இதோ சந்தியா பிரிந்து சென்று இருபது நாட்களாகி விட்டது.
மழிக்கப்படாத தாடியும் ,மீசையும் ஆருத்ராவின் பார்வையில் இருந்து தப்பவில்லை.
யோசனையுடன் அவனையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது அவளது பார்வை..
அரசியிடமும் சாந்தியிடமும் சந்தியா வேறு வாழ்க்கை தேர்ந்தெடுத்துக் கொண்டாள் என்று வெறுமையான குரலில் கூறி விட்டான்.
சாந்திக்கோ முகத்தில் ஈ ஆடவில்லை.
அதிர்ந்த விழிகளுடன் அனுவைப் பார்த்தவருக்கு மனம் ரணமாக வலித்தது.
வாழ்க்கையில் எதற்காகவும் யாருக்காகவும் இறங்கி வராதவர் வாசுவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.
“ இந்த மாதிரி ஒரு தறுதலையை பெத்ததுக்கு என்னைய மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை .. அனு வேணா இங்க இருக்கட்டுமே…” என்றார்.
“வேணாங்க அனுவை நானே பாத்துக்குறேன்…” என்றவன் தளர்ந்த நடையுடன் சென்றான்.
திவ்யாவிற்கோ மனம் பிசைய ஆரம்பித்தது. அவனது துன்பம் இத்தோடு முடிந்துவிடவில்லை வாழ்க்கை இன்னும் அடுத்தடுத்து அடியை தனது அண்ணனுக்கு கொடுக்க காத்திருப்பதை அறியாது போனாள் பேதையவள்.
அரசியோ மகனது வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் நொந்து தான் போனார்.
ஒரு வாரமாக சந்தியாவைக் கேட்டு நச்சரித்து கொண்டிருந்த அனுவிற்கு கேள்வி கேட்டு சலித்து போய்விட்டது போலும்.
தாய் எங்கோ சென்று விட்டாள் என புரிந்து கொண்டாள் அந்தச் சின்னச் சிட்டு.
இரவு தூங்குவதற்கு முன்பாக அரசியிடம் சென்றவள் ,”நானும் அப்பாவும் சேட்டை பண்ணினோமா பாட்டி?” என்றாள் மழலைக் குரலில்
“ ஏன் தங்கம் அப்படி கேக்குற? “ என்றவாறு அவளை தனதருகே அமர்த்திக் கொண்டார் அரசி.
“ இல்ல. அம்மா…ஆங்கிரி ஆகி…டாட்டா போயிட்டாங்க…வர மாட்டாங்களா? நானும் அப்பாவும் சாரி கேக்குறோமே…” என்றாள்.
அரசிக்கோ மனம் கனத்து தான் போனது.
பேத்தியை மடியில் படுக்க வைத்துக் கொண்டவர் அவளது தலையில் வருடியபடியே, “இல்லடா தங்கம் நான் தான் தப்பு பண்ணிட்டேன்…நான் தான் தப்பு பண்ணிட்டேன்…” என முணுமுணுத்தார்.
தாயின் அறைக்குள் வந்த வாசு, “தூங்கிட்டாளா ம்மா.. அவளை நான் என்னோட படுக்க வச்சிக்குறேன்…” என்றபடி அனுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு திரும்பி நடக்க எத்தனித்தவனை “ வாசு…” என்றழைத்தார் அரசி.
“ என்னம்மா.. ஏதாவது வேணுமா?”
“ ம்ம்.. இல்லப்பா…மன்னிச்சிடு இந்த அம்மாவை..” என்றார்.
விரக்தியான சிரிப்பினை உதிர்த்தவன்,” ம்மா…வீணா போட்டு மனசை குழப்பிக்காம நிம்மதியா தூங்குங்க..” என்று கூறி விட்டு வெளியேறினான்.
மறுநாள் விடியல் யாருக்காகவும் காத்திருக்காமல் விடிந்தது.
அனுவை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பியவன் தாயாருக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு அவர் அறையினுள் நுழைந்து அவரை எழுப்பினான்.
எழுந்திருக்கவில்லை அவர்.
“ ம்மா…டையர்ட்டா இருக்கா…சரி தூங்குங்க…நான் சாந்தியக்கா கிட்ட சொல்லிட்டு போறேன்..” என்று கூறி விட்டு திரும்பியவனுக்கு ஏதோ ஒன்று உந்தித் தள்ள அவரருகில் வந்து அவரை ஊன்றி கவனித்தான்.
உடலைத் தொட்டுப் பார்த்தான்.
சில்லென்று இருந்தது. எந்த அசைவும் தென்படவில்லை.
