அத்தியாயம் 21
லிப்ட் சட்டென நின்று விட, அந்த அதிர்வில் பிருந்தாவோ பயத்தில் பக்கத்தில் இருந்த கம்பியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
அடுத்த சில நொடிகளில் அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் அணைந்து விட,
இப்போது அந்த சின்ன இடத்தில் ஒரு சிறிய எமர்ஜென்சி சிவப்பு நிற விளக்கு ஒன்று மட்டுமே மெல்லிய வெளிச்சத்தில் ஒளிர ஆரம்பித்தது.
சிம்மனோ கடுப்பாக, “வாட் தி ப**” என்று திட்டியவன், தனது அலைபேசியில் இருந்த டார்ச் லைட்டை ஆன் செய்தான்.
அதன் மூலம் அந்த இருண்ட இடத்தில் ஓரளவுக்கு வெளிச்சம் பரவ, அவனோ அந்த லிப்டில் இருந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்தினான்.
ஆனால் மறு முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
பிருந்தாவோ “என்னாச்சு? ஏன் லிப்ட் நின்னுடுச்சு?” என்று சற்று பதட்டமாக கேட்க,
அவனோ “தெரில” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தவன், மீண்டும் அந்த எமர்ஜென்சி பட்டனை அழுத்த,
இம்முறை மறு முனையில் இருந்து லிப்ட் ஆப்பரேட்டரின் குரல் கேட்டது.
சிம்மனோ, “வாட் ஹாப்பண்ட்? ஏன் லிப்ட் மூவ் ஆகல?” என்று கோபமாக வினவினான்.
“சார்… சின்ன டெக்னிக்கல் ஃபால்ட். பவர் ட்ரிப் ஆகி லிப்ட் லாக் ஆகிடுச்சு. டெக்னீசியன் வந்துட்டாங்க சார்… இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல சரி பண்ணிடுவோம். சாரி சார்!” என்று அந்த ஆப்பரேட்டர் பதட்டமாகப் பதில் அளிக்க,
சிம்மனோ எரிச்சலின் உச்சத்தில், “மேக் இட் ஃபாஸ்ட்!” என்று கர்ஜித்து விட்டு இணைப்பைத் துண்டித்தான்.
‘இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா!’ என்று மனதுக்குள் புலம்பிய பிருந்தாவோ, ஓரக் கண்ணால் மெல்ல சிம்மனைப் பார்க்க, அவனோ மீண்டும் தனது அலைபேசியில் மூழ்கி விட்டான்.
அதை உணர்ந்தவளுக்கோ ‘இதுவே தன் பின்னால் சுற்றும் அந்த பழைய சிம்மன் இருந்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை எப்படி எல்லாம் சீண்டி இருப்பான்’ என்று தன்னிச்சையாக அவள் மூளை யோசித்துக் கொண்டது.
நேரம் செல்ல செல்ல, அந்த சிறிய இடத்திலோ மிகவும் புழுக்கமாக இருக்க, இருவருக்குமே வியர்த்து வழிந்தது.
பிருந்தாவோ தனது கையில் உள்ள பைலை வைத்து விசிறிய படி நின்றிருக்க, சிம்மனோ புழுக்கம் தாங்காமல் தனது ஷேர்ட்டின் மேலுள்ள சில பட்டன்களை கழட்டி விட்டான்.
பிருந்தாவோ ‘இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்?’ என்று தன் விழிகளை உருட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது அலைபேசியின் மூலம் தெரிந்த அந்த வெளிச்சத்தில் அவன் வியர்வை படிந்த கட்டுடல் தேகம் அவள் விழிகளுக்கு அப்பட்டமாக தெரிய, அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவை.
அந்த பாதி வெளிச்சத்தில் கூட, அவனையே விழி மூடாமல் அவள் பருகிக் கொண்டிருக்க, தன் மீது ஏதோ ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்த சிம்மனோ சட்டென அவள் புறம் திரும்பிப் பார்க்க, பிருந்தாவின் விழிகளும் அவன் விழிகளும் ஒரு சேர சந்தித்துக் கொண்டது.
