பிழை-36

 ஆரோனிடம் சண்டை பிடித்துக் கொண்டே அறையின் வாசலருகே வந்த அனு தன் முன்னே நின்ற உருவத்தை பார்த்து விழி விரித்து நின்றாள்.

“ ஆரு..ஆன்ட்டி….நீங்களா? ஹய்…” என. உற்சாகமாக  குதித்தவளின் முகம் ஒரு கணம் சுருங்கியது.

“ ஆனா நீங்க தான் திரும்ப போயிடுவீங்களே?” என்றாள் சற்று வருத்தத்துடன்.

அனுவின் “ஆரும்மா” என்றழைப்பு காணாமல் போயிருந்ததை எண்ணி வருத்தமாக இருந்தது ஆருத்ராவிற்கு.

அவளருகே மண்டியிட்டு அமர்ந்தவள் அவளது கன்னத்தில் முத்தமிட்டு,  “அனு குட்டி..நீங்க என்னை ஆரும்மான்னே கூப்பிடுங்க…நான் இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ, நான் அப்பா  மூணு பேரும் ஒரே வீட்டுல இருந்துக்கலாம் சரியா?” என்றாள் அவளது கன்னம் கிள்ளி.

“ அய்…நிஜம்மாவா? ப்ராமிஸ்..?” என்றாள் மீண்டும் விழி விரித்து.

ஏனோ குழந்தையின்  மனம் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆக மறுத்தது. தான் விரும்பியவர்கள் எல்லாம் விலகிச் செல்வதை எண்ணி மனம் வெதும்பிவளுக்கு மன உணர்வுகளை சரியாக விவரித்து கூற இயலாது நம்பிக்கை இழந்து நின்றாள்.

அவளது எண்ணவோட்டத்தை  சரியாக கணித்தவள் அனுவை இறுக அணைத்துக் கொண்டாள்.

அனுவும் பதிலுக்கு அவளை கட்டிக் கொண்டாள்.

“ நீங்களே  தினமும் எனக்குத் தலை பின்னி விடுவீங்க தானே?

“ ம்ம்..”

“ நீங்களும் என் கூட விளையாடுவீங்க தானே?”

“ ம்ம்…”

“ பஃப்ளி அம்மா அவனுக்கு ஸ்நாக்ஸ் செஞ்சு தர்ற மாதிரி நீங்களும் எனக்கு செஞ்சு தருவீங்க தானே..?”

“ ம்ம்.. தருவேன் டா தங்கம் “

“ அப்பறம்…அப்பறம்” என ஒற்றை விரலை கன்னத்தில் வைத்து யோசித்தவள் ,” எனக்கு ஹோம்வெர்க் சொல்லித் தருவீங்களா?”

“ தருவேன் டா தங்கம் “

“ ஃபேர்ரி டேல்ஸ் சொல்லுவீங்களா?”

“ சொல்லுவேன் டா பட்டு”

“ ஸ்விம்மிங்?.”

“ கண்டிப்பா..”

“ஸ்கூலுக்கு வருவீங்களா…என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அம்மாவோட வருவாங்க…நான் மட்டும் எப்பவும் அப்பாவோட போவேன்.. எல்லோரும் அம்மா எங்க வரலையான்னு கேப்பாங்க. ஆனா நீங்க வருவீங்களா?”

கண்கள் கலங்கியது..

“ நிச்சயமா டா. உனக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் நான் தருவேன் ‌.”

“ அய்…ஜாலி..ஜாலி…..டேய்..ஆரோன்…இங்க பாத்தியா‌ ஆரும்மா எங்க கூட தான் இருக்கப்‌ போறாங்க…நான் ஜாலி…ஜாலி…”

“ ஆனா…இவங்க உன்னோட சந்தியாம்மா இல்லையே… உன்னோட மம்மி சந்தியா அத்தை தானே.?” என்று ஆரோன் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர்.

