவதை அறிந்த அஜீத், ரத்னாவைத் தனியே அனுப்புவதில்லை. தானோ, பிரபுவோ அல்லது ஸ்டெல்லாவோ யாராவது ஒருவன் அவளுடன் இருக்கும்படி கவனித்துக் கொண்டான்.

இதற்கிடையே தினமும் இரவில் தாமதமாகத் தந்தை வருவதைக் கவனித்த அஜீத் தாயிடம் கேட்க,

“புதுசா இன்னொரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கப் போறாங்க. அதான் அப்பாக்கு வேலை அதிகம். எல்லாத்தையும் ஒரே ஆளா பார்த்துக்க வேண்டியதா இருக்கு” எனத் தன் கணவரின் கஷ்டங்களை மகனிடம் பகிர்ந்துகொண்டார். அன்று இரவு தாமதமாக வீடு வந்த கணவரிடம் மைதிலி,

“நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படணும்? வேலை பார்த்துக்கக் கூடுதலாக ஆள் போடலாமே” என்றார்.

“எவ்வளவு ஆள் இருந்தாலும் சில வேலையை நாமதான் பார்க்கணும்.”

தந்தையின் சோர்ந்த தோற்றத்தைப் பார்த்த அஜீத், அடுத்த நாள் கல்லூரி முடிந்ததும் நேராகத் தந்தையின் சூப்பர் மார்க்கெட் சென்றான்.

“என்ன அஜீத், எதுக்கு இப்போ கடைக்கு வந்துருக்க? என்ன விஷயம்?”

“எனக்கு உங்க கடையில வேலை வேணும்.”

“என்ன வேலையா? ஒழுங்கா வீட்டுக்குப் போய் படிக்கிற வழியைப் பாரு.”

“நான் ஒன்னும் படிப்பை விட்டுட்டு வேலைக்கு வர்றேன்னு சொல்லல. காலேஜ் முடிஞ்சதும்தான் வேலை பார்க்க வர்றேன்.”

“இப்போ அதுக்கு என்ன அவசியம்? வீட்டுக்குப் போ.”

“அவசியம்தான். நீங்கதானே சொன்னீங்க, சின்ன வயசுல இருந்து யாரோட தயவும் இல்லாம சுயமா சம்பாதிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்னு. நான் உங்க பையன், எனக்கும் உங்க குணம் கொஞ்சம் இருக்கும் தானே? ஒருவேளை உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா நீங்க வேலை தர வேண்டாம், நான் வேற வேலை தேடிக்கிறேன்.”

இரவு தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததை மகன் கேட்டுக்கொண்டிருந்ததைக் கவனித்த கிருஷ்ணசந்திரன், மகன் தனக்காக எடுத்த முடிவை நினைத்துப் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டாமல்,

“சரி வேலை பாரு, ஆனா உன் படிப்பு பாதிக்காமப் பார்த்துக்கோ” என்றார்.

தந்தையின் அனுமதி கிடைத்ததும் அன்றிலிருந்து மாலை கடைக்கு வந்து இரவு வரை வேலை பார்ப்பது, சனி ஞாயிறு வாடகைப் பணம் வசூலிக்கச் செல்வது என்று இருக்க, அஜீத்தின் தந்தைக்கு மற்ற வேலைகளைப் பார்ப்பதற்கு நேரம் கிடைத்தது. கூடுதலாக இருவருக்கும் இடையே ஒரு புரிதலும் உருவாகி இருந்தது. அடுத்த மாத ஆரம்பத்தில் அஜீத்திடம் ஏழாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு,

“உனக்கு மாச சம்பளம் இப்போதைக்கு 15,000. இந்த மாசம் பாதியிலதானே வேலைக்கு வந்த, அதான் 7,000 கொடுத்துருக்கேன்.” தந்தை தந்த பணத்தை வாங்கிக்கொண்டு வீடு வந்த அஜீத், மறுநாள் காலை சாப்பிடும்போது தந்தையிடம் பணத்தைத் தந்து,

“என்னோட முதல் மாச சம்பளம்.”

“அதை எதுக்கு என்கிட்ட தர்ற?”

“உழைக்கிறதுக்கு மட்டும் இல்ல, ஒழுக்கமா வாழவும் உங்ககிட்டதான் கத்துக்கிட்டேன். நீங்க சம்பாதிக்கும்போது உங்க அப்பா இல்ல, அதனால உங்க அப்பாக்கு எதுவும் செய்ய முடியலன்னு சொல்லுவீங்க. இப்போ நான் சம்பாதிச்ச பணத்தை வச்சு இந்த குடும்பத்துல உள்ள எல்லாச் செலவையும் பார்த்துக்க முடியாது, ஆனா என்னுடைய செலவைப் பார்த்துக்க முடியும்.

