பிழை-25

அலுவலகத்திலும் அதிக வேலை வாசுவிற்கு. அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் வாசு. 

சந்தியா அழைப்பை ஏற்காதது, பணத்திற்கான அலைச்சல், துபாய் செல்வதற்கான ஏற்பாடு என மிகவும் பரபரப்பாக இருந்தான்.

ஒரு வாரம் கழிந்திருந்தது‌.

சந்தியா அன்று  தான் மணாலியிலிருந்து வருவதாக கூறுயிருந்தாள். எனவே மீண்டும் அவளது அலைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தான்.

 அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

யோசனையுடன் அனுவை பள்ளிக்கு அனுப்பி விட்டு அரசிக்கு வேண்டியதை செய்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

ஏற்கனவே சந்தியா பல முறை  அவனது அழைப்பினை ஏற்காமல் இருந்ததுண்டு. எனவே அது போல தான் இதுவும் என நினைத்துவிட்டான். 

போதாதற்கு அவளை எல்லார் முன்னிலையிலும் திட்டி அடித்து விட்டதால்  அதிக கோபத்தில் இருப்பாள் என‌ அவனாகவே ஒன்றை யூகித்துக் கொண்டான்.

அன்று இரவும் அவள் வராதது அவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ப்ரகாஷிற்கு அழைத்தான்.

“ சொல்லுங்க வாசு…”

“ அது..சந்தியா வந்துட்டாளா? “

“ இல்ல வாசு…அவ இங்க வரைலையே? மணாலில இருந்து இன்னைக்கு தானே ரிட்டர்ன் ஆகியிருக்கணும்”

“ ஆமா…இங்கயும் வரல…நான் ஃபோன் பண்ணினேன் அவ எடுக்கல…அதான் உங்களுக்கு எதுவும் கால் பண்ணினாளான்னு கேக்க பண்ணினேன்.”

“ இல்ல வாசு…அவ எங்களுக்கு கால் பண்ணலயே.. ஏதாவது பிரச்சனையா?”

“ இல்ல…நான் அவ ஆஃபிஸ் ஸ்டாப் யாருக்காவது கால் பண்ணி பாத்துக்குறேன்.‌ கால் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்.. அப்பறம் இன்னொன்னு கேக்கணும்‌னு நினைச்சேன்…அவ மன்திலி மன்த்லி ப்ரீயட்ஸ்னு சொல்லிட்டு அங்க வந்துடுவால்ல…அது மாதிரி இன்னைக்கும் அங்க வந்துட்டாளோன்னு நினைச்சுட்டேன்.” என்றான்.

“ என்ன சொல்றீங்க வாசு..? அவ இங்க வந்தது அம்மாவோட அறுபதாவது பிறந்தநாளுக்கு தான். அதுக்கு முன்னாடி அவ வந்ததது போல தெரியலயே…ஒரு நிமிஷம் லைன்ல இருங்க…” என்றவன் சாந்தியிடம் சந்தியா மாதா மாதம் உடம்பு சரியில்லை என்று வீட்டிற்கு வருகிறாளா என்று கேட்டான்.

“ அவ கடைசியாக வந்தது என்னோட பிறந்தநாளுக்கு தான்…அதுக்கு முன்னாடி அவ வரவேயில்லையே…ஆமா..ஏன் இப்படி கேக்குற?” என்றார்.

“ இல்ல..மா.. சும்மா தான்…” என்றவன் வாசுவிற்கு அழைத்து அவள் அங்கு மாதா மாதம் வந்ததேயில்லை என்றான்.

யோசனையுடன் அலைப்பேசியை வைத்தவன்‌ எப்போதோ அவளது அலுவலகத் தோழி தீபா என்ற பெண்ணின் எண்ணை தனது அலைப்பேசியில் சேமித்து வைத்தது நியாபகத்திற்கு வர அவசரமாக அந்த எண்ணிற்கு அழைத்தான்.

