அனுவிற்கு காலாண்டு விடுமுறை ஆரம்பித்திருந்தது.
வாசுவிடம் வந்த அனு, “ அப்பா ரொம்ப போரடிக்குது ப்பா…பை போகலாம் அப்பா…” என்றாள்.
அவளுடன் விளையாடும் நண்பர்கள் எல்லாம் விடுமுறையை கழிக்க அவரவர் சொந்த ஊருக்கு பயணித்திருந்தனர்.
எவ்வளவு நேரம் தான் வீட்டில் இருப்பது. வாசு அலுவலகத்திற்கு கிளம்பும் போது சுந்தரி அக்காவின் வீட்டில் அனுவை விட்டுவிட்டுச் செல்வான்.
அவளுக்குத் தேவையானது அனைத்தையும் சுந்தரி அக்கா செய்து விடுவார். இருப்பினும் மொட்டு மொட்டு என்று அவரது வீட்டில் அமர்ந்திருப்பது அவளுக்கு சலிப்பை தந்திருக்க வேண்டும் .
திவ்யாவும் விடுமுறையை கழிக்க சாந்தியின் சொந்த ஊருக்கு சென்று விட்டாள்.
இருவர் மட்டுமே வீட்டில் இருப்பது ஏதோ பூத் பங்களாவிற்குள் இருப்பது போல இருந்தது. வாசுவிற்கும் ஒரு மாறுதல் தேவையாக இருந்தது. என்ன தான் தினசரி வாழ்க்கைக்கு திரும்பியிருந்தாலும் ஆழ் மனம் ஆருத்ராவை தான் தேடியது.
நிரப்ப முடியாத வெறுமை அவனை சூழ்ந்து கொண்டு ஒரு அழுத்தத்தை கொடுத்தது. மூச்சு முட்டுவது போல உணர்ந்தான்.
பாவமாக நின்றிருந்த அனு தூக்கிக் கொண்டவன் , “அனு குட்டி அப்பாவும் நீயும் ஒரு லாங் ட்ரைவ் போகலாமா? “ என்றான்.
“ பைக்ல யா ப்பா…?”
“ ம்மகூம் கார்ல…கொடைக்கானல் போகலாம்…ரோஸ் கார்டன் போகலாம். ஹார்ஸ் ரைடிங் போகலாம்..அப்பாவும் நீயும் சைக்கிளிங் போகலாம்…ஓகே வா?” என்றான்.
“ வாவ்…! போலாம்..போலாம்…ஜாலி…” என கண்களை அகல விரித்து சந்தோஷமாக வாசுவின் கழுத்தை கட்டிக்கொண்டு குதித்தாள்.
வாசுவும் அலுவலகத்தில் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்தவன் வாடகை காரை எடுத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு கிளம்பினான்.
வாசு காரை ஓட்ட அவனருகே அமர்ந்து கொண்ட அனு வளவளவென பேசிக் கொண்டே வந்தாள். மகள் பேசுவதை புன்னகையுடன் கேட்டபடி காரை ஒட்டினான்.
சிறிது நேரத்தில் அனு உறங்கிவிட கார் சீட்டை நன்றாக பின்னுக்குத் தள்ளி உறங்குவதற்கு வசதி செய்து கொண்டிருந்தான்.
டோரா புஜ்ஜி பொம்மையை கட்டிக் கொண்டு உறங்கினாள் அனு.
வாஞ்சையுடன் மகளது தலையை வருடிக் கொடுத்தவன் காரை தான் பதிவு செய்திருக்கும் விடுதிக்கு செலுத்தினான்.
இரவாகி விட்டதால் காரை நிறுத்திவிட்டு மகளை தூக்கிக் கொண்டு விடுதிக்குள் நுழைந்தான்.
அனுவை எழுப்பி இரவு உணவை கொடுத்து விட்டு அவளை உறங்க வைத்தான்.
வாசுவின் மீது கால் போட்டுக் கொண்டு உறங்கியவள் தூக்க கலக்கத்தில் ஏதோ முணுமுணுத்தாள்.
விட்டத்தை வெறித்திருந்தவன் மகளருகே நெருங்கி என்ன பேசுகிறாள் என் உன்னிப்பாக கவனித்தான்.
“ ஆரு ஆன்ட்டி….ஸ்விம் பண்ணலாமா…! ஜாலியா இருக்கும்…வாங்க ஆன்ட்டி…” என முணுமுணுத்தாள். தாய்மையின் இடத்தை அழகாக நிரப்பியிருந்தாள் ஆருத்ரா.
மகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டவன் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டான்.
இரு நாட்கள் சென்றிருந்தது. தந்தையும் மகளும் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தார்கள்.
சிறிய குல்லாவும் ஸ்வெட்டரும் அணிந்திருந்தாள். குடை போன்ற கவுனை அணிந்து அழகிய பொம்மை போல அந்த நீண்ட பனிப் படர்ந்த பாதையில் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டேயிருந்தாள்.
அனைவரது பார்வையும் அவள் மீதே படிந்திருந்தது. துறு துறுவென ஒடிக் கொண்டிருந்தவளை காண கண்கள் போதவில்லை. அனைவரும் அவளது கன்னம் கிள்ளி கொஞ்சி விட்டு சென்றனர்.
“ அப்பா…என்னைப் பிடிங்க பாப்போம்…பிடிங்க…பிடிங்க…ஓடி வாங்க ப்பா…ஹா..ஹா..” என்று சிரித்தபடி தந்தையை திரும்பித் திரும்பி பார்த்தபடி ஓடினாள்.
முன்னே சென்று கொண்டிருந்தவரை கவனிக்காமல் அவர் மீது மோதி கீழே விழுந்தாள்.
“ஆ.ஆ…” என்ற முனகலோடு கீழே விழுந்தவளைத் தூக்கி நிறுத்தியது மெல்லிய கரம் .
“ அனு குட்டி..பாத்து டா…ஓடாதேன்னு எத்தனை தடவை சொல்றது?” என்றவன் மகளருகே குனிந்து முழங்காலை ஆராய்ந்தான். தார் ரோடு என்பதினால் முழங்காலில் சிறிது சிராய்த்து இருந்தது.
தனது கைக்குட்டையை வைத்து இரத்த கசிவை துடைத்துவிட்டு தூக்கிக் கொண்டவன் அப்போது தான் எதிரே நின்றவளை கவனித்தான். ஆருத்ரா தான் தவிப்புடன் அனுவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தவுடன், “ அய்…இரு ஆன்ட்டி “ என்று அவளிடம் தாவிக் கொண்டுச் சென்றாள்.
அவள் தன்னிடம் தாவிக் கொண்டு வருவாள் எதிர்பாரதவள் சற்று நிலைத் தடுமாறி அவளைத் தாங்கிக் கொண்டாள்.
“ஆன்ட்டி சீக்கிரமா வர்றேன்னு சொன்னீங்க…ஆனா…ஒன்…டூ…த்ரீ….ஃபோர்…பைவ்…..அப்பறம் டென்…டுவென்டி டேஸ்…ஆச்சு..ஆனா நீங்க மட்டும் வரவேயில்லையே…ஏன்?” என விரலை ஒவ்வொன்றாக நீட்டி நாட்க் கணக்கை கூறியவள் அவளது பதிலுக்காக முகம் பார்த்து நின்றாள்.
இரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டவள், “ ஆன்ட்டிக்கு நிறைய வேலை இருந்தது தங்கம். கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு…அதான்.. உன்னை பாக்க வரல…” என்றாள்.
மருத்துவமனையில் இருக்கும் போது ஒரே ஒரு முறை வாசு தூரத்தில் இருந்து அவளை பார்த்து விட்டு சென்றிருந்தான். மீண்டும் அவளை நெருங்க துணிவில்லை அவனுக்கு. கனத்த மனதுடன் வெளியேறி விட்டான்.
அவளது உடல் நலத்தை பற்றியும் அவள் எங்கிருக்கின்றாள் என்பதை பற்றியும் ராகவனிடம் விசாரிக்க மனம் உந்தித் தள்ளினாலும் அமைதியாக இருந்து விட்டான்.
அவள் இருக்கும் இடம் தெரிந்து விட்டால் அவளிடம் சரணடைந்து விடுவான் என்பது திண்ணம்.
அவளை நெருங்கவே அத்தனை பயமாக இருந்தது அவனுக்கு. ஒருபுறம் குற்றவுணர்ச்சி வேறு அவனைப் ஆட்டிப் படைத்தது.
அவள் முகம் பார்த்து பேசவே ஒரு மாதிரியாக இருந்தது.
