Ep 19

அத்தியாயம் 19

ஒரு நோயாளியின் ரிப்போர்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்த சிம்மனுக்கோ வேலையில் கொஞ்சமும் கவனம் செலுத்த முடியவில்லை. 

மேசையில் பேனாவை தட்டிய படி இருந்தவனுக்கோ, திரும்ப திரும்ப அந்த அறையில் நடந்த விடயங்கள் தான் மூளையில் ஓடிக்கொண்டே இருந்தது. 

“ஷிட்!” என்று தன் கையிலிருந்த பேனாவை மேசையின் மீது வீசியவன், இருக்கையில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டான்.

தன்னை எதற்காக அவளின் நினைவுகள் இப்படி அலைக்கழிக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை.

தலையை ஒற்றை கையால் பற்றிய படி இருந்தவன், பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீரை மட மடவென அருந்தினான். 

குளிர்ந்த நீர் தொண்டைக்குள் சென்று சற்று இதமாக இருக்க, அவன் மனமும் ஒரு நிலைக்கு வந்தது. 

தனது அலைபேசியை எடுத்து முகப்பில் இருந்த அவளின் புகைப்படத்தை தான் பார்த்தான். 

என்ன தான் அவளிடம் அப்படி அலட்சியமாக பேசி விட்டு வந்தாலும், அவனால் அவளை வேறொருவனோடு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.

அவன் ஈகோ, அப்படி பேச வைத்து விட்டது. 

அவள் மீது மட்டும் தனக்கு ஏன் இப்படி பட்ட உணர்வுகள் வருகிறது என்றே புரியவில்லை. 

அது காதலா? ஈர்ப்பா என்று எதுவுமே தெரியாது. எது இருந்தாலும் அதை பற்றி அவன் கவலை பட போவதும் இல்லை. 

அவள் தனக்கு வேண்டும் அவ்வளவு தான். 

தன் இதழ்களை நாவால் வருடிப் பார்த்தவனுக்கு, அவள் கொடுத்த அந்த சிறு முத்தமே பெரும் போதையாக இருந்தது. 

அவனுக்கு மட்டும் அல்ல, இங்கே பெண்ணவளின் நிலையும் அதே தான். 

மருந்துகளை எடுத்து கொண்டு அவள் வார்டுக்கு வர, அங்கிருந்த சீனியர் நர்ஸோ, “இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?” என்று சற்று கோபமாக கேட்க, பிருந்தாவும் ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தாள். 

ஆனால் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை அவளால் சமாளிக்கவே முடியவில்லை. 

அவளது இதழ்களில் இன்னும் அவன் கொடுத்த முத்தத்தின் வெப்பம் அப்படியே இருந்தது. அதை மென்மையாக வருடிப் பார்த்தவளுக்கோ அவளை அறியாமலேயே இதழ்களில் ஒரு வெட்கப் புன்னகை தோன்ற, அடுத்த கணமே அவன் பேசிய வார்த்தைகளும் அவள் மூளைக்கு உறைத்தது. 

அந்த நொடி பாவையின் உதட்டில் பூத்த புன்னகை அப்படியே வழிந்து போய் விட, 

‘அறிவு இருக்காடி உனக்கு? உன்னை ஒரு மனுஷியா கூட மதிக்காம பேசிட்டு போனவனை நினைச்சு வெட்கப்படுறியா? சீ… என்ன பொண்ணு நீ!’ என்று தன்னை தானே கடிந்து கொண்டவள், தன் வேலையில் மூழ்க நினைத்தாலும், அவன் எண்ணத்தில் இருந்து அவளால் அவ்வளவு இலகுவில் மீள முடியவில்லை என்பது தான் உண்மை. 

இருவருமே வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், ஒருவரின் நினைவால் இன்னொருவர் உருகிக் கொண்டு தான் இருந்தனர். 

****

விஷ்வஜித்தோ சற்று கோபமாக அலைபேசியை பார்த்து கொண்டு பால்கனியில் நின்று கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் அவன் காதுகளுக்கு அந்த செய்தி வந்தது. 

ஆம். 

அவனுக்கு அழைத்த அந்த ஒற்றனோ அங்கு அவன் பார்த்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி இருக்க, அதை கேட்டவனுக்கோ இரத்தம் கொதித்தது. 

சிம்மனால் அவளுக்கு பிரச்சனை வர கூடலாம் என்று அவன் நினைத்தது இப்போது உண்மையாகி விட்டதே!