ஆருத்ரா முகம் மாறா புன்னகையுடன்,  “இனி அனு குட்டிக்கு நான் தான் மம்மி, அவ என்னை ஆரும்மானே கூப்பிடலாம். சரியா? நான் , நீ, ஆரோன்…அப்பா.. எல்லாரும் ஜாலியா லாங் ட்ரைவ் போகலாமா?” என அழகாக பேச்சை மாற்றி சூழ்நிலையை இலகுவாக்கினாள்.

“ நிஜம்மாவா ஆன்ட்டி?” என்று ஆரோன் கூற “ ருத்ரா அத்தைன்னு கூப்பிடு ஆரோன்‌.‌” என்று திருத்தியவள் ப்ரகாஷிடம் வந்து நின்றாள்

“ இங்க பாருங்க…உங்க தங்கச்சியோட இடத்தை நான் பிடிக்கல. எல்லாம் சரியா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அவர் வீட்டு சார்பாக நீங்க தான் முன்னாடி இருந்து இந்த கல்யாணத்தை நடத்தணும். முருகன் கோவில்ல சிம்பிளா கல்யாணம். ரிஷப்ஷன் மட்டும் கொஞ்சம் கிராண்டா…பண்ணனும். நீங்களும் உங்க அம்மாவும் தான் வந்து முன்ன இருந்து நடத்திக் கொடுக்கணும்.” என்றாள் அழுத்தமாக.

“ கண்டிப்பா மா…நீங்க மூணு பேரும் நல்லா இருந்தாலே எங்களுக்கு சந்தோஷம் தான். வேறென்ன வேணும்..” என்றான்.

சில நாட்களில் ஆருத்ரா கூறியதைக் போலவே ராகவன் வந்து முறைப்படி வாசுவுடன் பேசினார்.

“ முன்னாடி பேசினதை எதையும் மனசுல எதுவும் வச்சிககாதீங்க மாப்பிள்ளை…இன்னாருக்கு இன்னாரு தான் கடவுள் எழுதி வசசிருக்கார் போல…காலதாமதமா ஆனாலும் இனி நீங்க நல்லா இருப்பீங்க. “ என்றார்.

“ ஒரு சின்ன ரெக்வஸ்ட்..சார்..”

“ மாமா…ன்னு சொல்லுங்க”

“ பழகிக்குறேன்.. நான் இந்த வீட்டுல உங்க மகளோட வாழ்க்கையை தொடங்க விரும்பல. இந்த வீட்டோட தவணையை இன்னும் சில மாசத்துல கட்டி‌ முடிச்சிட்டு வாடகைக்கு விட்டுடுவேன். வேற வாடகை வீட்ல தான் நாங்க எங்க வாழ்க்கை ஆரம்பிக்கப் போறோம். உங்க பொண்ணு என்னோட வீட்டுல தான் இருக்கணும். அவளுக்கு தேவையானதை மட்டும் அங்கேயிருந்து எடுத்துட்டு வரட்டும். வேற எதுவும் தேவையில்லை…“ என்றான்.

அவருக்கு அவன் கூறியதன் பொருள் விளங்கியது.  அவரது அந்தஸ்த்தோ பணமோ அவனுக்கு பொருட்டேயில்லை என்பதை உணர்த்தியிருந்தான்.

“ அவ எங்க இருந்தாலும் நிம்மதியா இருந்தா போதும் மாப்பிள்ளை ..” என்று கூறி விட்டு சென்றார்

திருமண ஏற்பாடுகள் மளமளவென்று நடந்தது.

அனுவை சாந்தியிடம் விட்டுவிட்டு வாசுவும் ஆருத்ராவும் ஷாப்பிங்கிற்கு சென்றிருந்தனர்.

இருவரையும் தன் வீட்டு கொல்லைப்புறம் வைத்து சாதம் ஊட்டிய சாந்தி கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்தார்.

சந்தியா தான் கண்ணீருடன் நின்றிருந்தாள்.

வேக வேகமாக அவளருகே சென்றவன் “ எதுக்குடி இங்க வந்த? இன்னும் யார் குடியை கெடுக்க வந்த?” என்று அடிக்குரலில் சீறினார்.