அவனது அழைப்பு ஏற்கப்பட்டது.

“ ஹலோ…! யாரு?”

“ ஹலோ…தீபாங்களா?”

“ ஆமாங்க …நீங்க யாரு பேசுறது..?”

“ நான் உங்க ஆஃபிஸ் ஃப்ரெண்ட் சந்தியாவோட ஹஸ்பண்ட் வாசுதேவன் பேசுறேன்ங்க..”

“ சொல்லுங்க…சார்…உங்க பொண்ணு அனு எப்படியிருக்கா..?”

“ ஏன் மேடம்..அனு நல்லா தானே இருக்கா..சந்தியா..”என அவன் மேற்கொண்டு பேசும்‌ முன்பே , “ரெண்டு நாளைக்கு முன்னாடியே அனுவுக்கு உடம்பு‌ சரியில்லன்னு மணாலில இருந்து கிளம்பிட்டாங்களே சந்தியா…பாவம் ஆசையா என்ஜாய் பண்ணலாம்னு வந்தாங்க…ஆனா திடீர்னு அனுவுக்கு உடம்பு‌ சரியில்லன்னதும் பதறிட்டு கிளம்பிட்டாங்க…இப்ப அனு ஓகே தானே…?”

“ ஹான்…ஹான்.. அனுவுக்கு இப்ப பரவாயில்லங்க…அவங்க இன்னும் ரெண்டு நாளைக்கு ஆஃபிஸ்க்கு வர மாட்டாங்க…அதை சொல்ல தான் ஃபோன்…பண்ணுனேன்…மேடம்…” என சமாளித்து கொண்டு அலைப்பேசியை வைத்தான்.

அனுவிற்கு உடல்நலம் சரியில்லை கிளம்பி விட்டாளா? ஒன்றும் அவனுக்கு பிடிபடவில்லை. யாரேனும் வேண்டுமென்றே கூறியிருப்பார்களோ..? இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பியிருந்தால் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே…? வழியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிட்டதா?’ என ஆயிரம் கேள்விகள் தலையை குடைந்தது.

உடல் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இரவு முழுவதும் கண் உறங்காமல் விழித்திருந்தவன் மறு நாள் காலை விடிந்ததும் பதறியடித்து கொண்டு அவளது அலுவலகத்திற்கு சென்று மேலதிகாரியிடம் சென்று விசாரித்ததற்கு அவருக்கும் விவரம் ஏதும் தெரியவில்லை என்றார்.

“என்ன சார்..இப்படி தான் கேர்லெஸ்ஸா இருப்பீங்களா? அவங்க கூட துணைக்கு யாரையாவது அனுப்பி வச்சிருக்கலாமே.?.லேடீஸை அவ்வளவு தூரத்துல இருந்து தனியா அனுப்பி வச்சிருக்கீங்க..அவங்க ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது… இப்படி இர்ரெஸ்பான்சிபிலா பதில் சொல்லிட்டு இருக்கீங்க?”என அவரிடம் காய்ந்தான் வாசு..

“ சார்…நாங்க எவ்வளவோ சொன்னோம்…அவங்க தான் கேக்க மாட்டேன்ட்டாங்க. தனியா கிளம்பி போயிடுவேன்…எனக்கு என் பொண்ணை பாக்கணும் னு யாரையும் துணைக்கு அழைச்சிக்காம கிளம்பிட்டாங்க.. எங்களை என்ன சார் பண்ணச் சொல்றீங்க? அவங்க வீட்டுக்கு வரலைன்னு நீங்க சொல்லி தான் சார் எங்களுக்கே தெரியுது. போலீஸ் கம்ப்ளைண்ட் கொடூத்துப் பார்ப்போம் சார்…நானும் என் சைட்ல இருந்து அவங்களை கண்டு பிடிக்க ஏற்பாடு பண்ணுறேன்…நீங்க கவலைப்படாதீங்க..” என்று கூறியவர் கையோடு காவல் நிலையத்தில் சந்தியா காணமல் போய்விட்டதாக புகார் அளித்து விட்டு வந்தனர்.