இதை பற்றி பிருந்தாவிடம் கேட்கலாமா என்று யோசித்தவனுக்கோ சற்று தயக்கமாக இருந்தது. 

இப்போது இது பற்றி அவளிடம் கேட்டால் தான் அவளுக்கு தெரியாமல் ஆள் வைத்து கண் காணித்ததும் அவளுக்கு தெரிந்து விடுமே! 

இதனால் அவள் தன்னை பற்றி தவறாக நினைப்பாளே! 

அவளின் பாதுகாப்பை எண்ணி தான் அவன் கண் காணிக்க ஆள் வைத்திருந்தானே தவிர, அவளை சந்தேக படுவது அவன் நோக்கம் கிடையாது. 

ஆனால் அவள் அதை எப்படி எடுத்து கொள்ளுவாள் என்று தெரியாதே! 

அவளது சுதந்திரத்தில் தான் தலையிடுவதாக அவள் நினைத்து விட்டால் என்ன செய்வது?

இப்படி பல கோணங்களில் அவன் மூளை யோசித்தாலும் அவளிடம் இதை பற்றி கேட்காமல் இருக்க முடியாதே! 

அவள் தன்னை தவறாக நினைத்து கொண்டாலும் அதை பற்றி அவன் இப்போது கவலைப் படப் போவது இல்லை. 

அந்த அயோக்கியனால் அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதே அவன் பயமாக இருந்தது. 

அவளிடம் இது பற்றி விசாரிக்கும் வரை நிம்மதியாக அவனால் உறங்க கூட முடியவில்லை. மொத்தத்தில் அன்று அவன் தூக்கமே தொலைந்து தான் போனது. 

அடுத்த நாள் காலை எட்டு மணியை தாண்டியிருந்தது. 

கண்களில் கொஞ்சமும் தூக்கம் இல்லாமல் நேரத்தை பார்த்து கொண்டிருந்தவனுக்கு, அழைப்பு வர, 

அவசரமாக அதை அட்டன் செய்து காதில் வைத்தவன், “அவ வீட்டுக்கு கிளம்பிட்டாளா?” என்று கேட்க, 

அந்த பக்கத்தில் அழைப்பில் இருந்த அந்த ஒற்றனோ, “ஆமா சார். மேடம் இப்போ தான் கிளம்பி போனாங்க.” என்று சொல்ல, 

அழைப்பை துண்டித்தவன், பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான். 

இங்கே பிருந்தாவும் அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தாள்.

அன்று ஓய்வின்றி முழு நாளும் வேலை பார்த்ததால் அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது.

ஒரு குளியலை போட்டு விட்டு, கட்டிலில் சாய்ந்தவள் அடுத்த நொடியே உறங்கியும் போனாள். 

தனது ஆபிஸில் இருந்த விஷ்வாவோ பிருந்தாவுக்கு அழைக்க, அலைபேசியில் ரிங் போனதே தவிர அவள் எடுக்கவில்லை.

இதோடு எத்தனை முறை அவளுக்கு அழைத்தான் என்று அவனுக்கே தெரியாது. 

வெகு நேரமாக அவளுக்கு அழைத்தும் அலைபேசி எடுக்காமல் போக அவனுக்கு கோபம் கூடிக் கொண்டே போனது. 

ஒரு பக்கம் அவளிடம் அந்த சிம்மன் ஏதாவது பிரச்சனை செய்து இருப்பானோ என்று அவன் யோசித்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவள் அலைபேசியை எடுக்காமல் அவன் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள்.

அவளோ அலைபேசியை சைலன்ட் மூடில் போட்டதால் சத்தம் கேட்கவில்லை. எப்போதுமே வேலைக்கு வந்தால் அலைபேசியை சைலன்ட் மூடுக்கு மாற்றி விடுவாள். 

வீட்டுக்கு கிளம்பும் போது மீண்டும் அதை மாற்றுவாள்.

ஆனால் நேற்று இருந்த களைப்பில் அவள் போனை எடுக்கவே மறந்திருந்தாள். 

இரவு முழுவதும் வேலை பார்த்ததால் களைப்பில் தூங்கி எழும்பவே அன்று பகல் ஒரு மணியை தாண்டி இருந்தது. 

பகல் உணவை முடித்து விட்டு அறைக்கு வந்தவள், அப்போது தான் தனது அலைபேசியை பையில் இருந்து வெளியே எடுத்தாள். 