“ ம்மா…அந்த மாதேஷ் என்னைய ரொம்பவே கொடுமை படுத்துறான்‌ ம்மா…தினமும் குடிச்சிட்டு வந்து பணத்தை பிடிங்கிட்டு போறான்…என்னால தாங்க முடியல ம்மா…ரொம்ப அசிங்கமா பேசுறான்.எனக்கு கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்குறதுனால குழந்தை பிறக்காது ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அடி உதைன்னு தினமும் அவஸ்தைப்படுறேன்..நான் பண்ணுனது தப்பு தான் ம்ம்மா…நான் இங்கேயே இருந்துக்குறேன் ம்மா…என்னைய விரட்டிடாதீங்க ம்ம்மா…ப்ளீஸ்…! ம்மா..” என்றவள் அனுவின் சத்தம் கேட்டதும் ,” ம்மா…அனு இங்க தான் இருக்களா..? நான் ஒரே ஒரு தடவை அவளை பாக்கட்டுமா…?” என்று கூறி உள்ளே நுழைய முயன்றவளை பளாரென்று ஒரு அறை அறைந்து விட்டு அவளின் கைகளை பிடித்துக் கொண்டு விடுவிடுவென வெளியேறி சிறிது தூரம் இழுத்து வந்து வந்து விட்டவர் அவளை தள்ளி நிறுத்தி, “இங்க பார்..உன்னோட வாழ்க்கையை நீ பாத்துட்டு போயிட்ட. இனி இங்க வந்து நிக்கறதுக்கு உனக்கு எந்த விதமான தகுதியும் இல்லை. உனக்கும் இங்க இருக்குறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடவுள் கொடுத்த வாழ்க்கையை தொலைச்சிட்டு சேத்துல போய் விழுந்துட்ட…இனி உன்  பாடு…அவன் பாடு…இது தான் உன்னை நான் இங்க பாக்குறது கடைசியாக இருக்கணும். கொஞ்ச நஞ்ச பாவமா பண்ணிட்டு போயிருக்க.. பெத்த பொண்ணு தான். இருந்தாலும் சொல்லக் கூடாது…நீ பண்ணுன பாவத்தோட பலனை அனுபவிச்சி தான் ஆகணும். அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகுது.  அனுவுக்கு ஒரு நல்ல அம்மா கிடைக்கப் போறாங்க. அதை கெடுத்து விட்டுடாத…போயிடு டி…போயிடு…கண்ணு முன்னாடி நின்னு எல்லாரோட வயித்தறிச்சலையும் கொட்டிக்காத..கஷ்டமோ நஷ்டமோ.இனி அது தான் உன்னோட வாழ்க்கை. நீ எங்க வேணும்னாலும் போ…என்ன வேணாலும் பண்ணிக்க…நான் கவலைப்பட மாட்டேன்…இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தன்னா நானே போலீஸ்ல புடுச்சி கொடுத்திடுவேன்…” என்று கூறி விட்டு வீட்டை நோக்கி நடந்தார்.

ஒரு தாயாக மகளது வாழ்க்கையை நினைத்து வருத்தமாக இருந்தாலும் அதை விலக்கி வைத்து விட்டு மனசாட்சியோடு நடந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை பளபளவென்று ஜொலித்து கொண்டிருந்த மகள் இன்று காய்ந்து , ஓய்ந்து போய் வந்திருந்ததை கவனிக்க தான் செய்தார்.

மகளை ஆதரித்து இனியும் ஒரு தவறை  செய்ய அவரது மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை.எனவே தான் அத்தனை கடுமையாக நடந்து கொண்டார்.

கண்களை துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தவரை பார்த்த திவ்யா, “ என்னாச்சுத்தை..?” என்றாள்.

அவரது பார்வை தூரத்தில் நின்றிருந்த சந்தியாவின் மீது படிந்தது.

