ஏமாற்றங்களும் ஏக்கங்களும் அவனிற்கு புதிதல்லவே..! பக்குவப்பட்ட மனது ,’ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது …?’ என்று துயரங்களைக் கண்டு சோர்ந்து போய்விடாமல் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு தள்ளிக் கொண்டு சென்று விடுகிறது.
சின்ன சிரிப்புடன் அனைத்தையும் கடந்து வர பழகிக் கொண்டான்.
மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
அவ்வபோது ஆருத்ராவை கேட்டு தொணதொணத்த அனு சந்தியாவை தனது நினைவிலிருந்து தள்ளி வைத்து விட்டாள் போலும். கோபப்படாமல் அவள் புரிந்து கொள்ளும் வகையில் சமாதானப்படுத்தி வைப்பான் வாசு.
மூத்த அதிகாரியாக பதவியுயர்வு அடைந்த பிறகு கணிசமான அளவிற்கு அவனது சம்பளமும் உயர்ந்தது. இதர சலுகைகளும் அவனுக்கு கிடைத்தது. ஓரளவிற்கு வீட்டுத் தவணையை கட்டி முடித்து விட்டான். சில மாதங்களே எஞ்சியிருந்தது.
திவ்யா அவ்வப்போது வந்து அனுவையும் வாசுவையும் பார்த்து விட்டு செல்வாள். ஆரோனுடன் விளையாடிக் கொண்டிருப்பாள் அனு.
அன்று ஞாயிற்றுக்கிழமை..
திவ்யா ஆரோன் மற்றும் ப்ரகாஷுடன் வந்திருந்தாள் அவளும் . புதிய வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். ப்ரகாஷ் அவளை விட்டுவிட்டு வெளியே சென்றிருந்தான்.
அனுவிற்கும் ஆரோனுக்கும் மதிய உணவை ஊட்டி முடித்து விட்டு தான் உண்டு முடித்தான். திவ்யா அனுவையும் ஆரோனையும் தூங்க வைத்திருந்தாள். அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
மதிய வேளையில் யாரென்று யோசித்தபடி கைக்கழுவி விட்டு தோளில் போட்டிருந்த துண்டினால் கையைத் துடைத்தவாறு சென்று கதவைத் திறந்தான்.
அடர் பச்சை புடவையில் மிதமான ஒப்பனையில் தோள் பையுடன் நின்றிருந்தாள் ஆருத்ரா.
அவளைக் கண்டு ஒரு கணம் திகைத்தாலும் புன்னகை முகமாகவே அவளை வரவேற்றான் வாசு.
“ உள்ள வா ஆருத்ரா…”
அவனது அழைப்பு எப்போது ருத்ராவாகும் எப்போது ஆருத்ராவாகும் என்பதை நன்கு அறிந்திருந்தாள் அவனது அழைப்பில் ஒரு கணம் நெற்றியை சுருக்கி விட்டு உள்ளே நுழைந்தாள்.
அனுவையும் ஆரோனையும் ஒரு அறையில் தூங்க வைத்துவிட்டு வந்தாள் திவ்யா.
திவ்யா இதுவரை ஆருத்ராவைப் பார்த்ததேயில்லை ஆனால் திவ்யாவை ஆருத்ரா ஓரிரு தடவை தூரத்தில் இருந்து பார்த்திருக்ககன்றாள் .
வாசுவும் திவ்யாவன் புகைப்படத்தை அவளிடம் காட்டியுள்ளான்.
அவளருகில் வந்த ஆருத்ரா, “ஹாய் திவ்யா..எப்படியிருக்க? “என்றாள்.
“ நீங்க..?” என்றாள் யோசனையுடன்.
திரும்பி வாசுவைத் தீயென முறைத்தாள் ஆருத்ரா.
“ சோ…ஒரு நாள் கூட உங்கண்ணன் என்னோட போட்டோவை உங்கிட்ட காமிச்சதேயில்லையா..?” என்றாள்.
திவ்யா வாசுவைப் பார்க்க அவனோ பார்வையை வேறு புறம் திருப்பினான்.