இப்போது அதற்கு நேர்மாறாக அவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் என மனதும் உடலும் பரபரத்தது. முயன்று அடக்கிக் கொண்டவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளை மெல்ல இறக்கி விட்டவள் , “ஆன்ட்டி அப்பறமா உன்னை வந்து பாக்குறேன்…பை…” என்றவளின் கைப் பிடித்து நிறுத்தினாள் அனு.
என்னவென்பது போல அவளைப் பார்க்க , “ நீங்க பொய்பொய்யா சொல்றீங்க…நீங்க வரவே மாட்டீங்க…” என்று உதட்டை பிதுக்கியபடி நின்றிருந்தாள்.
அதே மனநிலையில் தான் வாசுவும் இருந்தான். சுணங்கிக் தவித்தது அவனது மனம்.
அனுவைத் தூக்கிக் கொண்டு பலூன் விற்றுக் கொண்டிருந்தவரிடம் சென்றவள் வண்ண வண்ண பலூன்களை வாங்கி அவளது கையில் கொடுத்து அழுந்த முத்தமிட்டாள்.
“ ஆன்ட்டி அப்பறமா வர்றேன் சரியா..?” எனத் தலையை சரித்து கேட்க ,கை நிறைய இருந்த பலூன்கள் அவளது முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
“ ம்ம்.. கண்டிப்பா வரணும்…” என்றவள் தந்தையிடம் தாவினாள்.
அவளை கழே இறக்கி விட்டுட்டு ஆருத்ராவை பார்க்க அவளோ விடுவிடுவென நடந்து வெகு தூரம் சென்று விட்டாள்.
இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவள் செல்லும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.
பயணியர் பங்களாவுக்கு வந்த ஆருத்ராவிற்கு கண்கள் கலங்கியது..
இதோ இந்த பந்த பாசம் தான், தன்னை மிகவும் பலகீனமாக்குகிறது. அதனால் தானே அனைத்தையும் விட்டு ஓடி வந்துவிட்டாள்.
மீண்டும் தன்னை தேடி வரும் பந்தத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? .
மனம் சோர்ந்து தான் போனது அவளுக்கு. சில மாதங்களே அனுவிடம் பழகியிருந்தாலும் அவளது விருப்பங்களையும் ஏக்கங்களையும் முடிந்த அளவிற்கு பூர்த்தி செய்திருந்தாள். அவளால் பூர்த்தி செய்ய முடியாது தவித்து நின்ற இடம் அம்மா…என்ற ஸ்தானத்தை மட்டுமே…என்று அவளாகவே நினைத்துக் கொண்டிருந்தாள்
மறுநாள் விடியல் அழகாக விடிந்தது. பால்கனியில் வந்து நின்றவள் இயற்கையோடு ஒன்ற முயன்றாள்.
மேக மூட்டத்துடன் பனி படர்ந்திருக்கும் மலை முகடுகளும் , இதமான குளிரும், பரந்து விரிந்து கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்த இயற்கையும் கூட ரசிக்க முடியவில்லை அவளால்
பார்வை மட்டுமே எதிரே இருந்த அழகிய மலைகளில் நிலைத்திருக்க மனமோ அனுவையே சுற்றி வந்தது.
அழைப்பு மணி ஒலிக்கவே கதவை திறந்தார் ப்ரேமா. வாசுவும் அனுவும் நின்றிருந்தனர்.
வாசுவின் கைகளை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் அனு.
அவரோ திகைத்து போய் நின்றிருந்தார்
“நான் ருத்ராவை பாத்து கொஞ்சம் பேசணும்…உள்ள வரலாமா?” என்றான்.
“ உ…உள்ள வாங்க தம்பி..”
“ உக்காருங்க…நான் போய் கூப்பிடுறேன்….” என்றவர், “ஆரும்மா.. உள்ள தான் இருப்பா..” என்றழைத்துக் கொண்டே உள்ளே செல்ல முயன்றவரை தடுத்து நிறுத்தியவன் , ”இல்லங்க நானே போய் பேசிக்குறேன்…அனு இங்கயே இருக்கட்டும்…” என்று கூறி விட்டு அவளது அறைக்குள் நுழைந்தான்.
தாயின் குரல் கேட்டு வெளியே வந்தவள் வாசுவைக் கண்டு திகைத்தாள்.
“இங்க ஏன் வந்தீங்க? இன்னும் சாகாம கல்லு குண்டா இருக்காளேன்னு பாக்க வந்தீங்களா மிஸ்டர் வாசுதேவன்? நீங்க பண்ணுன வேலைக்கு அடெம்ப்ட் ரேப் கேஸ் போட்டுருக்கணும்…”
“ ஏன் போடல? “ என்றான் கைகளை கட்டிக்கொண்டு.
