Ep 24

 

அத்தியாயம் 24

பிருந்தாவை தனது காருக்கு அழைத்து வந்தவன், பின்னால் உள்ள சீட்டில் அமர வைக்க, அவளோ இன்னுமே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் கழுத்தில் இருந்து லேசாக ரத்தம் கசிந்த படி இருக்க, அதை கண்டவனுக்கோ உள்ளம் பதற தான் செய்தது.

ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணனாக எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்றியவன். எவ்வளவு பெரிய காயங்களையும் சாதாரணமாக கையாண்டவன் அவன். ஆனால், இன்று அவளின் உடலில் உள்ள அந்த சிறு கீரலை கண்டு முதன்முறையாக அவனின் கரங்கள் நடுக்கத்தை உணர்ந்தது.

அவசரமாக சென்று தனது காரில் உள்ள முதலுதவி பெட்டியை எடுத்து வந்தவன், அவளின் கழுத்தில் உள்ள காயத்துக்கு மருந்து போட ஆரம்பித்தான்.

மருந்து பட்டதும், “ஸ்ஸ்…” என்று வலியிலும், எரிச்சலிலும் பற்களைக் கடித்தவள், ஆடவனின் கரங்களை சட்டென பற்றிக் கொள்ள,

அவனோ, “ஒன்னும் இல்ல… இன்னும் கொஞ்சம் தான். பொறுத்துக்கோ” என்று அவளை தேற்றிய படியே, மிக மிக மென்மையாக அவள் காயங்களுக்கு மருந்து போட்டான். 

பிருந்தாவுக்கோ அவ்வளவு இலகுவில் அந்த சம்பவத்தில் இருந்து இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

ஒரு வேளை சரியான நேரத்தில் சிம்மன் மட்டும் அங்கு வரவில்லை என்றால் அவளின் நிலை என்னவாகியிருக்கும்?

அந்த நால்வரிடமும் சிக்கி அவள் வாழ்க்கையே மொத்தமாக நாசமாகி இருக்குமே! 

அதை நினைக்கும் போதே அவள் தேகம் நடுங்க ஆரம்பித்து விட, அழுகை மீண்டும் அவளை சூழ்ந்து கொண்டது.

மருந்து போட்டுக் கொண்டு இருந்தவனோ, அவளின் அழுகையை உணர்ந்து பதறிப் போய் அவளை ஏறிட்டுப் பார்த்தவன், “பேபி என்னாச்சு? ரொம்ப வலிக்கிதா? நான் வேணா….” என்று அவன் வார்த்தைகளை முடிக்க முன்னரே, 

பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள் அந்தப் பேதை.

“நீ… நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வரலன்னா…. அ… அவனுங்க… எ.. என்னை…. ” என்றவள் குரல் கம்ம, அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளோ விம்மிய படி மேலும் அவன் மார்புக்குள் முகம் புதைத்துக் கொள்ள, 

அவனுக்கோ அவளின் கண்ணீரை கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஷ்ஷ்…. ஒன்னும் ஆகாது பேபி. நான் தான் இருக்கேல்ல. இனி யாராலயும் உனக்கு எந்த ப்ரோப்லமும் வராது. ரிலாக்ஸ்” என்று அவளின் தலையை மென்மையாக வருடிய படி இருந்தவனுக்கோ, அவளை இப்படி அழ வைத்த அந்த நால்வர் மீதும் கொலை வெறி தான் வந்தது.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக அவள் அப்படியே அவன் மார்பில் சாய்ந்து இருக்க, சிம்மனும் எதுவும் பேசாமல் அவள் தலைமுடியை மெதுவாக கோதிய படியே இருந்தான்.

ஏனோ அவனுடைய நெருக்கம் மட்டுமே அவளுக்கு இப்போது பாதுகாப்பாக உணர வைத்தது.

அவனும் அதை புரிந்து கொண்டவனாய் அமைதியாக அவளை தன் கை வளைவுக்குள் வைத்திருந்தான். 

மெல்ல மெல்ல அவளது தேகத்தின் நடுக்கமும் குறைய ஆரம்பிக்க, அவளின் மூச்சுக் காற்றும் சற்று சீராகியது.

சில நொடிகளுக்கு பிறகே அவள் மெதுவாக அவன் மார்பிலிருந்து விலக, அவனும் அவளிடம் இருந்து தன் கரங்களை பிரித்தெடுத்துக் கொண்டான்.

அவளது விழிகளோ அழுதழுது சிவந்து போய் இருக்க, மூக்கு நுனி லேசாகக் கன்றிப் போய் இருந்தது.

அவளின் சோர்ந்து போன வதனத்தை தன் கரங்களில் ஏந்தியவன், அவளின் கண்ணீரை பெரு விரலால் துடைத்த படியே, “இப்போ ஓகேவா?” என்று மென்மையாகக் கேட்க,

அவளுமே ஆம் என்பது போல மெதுவாக தலையை அசைத்தாள்.

ஆனால் இன்னுமே அந்த பயத்தின் சாயல் அவள் முகத்தில் இருந்து முழுவதுமாக மறையவில்லை என்பதே உண்மை.