பல நாட்கள் கழித்து அவள் விழிகளை இன்று அவன் நேருக்கு நேர் நோக்க, பெண்ணவளின் இதயமோ படு வேகமாக அடித்துக் கொண்டது.
அவனின் ஒரு பார்வைக்காக தானே இத்தனை நாள் ஏங்கிக் கொண்டிருந்தாள்.
இன்று இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அது அமையும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அவள் விழிகளில் தெரிந்த ஏக்கம் அவனுக்குமே புரிந்தது.
ஆனால் அதை துளியும் சட்டை செய்யாதவன், தன் பார்வையை அவளை விட்டு அகற்றி விட, பெண்ணவளுக்கோ அவனின் அலட்சியமான செயல் முகத்தில் அறைந்தது போல இருந்தது.
வேண்டும் என்றே தன்னை காயப்படுத்த தான் இப்படி நடந்து கொள்ளுகிறானா என்று அவள் மனம் குமுறியது தான் உண்மை.
அதே நேரம் திடீரென லிஃப்ட் குலுங்க ஆரம்பித்து விட, பிருந்தாவோ “ஆ…” என்று பயத்தில் அலறியவள், நிலை தடுமாறி நேராகச் தன் முன்னால் நின்றிருந்த சிம்மனின் மீதே போய் விழுந்தாள்.
அவன் கையில் இருந்த அலைபேசி கீழே விழ, சட்டென அவளது இடையைப் பற்றித் தாங்கிப் பிடித்திருந்தான்.
பிருந்தாவோ விழுந்த வேகத்தில் அவன் மார்பிலேயே மோதி விட, அவள் இதழ்கள் அவனின் வெற்று மார்பில் பதிந்து போனது.
அந்த ஸ்பரிசத்தில் அவன் புருவங்களோ சற்று இடுங்க, அவளின் இடையை பற்றியிருந்த தன் பிடியை மேலும் இறுக்கினான்.
அதில் அவள் பொன் மேனி மேலும் அவன் தேகத்தில் ஆழமாக புதைந்து கொள்ள, அவள் இதழ்கள் லேசாக பிரிந்து வெப்ப மூச்சுகளை வெளியேற்றியது.
அவளின் சூடான மூச்சுக் காற்று அவன் மார்பில் படர்ந்து, அவனின் தேகத்தையும் மேலும் சூடாக்கியது.
பெண்ணவளோ அவன் தேகத்தின் வெப்பத்தை உணர்ந்த படியே, மெல்ல தலையை உயர்த்தி அவன் முகத்தைப் பார்க்க, அவன் விழிகளோ மோகத்தின் பிடியில் கட்டுண்டு கிடந்தன.
ஆனால் அந்த மங்களான வெளிச்சத்தில் அவன் முகத்தில் தோன்றிய எந்த உணர்வுமே அவளுக்குத் தெரியவில்லை.
பல நாள் கழித்து அவனின் நெருக்கத்தில் இருந்தவளுக்கோ, அவன் தொடுகையில் உடல் எல்லாம் சிலிர்த்துப் போக, இத்தனை நாள் தன்னுள் இருந்த உணர்வுகள் மொத்தமும் வெளியில் வரத் துடித்தது.
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவள்,
அவனின் ஷேர்டை பற்றி இருந்த தன் கரங்களை மேலும் இறுக்கிய படியே, “சி…” என்று ஏதோ பேச வாய் திறக்க முன்னர்,
“ஆர் யூ ஓகே?” என்று கேட்டவன், அவள் இடையில் இருந்த தன் கரங்களை எடுத்து விட, பெண்ணவளோ சற்று அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
கொஞ்சம் விட்டிருந்தால் அவள் தன் மனதில் உள்ள அனைத்தையுமே அவனிடம் கொட்டி இருப்பாளோ என்னவோ!
