உன் நிழல் நான் தொட ep 8

அத்தியாயம் 8

 

ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 

கடந்த ஆறு வருடங்களில் ரத்னா தன் விளையாட்டுத் தோழனாக இருந்த ஜஸ்வந்தை மறக்கவில்லை. அதே சமயம் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டும் இருக்கவில்லை. ரூபாவின் நினைவு வரும்போதெல்லாம் ஜஸ்வந்தின் நினைவும் வந்து போகும். அதற்கு மேல் ரத்னா யோசித்துப் பார்த்ததில்லை. திடீரென்று தன்னை காதலிப்பதாக அவன் கூறவும், அவளது மூளையே செயலற்றுப் போனது.

ரத்னாவின் பதிலுக்காகக் காத்திருந்த ஜஸ்வந்த், அவளது உணர்ச்சியற்ற வெளிறிய முகத்தைப் பார்த்துப் பயந்தான். பயத்தில் இருந்த ரத்னாவைச் சமாதானப்படுத்தும் முன், ரத்னா கையில் இருந்த அஜீத்தின் போன் ஒலித்தது. 

அந்த ஓசையில் சுய உணர்வு பெற்ற ரத்னா, ‘இது யாராக இருக்கும்?’ என யோசித்துக் கொண்டிருக்க, போன் எழுப்பிய இசையில் ரத்னாவிடம் வந்த அஜீத், அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்து ஏதோ பிரச்சனை என்பதை அறிந்துகொண்டான். ரத்னாவைத் திசை திருப்ப எண்ணி,

“ரத்னா, போன் அடிக்குது கேக்கலையா?” என்றான்.

“பார்த்தேன், Unknown Number-ன்னு வந்துச்சு. அதான் என்ன செய்யணும்னு தெரியல.”

“ஒருவேளை உன் அக்காவாக இருந்தா எடுத்துப் பேச வேண்டியதுதானே.” அஜீத்தின் பேச்சைக் கேட்ட ஜஸ்வந்த், ரத்னா எப்போது போன் வாங்கினாள், ரூபாவிடம் எப்படி ரத்னா நம்பர் கிடைத்தது என யோசித்துக் கொண்டிருந்தான்.

“ப்ளீஸ் அஜீத், எனக்கு இப்போ தனியா இருக்கணும் போல இருக்கு. நான் ஹாஸ்டலுக்குப் போறேன்” என்று வெளியேற முயற்சி செய்த ரத்னாவின் கைகளைப் பற்றிய ஜஸ்வந்த்,

“ரத்னா, எனக்கான பதிலைச் சொல்லிட்டுப் போ” என்றான்.

ரத்னா ஜஸ்வந்த் கையிலிருந்து விடுபட முயற்சி செய்துகொண்டே, “ப்ளீஸ் கைய விடுங்க, எல்லாரும் பாக்குறாங்க. நான் குழப்பமா இருக்கும்போது எதுவும் பேசமாட்டேன். நான் கொஞ்சம் யோசிச்சுட்டு உங்ககிட்ட பேசுறேன்” என்றாள்.

“ரத்னா, இதுல நீ யோசிக்க என்ன இருக்கு? நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா எப்பவுமே உங்க அக்கா கூட இருக்கலாம். உனக்கு பிடிச்ச எல்லாமே உனக்குக் கிடைக்கும்.” தன் கையை விடாமல் அவன் பேசிக் கொண்டே செல்ல, பொறுமை இழந்த ரத்னா,

“ஜஸ்வந்த், நான் யோசிக்கிறேன்னு சொன்னது உங்க காதலப் பத்தி இல்ல. நீங்க சொன்ன விஷயத்தை உங்க மனசு கஷ்டப்படாம எப்படி வேண்டாம்னு சொல்றதுன்னுதான்.”

“நீ என்னை வேண்டாம்னு சொல்றதுக்கு என்கிட்ட என்ன குறை இருக்கு? அப்படி என்ன மறுக்கிறாய்? இருக்கிற ஒரே ஒரு காரணத்தைச் சொல்லு.” அதற்கு மேல் சும்மா இருக்க முடியாத அஜீத், ஜஸ்வந்த் கையிலிருந்து ரத்னாவின் கைகளைப் பிரித்து எடுத்தான். அஜீத்தைப் பார்த்து முறைத்துவிட்டு,

“நீ எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வராத, வெளியே போடா ரஸ்கல்!” என்றான் ஜஸ்வந்த்.

“வார்த்தையை அளந்து பேசுங்கள். அஜீத் என்னுடைய ஃப்ரெண்ட்.”

“இவன் உனக்கு ஃப்ரெண்டா? அப்படின்னா நான் உனக்கு யாரு?”

“உங்களை நானும் இத்தனை வருஷமா பிரண்டாத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா அது இந்த நிமிஷம் இல்லாமப் போயிடுச்சு. நீங்க உங்களை மறுக்க ஒரு காரணம் கேட்டீங்க, இப்போ நான் அதைச் சொல்றேன். எனக்குக் காதல்னா சுத்தமா பிடிக்காது. 