“ உங்கண்ணனோட முன்னால் காதலி நான் தான். ஒருவேளை உங்கணணன் உன் கிட்ட நாங்க காதலிக்கும் விஷயத்தை சொல்லியிருந்தா…வாழ்க்கை கொஞ்சம் மாறியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனா…பாரு.. என்னவோ கள்ளக்காதல் பண்ணற மாதிரி ரகசியமாவே கடைசி வரை வச்சிருந்து கழுத்தை அறுத்துட்டாரு. …இட்ஸ் ஓகே நெவர் மைண்ட்..இப்ப நான் வந்திருக்குறது என்னோட கல்யாணப் பத்திரிக்கையை குடுத்துட்டு போகத்தான். இந்தா…உனக்கொண்ணு உங்க அண்ணனுக்கு ஒண்ணு…மறக்காம கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடுங்க….யூ நோ ஒன் திங்க்..ஹனிமூனுக்கு கூட ஃப்ளான் பண்ணிட்டோம். ம்ம்..பிரிச்சு பாரு..” என்றாள் இலகுவாக.
திவ்யாவோ திகைத்து போய் நின்றிருந்தாள்.
“ அட…வாங்கிக்கோ..திவ்யா..” என அவளது கையைப் பிடித்து திணித்தாள் பத்திரிக்கையை.
ஏதோ ஒன்று உள்ளே உடைய கலங்கிய கண்களுடன் வாங்கிக் கொண்டாள் திவ்யா.
வாசுவின் அருகில் வந்தவள் , “இந்தாங்க மிஸ்டர் வாசுதேவன் உங்களுக்கு தான். ம்ம்… வாங்கிக்கோங்க…” என்றாள்.
ஒரு வித வலி பரவி கால்களை தோய்வடையச் செய்தது.
அவனது கைகள் அவள் நீட்டிய பத்திரிக்கையை வாங்க மறுத்து சண்டித்தனம் செய்தது.
“ அட வாங்கிக்கோங்க…மிஸ்டர் வாசு…தேவன்.. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்…கண்டிப்பா நீங்க குடும்பத்தோட வரணும். உங்களை மாதிரியெல்லாம் திருட்டுத்தனமா அவசர அவசரமா தாலிக் கட்டிக்க மாட்டேன்…ஊர் உலகத்தை கூப்பிட்டு கிராண்டா..இன்னாரோட மனைவி நான் னு உரக்கச் சொல்லி அவர் கையால தாலி வாங்கிப்பேன்…நீங்களும் அதை பாக்க தானே போறீங்க..வந்துடுங்க…” என்று சிரித்தபடி நீட்டினாள்.
அவனோ வேறு புறம் திரும்பிக் கொண்டு, “ வேண்டாம் ருத்ரா…ஒடைஞ்சி போயிருக்குறவனை திரும்ப திரும்ப உடைச்சு போடாத…நீ பத்திரிகையை டேபிள்ல வச்சிட்டு போ…எங்கிருந்தாலும் நீ நல்லா இருக்கணும். கண்டிப்பா உன் மனசுக்கு நீ நல்லா தான் இருப்ப..” என்று கூறியவன் சன்னல் கம்பிகளை இறுகப் பிடித்துக் கொண்டான்.
அதற்குள் பத்திரிக்கையை பிரித்துப் பார்த்த திவ்யாவிற்கு விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் போல இருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். ஆம்..! அவளது கண்கள் அவளை ஏமாற்றவில்லை.
நிஜம் தான்…மணப்பெண் பெயரில் ஆருத்ராவின் பெயரிருக்க மணமகன் பெயரில் மா.வாசுதேவன், ,வி.ஏ சொல்யூஷன்ஸ் என்று அச்சகடப்பட்டிருந்தது.
“ டேய்…அண்ணா …! இங்க பாரு டா…மணமகன்ங்கற இடத்துல உன்னோட பேரை போட்டுருக்காங்க…” என்று கத்தினாள்.
ஆருத்ராவோ வாசுவின் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அவனோ திகைத்து அவளைப் பார்க்க , “பத்திரிக்கையை பிரிச்சிக் கூட உங்களால பாக்க முடியலை. அவ்வளவு நம்பிக்கை ம்ம்…? எங்கிருந்தாலும் வாழ்க வா… நீங்க வாங்க உள்ள..”என்று அவனது டீசர்ட்டைப் பிடித்து அரசி தங்கியிருந்த அறைக்கு இழுத்துச் சென்றாள்.
ப்ராகஷ் அப்போது சரியாக வெளியில் இருந்து உள்ளே வர, அவனது பார்வையில் பட்டது ஆருத்ரா வாசுவை இழுத்துக் கொண்டு செல்லும் காட்சி தான்.