ஆனால் அவன் விலகியதும் அவள் பேச வந்த வார்த்தைகள் மொத்தமும் தொண்டைக்குள்ளேயே அடங்கி போய் விட, தயக்கத்துடன் அவனை விட்டு தள்ளி நின்றவள், “தேங்ஸ்…. ச… சார்” என்றாள் திக்கித் திணறிய படி.
அதே வேளை அந்த லிப்டில் அணைந்து போன மொத்த விளக்குகளும் ஒளிர ஆரம்பிக்க, லிப்டும் மேல் நோக்கி நகரத் துவங்கியது.
பிருந்தாவோ எங்கே தன் முகத்தில் தெரிந்த உணர்வுகளை அவன் கண்டு விடுவானோ என்ற பயத்தில் தலை குனிந்த படி நின்றாள்.
சிம்மனும் அவளை கண்டு கொள்ளாமல் கீழே கிடந்த தனது அலைபேசியை எடுத்துக் கொள்ள, லிப்டும் மேல் தளத்துக்கு வந்து நின்றது.
கதவுகள் திறக்கப்பட, வெளியே அந்தத் தளத்தின் செக்யூரிட்டியும், கையில் சில உபகரணங்களுடன் ஒரு டெக்னீஷியனும் பதட்டத்துடன் நின்றிருந்தார்கள்.
“சார், மேம் நீங்க ஓகே தானே! சாரி ஏதோ வொயரிங் பால்ட்… அதான் லாக் ஆகிடுச்சு” என்று சொல்ல,
சிம்மனோ அவர்களை முறைத்து விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து விறு விறுவென செல்ல, பிருந்தாவோ செல்லும் அவன் முதுகையே வெறித்த படி நின்றிருந்தாள்.
****
அன்று தனது வீட்டில் இருந்த பிருந்தாவோ பால்கனியில் நின்று கொண்டு தனது விரல்களில் உள்ள நிச்சயதார்த்த மோதிரத்தையே வெறித்த படி இருந்தாள்.
இன்று அவளின் திருமண அழைப்பிதழ் தயார் ஆகி வந்திருந்தது.
வீட்டில் உள்ள அனைவருமே இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்கு திருமணம் என்ற சந்தோஷத்தில் திளைத்திருக்க, இங்கே மணப்பெண்ணான அவளால் எந்த சந்தோஷத்திலும் பங்கெடுக்க முடியவில்லை.
மனம் முழுக்க சிம்மனின் நினைவு மட்டும் தான் அவளை வதைத்துக் கொண்டிருந்தது. எதிர் பாராமல் அவள் வாழ்க்கையில் நுழைந்தவன், இப்போது அவள் இதயத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்தே விட்டான்.
மறக்க வேண்டும் என்ற எண்ணமே அவனை மேலும் மேலும் அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டு இருந்தது.
‘எதுக்காக என் வாழ்க்கையில வந்த? இப்போ நீயே தள்ளி போனாலும் என்னால உன்ன ஏன் மறக்க முடில? உன் மேல நான் ஏன் இவ்ளோ பைத்தியமா மாறிட்டேன்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவளுக்கு கண்களில் இருந்து கண்ணீரே வந்தது.
தன் மனதில் உள்ளதை அவனிடம் போய் சொல்லவும் முடியவில்லை.
அப்படி சொன்னாலும் அவனுக்கும் தன் மீது காதல் இருக்க வேண்டுமே!
அப்படி இருந்திருந்தால் அன்று அவன் எதற்காக ‘நீ யாரை திருமணம் செய்து கொண்டாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று சொன்னான்.
மற்ற பெண்களை போல அவன் தன்னையும் வெறும் ஒரு பொழுது போக்காக மட்டும் தான் பார்த்திருக்கிறான்.