எடுத்த அடுத்த நொடியே விஷ்வாவிடம் இருந்து அழைப்பு வர, 

அவன் இவ்வளவு நேரமும் அவளுக்கு அழைத்திருந்த எந்த மிஸ்ட் கால்களையுமே கவனிக்காதவள், ‘இவரு என்ன இந்த டைம்ல போன் பண்ணுறாரு?’ என யோசித்த படி, அழைப்பை ஏற்றவள், 

“ஹலோ” என்று சொன்னது தான் மிச்சம், 

மறு முனையில் இருந்தவனோ, “ஹேய் இவ்ளோ நேரம் எங்கடி போய் தொலைஞ்ச? காலையில இருந்து எத்தனை வாட்டி உனக்கு ட்ரை பண்ணுறேன் தெரியுமா! கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? ஒரு தடவை கூட போனை எடுத்து பார்க்க மாட்டியா?” என்று அவன் இருந்த மொத்த கோபத்தையும் இப்போது அவளிடம் காட்டி விட, 

பிருந்தாவோ அவனது இந்த கோபமான பேச்சில் சற்று பயந்து தான் போனாள். 

விஷ்வா அவளிடம் எப்போதுமே இவ்வாறு கடிந்து பேசியது இல்லையே! ‘பிந்து’ என்று அவள் பெயரை செல்லமாக கூப்பிடுபவன், இன்று இப்படி ‘டி’ போட்டு பேச அவளுக்கோ இது விஷ்வா தானா என்ற சந்தேகமே தோன்றியது. 

‘எதுக்கு இவ்ளோ ஹார்ஷா பேசுறாரு!’ என்று மனதுக்குள் எண்ணிய படியே,

“விஷ்வா உங்களுக்கு என்னாச்சு? ஏன் இவ்ளோ கோப படுறீங்க?” என்று அவள் சற்று பயத்துடனே அவனிடம் கேட்க, 

அவனுக்கோ அப்போது தான் அவளிடம் எவ்வளவு ஆவேசமாகப் பேசிவிட்டோம் என்று தோன்றியது. 

அவள் குரலில் உள்ள நடுக்கத்தை உணர்ந்தவன், அடுத்த நொடியே தன் கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான். 

” ஐ…. ஐ அம் சாரி பிந்து. நீ போனை ஆன்சர் பண்ணலங்குற டென்ஷன்ல அப்படி கத்திட்டேன். சாரிம்மா” என்றவன் குரல் சற்று நிதானதுக்கு வந்திருக்க, 

பெண்ணவளோ “சாரி விஷ்வா நான் போனை சைலன்ட்ல போட்டிருந்தேன். அதான் நீங்க போன் பண்ணது கேட்கல.” என்று தன்னிலை விளக்கம் சொன்னவள், 

“ஆமா என்னாச்சு? ஏதாவது ப்ரோப்லமா விஷ்வா? எதுக்கு இத்தனை வாட்டி ட்ரை பண்ணீங்க?” என்று அவள் கேட்க, 

அவனோ ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டவன், “அது…. பிந்து நான் உன் கிட்ட ஒரு விஷயம் பத்தி கேட்கணும்” என்று புதிர் போட, 

அவளோ “என்ன விஷயம்?” என்றாள். 

அவனோ ஒரு நொடி அமைதியானவன், தொண்டையை செருமிய படியே, “பிந்து நான் அன்னக்கி உன் கிட்ட ஒரு டாக்டர் பத்தி சொன்னேனே! அவனால உனக்கு எதுவும் ப்ரோப்லமா? ஐ மீன் அவன் உன் கிட்ட ஏதாவது வம்பு பண்ணானா?” என்று நேரடியாக விடயத்தை கேட்காமல் இப்படி சுற்றி வளைத்து அவளிடம் கேட்க,

பிருந்தாவுக்கோ அவனது கேள்வியில் தூக்கி வாரிப் போட்டது. 

இப்போது எதற்காக சிம்மனை பற்றி இவன் விசாரிக்கிறான் என்று புரியவில்லை. 

அவனால் தான் அவளுக்கு தினமும் பிரச்சனை தானே! ஆனால் எப்படி  அவளால் விஷ்வாவிடம் அதை சொல்ல முடியும்? 

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவள், 

“அ… அதெல்லாம் ஒன்னும் இல்லையே விஷ்வா.” என்றாள் சட்டென. 

