பிழை-21

புதிய வேலை மற்றும் அதிலிருந்த அதிக பளு வாசுவை பரபரப்பாக வைத்துக் கொண்டிருந்தது. 

நாட்கள் வேகமாக நகர்ந்தது. ‌.

ஆருத்ராவும் தந்தையின் நிறுவனத்திற்கு சென்று சிரத்தையுடன் அனைத்தையும் கற்றுக் கொண்டாள். 

ராகவனுக்கோ மகள்  தனக்குத் துணையாக நிறுவனத்தில் வந்து வியாபார நுணுக்கங்களையும் நிர்வாகத்திறனையும் ஆர்வமுடன் கற்றுக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

கல்லூரி நாட்களில் நினைத்த நேரத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தவர்கள் ,பணிக்குச் சேர்ந்தவுடன் இருவருடைய சந்தித்துக் கொள்ளும் நேரம் குறைந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை முழுவதும் ஆருத்ராவுடன் செலவிட்டான் வாசு. வாய் ஓயாமல் அவனிடம் பேசிக் கொண்டே இருப்பவளுக்கு அவனது அருகாமையே போதுமாயிருந்தது. 

வாரத்தின் ஆறு நாட்களையும் நெட்டித் தள்ளுபவள் ஞாயிறு மாலை ஆனதும் அவனை காண ஆலாய் பறந்து வந்துவிடுவாள். 

கடற்கரை மணலில் அவனுடன் நெருங்கியமர்ந்து கரங்கள் கோர்த்து, தோள் சாய்ந்து, மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பாள்.

“உங்களை ஃபீல் பண்ணிட்டே இருக்கணும் வாசு…” என்றவளை அள்ளிக் கொண்டாடத் தோன்றும். 

ஆனால் இருக்கும் இடம்‌ கருதி சிரித்தபடி அமர்ந்திருந்திருப்பான் வாசு.

அவள் தான் இல்லாத சேட்டை செய்து கொண்டிருப்பாள். அவனது மீசையை வலிக்கப் பிடித்திழுப்பது, கன்னக்குழியை அடிக்கடி தொட்டு ரசித்துக் கொள்ளுவது, சற்று இருட்டிய பின் அவனது இரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு திணறடிப்பது என அவனை படுத்தி எடுத்து விடுவாள். 

அவனது ஒவ்வொரு அசைவையும் அணுஅணுவாய் ரசித்து அதனை வர்ணணை செய்து ஆறடி ஆண்மகனை வெட்கப்பட செய்து விடுவாள். 

சில சமயங்களில் அவளது சேட்டைகளை கன்னத்தில் கை வைத்து ரசித்திருப்பான் வாசு. 

அவர்களது காதல் அழகாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் திடீரென வந்து , “தேவ்…நான் இன்னும் ஒரு வாரத்துல லண்டன் கிளம்பணும் . ரெண்டு வருஷ கோர்ஸ். நெக்ஸ்ட் வீக்ல இருந்து க்ளாஸஸ் ஆரம்பிச்சிடும்‌. உடனே கிளம்பணும் பா. ரெண்டு வருஷம் எப்படி உங்களை பாக்காம இருக்க போறேன்னு தெரியல ‌‌.. பேசாம அலைபாயுதே ஸ்டைல் ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? மனசுக்குள்ள எவ்வளவோ ஆசை இருக்கு தேவ். இந்த ஒரு சன்டே உங்களை பாக்கறதுக்குஎவ்வளவு ஏங்கி போவேன் தெரியுமா? இதுல முழுசா ரெண்டு வருஷம் …முடியாது தேவ்.”  என சுணங்கி நின்றவளின் முகத்தை கையில் ஏந்தியவன், “எனக்கு புரியுது ருத்ரா..ஆனாலும் என்னோட சிட்சுயுவேஷனையும் கொஞ்சம் யோசிம்மா…உன்னை கல்யாணம் பண்ணிக்க கொஞ்சமாவது என்னோட தகுதியை வளர்த்துக்கணும் . திவ்யா வேற இருக்கா. அவளுக்குத் தேவையானதை செஞ்சிட்டு தான் நம்ம கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும் டா. எனக்கும் உன்னையே பாக்காம இருக்குறது ரொம்பவே கஷ்டமா தான் இருக்கு. வேற வழியில்லை… கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்‌போயிடும்…அப்பறம் நம்ம கல்யாணம் தான்…முகத்தை இப்படி வச்சிக்காத டி…” என்று கூறி அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