எங்க அக்கா காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ சந்தோஷமாத்தான் இருக்கா. ஆனா எங்க வீட்ல யாருமே சந்தோஷமா இல்லை. ஏற்கனவே கஷ்டத்துல இருக்குற அவங்களை என்னால கஷ்டப்படுத்த முடியாது. 

அதுமட்டுமில்லாம உங்களைப் பத்தி மட்டுமே நீங்க யோசிக்கிறீங்க, என்னால அப்படி என்னைப் பத்தி மட்டும் யோசிக்க முடியாது. எனக்கு இந்த உலகத்துல ரொம்ப முக்கியமான விஷயம் என்னோட குடும்பம் மட்டும்தான், வேற எதுவும் எனக்கு முக்கியமில்லை.”

“அப்போ நீ என்னை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா?”

“என் குடும்பத்தைக் கஷ்டப்படுத்தும் எதுவும் யாரும் எனக்குத் தேவையில்லை.”

“ஓகே ரத்னா, ஒருவேளை உங்க வீட்டில உள்ளவர்களே உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சம்மதம் சொன்னா என்ன பண்ணுவ?”

“அப்படி முடிவு பண்ணா எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்லை. என்னோட முடிவு எப்பவும் என்னுடைய குடும்பம்தான்.” ரத்னாவின் பதிலால் ஏற்பட்ட கோபத்தை ஜஸ்வந்த் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, ரத்னா அஜீத்திடம்,

“நான் கிளம்புறேன் அஜீத், நாளைக்குக் பார்க்கலாம்” என்றாள். ரத்னா சென்ற திசையைப் பார்த்துக்கொண்டு அஜீத் நின்றுகொண்டிருக்க, அவனின் சட்டையைப் பிடித்துத் தன் புறம் திருப்பிய ஜஸ்வந்த்,

“நீ ஒழுங்கு மரியாதையா ரத்னாகிட்ட இருந்து தள்ளி இரு. இன்னும் ஒரு தடவை நீ ரத்னாகிட்ட குளோஸா இருக்குறதை நான் பார்த்தா, அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” தன் சட்டையைப் பற்றியிருந்த ஜஸ்வந்த் கையைத் தட்டிவிட்டு,

“இதையே நானும் உங்ககிட்ட சொல்லலாம். இன்னும் ஒரு தடவை ரத்னாவை நீங்க தொந்தரவு பண்ணுனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பார்த்து நடந்துக்கோங்க, ஏன்னா இது என்னுடைய ஊர்” என்று ஜஸ்வந்தை எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அஜீத்.

ரத்னா ஹாஸ்டலுக்கு வந்தவுடன் மீண்டும் அஜீத்தின் போன் ஒலி எழுப்ப, அதை கவனித்த ரத்னா அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ, யார் பேசுறீங்க? இது ரத்னாவா? சீக்கிரம் சொல்லுங்க” என்று எதிர்புறம் இருந்து கேட்ட குரலை உள்வாங்கிய ரத்னா, அது தன் அக்காவின் குரல் என்பதைப் புரிந்துகொண்டு மெல்லிய குரலில் பாடத் தொடங்கினாள்:

ஆசை முகம் மறந்து போச்சே – இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகம் மறக்கலாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்

கண்ணன் அழகு முழுதில்லை;

நண்ணு முகவடிவு காணில் – அந்த

நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

தான் சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடும் பெண் நிச்சயமாகத் தன் தங்கையாகத்தான் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட ரூபா,

“எப்படி இருக்க ரத்னா? நான் உன்கிட்ட பேசணும்னு எவ்வளவு முயற்சி பண்ணேன் தெரியுமா? ஆனா நீ ஒரு தடவை கூட இந்த அக்கா கூடப் பேசணும்னு ஆசைப்படவில்லை.”

“எனக்கு உங்கூடப் பேசணும்னு ரொம்ப ஆசையா இருந்தது அக்கா, ஆனா என்னால உன்னை மாதிரி பெரியப்பா வேண்டாம்னு முடிவு பண்ண முடியல.”

“குட்டிமா, உனக்கு இன்னும் அக்கா மேல கோபம் போகலையா?”

“இப்போ மட்டும் இல்ல, எப்பவும் கோபம் போகாது.”

“அப்புறம் எதுக்கு எனக்கு ஃபேஸ்புக்ல ரிக்வெஸ்ட் கொடுத்த? உன் நம்பரை அனுப்புன?”

“எனக்கு உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. நீ எப்படி இருக்க, எங்க இருக்கன்னு யார் கிட்ட நான் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியும்? அதனால்தான் ரிக்வெஸ்ட் கொடுத்தேன்.”

“அப்படின்னா பழைய மாதிரி என்கிட்ட நீ பேச மாட்டியா?”

“பேசணும்னு ரொம்ப ஆசையா இருக்கு அக்கா. உன் மடியில படுத்துத் தூங்கணும். நீ பாடுன பாட்டு கேட்டு ரசிக்கணும்.”

“இப்போ அதையெல்லாம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.”

