கண்ணாடியூடே வாசுவின் முகத்தை பார்த்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
ஏற்கனவே சிவந்த நிறமுடையவனின் முகம் அழுத்தத்தினால் இன்னும் சிவந்து காணப்பட்டது..
வாசுவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அனு.
விலையுயர்ந்த காரை மிரள மிரள பார்த்து கொண்டிருந்தாள்.
மெல்லிய புன்னகை தோன்றியது ஆருத்ராவிற்கு.
சின்னஞ் சிறிய பிஞ்சு கைகள் நரம்போடிய அவனது கரங்களை அழுந்தப் பிடித்திருந்தது.
அவனது மனநிலை அறிந்து அருத்ராவும் அமைதியாக வாகனத்தை ஓட்டினாள்.
கிட்டத்தட்ட இருபது நிமிட பயணத்திற்கு பிறகு தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி ஒலிப்பானை ஒலிக்க விட்டாள்.
காவலாளி வேகமாக கேட்டை திறந்துவிட இலாவகமாக காரை தனது கெஸ்ட் ஹவுஸில் நிறுத்தினாள்.
ராகவனும் பிரேமாவும் தோட்டத்தில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
காரின் சத்தம் கேட்டு எழுந்து கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றனர்.
காரிலிருந்து இறங்கியவள், “இறங்குங்க மிஸ்டர் வாசுதேவன்…” என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் அத்தனை வலிகளை தாங்கி நின்றது.
அதை புரிந்து கொண்டவள் எச்சிலைக் கூட்டி விழுங்கி கொண்டாள்.
“ இறங்குங்க சார்…. வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா?” என்றாள் சற்று கடுமையாக.
பட்டென்று இறங்கி நின்றான்.
அவனை பார்த்து விட்ட ராகவன் திகைத்து நின்றார்.
பிரேமா மற்றும் ராகவனது முகம் அதிர்ச்சியை தத்தெடுத்தது.
ராவனது உதடுகள், “வாசுதேவன்..?” என முணுமுணுத்தது.
ஆருத்ராவோ வேண்டுமென்றே அவனருகே ஒட்டி நின்று ‘எப்படி?’ என்பது போல புருவத்தை உயர்த்தி காட்டினாள்.
ராகவனிற்கு மகளின் செயல் ஆத்திரத்தை வரவழைத்தது. இருப்பினும் காட்ட முடியாமல் வேகமாக வீட்டிற்கு நுழைந்து விட்டார்.
“ அப்பா…இது யார் வீடு…நம்ம வீட்டுக்கு போலாம் ப்பா..” என அவனது கையை பிடித்து இழுத்தாள் அனு.
அவன் ஏதோ பதில் சொல்ல வருவதற்குள் அனுவின் புறம் குனிந்தவள் , “ஹாய் அனு குட்டி ..நீ நான்…அப்பா மூணு பேரும் இனி இங்க தான் தங்கப் போறோம். என் பேரு ஆருத்ரா….நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிடலாமா?” என்று அவளிடம் கையை கொடுக்க அனுவோட திரும்பி வாசுவைப் பார்த்தாள்.
அவனது முகம் இன்னும் இறுக்கமானது.
“ உள்ள வாங்க செல்லம்..வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்…” என வாசுவை பார்த்தபடி கூற அவனோ அவளை தீயென முறைத்தான்.
“அப்பா நம்ப வீடு..” என்று கூறி வாசுவின் முகத்தை பார்த்தாள் அனு.
வாசு அமைதியாக நிற்கவும் அவனருகே வந்தவள், “ஹலோ….சார்…எவ்வளவு நேரம் இப்படியே வெளியே நிக்கறதா உத்தேசம். வெளியே நின்று சீன் கிரியேட் பண்ணாம உள்ள வாங்க…உங்க திங்க்ஸையெல்லாம் எடுத்துட்டு வரச் சொல்லிருக்கேன். நீங்க வந்தா தான் குழந்தை உள்ள வருவா…” என்றாள் அழுத்தமாக.
