அத்தியாயம் 20
விஷ்வா மீட்டிங்கை முடித்து விட்டு வரவே இரண்டு மணித்தியாலங்கள் கழிந்திருந்தது.
தனது இருக்கையில் வந்து அமர்ந்தவன், மேசையில் இருந்த அலைபேசியை தான் பார்த்தான்.
சற்று முன்னர் அவள் கோபமாக பேசிய வார்த்தைகளே அவன் மனதில் தோன்றி மறைய, அவன் முகமோ மேலும் இறுகிப் போனது.
மறுபடியும் அவளுக்கு அழைத்து பார்க்கலாமா என்று யோசித்தான்.
அவள் கோபமாக இருப்பாள் என்று அறிந்தாலும், அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லையே!
ஓரமாக கிடந்த தனது தொலைபேசியை எட்டி எடுத்தவன், அவளுக்கு அழைக்க போக, அப்போது தான் அவள் பல முறை அவனுக்கு அழைத்து இருந்த மிஸ்ட் கால்கள் அவன் விழிகளில் தென்பட்டது.
அதை கண்டவனோ ஒரு நொடி அதிர்ந்து போக, அப்போதே அவள் அனுப்பிய குறுஞ் செய்தியை பார்த்தான்.
அதிலோ,
‘சாரி விஷ்வா. நீங்க என் மேல கோபமா இருக்கீங்கன்னு தெரியும். பட் நான் வேணும்னே போனை ஆப் பண்ணல. உங்ககிட்ட பேசிட்டு இருக்கும் போதே அது சார்ஜ் இல்லாம ஸ்விச் ஆப் ஆகிடுச்சு. ப்ளீஸ் ஆன்சர் மை கால்’
என்று அவள் அனுப்பியிருக்க, அதை படித்துப் பார்த்தவனுக்கோ, அவ்வளவு நேரமும் தனக்குள் இருந்த பாரம் அடுத்த நொடியே காணாமல் போய் விட, அவன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை குடி கொண்டது.
அவளை தான் தவறாக நினைத்து கொண்டோமே என்று வருந்தியவன், அடுத்த கணம் அவள் எண்ணுக்கு அழைத்தான்.
இங்கே பிருந்தாவோ அப்போது தான் மருத்துவமனைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவள் மனமோ இன்னுமே குற்ற உணர்ச்சியில் தான் தவித்துக் கொண்டிருந்தது.
விஷ்வா தன் மீது உள்ள அக்கறையாலும், தன்னை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தானே அப்படி செய்தான்.
ஆனால் தான் அதை புரிந்து கொள்ளாமல், அவனை காயப்படுத்துவது போல அவ்வாறு பேசி விட்டோமே!
அதுவும் அவன் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?
அந்த சிம்மன் தன்னிடம் அத்து மீறி தானே நடந்து கொண்டான்.
அதை மறைப்பதற்காக இவனை போய் காயப்படுத்தி விட்டோமே!
நினைக்கும் போது அவள் மீதே அவளுக்கு கோபம் தான் வந்தது.
அதே வேளை அவளின் அலைபேசி அலற, கண்ணாடியை பார்த்த படி நின்றிருந்தவள், அந்த சத்தத்தில் அவசரமாக கட்டிலில் கிடந்த அலைபேசியை எடுத்துப் பார்க்க, ‘விஷ்வஜித்’ என்ற பெயரே திரையில் மின்னியது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “சாரி விஷ்வா நீங்க என் கோபமா இருப்பீங்கன்னு…” என்று அவள் பேச முன்னரே,
“கோபமா தான் இருக்கேன்” என்றான் அவன்.
அதில் சட்டென அவள் முகம் வாட,
“என் மேல தான் நான் கோபமா இருக்கேன் பிந்து” என்றான் தொடர்ந்து.
அவன் கூற்றில் புருவம் சுருக்கியவள், “விஷ்வா…” என்று ஏதோ பேச வர,
“ஐ அம் சாரி பிந்து. நீ என் மேல உள்ள கோபத்துல தான் போனை கட் பண்ணிட்டன்னு நான் தப்பா நினைச்சிட்டேன். பட் அதுக்காக நான் உன்னோட காலை இக்னோர் பண்ணல. இம்போர்ட்டண்டான ஒரு மீட்டிங் வந்துடுச்சு. அதுனால தான் உன்னோட போனை ஆன்சர் பண்ண முடியாம போயிடுச்சு. சாரி பிந்து” என்று அவன் மன்னிப்பு கேட்க,
பிருந்தாவுக்கோ ஒரு மாதிரி ஆகிப் போனது. தான் அவனிடம் அவ்வளவு கோபமாக பேசியும் அவன் பதிலுக்கு தன்னிடம் கோபப் படவில்லையே!
அவளுக்கு மேலும் குற்ற உணர்வாக இருந்தது.