அவனுக்கோ அவள் குரலில் இருந்த தயக்கம் அவள் எதோ  மறைக்கிறாள் என்றே உணர்த்த, 

“பிந்து ப்ளீஸ் என் கிட்ட எதையும் மறைக்காத. அவனால உனக்கு ஏதாவது ப்ரோப்லம்னா என் கிட்ட பயப்படாம சொல்லு? அந்த பொறுக்கிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.” என்று அவன் அழுத்தமாக கேட்க, 

அவளுக்கோ என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை. 

அவனிடம் உண்மையை சொன்னால் என்னாகும்? எற்கனவே அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று தெரியும். 

இப்போது அவனிடம் உண்மையை சொன்னால் இதனால் தேவை இல்லாமல் ஏதாவது பிரச்சனை வந்து விடுமே என்று பயந்தவள், 

“அதெல்லாம் ஒன்னும் இல்லை விஷ்வா நான் தான் சொல்லுறேனே! அவரால எனக்கு எந்த ப்ரோப்லமும் இல்லை. நான் அவரை நேத்து பார்க்கவே இல்லை” என்று அவள் வாயை விட்டு விட, 

அவன் புருவங்களோ சற்று இடுங்கியது. 

“வாட் அவனை நீ பார்க்கவே இல்லையா?” என்று கறாராக அவன் குரல் ஒலிக்க, 

பெண்ணவளோ நெற்றியை நீவிய படியே, 

‘ஐயோ இப்படி துருவி துருவி கேட்குறாரே! ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள், 

“ஆமா. நான் அவரை பார்க்கவே இல்லை. எதுக்கு இப்படி பயப்படுறீங்க விஷ்வா? நான் அவர் கிட்ட கேர்புல்லா இருக்கேன். ஏதாவது ப்ரோப்லம்ன்னா உங்க கிட்ட சொல்லாமலா இருக்க போறேன்!” என்று பட படப்புடன் சொன்னவள், 

“நான் போனை வைக்கட்டா? கொஞ்சம் வேலை இருக்கு” என்று அலைபேசியை வைக்கும் நோக்கிலேயே அவள் குறியாக இருக்க, 

விஷ்வாவுக்கோ அவளின் இந்த பதட்டமே அவள் தன்னிடம் எதையோ மறைக்க நினைக்கிறாள் என்று உணர்த்தியது.

நேற்று அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே அறையில் அதுவும் வெகு நேரமாக இருந்ததை தன் ஆள் மூலம் உறுதி செய்திருந்த விஷ்வாவிற்கு, பிருந்தா எதற்கு இப்படி அவனை பார்க்கவே இல்லை என்று பொய் சொல்லுகிறாள் என்று சுத்தமாக புரியவில்லை. 

“போனை வைக்கலாம் பிந்து. பட் அதுக்கு முன்னாடி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு. நேத்து நீ அவனை பார்க்கவே இல்லன்னா அப்புறம் நைட் அந்த ரூம்ல யார் கூட அவ்ளோ நேரம் தனியா இருந்த?” என்று ஒரு கேள்வியை கேட்க, 

அவன் கூற்றில் பிருந்தாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

“எ… என்ன?” என்றாள் திக்கிய படி, 

விஷ்வாவோ, “பிந்து எதுக்கு என் கிட்ட பொய் சொல்லுற? எனக்கு எல்லாமே தெரியும்” என்றான் அழுத்தமாக. 

பெண்ணவளுக்கோ உள்ளுக்குள் பதற, ‘இவருக்கு எப்படி நான் அவனை மீட் பண்ணது தெரியும்?’ என மனதுக்குள் கேட்டவள், 

“உங்களுக்கு எப்படி?” என்று மெல்லிய குரலில் கேட்க, 

“இட்ஸ் நொட் இம்போர்ட்டண்ட் பிந்து. அவன் உன் கிட்ட ஏதாவது ப்ரோப்லம் பண்ணானா? அது எனக்கு தெரியணும். உண்மையை சொல்லு” என்றவன் குரல் இப்போது அதட்டலாக வெளி வர, 

இவளுக்கோ இங்கே பக்கு பக்கென்று இருந்தது.

இவனிடம் எப்படி உண்மையை சொல்லுவது?