அவனது கேள்விக்கு பதில் கூற முடியாமல் சற்று தடுமாறியவள் , “ஏற்கனவே பொண்டாட்டி ஓடி போயிட்டா..குழந்தையோட தனியா நிக்குறீங்களேன்னனு பாவம் பாத்து விட்டேன்…”
அவளது பேச்சினில் அவனுக்கு கோபம் வரவில்லை. மாறாக அமைதியாக நின்றிருந்தான்.
அவனது அமைதியும் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
“ என்ன அமைதியா நிக்குறீங்க? எதுக்கு இவ்வளவு தூரம் வந்து என்னை பாக்க வந்துருக்கீங்க?”
“ நீ இங்க தான் இருக்கன்னு தெரியாது..அனுவோட வெகேஷனை ஸ்பெண்ட் பண்ணனும்னு வந்தேன். ஆனா எதிர்பாராத விதமா நீ இங்க தான் தங்கியிருக்க. ரொம்ப சந்தோஷம்..”
“அதான்னே…பாத்தேன்.. ஒருவேளை அக்கறையா பாக்க வந்துட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் தப்பா நினைச்சுட்டேன்.” என கடுகடுத்தாள். மெனக்கெட்டு தன்னை பார்க்க வரவில்லையே என்ற கோபம்.
“சரி என்ன விஷயமா வந்தீங்கன்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுங்க”என்றாள் எரிச்சலுடன் .
“ அது..அது…வந்து… அன்னைக்கு அப்படி நடந்தது கிட்டதுக்கு ஐ யம் சாரி…முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்.. உனக்கு ரொம்ப ஹர்ட் ஆகியிருக்கும் னு தெரியும். இப்ப…இப்ப உடம்பு எப்படியிருக்கு? “ என்றான் தயக்கமாக.
அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இன்னும் உயிரோட தான் மிஸ்டர் இருக்கேன்.அவ்வளவு சீக்கிரம் செத்து போயிடமாட்டேன். அன்னைக்கு நீங்க ரேப்பே பண்ணியிருந்தாலும் கூட தலைக்கு ஒரு கப் தண்ணிய ஊத்திட்டு போயிட்டே இருந்திருப்பேன். உங்களால் முடிஞ்சது அது மட்டும் தானே…மனசை எப்பவும் பாக்கவே மாட்டீங்களே…கிட்டத்தட்ட ப்ராஸ்ட்டியுட் ரேஞ்சுக்கு பேசி அவமானப்படுத்திட்டு இப்ப வந்து உடம்பு எப்படியிருக்குன்னு கேக்க வந்துருக்கீங்க…ரொம்ப சீக்கிரமா வந்து குசலம் விசாரிக்குறீங்க. அவ்வளவு தானே…கேட்டாச்சுல…நான் நல்லா இருக்கேன். இப்ப நீங்க கிளம்புனீங்கன்னா நான் இன்னுமே நல்லா இருப்பேன்…”என்றாள் ஆத்திரமாக.
உணர்வுகளை வெளிப்டுத்த முடியாமல் அவளது முகம் பார்த்து நின்றான் வாசு.
வாசுவை முறைத்து விட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள்.
வாசுவின் தவிப்பான முகம் அப்படியே அனுவின் முகத்தை பிரதிபலித்தது .
“ அனுவும்…நானும்…மம் .. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறோம்.அனு ரொம்ப லோன்லியா ஃப்ல் பண்ணுறா.
“அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என்றாள் அழுத்தமாக.
நெருப்பாக தகித்துக் கொண்டிருப்பவளை எப்படி நெருங்குவது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தான் வாசு.
அவன் முட்டாள்தனமாக செய்த செயல் அவளிடமிருந்து தள்ளியே நிறுத்தியது.
யோசனையை தள்ளி வைத்துவிட்டு அவளருகே வந்து அவளது கைகளை மெல்லப் பிடித்துக் கொண்டு, “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.
அவனது கைகளை மெதுவாக விடுவித்துக் கொண்டவள், “ எப்படி ரெண்டாந்தாரமாவா..? அதுவும் ரெடிமேட் குழந்தையோட… என்னை ஆப்ஷனா வச்சிருக்கீங்க அப்படித்தானே…!” என்றாள் ஏளனமாக.