“இல்லை விஷ்வா நான் தான் தப்பு பண்ணேன். நீங்க என் மேல உள்ள அக்கறையில தான் அப்படி பண்ணீங்கன்னு புரிஞ்சிக்காம உங்க மேல தேவையில்லாம கோப பட்டுட்டேன். ஐ அம் ரியலி சாரி விஷ்வா” என்றாள் உண்மையான வேதனையுடன்.
அது அவனுக்குமே புரிந்தது.
“இல்லை நீ என் மேல கோப பட்டது நியாயம் தான். நான் உனக்கு தெரியாம அப்படி பண்ணி இருக்க கூடாது. என் மேல தான் தப்பு பிந்து” என்று அவன் திரும்பவும் தன் மீதே குற்றம் சாட்ட,
அவளோ “இல்லை இல்லை நீங்க தப்பு பண்ணல. நான் தான் உங்களை தப்பா நினைச்சிட்டேன்.” என்று அவசரமாக அவள் சொல்ல,
அவனோ லேசாக இதழ் பிரித்து புன்னகையை உதிர்த்தவன்,
“ஓகே ஓகே நீ தான் தப்பு பண்ண. சோ… என்ன பண்ணலாம்?…. பனிஷ்மென்ட் கொடுக்கலாமா?” என்று அவன் குரல் சற்று கிறக்கமாக ஒலிக்க,
அவளுக்கோ அந்த ‘பனிஷ்மென்ட்’ என்ற வார்த்தையை கேட்டதுமே சட்டென அந்த சிம்மனின் முகமே மனக் கண்ணில் தோன்றியது.
அந்த வார்த்தையை அவளிடம் எப்போதுமே அவன் தானே பயன்படுத்துவான்.
அவள் அமைதியாக இருக்கவும், மறுமுனையில் இருந்த விஷ்வாவோ,
“என்னாச்சு பிந்து? ஏன் சைலண்ட் ஆகிட்ட? பனிஷ்மென்ட்ன்னு சொன்னதும் பயந்துட்டியோ?” என்று நக்கலாகக் கேட்க,
அவளோ தன்னை சுதாகரித்துக் கொண்டு, “அ…. அதெல்லாம் ஒன்னும் இல்லையே!எனக்கு ஹாஸ்பிடல்க்கு கிளம்ப டைம் ஆச்சு விஷ்வா. நான் புறப்படணும்” என்று பேச்சை மாற்ற,
அவனோ இதழ்களை வளைத்த படி, “ஹேய் நான் ஏதாவது பேச ட்ரை பண்ணாலே என் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறதே உன் வேலையா போச்சுல்ல?” என்று சொல்ல,
அவளோ தலையை சொரிந்த படி, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க… நிஜமாவே வேலைக்கு டைம் ஆச்சு. கிளம்பனும்…..” என்று இழுக்க,
அவனோ மேசையில் இருந்த பேப்பர் உருண்டையை சுழற்றிய படியே, “ஓகே ஓகே… டென்சன் ஆகாத. நீ கிளம்பு. எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு.” என்றவன், சில வார்த்தைகள் பேசி விட்டு அழைப்பை துண்டிக்க, அவளுமே நிம்மதி பெரு மூச்சு ஒன்றை விட்ட படி, வேலைக்கு புறப்பட்டிருந்தாள்.
****
அன்று வார்டில் ஒரு நோயாளியின் ரிப்போர்ட்டை பரிசோதித்துக் கொண்டிருந்த பிருந்தாவின் விழிகளில் பட்டான் சில மருத்துவர்களோடு பேசிய படி வந்த சிம்ம விஷ்ணு.
அவன் வருவதையே சற்று ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவள் விழிகளில் அவன் ஒரு முறையாவது தன்னை திரும்பிப் பார்க்க மாட்டானா என்ற தவிப்பே தோன்றியது.
ஆனால் அவனோ அப்படி ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்பதை கூட கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து செல்ல, அவள் இதயத்தில் யாரோ ஊசியை வைத்து குத்தியது போன்ற உணர்வு.
இத்தனை நாள் தன்னை துரத்தி துரத்தி பின்னால் வந்து தொந்தரவு செய்தவன், இப்போது தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் விலகிச் சென்றால் வேறு எப்படி தான் இருக்கும்?
ஆம்…
அன்று நடந்த அந்த சம்பவத்துக்குப் பிறகு சிம்மனோ பிருந்தாவிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தான்.
ஏன் பல முறை அவளை தனியாக சந்திக்க நேர்ந்தும் கூட, அலட்சியமாக கடந்து சென்று விடுவான்.
முதலில் அவனது இந்த திடீர் விலகல் அவளுக்கு சற்று வித்தியாசமாக தெரிந்தாலும், போகப் போக தன்னை பிடித்த சனி இப்போதாவது விட்டுத் தொலைந்தது என்று நிம்மதி அடைந்துக் கொண்டாள்.