“ அம்மா…என்னாச்சு..ம்மா…என் வாழ்க்கையை நினைச்சு கவலைப்படாதீங்க ம்மா.” என்றவனுக்கு தொண்டை கமறி வார்த்தைகள் வர மறுத்தது.
அருகில் இருந்த மருத்துவரை சென்று அழைத்து வந்தான்.
அரசியை பரிசோதித்து விட்டு , “சாரி சார்…அவங்க இறந்து நாலு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு” என்று கூறி விட்டுச் சென்றார்.
இறுகிப் போய் நின்றான் வாசு...
இத்தனை வருடங்கள் தனி ஆளாக நின்று தங்களை வளர்த்து ஆளாக்கிய நடமாடும் தெய்வம் இனி இவ்வுலகில் இல்ல எனும் போது சுரீரென்று வலி தோன்றியது அவனுக்கு. தாயின் இறப்பு அவனை உலுக்கி தான் போட்டது.
தன்னை நினைத்தே மாய்ந்து போனவர் குற்றவுணர்ச்சியால் உயிரை விட்டுவிட்டார் போலும் என்று நினைத்தவனுக்கு அக்கணம் சந்தியாவின் மேல் அளவிலா ஆத்திரம் தோன்றியது.
அவளது கழுத்தை நெறித்து விடும் ஆத்திரம் வந்தது. முயன்று அடக்கிக் கொண்டவன் திவ்யாவிற்கும் ப்ரகாஷிற்கும் விஷயத்தை தெரிவித்தான்.
அழுது தீர்த்து விட்டாள் திவ்யா. அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது ப்ராகாஷிற்கு.
விஷயத்தை கேள்விப்பட்டு ஆருத்ரா வந்து துக்கம் விசாரித்து விட்டுச் சென்றாள். அவளுக்குமே வாசுவை பார்க்கையில் இதயத்தில் அப்படியொரு வலி. அணைத்து ஆறுதல் கூற உள்ளம் துடித்தது. முயன்று அடக்கிக் கொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.
பதினாறாம் நாள் காரியம் நடந்து முடிந்தது.
வாசுவன் அருகில் வந்த திவ்யா, “அண்ணா..” என்றழைத்தாள் தயக்கமாக
அவளே குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவன், “நீ..என்ன கூப்பிட்டியா திவ்யா?”
பட்டென்று காலில் விழுந்து விட்டாள்.
பதறி விலகியவன், “ ஏன்மா…எழுந்திரு…இப்படியெல்லாம் பண்ணாத.. ரொம்பவே அன்ஈசியா இருக்கு…”
“என்னைய மன்னிச்சிடு ண்ணா…நா வேற உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். நீயும் அனுவும் அங்க வந்து கொஞ்ச நாள் இருங்களேன்..இவ்வளவு கஷ்டத்தையும் எப்படிண்ணா உன்னால..”என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாது அமைதியாக நின்றாள்.
“ பரவாயில்ல டா. நான் இங்கேயே இருக்கேன். ம்ம்… வாழ்க்கைங்கறது அவ்வளவு ஈசி இல்லம்மா…எல்லாத்தையும் கடந்து தான் வரணும்..நீ இதைப் பத்தியெல்லாம் ரொம்பவே யோசிச்சு மனசை போட்டுக் குழப்பிக்காம கிளம்பு டா…உங்க மாமியார் வெயிட் பண்ணுறாங்க பாரு…நீ என் கிட்ட பேசினதே எனக்கு ரொம்ப சந்தோஷம்…இது போதும் டா..அம்மா எப்பவும் நம்ம கூடவே தான் இருப்பாங்க. அவங்க ஆசிர்வாதம் எப்போதும் நமக்கு இருக்கும்…நீ என்னை நினைச்சு கவலைப்படாதே…உனக்குன்னு கடமைகளும் பொறுப்புகளும் இருக்கு…என்ன நான் சொல்றது புரியுதா?” என்றான் மென்மையாக
“ ம்ம்..*என்றவள் அவனிடம் விடைபெற்று சென்றாள்.
பதினைந்து நாட்களாக அலுவவலக்திற்கு செல்லவில்லை
வேலயனைத்தும் அவன் தலையில் விழுந்தது. இன்னும் இருபது நாட்களில் துபாய் கிளம்ப வேண்டும்.
வீட்டுத்தவணைத் கான பணத்தை பாதி மட்டுமே ஏற்பாடு முடிந்தது. தாயின் இறுதி சடங்கிற்கே அதுவும் கரைந்து தான் போனது.