அதை உணர்ந்த சிம்மனோ, “உனக்கு எதுவும் ஆகாது பேபி. நான் எப்பவுமே உன் கூட தான் இருப்பேன். பயப்படாத!” என்று ஆறுதலாக சொல்லிக் கொண்டே, மெல்ல குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க, அவளுமே விழிகளை மூடி அதை உள்வாங்கிக் கொண்டாள்.

தனக்காக இப்படி துடிக்கும் அவனின் அந்த முத்தம் அவளுக்கு கசக்குமா என்ன?

அவனது இதழ்களின் அந்தச் சூடான ஸ்பரிசத்தில், அவளின் மேனியோ ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது.

இது வரையில் அவனின் பிடிவாத குணத்தை மட்டுமே பார்த்தவளுக்கு இன்று அவனின் ஒவ்வொரு செயலும் புதிதாக தான் தோன்றியது.

அவனுக்குள்ளும் ஒரு மென்மையான குணம் இருந்திருக்கிறது என்பதை அவள் அந் நொடி புரிந்துக் கொண்டாள்.

ஆடவனும் அவளை விட்டு மெதுவாக விலக, அவளும் மெல்ல தன் இமைகளை விரித்தாள்.

சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கோ அப்போதே வீட்டின் நினைவு வந்தது.

“சிம்மா… வீட்டுக்கு கிளம்பணும்… அப்பா என்னை தேடுவாரு…” என்று பதற்றமாக சொல்ல,

அவனோ உடனே, “டென்ஷன் ஆகாத பேபி. இப்பவே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்று அவளை சமாதானப்படுத்தியவன், 

“நான் போய் உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி விட்டு காரின் கதவை திறக்கப் போக,

பிருந்தாவோ அவசரமாக அவன் கரத்தை பற்றிக் கொண்டாள்.

சிம்மனோ சற்று பதறிப் போய் அவளை திரும்பிப் பார்க்க,

“சீக்கிரம் வந்துடுங்க… எனக்கு இங்க தனியா இருக்க பயமா இருக்கு!” என்று பயம் கலந்த குரலில் சொன்னாள். 

அவளின் அந்த பயந்த முகத்தை பார்த்தவனுக்கோ உள்ளம் மீண்டும் இறுகிப் போனது.

“ம்ம்ம்” என்றவன் காரை விட்டு இறங்கி,  மீண்டும் அந்த இடத்தை நோக்கி வந்தான். 

அங்கே பிருந்தாவின் கைப்பையும், அவள் வாங்கி வந்த துணிப் பைகளும் மட்டுமே கீழே சிதறிக் கிடக்க, சிம்மன் அடித்த அந்த நால்வரும் அங்கு இருக்கவில்லை. 

ஆம்.

அவர்கள் எப்போதோ அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்க, தரையில் மட்டும் இன்னும் ரத்தக் கறைகள் ஆங்காங்கே தென்பட்டது.

அதில் பிருந்தாவின் கைகளில் இருந்து உடைந்து விழுந்த வளையல்களும் சிதறிக் கிடக்க, அதை பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் கொலைவெறி தான் வந்தது.

தன் கோபத்தை அடக்கிக் கொண்டவன், அவளின் பொருட்களை எடுத்துக் கொண்டு வேகமாக காருக்கு சென்றிருந்தான்.

சிறிது நேரப் பயணத்திற்குப் பின்னர், காரும் பிருந்தாவின் வீட்டை அடைந்திருந்தது.

தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வண்டியில் இருந்து இறங்கியவள், சற்று தயங்கிய படியே, “ரொம்ப… தேங்ஸ்” என்று மட்டும் கூறி விட்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் விறு விறுவென வீட்டுக்குள் சென்று விட, அவள் உள்ளே போகும் வரை காத்திருந்தவன், அதற்கு பிறகே காரை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு இருந்தான். 

பிருந்தாவோ வீட்டுக்குள் நுழைய, அங்கே ஹாலில் இருந்த அவளின் தந்தையோ, “வீட்டுக்கு வரதுக்கு ஏம்மா இவ்ளோ லேட்?….” என்று கேட்ட படி திரும்பியவர், மகள் வந்த கோலத்தை கண்டு அதிர்ந்து போய் விட்டார். 

அதே வேளை சமையலறையில் இருந்து கையில் காபியோடு வெளியில் வந்த அவளின் அன்னையும், மகளை அந்த நிலையில் பார்த்ததும் அதிர்ச்சியில் கையில் இருந்த கோப்பையை கீழே போட்டு விட்டார்.

“பிருந்தா… என்னாச்சும்மா உனக்கு?” என்று அவளின் பெற்றோர்கள் இருவரும் பதறிப் போய் அவளிடம் ஓடி வர, அவளோ கையில் உள்ள பைகளை அப்படியே கீழே போட்டவள், “அப்பா” என்று அழுது கொண்டே பாய்ந்து தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.

அவரோ மகளின் அழுகையை கண்டு பதறி தான் போனார்.