“ம்ம்..சீக்கிரமா படிச்சு முடிச்சுட்டு வந்துடுறேன்… அதுக்கு‌ முன்னாடி…இப்ப வீட்டுக்கு கிளம்பற வரைக்கும் விடாம எனக்கு முத்தம் கொடுத்துட்டே தான் இருக்கணும். இது எல்லாமே நா எனக்குள்ள சேமிச்சு வச்சிக்குற மெமரீஸ்‌..அழகான நியாபகங்கள். இந்த ரெண்டு வருஷத்துக்கு தேவையானதை குடுத்துடுங்க…இங்க வந்ததுக்கு அப்பறம் மீதியை பாத்துக்கலாம்…” என தலை சரித்து கேட்டவளின் கோரிக்கையை மறுக்க இயலாது முத்ததினால் மூழ்கடித்தான் பெண்ணவளை. 

அவளது விழியோரம் இரு துளி நீர் கசிய பதறி அவளிலிருந்து விலகி அமர்ந்தவன் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

இன்னதென்று தெரியாத மெல்லிய வலி பெண்ணவள் மனதில்‌.

வாசுவிற்கும் அவளது மனநிலைப் புரிந்தது. தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

ஆருத்ரா லண்டனுக்கு சென்று ஒரு வருடங்களுக்கு மேலாகியிருந்தது.

வாரத்திற்கு ஒரு முறையாவது ஆருத்ரா அவனுக்கு அழைத்து பேசி விடுவாள்.  

வாசுவிற்கும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் கழுத்து வரை  நிறைந்திருந்தாலும் கடமை அவனை எதைப்பற்றியும் யோசிக்க விடாமல்  தொடர்ந்து ஓட வைத்தது. 

வீட்டின் மூத்த மகனாய் போய் விட்டதால் செய்ய வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் அவனை மூச்சு விட முடியாதபடிக்கு அழுத்தியது.

இடையில் திவ்யாவின் நடத்தையில் தெரிந்த மாற்றம் வாசுவின் புருவத்தை சுருங்க வைத்தது.

அதைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அன்று காலையில் வாசுவுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் திடீரென எழுந்து வாஷ்பேசினுக்கு ஓடினாள்.

சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தவள் அதனடியில் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

பாதி சாப்பாட்டில் அப்படியே எழுந்தவன் வேகமாக அவளிடம் ஓடினான்.

“என்னடி என்ன ஆச்சு?  உடம்புக்கு முடியலையா? “என்று பதறினார் அரசி.

“திவிம்மா என்னடா‌ ஆச்சு…?” என்றான் வாசு.

“ ஐய்யோ…! ஒண்ணுமில்லை…ஏன் இப்படி ரெண்டு பேரும் கேள்வி மேல கேள்வி கேட்டு சாவடிக்கிறீங்க…சாப்பிட்டது ஏதோ சேரல போல…” என முகம் சிவக்கக் கத்தியவள் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

ஏனோ கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது. துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

ஏதோ கேட்க முயன்ற அரசியை தடுத்து நிறுத்தியவன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று ஜாடை செய்தான்.

அவளை யோசனையுடன் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனின் செவியில் அரசியின் கோபமாக பேச்சு விழுந்தது..

“ பாவி மகளே..! மானத்தை வாங்கிட்டு வந்து நிக்குறியே? அப்படியென்ன உனக்கு ஆம்பிளை சுகம் கேக்குது? உனக்கு மூத்தவன் ஆம்பிளை ‌பையன் அவனே வீட்டு நிலமையை யோசிச்சி ஒழுக்கமா இருக்கான். நீ திமிரெடுத்து எவன் கிட்டயோ போய் கெட்டு குட்டிச்சுவராயிட்டு வந்துருக்க. உனக்காக  தான் அவன் நேரங்காலமாக இல்லாம உழைச்சிட்டு இருக்கான்.ஏன் டி இப்படி செஞ்ச ? ஏன் இப்படி செஞ்ச?உன் வயித்துல வளர்ற புள்ளைக்கு யாரு டி காரணம்?” என ஆங்காரமாக கத்தி திவ்யாவை அடித்தார்.