அது தெரிந்திருந்தும் இப்படி தன் மனதை அவனிடம் பறி கொடுத்து விட்டோமே!
இப்போது மனதில் ஒருவனை சுமந்து கொண்டு எப்படி இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளுவாள்?
அதுவும் விஷ்வா தன் மீது உயிரையே வைத்திருக்கிறான். அவனுக்கு போய் எப்படி துரோகம் செய்ய முடியும்?
இது வரையில் அவனிடம் கொஞ்சமும் அவள் உண்மையாக இருந்ததில்லை. இப்படியே திருமணத்துக்குப் பிறகும் அவனோடு பொய்யாக அவளால் வாழ முடியுமா என்ன?
குற்ற உணர்ச்சியில் அவளுக்குத் தொண்டை அடைத்தது.
அவனிடம் அனைத்து உண்மையையும் சொல்லி விடலாமா என்று எண்ணினாலும் அதற்கான தைரியமும் அவளுக்கு இல்லை.
அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு தான் இன்னொருவனை விரும்புகிறோம் என்று எப்படி அவளால் சொல்ல முடியும்?
தன் குடும்ப கெளரவம் என்னாகும்?
இந்த திருமணம் மட்டும் நின்று விட்டால் தன்னுடைய அப்பா அனைவர் முன்னிலையிலும் தலை குனிந்து நிற்க வேண்டுமே!
நினைக்கும் போது உள்ளுக்குள் நடுக்கம் தான் வந்தது.
அவனை மறந்து விடலாம் என்று அவள் புத்தி எவ்வளவோ அடித்துக் கொண்டாலும், பாழாய் போன மனம் அவன் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறதே!
ஒரு பக்கம் தன் காதல். இன்னொரு பக்கம் பிடிக்காதவனோடு திருமணம். இரண்டுக்கும் இடையில் அவள் மாட்டிக் கொண்டு தவிக்க, இதற்கு எல்லாம் காரணமான அவனோ எந்த கவலையுமே இல்லாமல் சோபாவில் காலுக்கு மேல் கால் போட்ட படி அமர்ந்து, கையில் ஒரு நோயாளியின் ரிப்போர்ட்டை வைத்து குறிப்பு எழுதிக் கொண்டு இருந்தான்.
முன்னால் உள்ள டிவியில் ஒரு ரொமான்டிக்கான ஆங்கில படம் ஓடிக்கொண்டு இருக்க, அதில் கதா நாயகனும், கதா நாயகியும் நெருக்கமாக இருந்த காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அதிலிருந்து கேட்ட முனகல் சத்தமும், அவர்களின் கொஞ்சல்களும் அவன் வேலையை கொஞ்சமும் பாதித்ததாகத் தெரியவில்லை.
ஆனால், அங்கே ஓரமாக அமர்ந்து தரையை துடைத்து கொண்டிருந்த வேலைக்காரி அலமேலுக்கு தான் அந்த சத்தத்தை எல்லாம் கேட்டு காதில் இருந்து ரத்தம் வராத குறை.
‘கருமம் புடிச்சவன் காலையிலேயே இப்படி பலான படத்தை போட்டு பார்த்துட்டு இருக்கானே! வீட்ல ஒரு பொம்பளை இருக்காளேங்கிற நினைப்பு கொஞ்சமாவது இவனுக்கு இருக்கா.’ என்று மனதுக்குள்ளேயே வசை பாடிய படி தரையை அவசர அவசரமாக துடைக்க,
சிம்மனோ, “போய் எனக்கு ஒரு ஸ்ட்ராங்கான காபி போட்டு எடுத்துட்டு வா” என்று அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கட்டளையிட,
அவரோ, “சரிங்க தம்பி” என்று சொல்லி விட்டு அவசரமாக கிச்சனுக்கு ஓடினார். அங்காவது அந்தப் படத்தின் சத்தம் கேட்காமல் இருக்குமே என்ற நப்பாசை தான்.