திவ்யாவிற்கோ ஆத்திரமாக வந்தது. ஆனால் சாந்தியின் முகத்தை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று யூகித்தவள் ஆறுதலாக அவரது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.

வருத்தத்துடன் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார் சாந்தி.

சிறிது நேரத்தில் வாசுவும் ஆருத்ராவும் பைக்கில் கை நிறையப் பைகளுடன் வந்திறங்கினர்.

சிரிப்புடன் வெட்கமுமாக இறங்கியவர்களை பார்த்த சந்தியாவி்ற்கு தனது தவறு புரிந்தது. 

ஆனால் என்ன செய்வது?  இனி எதுவும் மாறப்போவதில்லையே…! அழகிய வாழ்க்கையை வேருடன் பிடிங்கி எறிந்து விட்டு பட்ட மரமாக நின்றிருந்தாள் சந்தியா. வெறுமையாக அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு வழியின்றி மும்பைக்கு  அருகிலுள்ள ஊருக்கு திரும்பச் சென்றாள்.

திருமணத்திற்கு முன்பே வேறு வாடகை வீட்டை பார்த்திருந்தான் வாசு.

மூன்று படுக்கையறையை கொண்ட அழகிய வீடு. நேர்த்தியாகவும் நவீனமாகவும் இருந்தது.

அனுவிற்கு பழைய நண்பர்களை விட்டுச் செல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் .புதிய வீட்டினுள்ளேயே இருந்த பூங்காவும், நீச்சல் குளமும் உற்சாகத்தை அளித்தது.

சிரிப்பும் கொண்டாட்டமுமாக திருமண நாள் வந்தது.

பிரம்மாண்டமான திருமணம் வாசுவிற்கு சங்கடத்தை தரும் என்பதினாலேயே எளிமையாக கோவிலில் திருமணத்தை நடத்த விருப்பப்பட்டாள் ஆருத்ரா.

அழகிய பச்சை பட்டுடுத்தி மிதமான ஒப்பனையில் வானுலக தேவதையை போல தன்னவனருகே வந்தமர்ந்தாள். 

சூழ்நிலையால் பிரிந்தவர்களை காலம் அழகிய புரிதலோடு சேர்த்து வைத்தது.

மங்கல நாண் எடுத்து அவளது சங்குக்கழுத்தில் அணிவித்து தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் வாசுதேவன்.

பூரிப்புடன் அமர்ந்திருந்த மகளை பார்த்த ராகவன் மற்றும் ப்ரேமாவிற்கு வேறு எந்த வாழ்க்கையை அவளுக்கு அமைத்துக் கொடுத்திருந்தாலும் நிச்சயமாக  மகளின்  முகத்தில்  இத்தனை மலர்ச்சி இருந்திருக்காது என்று நன்கு புரிந்தது.  ஆனந்த கண்ணீருடன் மணமக்களை வாழ்த்தினார்கள்.

குங்குமத்தை எடுத்து அவளது நெற்றி வகிட்டில் வைத்து விட்டான் வாசு. 

இதோ ஜென்ம ஜென்ம ஏக்கங்கள் அனைத்தும் ஒரு நொடியில் தீர்ந்து போனது போல ஒரு மாயை. புரியாத பரபரப்பு உடலெங்கும் பரவி சிலிர்க்க வைத்தது பெண்ணவளை.

இருவரின் விழிகளும் ஏதேதோ கதை பேசிட துடித்தது.. இருவரின் கண்களும் சிறிது கலங்கியிருந்ததோ என்னவோ…!

மற்ற சம்பிரதாயங்கள் அழகாக நடந்தேறியது. ஆருத்ராவின் புடவையின் நிறத்திற்கேற்ப அனுவும் பச்சை பாவாடை அணிந்து ரெட்டை பின்னலிட்டு குட்டித் தேவதையை போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டும் ஆருத்ராவிடம் ஒட்டிக் கொண்டும் திரிந்தாள் அனு.

முதலிரவு இருவருக்கும் அவர்களின் புதிய வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனு ஆருத்ராவிடம் ஒட்டிக் கொண்டே திரிந்தாள்.