அவரது வார்த்தைகளை கேட்டவன் அதிர்ந்து போய் நின்று விட்டான். 

அதிர்ந்த முகத்துடன் நின்றிருந்த வாசுவை பார்த்தவர்,” வாசு இந்த கழுதை என்ன‌ பண்ணிட்டு வந்துருக்கா தெரியுமா?” என்றவரை கையமர்த்தி விட்டு திவ்யாவின் அருகில் சென்றான்.

“என்ன திவ்யா? என்ன இது?”என்றான்.

அரசி அடித்ததில் தலை கலைந்து முகம் சிவக்க அழுது கொண்டிருந்தவள் அவனைப் பார்த்து, ” என்னை மன்னிச்சிடு ண்ணா.. நான் ப்ரகாஷ்ன்னு  ஒருத்தரை நாலு வருஷமா லவ் பண்ணுறேன்‌. நான்..இப்ப …இப்ப  ப்ரெக்னன்ட்டா இருக்கேன்ண்ணா…அண்ணா…சாரி.” என்று கூறி விட்டு அவனது முகத்தை பார்த்தாள்.

பாறையென இறுகிப்‌ போயிருந்தது அவனது முகம்.

“ உன்னை இன்னும் சின்னக் குழந்தையாகவே நினைச்சிட்டேன். ஆனா நீ …?ம்ம்..உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுன்னு நிருபிச்சிட்ட‌மா… சரி அவங்க யாரு?  எங்க இருக்காங்கன்னு சொல்லு‌மா? போய் ‌பேசுறேன்.” என இயந்திரத்தனமாகக் கூறி விட்டுச்‌ சென்றான்.

திவ்யாவோ தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். 

அரசியோ, “ அவனை கஷ்டப்படுத்தி பாத்துட்டல. இப்ப உனக்கு சந்தோஷம் தானே?” என்று அவளை முறைத்து விட்டு சென்றார்.

அடுத்த சில தினங்களில் ப்ரகாஷின் வீட்டிற்கு அரசியுடன் சென்றான் வாசு..

“வாங்க வாசு…வாங்க ம்மா…” என்று வரவேற்றான் ப்ரகாஷ்.

சோஃபாவில் அமர்ந்திருந்த சாந்தி அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

“ ம்மா…நான் சொன்னேன் ல திவ்யாவோட அம்மா அப்பறம் அண்ணன் ..” என்று தயங்கியபடி கூறிய ப்ரகாஷை முறைத்துத் தள்ளினார் சாந்தி.

வாசுவிற்கும் அரசிக்கும்‌ என்ன பேசுவதென்றே தெரியவில்லை. 

அமைதியாக சாந்தியின் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

“என்ன விஷயமா வந்துருக்கீங்க?” என்றார் அலட்சியமாக.

“ அது.. வந்து என் பொண்ணு திவ்யாவும் …உங்க பையன் ப்ரகாஷூம் ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்புறாங்க. அதான் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசலாம்னு வந்துருக்கோம்” என சங்கடத்துடன் பேசினார் அரசி.

“அது மட்டும் தான் காரணமா?” என்றார் எள்ளலாக.

அரசிக்கோ அவமானமாக இருந்தது. 

சாந்தியின் பேசும் தோரணை அத்தனை உவப்பானதாக இல்லை .

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே தங்களுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை வைத்தே தங்களை குத்திப்‌பேசி அவமானப்படுத்தப் போகிறார் என நன்கு தெரிந்தது.

“ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடியே அவசரப்பட்டுட்டாங்க. அதனால திவ்யா இப்ப கர்ப்பமா இருக்கா. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாம்.” என்று கூறினார் அரசி.

