அத்தியாயம் 23
பிருந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியவனோ, “என்னடா எங்க கிட்டயே ஹீரோயிசம் காட்டுறியா? மரியாதையா இங்கிருந்து ஓடி போயிடு. இல்ல இவ கழுத்த அறுத்துட்டு போயிட்டே இருப்போம்” என்று மிரட்டலாக கத்த,
சிம்மனுக்கோ இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை. கோபத்தை காட்ட இது சரியான நேரமால்லவே!
தன்னவள் மீது கத்தியை வைத்து மிரட்டுகிறான். கொஞ்சம் விட்டால் அவள் உயிருக்கே ஆபத்தாகி விடுமே!
அவனுக்கோ இப்போது அனைத்தையும் பொறுமையாக தான் கையாண்டாக வேண்டும் என்ற கட்டாயம்.
“ஓகே… நான் எதுவும் பண்ணல…. ப்ளீஸ் அவளை விட்டுடு” என்று தன் மொத்த கோபத்தையும் கட்டுப் படுத்திய படி அவன் சற்று பொறுமையாக சொல்ல,
பிருந்தாவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தவனோ, சிம்மனின் முகத்தில் தெரிந்த அந்த சிறு தடுமாற்றத்தை கண்டு உள்ளுக்குள் வெற்றிப் புன்னகையை உதிர்த்துக் கொண்டான்.
கீழே விழுந்து கிடந்த அவனின் நண்பர்களிடம் திரும்பியவன், “டேய் சீக்கிரம் போய் அவனை புடிங்கடா” என்று கத்த,
அவர்களோ எழ கூட முடியாமல், முனகிய படி தரையில் கிடக்க, வயிற்றில் அடி வாங்கியவன் மட்டும் அங்கிருந்த காரை பற்றிய படி மெல்ல எழுந்தான்.
கழுத்தில் கத்தியை வைத்திருந்தவனோ, “டேய் போய் அவனை புடிடா… சீக்கிரம்” என்று அவனிடம் சொல்ல, அவனுக்கோ சிம்மனை பார்க்கவே பயமாக இருந்தது.
எங்கே மீண்டும் போனால் அவன் மற்றவர்களை போல தன் வாயிலிருந்தும் ரத்தம் வழிய வைத்து விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக கத்தியை வைத்திருந்த அவன் நண்பனின் பக்கமே ஓடி விட்டான்.
இங்கே சிம்மனுக்கோ கோபம் உள்ளுக்குள் எறிமலையாக வெடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அதை விட வேகமாக அவளை எப்படி காப்பாற்றுவது என்று அவன் மூளை படுவேகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க, அப்போது தான் அங்கே ஓரமாக கிடந்த ஒரு இரும்புக் கம்பி அவன் விழிகளில் தென்பட்டது.
ஆனால் அதுவோ அவன் இருக்கும் இடத்தை தாண்டி சற்று தள்ளி இருக்க, இப்போது தான் அதை எடுக்க முயன்றால் அவர்கள் உஷாராகி விடுவார்கள் என்று அவன் மூளை எச்சரித்தாலும், அவனுக்கு இதை விட்டால் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
அவர்கள் சொல்லுவதை கேட்டுக்கொண்டு இருந்தால், அடுத்த நொடி என்ன விபரீதம் நடக்கும் என்று கூட சொல்ல முடியாதே!
இப்போதே அவளின் கழுத்தில் அழுந்தியிருந்த அந்த கத்தியின் முனை, அவள் சருமத்தை லேசாக கிழித்திருக்க, மெல்லிய ரத்தக் கோடு ஒன்று கழுத்தோரமாக வழிந்தது.
அதை பார்த்தும் அவனால் எப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க முடியும்?
பிருந்தாவோ பயத்தில் மூச்சு விடக்கூட பயந்து கண்களில் நீர் கோர்க்க நின்றிருக்க, சிம்மனுக்கோ அவள் கலங்கிய விழிகளை பார்த்ததும் தனக்குள் உண்டான பொறுமை கொஞ்ச கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது.
கத்தியை வைத்திருந்தவனோ, “டேய் புறம் போக்கு என் கிட்ட எதுக்குடா வர? போய் அவனை புடிடா” என்று தன் பக்கம் ஓடி வந்த நண்பனிடம் கோபமாக கர்ஜிக்க,
அவனின் நண்பனோ, “டேய் அவன் அடிக்கிறான்டா! அங்க பாரு அவனுங்க நிலைமைய!” என்று கீழே விழுந்து கிடந்த இருவரையும் காட்டியவன்,
“நீ வேணா அந்த கத்தியை என் கிட்ட கொடுத்துட்டு அவனை போய் அடி…” என்று பயத்துடன் சொல்ல, அவனோ சரமாரியாக நண்பனை முறைத்தான்.
இதற்கு இடையில் அவர்கள் இருவரையும் எப்படி திசை திருப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்த சிம்மனுக்கோ, அவர்கள் இருவரும் தங்களுக்குள் வாதடிக் கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதமாக பயன் படுத்திக் கொள்ள நினைத்தான்.