“அது…. விஷ்வா அவர்…. அவர் என் கிட்ட எந்த ப்ரோப்லமும் பண்ணல. எனக்கு அவர் ஜஸ்ட் ஹெல்ப் பண்ண தான் அங்க வந்தாரு. வேற ஒன்னும் இல்லை” என்று  சமாளிக்க, 

அவனோ “ஓஹோ! அப்போ எதுக்கு முன்னாடியே இத சொல்லல? அவனை பார்க்கவே இல்லன்னு எதுக்கு பொய் சொன்ன பிந்து?” என்று சற்று கோபமாக அவன் கேட்க, 

பெண்ணவளோ, “விஷ்வா ப்ளீஸ் நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க. உங்களுக்கும் அவருக்கும் ஏற்கனவே ஏதோ ப்ரோப்லம்ன்னு அன்னக்கி நீங்க என் கிட்ட அவரை பத்தி சொல்லும் போதே எனக்கு புரிஞ்சிது. இப்போ அவரை பார்த்தேன்னு உங்க கிட்ட சொன்னா நீங்க தேவை இல்லாம கோப படுவீங்கன்னு தான் நான் அப்படி பொய் சொன்னேன். வேற எதுக்காகவும் இல்லை விஷ்வா” என்று அவள் அழுத்தமாக சொல்ல, 

அவனோ கழுத்தை வருடிய படியே, பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான். 

உண்மையில் அவன் பெயரை கேட்டாலே விஷ்வாவுக்கு பிடிக்காது தானே!

“சரி பிந்து நான் கோப படுவேன்னு நீ என் கிட்ட அந்த விஷயத்தை மறைச்ச ஓகே. பட் ஒரு விஷயம் சொல்லு. அவன் உனக்கு ஹெல்ப் பண்ண தான் அங்க வந்தான்னா எதுக்கு டோரை லாக் பண்ணனும்? அவ்ளோ நேரம் உள்ள என்ன தான் நடந்தது?” என்று கேட்டவன் ஒரு கணம் நிறுத்தி, 

மீண்டும், 

“அவன் உன் கிட்ட ஏதாவது மிஸ் பிஹேவ் பண்ணானா? இல்லன்னா மிரட்டினானா? எதுனாலும் என் கிட்ட பயப்படாம….” என்று அவன் முடிக்க முன்னரே, 

“போதும் நிறுத்துங்க விஷ்வா. எத்தனை டைம் தான் சொல்லுறது? அவரு ஒன்னும் என் கிட்ட தப்பா நடந்துக்கல. போதுமா?…. எதுக்கு திரும்ப திரும்ப அதையே கேட்டு இப்படி என்னை கஷ்ட படுத்துறீங்க? நான் சொல்லுறதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இல்லை என்னையே நீங்க சந்தேக படுறீங்களா?” என்று அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் கத்த, 

விஷ்வாவோ அவள் கூற்றில் அதிர்ந்து போனவன், “பிந்து என்ன பேசிட்டு இருக்க?  நான் உன்ன சந்தேக படுறேனா? அப்படி எல்லாம் எதுவும் இல்லடி” என்று அவசரமாக கூற,

அவளோ ஆத்திரத்தோடு, “அப்படின்னா எதுக்கு எனக்கே தெரியாம என்னை வேவு பார்த்தீங்க? அதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள். 

‘ஓஹ் காட்’ என்று தலையை பற்றியவன், “பிந்து நான் ஒன்னும் உன் மேல சந்தேக பட்டு அப்படி பண்ணல. அந்த பொறுக்கிய பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் என் மேல உள்ள கோபத்துல உன் கிட்ட ஏதாவது ப்ரோப்லம் பண்ணுவானோன்னு தான் உனக்கு தெரியாம பார்த்துக்க ஆள் வச்சேன். மத்த படி நீ நினைக்கிற மாதிரி இல்லை பிந்து” என்று தன்னிலை விளக்கம் கூற, 

அவளோ “ஏது இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு விஷ்வா. என்னால என்னை பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கிறீங்களா? அப்படியே அந்த சிம்மனால எனக்கு ஏதாவது ப்ரோப்லம் வந்ததுன்னா அத நான் பார்த்துக்குறேன். தயவு செஞ்சு இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் இதுக்கப்புறம் பார்க்காதீங்க!” என்றாள் முகத்தில் அடித்தது போல்.

ஏனோ அவன் தனக்கு தெரியாமல் இப்படி ஆள் வைத்து கண் காணித்தது அவளின் கோபத்தை தான் தூண்டியது. 

இங்கே விஷ்வாவுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது.