பட்டென்று அவளை விட்டு விலகி நின்றவனுக்கு ஒரு வித அழுத்தம் உண்டானது.
தனது செயல் அவளை எந்தளவிற்கு பாதித்துள்ளது என்று அவனுக்கு புரிந்தது.
“ ஐ யம் சாரி ருத்ரா. உன்னை ஒரு ஆப்ஷனா எப்பவும் நினைச்சதேயில்லை டி. என் வாழ்க்கை தான் நிலைகுலைஞ்சு போச்சு…நீயாவது மனசை மாத்திட்டு நல்லா வாழணும்னு நினைச்சேன். கிடைச்ச வாழ்க்கையை சரியா வாழ்ந்திடணும்ன்னு தான் ரொம்ப முயற்சி பண்ணுனேன். ஆனா…அதெல்லாம் கானல் நீரா போச்சு. அவ போனதுனால உன்னை தேடி வந்துருக்கேன்னு நினைக்குறியா ருத்ரா…? அது அப்படியில்லைன்னு உனக்கு நல்லாவே தெரியும். என்னை காயப்படுத்தணும்னு நினைச்சு பேசிட்டே இருக்க. இட்ஸ் ஆல்ரைட். நீ எங்க கூட இருந்தா…ம்ம்க்கூம்…நாங்க உன் கூட இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் ஆசைப்படுறோம். அவ்வளவு தான்.. எல்லாமே உன்னோட விருப்பம் தான். உன்னை கட்டாயப்படுத்தல …” என்று கூறி விட்டு சன்னல் புறம் திரும்பி நின்றான்.
“ அடடா…நீங்க இப்படி உருக்கமா பேசினவுடனே…’அய்யோ..! தேவ்…வருத்தப்படாதீங்க…நான் இருக்கேன் உங்களுக்குன்னு’ ஓடி வந்து உங்களை கட்டிப் பிடிச்சுக்கணும்னு ஆசைப்படுறீங்களா..! நெவர்…போதும்…எல்லார் மேலையும் பாசம் வச்சி நொந்து போயிட்டேன். இனி எனக்காக நான் வாழப் போறேன். எனக்காக ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கப் போறேன். இப்பவே எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி அவங்க கை காட்டுற வளங்களை கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகப்போறேன். இனியும் என் வாழ்க்கையை வீணாக்க நான் விரும்பல. உங்க பின்னாடியே லூசு மாதிரி சுத்தி சுத்தி வந்ததுனால தான என்னை ரொம்ப இளக்காரமா நினைச்சிட்டீங்க…என்னோட கல்யாணத்துக்கு பத்திரிகை அடிச்சு அனுப்புறேன். கல்யாணத்துக்கு வந்து சேருங்க…” என்றாள் குரலில் அலட்சியத்தை கூட்டி.
அவளை ஒரு கணம் பார்த்தவன் ஏமாற்றத்துடன் அறையிலிருந்து வெளியே வந்து அனுவிடம், “போகலாமா அனு..”என்றான் .
“ஆரும்மா.. வரலையா ப்பா..” என்றாள் திடுமென்று.
அவளது ‘ஆரும்மா’ என்றழைப்பில் மூவரும் திகைத்து நின்றனர்.
“ என்ன அனு..? ஏன் இப்படி திடீர்னு ஆரும்மான்னு சொல்ற?” என்றான் வாசு.
“இல்லப்பா…இந்த பாட்டி ஆன்ட்டியை ஆரும்மான்னாங்களா…எனக்கும் அதே மாதிரி கூப்பிடணும் போல இருக்கு. அப்படியே கூப்பிடவா..ஆரும்மா…” என்றவள் சிரிப்புடன் அவளது கைகளை பிடித்துக் கொண்டாள் .
“ அனு …வா போகலாம்…”
“ம்ம்…முடியாது…ப்பா.. ஆரும்மா.. நம்ம கூட வரணும்..என் கூட…வாங்க ஆரும்மா..” என கையைப் பிடித்து இழுத்தாள் அனு.
“ அனு….! “ என்று அதட்டியவன் அவளை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு வெளியேறினான்.
தந்தையின் தோள் வளைவில் தலையை வைத்துக் கொண்டவள் ஆருத்ராவை கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டே சென்றாள்.
அனுவின் பார்வையை காணச் சகியாமல் தனது பார்வையை திருப்பிக் கொண்டாள் ஆருத்ரா.