அரசியோ வாசுவை கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்துவிட்டார். 

அனு ஒருபுறம் அம்மா எங்கே என அனத்த ஆரம்பித்தாள். மண்டை காய்ந்து போனது வாசுவிற்கு . 

பத்து நாட்களுக்கு மேலாகியும் சந்தியாவைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.‌ ஓய்ந்து போய் விட்டான் வாசு.

இதற்கிடையில் துபாய்க்குச் செல்ல விமான பயணச்சீட்டு வாசுவிறகு வந்து விட்டது. 

இதனைப் பற்றி ஆருத்ராவிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

அன்று காலை அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்‌. வாசலில் அழைப்பு  மணி ஒலிக்கவே, சென்று கதவினை திறந்தான்.

அவன் பெயரில் பதிவுத் தபால் வந்திருந்தது. ஊர் ஏதோ வட இந்திய மாநிலத்தின் பெயர் போட்டிருந்தது.

பிரித்து பார்த்தவன் விழிகள் யோசனையில் சுருங்கியது.

அதில் ஒரு கடிதத்துடன் சில பத்திரங்களும் இருந்தன.

கடித்ததை பிரித்துப் பார்த்தான்.

“ வணக்கம் வாசுதேவன்,

முதல்ல என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு என்னவோ உங்க கூட வாழவே பிடிக்கல…ஒரே மாதிரியான வாழ்க்கை சலிப்பை தந்துடுச்சு….உங்க மேல காதலோ அன்போ எதுவுமே எனக்குத் தோண மாட்டேங்குது. நீங்க எவ்வளவு தான் அக்கறையா இருந்தலும்  ஏதோ ஒண்ணு குறையற மாதிரி இருந்துட்டே இருக்கு. உங்க மேல் வராத காதலும் அன்பும் எனக்கு என் கூட வேலை பாக்குற மாதேஷ் மேல் வந்துருக்கு…அவரும்‌ என் கிட்ட ப்ரியமா இருக்காரு… நல்ல வசதியானவரு…பணத்தை எண்ணி எண்ணி செலவு பண்ண மாட்டாரு. ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை…. நிம்மதியான வாழ்க்கை வாழுவேன்னு நம்புறேன். மாதேஷ் இல்லாம என்னால வாழ முடியாது. எனக்கு தெரியுது நான் பண்ணுறது தப்புன்னு….அதனால தான் இனிமேலும் உங்க கூட இருந்து உங்களை மேலும் கஷ்டப்படுத்தாம உங்களை விட்டு மொத்தமா விலகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதோட விவாகரத்து பத்திரமும் அனுப்பியிருக்கேன் . நான் மாதேஷோட தான் வாழப் போறேன்…இனி என்னைத் தேடி உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.  நல்ல வக்கீலாக  பாத்து  கேஸை நடத்தச் சொல்லுங்க…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ் முடிஞ்சா நான் நிம்மதியா இருப்பேன்…என்‌ மாதோஷோட வாழ்க்கையை தொடங்கிட்டேன்…புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்… சைன் பண்ணி நீங்களே ஒரு வக்கீலை பாத்து மேற்கொண்டு என்ன‌ பண்ணனுமோ பண்ணிடுங்க. நான் வந்து ஒருநாள் சைன்‌ பண்ணிட்டு போறேன். இந்த அட்ரஸூக்கே என்னைக்கு வரணும்னு போஸ்ட் பண்ணிடுங்க. இது மாதேஷோட ஃப்ரெண்ட் அட்ரஸ். இங்க தேடிட்டு வந்துடாதீங்க…நான் நிம்மதியா இருக்கணும்னா என்னை தொடர்பு கொள்ள முயற்சி பண்ணாதீங்க…

நன்றி…”

என்பதுடன் கடிதம் ‌முடிந்திருந்தது. தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் வாசு.