“ இன்னைக்கு உங்க அண்ணனுக்கு எல்லாம் நடந்த மாதிரி தான் “ என கிண்டலடித்தான் ப்ரகாஷ்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள்,  “உங்களுக்கு வருத்தமாயில்லையா ப்ரகாஷ்? சந்தியாவோட இடத்துல ஆருத்ரா இருக்காங்களேன்னு?”என்று இழுத்தாள்.

“ தப்பா சொல்லாத…ஆருத்ரா இடத்துலே தான் இவ்வளவு நாள் சந்தியா இருந்துருக்கா…இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதை பெரிய விஷயமா பேசாத.. சரியா..வா முதல்ல அனுவை அங்க இருந்து கடத்திட்டு வந்துடலாம்…இல்லன்னா வேலைக்கு ஆகாது..” என்று இலகுவாக கூறிவிட்டு ஆருத்ராவிடம் சென்றனர்.

அனுவை தூங்க வைத்த பிறகே அவள் முதலிரவுக்கு தயாரானாள். பெரிதாக அலங்காரம் செய்யவில்லை. எளிய ஷிபான் புடவையில்  முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு, சாந்தி கொடுத்த நெருக்கி்  கட்டிய மல்லிகை பூவை சூடிக் கொண்டு பால் செம்புடன் அறைக்குள் நுழைந்தாள்.

இலகுவான உடையணிந்து பால்கனியில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு.

அவனருகே வந்து நின்றவள்,” என்ன சார் அங்க என்னத்தை பாத்துட்டு இருக்கீங்க?” என்றபடி அவனது முகம் பார்த்த படி கம்பியில் சாய்ந்து நின்றாள்.

“ சும்மா தான்….”

“ ஃபர்ஸ்ட் நைட்க்கு ரெடி ஆகிட்டீங்களா? இல்ல உங்களை அதுக்கும் ரெடி பண்ணனுமா?” என்று கூறி கண் சிமிட்டினாள்.

வழக்கமான அவனது ட்ரேட்மார்க் சிரிப்புடன் அவளது கைகளை பிடித்துக் கொண்டான்.

“ அழகன் டா நீ…” என்று கன்னக்குழியில் இருகரங்களாலும் கிள்ளி முத்தம் வைத்தாள்.

“ உள்ள‌ போகலாம் வா…” என்று அவளது கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் வாசு.

“ம்ம்…ரூம் ஸ்ப்ரே நல்லா இருக்கு…” என்று கூறி வாசம் பிடித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள்.

அவளை விட்டு சற்று விலகி  அமர்ந்தவன்  அவளது கரங்களை தன்னுடைய கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தது.

“இப்படியே தூரமா உக்காந்து தான் இன்னைக்கு நைட் முழுதும்  விரதம் காக்க போறீங்களா?”என்றாள் கிண்டலுடன்.

சிரித்தபடி அவளது மூக்கை பிடித்து ஆட்டியவன், “ பயமா இருக்குடி…திரும்பவும் உன்னை ஹர்ட்‌ பண்ணிடுவனோன்னு ரொம்பவே பயமா இருக்கு.. உன்னால தான் இன்னைக்கு நான் முழுசா உக்காந்திருக்கேன். இல்லன்னா மொத்தமா உடைஞ்சி போய் என்ன ஆகியிருப்பேன்னு தெரியாது…”என்றவனின் வாயைப் பொத்தியவள்,” திரும்பத் திரும்ப இதையே சொல்லி பெரிய மகாத்மா ரேஞ்சுக்கு பேசாதீங்க…யாரும்‌ யாரையும் தாங்கி பிடிக்கல. ஜஸ்ட் ஒரு மாரல் சப்போர்ட் தான்..உங்களை மாதிரி ஒரு  ஆளை மிஸ் பண்ண யாரும் விரும்ப மாட்டாங்க தெரியமா? “ என்று கூறி விட்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“எனக்கு ஒரே ஒரு ஆசை தான்….”