இதுவரைக்கும் உங்ககிட்ட இருந்து பணம் வாங்கிப் பழகிட்டேன். இனியும் அதை மாத்திக்க விரும்பல. அப்பாகிட்ட பணம் வாங்கும்போது காரணம் இல்லாம வாங்க முடியாது. அதனால உங்ககிட்ட இருக்கட்டும். என்னோட செலவுக்கு என்னால காரணம் சொல்ல முடியும். இனிமேல் அம்மா மூலமா கேட்காம நானே நேரடியா உங்ககிட்ட காரணம் சொல்லிட்டுப் பணம் வாங்கிக்கிறேன்.” மகனின் பேச்சில் இருந்த தெளிவைப் பார்த்து அஜீத்தின் தோளைத் தட்டிக் கொடுத்து,

“இதுவரைக்கும் உன்கிட்ட நான் எந்தவொரு விஷயத்தையும் கலந்து பேசி முடிவெடுத்தது இல்ல. அது தப்புன்னு புரிய வச்சுட்ட” எனக் கூறிவிட்டுக் கடைக்குச் சென்றுவிட, தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலைப் பார்த்த சந்தோஷத்தில் அன்னை கண்கலங்கி நிற்க, அர்ச்சனா ஆச்சரியத்தில்,

“அண்ணா, உண்மையிலேயே உங்ககிட்ட பேசுனது அப்பாதானா? இல்ல அப்பாவோட டூப்பா?” என்றாள்.

“ஏய் அப்பாவைப் பத்தி அப்படிப் பேசாத” என்று தங்கையின் தலையில் செல்லமாகக் கொட்டிவிட்டு கல்லூரி சென்றுவிட, அர்ச்சனா அன்னையிடம்,

“இந்த வீட்டுல என்னம்மா நடக்குது? அப்பா புள்ளை ரெண்டு பேரும் ஓவரா படம் ஓட்டிட்டுப் போறாங்க” என்றாள்.

அஜீத்தின் கவனம் முழுவதும் ரத்னாவிடம் இருப்பதைத் தான் நியமித்த ஆள்களின் மூலம் அறிந்துகொண்ட ஜஸ்வந்த், ரத்னாவை நெருங்க ரூபா மற்றும் தங்கமுத்துவின் உதவியை நாட முடிவு செய்தான். இதற்கிடையே ஜஸ்வந்த் ஆவலுடன் எதிர்பார்த்த ஜூலை 17 ஆம் தேதியும் வந்தது. 

ரூபா மற்றும் தங்கமுத்துவிடம் தன் காதலைத் தெரிவித்து, அவர்களின் அனுமதியுடன் அந்த நாளைச் சிறப்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் நண்பனின் உதவியுடன் செய்து முடித்துவிட்டு காலை கோவை வந்துவிட்டான். மதியம் தங்கமுத்து, ரூபா, ஹர்ஷத், அவர்களின் பெண் குழந்தை ராதிகா என அனைவரும் வந்ததும் ரத்னாவை அழைத்து வர ஹாஸ்டல் செல்ல, அங்கு ரத்னா இல்லை.

ஜஸ்வந்த் தான் ரத்னாவைக் கண்காணிக்க நியமித்த நபரைக் கேட்க, ‘காலேஜ் கிரவுண்டிற்குச் சென்ற ரத்னாவை அதன் பிறகு பார்க்கவில்லை’ என அவன் கூறினான். ஹாஸ்டல் வார்டன் மணிமேகலையிடம் கேட்க, அவர் மூலம் ரத்னா எல்லாச் சனி ஞாயிறும் அவுட்டிங் செல்வதை அறிந்துகொண்டான். தங்கவேலு மற்றவர்களிடம்,

“ரத்னா இப்படி எல்லாம் ஊர் சுத்துற பொண்ணே கிடையாது. எங்க ஊர்ல இருக்கும்போது கூடத் தனியா எங்கேயும் போக மாட்டா.” ஜஸ்வந்த் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த எண்ணி,

“இப்போவும் ரத்னா தனியா எங்கேயும் போயிருக்க மாட்டா. எல்லாம் அந்த அஜீத் கூடதான் போயிருப்பா.” உடனே ரூபா,

“யாரு அது?”

“அஜீத் ரத்னாவோட கிளாஸ்மேட். ரெண்டு முறை ரத்னா கூட பார்த்திருக்கேன். அவன் ரத்னாகிட்ட ரொம்ப ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறான். ஐ திங் அஜீத் ரத்னாவோட இன்னசென்ட் பிஹேவியரை பயன்படுத்திக்கப் பார்க்கிறான்.” அஜீத்தைப் பற்றிய தவறான எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட தங்கவேலு,

“இது மட்டும் உண்மையா இருந்தா அவனை நான் சும்மா விடமாட்டேன்.” கோபப்படும் தங்கவேலுவைச் சமாதானம் செய்த ஹர்ஷத்,