ஏதேதோ எண்ணங்கள் முட்டி மோதிக்கொண்டு வந்தது. 

‘தன்னுடன் வாழப் பிடிக்கவில்லையா?. அனுவைப் பற்றிக் கூட அக்கறையில்லாமல் போய் விட்டாதா..? தன்னுடைய அன்பு சிறிதளவு கூட அவளை பாதிக்கவில்லையா..? தான் தான் அவளது எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போய்விட்டோமோ…? இல்லையே…அவள் மீது அக்கறையும் அன்பையும் தானே வைத்திருந்தோம்…எங்கு பொய்த்துப் போனேன்..?ஏன் இவ்வாறு செய்தாள்? வசதியாக வாழ்வதற்கு மட்டுமே தன்னை விட்டுச் சென்று விட்டாளா..? இல்லை தன்னுடனான வாழ்க்கை கசந்து தான் போய் விட்டதா? இல்லை இதுவும் பொய்யாக தான் இருக்க வேண்டும்…’ என மனதிற்குள் ஆயிரம் எண்ங்கள்  ஓடியது. 

யாருக்காக ஓடினான்…அவளுக்காக வரும் குழந்தைக்காகவும் மட்டும்தானே..? .

அவனது அலைப்பேசி ஓலித்து அவனது சிந்தனையை கலைத்தது.

எடுத்துப் பார்த்தான் புதிய எண்ணாக இருந்தது.

“ ஹலோ…!”

“ ஹலோ…வாசு…நான் தான் சந்தியா பேசுறேன்…உங்க கைக்கு விவாகரத்து பத்திரம் வந்துருக்கும்னு நினைக்கிறேன்…அதுல சைன் போட்டு கேஸ் ஃபைல் பண்ணிடுங்க. எப்ப வந்து ஆஜராகணும்னு சொல்லுங்க…அப்ப நான் கிளம்பி வர்றேன்…”

“ ஏன்…ஏன்..சந்தியா…இப்படி..? நான்…நா..என்ன.. தப்பு…பண்ணு..பண்ணுனேன்..? கொஞ்சமும் மனசாட்சி இல்லையா உனக்கு? குழந்தையை பத்தி யோசிச்சு பாத்தியா? வேண்டாம் சந்தியா…நீ திரும்பி வந்துடு…பா போகுது.. ஏதோ புத்தி கெட்டுப் போய் பண்ணிட்ட.. யாருக்கும் இந்த விஷயம் தெரியாம பாத்துக்குறேன்..நீ நான் அனு மூணு பேருமே கூட துபாய் போயிடலாம். எப்படியாவது நான் ஏற்பாடு பண்ணிடுறேன்…நீ வந்துடும்மா..” என்றான் தழுதழுத்த குரலில்.

“ எப்படி வாசு…?எப்படி சரி செய்வீங்க? கடன் கட்ட முடியாம என்னால வெளியே நிக்க முடியாது. கிட்டத்தட்ட நாலு வருஷ பழக்கம் எனக்கும் மாதேஷூக்கும். நல்ல பணக்காரராக தெரியுறாரு. நா விரும்பின வாழ்க்கை எனக்கு கிடைக்கப் போகுது…தயவு செஞ்சு குழந்தை குட்டின்னு என்னை எமோஷனல் இடியட் ஆக்காதீங்க. என்னோட சம்பளத்தையும் மாதேஷோட பணத்தையும் வச்சு இங்க  பெரிய வீடா வாங்கியிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் அமேசிங்…என்னால இதை விட்டுட்டு உங்க பின்னாடி வர முடியாது. தயவு செஞ்சு என்னைய விட்டுடுங்க ப்ளீஸ்…” என்று கூறி விட்டு துண்டித்து விட்டாள்.

பைத்தியக்காரனை போல நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தான் வாசு. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். 

எதை தக்க வைத்துக் கொள்ள இத்தகைய போராட்டம் ‌?

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top