ஒரு பெருமூச்சுடன் அவன் முன்னே நடக்க அனுவை தூக்கிக் கொண்டவள், “ நான் உன்னோட ஃப்ரெண்ட் சரியா..? உனக்கு என்ன வேணாலும் என் கிட்ட கேளு…நான் தர்றேன்…ஆமா…உனக்கு சுவிமிங் தெரியுமா? உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் சொல்லு…நாம் அதையெல்லாம் வாங்கலாம்…இப்ப என்ன வேணும் உனக்கு?” என்று இயல்பாக பேசிக் கொண்டே கெஸ்ட் ஹவுஸில் அடியெடுத்து வைத்தனர் மூவரும்.
வாசு முன்னே செல்ல அவன் பின்னே ஆருத்ரா அனுவை தூக்கிக் கொண்டு பின்னே நுழைந்தாள்.
“ சொல்லுங்க அனு குட்டி…உனக்கு என்ன வேணும்? டாய்ஸ் வேணுமா? பாஃர்பி வேணுமா? சாக்லேட் வேணுமா..? எது வேணாலும் சொல்லு நான் வாங்கிக் கொடுக்குறேன்…” என்றாள் பூரிப்புடன்.
அனு அமைதியாக இருக்கவும் , “ம்ம்…சொல்லுங்க தங்கம் உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள் தலையை சரித்து.
“எனக்கு அம்மா வேணும்…வீட்டுக்கு போகணும்.. விளையாடணும்…சாரு..வீணா …பப்ளி அங்க இருக்காங்களே..!” என்றாள் அவளது முகத்தை பாவமாக பார்த்தபடியே.
அவளது பதிலில் ஆடித்தான் போனாள் ஆருத்ரா.
பிஞ்சு மனதின் ஏக்கங்கள் அவளை ஊமையாக்கியாக்கி விட்டது.
திகைத்து போய் நின்றிருந்தவளிடமிருந்து குழந்தையை வாங்கியவன் , “அவ கேட்டதை உன்னால வாங்கித் தர முடியுமா? முடியாதுல்ல.. உன்னோட பணத்தை வச்சு நீ எதை வேணாலும் வாங்கலாம்…பெத்த அம்மாவையோ…அவ பிஞ்சு மனசுல பதிஞ்சி போன விஷயங்களையோ….வாங்க முடியாது . எனக்கும் என் குழந்தைக்கும் நடுவுல வந்து ஒட்டிக்கணும்னு ட்ரை பண்ணாத. திரும்பவும் ஏமாந்து தான் போவ..” என்று கூரிய அம்பினை அவள் மீது எய்து விட்டு அங்கிருந்த ஜன்னலருகே போய் நின்று கொண்டான்.
அவனது வார்த்தை சரியாக அவனது நெஞ்சைத் தைத்தது.
ஏதோ ஒன்று ப்ரளையமாக வெடித்து வெளி வர தயராகி நிற்க அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீரை குடித்து வலியை மறைத்துக் கொண்டாள்.
தான் நிலைகுலைவதைக் காட்டிலும் உருக்குலைந்து போய் நிற்கும் அவனை சரி செய்வதே முதன்மையாகத் தோன்றியது அவளுக்கு.
ஒரு கணத்தில் தன்னை மீட்டெடுத்தவள் அவனருகே வந்து நின்றாள்.
“ இங்க பாருங்க என் கூட விதண்டாவாதம் பன்றதை விட்டுட்டு குழந்தைக்கு பசிக்கும் அவளுக்கு முதல்ல சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன். அதை குடுங்க..” என்று கூறி விட்டு மீண்டும் அவன் புறம் திரும்பியவள் ,” நீங்களும் சாப்பிடுங்க…அட்லீஸ்ட் வேலை செய்றதுக்காகவாது தெம்பு வேணும்ல. நீங்க பாட்டுக்கு நாள் கணக்கா சாப்பிடாம ஆஃபிஸ் ல மயக்கம் போட்டு விழுந்துட்டீங்கன்னா அப்பறம் வீட்டுக்கடனை எப்படி கட்டுவீங்க?. எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருப்பீங்க..? உக்காருங்க..” என்று அதட்டலாகக் கூறி விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
புடவையை இடுப்பில் இழுத்துச் சொருகிக் கொண்டு அதிக காரமில்லாத பாம்பே சட்னியும் நெய் தோசையும் வார்த்து இரு தட்டில் வைத்தவள் அதனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
ஒரு தட்டினை அவனிடம் நீட்டினாள்.