“வேலு, கோபப்படாமல் பொறுமையாக இருங்க. நமக்கு ரத்னா எங்கே போயிருக்கான்னு தெரியாது, அதே மாதிரி யாருகூடப் போயிருக்கான்னு தெரியாது. ஒருவேளை ஜஸ்வந்த் சொன்ன மாதிரி அந்த அஜீத் கூடப் போயிருக்கலாம். இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? அவங்க ரெண்டு பேரும் ஒன்னா படிக்கிறவங்க, ஒருவேளை கம்பைன் ஸ்டடி பண்றதுக்காக மீட் பண்ணலாம். இதுல தப்பு ஒன்னும் இல்லை.” அண்ணன் அஜீத்திற்குச் சார்பாகப் பேசுவதைப் பார்த்த ஜஸ்வந்த்,

“எனக்கு என்னவோ அந்த அஜீத்தைப் பார்த்தா நல்ல அபிப்பிராயம் இல்ல.”

“அது உன்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூ. அதை நீ மத்தவங்க மேல திணிக்க நினைக்காதே.”

“சரி ஓகே அண்ணா, நான் என்னுடைய எண்ணத்தை மத்தவங்க மேல திணிக்க விரும்பல. ஆனா இப்ப ரத்னா சனிக்கிழமை காலேஜ் கிரவுண்டில் ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸிற்காக இருப்பா, இன்னைக்கு அங்கேயும் இல்லை, வேற எங்கே போயிருப்பா?”

இவர்கள் ஹாஸ்டலின் முன்பு பேசிக் கொண்டிருக்கும்போதே, அங்கே ரத்னாவின் அம்மா, அப்பா, பெரியப்பா மூவரும் ரத்னாவைக் காண வர, இவர்களை எதிர்பார்க்காத மற்ற நால்வரும் அதிர்ச்சியடைய, அனைவரும் அதிர்ச்சியில் என்ன பேசுவதென்று தெரியாமல் இருந்த வேளையில் ரூபாவின் மகள் ராதிகா மெதுவாக முத்துவேல் அருகில் சென்று,

“பெரிய தாத்தா, நீங்க என்னைப் பார்க்கவா வந்தீங்க? அம்மா நம்ம சித்தியைப் பார்க்கப் போறதாத்தான் சொன்னாங்க. எதுக்கு தாத்தா என்னை இவ்வளவு நாளா பார்க்க வரல?” எனத் தன் மழலை மொழியில் கேட்க, அருகில் இருந்த பார்வதி அனுமதிக்காகப் பெரியவரை ஒரு முறை பார்க்க, அவர் அமைதியாக இருப்பதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தார். சிறிது நேரம் சென்ற பின்பு அதுவரை மௌனமாக இருந்த முத்துவேல்,

“பார்வதி, நாம இங்க வந்தது ரத்னாவுக்காக. அதை விட்டுட்டு நாம தேவையில்லைன்னு போனவங்களைப் பார்க்கிறதுக்கு இல்ல. ரத்னாவுக்கு போன் பண்ணி நம்ம ஹாஸ்டலுக்கு வெளியே நிக்கிறதைச் சொல்லு.” பார்வதியும் ராதிகாவை ரூபாவிடம் கொடுத்துவிட்டு மகளை அழைக்க, மறுமுனையில் ரத்னா,

“அம்மா, நான் இப்போ குற்றாலத்துல குளிச்சிட்டு வந்துகிட்டு இருக்கேன். இன்னும் 20 நிமிஷத்துல வந்துடுவேன்” என்று கூற, மகளின் பதிலில் குழப்பமடைந்த பார்வதி, ரத்னா தொடர்பைத் துண்டித்ததும் மற்றவர்களிடம்,

“ரத்னா வெளிய எங்கேயோ போயிருக்கலாம். வந்துகிட்டு இருக்கா” என்று மட்டும் கூற, அனைவரும் ரத்னாவிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர். சரியாக 20 நிமிடம் கழித்து காரின் ஒரு புறமிருந்து ரத்னாவும், மறுபுறம் அஜீத்தும் இறங்குவதைக் கண்ட குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, ரத்னா அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில்,

“எல்லாரும் இன்னைக்கு வர்றேன்னு சொல்லவே இல்ல. நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்” என்று கூறிவிட்டு அஜீத் புறம் திரும்பி,

“நீ சொன்ன மாதிரியே என்னோட பதினெட்டாவது பிறந்தநாளுக்கு எல்லாமே எனக்குக் கிடைச்சிடுச்சு” என மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருக்க, ரத்னாவின் பெரியப்பாவின் அருகில் வந்த அஜீத்,

“அங்கிள் நல்லா இருக்கீங்களா? என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறி முத்துவேலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவன் தலையில் கையை வைத்து,

“அஜீத், இன்னைக்கு மாதிரி என்னைக்கும் எல்லா நாளும் ரொம்பச் சந்தோஷமாய் இருக்கணும்” என ஆசீர்வதிக்க, மீண்டும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுந்தது.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top