ஆருத்ராவோ புதிய வாடிக்கையாளர்களின் சந்திப்பில் மும்மரமாக இருந்தாள். அவளிடம் பேச நேரம் கிடைக்கவேயில்லை வாசுவிற்கு.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து சீககிரமாக கிளம்பிய வாசு அனுவை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
அவனது வீட்டிற்கு முன்பு புதிய வாகனம் நின்றிருந்தது.
யோசனையுடன் வீட்டை திறக்க முயன்றவனை தடுத்து நிறுத்தியது வங்கி அதிகாரியின் குரல்
“ மிஸ்டர் வாசுதேவன்…பணத்தை கட்டிட்டு வீட்டுக்குள்ள போங்க…நாலு மாசமா இ.எம்.ஐ கட்டாம இருக்கீங்க ..கட்டிட்டு வீட்டுக்குள்ள போங்க…” என இடைமறித்து நின்றார் வங்கி அதிகாரி.
“ சார்…கொஞ்சம் பர்சனல் ப்ராப்ளம்…அதான் முழு பணத்தையும் புரட்ட முடியலை. பாதி அமௌண்ட் இப்ப கட்டிட்டு மீதியை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா கட்டிடுறேன் சார்…” என்றான்.
“ நோ…நோ…எங்க பேங்க் கண்டிஷன்ல முதல்ல சொல்லியிருக்குறதே…இ.எம்.ஐ மாசா மாசம் கரெக்டா கட்டிடணும்ங்கறது தான். உங்களுக்காக நாலு மாசமா பாவம் பார்த்தாச்சு. ஹயர் அபிஷியல் கிட்ட இதுக்கு மேல எங்களால பதில் சொல்ல முடியாது..சாரி சார்…நீங்க உள்ள போக முடியாது…கொஞ்சம் டைம் தர்றோம்.உங்களுக்கு தேவையான திங்க்ஸை மட்டும் எடுத்துட்டு கிளம்புங்க…” என்று கறாராக கூறி விட்டார்.
சாந்தி வெளியே வந்து என்னவென்று பார்த்தார்.
“ என்னாச்சு வாசு…?” என்று கூறி கொண்டு இருக்கும் போதே மற்றொரு வாகனம் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய அதிகாரி ஒருவர் “ மிஸ்டர் வாசுதேவன்ங்கறவரு இங்க யாரு..?” என்றார்.
“ நான் தான்…சார்…நீங்க?”
“ நான ஏ.பி.எம் பேங்கல இருந்து வர்றேன்…மிஸர்ஸ் சந்தியா பத்து லட்ச ரூபாய்க்கு பர்சனல் லோன் எடுத்துருக்காங்க.. அதுக்கான வட்டியும் கட்டல..சார்..வட்டியோடு பதினஞ்சு லட்சம். அவங்க ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது சார்.. வீட்டு பத்திரத்தை வச்சு லோன் எடுத்துருக்காங்க…” என்று கூறி விட்டு அவனைப் பார்த்தார்.
அதற்குள் அவனது அலைப்பேசி மூன்று முறை ஒலித்து நின்றது.
எடுத்துப் பார்த்தான் ஆருத்ரா தான் அழைத்திருந்தாள்.
“ சார்…எனக்குப் புரியல . சந்தியா எப்ப லோன் எடுத்தாங்க? வீட்டுப் பத்திரம் உங்க கிட்ட தான் இருக்குதா?”
“ என்ன சார் அவங்க ஹஸ்பண்ட் தானே நீங்க..? இது கூட தெரியாம இருக்கீங்க? இப்பவே எங்களுக்கு அசலோட வட்டிப் பணம் பதினஞ்சு லட்சம் வந்தாகணும்..” என அவர் ஒருபுறம் நிற்க…
பரிதவித்து போனான் வாசு…
எத்தனை முட்டாளாக இருந்திருக்கின்றோம் என தன் மீதே கோபமாக வந்தது. சுந்தரி அக்கா அனுவை அழைத்துக்கொண்டு தனது வீட்டில் அமர்த்திக் கொண்டார்.
அப்போது வேகமாக புழுதியை கிளப்பிக் கொண்டு வந்து நின்றது அந்த உயர் ரக கார்.
யாரென்று நிமிர்ந்து பார்க்க ஆருத்ரா தான் காரிலிருந்து ஒயிலாக இறங்கி கொண்டிருந்தாள்.
அவனது விழிகள் யோசனையை தத்தெடுத்தது.
சுற்றிலும் பார்வையை சுழல விட்ட படி வந்தவள் , “ உங்க கிட்ட தனியா பேசணும் மிஸ்டர் வாசுதேவன்..” என்றாள் அழுத்தமாக.
‘அடுத்தது என்ன?” என்று ஆயாசாமாக இருந்தது வாசுவிற்கு.