மறு தட்டை கையில் வைத்துக் கொண்டு அனுவிற்கும் வாசு விற்கும் நடுவில் அமர்ந்தவள் அனுவின் புறம் திரும்பி , “ அனு குட்டி குட் கேர்ள் தானே…அம்மா ரொம்ப தூரமா இருக்குற ஊருக்கு போயிருக்காங்க…அனு குட்டி குட் கேர்ளா இருந்தா தான் வருவாங்கன்னு சொன்னாங்க. நீங்க இப்ப சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு பால் குடிப்பீங்களாம். அப்பறமா நான் உனக்கு பேஃர்ரி டேல்ஸ் சொல்லுவேனாம்..நீங்க அதை கேட்டுட்டே தூங்குவீங்களாம். என்ன ஓகே வா..?” என கண்களை சிமிட்டி அவள் கேட்க மெல்லிய புன்னகை தோன்றியது அனுவின் முகத்தில்.
பேசிக் கொண்டே இரு தோசையை அவளுக்கு ஊட்டியிருந்தாள்.
அவளுக்கு வாய் துடைத்து விட்டு வாசுவின் புறம் திரும்பி பார்க்க தோசை தட்டுடன் அப்படியே இருக்க, அவனோ ஜன்னல் வழியாக நிலவை வெறித்திருந்தான்.
ஒரு பெருமூச்சுடன் தட்டை கையில் எடுத்தவள் அவனருகே வந்து நின்றாள்.
“ சாப்பிடலயா?”
“ பசியில்ல…எனக்கு வேணாம்…”
“ ம்ம்…ஓகே…அப்ப அனுவுக்கு ஊட்டி விட்டு மாதிரி உங்களுக்கும் ஊட்டி தான் விடணும் போல..” என்றவள் சிறு விள்ளலை பிய்த்து அவனது வாயருகே கொண்டு செல்ல பட்டென்று தட்டை தட்டி விட வந்தவனின் கையை பிடித்துக் கொண்டவள் , “ஹலோ…. மிஸ்டர் வாசுதேவன்…சாப்பாடை வீண் பண்றது எனக்கு பிடிக்காது…அதுவும் சாப்பிடற சாப்பாட்டை விட்டடிக்கறது எனக்கு சுத்தமா பிடிக்காது…. ம்ம்..ஒண்ணா நீங்களே சாப்பிடுங்க…. இல்லன்னா வலுக்கட்டாயமாக ஊட்ட வேண்டியது வரும்…எப்படி வசதி…?” என்றாள் இறுகிய முகத்துடன்.
அவளை பார்வையாலேயே பஸ்பமாக்கியவன் தட்டை வெடுக்கென்று பிடிங்கிக் கொண்டு வேக வேகமாக சாப்பிட்டான்.
தோசை ஆறியிருக்க , வேகமாக சாப்பிட்டதில் தொண்டை அடைத்து விக்கல் எடுக்க அவனது தலையில் நங் நங்கென்று தட்டியவள் தண்ணீரை கொடுத்து விட்டு வேகமாக நகர்ந்தாள்.
அவளை முறைத்தபடியே ஒருவழியாக சாப்பிட்டு முடித்தான்.
அதற்குள் அனுவும் வாசுவும் தங்க அறையை ஏற்பாடு செய்தவள் அவர்கள் இருவரையும் அங்கு தங்கிக் கொள்ள சொன்னாள்.
அவள் சாப்பிட்டு விட்டு சமையலறையை சுத்தம் செய்து விட்டு வரவும் அவர்களின் அறை சாத்தப்பட்டிருந்தது.