அதைப் பார்த்துக் கொண்டே வந்து திவ்யாவின் மீது மோத, “ ஆஆ…காலு……எங்க பராக்கு பாத்துட்டே வர்றீங்க?” என்றவளுமே தனது அண்ணனை ஆருத்ரா இழுத்துச் சென்றதை தான் வாயைப் பிளந்தது கொண்டு பார்த்திருந்தாள்.
“ சாரி…சாரி…திவி…உங்கண்ணனை யாரோ ஒரு பொண்ணு இழுத்துட்டு போறாங்க டீ..யாரு அவங்க? என்ன ஆச்சு?” என்றான் அவர்கள் சென்ற அறையை எட்டி எட்டி பார்த்தபடியே.
அவனது தலையில் லேசாக தட்டியவள், “ கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அங்க ஏன் எட்டி எட்டி பாக்குறீங்க?”
“ யாருக்கு மேனர்ஸ் இல்ல எனக்கா? “
“ ஆமா”
“சரிதான்…சொல்லு யார் அவங்க ?”
“ அவங்க தான் அண்ணனோட எக்ஸ்.. என்னால முடிஞ்சது போச்சு னு நினைச்ச விஷயத்துக்கு மறுபடியும் பிள்ளையார் சுழி போட்ருக்காங்க” என்றவள் ஆருத்ரா வந்ததில் இருந்து நடந்த விவாதத்தைப் பற்றி ப்ரகாஷிடம் கூறினாள்.
“ எப்படியோ வாசு ஃப்ரோக்கு நல்லது நடந்தா சரி. அனுவுக்கு ஒரு நல்ல அம்மா கிடைச்சா போதும். உங்கண்ணனுக்கும் நல்ல வாழ்க்கை துணை அமைஞ்சா நிஜமாவே எனக்கு சந்தோஷம் தான் “ என்றவனுக்கு சந்தியாவின் துரோகத்தை நினைத்து முகம் கசங்கியது.
ஒரு நல்ல மனிதனன் வாழ்க்கை தனது தங்கையின் சுயநலத்தினால் சிதைத்து போனது அவனுக்கு வேதனையைத் தான் அதிகம் கொடுத்தது.
அவனது முகத்தை வைத்தே அவனது எண்ணத்தை படித்தவள் ஆறுதலாக அவனது கைகளை பிடித்துக் கொண்டாள்.
இங்கோ அறைக்குள் வாசுவை இழுத்துச் சென்றவள் கதவை தாழ் போட்டுவிட்டு அதன் மீது சாய்ந்து நின்றாள்
“பத்திரிகை பிரிச்சு பாருங்க..”
பிரித்து பார்த்தவனின் விழிகள் ஆச்சர்யத்தோடு அவளைப் பார்த்தது.
“ இ…இது…நிஜம் தானா ருத்ரா?”
“ எது..?”
“ நீ..என்னை நம்ம…கல்யாணம்…” என்று சந்தோஷ மிகுதியால் திக்கினான்.
விழிகளை மூடி திறந்து கொண்டே, “ம்ம்..” என்றாள்.
அவளருகே ஓடி வந்து அணைக்க முயன்றவன் சட்டென்று தேங்கி நின்று அவளது கரங்களை பிடித்துக் கொண்டு, “தேங்க்ஸ்…ருத்ரா..” என உணர்ச்சி பெருக்கில் நின்றிருந்தவனை பளாரென்று அறைந்திருந்தாள்.
கன்னத்தை பிடித்து கொண்டு திகைத்து போய் அவளைப் பார்த்தான்,
“ இது எல்லாத்துக்கும் தான்...இதே மாதிரி தான் டா.. அன்னைக்கு உன்னோட கல்யாணப் பத்திரிக்கையையும் பாக்கும் போது எனக்கும் இருந்திருக்கும்..ஹான்..! அதெப்படி கொஞ்சம் கூட கூசாம… எங்கிருந்தாலும் வாழ்கன்னு உன்னால டையலாக் அடிக்க முடியுது.? சத்தியமா என்னால லாம் அப்படி இருக்க முடியாது தேவ்… அப்பறம் என்ன சொன்ன..? தேங்கஸா? எதுக்கு தேங்க்ஸ்…? என்ன டாஷூக்கு தேங்க்ஸ்? உன்னைய கல்யாணம் பண்றதுக்கு தேங்க்ஸா? அனுவை பாத்துக்கணும்ங்கறதுக்காக தேங்க்ஸா..? எப்படி இப்படி ஃபார்மலா பேசற..?” என்று அவனது சட்டையை பிடித்து கொண்டு உலுக்கினாள்.
“ தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன்…விடேன்..”
“ அதெல்லாம் முடியாது..” என்று கூறி விட்டு கைகளை கட்டிக்கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.
அவளை சுற்றிக் கொண்டு வந்தவன் தனது இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு, “ சாரி..” என்று கூறி கண்களை சுருக்கினான்.
“ முடியாது…” என்று மறுபடியும் திரும்பி நின்று கொண்டாள்.
அனு கோபித்துக் கொண்டு நிற்பதை போலவே இருந்தது. சிறு புன்னகை அவனுதட்டில் தோன்றியது.
“ சரி என்ன பண்ணுனா உன் கோபம் குறையும் சொல்லு? பண்றேன்..” என்று முழுவதுமாக அவளிடம் சரணடைந்து விட்டான்.
“ நிச்சயமா”
“ ம்ம்..”
“ அப்ப…இங்க…இங்க..இங்க.யெல்லாம் கிஸ் பண்ணுங்க” என்று உதடு , கண்கள், கன்னம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி கூறினாள்.
அவள் கூறிய இடங்களைத் தவிர்த்து உச்சி முகர்ந்து ஆத்மார்த்தமாக நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
ஆம்…! நெற்றி முத்தத்தில் மட்டுமே காமத்தையும் தாண்டிய தூய அன்பையும் பாதுகாப்பையும் உணர முடியும் . பெண்ணவளை அவ்வாறு உணர வைத்தான்.
தன்னவனைப் பற்றித் தெரியாதவளா அவள் ? விழியோரம் நீர் கசிய அவனது முத்தத்தை ஆழ்ந்து உள் வாங்கிக் கொண்டாள் .
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரு கன்னங்கள், விழிகள் என்று முத்தமிட்டவன் அவளது முகத்தை தாங்கியவாறு , “ உன்னை மாதிரி என்னால காதலிக்க முடியுமான்னு தெரியல ருத்ரா. இனி என்னோட முக்கியமான வேலை என்ன தெரியுமா?” என்று நிறுத்தினான்.
“ என்ன..?”
“ உன்னோட மொத்த காதலையும் திகட்ட திகட்ட அனுபவிக்கிறது மட்டுந்தான்.”
“ அப்ப பதிலுக்கு நீங்க அன்பையும் காதலையும் தர மாட்டீங்க அப்படித்தானே?”
“என்னால முடிஞ்ச அளவுக்கு தர்றேன் தேவியாரே.” என்றான் கேலியாக.
அவனை இன்னும் நெருங்கி நின்றவள் அவனது சட்டையை திருகிக் கொண்டே , “ உங்க கிட்ட இருந்து எப்படி மொத்த காதலையும் எடுத்துக்கறதுன்னு எனக்கு நல்லவே தெரியும்…” என்று கூறி விட்டு விழிகளை பார்த்தாள்.
அவளது நெற்றி முட்டி சிரித்துக் கொண்டிருந்தான் வாசு.
“ உங்களுக்கு ஏதாவது என் கிட்ட கேட்கணுமா?’
“ ஆமா…”
“ என்ன ?”
“ இவ்வளவு செய்யற நீ . எதுக்காக எனக்கு இன்க்ரிமெண்ட் தரல…புரோமோஷனும் தராம ரொம்பவே கஞ்சாம்பட்டியா இருந்த?
“ உண்மையை சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..?”