“உண்மையிலேயே உனக்கு என்கூடப் பேசணும்னு ஆசையா இருந்துச்சுன்னா, சீக்கிரம் பெரியப்பாகூடச் சமாதானமாகிடு அக்கா.”

“அப்பாகிட்ட பேச நான் முயற்சி பண்ணலன்னு நீ நினைக்கிறாயா?”

“பேச முயற்சி பண்ணிருப்ப. ஒரு தடவை பெரியப்பாகிட்ட மன்னிப்புக் கேளுங்க.”

“அப்பாகிட்ட நான் எதுக்கு மன்னிப்புக் கேட்கணும்? நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு?”

“சரிக்கா, நீங்க பண்ணது எந்தத் தப்பும் இல்லை. ஆனா மன்னிப்புக் கேட்டா நீங்க ஒன்னும் தாழ்ந்து போயிட மாட்டீங்க. அப்புறம் எனக்கு இன்னொரு தடவை போன் பண்ணாதீங்க, இது என்னோட போன் இல்ல, என் பிரண்டு போன்.”

“கோபப்படாத ரத்னா. ஃபேஸ்புக்ல உன்னோட டீடைல்ஸ் பார்த்தேன். நீ கோயம்புத்தூர் காலேஜ்லையா படிக்கிற?” தமக்கையின் கேள்விக்கு பதில் அளித்துவிட்டுச் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். போனை அருகிலிருந்த மேசையின் மீது வைக்க, அது தவறி விழுந்து உடைந்துவிட்டது. அதன் பிறகு ரத்னாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 

சிறுவயதிலிருந்தே பெற்றோருக்குப் பிடிக்காததைச் செய்யாத ரத்னாவிற்கு, பெற்றோருக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் ரூபாவிடம் பேசியதால் ஏனோ மனது பாரமாக இருப்பது போல் உணர்ந்தாள். அதே சமயம் அஜீத் தன்னை நம்பிக் கொடுத்த போனை உடைத்ததை எண்ணி வருந்தினாள். எனவே ஹாஸ்டலில் இருந்த போனின் மூலம் வீட்டிற்கு அழைத்தாள். மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“ஹலோ ரத்னா, எப்படி இருக்க?” என்று பெரியப்பாவின் குரலைக் கேட்டதும் முதலில் தயங்கிய ரத்னா,

“பெரியப்பா நல்லா இருக்கீங்களா? நான் நல்லா இருக்கேன்.”

“என்னம்மா ஆச்சு? உன் குரல்ல ஏதோ மாதிரி இருக்கு.” தன் குரலின் வித்தியாசத்தைப் பெரியப்பா உணர்ந்துகொண்டதை வைத்து அவரின் பாசத்தைப் புரிந்துகொண்ட ரத்னா,

“என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா. நான் உங்களுக்குப் பிடிக்காததைச் செஞ்சுட்டேன்.”

“நீ எப்பவும் இந்த பெரியப்பாவுக்குப் பிடிக்காததைச் செய்ய மாட்ட.”

“இல்ல பெரியப்பா, உங்களுக்கு ரூபா அக்காகிட்ட பேசினா பிடிக்காது தானே? நான் இன்னைக்கு ரூபா அக்காகிட்ட போன்ல பேசினேன். என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா.”

“ரூபா மேல நான் கோபமா இருக்குறது உண்மைதான். அதுக்காக நீ ரூபா கிட்ட பேசக் கூடாதுன்னு நான் எப்பவும் சொன்னது இல்ல. அதனால கவலைப்படாம உன் படிப்பைப் பாரு, சரியா? வேற எதுவும் இருக்கா?”

“இன்னும் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்.”

“சொல்லும்மா.”

“என்னோட ப்ரெண்ட் போன்ல இருந்துதான் அக்கா கிட்டப் பேசினேன். அந்தப் போன் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு.”

“உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஒரு பொருளை ஒருத்தன்கிட்ட இருந்து வாங்கினா அதை பத்திரமாக அவங்ககிட்டத் திருப்பிக் கொடுக்கணும். அப்பதான் அவங்க இன்னொரு தடவை நமக்கு உதவி பண்ண நினைப்பாங்க. கையிலதான் ஏடிஎம் கார்டு இருக்குதானே? நாளைக்கு புது போன் வாங்கி உன் பிரண்டு கிட்டக் கொடுத்திடு. அப்படியே உனக்கும் ஒரு போன் வாங்கிக்கோ.”

“எனக்கு போன் வேண்டாம் பெரியப்பா.”

“உனக்கு வேண்டாம், ஆனா எங்களுக்கு உங்கூட எப்பப் பேசணும்னு தோணினாலும் ஹாஸ்டலுக்குப் போன் பண்ணிட்டு காத்திருக்க முடியல. அதனால போன் வாங்கி உன் கையிலேயே வச்சுக்கோ, சரியா?”

“சரி பெரியப்பா.” 

பெரியப்பாவிடம் பேசிய பின்பு மனது லேசானது போல ரத்னா உணர்ந்தாள். 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top