அதில் முகம் வாடியவள் தனதறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அனுவை தன் மார்பில் கிடத்திக் கொண்டு அவளது தலையை வருடியபடியே படுத்திருந்தான்.
தூக்கம் என்பது இருவருக்கும் தொலை தூரம் போனது.
ஆருத்ராவின் சிந்தனை முழுவதும் வாசுவை பற்றியே இருந்தது. மீண்டும் வாசுவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. சிதறி கிடக்கும் அவனை சீர் செய்ய வேண்டும் என்பதே அவளுக்கு முதன்மையாக இருந்தது.
சந்தியா இப்படி செய்தது அவளுக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது.
அதிலும் இவ்வளவு கடனை வாங்கி அவனது தலையில் கட்டிவிட்டு சென்றது அளவு கடந்த கோபத்தை ஏற்படுத்தியது.
அவனைப் பற்றியும் அவளுக்குத் தெரியும் சந்தியாவைப் பற்றியும் அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
ஏனெனில் அவன் வீட்டில் நடப்பதனைத்தையும் அவளுக்கு உடனுக்குடன் தகவல்களை கொடுப்பது சுந்தரி அக்கா தான்.
சந்தியாவின் பொறுப்பற்ற தன்மை, வாசுவிடம் வாக்குவாதம் என அனைத்தும் அவளது கவனத்திற்கு வந்தது.
அவளாலும் எதுவும் செய்ய முடியாத நிலை.
வாசுவின் மீது தான் ஏனோ கோபமாக வந்தது. அவனை வெறுத்து ஒதுக்குபளை ஏன் பிடித்து தொங்குகின்றான் என்ற கோபமே அவன் மீது அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவள் தன்னையறியாமல் உறங்கிப்போனாள்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் எழுந்தவள் வாசுவின் அறையைப் பார்த்தாள். திறந்திருந்தது.
பல் துலக்கி விட்டு இருவருக்கும் தேநீரை கலந்தவள் அறைக்குச் சென்றாள்.
“இந்தாங்க…”என்றாள்.
வேண்டாமென அவன் வாயெடுக்கும் முன்பே,” எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. உங்களை டீ குடிக்க வைச்சு…குளிக்கவும் வச்சு…ட்ரெஸ் சேன்ஜ் பண்ணி ஆஃபிஸ்க்கு கூட்டிட்டு போவேன்…எப்படி வசதி?” என்றாள் நக்கலாக.
அவள் சொன்னதை நிச்சயமாக செய்வாள் என்றும் தெரியும்.
எனவே அவளிடம் மேலும் வாதிட முடியாமல் தேநீரை வேக வேகமாக அருந்த சூடாக இருந்ததினால் நாக்கை சுட்டு விட்டது.
“ஸ்ஸ்…” என லேசாக முணகினான்.
“ என் மேல உள்ள கோபத்தை டீ மேல ஏன் காமிக்கிறீங்க…பொறுமை..பொறுமை…” என்றவள் அவன் குடித்து முடிக்கும் வரை அருகிலேயே இருந்தாள்.
குடித்து முடித்ததும் கோப்பையை வாங்கியவள் , “ அனுவோட திங்க்ஸ்…உங்களோடது எல்லாமே கொஞ்ச நேரத்துல வந்துடும். அனுவுக்கு ஸ்கூலுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன்…உங்களுக்கும் பேக் பண்ணிடுறேன்…அவளை ட்ராப் பண்ணிட்டு எப்பவும் போல ஆஃபிஸ்க்கு வந்து சேருங்க.. பொண்டாட்டி ஓடிப் போன துக்கத்துலயே உக்காந்திருக்காதீங்க…” என மளமளவென பட்டியலிட்டவள் அவன் கோமாக ஏதோ கூற வரும் முன்னே வெளியே வந்து விட்டாள்.
“ ஓடிடு டி ஆரு….இருந்தா மனுஷன் இருக்குற கடுப்புல கடிச்சிடுவாரு…” என முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்குள் சென்றாள்.