அவளை சமாதானப் படுத்தி இருக்கையில் அமர வைத்தவர்கள் மெல்ல அவளிடம் விசாரித்து நடந்த அனைத்தையுமே தெரிந்து கொண்டார்கள்.

அனைத்தையும் கேட்டவர்களுக்கோ உள்ளம் பதறவே செய்தது.

தங்கள் மகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து வந்திருக்கிறாள்.

மனைவியின் புறம் திரும்பிய குணசேகரோ, “முதல்ல அவளை உள்ள கூட்டிட்டு போயி ஏதாவது சாப்பிட வை” என்று கூறி விட்டு, தனது அலைபேசியை எடுத்தவர், சிம்மனுக்கு தான் அழைத்திருந்தார்.

அவனோ அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தான்.

தனது ஷேர்டை கழற்றிய படி இருந்தவனின் அலைபேசி சிணுங்க, பாக்கேட்டில் இருந்து அதை எடுத்துப் பார்த்தான்.

திரையில் ‘டீன்’ என்ற பெயர் மின்ன, உஷ்ண பெரு மூச்சு ஒன்றை வெளி விட்டவன்,

அழைப்பை ஏற்று, “சொல்லுங்க டாக்டர்” என்றான் கர கரப்பான குரலில்.

மறு முனையில் இருந்த குணசேகருக்கோ, என்ன பேசுவது என்றே புரியவில்லை.

தன் மகளின் உயிர், மானம் இரண்டுயுமே காப்பாற்றி இருக்கிறான்.

அவனுக்கு எப்படி நன்றி கூறுவது என்று கூட அந்த தந்தைக்கு புரியவில்லை.

சிம்மனோ அவர் அமைதியை புரிந்து கொண்டவனாய், “பிருந்தா இப்போ எப்படி இருக்கா டாக்டர்?” என்று அவளைப் பற்றி விசாரிக்க,

குணசேகரோ தன் தொண்டையை நனைத்துக் கொண்டு, “கொஞ்சம் பயந்து போயிருக்கா. பட் இப்போ பரவால்ல” என்று சொன்னவர் தொடர்ந்து,

 “உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரில்ல சிம்மா.  என் பொண்ணோட உயிரையே காப்பாத்தி இருக்க….” என்று அவனுக்கு நன்றி சொல்ல,

சிம்மனோ, “இட்ஸ் ஓகே டாக்டர். அவளை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து இருந்தான். 

அலைபேசியை தூக்கி கட்டிலில் போட்டவன், பால்கனிக்கு சென்று புகைக்க ஆரம்பித்து விட, உடல் என்னவோ இங்கு இருந்தாலும், அவன் மனம் மொத்தமும் அவளின் எண்ணத்தில் தான் தவித்துக் கொண்டிருந்தது.

இவ்வாறு நாட்களும் நகரத் துவங்கியது.

பிருந்தாவும் அந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு செல்லவில்லை.

ஒவ்வொரு நாளும் அவள் வருவாள் என்று அவன் காத்திருந்தது தான் மிச்சம்.

அவளுக்கு அழைத்து பேச அவனுக்கு ஒரு நொடி போதும்.

ஆனால் போனில் பேசுவதை விட அவளை நேரில் பார்க்க தான் அவன் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.

இவ்வாறு ஒரு வாரத் தவிப்பிற்குப் பிறகு பிருந்தாவும் மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.

ஆனால் அன்று அவள் அங்கு வேலை பார்க்கும் சாதாரண நர்ஸாக வரவில்லை. மாறாக, அந்த மருத்துவமனை டீனின் மகளாக வந்திருந்தாள்.

சிம்மனோ டீனின் ஆபிஸ் அறையில் தான் அமர்ந்து இருந்தான். 

பிருந்தாவின் தந்தை குணசேகரோ அவனிடம் திருமண அழைப்பிதழை நீட்டியவர், “இந்த மாசம் டுவெண்ட்டி பை என்னோட பொண்ணுக்கு மேரேஜ் வச்சிருக்கேன் சிம்மன். நீ கண்டிப்பா அவ கல்யாணத்துக்கு வரணும்” என்று புன்னகைத்த படி சொல்ல, 

சிம்மனோ அவர் பக்கத்தில் தலையை குனிந்த படி நின்றிருந்த பிருந்தாவை சற்று அழுத்தமாக பார்த்து விட்டு, “ஷுவர் டாக்டர் நான் வராம எப்படி! கண்டிப்பா வரேன்” என்று சொல்லிக் கொண்டே, அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்டான். 

பிருந்தாவோ அப்போதும் அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை.

எங்கே தன் முகத்தில் தெரிந்த தவிப்பை அவன் கண்டு விடுவானோ என்று பயந்தாள்.

ஆனால் அவனின் கழுகுப் பார்வையில் இருந்து அவளால் அவ்வளவு சீக்கிரம் தப்பித்து விட முடியுமா என்ன?

 பார்வையை வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டவன், “ஓகே டாக்டர்… நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு விறு விறுவென வெளியேறி இருந்தான். 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top