“ இல்ல டி…”
“ உங்களை இங்க பாத்தவுடனே எனக்கு அவ்வளவு கோபம் . உங்களை சும்மாவே விடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா உங்க வாழ்க்கைய பத்தி கேள்வி பட்ட பிறகு அப்படியே என்னால இருக்க முடியல. விட்டுட்டு போகவும் முடியல. எனக்கு தெரிஞ்சு நான் கேள்விப்பட்ட வரைக்குமே சந்தியாவை பத்தி நல்ல அபிப்பிராயம் இல்ல. அதை உங்ககிட்ட நான் சொல்ல முடியாத சூழ்நிலை . இஷ்டத்துக்கு செலவு பண்ணி ரொம்பவே ஆடம்பரமா இருந்தா…இந்த நிலைமையில தான் நீங்க இந்த இடத்துல வீட்டை வாங்கியிருந்தீங்க…கண்டிப்பா இது உங்களோட சக்திக்கு மீறுன விஷயம்ன்னு எனக்குத் தெரிஞ்சது. அனுவையும் சந்தியா கவனிச்சுக்கறது இல்லைன்னு சுந்தரி அக்கா என் கிட்ட சொன்னாங்க. உங்களுக்கு புரமோஷன் குடுத்தாலோ…இல்ல இன்கிரிமெண்ட் குடுத்தாலோ… அளவுக்கு அதிகமா வீட்டுல பணம் பொழங்கும். அதனால சந்தியா இன்னும் அளவுக்கு அதிகமா செலவு பண்ணி உங்களை கடனாளி ஆக்கிடுவான்னு நான் உறுதியா நம்புனேன்…அதான் உங்களுக்கு எந்த விதமான சலுகைகளும் குடுக்காம …வேற கம்பெனிக்கும் போக விடாம என்னோட பிடியிலயே வச்சிருந்தேன். மேலோட்டமா பார்த்தா இது பைத்தியகாரத்தனமா தோணும்…ஆனா இதெல்லாம் நான் செஞ்சதுக்கு முக்கிய காரணம் …முடிஞ்ச அளவுக்கு உங்களை ரொம்ப கஷ்டப்படாம பார்த்துக்கறதுக்கு மட்டுந்தான். கண்டிப்பா இது மாதிரி செஞ்சா நீங்க இம்ப்ரஸ் ஆவீங்கன்னு பண்ணல. ஒரு வேளை நிலைமையை புரிஞ்சிக்கிட்டு சந்தியா மனசு மாறலாம்னு நினைச்சு தான் பண்ணுனேன். ஆனா…நானே எதிர்பார்க்காத விஷயம் சந்தியா பெர்சனல் லோன் வாங்கிட்டு உங்களை கடனாளியா விட்டுட்டு போனது தான். எது நடக்கவே கூடாதுன்னு நினைச்சு இதெல்லாம் பண்ணுனேனோ…அதுவே கடைசியாக நடந்து போச்சு. எல்லாம் சரியானதுக்கப்பறம் உங்களுக்கான அங்கீகாரத்தையும் ..இவ்வளவு வருஷத்துக்கான இழப்புகளை சரி பண்ணி குடுத்திட்டு விலகிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அதுக்குள்ள நிலைமை தலைகீழா மாறிடுச்சு. பொம்பளைங்களுக்கு ஒரு விதமான கஷ்டம்ன்னா வேலைக்கு போயிட்டு வர்ற ஆம்பிளைங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? தன்னை நம்பி வர்றவளை கண்கலங்காம பாத்துக்கணும் , தங்களுக்கான அழகான கூட்டுக்கு வீட்டுத் தவணை ஒழுங்கா கட்டணும் ,குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொஞ்சம் கொண்டு போறதுக்கான போராட்டம், கடன் இல்லாம வாழணும், குழந்தைகளுக்கு எதிர்காலத்துக்கான சேமிப்பு…. இதெல்லாம் சரியா இருக்கணும். முழுசா எல்லாத்தையும் நிறைவேத்த முடியலன்னாலும் …கொஞ்சமாவது நிறைவேத்தி வைக்கணும் னு தான் எல்லா ஆம்பிளைங்களும் ஓடுறாங்க. கஷ்டத்துலயாவது தோள் கொடுத்து தாங்கி நிக்கணும். இதெல்லாம் உங்களுக்கு ஒரு சதவீகிதம் கூட நடக்கவேயில்லங்கறது தான் எனக்கு வேதனையா இருந்துச்சு. பரிதாப பார்வை வீசி உங்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அதான் அடாவடியா உங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன். உங்களுக்கு இன்னொன்றும் தெரியுமான்னு தெரியல…அனுவோட சின்னச் சின்ன ஆசைகளை கூட சந்தியா பூர்த்தி செஞ்சு வைக்கலங்கறது தான் வேதனையோட உச்சம். நிச்சயமா உங்களோட சூழ்நிலையை பயன்படுத்தி உங்களோட இணைஞ்சிக்கணும் நினைச்சு இதெல்லாம் பண்ணல. சராசரி பெண்களுக்கே உரிய தாய்மை உணர்வோட தான் இதெல்லாம் பண்ணுனேன். ஆனா நீங்க…அதை …இப்படி எடுத்துப்பீங்கன்னு நான் நினைக்கல.. அதெப்படி நீங்க என்ன அப்படி தப்பா பேசி தப்பா நடந்துக்கலாம்..நீங்க கேட்டா எல்லாத்தையும் கொடுக்க தயாரா இருக்குற நான் என்னைய கொடுக்க மாட்டேனா..? தேவ்…சொல்லுங்க..” என்று அவனது சட்டையை பிடித்துக் கொண்டே அவனது முகம் பார்த்து நின்றாள்.