இரு பக்கங்களிலிருந்தும் வங்கி அதிகாரிகள் ஏதோ கூற வர அவர்களைப் பார்வையாலேயே தள்ளி நிறுத்தியவள் வாசுவை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
“ என்ன பேசணும் மேடம்…சீக்கிரமா சொல்லுங்க..” என எரிந்து விழுந்தான் வாசு.
“ ஹலோ…மிஸ்டர் வாசு…நீங்கள் பண்ணுன காரியத்துக்கு நான் தான் சூடா பேசணும்…நீங்க என் மேல பாயுறீங்க…”என்றாள் எகத்தாளமாக.
“மேடம்…பளீஸ்…என்னோட நிலைமை இப்ப ரொம்ப மோசமா இருக்கு. எதுவா இருந்தாலும் அப்பறமா பேசிக்கலாம்…நானே நொந்து போயிருக்கேன்..ப்ளீஸ்…” என கையெடுத்து கும்பிட்டான்.
“ ரொம்ப நல்லவன் வேஷம் போடாதீங்க மிஸ்டர் வாசு…ஏற்கனவே உங்களுக்கு நான் வார்ன் பண்ணியிருக்கேன். ஆஃபிஸ் சோர்ஸை உங்க பர்சனலுக்காக யூஸ் பண்ணக் கூடாதுன்னு.அப்படியிருந்தும் நீங்க என்னோட ஆஃபிஸ்ல இருந்தே துபாய் போறதுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்க. ஹவ் டேர் யூ. ஆஃபிஸ் ஹவர்ஸ்லயே ஜூம்ல இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிருக்கீங்க. இதுக்கெல்லாம் உங்களை பாவம் பாத்துட்டு இருக்க மாட்டேன் மிஸ்டர் வாசு…போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க தான் போறேன்…” என்றாள் ஆத்திரமாக.
உடலில் உள்ள சக்தி அனைத்தும் வற்றி தான் போனது வாசுவிற்கு.
மனமும் மூளையும் சிந்திக்கும் திறனை அறவே இழந்திருந்தது.
“ ஐ யம் ரியலி சாரி..மேடம்..உங்க கிட்ட இதைப் பத்தி பேசணும்னு நினைச்சேன்.ஆனா நீங்க தான் பிசியா இருந்தீங்க. சரி சொல்லுங்க இப்ப நான் என்ன பண்ணனும்..”
“ உங்களுக்கு இப்ப ரெண்டு ஆப்ஷன் தான். ஒண்ணு நீங்க என் கூட எங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு வரணும். இல்லன்னா ஆஃபிஸ் ஸோர்ஸை தவறா யூஸ் பண்ணுனதுக்கு ஜெயிலுக்கு போகணும். எப்படி வசதி ? ஏற்கனவே அதிகமான கடன். குழந்தையை வச்சிட்டு வெளியே தங்க முடியாது. பெட்டர் நீங்க என் கூடவே வர்றது தான் உங்களுக்கு சரியானது .என்ன பண்ணனும்ங்கறதை சீக்கிரமா டிசைட் பண்ணுங்க மிஸ்டர் வாசுதேவன்…எப்படியும் வட்டி கட்டுற வரைக்கும் உங்களால வீட்டுக்குள்ள போக முடியாது.சோ..சேஃபா என்னோட கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்துடுங்க…”என்றவள் வெளியே வந்து காரருகில் கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.
கண்களில் குளிர் கண்ணாடியை அணிந்திருந்தவள் அவனது முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
உணர்வுகளை துடைக்கப்பட்டதாக முகம் காணப்பட்டாலும் உள்ளம் அவனுக்காக உருகிக் தவித்தது.
இருபக்கமும் வங்கி அதிகாரிகள் மூன்றாவது கண்ணாக ஆருத்ரா ஒருபுறம் என அனைத்தும் அவனுக்கெதிராகவே இருக்கவே வாசுவின் கால்கள் ஆருத்ராவின் காரினை நோக்கி நகர்ந்தன.
வாழ்க்கையில் மிக மோசமாக தோற்றுப் போய் நின்றிருந்தான் ஆறடி ஆண்மகன்.
அனுவை அழைத்துக்கொண்டு அவளது காரில் ஏறி அமர்ந்தான்.
குளிர் கண்ணாடியை கழற்றி விட்டு அவனது வீட்டின் பக்கம் திரும்பியவள் சுந்தரி அக்காவை பார்த்து தலையசை விட்டு காரில் ஏறினாள்.
தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் தோற்றம் அவளது இதயத்தை குத்திக் கிழித்தது.
ஏனோ அவனது நிலையை கண்டு அவளால் ஒரு கணம் கூட நிம்மதியடைய முடியவில்லை.