ஆனாலும் அவளின் கோபம் நியாயமானது என்று தெரிந்ததால் அவனால் எதுவும் பேசவும் முடியவில்லை. 

அவளை பாதுகாக்க நினைத்து இப்போது அதுவே அவள் தன்னை தவறாக நினைக்கும் படி ஆகி விட்டதே!

காதல் கொண்ட அவன் மனம் பெண்ணவளின் இந்த சிறு கோபத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கவே செய்தது. 

“பிந்து ஐ அம் ரியலி சாரி. நான் உன்னோட சேப்டிய பத்தி மட்டும் தான் யோசிச்சேன். இதுனால நீ இவ்ளோ ஹேர்ட்டாவன்னு நான் நினைக்கவே இல்லை. ப்ளீஸ் என் கிட்ட இப்படி கோப படாத” என்றான் குரல் தழு தழுக்க. 

அவனின் குரலில் உள்ள தவிப்பை உணர்ந்த பெண்ணவளுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது. 

தான் அவனிடம் இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக் கூடாது என்று அவள் மனம் உறுத்த, 

“அது… எனக்கு புரியுது விஷ்வா. நீங்க என்னோட….” என்று அவள் பேச, 

மறு முனையில் இருந்தவனோ, “ஹலோ ஹலோ பிந்து இருக்கியா? ஹலோ…” என்று கத்தியவன், தொலைபேசியை எடுத்துப் பார்க்க, அழைப்பு துண்டித்து போய் இருந்தது. 

‘அவ கட் பண்ணிட்டாளா?’ என்று எண்ணியவன் மீண்டும் அவளுக்கு அழைக்க, இப்போது ஸ்விச் ஆப் என்று வந்தது. 

ஆம் அவள் இங்கே பேசிக் கொண்டிருக்க, அலைபேசி சார்ஜ் இல்லாமல் எப்போதோ ஆப் ஆகி விட்டது.

அவளோ மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வராமல் போக, போனைத் தட்டிப் பார்த்தாள். 

அப்போதுதான் தொலைபேசி முழுவதுமாக அணைந்து போனதை கவனித்தாள்.

“ஐயோ!… இப்போ போய் சார்ஜ் தீந்துடுச்சே! விஷ்வா என்ன நினைப்பாரு?” என்று பதற்றத்தில் தலையில் கை வைத்துக்கொண்டாள். 

தான் சமாதானமாகப் பேச வந்த நேரத்தில் இப்படித் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அவன் அதைத் தவறாகத்தானே எடுத்துக் கொள்வான்? 

ஆம்.

நிச்சயம் அவன் அப்படி தான் நினைத்துக் கொண்டான். 

அவனுக்கு அது தற்செயலான ஒன்றாகத் தெரியவில்லை. மாறாக, தன்னிடம் பேச பிடிக்காமல் அலைபேசியை ஆப் செய்து விட்டாள் என்றே தோன்றியது. 

கோபமாக அலைபேசியை தூக்கி மேசையில் எறிந்தவன், ‘எதுக்கு இப்படி பண்ண பிந்து? என் மேல அவ்வளவு கோபமா?’ என்று அவன் மனம் கேட்டாலும், 

அடுத்த நொடியே, ‘எல்லாத்துக்கும் நான் தான் காரணம்’ என தன்னை தானே கடிந்து கொண்டது. 

இங்கே பெண்ணவளோ அவசரமாக சார்ஜ் போட்டு போனை ஆன் செய்தவள், அவனுக்கு அழைக்க, அவன் அலைபேசியை எடுக்கவில்லை. பல முறை அவள் அழைத்தும் அவன் எடுக்காமல் போக, 

அவளுக்கோ அழுகையே வந்து விட்டது. 

‘கண்டிப்பா நான் போனை ஆப் பண்ணேன்ன கோபத்துல தான் ஆன்சர் பண்ண மாட்டேங்குறாரு’ என்றே அவள் எண்ணினாள்.

ஆனால் உண்மை அதுவல்ல. 

அவனுக்கோ அவசரமாக ஒரு மீட்டிங் இருந்ததால் தனது அலைபேசியை எடுக்காமலேயே விட்டுவிட்டு அங்கு சென்றிருந்தான். 

அதனால் தான் அவனால் அவளின் அழைப்பை ஏற்க முடியாமல் போனதே! 

ஆனால் இருவரின் மனதிலுமே தன் மீது உள்ள கோபத்தில் தான் மற்றவர் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற தவறான எண்ணமே ஓடியது.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top