மெல்ல தன் பாக்கேட்டில் கை விட்டவன், அதிலிருந்த அவனின் லைட்டரை எடுத்து, அவர்கள் இருவரும் அசந்த இந்த நேரத்தை பயன் படுத்திக்கொண்டு அங்கிருந்த ஒரு காரை நோக்கி எறிந்திருந்தான்.
அந்த லைட்டரோ நேராக அந்த காரின் கதவில் மோதி “டங்!” என்ற சத்தத்துடன் கீழே விழ,
அந்த சத்தத்தில் கத்தியை வைத்திருந்தவனும், அவனின் நண்பனும் சட்டென சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தார்கள்.
அடுத்த நொடி!
அவர்களின் கவனம் திசை மாறியதை பயன்படுத்திக் கொண்ட சிம்மனோ, ஒரு கணமும் தாமதிக்காமல், மின்னல் வேகத்தில் ஓடி சென்று ஓரமாக கிடந்த அந்த இரும்புக் கம்பியை கையில் எடுத்துக் கொண்டான்.
எடுத்த வேகத்தில் நொடியும் தாமதிக்காமல் அவன் பாய்ந்து ஓடி வர, இதை கண்ட கத்தி வைத்திருந்தவனோ, “டேய்!” என்று அதிர்ச்சியில் கத்தியபடி பிருந்தாவை தன் பக்கம் இழுக்க முயல,
அதற்கு முன்னரே சிம்மனோ தன் கரங்களில் இருந்த இரும்பு கம்பியால் அவனின் தலையில் ஓங்கி அடித்திருந்தான்.
“ஆஆஹ்!” என்று வலியில் அலறியவன், அந்த எதிர்பாராத தாக்குதலில் தடுமாறி பின்னால் சரிய, அவன் கையில் இருந்த கத்தியோ நழுவும் போது பிருந்தாவின் கழுத்தை லேசாக கீறிவிட்டபடி சென்று கீழே விழுந்தது.
அதில் பெண்ணவளோ “அம்மா…” என்று எரிச்சல் கலந்த வலியில் கதற,
அவளின் கழுத்தோரமாக அந்த மெல்லிய கீறலில் இருந்து உதிரம் கசிந்தது.
சிம்மனோ பதறிப் போய் அவளை பிடித்து தன் பக்கம் இழுத்தவன், அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவளுமே விம்மிய படி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
தலையில் அடி வாங்கி கீழே விழுந்தவனோ, மண்டை வெடித்து முகம் முழுக்க ரத்த வெள்ளத்தில் அறை மயக்கத்தோடு கிடக்க, அவன் நண்பனோ, “டேய் மச்சான் இங்க பாருடா.” என்று பதறிய படி அவனருகே மண்டியிட்டு அவனை உலுக்கிக் கொண்டிருந்தான்.
அவனை அனல் தெறிக்க பார்த்த சிம்மனுக்கோ இன்னுமே வெறி அடங்கவில்லை. தன்னவள் கழுத்திலேயே கத்தியை வைத்து விட்டானே!
அவனை கொன்றால் கூட அவன் கோபம் அடங்குமா என்பது சந்தேகம் தான்.
“எவ்ளோ தைரியம் இருந்தா அவ கழுத்துலயே கத்திய வைப்படா…. உன்னை…” என்று வெறி கொண்டவன் போல மீண்டும் அந்த கம்பியை ஓங்கி அடிக்கப் போக, அதற்குள் பிருந்தாவோ, “எ…. எனக்கு ப…ய….மா இருக்கு சிம்மா. ப்… ளீஸ் இங்கிருந்து போ….யிடலாம்” என்று விம்மிய படி குரல் தழு தழுக்க சொல்ல,
தன் கை வளைவுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தவளின் குரலில் தான் அவன் சற்று நிதானதுக்கே வந்தான்.
இப்போது அவர்களை அடிப்பதை விட, தன்னவளை பாதுகாப்பாக இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டும் என்பதே அவனுக்கு முக்கியமாகப் பட்டது.
கையில் இருந்த கம்பியை தூக்கி தூரப் போட்டவன், “இதுக்கப்புறம் ஏதாச்சும் பொண்ணுங்க கிட்ட வாலாட்டுறதை பார்த்தேன், அதே இடத்துல கொன்னு புதைச்சிடுவேன்” என்று கீழே கிடந்தவர்களை பார்த்து பற்களை கடித்தபடி எச்சரிக்க,
அவனின் அந்த மிரட்டலில், அங்கிருந்த நால்வருமே நடுங்கி தான் போனார்கள்.
பிருந்தாவோ அவனின் ஷேர்டை பயத்தில் மேலும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள, சிம்மனோ அவள் நடுக்கத்தை உணர்ந்து “ஒண்ணும் இல்ல பேபி. நான் தான் இருக்கேன்ல்ல… வா….” என்று அவள் தலையை மெதுவாக வருடிய படியே, தனது காருக்கு அழைத்து சென்றான்.