“ என்ன சொல்லு…” என்றான் ஆர்வமுடன்.

“குறைஞ்சது நாலு குழந்தைங்களாவது பெத்துக்கணும். அதுக்கு ரெடி பண்ணலாமா? நிறையவே பேசியாச்சு…இது காதாகாலேட்சேபம் பண்ற நேரம் இல்லை. நமக்கானது…நமக்கே நமக்கானது பா…பயப்படாதீங்க…கண்டிப்பா நான் ஹர்ட் ஆக மாட்டேன்” என்று கூறி விட்டு தோளில் முகத்தை புதைத்தாள்.

அவளது முகம் நிமிர்த்தி பார்த்தவன் உச்சந்தலையில் முத்திமிட்டு  இல்லற பந்தத்தின் முதல் படியை எடுத்து வைத்தான்.

நாசி, கன்னம் , செவி மடல் என்று முத்தம் நீண்டு இறுதியில் இதழில் வந்து இளப்பாறியது அவனது உதடுகள்.

அவனையறியாமலேயே அவனது கரங்கள் அவளது  வெண்ணிற இடையில் அழுந்தப் படிந்து உள்ளங்கையின் வெப்பத்தை கடத்திக் கொண்டிருந்தது.

இதழ்கள் அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்க அவனது கரங்கள் தயங்கிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் அவளது இடையோடு நின்று விட்டது.

மனதினுள் சிரித்துக் கொண்டவள் அவனை முத்தமிட்டுக் கொண்டே அவனது கரங்களைப்பிடித்து  தன் முதுகினை பற்றிக் கொள்ள வைத்தாள்.

அவளை கையில் ஏந்திக் கொண்டு மஞ்சத்தில் சரிந்தான்.

ஏக்கங்களும் வலிகளும் தூரச் செல்ல மெல்ல மெல்ல தடைகளையும் தயக்கங்களையும்  தாண்டி காமத்தின் வாசலை நோக்கி முன்னேறினர்.

மென்மையிலும் மென்மையாக அவளைக் கொள்ளயிட்டுக் கொண்டிருந்தான் வாசு.

உதடுகள் நடுங்கி லேசாக விரிந்து கொள்ள, “ ஸ்ஸ்..தேவ்..” என்ற லேசான முனகலுடன் தன்னவனை மொத்தமாக உள்வாங்கிக் கொண்டாள் காரிகையவள்.

அவனது வாசனை அவளது தேகம் முழுதும் பரவி பரவசமடைச் செய்தது.

அவளும் சிறிதும் சளைத்தவள் அல்ல என்பது போல அவனை கொள்ளையிட்டு வெட்கம் கொள்ளச் செய்தாள்.

உரிமைப்பட்டவனிடத்தில் காதல் பரிசுகளை கேட்டு வாங்க சிறிதும் தயக்கம் காட்டவில்லை அவள்.

மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் , “ ரொம்ப சாஃப்டா நடந்துக்குறீங்க தேவ்…உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்குறேன்…” என்று கூறி முத்தமிட்டாள்.

முத்தங்கள் மட்டுமே கணக்கில் அடங்காமல் சென்று கொண்டிருந்தது.

மீண்டும் மீண்டும் இருவரது தேடல்கள் புதிது புதிதாக தொடர்ந்து கொண்டிருந்தது. … புதிது புதிதாக அவன் கற்றுக் கொடுக்க‌ ஆர்வமாக அவையனைத்தையும்‌ உள் வாங்கிக் கொண்டு அவனிடமே பதில் பாடம் படித்தாள் .

புதியதோர் உலகத்தினை தங்களுக்கென்று அமைத்துக் கொண்டனர் இருவரும்.

தொழில் முறை நண்பர்கள், வாடிக்கையாளர்கள் , முக்கிய நண்பர்கள் மற்றும் சுற்றத்தினர் மேலும் சில முக்கியமானவர்களுக்காக திருமண வரவேற்பினை பிரம்மாண்டமாக நடத்தினர்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top