அவளது முகத்தை தாங்கியவன் , “ஆத்திரத்துல புத்தி கெட்டு போய் அப்படி நடந்துக்கிட்டேன். கண்டிப்பா என்னோட செயல் உன்னை அதிகமா காயப்படுத்தியிருக்கும் தான் விலகி நின்னேன். உன்னை காயப்படுத்திட்டு வெளியே வந்ததுக்கு அப்பறம் அனு மாதிரி தான் நானும் ரொம்பவே தவிச்சி போயிட்டேன். நீ எங்களோட இருந்தா வாழ்க்கை முழுமை அடையும்னு நம்புனேன்…இப்பவும் நம்புறேன்… ஆனா…நீயே கல்யாண பத்திரிக்கையை கொண்டு வந்து ஷாக் கொடுத்திட்ட.. நான் எதிர்பார்க்கவேயில்லை. “ என்று கூறி அழுந்த அவளது கன்னத்தில் முத்தமிட்டான் .
“ கூடிய சீக்கிரம் அப்பா அம்மா முறைப்படி வந்து உங்க கிட்ட பேசுவாங்க தேவ். நான் வந்து அதிகப்பிரசங்கித்தனமா பத்திரிகையை நீட்டிட்டேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்குண்டான மரியாதை எங்கேயும் எப்போதும் குறையாது. குறையவும் விட மாட்டேன். ஆனா.. நீங்க தப்பு பண்ணினா…என் கிட்ட இருந்து மரியாதையை எதிர்பாக்காதீங்க…இதோ இப்ப கொஞ்ச நேரத்துக்கு ஆனா மாதிரி….” என்றவள் அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தமிட்டாள்.
இடையோடு அவளை தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டவன், “ என் மேல இருந்த கோபம் போயிடுச்சா…” என்றான்.
“அதுக்குத்தான் இந்த மூணு மாசம் கேப். நீங்க கௌரவம் பாக்காம என் கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டப்பவே நான் வழக்கம் போல தொபுகடீர்னு விழுந்துட்டேன். ஆனா உடனே ஒத்துக்க மனசு வரலை. மனசுல இருந்தெல்லாம் உங்க கிட்ட கொட்டின பிறகு மனசு லேசாயிடுச்சு. இப்ப தான் தெளிவா இருக்கேன். “ என்றாள்
“ அது மட்டுமில்ல என்னோட தகுதியையும் கொஞ்சமா உயர்த்திக்கணுங்கறதுக்காகவும் தான் இத்தனை நாள் கேப் சரியா?” என்றான்.
அவனது மூக்கைப் பிடித்து ஆட்டியவள், “ உங்களை மாதிரி என்னை யாரும் புரிஞ்சி வச்சிக்கிட்டதில்லை தேவ்…லவ் யூ சோ மச்…” என்றவள் உரிமையுடன் அவனது இதழை நெருங்க கதவு தட்டப்பட்டது.
“ம்ம்ச்…யாரு..அது?” என சலித்துக் கொண்டே கதவைத் திறந்தான் வாசு.
ப்ரகாஷ் தான் நின்றிருந்தான்.
“ என்னங்க வேணும்?” என்றான் சலிப்புடன்.
“சார்..உள்ள போய் ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதான் தட்டினேன். ரொம்ப சலிச்சுக்காதீங்க…அதான் தங்கச்சி கல்யாணத்துக்கு டேய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்துட்டாங்கல்ல.. அப்பறமா எல்லாத்தையும் பாத்துக்கலாம்…அனு எழுந்துட்டா உங்களை தான் தேடுறா..” என்றான் ப்ராகஷ்.
மற்றொரு அறையில் ஆரோனும் அனுவும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர்
அவள் சண்டை போடுவதை வாசலில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.