ஆனால், அதெல்லாம் சில நாட்கள் தான்.
நாட்கள் நகர நகர அவனின் இந்த மௌனமும், விலகலுமே அவளை மனதளவில் பாதிக்கத் தொடங்கியது.
ஒவ்வொரு முறையும் அவனின் நெருக்கத்தை வெறுத்தவளுக்கு, இப்போதெல்லாம் அவன் தன்னிடம் இருந்து விலகி செல்லுவதே ஒரு வித வலியை கொடுத்தது எனலாம்.
‘அவனால இனி நமக்கு எந்த ப்ரோப்லமும் இல்லை. இனி என் வாழ்க்கையில அவன் குறுக்க வர மாட்டான்’ என்று அவள் மூளை தான் சமாதானம் சொன்னது. ஆனால் மனம் அதை ஏற்க முடியாமலேயே தவித்துக் கொண்டிருந்தது.
எப்போதுமே அவன் நினைவாக தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.
ஒரு சில நேரம் அவனிடம் போய் பேசலாமா என்று அவள் மனம் கேட்டதும் உண்மை தான்.
அவனே விலகி சென்று விட்டான். ஆனால் தான் எதற்காக அவனை தேடுகிறோம் என்று பல முறை தன்னையே கடிந்து கொள்ளுவாள்.
அதே வேளை அவனின் ஒரு பார்வைக்காக ஏங்கவும் செய்தாள்.
இன்னும் சில வாரங்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி வேறு ஒருவன் மீது தனக்கு ஈர்ப்பு தோன்றுகிறதா?
நினைக்கும் போது அவளுக்கே அவமானமாக தான் இருந்தது.
ஆனாலும் என்ன செய்வது தனக்கு தோன்றும் இந்த உணர்வுகள் தவறு என்று தெரிந்தாலும், அவளால் அதை தடுக்க முடியவில்லையே!
எவ்வளவு தான் அவளும் தன் உணர்வுகளை அடக்கி வைத்திருப்பாள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் அது வெளியில் வந்து தானே ஆக வேண்டும்.
****
அன்று சில பைல்களை எடுத்துக் கொண்டு மேல் தளத்துக்கு செல்ல வேண்டி லிப்டில் உள்ள பட்டனை அழுத்திய படி நின்றிருந்தாள் பிருந்தா.
அதே வேளை அங்கே ஒரு வைத்தியரோடு பேசிய படி வந்தான் சிம்மன்.
லிப்ட் கதவும் திறக்கப்பட, மூவரும் உள்ளே சென்றனர்.
பிருந்தாவோ சற்று ஓரமாக சென்று நின்று கொள்ள, சிம்மனும் அவனோடு வந்த அந்த வைத்தியரும் முன்னால் நின்றிருந்தனர்.
அவர்கள் இருவரும் ஏதோ ஒரு அறுவை சிகிச்சையைப் பற்றித் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க, சிம்மனின் பின்னால் நின்றிருந்த பிருந்தாவின் விழிகளோ அவனை தான் எப்போதும் போல ரசனையும், ஏக்கமும் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் அவனை இப்படி தானே ரசிக்க முடிகிறது.
ஆனால் அவளை எப்போதுமே தொந்தரவு செய்யும் அவன் பார்வை மாதுவின் புறம் சற்றும் திரும்பவில்லை என்பதே உண்மை.
அதுவே அவளுக்கு ஆத்திரத்தையும், வலியையும் கொடுத்தது.
‘பொறுக்கி பெரிய மன்மதன்னு நெனப்பு. பனை மரம் மாதிரி நிக்கிறதை பாரு’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டவள், வேறு புறம் பார்வையை திருப்பினாள்.
ஆனால் அவள் துரதிஷ்டம், அந்த லிப்டில் இருந்த கண்ணாடியில் கூட அவன் முகமே தெரிய, இப்போது அதை ரகசியமாக ரசிக்க ஆரம்பித்து விட்டாள் அந்தப் பேதை.
லிப்டும் ஒரு தளத்துக்கு வந்து நிற்க, சிம்மனோடு வந்த அந்த வைத்தியர் அவனிடம் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இப்போது உள்ளே பிருந்தா மற்றும் சிம்மன் மட்டுமே இருந்தனர்.
அவளோ கையில் உள்ள பைலை மார்போடு இறுக்கி அணைத்த படி நின்றிருக்க, அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தனது அலைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
கதவும் மூடப்பட்டு லிப்ட் நகரத் தொடங்கி சில நொடிகள் தான் இருக்கும், அதற்குள்ளேயே ஒரு பயங்கரமான சத்தத்துடன் லிப்ட் குலுங்க ஆரம்பித்து விட, அடுத்த கணமே ஒரு பலமான அதிர்வுடன் லிப்ட் பாதியிலேயே நின்று போனது.