“அதென்ன ரெண்டு பேரையும்ன்னு என் பையனையும் சேர்த்து சொல்லுறீங்க. பொம்பளை பிள்ளை அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமா? இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பண்ணி பாத்திடணும்ன்னு பறக்கணுமா? ஆம்பிளை பசங்க அப்படி இப்படிதான் இருப்பாங்க. பொம்பளைங்க நாம் தான் சூதானமா இருக்கணும். எப்படி இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க? . என்‌ பொண்ணு சந்தியாயெல்லாம் குனிஞ்சு தலை நிமிராம வேலைக்கு போயிட்டு வருவா. நான் சொல்ற பேச்சை தான் கேப்பா…இந்த மாதிரி ஒழுக்கம் கெட்டு நடந்துக்க மாட்டா..” என்று பேசிக் கொண்டே போனவரை “அம்மா…பாத்து பேசுங்க மா..” என இடைமறித்தான் ப்ரகாஷ்.

“ என்னடா கல்யாணம்னு முடிவு கூட‌ பண்ணல அதுக்குள்ள அவளுக்கு சப்போர்ட்‌ பண்ணிட்டு என் கிட்ட எகிறுற?” என்று அவனிடம் பாய்ந்தார் சாந்தி.

அவர் பேசியதைக் கேட்டு வாசு விற்கும் கோபம் தான் வந்தது. 

அரசி தான் அவனது கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டிருந்தார்.

ஏதாவது விவகாரமாக பேசி சாந்தி திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டால் மகளது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்ற‌ சராசரி தாயின் பயம் அவருக்கு..

“ தப்பு தான் மா மன்னிச்சிடுங்க. தயவு செஞ்சு அவளை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்கோங்க. உங்க வீட்டு வாரிசு தான் அவ வயித்துல வளர்றதுங்கறதும் கொஞ்சம் நியாபகம் வச்சிக்கோங்க…” என்று தன்மையாகவே பேசினார் அரசி. 

அனைவரையும் ஒரு கணம் பார்த்தவர், “ சரி இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம். இதெல்லாம் உங்களுக்காகன்னு நினைக்காதீங்க. எங்க வீட்டு வாரிசை உங்க பொண்ணு வயித்துல சுமந்துட்டு இருக்கா. ஒரு பொண்ணோட சாபம் எங்க குடும்பத்துக்கு வேணாம். நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்யனுமோ அதை செய்யுங்க. அது உங்க இஷ்டம். ஆனா ஒரு ஒரே நிபந்தனைக்கு மட்டும் நீங்க சரின்னு சொன்னாதான் கல்யாணத்துக்கு மேற்க்கொண்டு ஏற்பாடு செய்ய முடியும்.” என்று கூறி நிறுத்தினார்.

அவரது பேச்சில் மகிழ்ந்து போன அரசி, “ சொல்லுங்க மா…நாங்க என்ன பண்ணனும்?” என்றார் அவசரமாக.

“ சந்தியா…” என்று குரல் கொடுத்தார்.

உள்ளிருந்த சந்தியா சாந்தியின் முன்பு வந்து நின்றாள்.

“ இது என்னோட பொண்ணு சந்தியா. நீங்க எப்படி தனி ஆளாக நின்னு உங்க பொண்ணையும் பையனையும் வளர்த்தீங்களோ அது மாதிரி தான் நானும் தனியாளாக நின்னு ரெண்டு பேரையும் படிக்க வச்சி ஆளாக்கிருக்கேன். உங்க பையன் வாசு என் பொண்ணு சந்தியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில நடத்திடலாம். என்ன சொல்றீங்க?” என்றார்.

வாசுவோ அதிர்ந்து போய் முடியாது என்று வாயெடுக்கும் முன்பே, “எங்களுக்கு பூரண சம்மதம் சம்பந்தி..உங்க பொண்ணு சந்தியாவை என் பையன் வாசு கல்யாணம் பண்ணிப்பான்..” என்றவர்  வேகமாக எழ  முயன்றவனின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார். 

அவரது பார்வை,’ மறுத்து  எதுவும் பேசி விடாதே..’ என்பது போலிருந்தது.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top